![]()
வாழ்க்கை என்பதே ஒரு நீண்ட பயணம்; அதில் நிறைய குட்டிக் குட்டிப் பயணங்கள். பெற்றோர் கைபிடித்து அழைத்துச் சென்ற பயணங்கள்; நண்பர்களோடு சென்ற பயணங்கள்; இல்லறத் துணையோடு சென்ற பயணங்கள்; உறவுகளோடு சென்றவை; அலுவலக நிமித்தம் காரணமாகச் சென்றவை; அவசரத்துக்குச் சென்றவை; உல்லாசமாகச் சென்றவை; தனியாகச் சென்றவை; கூட்டமாகச் சென்றவை. இந்த நீளப் பட்டியல் எனக்கு மட்டும் சொந்தமல்ல; எல்லோருக்கும் சொந்தம்தான்.
கல்லூரி செல்லும் வயதில் நான் எடுத்த சில முடிவுகளும், பயணங்களும்தான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான “விழி திறப்பு” வைபவங்கள். எனது இலக்கிய அனுபவங்களின் ஆரம்பப் புள்ளிகள் அவை. .
ஆண்டு 1969. இளங்கலை அறிவியல் முடித்து , மீண்டும் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டு நின்ற நேரம்; ”இட ஒதுக்கீடு” திருவிளையாடல்களில் எனக்கு மருத்துவம் கிடைப்பது அரிது எனச் சொல்லப்பட்ட நேரம். நான் மேலே படிக்க விரும்பினேன். தாவர இயலில் முதுகலைப் பட்டம் பெற எண்ணினேன்; சென்னைக் கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்தேன். அக்கால கட்டத்தில் எம்.எஸ்ஸி பாடனி துறையில் “ஸ்பெஷலைசேஷன்” எதுவும்கிடையாது.
அன்றைக்கு மிகவும் புதுமையாக இருந்த, எனக்குப் பிடித்த “ஜெனிடிக்ஸ் அண்ட் பிளாண்ட் ப்ரீடிங்” (M.Sc Botany with specialisation in Genetics and Plant Breeding ) முதுகலைப் பட்டப்படிப்பை பாட்னா மற்றும் பனாரஸ் பல்கலைக்கழகங்கள் அறிவித்திருந்தன. அதற்கான விண்ணப்பங்களையும் வாங்கி வைத்திருந்தேன்.
அந்த ஏப்ரல் மாதத்தில் என் முன் மூன்று பாதைகள் தெரிந்தன. ஒன்று சென்னை கிறித்துவக் கல்லூரியில் சிறப்புப்பாடம் எதுவும் இல்லாத முதுகலைப் பட்ட வகுப்பில் சேர்வது; அல்லது சயின்ஸைத் துறந்து சி.ஏ. ( Any graduate was eligible to study for C.A at that time) படித்து ஆடிட்டர் ஆவது; அல்லது எனக்குப் பிடித்த சிறப்புப் பாடம் எடுத்துப் படிப்பது. இவற்றுள் முதல் இரண்டும் எளிது. காரணம் ,சென்னையில் நான் வீட்டில் இருந்து கொண்டே இவற்றைப் படிக்கலாம். ஆனால் மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுத்தால், பல நூறு மைல்கள் பயணம் செய்து, மொழி அறியாத ஊரில், மாணவர் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும். பொருள் செலவும் அதிகம்.
நான் மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.
பாட்னா பல்கலைக் கழகத்தில் எனக்கு இடம் கிடைத்தது. பனாரஸ் பல்கலைக்கழகத்திலும் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. பெற்றோர்களோடு வட இந்தியா பயணம் பள்ளிப் பருவத்திலேயே போயிருக்கிறேன் என்றாலும், இந்தி மொழி அறவே தெரியாது. ஒரு நல்ல நாளில் இரவு எட்டு மணிக்கு மதராஸ் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து புறப்படும் “ ஹௌரா மெயிலில்” பயணத்தைத் தொடங்கினேன். துணைக்கு யாரும் கூட வரவில்லை. இங்கிருந்து இரவு கிளம்பினால், மறுநாள் காலை விஜயவாடாவில் பிரேக் ஃபாஸ்ட்; மதியம் வால்டேர் என்னும் விசாகப்பட்டினத்தில் சாப்பாடு; இரவுச் சாப்பாடு ஒரிஸா மாநிலத்தைக் கடக்கும் போது இருக்கும். இதற்கு அடுத்த நாள் காலை ஒன்பது மணி அளவில் ஹௌராவை அடைவோம். அன்று மாலை அங்கிருந்து ஹௌரா –டெல்லி இரயிலில் ”டூஃபான் எக்ஸ்பிரஸ்) –ஏறினால் மறுநாள் காலை ஏழு மணி அளவில் பாட்னா இரயில் நிலைய ஜங்ஷன் வந்து சேரும். முதன் முறை தனியாகச் செல்லும் இந்தப் பயணம் என்னை எவ்விதம் பாதித்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிந்தால் சுவையாக இருக்கும்.
முதலில் மொழிப் பிரச்சினை. கும்மிடிப்பூண்டி தாண்டியதுமே தமிழ் மறைந்துவிடும்; தெலுங்கின் ஆட்சி தொடங்கும். காக்கிநாடா பகுதி தாண்டியதும் ஒரிய மொழி கலந்த தெலுங்கு உள்ளே நுழையும்;, பிறகு பலாஸா வரை வங்காளம் கலந்த ஒரிஸாவும் அதைத்தாண்டி கல்கத்தாவில் தூய வங்காள மொழியும் பயின்று வரும். அங்கிருந்து மொகல்சராய் வரை சமாளிக்கும் வங்காள மொழி அதன் பிறகு பீகாரின் இந்தியில் வெளுத்துக்கட்ட ஆரம்பித்துவிடும். போகப் போக இதையெல்லாம் புரிந்துகொண்ட நான், அந்த முதல் பயணத்தில் கிட்டத்தட்ட மௌன சாமியாகத்தான் வீற்றிருந்தேன். ஏதோ என் மனத் திருப்திக்கு ஆங்கிலத்தில் பேசினேன். அதை யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கைகள், முக பாவங்களையும், ஆக்ஷன்களையும் பார்த்தே பயணத்தில் என் தேவைகள் நிறைவேறின.
கல்கத்தா பெரிய மாநகரம் அல்லவா? ஆங்கிலேயர் காலத்து முதன்மை நகரமல்லவா? நாட்டின் கவர்னர் ஜெனரல் வசித்த நகரம் அல்லவா? ஓரளவு ஆங்கிலத்தில் பேசி மாலை வரை தள்ளிவிட்டேன். அங்கிருந்து இரயில் ஏறிய பிறகு பீகார் இந்தியின் ஓலங்கள்தான்.
பாட்னாவில் என் கடைசி சித்தப்பா ஒரு சவுத் இண்டியன் ரெஸ்டரண்ட் வைத்திருந்தார். அவரோடு என் பெரியண்ணாவும் பணிபுரிந்து கொண்டிருந்தார் அங்கு சென்ற பிறகு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கும். பிறகு மாணவர் விடுதியில் சேர்வதற்கும் அவர் உதவி செய்தார். அவர் அங்கு இருந்ததால்தான் என் தந்தை என்னைத் தனியாக அனுப்பினார்.
இதெல்லாம் ஆரம்ப உதவிதான். அதன் பின் இரண்டு ஆண்டுகள் , பல்கலைக்கழகமும், விடுதி வாழ்வும் நானும்தான். அவர்கள் பக்கம் திரும்பக் கூட நேரமில்லை. புதிய இடம், புதிய படிப்பு, புதிய நண்பர்கள் என்று நிறைய அனுபவங்கள். அவற்றுள் மொழி சம்பந்தப்பட்டவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எங்கள் முதுநிலை வகுப்பில் மொத்தம் இருபது பேர்கள். பதினாறு மாணவர்கள் ஆறு மாணவிகள். என்னைத் தவிர அனைவருக்கும் இந்தி தெரியும். டெல்லி . ஜாம்ஷெட்பூர் போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள். எனது பிரச்சினை மொழியிலிருந்துதான் ஆரம்பித்தது. நான் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பேராசிரியர்களும் சாதாரணமாகப் பேசுகையில் இந்தியைத்தான் பயன்படுத்துவார்கள். நான் இந்தி தெரியாமல் ஆங்கிலம் பேசுகிறேன் என்று அவர்கள் நினைக்கவில்லை. ( இந்தி தெரியாமலும் ஒருவன் இந்தியாவில் இருப்பானா..!? ) ஏதோ நான் “கெத்து” காட்டுகிறேன் என நினைத்து வம்பு செய்தார்கள்.
இந்தப் பின்னணியில்தான் “ராகிங்” நடந்தது.
“உனக்கு இந்தி தெரியாதுதானே ! அப்படியென்றால் இதோ நாங்கள் சொல்லும் வார்த்தைகளை நமது வகுப்புப் பெண்களிடம் போய்ச் சொல்” என்று இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லச் சொன்னார்கள். இதில் ஏதோ தவறு உள்ளது என்று தெரிந்தும் தடுக்க இயலாமல் போய் அப்பெண்களிடம் , வார்த்தைகளை மட்டுமல்ல , நடந்த விவரத்தையும் சொன்னேன். எனது நல்ல காலம் அவர்கள் என்னைப் புரிந்து கொண்டார்கள். இந்தியில் அவை மிக மோசமான வார்த்தைகள். மேலும் அப்பெண்கள் இப்படி ஒரு “கிளாஸ் மேட்” ஐ நாமே இழிவு படுத்தலாமா என்று வகுப்புத் தோழர்களிடம் சண்டைக்கே போய்விட்டார்கள். எனக்கு உண்மையிலேயே இந்தி தெரியாது என்று அறிந்த பிறகு அத்தனை பேரும் போட்டி போட்டுக் கொண்டு எனக்கு இந்தி கற்பிக்கத் தொடங்கினர். “ஜிக்ரி தோஸ்த்: ஆகிவிட்டனர்.
இந்தியைத் தவிர வேறு மொழியில் பேச வாய்ப்பில்லாத ஊர். வகுப்பில் இந்தி; விடுதியில் இந்தி, வீதியில் இந்தி. திரையரங்கில் இந்தி; இத்துடன் இந்தி கற்றுக்கொடுக்கத் தயாராயிருந்த நண்பர்கள். பிறகென்ன? இரண்டொரு மாதங்களில் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவனைப் போலப் பேச ஆரம்பித்துவிட்டேன். குறிப்பாக “போஜ்பூரி” மொழி கலந்த இந்தியை பேச ஆரம்பித்துவிட்டேன். இது தவிர உருது கலந்த அழகான “லக்னோ இந்தி”, வடமொழி கலந்த தூய்மையான “உ பி இந்தி” பஞ்சாபியின் வலிமை கலந்த “டெல்லி இந்தி” ஆகியவற்றையும் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டேன்.
பீகாருக்குள்ளேயே புழங்கும் “போஜ்புரி”, மகிஹி, மைதிலி போன்ற மொழிகளைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். அவற்றிலுள்ள இலக்கியங்கள் பற்றியும் அறிந்து கொண்டேன். கிரீஷ் குமார் தாகுர் என்ற விடுதி நண்பன். எனக்கு அடுத்த அறை அவன் மைதிலி மொழி பேசுபவன். ஆங்கிலத்தில் எம்.ஏ படிப்பவன்; என்னோடு நெருக்கமானவன். அந்த மைதிலி மொழியின் மிகப் பெரிய கவிஞரான “வித்யாபதி” யின் (Maithili and Sanskrit polymath-poet-saint, playwright, composer,) .நூற்றாண்டு விழாவை பல்கலைக்கழகம் பத்து நாட்கள் காலையும் மாலையுமாய் பெரிய ஷாமியானா பந்தல்கள் அமைத்து , அரங்கங்கள் , மேடைகள் போட்டு நடத்தியது. நண்பன் கிரீஷ் என்னை அவனோடு அழைத்துச் சென்று அவனது மொழியின் பல இலக்கிய நயங்களை எடுத்துச் சொன்னதை இன்றும் நான் நன்றியோடு நினைவுகூருகிறேன். ஒவ்வொரு மொழியின் பின்னாலும், அறிந்துகொள்ள வேண்டிய எத்தனை இலக்கியப் படைப்புகள் உள்ளன என்பதை அவன் மூலம் நான் அறிந்துகொண்டேன்.
பாட்னாவில் நான் மாணவனாக இருந்த போது, திரையரங்குகளில் சில நேரங்களில் பழைய ( பிளக் அண்ட் வொயிட்) படங்கள் திரையிடப்படும். ”கிளாஸிக்” படங்கள் என்பதால் மாணவர்களுக்கு டிக்கெட் விலை பாதி; ( இந்தச் சலுகை இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை) இதன் காரணமாக பழைய படங்களைப் பார்க்க விடுதி மாணவர்கள் விடுமுறை நாட்களில் கூட்டமாகக் கிளம்பிவிடுவோம்;
பிருதிவி ராஜ்கபூர், திலீப் குமார். மதுபாலா நடித்த திரைக்காவியமான “மொகல் ஏ ஆஸாம்”, குரு தத்தின் அழியாப் புகழ் பெற்ற “காகஜ் கே ஃபூல்” ,சத்யஜித் ரேயின் “பாதெர் பாஞ்சாலி” “சாருலதா” ,வி.சாந்தாராமின் ”தோ ஆங்கே பாரா ஹாத்; கிஷோர் குமாரின் சூப்பர் படமான “படோசான்”, ராஜேந்திர குமாரும், சாதனாவும் நடித்த இதயத்தை திருடிய “மேரே மெஹபூப்” அப்போது பாபுலராக வந்த “ஆராதனா” “ அமர் பிரேம்” என்று பல படங்கள். பட்டியல் பெரிது. இங்கே இடம் கிடையாது
எத்தனை படங்கள் பார்த்தேன் என்பதல்ல ; இவையெல்லாம் நல்ல மொழி வளம் மிக்க வசனங்கள் உள்ள திரைக் காவியங்கள். இவற்றை அணு அணுவாக சொல்லுக்குச் சொல் அனுபவிக்க, இரசிக்க எனக்கு நடைபாவாடை விரித்தது எது ? மொழி அறிவுதானே !
இந்தி சரளமான பிறகு, வீட்டை விட்டுத் தனியனாக , வெகு தொலைவில் வந்து இருந்துகொண்டு பாட்னாவிலும், பனாரஸ் பல்கலைக் கழகத்திலும் படிப்பதும் பழகுவதும் எனக்கு எந்த மனச் சோர்வையும் எப்போதும் தந்ததில்லை. இதுதான் மொழியின் ஆற்றல்.
எந்த பட்னா ஸ்டேஷனில் தனி ஆளாக இறங்கி, யார் அழைத்துச் செல்ல வருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேனோ , அதே ஸ்டேஷனிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருபது நண்பர்கள் உடன்வந்து ஆரவாரத்துடன் மாலை போட்டு வழியனுப்ப சென்னைக்குத் திரும்பினேன். ஒரு புதிய பாதையைக் காட்டியது பட்னா, பனாரஸ் வாசம்; ஒரு புதிய உலகைக் காட்டியது மொழி என்னும் ஜன்னல். பல பக்கங்கள் எழுதக் கூடிய விவரங்கள் இன்னும் உண்டு. இப்போது இடைவேளை.
சென்னை திரும்பிய பிறகு விவேகானந்தா கல்லூரியிலேயே எனது பணி தொடங்கி நிறைவும் பெற்றது என்றாலும், சென்னை திரும்பு முன்னமேயே நான் உலகைக் கற்றுக் கொண்டுவிட்டேன். அதற்குக் காரணம் புதிய மொழி அறிவு. வெறும் தமிழனாக சென்னையிலிருந்து இரயில் ஏறியவன், இந்தியத் தமிழனாகத் திரும்பினேன்.
”பிற மொழிகளைக் கற்க வேண்டும்; இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் சென்று ஆறு மாதங்களேனும் வாழ வேண்டும். அது உங்களைப் புரட்டிப் போட்டுவிடும். முழுமனிதனாக மாற்றும் “ என்று நான் மாணவர்களுக்குச் சொல்லும் போதெல்லாம் எனக்கு “ஹௌரா மெயில்” நினைவுக்கு வரும்.
