புத்தகம் : தமிழர் புத்தகங்கள் – ஓர் அறிமுகம்
தொகுப்பாசிரியர் : சுப்பு
விஜயபாரதம் பதிப்பகம், முதல் பதிப்பு : 2016
பக்கம் 500 சலுகை விலை : ரூ 200
இந்தத் தொடரில் நான் பலவிதமான ரசனை மிகுந்த உபயோகமான நூல்களை அறிமுகம் செய்து வருகிறேன் என்பது தொடர்ந்து இந்தப் பகுதியை வாசித்து வருபவர்களுக்குத் தெரியும். நூல் எதைப்பற்றியது என்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.. ஆனால் நம்மை நல்ல எண்ணங்களுக்கும், ரசனைகளுக்கும் இட்டுச் செல்கிறதா என்பதை கவனிக்கிறேன். நூல் சிறியதா பெரியதா என்பதும் முக்கியமில்லை என்று நினைப்பவன் நான். பழைய புத்தகமா, புது புத்தகமா என்பது கூட எனக்கு பொருட்படுத்த வேண்டிய விஷயமாகத் தெரியவில்லை.
பழம் புத்தகமாக இருந்தாலும், நேற்று வெளியிடப்பட்ட புத்தகமாக இருந்தாலும் நாம் படிக்காத புத்தகம் எல்லாமே புதுப் புத்தகம்தான். படிக்க வேண்டிய புத்தகமா இல்லையா என்பதைத்தான் நான் கவனிக்கிறேன். உங்களுக்கும் அறிமுகம் செய்ய நினைக்கின்றேன்.
சுப்பு அவர்களை தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள “தமிழர் புத்தகங்கள் – ஓர் அறிமுகம்” என்ற இந்த நூலையே எடுத்துக் கொள்ளுங்கள். 2016ல் முதல் பதிப்பு கண்டதுதான் என்றாலும், என்றும் இளமை மாறாத நூல் இது. தமிழருக்கும் தமிழர் புத்தகங்களுக்கும் எவ்வளவு வருடங்கள் ஆனாலும், தமிழ் இருக்கும் வரை, தமிழன் என்ற பெருமை இருக்கும் வரை, இளமை என்றுமே மாறாததுதானே ?
சுப்பு அவர்கள் சிரமேற்கொண்டு செய்திருக்கும் இந்த சீரிய பணி பெரும் பணி என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நூலின் உள்ளே 108 கனமான கட்டுரைகள். அத்துணையும் விதம் விதமான வித்தியாசமான தலைப்புகளில். ஒவ்வொன்றும் தமிழையும் தமிழ் வாழ்வையும் கொண்டாடும் அனுபவம் வாய்ந்த தமிழ் எழுத்தாளர்களாலும், பண்டிதர்களாலும் ரசனையோடு எழுதப்பட்டது. கட்டுரைகள் சிறியதும் பெரியதுமாக இருக்கின்றன. ஆனால் ஒன்றுக்கு ஒன்று சோடை போனதல்ல. தமிழரின் பாரம்பரிய உணவு போல, பலவிதமான சுவைகள் ஒன்று சேர்த்து பரிமாறப்பட்டிருக்கின்றன. படித்துப் பார்த்தால் தெரியும் அதன் தனித்துவமான சுவை.
“குழந்தைகளுக்குத் தமிழூட்டி வளர்க்கும் தாய்மார்களுக்கு இந்தப் புத்தகம் சமர்ப்பணம்” என்னும் அன்பு வரிகளோடு தொடங்கும் இந்நூலை சுப்பு அவர்கள் அழகாக வடிவமைத்திருக்கிறார். பதிப்புரையில் குறிப்பிட்டி ருப்பது போல, இந்தப் புத்தகம் மற்றைய புத்தகங்களிலிருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட புத்தகம்தான். தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் கதாசிரியர்கள், தமிழ் இலக்கியவாதிகள் என 108 பேர் இந்நூலில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். ஏதோ ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்குள் என இல்லாமல், பல்வேறு பொருளில் உயர்ந்த பல கருத்துக்களின் களஞ்சியம் என இந்த நூலினைக் குறிப்பிடலாம்.
எடுத்துக்காட்டாக சில கட்டுரைத் தலைப்புகளை இங்கே குறிப்பிடுகிறேன் :
- படி… படி…. நூலைப் படி – சுகி சிவம்
- புதையலைத் தேடி…..- அ.ச.ஞானசம்பந்தன்
- உ.வே.சா அவர்களின் சங்க இலக்கியப் பதிப்புகள் – பேராசிரியர் ம வே பசுபதி
- கங்காதேவியின் “மதுரா விஜயம்” – ரமணன்
- பாரதியார் கவிதைகள் (மூலமும் உரையும்) – ஓர் அறிமுகம் – முனைவர் வ.வே.சு
- நாடோடிகளின் பாடல்களா? பாடல்கள் நாடோடிகளா ? – இசைக்கவி ரமணன்
- தமிழ் சினிமா – சில புத்தக சிபாரிசுகள் – சுப்பு
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் – இல. கணேசன்
- இசை விமர்சனம் – தமிழில் ! – சாருகேசி
- கடந்த காலத் தமிழ் நாவல்கள் – ஒரு பார்வை – திருப்பூர் கிருஷ்ணன்
இப்படிப் போகும் இந்த 108 கட்டுரைகளில் “தமிழ்ச் சிறுகதைகள் : தோற்றமும் வளர்ச்சியும்” என்ற என்னுடைய கட்டுரையும் இடம் பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியே.
படியுங்கள். ரசியுங்கள். பரவசம் அடைவது நிச்சயம்.
