avinashi mani | Avinashi Blog
அவினாசி மணி தமிழ்த்  திரைப்படப் பாடலாசிரியர். பல திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஜானகி சபதம், ஆயிரத்தில் ஒருத்தி, மிட்டாய் மம்மி, போன்ற பல படங்களை இயக்கியவரும் கூட.  
இதில் ஜானகி சபதம், ஆயிரத்தில் ஒருத்தி ஆகிய இரு படங்களில் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்களில் ஒருவர்தான் இயக்குனர் பாரதிராஜா.
பின்னாட்களில் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜனின் மாமனாரும் ஆனார்.
கவியரசு கண்ணதாசனின் உதவியாளர்களில் ஒருவராக, தனது திரை வாழ்க்கையைத் துவக்கியவர். ஒருமுறை கவியரசு ஸ்டுடியோவிற்குக் காரில் பயணிக்கும்போது, தயாரிப்பாளர் ஏ கே வேலன் அவர்கள் ஒரு  பாடல் கேட்டிருக்கிறார். கவியரசும் சொல்ல ஆரம்பிக்க, கைகளில் காகிதம் எதுவும் இல்லை.
கவியரசு, பையில் இருந்த சிகரெட் பெட்டியைக் கிழித்து, அவினாசி மணி கையில் கொடுத்து, அட்டையின் பின்பக்கம்  எழுதச் சொன்னாராம். அந்தப் பாடல் தான் – ஆசையே அலை போல – நாம் எல்லாம் அதன் மேலே என்ற தை பிறந்தால் வழி பிறக்கும் பாடல். பின்னாட்களில் கவியரசு தலைமையில் கவியரங்கங்களில் பங்கு கொண்டு இருக்கிறார்.
அடிமைப்பெண் படத்தில் அவினாசி மணி எழுதிய காலத்தை வென்றவன் நீ என்ற பாடல் இவருக்குப் புகழ் தந்தது.. சுசீலா, ஜானகி என இருவர் பாடும் ghazal மெட்டில், திரை இசைத் திலகம் திரு கே வி மகாதேவன் அளித்த பாடல்.
காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ…
நடந்தால்
அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
அழகாக
விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ…
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ…
(பாவம் இப்படியெல்லாம் எம்ஜிஆரைப் புகழ்ந்து எழுதியும், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் அளவிற்கு, இவர் கவனிக்கப்படவில்லை என்பது சோகம் )
ஆன்மிகத்தில் இவர் எழுதிய பாடலால் இவருக்குப் புகழ் கொடுத்தது. ஆனால், பாடிய L.R ஈஸ்வரிக்கு எல்லாம் (பணம் உட்பட) கிடைத்தது.    அம்பிகையிடம் சரணடையவைக்கும் அற்புத  வரிகள். இன்றைக்கும் தமிழகமெங்கும் ஒலிக்கும் பாடல்.
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
பாடும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
காற்றாகி கனலாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை!
நல்லநேரம் படத்தில், இவர் பாடல் தான் –
ஆகட்டுண்டா தமி ராஜா
நட ராஜா
மெதுவா தள்ளய்யா
பதமா செல்லய்யா
நேற்று இன்று நாளை படத்தில்,
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ
கோடிக் கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது
என்ற பாடல் அன்றைய வானொலியில் தொடர்ந்து ஒலிபரப்பானது.
கன்னிப்பெண் திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல், அன்றைய காலங்களில், இலங்கை வானொலி நிலையம், தினசரி ஒலிபரப்பிய பாடல்.  கண்ணதாசனின் தாக்கம் அப்படியே தெரியும் இந்த பாடலில் ;
ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
பூமகள் பொறுமையும்
நாமகள் இனிமையும்
பூமியில் வந்தது பெண்ணாக
நாணமும் மென்மையும் நாயகி வடிவினில்
காவியம் ஆனது உன்னாலே
அடுத்த வருஷம் இந்த நாளில்
தாலி உண்டாகும்
இந்த அன்னம் பெற்ற
குழந்தை வந்து தோளில் நின்றாடும்
கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்
கூட்டல் என்றாகும்
இந்த குடும்பம் நல்ல கோயில் என்று
ஊரும் கொண்டாடும்
நினைத்ததை முடிப்பவன் படத்தில்,
கொள்ளை இட்டவன்  நீதான்  (என் உள்ளத்தை)
கொட்டி வைத்தவன் நீதான் (நல் இன்பத்தை)
கன்னமிட்டவன் நீ தான் (என் கன்னத்தில்)
கண்டுகொண்டவள் நான்தான்  
கைது செய்யவும் காவல் வைக்கவும்
இன்று வந்தது நேரம்
அந்த நாடகம் இந்த மேடையில்
ஆட வந்தது போதும்
எந்த நாளிலும் எங்கள் மன்னவன்
கொள்கை அல்லவோ வாழும்
இந்தப் பாடலில், கடத்தல், கொள்ளை இவற்றைக் காதல், காதலனுடன் இணைத்து எழுதி இருப்பது மிகச் சிறப்பு.
ரிக்ஷாக்காரன் படத்தில்
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போல ஆடும்
வித்தாரக்க்கள்ளி
எந்தன் தாளத்தையே
கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி
கோபுரங்கள்  சாய்வதில்லை படத்தில் எழுதிய
புடிச்சாலும் புடிச்சேன் புதுசாகப் புடிச்சேன்
இதுக்காகத்தானே நானே துடிச்சேன்
மற்றும், ராகங்கள் மாறுவதில்லை படத்தில்  இவர் எழுதிய
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
வரிகள் பாராட்டப்பட்டன.
தொடர்ந்து,   வேடனைத் தேடிய மான், ஜோதி, மகளுக்காக, தங்க வளையல்  போன்ற  படங்களில்  பாடல்கள் எழுதினார்.
1985களில் வெளிவந்த காக்கிச்சட்டை படத்தில் வெளிவந்த இவரின் துள்ளல் பாடல் நல்ல ஹிட் ஆனது.
பூப்போட்ட  தாவணி
போதையில் ஆடுதே
கிண்ணம் நான்
என்னைப் பார்
இன்னும் ஏன்
 உன்னைத் தா  
ராஜாத்தி
       
இப்படிப் பல நல்ல பாடல்கள் தந்து, சிறந்த இயக்குநராகவும் இருந்தாலும், அவர்  அடைய வேண்டிய புகழை அடையவில்லை என்பதே உண்மை நிலை. திறமைக்கு மேல் ஒன்று தேவை – அதன் பெயர் விதி அல்லது அதிர்ஷ்டம்.  அதற்கு இறைவன் தான் அருள வேண்டும்.
அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி