(புது முயற்சி – கதை உரையாடல் வடிவத்தில்)

Indian caregiver nurse taking care of senior female patient in a wheelchair  at park. Stock Photo | Adobe Stock

‘என் செல்ல அம்மாக்கு என்ன இன்னைக்கு கோபம்?’

‘ஒண்ணும் இல்லை’

‘ஒண்ணும் இல்லாமலா முகம் இப்படி வாடி போயிருக்கு!’

‘நேத்து கடுதாசி வந்தது’

‘ஓஹோ அதுதான் விஷயமா, சரி தெரிஞ்ச கதைதானே இதுக்கு போய் ஏன் கவலைப் படற?’

‘இல்ல உனக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது, இதுவாவது தகையுமான்னு   பார்த்தேன்’

‘என்னம்மா 24 வயசு ஒரு வயசா? எனக்குன்னு ஒரு இராஜகுமாரன் குதிரை யிலேயோ, டிரையினிலேயோ இல்லனா மினிமம் ஒரு கார்லயோ வந்துருவான்’

‘சரி சரி வேலைக்கு போற நேரத்துல உன்னை நான் ஏன் கஷ்டப்படுத்தணும், இந்தா டிபன் பாக்ஸ், உனக்குப் பிடிச்ச எலுமிச்சை சாதமும் உருளைக்கிழங்கு பொரியலும் வைச்சிருக்கேன், மிச்சம் வைக்காமல் சாப்பிடு’

**********************

‘என்ன சுதா என்ன ஏதாவது புது விஷயம் உண்டா?’

‘என்னத்த புது விஷயம்? அதே பழைய கதைதான்’

‘ஏன் இப்படி இவர்கள் மனசாட்சி இல்லாம பண்றாங்க, உனக்கு என்னதான் குறைச்சல்?’

‘எதுவுமே குறைச்சல் இல்லை, படிப்பிலிருந்து எல்லாமே ஜாஸ்தியா இருக்கிறது தான் அவர்கள் கண்ணை உறுத்துறது போல இருக்கு, ஆனால் எனக்கு ஒரு விஷயம் தான் புரிய மாட்டேங்குது. இதைச் சொல்லவா மூன்று தடவை கும்பலாக வந்தார்கள்?’

‘மேடம்’

‘எஸ் சார்’

‘என்னடி திடீர்னு சாரு மோருன்னு எல்லாம் கூப்பிடுற?’

‘இல்ல சுகுணா ஃபோனை வச்சுடு, இங்க யாரோ வந்திருக்காங்க, அவங்களை அட்டென்ட் பண்ணணும்’

‘சரி சரி இந்த வரன் தகைந்ததுனா ஒரு குல்பி ஃப்ரீயா வாங்கிக்கலாம்னு  பார்த்தேன்’

‘உன்னோட ஒரு குல்பிக்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? நான் உனக்கு ஒன்னென்ன இரெண்டே வாங்கித் தரேன், அதுக்கென்ன, உனக்கு இல்லாத குல்பியா, சரி வைக்கிறேன்.’

************

‘சொல்லுங்க சார் என்ன வேணும்?’

‘எங்க அப்பாவ கூட்டிட்டு நான் மதுரைக்கு போகணும்’

‘அதுக்கு நீங்க இரயில்வே ஸ்டேஷனுக்கில்ல போகணும் டிக்கெட் புக் பண்ண, இது ஹாஸ்பிடல்’

‘மேடம் ரொம்ப ஹாஸ்யமா பேசுறீங்க’

‘இல்ல இல்ல பிராக்டிகலா பேசுறேன்’

‘எங்க அப்பாவாலே நடக்க முடியாது’

‘அதுக்கு நீங்க ஒரு கடைக்கு போய் வாக்கிங் ஸ்டிக் வாங்கலாம்’

‘மேடம் என்ன பேச விடுங்க’

‘நான் ஒண்ணும் உங்களுக்கு மாஸ்க் போட்டு விடலையே, இல்லை பேச  மேடை கட்டி மைக் தரவா, சொல்லுங்க’

‘எங்க அப்பாவை கூட்டிட்டு மதுரைக்கு போகணும், அதுக்கு எனக்கு ஒரு வீல் சேர் வேணும்’

‘இதுக்கு நீங்க ஏதாவது பர்னிச்சர் கடையோ இல்லையென்றால்…..’ ‘இல்லைங்க மேடம், பக்கத்தில் கடையில எங்க அப்பாவுக்கு ஏற்ற மாதிரி வீல் சார் இல்லை, என் பிரண்டு தான் அப்ப சொன்னான், இந்த ஹாஸ்பிடல்ல இருக்கு, ரெண்டு நாள் கடன் வாங்கி எடுத்துட்டு போ என்று’

‘சாரி சார் அப்படி எல்லாம் கொடுக்க முடியாது’

‘சுதா நர்ஸ் மனசு வச்சா எதுவுமே நடக்கும், ரெண்டு மூணு நாள் அவன் இங்க ஹாஸ்பிடல்ல தங்கி இருந்தப்ப உங்களோட ஹாஸ்பிடாலிட்டி, நீங்க எல்லோரையும் அன்பாக நடத்தற விதம், எல்லாரும் உங்களுக்கு கொடுக்கிற மரியாதை, எல்லாம் பார்த்து தான், அவங்க மனசு வச்சா நிச்சயம் முடியும்னு சொல்லி அனுப்பி விட்டான்’

‘உங்க பிரண்டுக்கு ஒரு நன்றி சொல்லுங்க, ஆனா இதுல நான் மனசு வைக்கிறது ஒண்ணும் இல்ல சார், எங்க சீப் என்ன சொல்வார் என்று தெரியவில்லை, எப்படி இதை போய் கேக்கறதுன்னு எனக்கு புரியல’

‘வாயாலேதான்’

‘ஒ இது என் டெக்னிக்கா’

‘உங்க சீப்க்கு உங்க மேல இருக்கிற நல்ல அபிப்பிராயத்தை எனக்காக கொஞ்சம் யூஸ் பண்ணி வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும், இரண்டு நாள்ள அப்படியே திருப்பிக் கொண்டு வந்து விடுவேன், நீங்க தான் கொஞ்சம் மனசு இரங்கணும்’

‘நான் என்ன மலை மேலேயா உட்கார்ந்துண்டு இருக்கேன், இறங்கி வர,  சரி, உங்களுக்காக கேட்டுப் பார்க்கிறேன்’

***************

‘என்னம்மா சுதா, என்ன இவ்வளவு தூரம் தேடி வந்திருக்க டியூட்டி நேரத்திலே!’

‘சார் இங்க தங்கி இருந்த ஒரு பேஷண்டோட பிரண்டு வீல் சேர் கடனா கேட்கிறார் இரண்டு நாளைக்கு, அவங்க அப்பாவை மதுரை கூட்டிட்டு போகணுமாம்’

‘சுதா நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்லுவேனா, சரியான வேண்டுகோளாக இருந்தா பார்த்து நம்ம கண்டிஷன் சொல்லி வீல்சேரை கொடுத்து அனுப்பு, ரெண்டு நாளைக்கு வேண்டிய வாடகை பணத்தை  வாங்கிக்கொள், பத்திரமா திருப்பி வந்துடணும், பேஷண்டுகளுக்கு ரொம்ப அவசியம் அப்படின்னு சொல்லி கொடுத்து அனுப்பு, அது திரும்பி வருவதை நீ உறுதிப்படுத்திக்கோ, நீ எல்லார் மேலையும் காட்டுற பரிவு இரக்க குணம் இதைப் பார்த்து உனக்கு இந்த சலுகை வழங்குகிறேன்’

‘ரொம்ப நன்றி சார், என் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கும் சேர்த்து’

‘நீங்க ரொம்ப லக்கி,  இந்த ஃபார்ம்ல கையெழுத்து போட்டு வீல் சேர் எடுத்துட்டு போங்க. இரண்டு நாள் வாடகையுடன் வீல் சேர பத்திரமா திருப்பி கொண்டு வந்து கொடுத்துடுங்க, தயவுசெய்து என்னோட நல்ல பெயரை காப்பாத்துவீங்கன்னு நினைக்கிறேன்’  

************

‘மேடம் இந்தாங்க வீல் சேர், ரொம்ப நன்றி, ரொம்ப உபயோகமாக இருந்தது, நான் வருகிறேன்’

********

‘இது என்ன வீல் சேர் சைடு பாக்கெட்ல ஒரு பேப்பர் இருக்கு, அவர் மறந்து போய் வச்சிட்டு போயிட்டாரா, ஏதாவது பில்லா இருக்க போகுது, இல்லையே இதன் மேல் என் பெயர் எழுதி உள்ளதே! ‘அன்புள்ள சுமதி, நான் நேராக விஷயத்துக்கு வருகிறேன், நீங்க பேசின விதம், பிறருக்கு உதவற குணம், ஆனா அதுலயும் ஒரு கண்டிப்பு, மேலதிகாரர்களுடன்  பழகும் விதம், அந்த அதிகாரிகள் உங்க மேல வச்சிருக்க மதிப்பு இதெல்லாம் பார்த்தவுடன் நீங்கதான் என்னோட வருங்கால மனைவி என்று எண்ணி விட்டேன், நான் ஒரு பெரிய கம்பெனியில் உயர் அதிகாரியாக இருக்கிறேன். என் அப்பா அம்மா என்னுடன் தான் இருப்பார்கள். என் ஒரு தங்கைக்கு கல்யாணம் ஆகி விட்டது. இனி முடிவு உங்கள் கையில்’

************

‘அம்மா அம்மா, ரெண்டு நாள் முன்னாடி நான் சொன்னேன் இல்லையா, என்னோட இராஜகுமாரன் காரிலேயோ, தேரிலியோ வருவான் என்று ஆனால் வந்தது வீல் சேரோடு’

 

                                          ரேவதி ராமச்சந்திரன், ஜான்சி