போன வாரம் :

இலக்கிய வாத்தி என்ற பி டி மாஸ்டர் ! அவருக்கு ஒரே ஒரு ஆசை.  தன் இலக்கிய வாழ்க்கையைப் பத்தி ஒரு பயாகிரபி யாரவது எழுதனும்னு அவர் கொஞ்ச காலமா மனசிலேயே போட்டு  உழன்று கொண்டிருந்தவர் என்னிடம் அதைப் பத்திச் சொன்னார். (நான் அமெரிக்காவில் படித்துவிட்டு கிராமத்துப் பள்ளியில் வேலை செய்ய வந்தவன் – புனை பெயர் பாரதன்). புத்தகம் என்ன ஒரு பயாபிக் குறும்படமே எடுக்கலாம் என்று நான் அவரிடம் சொன்னபோது அவர் மகள் வைஜயந்திக்காக என்று  சிலர் நினைக்கலாம்.   இதில் குவிகம் நண்பர்கள் கேரக்டராக வரக்கூடும். என் மீது கோபிக்காதீர்கள் !  ஏனென்றால் இலக்கிய வாத்தி   சொன்னதை எழுதும்  ரைட்டர் நான்)

 இனி இந்த வாரம்:

  

“ரைட்டர்! ரெடியா? நான் சின்ன வயதில எனக்கு ஏற்பட்ட இலக்கியத் தாக்கத்தைப் பத்தி சொல்லப் போறேன். புத்தகமா எழுதும்போது எல்லாவத்தையும் எழுதுவோம். சினிமாவா படம் பிடிக்கறப்போ உனக்கு எது வசதியோ அதை வச்சுக்கோ! இப்ப ஒழுங்கா எழுது ‘என்று உத்தரவு போட்டுவிட்டு ஆரம்பித்தார் இலக்கிய வாத்தி!

இலக்கியவாதிகளில் மிகச் சிலரே பிறக்கும்போதே சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர்கள். பெரும்பாலர் வறுமைக்கோட்டிற்குக் கீழேயே பிறந்து வளர்ந்தவர்கள். தின்பதற்கு சோறு இருக்காது ஆனால் அடி உதை குத்து என்று நிறையத் தின்றவர்கள். அந்தப் பிஞ்சு வயதில் அவர்கள் பட்ட காயங்கள் பார்த்த வக்கிரங்கள் நல்லது கேட்டது எல்லாம் கலந்து பிச்சைக்காரன் சோறு போல உள் மனதில் பதிந்து பின்னால் எழுதும்போது சதையும் ரத்தமுமாகத் தெறித்து வாசகர் முன் விழும். அங்கேயே உயிர் பெற்று எழும். அப்படி வந்தால்தான் அது இலக்கியம். இல்லாவிட்டால் வெறும் வார்த்தைப் பிசையல்தான். மாடு சாணி போடுவதைப் போல. எடுத்து மூலையில் கொட்டி வரட்டிதட்டி அடுப்பெரிக்கத்தான் உதவும்.

 (இப்படியெல்லாம் பல எண்ணங்கள் வாத்தியார் கதையை எழுதும்போது என் மனதில் விழும். அதை அப்படியே குறிப்பில் எழுதிக் கொள்வேன். பின்னால் படம் எடுக்கும்போது உபயோகித்துக் கொள்ளலாம்.)

 “எங்க விட்டேன்“ – இது வாத்தி சார்!

“இன்னும் ஆரம்பிக்கவே இல்லை பி டி சார்!”

“நான் பொறந்த கிராமம் நல்லூரு. மகம் பொறந்த ஊராம் அது. பின்னால்தான் தெரிஞ்சுகிட்டேன் தி ஜானகிராமன் ஒரு நாவல்ல சொல்லியிருப்பார் ‘பேருதான் நல்லூர். தடிப்பய ஊர் என்று இந்த ஊரைத்தான் சொன்னாரோ தெரியாது. ஆனா இந்த ஊருக்கும் அது பொருந்தும். என்னைப்  போலத் தடிப்பசங்க நிறைய இருந்த ஊரு. நான் பத்து வயசு வரைக்கும்தான் அங்கே இருந்தேன். அதுக்கப்பறம் வீட்டை விட்டு ஓடி வந்து மெட்ராஸ் வந்து கொத்தவால் சாவடியில மூட்டை தூக்கி…  ஒரு நல்ல காலம் வந்து பள்ளிக்கூட வாசலை மிதிச்சது. அதைப் பின்னால பாக்கலாம். சொந்த ஊரு நல்லூரில பிஞ்சில பழுத்து என்னமா கொட்டம் அடிச்சேன் தெரியுமா?

அதைக் கொஞ்சம் பாத்துட்டு மெட்ராசுக்குப் போலாம்.

..ஏய் ரைட்டர்! நீ நல்லூருக்குப் போயிருக்கியா?” 

 ( நானும் உங்க கூட நல்லூர் வர்றேனே ! எங்க அப்பாவுக்கு அதுதான் சொந்த ஊராம்! அந்த ஊருக்குப் போனா காலை உடைச்சுடுவேன் அப்படீன்னு எங்க அப்பா நிறைய தடவை சொல்லியிருக்காரு! அதனாலேயே அங்கே போகணும்னு இருக்கு! அங்கே போனா கால் கட்டு கிடைக்குமாமே! – தாவணியில் வைஜயந்தி கன்னத்தில் குழி விழக் கேட்டாள்!

நான் பதில் சொல்லவில்லை

“நீ ஒரு கல்லுணி மங்கன்”

“அப்படின்னா?”

யாருக்குத் தெரியும்? அங்கே அம்மன் கிட்டே வேண்டிகிட்டா கல்யாணம் நடக்குமாம்! சரியா வேண்டிக்கோ ! நம்ம ரெண்டு பேரையும் சேத்து வைக்கணும்னு கரெக்டா சொல்லு!” )

“என்ன ரைட்டர் ! உட்கார்ந்துகிட்டே தூங்குரே! நீ நல்லூருக்குப் போயிருக்கியான்னு கேட்டேன். பதிலைக் காணோம் “

சட்டென்று சுதாரித்துக் கொண்டு,

போயிருக்கேன் சார்! போன மாசம் நான் போயிட்டு வந்தேன் சார்! என்னோட அமெரிக்க நண்பனோட அப்பா அம்மா அந்த ஊரில இருக்காங்க! அவங்களைப் பார்க்கப் போயிருந்தேன்.

 அங்க என்னென்ன பாத்தே? உனக்குத் தெரிஞ்ச நல்லூரைப் பத்தி சொல்லு! அப்புறம் என்னோட நல்லூரைப் பத்தி சொல்றேன்.

 “சிவன் கோவில் போயிருந்தேன் சார்! என்னை அப்படியே மயக்கிடுச்சு! தஞ்சாவூர் கோவிலைவிடப் பழமையானதாம். சோழன் கோச்செங்கணான் கட்டின மாடக் கோவிலாமே? என்ன பிரும்மாண்ட சுயம்பு லிங்கம். அதில ஜீவசக்தியுள்ள ஓட்டை வேற. கீழே ஆவுடையார். மேலே அஞ்சு அடி லிங்கம் ! மாடி ஏரித்தான் சாமியைப் பார்க்க முடியும். சிவனோட 25 அவதார சிற்பம். அங்க நவக்கிரகமே கிடையாதாம். முக்கியமா சிவலிங்கத்தோட கலர் ஒவ்வொரு இரண்டரை மணிக்கு மாறிக்கிட்டே இருந்தது. அஞ்சு கலர் – செம்பு கலர், இளஞ்சிவப்பு கலர், உருக்கின தங்கக் கலர், நவரத்தினப் பச்சைக் கலர், கடைசியா சாயங்காரம் நாம மனசில என்ன நினைக்கிறோமோ அந்தக் கலர் இப்படி ! அதனால் அவருக்குப் பஞ்ச வர்னேஸ்வரர் என்ற பெயர் வேற. தேவார நால்வரும் நல்லூர் கோவிலைப் பத்திப் பாட்டு பாடியிருக்காங்க! அப்பர் பெருமான் தலையில சிவன் தன் பாதத்தை வைத்து ஆசி கொடுத்த இடமாம். அதனால் இங்க பெருமாள் கோவில் மாதிரி சடாரி சேவை ! குந்திதேவி தான் பாபம் போக்கிக்க வந்த இடமாம். கும்பகோணத்தில 12 வருஷத்துக்கு ஒரு முறைதான் மகா மகம். இங்கே வருஷா வருஷம் மகம் விசேஷமாம். பிரும்ம தீர்த்தக் குளம்!   அம்மன் கிட்டே வேண்டிகிட்டா கல்யாணம் சீக்கிரம் நடக்குமாம்! 

அந்தக் கோவில் பத்தி ஒரு குறும் படமும் எடுத்தேன்.

மறந்துட்டேனே !  அந்த ராத்திரி பூரா நடக்கிற வீரபத்திர சாமி கணநாத பூஜை .. அப்பப்பா ..

“ என்ன சொன்னே ? வீரபத்திர பூசையா ! நிறுத்து ! நிறுத்து! மேலே எதுவும் சொல்லாதே !”

 அவர் படபடப்பு அடங்க ஒரு மணி நேரம் ஆயிற்று. அதுவும் ஒரு சொம்புத் தண்ணீரைக் குடிச்சப்பிறகுதான் கொஞ்சம் நார்மலுக்கு வந்தார். மிரட்டல் உருட்டல் என்று எப்போதும் ஒருவித கெத்தோடு இருக்கும் பி டிமாஸ்டர் காத்துப் போன புட்பால் போல இருந்தார்.

 அவரும் பேசவில்லை. நானும் பேசவில்லை இப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தோம்.

“ ரைட்டர் தம்பி ! நானும் பத்து வயசு வரைக்கும் அந்த ஊரில இருந்திருக்கேன் ! நீ சொன்ன கோவில் விவரம் எதுவும் அன்னிக்கு எனக்குத் தெரியாது. கோயில் குளத்தில ஆயிரம் தடவை குதிச்சிருக்கேன். கோயில் நந்தவனத்தில மாங்கா திருடியிருக்கேன். நாங்க இருந்தது குடியானத் தெரு. பத்து வருசம் அந்த ஊரில கோயில் மாடு மாதிரி திரிஞ்சேன். மாடு ஆடு பண்ணி இதுக கூட நானும் ஒரு மிருகமா இருந்தேன். அந்த வீரபத்திர சாமி பலிபீடப் பூசை அன்னிக்குத்தான் நான் அடிபட்டு மிதி பட்டு ஆத்தாக்காரி கொள்ளிக் கட்டையெடுத்து சூடு போடத் துரத்த ஊரே என்னைத் துரத்த ஊரை விட்டே ஓடிப்போனேன்! அதுக்கப்பறம் அந்த ஊருக்கே போகலை!”

விவரத்தை கதையை அப்புறம் சொல்றேனே! இன்னிக்கு இது போதும் ” 

சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வீட்டுக்குப் புறப்பட்டார்.

(இன்னும் வராம விடுமா?)