குறிஞ்சிப் பாட்டு
குறிஞ்சித் திணையைப் பற்றிய பாடல் என்பதால் இந்நூல் குறிஞ்சிப்பாட்டு எனப் பெயர் பெற்றது. குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணையாகும். இந்தப் பாடல் தோழி செவிலித்தாயிடம் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. இந்நூலை எழுதியவர் புலவர் கபிலர் ஆவார்.. இப்புலவர் பெருமான் எழுதிய பாடல்கள் யாவும் மிகச் சிறப்பானவை. தமிழின் இனிமையை வெளிப்படுத்துபவை. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றில் இவர் எழுதிய பாடல்கள் உள்ளன.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் நண்பர் இவர். பாரி இறந்தபின் அவருடைய பெண் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக ஏற்றுக் கொண்டவர். ஆரிய மன்னனுக்குத் தமிழர்களின் களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் ஆகியவற்றை அறிவுறுத்த எழுதிய குறிஞ்சிப்பாட்டு நம்முடைய பெருஞ்செல்வம். அறத்தொடு நிற்றல் என்னும் துறையில் கபிலர் இதைப் படைத்துள்ளார்.
தோழி செவிலித்தாயிடம் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஏற்பட்ட காதல் உறவு பற்றிக் கூறுவதாக அமைந்த நூல் இதுவாகும். மிகத் திறமையுடன் அவள் அதை விவரித்துக் கூறித் திருமணம் வேண்டுகின்றாள். தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் எவ்வாறு சந்தித்தார்கள் என விவரிக்கின்றாள். தலைவியும் தோழியும் தினைப்புனக் காவலுக்குச் சென்றது, அருவியில் விளையாடியது, 99 வித மலர்களால் ஆடை புனைந்து அணிந்தது, அங்கு வந்த தலைவனைக் கண்டது, அவன் அவர்களை நாய்களிடமிருந்தும் யானையிடமிருந்தும் காப்பாற்றியது, தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் ஏற்பட்ட சூழ்நிலை, தலைவன் திருமணம் புரிவேன் என்று உறுதிமொழி கொடுத்தது, கற்பு வாழ்க்கையில் விரும்தோம்பலுடன் வாழ்வோம் என அவன் கூறியது, இரவுக்குறியில் அவன் வருவது, வரும் வழியில் அவனுக்கு ஏற்படும் இடையூறுகள், அதை எண்ணி வருந்தும் தலைவியின் நிலைமை ஆகியவற்றை எல்லாம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றாள்.
அன்னாய் வாழி! வேண்டு அன்னை, ஒண்ணுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்,
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்,
வேறு பல் உருவில் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,
எய்யா மையலை, நீயும் வருந்துதி (1-8)
தோழி செவிலித்தாயை அணுகி வேண்டுவதாக நூல் தொடங்குகிறது, தோழி கூறுகிறாள்.
”தாயே! நீ நீடு வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! ஒளியுடைய நெற்றியையும் அடர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என் தோழியின் மேனியில் அணிந்த சிறப்பான அணிகலன்களை நெகிழச் செய்த அழிக்க முடியாத கொடூர நோயைக் கண்டு, நீ அஞ்சுகிறாய். ஆதலால் அகன்ற ஊரில் உள்ள, நடக்கப்போவதை அறிவிக்கும் கட்டுவிச்சி, வேலன் முதலியோரைக் கேட்கிறாய். வெவ்வேறு உருவங்களில் உள்ள கடவுளைப் பேணியும், பாராட்டியும், வணங்கியும், பல நிற மலர்களைக் கலந்து தூவியும், அகில் முதலிய நறுமணப் புகையையும், சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களையும் செலுத்தி, கலக்கமுற்று, காரணம் அறியாது, மயக்கமுடையவளாக நீயும் வருந்துகின்றாய்.
என் தலைவியின் தோற்றத்தையும், வருத்தத்தையும் அறிந்து நான் அவளிடம் காரணம் கேட்டேன். அதற்குத் தலைவி, ”அணிகலன்கள் பாழ்பட்டால், அவற்றைச் சேர்த்து இணைக்க முடியும். சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் கெட்டால், மாசற்று விளங்கும் புகழை பழைய நிலைக்குக் கொண்டு வருதல், குற்றமில்லாத காட்சியை உடைய சான்றோர்க்கும் அது எளிமையான செயல், என்று பழைய நூல்களை அறிந்த அறிஞர்கள் கூற மாட்டார்கள். பெற்றோரும் அவர்கள் தேர்ந்தெடுப்பவர்க்கு என்னைக் கொடுக்க எண்ணகிறார்கள். தையும் என்னுடைய மடமையும், ஒரு சேரக் கெட, உயர்ந்த தேரை உடைய என் தந்தையின் அரிய காவலைக் கடந்து, இருவரும் ஆய்ந்து தேர்ந்தெடுத்தக் களவு மணம் இது என நாம் தாயிடம் கூறுமிடத்து, பழியும் உண்டோ? அறிவுறுத்திய பின்னர், இசைந்து வாராது இருப்பினும், பொறுத்திருந்து, இம்மை மாறி மறுமை அடைந்த பொழுது நான் அவனை அடைவதாக என இருப்பேன்” என்று கூறினாள்.
இவ்வாறு தலைவியின் கூற்றைப்பேசிய தோழி தன் நிலையை ஓர் உதாரணத்தால் விளக்குகிறாள். ”பகைமை மேற்கொண்டு தாக்கும் இரண்டு பெரிய வேந்தர்கள் இருவரை ஒன்றுசேர்க்கும் பணியில் இருக்கும் சான்றோர் போல, உனக்கும் என் தோழிக்கும் இடையே, நான் அச்சத்துடன் மிகவும் வருந்தி இருக்கின்றேன்.”இவ்வாறு கூறும் தோழியின் துணிவும் சொல்வன்மையும் போற்றத்தக்கதாகும்.
அடுத்துத் தலைவனோடு தலைவிக்குத் தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதைக் கூறுகிறாள்“
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை 35
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப,
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்,
நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி
எல் பட வருதியர்” என நீ விடுத்தலின், (35-39)
“விதையை உடைய மூங்கிலைத் தின்பதற்கு மேல் நோக்கி நின்ற யானை, தன்னுடைய முத்துக்கள் நிறைந்த தந்தத்தில் இறக்கி வைத்த தும்பிக்கையைப் போல, பஞ்சை ஒத்த மேல் பகுதி உடைய, வளைந்த, முதிர்ந்த, பெரிய கதிர்களை நன்றாகத் தன்னிடம் கொண்ட சிறு தினையைத் தாக்கும் பறவைகளை விரட்டி விட்டு, கதிரவன் மறையும்பொழுதில் திரும்பி வருவீர்களாக”, எனக் கூறி நீ தினைப்புனம் காக்க எம்மை அனுப்பினாய்” என்பது மேற்கண்ட பாடலடிகளின் பொருளாகும். தந்தம், தும்பிக்கையைத் தாங்குவது சிறுதினையானது பெரிய கதிர்களைத் தாங்குவதற்கு உவமையாகும்.
தோழி மேலும் கூறுகிறாள் “ அத்தினைப்புனத்தில் இனிய இசையை உடைய முரசினையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய முருகன், பகைவர்களைக் கொல்லும்பொருட்டு, கையில் கொண்ட விளங்கும் இலையையுடைய வேல் ஆயுதத்தைப் போன்று உள்ள மின்னலுடனும் இடியுடனும் கூடிய தொகுதி உடையனவாக, மலை மீது மழையைப் பொழிந்தது. அப்போது நாங்கள் அகன்ற சுனையில் குடைந்து விளையாடினோம்; அடர்ந்த மலையில், எங்கள் மனதுக்கு ஏற்றாற்போல் பாடினோம்; பொன்னில் பதிக்கப்பட்ட நீலமணியின் நிறத்தையொத்த, எங்கள் சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து உலர்த்தினோம். சிவந்த கண்களுடையவர்களாக ஆனோம்.” என்று கூறிய தோழி அடுத்துக் கூறுவதுதான் தமிழின் எந்த இலக்கியத்திலும் நாம் காணாததாகும். இது குறிஞ்சிப்பாட்டுக்கே சிறப்பு தருவதாகும்.
“———– ———— ———– வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், 75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை 80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், 85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி, 90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும், 95
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇப், (61-98)
தோழி கூறுகிறாள். “அரக்கை விரித்தாற்போல் உள்ள பருத்த அழகிய மலை எருக்கம்பூவுடன், பிற மலர்களின் அழகிலும் மயங்கியதால், விருப்பத்துடன் திரிந்து அவற்றைப் பறித்து, மழை பெய்து கழுவிய அகன்ற பாறையில் குவித்தோ
பெரிய இதழுடைய ஒளியுடைய செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குளிர்ந்த குளத்தின் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்துக்களையுடைய உந்தூழ், கூவிளம், தீயைப் போன்ற எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல கொத்துக்களையுடைய குரவம், பசும்பிடி, வகுளம், பல கொத்துக்களையுடைய காயா, விரிந்த மலராகிய ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேனின் மணத்தையுடைய பாதிரி, செருந்தி, அதிரல், பெரிதும் குளிர்ச்சியுடைய சண்பகம், கரந்தை, குளவி, நறுமணம் கமழும் தழைத்த மா, தில்லை, பாலை, பாறைகளில் படர்ந்த முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீண்ட நறுமணமான நெய்தல், தாழை, தளவம், முள்ளுடைய காம்பையுடைய தாமரை, ஞாழல், மௌவல், நறுமணமான குளிர்ந்த கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை, காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல பூக்களையுடைய தணக்கம், ஈங்கை, இலவம், தொங்கும் கொத்துக்களையுடைய கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்து வாரம், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி, கருமையான பெரிய குருந்தும், வேங்கையும் பிறவும்” என்று தோழி கூறுவதாக 99 வகையான மலர்களை இங்குக் கபிலர் காட்டுகிறார்.
”நாங்கள் தழையினால் செய்த ஆடையைக் கட்டி, பல்வேறு உருவங்களில் அழகான மலர்மாலைகளை எங்களுடைய மெல்லிய கரிய கொண்டையில் அழகாகக் கட்டி, நெருப்பைப் போல உள்ள நிறத்தையுடைய அழகிய தளிரையுடைய அசோக மர மலர்த் தாது விழுகின்ற, குளிர்ச்சியான நிழலில் இருந்தோம். அப்போது வேட்டை நாய்களுடன் தலைவன் அங்கு வந்தான். வந்தவன், “ஒளியுடைய வளையல்களையும், அசையும் மென்மையான சாயலையும், அழகிய வளைந்த கொப்பூழினையும், மடமையுடைய அழகான ஈரக் கண்களையுமுடைய இளையவர்களே! நான் வேட்டையாடிய விலங்கு தப்பிப் போன நிலையில் உள்ளேன்” என்றான். நாங்கள் மறுமொழி கூறவில்லை.
“என்னிடமிருந்து தப்பிய விலங்கை நீங்கள் காட்டாவிட்டாலும், என்னுடன் பேசுவது உங்களுக்குப் பழியாகுமா, மென்மையானவர்களே?” என்று குரைக்கும் வேட்டை நாய்களின் கடுமையான குரைத்தலை அடக்கி, எங்கள் விடைக்காகக் காத்து நின்றான்.
அப்போது ஒரு யானை கூற்றுவனைப் போல் எங்களை நோக்கி வர, தப்பிக்க இடம் அறியாது, விரைவாக, எங்கள் திருத்தமான திரண்ட ஒளியுடைய வளையல்கள் ஒலிக்க, எங்களின் நாணத்தை மறந்து, விரைந்து, நடுங்கும் மனது உடையவர்களாக, அவனை அடைந்து, கடவுள் ஏறிய மயிலைப் போல நாங்கள் நடுங்கினோம். அவன் அம்பு எய்தி யானையை விரட்டினான். மேலும் அவன், “அழகிய மென்மையான கூந்தலை உடையவளே! தடுமாறாதே! அச்சம் கொள்ளாதே! உன்னுடைய அழகிய நலத்தை நுகர்வேன் நான்” என, மாசு இல்லாத தலைவியின் ஒளியுடைய நெற்றியைத் தடவி, அதன் பின் நீண்ட நேரமாக நினைத்து, தலைவியின் தோழியான என்னுடைய முகத்தை நோக்கி நகைத்தான்.
“——— ————— அந்நிலை
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ,
ஆகம் அடைய முயங்கலின்.”
தலைவன் அவளை அணுகின பொழுது நாணமும் அச்சமும் அவளிடம் தோன்றியன. அவளை விரைவாக பிரியவும் அவன் விடவில்லை. அவளை அணைத்து அவளுடைய மார்பு தன்னுடைய மார்பிலே ஒடுங்குமாறு அவளைத் தழுவினான்.
தலைவன்., “அவளின் முன்கையைப் பற்றி, விளங்குகின்ற அணிகலன்களை அணிந்தவர்களே!” உன்னை உன் உறவினர் எனக்குத் தர, நாடறியும் நல்ல மணத்தினை இன்னும் சில நாள்களில் நான் நடத்துவேன்” என்று நல்ல சொற்களைத் தலைவியின் துன்பம் தீருமாறு கூறினான். பசுவைப் புணர்ந்த ஏறு போல், எங்களுடன் வந்து, முழவின் ஓசை நிற்காத பழைய நம்மூரின் வாயிலில் பலரும் நீரை உண்ணும் துறையில் எங்களை நிறுத்திவிட்டுச் சென்றான்
அப்புணர்ச்சி தொடங்கி, முதல் நாளில் கொண்ட விருப்பத்துடன் என்றும் இரவில் வரும் தன்மையுடையவன் அவன். அவ்வாறு அவன் வரும்பொழுதெல்லாம், காவலர் விரைந்துக் காவல் காப்பினும், சினம் மிகுந்த நாய்கள் குரைத்தாலும், தூக்கத்திலிருந்து நீ விழித்தாலும், நிலா ஒளியைப் பரப்பினும், தலைவியைக் காணாது அவளது மூங்கில் போன்ற மென்மையான தோளில் இனிய துயிலை அவன் பெறாவிட்டாலும், குறி இல்லாததை தலைவன் செய்தக் குறியாகக் கருதிச் சென்று மீண்டு மனையில் புகுந்தாலும் வெறுத்தலைச் செய்யான். அவன் இளமையைக் கடந்தவன் இல்லை. தன் செல்வத்தின் செருக்கால், நல்ல குடியில் பிறந்த தனக்குரிய நல்ல செயல்களிலிருந்து விலகியவனும் இல்லை” என்று தோழி தன் சொல்வன்மையினால் தலைவனின் பண்புநலன்களையும் கூறுகிறாள்.
“ அச்சம் தரும் ஊரின்கண் இரவுக் குறியில் கூடுவதற்கு அவன் வருகிறான். அந்த நிலையற்ற நிலையை ஒழுக்கம் அன்று என்று எண்ணி திருமணத்தை விரும்பி, மழைத் துளிகளால் தாக்கப்படும் மலரைப் போல், தன்னுடைய அழகு அழிந்து, இமை சோர்ந்து, கண்களில் ஈரத்தை உடையவளாய்க் கலங்குகின்றாள் இவள். இவளுடைய பெரிய, அழகிய, குளிர்ந்த கண்களிலிருந்து தொடர்ந்து கண்ணீர் மார்பில் சொட்ட, நாள்தோறும் வலையில் அகப்பட்ட மயிலைப்போன்று, நலம் தொலைய, மெலிந்து, அவனை நினைக்கும்பொழுதெல்லாம் இவள் அழுகின்றாள். அடுத்துக் கபிலர் அவன் வரும் வழி பற்றிக் கூறுகிறார்.
”—————— —————– கங்குல்
அளைச்செறி உழுவையும், ஆளியும், உளியமும்,
புழல் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும், சூரும், இரை தேர் அரவமும், 255
ஒடுங்கு இருங்குட்டத்து அருஞ்சுழி வழங்கும்
கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்,
நூழிலும், இழுக்கும் ஊழ் அடி முட்டமும்,
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர்
குழுமலை விடர் அகம் உடையவால் எனவே.”
”ஆனால் அவன் வரும் வழியில் இரவில் குகையில் உறையும் புலிகளும், ஆளியும், கரடியும், உள்ளே துளையுடைய கொம்பையுடைய காட்டு ஆவினத்தின் காளைகளும், களிற்று யானைகளும், வலிமையால் கெடுக்கும் கொடூரமான சினத்துடன் கூடிய இடியும், முறையான பாதையாகத் தோன்றி செல்லச் செல்ல மறைந்து விடும் பாதைகளும், பேய்களும், மலைப் பாம்புகளும், உட்படப் பிறவும், தப்ப முடியாத தொல்லையைத் தருவன ஆகியவையும் அவருடைய தொகுதியாக உள்ள மலையின் பிளவுகளில் இருக்கின்றன. வருத்தும் கடவுள்களும், இரை தேடும் பாம்புகளும், ஒடுக்கமான கருமையான குளங்களில், கடினமான சுழிகள் இருக்குமிடத்தில் இருக்கும் வளைந்த கால்களையுடைய முதலையும் இடங்கரும் கராமும், ஆறலை கள்வர்கள் கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கும் இடங்களும் இருக்கின்றன” என்று தோழி கூறுவதுடன் நூல் நிறைவு பெறுகிறது.
”தலைவி தலைவனை நினைத்து வருந்துகிறாள் .அவன் வரும் வழியும் அச்சம் தரக்கூடியது. எனவே தாயே! நீர் அவனை அவளுக்கு மணம் முடிக்க வேண்டும்” என்று தோழி கூறாமல் கூறுகிறாள்.
