இரண்டாம் குலோத்துங்கன்

சோழர்களின் வரலாறு பகுதி - 26|இரண்டாம் குலோத்துங்க சோழன்|cholar history in  tamil|2nd kulothunga chola - YouTubeசரித்திரம் பேசத்துணிந்தவன், பெரும் சர்ச்சைகளுக்கு இலக்காக வேண்டும் என்பது பொதுவிதி. இந்த அத்தியாயத்திற்கு இதை இன்னும் ஒரு முறை சொல்லவேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால், நாம் ஒன்று சொல்ல, வாசகர்கள் அது தவறென்று கொதித்தெழுந்து விடக் கூடிய சாத்தியக்கூறுகள் ஏராளம். அதற்காக, நாம் சொல்லவந்ததைச் சொல்லாமல் போவதில்லை. சும்மா ஒரு மறுப்புத் துறப்பு (பொறுப்புத் துறப்பு?). அட அதுதாங்க.. டிஸ்க்ளைமர்!

கி.பி.1133 இல்‌ விக்கிரம சோழன், தன்‌ புதல்வனான இரண்டாம்‌ குலோத்துங்கசோழனுக்கு இராஜகேசரி என்ற பட்டத்துடன்‌ சோழநாட்டின்‌ பேரரசன்‌ ஆக்கினான்‌. பொதுவாக, தலைநகரான கங்கை கொண்டசோழபுரத்தில்தான் பட்டமளிப்பு நடக்கும். ஆனால், குலோத்துங்கனுக்குச் சிதம்பரத்தில் பட்டாபிஷேகம் நடந்தது.

சுருக்கமாக, குலோத்துங்கனின் ஆட்சி, மற்றும் போர்கள் பற்றிக் கூறிவிட்டுப் பிறகு சுவையான, சர்ச்சைகள் நிறைந்த சம்பவங்களுக்கு வருவோம். ஆனால், அவன் ஆட்சியில் நடந்த போர்களைப்பற்றி சுருக்கமாகக்கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால், அவன் போர்களே புரியவில்லை! தந்தை விக்கிரமசோழன் ஆண்ட பகுதி பெரும்பாலும் குலோத்துங்கனின் காலத்தில் மாறுபாடில்லாமல் இருந்தது. 

ஒட்டக்கூத்தர் அவைக்களப் புலவராக இருந்து வந்தார். சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதினார். கம்பர் ராமாயணத்தை எழுதினார். இப்படித் தமிழ்ப்புலமை ஆளுமைகள் பலரும் வாழ்ந்த காலம் அது. ஒட்டக்கூத்தரின் மாணாக்கனாக இருந்து தமிழ் கற்றதால், குலோத்துங்கன், புலமை மிகுந்து விளங்கினான். 

இந்த மன்னன் தீவிரமான சிவபக்தன். இவனுக்குத் திருநீற்றுச்சோழன் என்ற பெயர் இருந்தது. வைணவமதத்தின் மீது அவன் கொண்ட வெறுப்பு, வைணவர்களைப் பாதித்தது. மன்னனுக்குத் தொண்டை, (கழுத்தில்) புற்றுநோய் வந்தது. வைணவர்கள் அவனை “கிருமிகாந்த சோழன்” என்று அழைத்து நொந்தனர் (மகிழ்ந்தனர்?)

சர்ச்சைக்கதைகள் பல உண்டு. 

சர்ச்சை 1:

விஷ்ணு மறுப்பால், குலோத்துங்கன், சிதம்பரக் கோவிலிலிருந்து , கோவிந்தசாமி விக்ரகத்தை அகற்றி, வங்கக்கடலில் எறிந்தான். இதைப்பற்றி ஒட்டக்கூத்தர் கூறுவது மட்டுமே ஆதாரமாக உள்ளது. அவர் ‘குலோத்துங்கன் உலா’ என்ற நூலில் கூறுவதாவது:
“குலோத்துங்கமன்னன் ஆட்சியில், விஷ்ணு பகவான், அவரது அசலான இருப்பிடத்துக்கு (அதாவது பாற்கடலுக்கு) அனுப்பப்பட்டார்.” வங்கக்கடலில் எறிந்ததை கவித்துவமாகச் சொல்கிறாராம். என்னே புலவரின் குசும்பு! அந்தக்காட்சியை, தசாவதாரம் திரைப்படத்தில் பார்த்தோமே! அதில் முதல் காட்சி. இரண்டாம் குலோத்துங்கன் வேடத்தில் நெப்போலியன்.

வைஷ்ணவ ஆச்சாரியார் ராமனுஜரைப் பிடித்து தண்டிக்கவேண்டும் என்று மன்னன் தேடினானாம். தண்டனைக்குத் தப்ப, ராமானுஜர் மற்றும் அவரது சிஷ்யர்கள் தப்பித்து, ஸ்ரீரங்கத்திலிருந்து, கர்நாடகத்தில் இருக்கும் மேலக்கோட்டை சென்றார்களாம். குலோத்துங்கனின் மறைவுக்குப் பிறகுதான் ராமானுஜர் ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பினாராம்.  

இந்தக்கதைக்கு இன்னொரு பக்கம்:
சிதம்பரத்திலிருந்த கோவிந்தசாமி விக்ரகம், சிதைந்து இருந்ததால், அதைப் பழுது பார்க்க, அதை அங்கிருந்து எடுத்த முயற்சிகள், வைணவரை கோபப்படுத்தின. அதனால் அவர்கள், குலோத்துங்கனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, “கிருமிகாந்த சோழன்” என்று அழைத்து தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தினர்.

இன்னொரு கதை சொல்லட்டுமா?   இரண்டாம் குலோத்துங்கன் வைணவமதத்தின் மீது வெறுப்புக் கொண்டவனில்லை. ராமானுஜர் தனது சிஷ்யன் (மருமான்) தாசரதியை குலோத்துங்கனுக்கு ஆசிரியராக நியமித்தார். குலோத்துங்கன், ராமானுஜர் அறிவுரைப்படி, தாசரதியை, ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதஸ்வாமி கோவிலில் மேலாண்மை அதிகாரியாக நியமித்தார். இது எப்படி இருக்கு?

இப்படிப் பல கதைகளைச் சொல்லி விட்டோம். இதில் எது உண்மை என்பதை யாரோ அறிவர்?

சர்ச்சை 2: அம்பிகாபதி – அமராவதி.

இதுவும் கதையோ, அன்றிக் கட்டுக்கதையோ! கம்பர் மகன் அம்பிகாபதி, இரண்டாம் குலோத்துங்கனின் மகள் அமராவதியைக் காதலிக்கிறான். மன்னன் காதலை மறுக்கிறான். ஒட்டக்கூத்தர் இதற்கு தீர்வு சொல்லுகிறார்: அதாகப்பட்டது.. ‘அம்பிகாபதி, காதலற்ற, தெய்வீகப்பாடல்கள் நூறு புனைந்து பாடவேண்டும். அப்படிப் பாடி முடித்தால், இருவருக்கும் மணம். தவறினால் மரணம்’. இது ஒட்டக்கூத்தர் முடிவு. அனைவரும் உடன்பட, அரசவையில் , பாடல்கள் துவங்குகின்றன. இளவரசி திரைமறைவில் மறைந்து கேட்கிறாள். முதலில், கடவுள் வாழ்த்து. பிறகு முதல் பாடல். தொடர்ந்து பாட, 99 காதலற்ற பாடல்கள் முடிந்ததும், இளவரசி 100 பாடல் முடிந்தது என்று மகிழ்ந்து திரைவிலக்கி மலர்முகம் காட்டுகிறாள். கடவுள் வாழ்த்தை முதல் பாடல் என்று தவறாகக் கணக்கிட்டு விடுகிறாள். காதலியின் அழகுமுகம் கண்ட அம்பிகாபதி, உணர்ச்சிப் பிரவாகத்தில் காதலைத் தோய்த்து, நூறாவது பாடலைப் பாடி முடிக்கிறான். ஒட்டக்கூத்தர் – அம்பிகாபதி பாடல் போட்டியில் தோற்றதாக அறிவிக்க, அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த இறப்பில், ஒரு காதல் காவியம் பிறக்கிறது. கம்பர் மனமுடைந்து சோழநாட்டை விட்டு வெளியேறுகிறார்.

இதை தியாகராஜ பாகவதர் நடித்துப் பாராதவர்கள், சிவாஜிகணேசன் நடித்துப் பார்த்திருப்பீர்கள்.

இந்தக் குலோத்துங்க மன்னனின் ராணிகளைப்பற்றி ஒரு வரி கூடச் சொல்லவில்லையே என்று நீங்கள் படும் ஆதங்கத்தைத் தீர்த்துவிடலாம்.

மன்னனுக்கு இரண்டு ராணிகள் இருப்பதாகத் தெரியவருகிறது. பட்டத்து ராணி தியாகவல்லி. அவள் புவனமுழுதுடையாள் என்றும் அறியப்படுகிறாள். மற்ற அரசி, முக்கோகிலன் – மலையமான் ராஜ்யத்தின் இளவரசி.

பதினேழு ஆண்டுகள் ஆண்ட,  இரண்டாம் குலோத்துங்கசோழன் கதையை முடித்து விட்டு, அடுத்த சோழனைப் பற்றிக் கதைக்கலாம். விரைவில்..