கிட்டத்தட்ட அறுபது வருடங்களாகக் குமாரிக்குத் தன் தோழிகளோடு பழக்கம். அருகிலிருந்த பூங்காவில் பல வருடங்களாக நடைப்பயிற்சி செய்யும்போது தங்கள் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்வதும் உண்டு. தோழியர் பகிர்வதில், குமாரிக்குத் தாம் செய்வதில் எதோ குறையோ எனத் தோன்றியது.
தன் குழப்பங்களைத் தோழிகளிடம் பகிர்ந்தாள். குமாரி சொல்வதைக் கேட்டு, தோழி ஒருவர் என்னைப் பற்றிக் கூறி அவளை என்னிடம் அழைத்து வந்தாள். விவரித்த பின் தோழி வெளியேறினார்.
இங்குப் பேசுவதை யாரிடமும் பகிர மாட்டேன் எனப் புரிந்ததும் குமாரி சரளமாக விவரித்தார். கணவர் மாதவனுடன் தங்களின் ஒரே பெண்ணான ரேவதியுடன் வசிக்கிறோம் என்றார்.
ரேவதியைப் புதுமைப்பெண் சாரத்தை ஊற்றி வளர்த்தோம் என்றார். காரணம், குமாரி மற்றும் மாதவனின் பெற்றோர்கள் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பு கொண்டதாலும், தீர்க சிந்தனை உடையவர்களாக இருந்ததின் தாக்கத்தினாலும். இதற்காகவே ரேவதியை மணந்தான் மாப்பிள்ளை ராகவன். அவர்களுடைய பெண் விஜியையும் அவ்வாறே வளர்த்தார்கள்.
தற்போது நடப்பதைப் பார்க்கையில், தன்னால்தானோ பதினேழு வயதான விஜியின் நடத்தை என்ற கேள்வி மனதில் எழுகிறது என்றார் குமாரி. யார் எதை எடுத்துச் சொன்னாலும் தகாத வார்த்தைகளால் பதிலளிக்கிறாள், ஏளனம், கூச்சல் போடுகிறாள், யாரையும் மதிக்காமல் நடந்து கொள்கிறாள் என்றார்.
விஜி பிறக்கும் போது ராகவன், ரேவதி இருவரும் முக்கிய பொறுப்பான வேலையிலிருந்தார்கள். விஜியின் பள்ளிச் சந்திப்புகளுக்குக் குமாரியையே போக வைத்தார்கள். மழலையர் பள்ளி இறுதி ஆண்டில், மற்ற பிள்ளைகளைப் போல தன் அம்மா தினமும் வராமல் பாட்டி வருவது ஏக்கத்தை உண்டாக்கியதால் பல உடல் உபாதைகள் நேர்ந்தது. விஜியை சுதந்திரத்திற்குப் பஞ்சம் இல்லாமல் வளர்த்தார்கள் பெற்றோர். பயன் அளிக்கவில்லை, தவறான நடத்தை வலுத்தது.
நாளடைவில் ரேவதி வேலையை விட முடிவானது. அடி மனதில் ஏமாற்றம் நிலவியது. குமாரி மனதிலும். இந்த ஆண்டு விஜி கல்லூரி சேர வேண்டும். தன் இச்சை போல விஜி நடந்து கொள்வது வீட்டினரை வியக்க வைத்தாலும், விஜியின் சொற்கள், பிடிவாத நடத்தையால் செயலற்ற நிலையிலிருந்தார்கள்.
பழி தன்னுடையது எனக் குமாரி ஏற்றுக் கொண்டதால் மனம் வலித்தது என்றாள். இதை செஷன்களில் உரையாடி வர, சமுதாயத்தில் எடுத்துக்காட்டாக இருக்க விரும்பியதில் இவ்வாறு வளர்ப்பு முறை கடைப்பிடித்ததைக் கண்டறிந்தார். கூடவே, தானும் மகளுக்கு அவள் வளரும்போது எல்லைக்கோடுகள் விதிக்காததை உணர்ந்தார். இதன் பிரதிபலிப்பு ரேவதி பெற்றோர் எனப் பாராமல் உபயோகிக்கும் வார்த்தைகள், ஜாடைகளில் தெரிந்தது.
இதையே விஜி செய்தாள் என்றதை இதுவரை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. ரேவதிக்கு ஒருதுணையாக இருந்து, எல்லாம் செய்து கொடுத்ததில் மகளை எப்படி உருவாக்க வேண்டும் என நினைத்தது நேராததை உணர்ந்தார். ரேவதி தங்கள் நிழலாக இருக்கிறாளோ? என்று மாதவன் நினைத்தார்.
ரேவதியின் காரியதரிசி போல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு தாம் இயங்கும் இடங்களை அடையாளம் கண்டார்கள் குமாரி-மாதவன். மாற்றம் தேவை என உணர்ந்தார்கள்.
இப்படி அறிதல் புரிதல் செயல்படத் தூண்டுதலாகும். எந்த நிலையிலும் வயதிலும் செயல்படுத்துவதற்கான வழிகளைப் பல ஸெஷன்களில் பார்த்தோம். செயல்படுத்த விஜி, ரேவதி, ராகவன் இவர்களும் வருவதற்கான தேவையை விவரித்தேன். அழைத்து வந்தார்கள்.
சூழலைப் புரிந்து கொள்ள மேலும் கேள்விகளை நான் கேட்க, விஜி தங்களை மதிக்க வேண்டும் என ரேவதி-ராகவன் தம்பதியர் தெரிவித்தார்கள். இதற்கு, தனக்குக் கொடுத்திருந்த சுதந்திரத்தை உபயோகிப்பதாக விஜி பதில் கூறினாள். பெற்றோரையும் மகளையும் தனித்தனியாகப் பார்க்க முடிவெடுத்தேன்.
ரேவதி ராகவன் ஓரளவிற்கு விஜியின் வயதின் தன்மையைப் புரிந்து கொண்டிருந்தார்கள். அதையே உபயோகித்து, அந்தப் பருவத்தில் உணர்வுகளை வேறுபடுத்திக் கண்டுகொள்வதின் அவசியத்தை வலியுறுத்தினேன். விஜி தன் உணர்வை வெளிப்படுத்திக் கொள்ளும் விதங்களை விவரிக்கச் சொன்னபோது பெற்றோர் விவரிக்க முடியாமல் தவித்தார்கள். இரு வாரங்களுக்கு விஜியின் உணர்வுகள் யாவை, எப்படி வெளிப்படுத்துகிறாள் என கவனித்து வரிசைப் படுத்தச் சொன்னேன்.
செய்து வந்தார்கள் ரேவதி-ராகவன். இருவரும் விதவிதமாக கவனித்ததை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். இருவரின் பட்டியலையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விஜியின் நடத்தைக்கு அவர்களின் எதிர்வினை நேர்மறையா அல்லது எதிர்மறையா எனப் பல ஸெஷன்களில் பிரித்துப் பார்த்தோம். பலமுறை விஜி உணர்வு ததும்பும் போது, சொற்களை வீசும்போது, ரேவதி-ராகவன் தங்களது உடல் மொழி, பதில்கள் இவற்றை ஆராய்ந்து பார்த்துத் தெளிவு பெற்றார்கள். விஜியின் நடத்தை மூன்று அம்சங்களின் கலவை: டீனேஜ் வயதினரின் பொங்கும் உணர்வுகள், சலனம்; சுதந்திர வளர்ப்பினால் பேச்சு, நடத்தை தோரணை; பல்வேறு சூழ்நிலைகளைக் கையாளும் விதம் தெரியாமல் தடுமாற்றம். பெற்றோர் இதன் வேறுபாடுகளைக் கண்டறிந்து நிதானத்துடன் கையாளுவது முக்கியம்.
இந்தப் பயிற்சி செய்யும் போது ராகவன் தான் எப்போதும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளப் பலவகையான விடைகளை உடனடியாகக் கூறிவிடுகிறோம் என்று கண்டுகொண்டார். இது பயன்படாததை ஆராய்ந்தோம். ராகவன் புரிந்து கொண்டார், இப்படிச் செய்வதால் மகளைச் சொந்தமாகச் சிந்தனை செய்ய விடவில்லை. இது வளரும் வயதில் சிந்தனை, முடிவு எடுக்க வாய்ப்பை ஆக்கிரமித்து விடுகிறது. இந்த வயதினருடன் கலந்துரையாடி முடிவு எடுத்தால் இதைச் செய்யும் முறையை கற்றுக் கொடுக்க வாய்ப்பாகிறது. அதாவது இப்படிச் செய், நான் சொல்லித் தருகிறேன் என்றது இல்லாமல்.
வளரும் பருவத்தில் வாய்ப்பு அவசியம், அவ்வளவுக்கு அவ்வளவு செயல்முறைகளைக் காணுவதும். எடுத்துக்காட்டாகப் பெற்றோர், ஆசிரியர்கள், தாத்தா பாட்டி, உறவினர்கள் என இருக்கலாம். இதை உணர்ந்த ராகவன், முடிந்த அளவுக்கு தன் வேலையைச் சற்று மாற்றி விஜியுடன் அதிக நேரத்தைக் கழித்தார். இதற்கு ஸெஷன்களில் கலந்தாலோசித்து செஸ் போன்ற விளையாட்டுகள், காலையில் நடைப்பயிற்சி என்று துவங்கினார்கள்.
விஜி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எதிர்மறை உணர்வுகளை மட்டுமே உபயோகித்தாள். ரேவதி தானும் அம்மாவுடன் இவ்வாறே செய்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்த்தாள். அதுவும் இந்த பாலினப் பருவத்திற்கு ஒப்பாது எனப் பலமுறை அறிவுரை தந்ததில் விஜி ஒவ்வொரு முறையும் எரிச்சல் ததும்ப, “மா ஏம்மா ரொய்ங் ரொய்ங்னு, விடேன் எனக்குத் தெரியும்.” என முடிப்பதை நினைவுகூறிச் சொன்னாள். தானும் குமாரியிடம் இதையே சொல்வதின் பிரதிபலிப்போ? திடீரென விழித்தது போல ரேவதி ராகவன் இந்த நடத்தைகளை மாற்றத் தயாரானார்கள்.
முதல் கட்டமாக, தங்களது உணர்வை அடையாளம் கண்டு, அதன் பெயரைச் சொல்லி, அதுதான் தன்னுடைய இப்போதையை நிலை எனக் கண்டுகொண்டு செயல்படுத்த ரேவதிக்குப் பல மாதங்கள் ஆயிற்று.
இதனைச் செயல்படுத்தியதில் ராகவன் மிகச் சரளமாகப் பழகக் கூடிய ஒருவராக மாறியதை விஜியும் ரேவதியும் கண்ணெதிரிலேயே பார்த்தார்கள். இவ்வாறு ஆனதில் ராகவன் புரிந்து கொண்டார், தன் உணர்வை உணர்ந்து கண்டுகொள்வதால் அதன் தாக்கம் குறைந்தது. விளைவு, தெளிவாக யோசித்துச் செயல்பட முடிந்தது. கூடவே தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் கசப்பு, காரமின்றிப் பேசுவதால் மற்றவர்களுக்குத் தான் சொல்வதின் வீச்சு முழுதாக இருந்தது. இதைக் கண்டறிந்ததில் வீட்டில் ஒருவருக்கொருவர் மேல் தாக்கம் அதிகமாக அமைதி அதிகரித்தது.
விஜி தான் வெளிப்படுத்தி வருவதை மாற்றி அமைக்க விரும்பினாள். இதற்காக அவளுக்குப் பெற்றோருடன் ஸெஷன்களை அமைத்தேன்.
மூவரையும் அளிக்கப்பட்ட சுதந்திரங்கள் மற்றும் அதை உபயோகித்து வருவதை வர்ணிக்கப் பரிந்துரைத்தேன். ஒருவரை ஒருவர் உறவாடும் போது தாம் நினைப்பதிலும், அதை எதிராளி புரிந்துகொள்வதிலும் அதைச் செயல்படுத்துவதிலும் எத்தனை வித்தியாசம் என அறிந்தார்கள். மேலும் இதை ஆராய, எந்த பொருளைச் சரியாகத் தெரிவிக்கவில்லை என்றதை எடுத்துக் கொண்டோம்.
பெற்றோரின் வளர்ப்பு முறை, ஒழுக்கத்திற்குத் தீட்டிய விதிகள், வெளிப்படுத்த வேண்டிய விதம் எனப் பிரித்துப் பார்க்கச் செய்தேன். அதுவும் முக்கியமாகத் தான் சொல்வதும் செய்வதும் ஒத்துப் போகிறதா அல்ல சொல் ஒன்று செயலோ எதிர்த்திசையிலா என்று ஆராய்ந்தோம். ராகவன்-ரேவதிக்கு உடனடியாக இதனால்தான் விஜி கற்றுக்கொள்ளவில்லை எனப் புரிந்தது. தன் பங்கிற்கு விஜி இதை ஏற்றுக் கொள்ள, தானும் பொறுப்புகளைத் தவறான விதத்தில் கையாண்டதை ஒப்புக்கொண்டாள். அடையாளம் காண்பதும் மாற்ற முடிவெடுப்பதும் முன்னேற்றத்தின் நல்ல அறிகுறிகள்!
மெல்ல மெல்ல, விஜி மலர்ந்தாள்!
