“ஓசிப் பொடிதனை நாசியில் இட்டால் காசிக்குப் போனாலும் கருமம் தீராது”
“ஊசிக்கழகு முனை முறியாமை, உயர்ந்த பரதேசிக்கழகு இந்திரியம் அடக்கல்,
திரள் நகில்சேர் வேசிக்கழகு தன் மேனி மினுக்கல்,
மிகப் பெருத்த நாசிக்கழகு பொடியென்று சொல்வர் நாவலரே”.
எவ்வளவு அனுபவித்திருந்தால் மூக்குப் பொடியின் மகத்துவத்தை இவ்வளவு அழகாக கூறுவார் மாம்பழக்கவிசிங்க நாவலர்.
ஐம்பது- அறுபது ஆண்டுகளுக்கு நான் ‘பொடி’யனாக இருந்த நாட்களில் மூக்குப் பொடியின் சுவையறியா நாசி பாவம் செய்ததாக பார்க்கப்பட்டது.
நான் சும்மா சொல்ல வில்லை
படியினிலுள்ளார் செய்த பாக்கிய மனையான், செங்கைத்
தொடியினர் மதனன், சோம சுந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே”
என அனுபவித்து பாடியது தமிழ்த்தாத்தா உ. வே.சா அவர்களின் ஆசான் தியாகராசச் செட்டியார்.“ மூக்குப் பொடி போடுகின்ற மூளையுள்ள ஆண்களுக்கு முக்கியமா வேணும் இந்த கைக்குட்டை” என தூக்குத் தூக்கியில் சிறப்பித்துள்ளார் உடுமலை நாராயணகவி.‘பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் சளி பிடித்து சாவார்” என வள்ளுவரை வம்பிழுக்கும் அளவிற்கு பொடியின் மகத்துவம் பேசப் பட்டது.
என் வயதொத்தவரை “காரம், மணம், குணம் நிறைந்தது” எதுவென விநாடி விணா நிகழ்ச்சியில் கேட்டால் சட்டென அரை நொடியில் T A S இரத்தினம் பட்டணம் பொடி என கண்களை மூடிக் கொண்டு சொல்வோம்.
ஆம், காரத்திற்கு சுண்ணாம்பையும், மணத்திற்கு சுத்தமான பசு நெய்யையும், போதை குணத்திற்கு புகையிலையுடன் சில வாசனைப் பொருட்கள் கலந்த கலவையே மூக்குப் பொடி.
ஹைபிரீட் சட்ட புகையிலையை பறித்து பதனம் செய்து புகையிலை தூளாக எடுக்கப் பட்ட பின் மீதமாகும் காம்பே பெரும் பகுதி. இதை இரும்பு சட்டியிலிட்டு சுண்ணாம்பு மற்றும் வாசனைப் பொருட்களை சேர்த்து வறுத்து அரைப்பர். பின் அரைத்ததை சலித்து கல் உரலில் புரச மரக் கட்டை உலக்கையால் பசு நெய் சேர்த்து இடிப்பர். மெல்லிய துகளாக மணக்க மணக்க கிடைப்பதே நம் மூக்குப் பொடி.
தென்னமெரிக்காவின் பிரேசில் போன்ற நாடுகளில் செவ்விந்திய இனத்தவர்கள்தாம் முதலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மூக்கில் பொடியை உறிஞ்சத் துவங்கினர். ரமோன் பனெ என்ற ஸ்பானியர் கொலம்பஸுடன் அமெரிக்க கண்டத்திற்கு வந்தார். அவர் ஸ்பெயின் மற்றும் ஆங்கிலேய நாடுகளுக்கு 1490 களில் மூக்குப் பொடியை அறிமுகம் செய்தார்.

18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சீமாட்டிகளைக் கண்ட இந்திய மாந்தர்களும் snuff ஐ ‘ நாசிகா சூரணம்’ என பெயர் மாற்றி உறிஞ்சத் துவங்கினர்.
கடைகளில் பீங்கான் குடுவைகளில் இருக்கும் பொடியை நீண்ட ஸ்பூனில் இலாவகமாக எடுத்து வாழை மட்டையில் மடித்து தரும் அழகே அழகு. வாழை மட்டை சாமானியர்களுக்கானது. ஆனால்
வட்ட உருளை வகையொன்று- கெட்டிப் பொன்
டப்பா எனவே தரத்தினுக் கேற்றபடி
வைப்பார் பொடி டப்பாவை”.பொடி போடுவதில்தான் எவ்வளவு இலாவகம். ஒரு சிட்டிகை, பெரு விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்கும் இடையே பொடியை எடுத்து சிறிது நேரம் கையில் வைத்திருந்து, கையை சற்றே உதறி பின் மூக்கருகே கொண்டு சென்று அருகில் இருப்பவர் அறியமல் உறிஞ்சும் பொழுது கிடைக்கும் சுகம் எழுத முடியாது. ஆனால் அருகில் உள்ளவர் பார்வையில்
“ சிட்டிகை என்றே சிறிதெடுத்துத் தானுதறிமுட்டப் பெரு மூக்கில் முந்தியிட்டு- கொட்டுகிற
காரச்சளியைத் தன் கையாலே தான் துடைக்கும்
கோரம் பொடியர் குணம்”
மூக்குப் பொடிச் சித்தர் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவருக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தால் மூக்குப் பொடி சித்தர் என்று அழைக்கப்பட்டார். தினகரன், புதுவை முன்னாள் முதல்வர் இரங்கசாமி ஆகியோர் இவரின் பக்தர்களாக அறியப்பட்டனர். இவரைக் காண வரும் பக்தர்கள் இவருக்கு மூக்குப் பொடியைக் காணிக்கையாகத் தந்தனர்.பொடி போடுபவர்கள் கையில் ஒரு கைக் குட்டையோ அல்லது அவ்வளவிற்கு கிழிக்கப் பட்ட நைந்த வேஷ்டியோ அவசியம் இருக்கும். ஒரு காலத்தில் வெள்ளை நிறத்தில் இருந்த துணியை இரு முனைகளிலும் பிடித்து சில சுற்றுகள் சுற்றி மூக்கைத் துடைக்கும் விதத்தில் தான் எத்துனை வகை.நெய்ப் பொடியோ, வறப் பொடியோ பல நூறு ஆண்டுகள் மக்களை போதைப் பொருளாகி ஆட்டுவித்த பொடியை ஒரு பொடிச் சமாச்சாரம் என்று ஒதுக்கி விட முடியாது.
சாதாரணமாகக் கொடுப்பவர் கை உயர்ந்தும் பெறுபவர் கை தாழ்ந்தும் இருப்பதே மரபு. ஆனால் பொடி கொடுப்பவர் கை தாழ்ந்தும் பெறுபவர் கை உயர்ந்தும் இருப்பது பொடிக்கு மேலும் பெருமை தரும் பொடி விஷயம்.
மூக்குப் பொடி புற்று நோய்க்கான உரம் என நாம் உணர்ந்து கொள்ள பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன.
