(ஓர் அடியார்- ஒரு வெண்பா)

 24)  அப்பூதி அடிகள்!

அப்பூதி அடிகள் நாயனார் வரலாறு (தமிழ் Subtitle உடன்) | Apputhi Adigal Nayanar Life History - YouTube

சோழ நாட்டைச் சேர்ந்த திங்களூர் என்ற ஊரில் அந்தணர் மரபில் தோன்றிய அப்பூதி அடிகள் வாழ்ந்து வந்தார். அவர் திருநாவுக்கரசர் நாயனார் பற்றிக் கேள்விப்பட்டு, அவர் மீது அளவற்ற அன்பு பூண்டிருந்தார். தம் மைந்தர்களுக்கும், வீட்டில் உள்ள பொருள்கள், பசுக்கள், தண்ணீர்ப் பந்தல், மடம் முதலியவற்றிற்கும் ‘திருநாவுக்கரசு’ என்ற பெயரைச் சூட்டி இருந்தார்.

ஒரு முறை, திருநாவுக்கரசர் திங்களூர் வழியாக வந்தபோது அங்கிருந்த தண்ணீர்ப் பந்தல், தம் பெயரில் விளங்கியதைக் கண்டு வியப்புற்றார். அங்கிருந்தோரிடம் அப்பூதி அடிகளைப் பற்றிக் கேட்டறிந்து, அவர் இல்லம் சென்றார். சிவனடியார் ஒருவர், தம்மை நாடி வந்துள்ளது அறிந்த அப்பூதியடிகள் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கி வரவேற்றார். திருநாவுக்கரசர், “தாங்கள் ஏற்படுத்திய தண்ணீர்ப் பந்தலுக்குத் தங்களுடைய பெயரை வைக்காமல், வேறு ஒருவருடைய பெயரை வைப்பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அப்பூதியடிகள், திருநாவுக்கரசரின் பெருமைகளை எல்லாம் விளக்கி,  அப்படிப்பட்ட சிறப்பை உடையவரை ‘வேறொருவர்’   என்று கூறுவது சரியல்ல என்று சினத்துடன் கூறினார். “மங்கலமான அடியார் திருக்கோலத்துடன் வந்து, இப்படிக் கேட்கும் நீர் யார்?” என்று வினவினார். “இறைவனின் கருணையால், சூலை நோயினால் ஆட்கொள்ளப்பட்டு உய்தி அடைந்த சிறுமையேன் யான்” என்று திருநாவுக்கரசர் கூறினார்.

உடனே அப்பூதி அடிகள்,  இரு கைகளையும் தலை மேல் குவித்து,  நிலத்தில் விழுந்து நாவுக்கரசரின் திருவடிகளை வணங்கினார்.

தம் இல்லத்தில் திருவமது செய்ய வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளுக்குத் திருநாவுக்கரசர் இணங்கினார். அப்பூதியாரின் மனைவியார் வகை வகையான நல்ல உணவைச் சமைத்த பின்னரத் தம் மூத்த மகனை வாழை இலைக் குருத்து  அறுத்துக் கொண்டு வருமாறு அனுப்பினார். மகன், வாழை இலைக் குருத்தை அறுக்கும் போது ஒரு பாம்பு   கையைச் சுற்றிக்கொண்டு அவனைக் கடித்தது. பாம்பை உதறிவிட்டு அவன் வெகு விரைவாகச் சென்று வாழை இலையை அன்னையிடம் கொடுத்து விட்டுக்  கீழே விழுந்து உயிரை விட்டான். அவன் இறந்ததால், அடியாருக்கு அளிக்கும் விருந்து தடைப்படக்கூடாது என்று கருதிய பெற்றோர், அவன் உடலை மறைவாக வைத்து விட்டு, நாவுக்கரசரை, உணவு உண்ண அழைத்தனர்.

திருநாவுக்கரசர், அனைவருக்கும் திருநீற்றை அளித்து விட்டு , மூத்த பிள்ளையையும் திருநீறு இடுவதற்கு அழைக்குமாறு கூறினார். அப்பூதியார், ,”அவன் இப்போது இங்கு உதவான்”. என்றார்.

ஐயம் கொண்ட திருநாவுக்கரசர் உண்மையைக் கூறுமாறு  கேட்டதும் வேறு வழி இன்றி அப்பூதியார் நடந்ததைக் கூறினார். “நீர் செய்தது நன்றாக உள்ளது!” என்று கூறிய நாவுக்கரசர், மைந்தனின் உடலைச் சிவபெருமான்  அருள்  செய்யுமாறு திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தைப் போக்கினார். உயிர் பெற்றெழுந்த அவனுக்குப் புனிதமான  திருநீற்றை அளித்தார்.அடியார் திருவமுது செய்ய இடையூறு ஆயிற்றே என்று பெற்றோர் வருந்தினர்

பிறகு அவர்கள் அனைவரும் அருகில் அமர, அப்பூதியாரின் இல்லத்தில் திருநாவுக்கரசர் திருவமுது செய்தார்.தாம் பாடிய பதிகத்தில் அப்பூதியாரின் தொண்டினைச் சிறப்பித்துப் பாடிச் சென்றார்.. இவ்வாறு திருநாவுக்கரசரின் திருப்பெயரைத் துதித்துக் கொண்டு, அப்பூதியார்  பொருள் வளம் சிறந்து,  சிவ நெறியில் செம்மையுடன் வாழ்ந்து, தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற உமையொரு பாகனின் பொற்பாதங்களை அடைந்தார்.

 

அப்பூதி அடிகள் வெண்பா

 

அரவால் மகனிறந்தான் ஆனாலும், அப்பர்

வரவால் விருந்தளித்த வள்ளல் – திருவார்ந்த

திங்களூர் அப்பூதி திண்திறல் மெய்யன்பை

இங்குநாம் ஏத்தல் இனிது

 

                                    ******************”

 

                 25) திருநீலநக்க நாயனார்

திருநீலநக்க நாயனார் / Thiruneelanakka Nayanar - YouTube

காவிரி பாயும் சோழநாட்டில் மறை ஓதும் அந்தணர்கள் வாழ்ந்த சாத்தமங்கை என்ற ஊரில் தோன்றியவர் திருநீலநக்கர், சிவ பூசை செய்வதும், அடியாரை உபசரித்துப்  பணிவதும் அவர் மேற்கொண்ட இரண்டு செயல்களாகும். ஒரு திருவாதிரை நாளில்,  நீலநக்கர்

சாத்தமங்கையில்  இருந்த அயவந்தி  என்ற கோவிலில் பூசை செய்யத் தம் மனைவியுடன் சென்றார். அவர், திருவைந்தெழுத்தை எண்ணித் தொழுது கொண்டிருந்த போது ஒரு சிலந்தி இறைவனின் மேனி மீது விழுந்தது. அதனால் அஞ்சிய  திருநீலநக்கரின் மனைவியார் ஒரு இளங்குழந்தையின் மீது விழுந்த சிலந்தியை நீக்குவதைப் போன்று அன்புடன் ஊதித்  துமிந்து திருமேனி மேல் இருந்த சிலந்தி போகுமாறு செய்தார் (துமிந்து –  காற்று,வாய் நீருடன் செல்லுமாறு ஊதுதல்)

அச்செயலைக்  கண்டு மனம் பதைத்த திருநீலநக்கர், “அறிவற்றவளே,  நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த அம்மையார், “இறைவன் திருமேனி மீது சிலந்தி ஒன்று விழுந்தது அதனால் இவ்வாறு துமிந்தேன்” என்று கூறினார். “நீ வாய் நீர் படுமாறு செய்ததால் நான் உன்னைத்  துறந்து விட்டேன்” என்று கூறிச் சென்றார். நாயனாரின் மனைவியார் கோவிலிலேயே தங்கிவிட்டார்

அன்று இரவு நாயனாரின் கனவில் இறைவன் தோன்றி, “உன் மனைவி ஊதிய பக்கம் தவிர, மற்றப்  பக்கங்களில் எல்லாம் கொப்புளங்கள் உண்டாகி உள்ளன, பார்,!” என்றார்.மறுநாள் கோவிலுக்குச் சென்ற நாயனார் இறைவன்  அடிகளில் விழுந்து வணங்கித்  தம் மனைவியை அழைத்துக்கொண்டு இல்லத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்தார்.

ஞானசம்பந்தரைப் பற்றி அறிந்திருந்த நாயனார் அவரைக் காண வேண்டும் என்று பெரிதும் விழைந்தார். ஒருமுறை சம்பந்தர் ஊருக்கு வந்தபோது, பெரிதும் மகிழ்ந்து வரவேற்றார். அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவருடைய மனைவியாரும் வந்திருந்தனர்.

திருநீலநக்கரின் இல்லத்தில்  அமுது செய்த சம்பந்தர், அங்கேயே தங்கினார். சம்பந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கத் திருநீலகண்ட யாழ்பாணருக்கும், அவரது மனைவியாருக்கும் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே தங்க இடம் கொடுத்தார். அப்போது வேதிகையில் உள்ள அக்கினி முன்பை விட மேலாக வலஞ்சுழித்து எரிந்தது.

சம்பந்தர் அயவந்திப் பெருமானை வழிபட்டுத்  திருப்பதிகம் பாடினார்.

சீர்காழியில்  சம்பந்தரின் திருமண நிகழ்ச்சியில் திருநீலநக்கர்  பங்கு பெற்றுச்  சிவபெருமான் திருவடிகளை அடைந்தார்.

 

         திருநீலநக்கர் வெண்பா

 

சிவன்மேல் விழுந்த சிலந்தியை ஊத

அவரைச் சினந்தே அகன்றார் – அவன்கனவில்

கொப்புள்கள் காட்டவும் கூட்டிவந்தார்; சம்பந்தர்

ஒப்பில்  அடிபணிந்தார் உற்று!

 

           (அவரை – நாயனாரின் மனைவியை)

                              (அவன்- சிவன்)

 

விளக்கம்:

சிவபெருமான்  திருமேனி மேல் விழுந்த சிலந்தியைத் திருநீலநக்கரின்  மனைவியார் வாயால் ஊதி அகற்றியதால் சினந்த நாயனார் அவரைத்  துறந்து விட்டுச் சென்றார். இறைவன் கனவில் தோன்றி கொப்புளங்களைக் காட்டி. உண்மையை விளக்கியதும் கோவிலுக்குச் சென்று தம் மனைவியைக் கூட்டி வந்தார். ஞானசம்பந்தப் பெருமானின் ஒப்பில்லாத திருவடிகளை உற்றுப் பணிந்தார்.

                   

             26) நமிநந்தியடிகள் நாயனார்.

63 Nayanmargal history|நமிநந்தியடிகள் நாயனார்|Nayanar history|Naminandiadigal|periya puranam|Nayanar - YouTube

திருவாரூருக்கு அருகில் உள்ள ஏமப் பேறூர் என்ற ஊரில், அந்தணர் மரபில் தோன்றியவர் நமிநந்தி அடிகளார். அவர், இம்மையிலும் மறுமையிலும் சிவபெருமான் திருவடிகளே துணை என இரவும், பகலும் வணங்கி வந்தார், நாளும், திருவாரூர் சென்று வணங்கும்  இயல்பினைக் கொண்டிருந்தார்.

ஒருமுறை, திருவாரூரில் உள்ள கோவிலுக்குச்  சென்ற போது, அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று விரும்பினார். அப்போது மாலை ஆனதால் தம் ஊருக்குச்  சென்று எண்ணெய்  கொண்டு வர இயலாது என்பதை உணர்ந்தார். திருவாரூரிலேயே அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கேற்ற நெய் தருமாறு வேண்டினார். அந்த வீட்டில் இருந்த சமணர்கள், ,”கையிலே கனலை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு  எதற்கு? . இங்கு நெய் இல்லை. வேண்டுமானால் நீரைக் கொண்டு விளக்கேற்றுங்கள்” என்று ஏளனமாகக் கூறினர்.

மனம் வருந்திய நமிநந்தி அடிகளார், சிவபெருமான் கோவில் முன்பு உள்ளம் உருகிப்  பணிந்து வணங்கினார். “நமிநந்தியே,  கவலையை விடுக. அருகில் உள்ள குளத்தில் உள்ள  நீரை முகந்து வார்த்து விளக்கேற்றுக” என்ற  அருள்மொழி ஆகாயத்தில் கேட்டது. அதைக் கேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், “இஃது இறைவன் அருளே!” என்று எண்ணிக் குளத்தின் நடுவே சென்று நீரை முகந்து, திரி இட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். விடியும் அளவும் எரியும் வண்ணம் பல திருவிளக்குகளை ஏற்றினார்.

இவ்வாறு ஆருரில் இரவில் நீரால் திருவிளக்கு ஏற்றி விட்டுப்  பிறகு தமது ஊராகிய ஏமப் பேறூருக்குச்  செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நமிநந்தி அடிகளின் செயலால் கலக்கமுற்ற சமணர்கள் அவ்வூரை விட்டு அகன்றனர். சோழ மன்னனும் கோயிலுக்கு அறக் கொடைகள் பல அளித்தான்.அடிகளார், திருவாரூரில் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்

ஒரு நாள் மணலி என்ற ஊரிலே அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பொதுமக்களுடன் கலந்து இருந்து இறைவனைத் தரிசித்தார்.

பிறகு வீடு திரும்பிய போது, உள்ளே செல்லாமல் திண்ணையிலேயே தங்கி இருந்தார். பலவகை மக்களுடன் கலந்து இருந்ததால் நீராடிய பின்பே மனைக்குள்  செல்ல வேண்டும் என்று கருதினார்.

அப்போது நமிநந்தி அடிகளாருக்கு உறக்கம் வந்தது. கனவிலே தோன்றிய வீதி விடங்கப் பெருமான், “நமிநந்தியே, திருவாரூரில் பிறந்தார் அனைவரும் என்னுடைய கணங்களே. அதை நீ காண்பாய்!” என்று சொல்லி மறைந்தான். மக்களிடையே பிரிவோ,

வேறுபாடோ  காண்பது தவறு என்பதை உணர்ந்து கொண்டவர், வீட்டின்  உள்ளே சென்று சிவ பூசையை முடித்தார்.

மறுநாள், திருவாரூர் சென்ற போது, அங்கிருந்த மக்கள் அனைவரும் சிவ வடிவத்தில் தோற்றம் அளிப்பதைக் கண்டு உண்மை தெளிந்தார். அனைவரும் இறைவனின் வடிவமே ஆவர்  என்பதை உணர்ந்து கொண்டார்

சிவனடியார்களுக்கு வேண்டியவை  எல்லாம் செய்து கொடுத்து, நெடுங்காலம் திருத்தொண்டு ஆற்றித்  திருவாரூர்ப்  பெருமான் திருவடியை அடைந்தார்.

அப்பர் இவரை “தொண்டர்களுக்கு ஆணி” என்று சிறப்பித்துள்ளார்.

 

       நமிநந்தியடிகளார் வெண்பா

 

நெய்யின்றிப் பொய்கையின்  நீரால்  விளக்கேற்றி

வையம் வியப்புற வார்த்தாரே – மையிருக்கும்

கண்டத்தான் போல்மக்கள் காட்சிகண்(டு) உற்றுண்மை

மண்டுபிழை விட்டார் மனம்!

 

(தொடரும்)