ஒரு நடுத்தரக் குடும்பம். அப்பா அம்மா, 2 பையன்கள், பெரிய வனுக்குக் கல்யாணம் ஆகி விட்டது. சின்னவன் படிக்கிறான் 2 பெண்கள் கல்யாணமாகி வேறு இடத்தில் வசிக்கின்றார்கள். வயதான காது கேட்காத தாத்தா ஒரு தனி அறையில். டீவியில் நியூஸ் பார்ப்பார், நியூஸ் பேப்பர் முழுவதும் படிப்பார். சாப்பிடுவார், ஈசி சேரிலேயே பல சமயம் தூங்கி விடுவார். சந்தர்ப்பம் / ஆள் கிடைத்தால் பேசுவார், வாதிடுவார்.
பெரிய மகன் வெளியூருக்கு சென்றிருக்கிறான். ஆபீஸ் சம்பந்தமான வேலை முடித்துவிட்டு அன்று விமானம் மூலம் டெல்லியிலிருந்து திரும்ப வரப் போகிறான்.
அப்பா பரமசிவம் பெரிதாக ” கமலா இங்கே வா. நம்ம பையன் 9 மணி ப்ளைட்லேதானே கிளம்பினான். போன் கூட பண்ணினானே கொஞ்ச நேரத்துல ப்ளைட்ல ஏறிடுவேன், ரைட் டைம் தான் 12.30க்கு வந்துடுவேன்னு சொன்னான் இல்லையா? “
“ஆமாம் இப்போ என்ன மணி 11 தானே ஆறது. ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கேள்”
“அது இல்லடி, டீவில என்னமோ அந்த ப்ளேனை தீவிரவாதிகள் கடத்தி லாகூர் கொண்டு போரார்களாம். ஒண்ணும் புரியல்ல”
“என்னண்ணா சொல்றேள் – டெல்லி டு மதராஸ் ப்ளேனையா லாகூருக்கு கடத்திட்டா? சரியா கேளுங்கோ”
அரைகுறையாக கேட்ட மருமகள் “என்ன மாமா சொல்றேள் ஏதோ ப்ளேன் கடத்திட்டான்னு சொல்றேள். இவர் வர ப்ளைட் இல்லையே? “
“ஆமாம்மா அந்த நம்பர் தான் – டெல்லி-மதராஸ் ப்ளைட் அப்படீன்னு தான் சொல்றான். நீ வந்து பாரு”
“அடப் பாவமே, இது என்ன சோதனை. கொஞ்சம் நேரம் முன்னாலதான ட்ரங்கால்ல பேசினார். கடவுளே” என்று அழ ஆரம்பிக்கிறாள்.
பதற்றம் பற்றிக் கொள்கிறது. அம்மா அழுவதைப் பாத்து, குழந்தை அழத் துவங்குகிறது. சின்னவன் வெளியிலே இருந்து வேகமா வந்து. “என்னப்பா, ப்ளேனை கடத்திட்டாளாம். பாம் வைத்து வெடிக்கச் போறோம்னு சொல்றாளாம். லாகூர்ல இறங்கிட்டாளாம். அண்ணா வர ப்ளைட்னு சொல்றா” கண் கலங்குகிறது.
டிவியை வால்யூம் அதிகமாக்கி விட்டு கேட்கத் துவங்குகிறார்கள்.
கதவு தட்டப் படுகிறது. திறந்தால் பெரிய பெண் 2 குழந்தைகளோடு உள்ளே வருகிறாள் “என்ன அப்பா இது. கேள்விப் பட்டதும் உடனே கிளம்பி வந்துட்டேன். பாவம் மன்னி, சின்ன குழந்தை வேற. அவர் அப்புறமா வரேன்னு சொல்லி இருக்கார். ஏர் போர்ட்ல தெரிஞ்சவர் இருக்காறாம். விசாரிக்கிறேன்னு சொல்றார்”
கதவு திறந்து இருக்கிறது “என்னடா பரமசிவம் இது.. இப்படி ஆயுடுத்து… என்ன பண்ணப் போற. என்ன நடக்கப் போறதுன்னே தெரியல்லயே.” என்று பக்கத்து வீட்டு மாமா வந்து ஒரு சேரில் உட்கார்ந்து கொள்கிறார்.
வீடு முழுவதும் மனிதர்கள். ஜமக்காளம் போட்டு சிலர் கீழே உட்கார்ந்து கொள்கிறார்கள்.
பேரன் கேட்கிறான் ”அம்மா என்னமோ ப்ளேன்ல பாம் வெடிக்க போராளாமே எப்போ வெடிப்பா? டீவீ ல காட்டு வாளா? நாமெல்லாம் பாக்கலாமா?”
“டேய் சும்மா இரு. மன்னீ இவனுக்கு ஏதாவது டிபன் இருந்தா கொடுங்கோ. எண்ணும் சாப்டாமலே கூட்டிண்டு வந்துட்டேன். அவனுக்கு இட்லி பிடிக்காது, சாம்பார் தொட்டுக்க மாட்டான். வேற ஏதாவது கொடுங்கோ.”
எல்லோருக்கும் காபி, அது இதுன்னு எல்லாம் நடக்கிறது. அப்பா, அம்மா இரண்டு பேரும் கலக்கத்தோடு டீவி யையே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மாப்பிள்ளை வருகிறார். ” மாமா அந்த ப்ளேன்ல பயணம் செஞ்ச பயணிகள் பெயர் லிஸ்டில் அண்ணாவோட பெயர் இல்லை. லிஸ்ட் தரவு பாத்துட்டு என் ப்ரெண்ட் சொல்லிட்டான்”
“அது எப்படி மாப்பிள்ளை. பையன் ட்ரங்கால்ல பேசினானே. இன்னும் ஒன்றரை மணி நேரத்துல புறப்படப்பொறதுன்னு சொன்னானே”
அப்பா கொஞ்சம் சந்தோஷம் நிறைய சந்தேகத்தோடு கேட்கிறார்.
அம்மா “அப்படியா.. நல்ல வார்த்தை சொன்னேள். உண்மையா இருக்கட்டும். பிள்ளையாரை 108 சுத்து சுத்தறேன்” கண்ணீருடனே சொல்கிறாள்.
ஆளாளுக்கு ஏதேதோ பேசுகிறார்கள். பேரன் மட்டும் எப்படி பாம் வெடிக்கும். அது வேற சேனலான்னு அப்பப்போ கேட்கிறான்.

