சார்த்தா – கன்னட மூலம் – எஸ் எல் பைரப்பா.
சார்த்தா – தமிழாக்கம் – ஜெயா வெங்கட்ராமன்

நமது பாரத தேசத்தின் பல்வேறு கலாச்சாரங்களையும், வரலாற்றினையும் ஒருவாறாவது அறிந்துகொள்ள வேண்டுமென்றால் பலமொழி எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்க வேண்டும். இந்த ஞானோதயம் சமீப காலங்களில் எனக்கு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சாகித்ய அகாதமி பரிசுபெற்ற கன்னட எழுத்தாளர் திரு எஸ் எல் பைரப்பாவின் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இவர் தீவிரமான எழுத்தாளர். பொறுமையாக ஆராய்ந்து, உண்மைகளைத் துருவித் தோண்டியெடுத்து எழுத்தில் பதிவு செய்பவர். இவருடைய கன்னட நவீனங்கள் தற்போது தமிழில் திரு ஜெயா வெங்கட்ராமனாலும் ஆங்கிலத்தில் மற்றவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே ஆவரணா (தமிழில் திரை) எனும் நாவலைப்பற்றி நான் எழுதியதை நீங்கள் படித்திருக்கலாம். திரை ஒரு அருமையான மொழிபெயர்ப்பு; இது மட்டும் இல்லாவிட்டால் கன்னட எழுத்தாளுமைகளின் இத்தனை தீவிரமான வாசகியாக, ரசிகையாக நான் மாறியிருக்க இயலாது.
அதே போலத்தான் இந்தப் புத்தகமும் – ‘சார்த்தா’. அதன் பெயரை மொழிபெயர்க்காமல் அப்படியே தந்துள்ளார் ஜெயா வெங்கட்ராமன் அவர்கள்.
‘சார்த்தா’ எனும் பெயருக்கு பைரப்பா அவர்களின் விளக்கத்தைப் படிப்பதே சுவாரசியமாக உள்ளது. கி. பி. எட்டாம் நூற்றாண்டில் பரதக் கண்டத்தில் நடந்ததாகப் பல நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்துகொண்டு நாவலை எழுதியுள்ளேன் என்கிறார். யானை, குதிரை, கோவேறு கழுதை, பல நூறு வண்டிகள் இவற்றில் வாணிகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு பெருங்கூட்டங்களாக வணிகர்கள் வெகுதூரத்திலுள்ள இடங்களுக்குப் பயணம் செய்து வியாபாரம் செய்து வந்ததனை அக்காலத்தில் ‘சார்த்தா’ என்று கூறுவார்கள் என்கிறார். தமிழில் ‘வாணிகக்குழு’ எனலாம்.
கதாநாயகனான நாகபட்டன் எனும் வாணிகத் தொடர்பற்ற அந்தணனின் வாய்மொழியாகவே, அவனுடைய அனுபவங்களாகவே நாவல் வெகு சுவாரசியமாக நகர்கிறது. நானூறு பக்கங்கள், நம்மை அந்த நாகபட்டன் பயணிக்கும் ‘சார்த்தா’வுடன் எங்கெங்கோ – பரதக் கண்டத்தில் தான் – அழைத்துச் செல்கின்றன. பல வேறுபட்ட அனுபவங்களில் அவனுடன் பங்குகொள்ள வைக்கின்றன.
தனது நாட்டின் அரசனான அமருகன் கேட்டுக்கொண்டதன்படி, சார்த்தா எனும் குழுவின் அரசியல், பொருளாதாரம் பற்றிய செயல்பாடுகளை, அவர்களுக்கே தெரியாமல் அறிந்து கொள்ள வேண்டி, அரசனால் ‘சார்த்தா’ கூட்டத்துடன் அனுப்பி வைக்கப் படுகிறான் நாகபட்டன். தாய், இளம் மனைவி இவர்களை விட்டு, திரும்பச் சில ஆண்டுகளாவது ஆகும் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறான் அவன். வழியில் அவன் சந்திக்கும் பலவிதமான மனிதர்கள், விசித்திரமான சம்பிரதாயங்கள், இன்னல்கள், புதுவிதமான அனுபவங்கள் இன்ன பிறவின் கலவையே இந்நாவல். கட்டாயமாக இது விக்கிரமாதித்தன் கதையல்ல. அதற்கும் மேற்பட்ட அற்புதமான கலாச்சார, மத, இன வழக்கங்களை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடி. ‘சார்த்தா’வில் பலதரப்பட்ட மக்கள் உண்டு. அவரவர்களுக்கு ஏற்றபடி சமைக்க ஆட்கள், பொருள்கள், பிறகு குழுக்களுக்குப் பொழுதுபோக்காக அவர்கள் தங்குமிடங்களில் இசை, நடன நிகழ்ச்சிகளை வழங்கும் கலைஞர்கள், வண்டிகளைப் பழுதுபார்க்கும் தச்சர்கள், மருத்துவர்கள், சார்த்தாவினைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் காவல் வீரர்கள், சார்த்தாவின் தலைவர்கள் எனப் பல்வேறு மனிதர்களைக் கொண்ட பெரும்குழு அது. வழியில் பாதுகாப்பாகத் தங்கி, கூடாரம் அமைத்து, சமைத்து, சாப்பிட்டு, பயணிக்கும் கூட்டம் அது.
நாகபட்டன் இணைந்து செல்லும் ஒரு சார்த்தாவின் மூலம், பரதக் கண்டத்தின் பன்முகங்களை, கலாச்சார, மத (பௌத்தம், இந்து, சிறிது இஸ்லாம்), ஆன்மீகம், கலை (முக்கியமாக சிற்பக்கலை) இவற்றின் வாயிலாக, பலவிதமான, அறிவினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய, சுவையான புனைவுகளுடனும், ஆச்சரியமான திருப்பங்களுடனும், நடத்திச் செல்வது பிரமிக்க வைப்பது.
நாளந்தா பல்கலைக் கழகம் பற்றிய தகவல்கள், பயிலும் முறை, யாரெல்லாம் அங்கு வந்து பயிலலாம், கல்வி கற்கச் சேரலாம் எனவெல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது. மதுரா பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை. யோக விளக்கங்கள், எங்கோ இருக்கும் மற்றவர் மனதைப் படிக்கும் முறை, கூடுவிட்டுக் கூடு பாய்வது, புத்தமத சமாச்சாரங்கள், பலவிதமான வகையில் தாந்த்ரீகத்தைப் பயிலும் மனிதர்களைப் பற்றிய தகவல்கள், அவர்கள் செய்யும் ரகசிய பூஜைகள், செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்யும் முறைகள், இவற்றையெல்லாம் கோர்வையாக, கதைமாந்தர்களின் அனுபவ வாயிலாக, நிதானமாக, ஆழ அறிந்து கொள்ளும்படி பாத்திரப் புனைவுகளுடன் கதையை மிக அற்புதமாக நடத்திச் செல்கிறார் கதாசிரியர்.
தேர்ந்த வீரனொருவன் வெகு லாகவமாக நடத்திச் செல்லும் பஞ்சகல்யாணிக் குதிரை போல தொய்வேயற்ற நடையில் கனகச்சிதமாக கம்பீர நடை பயிலும் எழுத்து. அதற்குச் சற்றும் சளைக்காத மொழியாக்கம். படிக்கும் ரசிகனுக்கு வேறென்ன வேண்டும்? இன்னும் பலமுறையாவது படிக்க வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது.
நாகபட்டன் பலவிதமான அனுபவங்களை எதிர்கொள்வதனைப் பற்றிப் படிப்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது. மண்டனமிஸ்ரரின் சீடனான அவன் முதலில் அரசனின் ஆணைப்படி காசி பல்கலைக்கழகத்தில் பெரும் ஆசிரியர்களிடம் கல்வி கற்கப் போகிறேன் என்று கூறித்தான் சார்த்தாவுடன் இணைந்து கொள்கிறான். பின்பு சிலவேறு காரணங்களால் அது நிறைவேறாதபோது மனம் சிறிது தளர்கிறான். நம்பும்படியாக நாடகமாட வேண்டுமே! அவன் செல்லும் சார்த்தாவின் தலைவர்களான சார்த்தவாஹர்கள் கல்வியில் தேர்ந்த பண்டிதனான நாகபட்டனிடம் அவ்வப்போது கருத்துக்களுக்காக வருகிறார்கள். சார்த்தா குழு முதலில் மதுராவை அடைகிறது. எதிர்பாராத தடங்கலினால் அவர்கள் சில ஆண்டுகள் அங்கேயே தங்க வேண்டி வருகிறது. அப்போது நாகபட்டன் ஓரிடத்தில் தங்கி, நாடகக்குழு ஒன்றில் இணைந்து பிரதான வேடமான கிருஷ்ண வேடத்தில் நடிக்கிறான்.
சிற்பக்கலையின் அணுகுமுறைகளை எவ்வாறு இந்துப் பண்பாட்டிலிருந்து பௌத்தத்திற்கு எடுத்துச் செல்கின்றனர் என அறிந்து திகைக்கிறான்.
நாடகக்குழு ஒன்றில் சேர்ந்து நடிப்பவன் பிரதான நடிகையான சந்திரிகையை சந்திக்கிறான். அவர்களுடைய நட்பு வளர்கிறது. அவளும் யோக சாஸ்திரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். கதை இவ்வாறு செல்கிறது.
இதற்கிடையே தான் வளர்த்துக் கொண்ட தனது யோக சக்தியால் தனது இளம் மனைவியை அரசன் அமருகன் தன் வசப்படுத்திக் கொண்டுவிட்டான் என அறிந்து கொள்கிறான். அதனால் ஊர் திரும்பும் ஆவல் அறவே அற்றுப் போகிறது.
ஒரு கட்டத்தில் நாகபட்டன் ஒரு வாமாச்சாரியை (தாந்த்ரீகனை) சந்திக்கிறான். அந்த அனுபவங்கள் ஆச்சரியமும் அதீதமும் மிக்கவை. இவ்வாறு பலவிதமான அனுபவங்களுக்கும் உள்ளாகிக் கடைசியில் திரும்பவும் சந்திரிகையிடமே செல்கிறான்.
நாளந்தா பல்கலைக் கழகத்தில் ஒரு பிட்சுவின் மேற்பார்வையில் கற்கச் செல்கிறான். சுவடிகளைப் பிரதி எடுக்கும் வேலை கிடைக்கிறது. அவ்வனுபவங்களும் புதுமையானவை.
இவ்வாறு அனுபவங்களின் விரிவான திரளாக இருக்கும் நாவலின் போக்கைச் சுருக்கமாக எழுதுவது இயலாதது.
எட்டாம் நூற்றாண்டின் சமயாச்சாரியர் ஆதிசங்கரரைப் பற்றிய சுவாரசியமான வரலாற்றின் முக்கிய பகுதி, அவர் மண்டனமிஸ்ரர், அவர் மனைவி பாரதி இவர்களுடன் ஈடுபடும் சொற்போர் – இது என் உள்ளத்தை மிகவும் கவர்ந்து மிகுந்த பிரமிப்பில் ஆழ்த்திய பகுதி. அச்சொற்போரின் ஒரு நிகழ்வாக ஆதிசங்கரர் செய்யும் பரகாயப் பிரவேசத்தை வெகு இயல்பாக, இறந்துவிட்ட அந்நாட்டு அரசனின் உடலை ஒரு கருவியாக்கிக் காட்டும் சாமர்த்தியம் (இது முன்பே சரித்திரத்தில் பதிந்திருந்தாலும் கூட) அசாத்தியம். அந்த மன்னன் அமருகனை ஒரு காமுகனாக்கிக் காண்பித்து, நாகபட்டனின் அழகிய இளம் மனைவியை அடைவதற்கே அரசன் அவனை ஊரை விட்டு அனுப்பிவிட்டதாகக் கதையின் முதலிலேயே அறிந்து கொண்டு விடுகிறோம். நாகபட்டன் சார்த்தாவின் ரகசியங்களை அறிந்து கொண்டு வருவதென்பது ஒரு வலுவற்ற காரணம் எனப் புரிந்து போகும். பல ஆண்டுகளின் பின்பு ஆதிசங்கரர், தர்க்க வாதத்தில் வெற்றிபெற தான் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு அனுபவ உண்மையை அறிந்து கொள்வதற்காக, இறந்துவிட்ட அந்தக் காமுகனான அரசனின் உடலில் கூடுபாய்ந்ததனைத் தொடர்பு படுத்தும் கதாசிரியரின் சாமர்த்தியம் பிரமிக்கத் தக்கது.
எந்தவொரு சிறு நிகழ்வும் காரண காரியமின்றி இப்புதினத்தில் நிகழ்வதில்லை. மண்டனமிஸ்ரர், பாரதிதேவி, ஆதிசங்கரர் இவர்களுக்கிடையேயான தர்க்க வாதத்தைப் பலமுறை நிதானமாகப் படிக்க வேண்டும். இதனைப் புரிந்து கொள்வது எளிதில் சாத்தியமன்று. அருமையான இலக்கிய, தத்துவ, வேதாந்தப் பதிவு இதுவாகும். வாசகர்களுக்காக ஆவலுடன் ஆத்மார்த்தமாக கதாசிரியர் பதிவு செய்துள்ள பகுதி இதுவே. மொழிபெயர்ப்பும் கனகச்சிதம். படிக்கும்போது உடல் சிலிர்க்கின்றது.
என்னைப் பொறுத்தவரை இந்தப் புதினத்தின் உச்ச நிகழ்வே இதுவாகும். ஆனால் கதைப்படி இதுவல்ல எனப் படிப்பவர்களுக்கும் தெரிந்து விடும்.
நாகபட்டனின் நட்பிற்கும் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரியவளாகி அவனைக் கடைசியில் தனது குருவின் ஆணையால் மணந்தும் கொள்ளும் பெண்ணான சந்திரிகை இன்னொரு பிரமிப்பை உருவாக்கும் கதாபாத்திரம். தனது யோக சாதனைகளால் ஆன்மீகத்தில் உயர்ந்து நிற்கும் பெண்மணி.
சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லிக் கொடுக்கும் வார்த்தையும் கட்டிக்கொடுக்கும் சோறும் எத்தனை நாள் வரும்? வாங்கிப் படியுங்கள் இந்த அருமையான புத்தகத்தை! நம் பாரத தேசத்தின் பண்டைய கலச்சாரத்தின் பதிவுகளை அறிந்து கொண்டு பிரமிக்கலாம்.
(மீண்டும் சந்திப்போம்)

அபாரம்
எஸ் வி வேணுகோபாலன்
LikeLike