
காவ்யா தன் பிறந்தகம் வந்து இன்றோடு ஒரு நாள் முடிந்து விட்டது. அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு காவ்யாவை நேற்று அவள் வீட்டில் விட்டுச் சென்றான் புருஷன்காரன்.
அப்படி ஒன்றும் வயது ஆகவில்லைதான். இருந்தாலும், அவள் தாய்க்குப் பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை. குறிப்பாக கணவர் காலமாகிப் போன பிறகு இப்படிச் செய்வதில் துளிக்கூட இஷ்டமில்லை. ஏதோ மகளின் விருப்பத் திற்காக சிம்பிளாக கொண்டாட இசைவு தெரிவித்தவள், கிஃப்ட் எதுவும் வேண்டாம் என்றும் மறுத்துவிட்டாள்.
காலை குளித்துவிட்டு மகளுடன் கோயிலுக்குச் சென்றாள் செண்பகம். வீட்டிலேயே சாதாரண சாப்பாடு தயாரானது. ஸ்வீட்டுக்கென்று ஒரு துளி சர்க்கரையே போதும் என்ற முடிவு !
காவ்யா வீட்டில் இருந்து அனைவரும் செண்பகத்திற்கு அலை பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். மரியாதை நிமித்தம் பிறந்த நாள் பரிசாக சம்பந்தி வீட்டார் கொடுத்த புடவை, ரவிக்கைத் துண்டு இவற்றைமகள் மூலம் பெற்றுக் கொண்டாள் செண்பகம்.
நேரம் போனதே தெரியவில்லை. இரவு எட்டு மணி என்பதை அறிவிக்கும் வகையில் ஹாலில் மாட்டியிருந்த சுவர்க் கடிகாரம் எட்டு தடவை அடித்து ஓய்ந்தது. அதே நேரம் அழைப்பு மணி ஒலிக்க நிமிர்ந்தாள் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்த காவ்யா. அவள் கையில் இருந்த மாத இதழ் தானாக நழுவி விழுந்தது, வந்திருப்பது யார் என்ற கேள்வி அவள் மனதில் விஸ்வரூபம் எடுத்தது !
ஒரு ஃபங்ஷனுக்குச் சென்றுள்ள அம்மா திரும்ப எப்படியும் ஒன்பது மணிக்கு மேலாகி விடும். அதனால் அம்மாவாக இருக்க முடியாது.
ஒரு வேளை புருஷனாக இருக்குமோ ? நாளை மாலைதான் வந்து அழைத்துப் போவதாக கூறியிருந்தான். ஏதாவது அர்ஜண்ட் மேட்டராக இருந்திருந்தால் தன் செல்லுக்கு காண்டாக்ட் பண்ணியிருப்பான். அதனால் அவனாகவும் இருக்க முடியாது. அப்படி யென்றால் வேறு யார் இந்த நேரத்தில் வந்திருப்பர் ? குழப்பத்தில் இருந்தபோது இரண்டாவது முறையாக அழைப்பு மணி சத்தம் கேட்டது.
இந்தத் தடவை சத்தம் சற்று கர்ண கடூரமாய் ஒலிப்பது போல் இருந்தது. வேர்த்து
விறு விறுத்துப் போய் எழுந்து வெளி லைட்டை ஆன் செய்தவள், மெயின் டோரை திறந்து பார்த்தாள். சட்டென முகம் மலர்ந்தது. மனதில் இருந்த பயம் தெளிந்தது.
பூட்டியிருந்த வெளி கிரில் கேட்டுக்கு அப்பால் மாமனார் ராகவன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. உடனே சாவியை எடுத்து வந்து கிரில் கேட்டைத் திறந்த காவ்யா, ” வாங்க மாமா ! ” வாய் நிறைய வரவேற்றாள்.
” இங்க ஒரு வேலையா வந்தேன்மா! அட வந்ததுதான் வந்தோம் அப்படியே உங்கம்மாவைப் பார்த்து பர்த் டே விஷ் பண்ணிட்டுப் போகலாம்னு நப்பாசை …”
” அடாடா ! ” அங்கலாய்த்தாள் காவ்யா.
” என்னம்மா ஆச்சு ?”
” ஸாரி மாமா ! அம்மா வீட்டுல இல்லை. ஒரு ஃபங்ஷனுக்குப் போயிருக்காங்க. அதோடு நீங்க காலையில் ஃபோனில் அம்மாவுக்கு வாழ்த்துச் சொல்லிட்டீங்களே. அதுவே அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்தான் மாமா !”
” இருந்தாலும் நேரில் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுதுன்னு சந்தோஷப்பட்டேன்…ஹூம் ! கிடைச்சும் யூஸ் இல்லாமப் போயிடிச்சு. ” மிகுந்த ஏமாற்றத்தோடு கூறிய மாமனாரைப் பார்க்க பாவமாய் இருந்தது காவ்யாவிற்கு.
“பரவாயில்லை, அப்படியெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க மாமா. உள்ளே வாங்க !”
சுற்று முற்றும் பார்த்தார் ராகவன். உள்ளே வராமல் தயங்கி நின்றபடி ஏதோ
யோசிப்பது போல் தெரிந்தது. கதவைத் திறந்தவுடன் சிரித்தபடி உள்ளே நுழைந்து சுவாதீனமாக இருக்கையில் உட்காரும் மனுஷர் இன்று அப்படிச் செய்யாதது கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது காவ்யாவிற்கு.
” என்ன மாமா யோசனை ? வாங்க… ” மீண்டும் அழைத்தாள் காவ்யா.
தன் தோள்களை குலுக்கியவர், ” இல்லம்மா, நான் கிளம்பறேன். அம்மா வந்தா நான் வந்துட்டுப் போனதாச் சொல்லு !” என்று கூறி விட்டு திரும்பி நடந்தார்.
காவ்யா திடுக்கிட்டாள். தாமதிக்காமல், கேட்டைச் சாத்தி விட்டு ” மாமா..மாமா..” என்றபடி அவர் பின்னாடியே ஓடினாள். ” இவ்வளவு தூரம் வந்துட்டு ஒரு வாய் காஃபிகூட குடிக்காமல் போறீங்களே ?” லிஃப்ட் அருகில் சென்று நின்ற மாமனாரிடம் கேட்க அவர் மென்மையாகச் சிரித்தார்.
” நல்ல பொண்ணும்மா நீ ! இந்த ராத்திரி நேரத்தில் யாராவது காஃபி குடிப்பாங்களா ? அதோட நான் என்ன மூணாவது மனுஷனா இப்படி விழுந்து விழுந்து உபசரிக்க ?” செல்லமாகக் கடிந்து கொண்டார்.
” அதுக்கில்ல மாமா ! அம்மா இருந்திருந்தால் உங்களை நல்லா கவனிச்சிருப்பாங்க.
அவங்க இல்லாததால நான்தான் கவனிக்கணும் இல்லையா ? அப்படிச் செய்யாமல் போனால் அம்மா என்னைத் திட்டுவாங்க!”
” உங்கம்மாவைப் பத்தி நல்லாவேத் தெரியும். அவங்க ரொம்ப சாஃப்ட் டைப் ! ஒண்ணும் திட்டமாட்டாங்க…அதை விடு. நீ நாளைக்கு வந்திடுவே இல்ல ?”
” வந்திடுவேன் மாமா ! உங்க மகன் ஆஃபிஸ் விட்டதும் நேரா இங்க வந்து என்னை கூட்டிக்கிட்டுப் போறதா சொல்லியிருக்கார்.”
” ஏன்னா, நீ அங்க இல்லாம உன் மாமியாருக்கு கையும் ஓடல்ல, காலும் ஓடல்ல…”
“ புதுசா கல்யாணம் ஆனவ நீ ! அதனால் கொஞ்ச நாள் ஜாலியா இருன் னு சொல்லிட்டு எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யறாங்க அத்தை. என்னை ஒரு வேலையும் செய்ய விடறது இல்ல. நீங்க இப்படி சொல்றீங்களே மாமா !”
” அம்மாடி! நீ பக்கத்தில் இருந்தால் உன் மாமியாருக்கு ஒரு ஆத்ம பலம் ! அந்த நினைப்பில் எல்லா வேலைகளையும் கட கடன்னு செஞ்சு முடிச்சிடுவா. அதனால் தானம்மா சொல்றேன். “
மாமனாரின் வார்த்தைகள் சட்டென நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எத்தனை உயர்ந்த மனிதர்கள் ! பெற்ற பெண்ணைப் போல் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மாமியார். அன்பையும் பாசத்தையும் அள்ளி வீசும் மாமனார். கோபமோ, ஆத்திரமோ கொஞ்சமும் இல்லாமல் புன் சிரிப்போடு பழகும் கணவன் . இவர்களின் அன்பு கலந்த அரவணைப்பு மழையில் நனைந்து மகிழும்போது என்ன குறை இருக்க முடியும் ?.
புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த இந்த மூன்று மாதங்களில் ஒரு நாளும் காவ்யா கண் கலங்கியது இல்லை. போட்டி போட்டுக் கொண்டு அனைவரும் அவளை நேசிக்கின்றனர். இதை அடிக்கடி அலைபேசியில் தன் அம்மாவிடம் சொல்லி பரவசப்பட்டிருக்கிறாள் காவ்யா ; நேரிலும் சிலாகித்து பேசியிருக்கிறாள். கேட்ட அவள் அம்மாவுக்கும் ஒரே பூரிப்பாக இருந்தது.
இதையெல்லாம் எண்ணியெண்ணி புளகாங்கிதம் அடைந்திருக்கும் நேரத்தில் திடீரென இருட்டு மழை பொழிய ஆரம்பித்தது கரண்ட் கட்டானதால். எங்கும் மையிருட்டு ! எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை.
ஆனால், அந்த இருட்டில் மாமனாரின் வெண்மை நிற முழுக்கைச் சட்டையும், வேஷ்டியும் மட்டும் பளிச்சென்று தெரிய பீதியுற்றாள் காவ்யா.
” என்னம்மா, இருட்டப் பார்த்து பயந்துட்டியா ?” மாமனார் இப்படி கேட்டதும் மேலும் வேர்த்துப் போனது காவ்யாவிற்கு.
” அதில்ல மாமா ! நீங்கள் வந்த நேரத்தில் அம்மா வீட்ல இல்லாமல் போனது; மேற் கொண்டு கரண்ட் வேற கட்டானது, எல்லாமா சேர்ந்து மனசுக்கு சங்கடமாயிருக்கு . ” என காவ்யா சொல்லி சொல்லி முடிக்கவில்லை. உடனே போன கரண்ட் திரும்பி வர அந்த இடமே விளக்கு வெளிச்சத்தில் மீண்டும் பிரகாசமாயிற்று. காவ்யாவிற்கு போன உயிர் திரும்பி வந்தாற்போல் இருந்தது.
” பார்த்தியாம்மா ! கரண்ட் போச்சேன்னு கவலைப்பட்டே. உன் கூக்குரலுக்கு ஆண்டவன் செவி சாய்ச்சுட்டான். கரண்ட் திரும்ப வந்திடிச்சு. உன்னோட நல்ல மனசுபடி எல்லாம் நடக்கறது. ” என்று சொல்லி புன்சிரிப்பொன்றை உதிர்த்தார். மாமனாரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நவமணிகள் போல் உதிர்க்கப்பட நெஞ்சம் நெகிழ்ச்சி கலந்த பெருமையில் விம்மியது. கண்களில் நீர் துளிர்த்தது.
ராகவன் பட்டனை அழுத்திய சில வினாடிகளில் லிஃப்ட் அந்த தளத்தில் வந்து நின்றது. மாமனார் உள்ளே நுழைய கதவைத் திறந்து விட்டாள் காவ்யா. அவர் உள்ளே நுழைந்ததும் கதவை மூடினாள்.
” வரேன்மா!”
” பை மாமா !” பதிலுக்கு லிஃப்ட் கண்ணிலிருந்து மறையும் வரை கையசைத்துக் கொண்டிருந்தவள் மெல்ல திரும்பி தன் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.
இதுவரை மாமனார், மாமியார் மற்றும் கணவன் நான்கைந்து தடவைகள் தன் இல்லம் வந்திருக்கிறார்கள். வந்து சில மணி நேரம் தங்கி அளவளாவுவர். சிரிப்பும் கும்மாளமும் அளவோடு இருக்கும். நேரம் போவதே தெரியாது. மாலையில் ஸ்நாக்ஸ் , டீ அருந்தி விட்டுச் செல்வார்கள்.
ஆனால், இன்று வந்த மாமனார் வீட்டினுள் வராதது, தன் கையை நனைக்காமல் அப்படியே சென்றது விசனத்தைக் கொடுத்தது காவ்யாவிற்கு. ஏன் அப்படிச் செய்தார் என விளங்கவில்லை. அம்மா கேட்டால் வருத்தப்படுவாள் என கவலைப்பட்டாள்.
” காவ்யா..காவ்யா..” நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மகள் தோளைப் பற்றி
செண்பகம் உலுக்க, திடுக்கிட்டு கண் விழித்தாள் காவ்யா.
திரு திரு வென்று விழித்தவளை கோபத்துடன் பார்த்தவள், ” மணி ஒன்பது கூட ஆகல்லே அதுக்குள்ள என்னடி தூக்கம் ? அங்க உன் புருஷன் வீடு ஒரே களேபரமா இருக்கு. என்ன நடக்கறதுன்னு தெரியாமல் நீ பாட்டுக்கு ஹாய்யா தூங்கிக்கிட்டிருக்கே. உன் செல்லுக்கு மாப்பிள்ளை எத்தனை மிஸ்டு கால் பண்ணியிருக்கிறார் பார்..”
அதிர்ந்து போன காவ்யா, ” என்னம்மா சொல்றே , களேபரமா? அப்படின்னா…?” நெஞ்சில் பயத்துடன் கேட்டாள்.
” என்னத்தைச் சொல்வேன்…” என்று சட்டென கண் கலங்கிய செண்பகம், ” உன் மாமனார் ஹார்ட் அட்டாக்குல போயிட்டாராம். விஷயம் சொல்ல உன் செல்லுக்கு மாப்பிள்ளை ட்ரை பண்ணியிருக்கார். நீ எடுக்காததாலே என்னைக் காண்டாக்ட் பண்ணி சொன்னார். ஃபங்ஷன் முடியும் முன்னால புறப்பட்டு வந்துட்டேன். நல்ல வேளையாக நான் சாவி எடுத்துக்கிட்டுப் போனதால கதவைத் திறந்து வரமுடிஞ்சுது.”
அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து போன காவ்யா மறு கணம் சுதாரித்துக் கொண்டாள். ” எத்தனை மணிக்கு ?” என கேட்டாள் நடுங்கும் குரலில்.
” எட்டு மணிக்கு.. ?”
சுரீர்ரென்றது . அதே எட்டு மணிக்கு மாமனார் கனவில் வந்தது, பேசியது, பிறகு புறப்பட்டுச் சென்றது எல்லாம் மனதில் நிழல்களாகத் தெரிந்தன. தந்தையைப் போல் பாசத்துடன் பழகிய ஒரு நல்லவரை இழந்து விட்டது தாளொண்ணாத் துயரைத் தந்தது.
கடைசியாக தன்னிடம் விடை பெற கனவில் வந்தது போல் துக்கம் துக்கமாகவும் வர பீறிட்டெழுந்தது அழுகை. மகளின் அழுகையை கட்டுப்படுத்த செண்பகம் பிரம்மப் பிரயத்னமே பட வேண்டியிருந்தது. ஒருவாறு சுதாரித்து தயாராகி அம்மாவுடன் டாக்ஸியில் புறப்பட்டுச் சென்றாள் காவ்யா.
அங்கு ஐஸ் பெட்டியில் வைக்கப் பட்டிருந்த மாமனார் உடலைச் சுற்றி உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் சோகம் தாங்கிய முகத்துடன் அமர்ந்து கொண்டிருப்பது காவ்யா கண்களில் பட்டது. தலை மாட்டில் உட்கார்ந்தபடி அழுதுகொண்டிருக்கும் மாமியார் அருகில் சென்று, குனிந்தபடி அவள் கைகளை தன் முகத்தில் வைத்துக்கொண்டு விம்மியழுதாள். வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன. பிறகு நிமிர்ந்தவள் பார்வையில் புருஷன் பட்டான்.
அவன் அருகில் சென்று தன் இரு கரங்களையும் குவித்து கண்ணீர் மல்க வணங்கியவள் வாயிலிருந்து இப்பொழுதும் வார்த்தைகள் வரவில்லை. அவனும் இவளைப் பார்த்தான். அழுதழுது முகம் வீங்கிப்போனவனும் பேசவில்லை. நிலைமை புரிந்தது காவ்யாவிற்கு.
செண்பகம் ராகவனின் மனைவி பக்கம் சென்று அவள் தோளை அணைத்தபடி ஆறுதல் படுத்த முயன்றாள்.
ஐஸ் பெட்டி அருகில் சென்ற காவ்யா மாமனார் உடலின் கால்பக்கம் நின்றபடி கன்னங்களில் நீர் வழிய பார்த்தாள்.
‘ஹூம் ! 54 வயதுதான் ஆகிறது. பி.பி. கிடையாது ; ஷுகர் இல்லை ; நடைப் பயிற்சி, உடற் பயிற்சி எல்லாம் இருந்தும் ஹார்ட் அட்டாக் ! என்ன கொடுமை இது !’ ‘ பார்க்க பார்க்க வேதனை பொறுக்க மாட்டாமல் திரும்ப முற்பட்ட வளுக்கு பொறி தட்டியது.
கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மாமனார் உடலை கூர்ந்து பார்த்தாள். பார்த்தவள் விழிகள் நிலை குத்தி நின்றன !
தான் கனவில் கண்ட அதே வெண்மை நிற முழுக்கைச் சட்டையும் வெண்ணிற வேஷ்டியும் மாமனார் உடலில் காணப்பட்டது !
