குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி – ஜூன் 24 – சாய் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி: 353

இந்த மாதக் குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ: 

https://beta.puthirmayam.com/crossword/E756F1846B

 

சரியான விடை எழுதிய அதிர்ஷ்டசாலி ஒருவருக்கும் ரூபாய் 100 பரிசு ( குலுக்கல் முறையில்) 

இனி, 

சென்ற மாதம் குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான விடை எழுதிய நண்பர்கள்: 

 

பட்டாபிராமன் 

ராதிகா பட்டாபிராமன்

மதிவாணன் 

காயத்ரி மகேஷ்

ஸ்ரீநிவாசன் 

இந்திரா ராமானாதன் 

வைத்யநாதன் 

 

அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 

இந்த மாதம் நிறைய நண்பர்கள் பங்கேற்றும் ‘ஊழ்வினை’ என்பதற்குப் பதிலாக செய்வினை, நல்வினை என்று எழுதியதால்  பரிசு பெரும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள், இது அவர்களின் ஊழ்வினை போலும் ! 

குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர்:   பட்டாபிராமன் 

அவருக்குப் பாராட்டுதல்கள்! 

 

இடம் பொருள் இலக்கியம் 18 – முனைவர் வ வே சு

 மந்திரம் போல் வேண்டும்

முனைவர் வ வே சு | அளவளாவல் - kuvikam , குவிகம் - YouTubeபெயர் மந்திரமூர்த்தி. இந்தத் தொடரின் ஐந்தாவது பகுதியில் “திருப்புமுனை” எனும் தலைப்பில் இவரைப் பற்றி சில நெகிழ்ச்சியான செய்திகளை சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் மேலும் சில பக்கங்கள் உண்டு.

ஒன்பதாவது ( அதாவது ஃபோர்த் ஃபார்ம் ) படிக்கும் போது எங்கள் வகுப்புக்கு சயின்ஸ் ஆசிரியராக வந்தார். அதுவரை மந்திரமூர்த்தி எனும் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. எங்கள் உறவு அல்லது நட்பு வட்டத்தில் நான் கேள்விபட்டிராத பெயர். இது என்ன சாமி பெயர் ? சிவனா? விஷ்ணுவா? இந்தப் பெயரில் நாங்கள் அறிந்த சாமியும் இல்லை கோவிலும் இல்லை.அவர் வகுப்பெடுக்க ஆரம்பித்த பிறகு “மந்திரம் சார்” என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

புதிதாக ஒரு “சார்” வந்தால் அவரை அணு அணுவாக எடை போடுவதும், அவரைப் பற்றிய தகவல்கள் சேகரிப்பதும் மாணவர்களின் இயல்பே என்பது அனைவரும் அறிந்த்துதானே ! அடுத்த வாரமே மணியும் வாசுவும் பல செய்திகளோடு வந்தனர்.

” அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருநெல்வேலி பாளயங்கோட்டையில் படித்தவர். அதுதான் பூர்விகம். வேலை கிடைத்த பிறகு இப்போது தாயாருடன் ஒரு தனி வாடகை வீட்டில் குடித்தனம் இருக்கிறார். “ட்யூஷன்” எடுக்க மாட்டாராம். இங்கிலீஷ், வரலாறு, பூகோளம், சயின்ஸ், கணக்கு ஆகிய எல்லா வகுப்புகளும் எடுப்பாராம். நிறைய விளையாட்டுகள் தெரியுமாம். முக்கியமா “பசங்கள” அடிக்கமாட்டாராம்; கோபமே வராதாம். அவரே கிளாஸ் டீச்சரா வந்தா நன்றாக இருக்கும்;;ஆனா அவரை “ஹெச்” செக்‌ஷனுக்குப் போட்டாச்சாம் “

நெடிய உருவம்; மாநிறம்; அத்லெடிக் பாடி; மாலை வேளைகளில் எங்களோடு “ஸ்கூல் கிரவுண்டில்” கால்பந்து விளையாடுவார். அவரது சாந்தமான முகத்தில் மேடான நெற்றியும் தீர்கமான விழிகளும் அவருக்கு ஒரு தனி சோபையைக் கொடுத்தன. முதல் நாள் அவரைப் பார்த்த உடனேயே , “இவருக்கு சுவாமி விவேகானந்தர் வேடம் பொருத்தமாக இருக்குமே” என்று நானும் என் சகோதரனும், ராமசாமி, மணி, பிரபு ,வாசு, சேஷா ஆகிய எனது பெஞ்சு நண்பர்களும் நினைத்தோம். எங்கள் அனுமானத்தின் சிறப்பு எத்தனை என்பது போகப் போகத்தான் தெரியவந்தது.

நினைத்துப் பார்த்தால், எஸ்.எஸ்.எல்.சி. என்ற பதினோரு வகுப்பு “ஸ்ட்ரீமில்” நடத்தப்பட்ட அக்காலப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புதான் “பெஸ்ட்”. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ”சின்னப் பையன்கள்” என்ற நிலையைத் தாண்டியவர்கள்; ஆனால் இன்னும் பெரிய கிளாஸ் மாணவர்களாக மாறாதவர்கள். பள்ளி இறுதியாண்டுத் தேர்வுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. படிப்பில் கவனம் தேவை; என்றாலும் ஆசிரியர்கள் அவ்வளவு கண்டிப்பு காட்டமாட்டார்கள்.

எனக்குத் தெரிந்து, எக்ஸ்ட்ரா கரிகுலர் எனப்படும் “பாடத்திட்டம் சாராத” பல பயிற்சிகளை மாணவ மாணவியர் மேற்கொள்ளும் பருவமிது. கலை, இலக்கியப் பாதைகளில் மனம் மொட்டவிழ்க்கும் நேரமிது., பள்ளியில் நடக்கும் இசை.பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ளப் பெயர் கொடுத்தல். பள்ளி ஆண்டுவிழா மலருக்குக் கவிதை எழுதுதல், ஆண்டு விழா நாடகத்தில் ஏதாவது வேடம் கிடைக்குமா என்று தேடுதல், ஆகிய பல விஷயங்களில் ஈடுபடும் நேரம் இது.

இந்த காலகட்டத்தில் விளயாட்டு பக்கம் போனவர்கள். நுண்கலைகள் பக்கம் திரும்புவது அரிது. அவர்கள் ஜூனியர் , சீனியர் அணிகளில் மாவட்ட மாநில அளவில் பங்குபெற முழு நேரமும் உழைப்பதில் தீவிரம் காட்டுவார்கள்.

கதைப் புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் முளைக்கும் காலம். , அரும் பெரும் கற்பனைகள் உதிக்கும் காலம்.; கடிதம் எழுதிப் பார்க்க ஆசைப்படும் நேரம்.; பயன் படுத்தப்படாமல் வீட்டில் கிடக்கும் பழைய டைரியை எடுத்து எழுதிப் பார்க்கத் தொடங்கும் நேரம்.

இவையாவது பரவாயில்லை. புதிய பழக்க வழக்கங்களை எற்படுத்திக் கொள்ள மனம் அலைபாயும் நேரம். செய்யக்கூடாது என்பனவற்றில் ஈடுபாடும், செய் என சொல்லப்படும் அறிவுரைகளின் மீது ஆத்திரமும் நிச்சயமாக வரும் நேரம். இப்போது இருப்பது போல அப்போதெல்லாம் “ஸ்டூடண்ட் கவுன்சிலர்கள்” கிடையாது. பையன்கள் திருந்த பிரம்பையும், கண்டிப்பையும், பெஞ்ச் மேலே நில் போன்ற தண்டனைகளையும் நம்பி இருந்த காலம் அது.

எப்போதும் என் மாணவர்களுக்கு நான் சொல்வது. ” படிப்பு தவிர இசையோ விளையாட்டோ நாடகமோ எழுத்தோ, வாசிப்போ ஏதோ ஒரு பயனுள்ள விஷயத்தில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்.. அது கலை இலக்கிய அல்லது பிற துறைகளில் உன்னுடைய திறமையை வளர்க்கும். அதை விட முக்கியமான பயன், நீ தீய வழிகளில் செல்லாமல் இருக்க அது மிகவும் உதவும்”

இந்த அறிவுரை என் பள்ளி அனுபவத்தின் பாற்பட்டது. அதற்குத் துணைநின்றவர்தான் எங்கள் ஆசான் “ மந்திரம் சார்”.

ஆண்டு 1963. சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழா. இராமகிருஷ்ணா விவேகானந்த இலக்கியத்தில் மிகத் தீவிரமான பற்றுடையவர் மந்திரம் சார் ! அவர் வழிகாட்டுதலில் அவர் எழுதிய இராமகிருஷ்ண சரிதத்தை கணேசன், பிரபு, பாலகிருஷ்ணன், நான் ஆகிய நாங்கள் எவ்வாறு ஓர் இசை சொற்பொழிவாகப் பல மேடைகளில் நிகழ்த்தினோம் என்ற விவரங்களை எல்லாம் நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

இசையிலும், கவிதை, இலக்கியம் ஆகியவற்றிலும் பற்றுடைய எங்கள் குழுவிலுள்ள பத்து மாணவர்களுக்கு அவர் மிகச் சிறப்பாக வழிகாட்டினார். சங்கீத நாட்டமுள்ளவர்களை முறையாக “ம்யூசிக் கிளாஸ்’ போகச் சொன்னார். அவர் சொல்லித்தான், அவர் கொடுத்த ஊக்கத்தில்தான் கணேசன், பிரபு , பாலகிருஷ்ணன் நான் ஆகிய நால்வரும் முறையாகப் பாட்டு கற்றுக் கொள்ளத் தொடங்கினோம்.

விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டிய மாணவர்களை ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் ஸ்டேட் லெவலில் பங்குபெறும் வகையில் ஊக்கமளித்தவர்.

“ஸ்பெஷல் கிளாஸ்” எடுக்காமலேயே எங்களை ஸ்பெஷலாக கவனித்து படிப்பிலும் முன் நிற்க வைத்தவர். எங்கள் குழுவிலிருந்து சென்றவரில் ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் களும் உண்டு.இதெல்லாம் பல ஆசிரியர்களின் திறமைகளினாலே வளர்க்கப்படும் பயிற்சி. எல்லாப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். ஆனால் “மந்திரம் சார்” ஊக்கத்தால் எங்களுக்கு ஆன்மிகப் பயிற்சியும் கிட்டியது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்கு இராமகிருஷ்ணர் , சுவாமிஜி வரலாற்றை மிக உருக்கமாக சொல்வார். அதில் ஆழ்ந்த பலரில் ரகு, சுந்தர் என்ற இருவர் இன்னும் ஆழமாக அந்தத் தத்துவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். ”டிகிரி” முடித்ததும் அவர்கள் இருவரும் , உடனடியாக இராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து துறவு வாழ்க்கையில் தங்கள் சேவையைத் தொடங்கினார்கள். மூத்த துறவிகளாக விளங்கும் அவர்களை இன்றும் நான் சந்தித்து இயன்ற நேரத்தில் அளவளாவிவருகிறேன்.

தவறான பாதையில் செல்லும் ஒரு மாணவன் நல்ல ஆசிரியரால் எவ்வாறு திருந்துவான் என்பதற்கு என் பள்ளி எனக்கோர் உண்மைச் சம்பவத்தைக் காட்டியது.

சௌந்தரராஜன் என்ற “சவுண்டு”. வகுப்பு அட்டெண்டன்ஸ்ல மட்டும்தான் அவன் பெயர் சௌந்தர்ராஜன். மற்றபடி எல்லோருக்கும் “சவுண்டுதான்”. எங்களை விட இரண்டாண்டுகள் சீனியர் வயதில் மட்டும்; வகுப்பில் அல்ல. அடுத்த வருடமும் அதே வகுப்புதான் என பல ஆசிரியர்கள் அவனிடமே சொல்வார்கள்; அவன் சிரித்துக் கொண்டே போய்விடுவான். பள்ளிக்குள்ளே அவன் யாரிடமும் சண்டை போட்டதில்லை. ஆனால் வெளியில் அவன் ஒரு “ரௌடிக்குரிய” இலக்கணம் தவறாமல் நடப்பவன் என்று பரவலான செய்திகள் உண்டு. அதனாலேயே ஆசிரியர்களுக்கும் இவனிடம் ஒரு பயம் உண்டு.

காலப் போக்கில் அட்டெண்டன்ஸ் எடுக்கும் ஆசிரியர்களும் “சவுண்டு” என்றே கூப்பிடத் தொடங்கிவிட்டனர் . சுமாரான உயரம். எக்ஸர்சைஸ் பாடி இல்லையெனினும் வலுவான தேகம். நல்ல சிவந்த அழகான நிறம்; மூக்கும் முழியுமாக இருப்பான். ஆனால் யாரோ இட்ட சாபம் போல முகத்தில் அம்மைத் தழும்புகள் இருக்கும்.

தினம் அவனைப் பற்றி ஏதாவது செய்தி மாணவர்களுக்கிடையே உலவும். பள்ளிக்கு எதிரில் இருந்த டி எஸ் சி காண்டீனில் பணம் வைத்து சீட்டாட பெரும் தனவந்தர்களும், நடிகர்களும் வருவதுண்டு. அந்த இடத்தில் இவனைப் பார்த்தாகச் சிலர் சொல்வர். புகை பிடித்துக் கொண்டிருந்தான்; மது அருந்துவான் என்பர். அங்கே நடந்த சண்டையில் இவனும் இடம் பெற்றதாக தகவல்.

நாளாக ஆக பள்ளிக்குள் இவனை யாரும் ஒன்றும் கேட்பதில்லை; வகுப்புக்கு தாமதமாக வருவான். சில நேரங்களில் வாயில் , வெளியே வண்டியில் விற்கப்படும் மாங்காயைக் கடித்துக் கொண்டே வருவான்.. இவனது பெற்றோர் மத்தியதர வர்க்கம்; சாதுவானவர்கள்; பணக்காரர்களும் இல்லை.

அது ஒரு சனிக்கிழமை. நன்றாக நினைவிருக்கிறது. அரைநாள்தான் . திடீரென்று பள்ளிக்குள் ஒரு பரபரப்பு. “மந்திரம் சார்” சவுண்டை பளீரென்று கன்னத்தில் அடித்துவிட்டார் எனக் கேள்விப்பட்டோம். கோபமே வராத ஒருவர் கோபப்பட்டிருக்கிறார். அடியே வாங்காமல் இஷ்டம் போல் திரிந்த ஒரு மாணவன் முதல் முறையாக அடி வாங்கியிருக்கிறான். என்ன அதிசயம் ! இந்த “இன்சிடெண்டுக்கு” பிறகு சவுண்டு ரொம்பவும் மாறிப் போய்விட்டான். எங்களுக்கெல்லாம் ஒன்றும் புரியவில்லை. இதைத் தோண்டித் துருவி விசாரிக்க நேரமும் இல்லை.

சுவாமிஜி நூற்றாண்டு விழாவின் போது அவன் தான் கிட்டத்தட்ட “அஃபிஷியல் போட்டோகிராபர்”. பள்ளி விழாக்களில் எல்லாம் அவன் தான் போட்டோ எடுப்பான். படிப்பு வராத காரணத்தால் மேல்படிப்பில் அவன் சேரவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு கல்யாண ரிசப்ஷனில் அவனை சந்தித்தேன். மேற்கு மாம்பலத்தில் ஒரு ஸ்டுடியோ வைத்திருக்கிறான். நல்ல வருமானம். மனைவி ஒரு பள்ளியில் டீச்சர். பையன் இரண்டாவது படிக்கிறான்.

”நாம படிச்ச பள்ளிக்கூட ஞாபகமெல்லாம் இருக்கா ?” என்றேன் .

“ என்ன அப்படிக் கேட்டுட்ட ..இப்பவும் ஸ்கூல்ல ஏதாவது பங்க்ஷன்னா “மந்திரம் சார் என்னைத்தான் கூப்பிட்டு அனுப்புவார்”

”அப்படியா ! அவருக்கு ஒன்னையெல்லாம் நினைவிருக்கா?”

“எப்படி மறப்பார் ? அவர்தானே என்னை ஒரு போட்டோகிராஃபர் ஆக்கியவர் “ என்றான். கண்களில் நன்றி பளபளத்தது. ஒரு புதிருக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் விடைபெற்றேன். திரும்பும் போது நாமக்கல்லாரின் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

தப்பிதம் கண்ட போதும்
      தண்டிக்க முனைந்தி டாமல்
நட்புடைத் தோழன் போல
      நயமாக எடுத்துக் காட்டி
ஒப்புற வாகப் பேசி
      உள்ளத்தை உருக்க வல்ல
அப்பெருந் தகைமை யேநல்
      லாசானுக் கமைய வேண்டும்.      
( தொடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இணையத்திலிருந்து … தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் –

TNPSC Pothu Tamil Materials Pdf

தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் –

தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயர்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை கீழ்க்காணும் ஒரு சொல் கொண்டு முடிவதைக் காணலாம். இவ்வாறு, அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதைக் காணில், வியப்பைத் தரும்.

இங்கே தரப்பட்டுள்ளவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்தப் பட்டியலில் விடுபட்டவை நிறைய உள்ளன.

ஊர் –

தஞ்சாவூர், உறையூர், கடலூர், வேலூர், திருவாரூர், சாத்தூர், மேட்டூர், மேலூர், அரியலூர், திருவிடைமருதூர், திருக்கோவிலூர், திருக்கடையூர், திங்களூர், திருவாதவூர், ஆம்பூர், பேரூர்

குடி –

தூத்துக்குடி, பரமக்குடி, காரைக்குடி, அரியக்குடி, லால்குடி, ஆலங்குடி, நரிக்குடி, சாயல்குடி, குன்றக்குடி, திட்டக்குடி

பட்டி –

கோவில்பட்டி, பிள்ளையார்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னாளப்பட்டி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, நேமத்தான்பட்டி, உறங்கான்பட்டி, பள்ளப்பட்டி

கோவில் –

அழகர்கோவில், நாகர்கோவில், சங்கரன்கோவில், திருவானைக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில், காளையார்கோவில், ஆவுடையார்கோவில், உப்பிலியப்பன் கோவில், நாச்சியார்கோவில், உத்தமர்கோவில், வெள்ளக்கோவில்

பள்ளி –

திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, செங்கப்பள்ளி, அகஸ்தியம்பள்ளி, போச்சம்பள்ளி, தொரப்பள்ளி, காட்டுப்பள்ளி

கோட்டை –

பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தேவகோட்டை, அருப்புக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஊத்துக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, நிலக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, பெரியகோட்டை, வல்லக்கோட்டை, வட்டக்கோட்டை, நாலுகோட்டை, வெம்பக்கோட்டை

பட்டினம் –

நாகப்பட்டினம், காவிரிபூம்பட்டினம், அதிராம்பட்டினம், சதுரங்கப்பட்டினம், தேங்காய்பட்டினம், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், தேவிபட்டினம், திருமலைராயன்பட்டினம், கோட்டைப்பட்டினம்

பாக்கம் –

மீனம்பாக்கம், கேளம்பாக்கம் கல்பாக்கம், கோடம்பாக்கம், அரும்பாக்கம், அச்சரப்பாக்கம், கீழ்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், முண்டியம்பாக்கம் காட்டுப்பாக்கம்

குளம் –

பெரியகுளம், ஆலங்குளம், அழகன்குளம், விளாத்திகுளம், சாத்தான்குளம், நெடுங்குளம், புளியங்குளம், மாங்குளம், வாகைக்குளம்

பாளையம் –

ராஜபாளையம், மேட்டுப்பாளையம், குமாரபாளையம், உத்தமபாளையம், பெரியபாளையம், மேலப்பாளையம், உடையார்பாளையம்

நல்லூர் –

திருவெண்ணைநல்லூர், ஐராவதநல்லூர், காங்கேயநல்லூர், ஹரிகேசநல்லூர், புன்னைநல்லூர், திருவிசநல்லூர், முத்தரசநல்லூர், ஆதிச்சநல்லூர், மண்ணச்சநல்லூர், வாசுதேவநல்லூர் அரகண்டநல்லூர், கரிவலம் வந்த நல்லூர்

மலை –

திருவண்ணாமலை, சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, சிவன்மலை, ஆனைமலை, கழுகுமலை, நாகமலை, விராலிமலை, திருநீர்மலை, பிரான்மலை, குடுமியான்மலை, நார்த்தாமலை

குறிச்சி –

கள்ளக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, அரவக்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி, பூலாங்குறிச்சி, துவரங்குறிச்சி, தேவனாங்குறிச்சி

கிரி –

கிருஷ்ணகிரி, நீலகிரி, சங்ககிரி, சூளகிரி, ஏலகிரி, புவனகிரி, சதுரகிரி

குன்றம் –

திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், கொடுங்குன்றம், திருமால் குன்றம், நெற்குன்றம், பூங்குன்றம், குமரன்குன்றம்

பாறை –

மணப்பாறை, வால்பாறை, பேச்சிப்பாறை, மயிலாடும்பாறை, குஜிலியம்பாறை, பூம்பாறை, சிப்பிப்பாறை

காடு –

திருவாலங்காடு, ஆற்காடு, ஏற்காடு, திருமறைக்காடு, ஊத்துக்காடு, திருவெண்காடு, மாங்காடு, திருவேற்காடு, களக்காடு, பாலக்காடு, தெப்பக்காடு

புரம் –

காஞ்சிபுரம், மாமல்லபுரம், விழுப்புரம், சமயபுரம், கங்கைகொண்ட சோழபுரம், ராமநாதபுரம், ராசிபுரம், தாராபுரம், திருக்கண்ணபுரம், எட்டயபுரம், உமையாள்புரம், கோனேரிராஜபுரம், ஆனந்ததாண்டவபுரம், சேங்காலிபுரம், கோவிந்தபுரம்

புரி –

தருமபுரி, அழகாபுரி, மருங்காபுரி, மேலைச்சிவபுரி, சொர்ணபுரி, ரத்தினபுரி

மங்கலம் –

சத்தியமங்கலம், நீடாமங்கலம், ராஜசிங்க மங்கலம், புத்தாமங்கலம், சேந்தமங்கலம், ஆனைமங்கலம், சாத்தமங்கலம், கொத்தமங்கலம், திருமங்கலம், நந்திமங்கலம், அரியமங்கலம், மறவமங்கலம், மன்னாடிமங்கலம், மாதிரிமங்கலம், கண்டமங்கலம், ஹரித்துவாரமங்கலம்

ஈஸ்வரம் –

ராமேஸ்வரம், பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், சோழீஸ்வரம், எமனேஸ்வரம், நித்தீஸ்வரம், சோமேஸ்வரம், அகத்தீஸ்வரம், திருக்கண்டீஸ்வரம்

துறை –

மயிலாடுதுறை, திருப்பெருந்துறை, ஆடுதுறை, கூடுதுறை, மாந்துறை, சிந்துபூந்துறை, அவல்பூந்துறை, செந்துறை, முண்டந்துறை

பாடி –

திருமழபாடி, தரங்கம்பாடி, வாணியம்பாடி, குறிஞ்சிப்பாடி, வியாசர்பாடி, திருமுனைப்பாடி, எடப்பாடி, வாழப்பாடி, கவுந்தப்பாடி, வேலப்பாடி

சேரி –

புதுச்சேரி, வேளச்சேரி, கொரடாச்சேரி, கூடுவாஞ்சேரி, மேச்சேரி, நல்லிச்சேரி, செம்மஞ்சேரி, திருமணஞ்சேரி

குப்பம் –

நெல்லிக்குப்பம், மேட்டுக்குப்பம், ஆற்காடு குப்பம், மேல்குப்பம், கீழக் குப்பம், திருமலைக்குப்பம், நெடுங்குப்பம், கோட்டைக்குப்பம், அரியாங்குப்பம், செட்டிக்குப்பம், ஆலங்குப்பம்

பேட்டை –

உளுந்தூர்பேட்டை, உடுமலைப்பேட்டை, ராணிப்பேட்டை, பரங்கிப்பேட்டை, முத்துப்பேட்டை, அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, விஷ்ணம்பேட்டை, கம்பரசம்பேட்டை, சோமரசம்பேட்டை

பட்டு –

செங்கல்பட்டு, சேத்துப்பட்டு, பேர்ணாம்பட்டு, அத்திப்பட்டு, பள்ளிப்பட்டு, அரசம்பட்டு, மூங்கில்பட்டு

தோப்பு –

சிங்காரத் தோப்பு, கொண்டித்தோப்பு, நெல்லித்தோப்பு, புளியந்தோப்பு

சோலை –

பழமுதிர்ச்சோலை, மாஞ்சோலை, பூஞ்சோலை, திருமாலிருஞ்சோலை

வனம் –

திண்டிவனம், திருப்புவனம், கடம்பவனம், தில்லைவனம்

சமுத்திரம் –

அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரம், மல்லசமுத்திரம், நமனசமுத்திரம், பாலசமுத்திரம், திம்மசமுத்திரம், திருமலைசமுத்திரம், வேங்கடசமுத்திரம், இராவணசமுத்திரம்

ஆறு –

திருவையாறு, திருநள்ளாறு, அடையாறு, தெள்ளாறு, திருவட்டாறு, ஆழியாறு, மூணாறு

கரை –

நீலாங்கரை, கோடியக்கரை, ஊத்தங்கரை, அமைந்தகரை, திருவக்கரை, கும்பக்கரை, மதுக்கரை, கீழக்கரை

ஏரி –

நாங்குநேரி, வரகனேரி, பாகனேரி, வேப்பேரி, கடங்கனேரி, புத்தனேரி, மாறநேரி, பழமானேரி

ஊரணி –

பேராவூரணி,
கருப்பாயூரணி, கல்லூரணி

கேணி-

திருவல்லிக்கேணி, வெட்டுவான் கேணி

மடை –

பத்தமடை, காரமடை, மேலமடை, கடைமடை, பன்னீர்மடை

வலம்-

புலிவலம், வேட்டவலம்

வளவு –

மேல வளவு, கீழ வளவு

வலசு –

பெரிய வலசு, பாப்பா வலசு, சின்ன கவுண்டன் வலசு

தெரு –

தெற்குத் தெரு, புதுத்தெரு

கிராமம் –

சாலிகிராமம், புதுக் கிராமம்

கோணம் –

கும்பகோணம், அரக்கோணம்

பூண்டி –

பூண்டி, திருத்துறைப்பூண்டி, திருமுருகன்பூண்டி, கும்மிடிப்பூண்டி, கணியம்பூண்டி

பந்தல் –

மன்னம்பந்தல், தண்ணீர்ப்பந்தல்

கூடல் –

நான்மாடக்கூடல், முக்கூடல்

ஏந்தல் –

கொம்புக்காரனேந்தல், லாடனேந்தல், முத்தனேந்தல்

வாயில் –

திருமுல்லைவாயில், குடவாயில், காளவாசல், சித்தன்னவாசல்

நாடு –

வருசநாடு, கொரநாடு

கால் –

காரைக்கால், மணக்கால், தைக்கால்

கல் –

நாமக்கல், திண்டுக்கல், ஒகேனக்கல், பெருமுக்கல், நீலக்கல், பழமுக்கல்

சுழி –

திருச்சுழி, திருவலஞ்சுழி

மடம் –

ஆண்டிமடம், அக்காள்மடம், தங்கச்சிமடம்

சத்திரம் –

கனகம்மாசத்திரம், சுங்குவார்சத்திரம், ரெட்டியார்சத்திரம், சேதுபாவாசத்திரம், பாவூர்சத்திரம்

‘திரு’ என்னும் சொல் கொண்டு தொடங்கும் பெயர்களோ கணக்கில் அடங்கா. அதனால், அவற்றை எல்லாம் நான் இங்கே குறிப்பிடவில்லை.

18 புராணங்கள் – ஆங்கில ஆவணப்படம்

சிவோகம் திட்டம் என்ற ஆவணப்பட ஆங்கிலச் சானல் யூடியூபில் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது

இது  இந்தியாவின்  மறக்கடிக்கப்பட்ட  பண்டையக்  காலத்தின் பெருமையை   புராதனக் காலத்தின்  சிறப்பை  பாரம்பரியத்தின் பிரம்மிப்பை திறம்பட ஆராய்ந்து   குறு ஆவணப்படங்கள் மூலமாகத்  தெளிவுறச் சொல்லும் சானல்.  

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் செழித்து வழங்கிய தொழில் நுட்பம், கோட்பாடு, தத்துவம், இலக்கியம், கணிதம், விஞ்ஞானம்  போன்ற பல துறைகளைப் பற்றி உள்ளதை உள்ளபடி விவரிக்கும் அறிய பொக்கிஷம் இந்த சானல். 

பாரத நாட்டின் தன்னேரில்லாத  மகத்துவத்தைப் பறை சாற்றும் சானல் இது.  

உண்மையான பாரதத்தை தெள்ளத் தெளிவாக வழங்கும் அற்புத சானல். 

இந்த எபிசோடில் நாம் 18 புரணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போகிறோம். 

இன்னும் நிறைய தெரிந்துகொள்ள  இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும். 

https://www.youtube.com/@ProjectShivoham/featured

கஸ்தூரி பாய் – ஸ்டேன்லி ராஜன்

(ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும் ஒரு பெண் இருப்பாள் என்பது பொதுவான நியதி, ஆனால் பெரும் தியாகிகளின், போராளிகள் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது அபூர்வம்

மார்க்ஸுக்கு ஜெனி போல மிக சிலருக்கே அந்த யோகம் கிடைத்திருகின்றது, அதில் ஒருவர்தான் தேசப்பிதா மகாத்மா காந்தி

13 வயதில் அவருக்கு கஸ்தூரிபாயினை திருமணம் செய்துவைத்தார்கள். கஸ்தூரி சாதாரண குடும்பத்து பெண் அல்ல, சிலப்பதிகாரத்தில் கண்ணகி போல பெரும் வியாபார குடும்பத்து வாரிசு

அக்கால வழக்கபடி கஸ்தூரி கல்வி கற்கவில்லை, அவருக்கு எழுதபடிக்க சொல்லிகொடுத்தது யாரென்றால் காந்திதான், ஆம் படுக்கை அறையே அங்கு வகுப்பு கூடமும் ஆயிற்று, காரணம் பெண் கல்வி அன்று சொந்த வீட்டிலே மறுக்கபட்டது

காந்தி லண்டனில் படிக்கும்பொழுதும் இன்னும் எங்கெல்லாமோ சுற்றி திரியும்பொழுதும் அவருக்காக காத்தே இருந்தார் கஸ்தூரிபாய்

காந்தி தென்னாப்ரிக்கா வந்ததில் இருந்து ஒரு நொடி அவள் அவரை பிரியவில்லை, மூத்த குழந்தை இறந்தபொழுதும் அடுத்த 4 குழந்தைகளை கவனமாக வளர்த்தார்

காந்தி தென்னாப்ரிக்காவில் பொதுவாழ்க்கைக்கு திரும்பிய பொழுது, இனவெறிக்கு எதிராக போராடிய பொழுது பெண்கள் அணி திரட்டி களமிறங்கினார் கஸ்தூரிபாய்

ஆம், முதன் முதலில் இந்திய பெண்கள் போராட்ட களம் வந்தது, தென்னாப்ரிக்கவிலே, தில்லையாடி வள்ளியம்மை செத்தது அங்கேயே, கஸ்தூரிபாய் போராளியானதும் அங்குதான்

அங்கு சிறையிலும் அடைக்கபட்டார் , சைவ உணவு கேட்டும் கிடைக்காமல் அவர் பட்டபாடு கொஞ்சமல்ல, எல்லாவற்றையும் தாங்கினார், பட்டினி கிடந்து தாங்கினார்

அவரின் மன உறுதி எளிதானது அல்ல, அசாத்தியமானது

தென்னாப்ரிக்காவில் காந்தி தனியாக போராடவில்லை, கஸ்தூரிபாயின் பெரும் ஆதரவு இருந்தது. ஏன் களத்திற்கே குழந்தைகளோடு வந்தவர் கஸ்தூரிபாய்

இதைவிட ஒரு கணவனுக்கு என்ன வேண்டும்? அந்த உற்சாகத்தில்தான் காந்தியால் தென்னாப்ரிக்காவில் வெற்றி பெற முடிந்தது

அந்த வெற்றி அவரை இந்தியாவிற்கும் அழைத்து வந்தது, இங்கேயும் காந்திக்கு நிழலாக இருந்தார் கஸ்தூரி

எவ்வளவு போராட்டம்? எவ்வளவு சிக்கல்கள்? எல்லாவற்றிலும் காந்திக்கு துணையிருந்தார், துணை நடந்தார்

காந்தி நடந்த ஒவ்வொரு முள்பாதையிலும் கால்களிலும் மனதிலும் ரத்தம் வழிய நடந்தார்

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என காந்தி பேச தொடங்கியதெல்லாம் கஸ்தூரிபாயின் அணுகுமுறையில் இருந்தே

காந்திக்கு ஞானம் கொடுத்தவர் கஸ்தூரிபாய்

அந்த சபர்மதி ஆசிரமத்தில் ஒரு வெள்ளையன் தங்கினான், அன்று கழிவறை வசதி எல்லாம் இல்லை எல்லாம் மட்பாண்டமே, அதை சுத்தம் செய்யும் தொழிலாளி வரவில்லை

காந்தி கஸ்தூரிக்கு ஆணையிட்டார், பெரும் குடும்பத்து வாரிசான கஸ்தூரி அதை செய்தார்.

காந்தி என்னவெல்லாமோ யோசித்தவர், ஒரு கட்டத்தில் பெண்கள் ஏன் பொதுவாழ்க்கைக்கு வருவதில்லை என கஸ்தூரியிடம் விவாதித்தபொழுது சட்டென சொன்னார் கஸ்தூரி

“பெண்கள் பாதுகாப்பினை தேடுபவர்கள், துறவறம் ஏற்காத பிரம்மசரியத்தை பேணாத எந்த தலைவனை நம்பி அவர்கள் வருவார்கள்?”

அதிலிருந்துதான் பிரம்மசரியத்தை ஏற்றார் காந்தி, ஆம் நாட்டுக்காக ஏற்றார். சொந்த கணவனையே நாட்டுக்காக கொடுத்தவர் கஸ்தூரிபாய்

1915 முதல் காந்தி இந்தியாவுக்கு தன் வாழ்வினை அர்பணிக்க ஒரு பக்கம் அவரையும் மறுபக்கம் குடும்பத்தையும் கவனித்து தியாக வாழ்க்கை வாழந்தவர் அவர்

இறுதியாக 1942ல் தேசம் வெள்ளையனே வெளியேறு என கொந்தளித்தபொழுது காந்தி தீவிரமாய் களமிறங்கினார், அவரோடு கஸ்தூரிபாயும் போராட வந்தார்

பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் காந்தி

வெள்ளை அரசு காந்தியினை கைது செய்து சிறையில் போட்டது, கூட்டம் இனி நடக்குமா என மக்கள் திகைத்த பொழுது, அட்டகாசமாக பேச்சினை தொடக்கினார் கஸ்தூரிபாய்

அவருக்கு தென்னாப்ரிக்க சிறையிலே நோய் இருந்தது, கூடவே பஜனை பூஜை என தன்னை வருத்திகொண்டார், அந்நிலையிலும் உணர்ச்சி பொங்க பேசினார்

கூட்டத்தில் பெரும் எழுச்சி உண்டாயிற்று, அந்த நெருப்பே நாடெங்கும் பரவிற்று

விடுவானா வெள்ளையன் காந்தியினை விட கஸ்தூரிபாய்க்கு அஞ்சினான், நோயாளி என பாராமல் சிறையிலிட்டான்

எரவாடா சிறையில் அடைக்கபட்டார் கஸ்தூரி , உடல் இன்னும் நலிவுற்றது , காந்தி சிறையில் இருக்கும் பொழுதே 1944ல் மரணமடைந்தார் கஸ்தூரிபாய்

உண்மையில் தியாக தலைவி என இந்தியாவில் ஒருவரை சொல்லமுடியுமென்றால் முழு தகுதி கஸ்தூரிபாய்க்கும் உண்டு

விஞ்ஞானிகள், பொதுநல பித்தர்களோடு வாழ்வது என்பது சாபம், எடிசனையும் ஐன்ஸ்டீனையும் விட்டுவிட்டே மனைவி மார் தலைதெறிக்க ஓடினர்

பாரதியினை கட்டி கொண்டு அழுது செத்தார் செல்லம்மாள்

காந்திக்கு மனைவியாக வாழ்ந்தது பெரும் கொடுமை, நாட்டிற்காக அந்த சுமையினை சுமந்தார் கஸ்தூரி. அந்த மாபெரும் தியாகத்திற்கு ஈடாக சாஸ்திரியின் மனைவி லலிதா அம்மையாரையும் சொல்லலாம்

நிச்சயம் கணவனால் அவர்களுக்கு கிடைத்தது பிள்ளை செல்வம் என்பதையன்றி வெறொன்றும் அல்ல, தங்கம் உட்பட இருந்ததை பறித்தார்களே அன்றி கொஞ்சமும் வளமாக வாழவைத்தவர்கள் அல்ல‌

ஆனால் நாட்டுக்காக அந்த வலியினை தாங்கினார்கள், இந்த தேசத்திற்காக எல்லாவற்றையும் அர்பணித்தார்கள்

கஸ்தூரிபாய் ஒருவகையில் நல்மரணம் அடைந்தவர்

ஆம் தேசம் பிரிவதையோ, காந்தி சுட்டுகொல்லபடுவதையோ இங்கு மதவாதம் தாண்டவமாடுவதையோ அவர் காணவில்லை

அவ்வகையில் அந்த மாதரசி நல்மரணம் அடைந்திருக்கின்றார்

கஸ்தூரிபாயின் வரலாறு இந்திய வரலாற்று பக்கங்களில் குறிப்பிடதக்கது, காந்தி கூட அவரின் வரலாற்றில் கொஞ்சத்தைத்தான் பகிர்ந்திருக்கின்றார்

உண்மையில் அந்ததாய் செய்த சேவையும் தியாகமும் ஏராளம், ஏராளம்

காந்தி என்ற மனிதரை மகாத்மா ஆக்கியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு, அவரால்தான் காந்தி அவ்வளவு பெரிய இடம் அடைந்தார்

நாடாவது மண்ணாவது? ஒழுங்காக சம்பாதித்து கொட்டு மகனுக்கு சேர்த்துவை என சாதாரண மனைவி போல காந்தி கழுத்தில் துண்டு போட்டு அவர் இழுத்து சென்றிருந்தால் இன்று காந்தி எனும் மாமனிதர் இல்லை

இதென்ன இம்சை? என் தந்தையின் வியாபாரத்தை கவனி என கஸ்தூரி காந்தியின் காதை திருகியிருந்தால் அந்த மாமனிதன் உருவாகியிருக்கமாட்டான்

கஸ்தூரி பாயின் தன்னலமற்ற தியாகமே அந்த மகாத்மா எனும் மாமனிதனை உருவாக்கிற்று

கணவனுக்கே பிரம்மசரியம் கொடுத்து அவரை மகாத்மாவாக உருவாக்கிய இன்னொரு தாய் அவர்

கஸ்தூரிபாயின் வாழ்க்கை கண்களை கலங்க வைக்க கூடியது

கஸ்தூரிபாய் இறந்ததுமே மனமுடைந்தார் காந்தி “என்னில் பாதி சிதைந்து போனது, மீதம் இனி இருந்து என்ன செய்ய போகின்றது?” என வாய்விட்டு சொன்னார்

ஆம் 65 ஆண்டுகள் காந்தியோடு இருந்து அவரை காத்து உருவாக்கியவர் கஸ்தூரிபாய்.

கஸ்தூரிபாயின் மறைவுக்கு பின் காந்தி சாக தயாரானார், தனக்கு கொலைமிரட்டல் இருந்தும் கொலை முயற்சி நடந்தும் கொஞ்சமும் அஞ்சவில்லை, பாதுகாப்பும் கோரவில்லை

ஆம் சாவை தேடிகொண்டிருந்தார், கஸ்தூரிபாய் இல்லா வாழ்வு அவருக்கு மனமார பிடிக்கவில்லை

அந்த காந்தியினைத்தான், மனமார சாகதுணிந்த காந்தியினைத்தான் கொன்றது இந்துமகா சபை கும்பல்

பொதுவாக கவிஞர்கள் மனம் மென்மையானது, சில விஷயங்கள் அவர்களின் மனதை பாதித்துவிடும்

கண்ணதாசனும் சத்திய சோதனை எல்லாம் படித்தவர், அவரின் பாடலிலும் கஸ்தூரிபாயின் வலியும் தியாகமும் வரும்

பாரதியின் செல்லம்மாள் , கஸ்தூரிபாய், கமலா நேரு, லலிதா சாஸ்திரி என தியாக செம்மல்களின் தியாகத்தை வியட்நாம் வீடு படத்தில் அட்டகாசமாக எழுதியிருப்பார்

“உண் கண்ணில் நீர் வழிந்தால்..” என தொடங்கும் பாடலது

“உன்னை கரம்பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததினால் சபையில் புகழும் வளர்ந்தடி”

“ஆலம் விழுதுபோல் உறவுகள் ஆயிரம் வந்துமென்ன 
வேரேன நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்”

“என் தேவையாய் யார் அறிவார்?
உன்னை போல் தெய்வமொன்றே அறியும்”

இதெல்லாம் காந்தியின் மனமொழியில் கஸ்தூரிபாய்க்கும் பொருந்தும்

இன்று கஸ்தூரிபாய் இறந்த தினம்

சுதந்திர போராட்ட தியாகியும், காந்தி எனும் மாமனிதனை உருவாக்கிய அந்த தியாக சுடருமான இந்தியாவின் தலை மகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

மயிலான் – G. சியாமளா கோபு

                                                                                                   மயிலான் வாசல வாசல பாத்துட்டு இருந்தது.

கிளி தந்திரம் | Tamil and Vedas“இன்னும் போனவங்களை காணோம். எப்ப வருவாங்கன்னு தெரியல. காலையிலே கிளம்பி

பஞ்சவர்ணக் கிளி - சுட்டி உலகம்போனவங்க, தனியா போகலாம்ல்ல, அதை வுட்டுட்டு, கூடவே இந்த தங்கம்மாவையும் கூட்டிட்டு போய்ட்டாங்க”ன்னு மயிலான் மனசுக்குள்ள மறுகிட்டு இருந்தான்.

தங்கம்மா என்ன செஞ்சா பாவம்ன்னு கேட்கக் கூடாது தான். ஏன்னாக்க, எப்ப பாரு, அவ இவன்ட்ட சண்டை போட்டுட்டே இருப்பா. எந்நேரமும், எதுக்கெடுத்தாலும், எது கேட்டாலும் சண்டை தான். அதுலயும் வாய் வார்த்தை வாயில இருந்தா பரவால்ல. அதை விட்டுட்டு மயிலானைக் கொத்தறதும், கால் நகத்தாலே பீர்றதும், அவன் திங்கும் பழத்தையும் கொட்டையையும் புடுங்குறதும், ரெக்கையை தட்டி, ஒசக்க ஒசக்க பறந்து, எரவானத்த முட்டித் திரும்பறதும், ஒரு மாதிரி கோபமா கத்துறதும்னு, பாக்கவே காளியாத்தா மாதிரி மயிலானை மட்டுமில்லாம வீட்டாளுகளையும் கிடுகிடுக்க வெச்சிருவா.

“அவளுக்கு யார்ட்ட கோபம் எதுக்கு கோபம்னு யாருக்குத் தான் புரியுது? எப்பவும் என்னாண்ட சந்தோஷமாத் தானே இருந்தா. இப்போ என்ன வந்திச்சுன்னு இப்படி மல்லு கட்டறான்னு” மயிலானுக்குப் புரியவேயில்ல.

என்ன தான் மயிலானும் தங்கம்மாவும் கிளிகளாக இருந்தாலும், எந்நேரமும் சிடுசிடு சிடுன்னு, கூட இருக்குறவங்க மேல விழுந்து பிடுங்கிட்டேயிருந்தால், வீட்ல இருக்கிறவங்க நிம்மதியாவா இருக்க முடியுமா? இல்ல அந்த வீடுதான் நல்லா இருக்குமா?

மயிலான் எவ்ளோ சொல்லி பாத்துட்டான். “தங்கம்மா, ரெண்டு பேரும் ஒண்ணா தானே இந்த வீட்டுக்குள்ள வந்தோம். நீ என்ன பண்ணினாலும் சகிச்சுக்கிட்டு போறேன்ல. நீ எதுக்கு கோபப்படுறன்னு” ஆதரவா அன்பா காதலா பாசமா பிரியமா சொல்லியும், இன்னும் என்னன்னவோ டக்கர் அடிச்சும் பாத்துட்டான்.

அப்பயும் அவ கோபம் குறைய மாட்டேங்குது. இங்க வந்த புதுசுல ரெண்டு பேரும் அம்புட்டு சந்தோஷமா அன்னியோனியமா இருந்தவங்க தான். கிக்கிக்கீன்னு சதா சிரிச்சிக்கிட்டு, ஒருத்தரை ஒருத்தர் விரட்டிப் பிடிச்சி விளையாடிக்கிட்டு, புதுசா கண்ணாலம் கட்டினவங்களாட்டி ஒருத்தரை விட்டு ஒருத்தர் இணை பிரியாம இருந்தவங்க தான்.

“இந்த தங்கம்மா எதுக்குத் தான் இப்படி மயிலான்ட்ட சண்ட கட்டுறான்னு தெரியலையே. என்ன காரணம்னு?” அம்மா கேக்குறாங்க.
“அவளுக்கு இப்பல்லாம் ரொம்ப கோவம் ஜாஸ்தியா வருது. சின்னதா ஒரே ஒரு குஞ்சு பொரிச்சிருந்தா கூட அவளுக்கு இவ்வளவு கோவம் வந்திருக்காது. அதை பாக்குறதுக்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்திருக்கும்” ன்னு அப்பா சொன்னாரு.

“யார் அவளை பெத்துக்க வேண்டாம்ன்னு சொன்னது? இவ்ளோ பெரிய வீட்ல இன்னும் ரெண்டு குஞ்சுக்கா இடமில்லாமல் போயிட போகுது? ன்னாங்க அம்மா.

சாதாரண பச்சைக் கிளியான மயிலானுக்கு அப்படித் தோணலை. ஒஸ்தி ரக வெளிநாட்டுப் பல வர்ண கிளியான அவளைப் பாத்த முத பார்வையிலேயே அவள் அழகுக்கு கிறங்கித் தான் போனான் அவன். அழகுன்னா அழகு. சாதா அழகில்ல. பேரழகு. வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் அவளைப் பாத்து, “ஏன்னா அழகு” ன்னு வியக்குற அளவுக்கு தங்கம்மா அழகாயிருப்பா. பச்சையும் நீலமும் கலந்த வால் மாதிரி நீண்ட ரெக்கை பட்டுப்புடவை மாதிரி பளபளக்கும். மூக்குல சிகப்பு நிறத்துல ரெண்டு பொட்டு தங்க மூக்குத்தி மாதிரி ஜொலி ஜொலிக்கும். “தான் உலக மகா அழகின்னு திமிர்ல தான் தன்னைக் கண்டா பிடிக்கலை, இந்த ஆட்டம் ஆடறா” ன்னு தோணும் மயிலானுக்கு.

“நாம முன்னாடி வளத்தினோமே வேலன்னு ஒரு சேவல், அவன் பொஞ்சாதி வேலாயியும் இப்படித்தான் அவனை மிரட்டிட்டே இருந்தா. அவளை என்ன பண்ண நீனு?” ன்னு அப்பா கேட்டாரு.

“தனித்தனியா பிரிச்சு வச்சு பார்த்தேன் அப்பயும் வேலனை கொத்தப் போவா வேலாயி. ரெண்டு பேத்தையும் கூண்டுலருந்து திறந்து வுட்டேன். ரெண்டு பேரும் ஒத்துமையா சந்தோஷமா திரிவாங்க. குப்பை கூளங்களல்லாம் கீறி கிளறி இருக்கிற புழு பூச்சி எல்லாம் புடிங்கி தின்னு கிட்டு” ன்னு பழைய நினைப்புல சிரிச்சவங்க “ரெண்டு பேரும் சிரிப்பதும், இறக்கையை படக் படக்குன்னு அடிச்சுகிட்டு எம்பறதும், பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியா இருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவு பாசமா இருந்தாங்க”ன்னு அம்மா சொன்னாங்க.

“வேலான்னு ஒரு குரல் குடுத்தா போதும். எங்கே இருந்தாலும் உடனே வந்து நிப்பான். கூடவே வேலாயியும் அவனை இடிச்சுக் கிட்டு ஓடி வந்து நிப்பா தெரியுமா”ன்னு அப்பா சிரிச்சாங்க.

என்னடா அவங்கள போய் அம்மா அப்பான்னு சொல்றானே இந்த மயிலான்னு நினைக்கிறீங்களா? என்ன பண்றது? நாயைத் தானே நன்றியோட இருக்கும்னு பெத்தப் பிள்ளையைப் போல வளப்பாங்க மனுஷங்க. ஆனாக்க சில வூடுகள்ல ஜல்லிக்கட்டு காளைங்களை புள்ளை மாதிரி வளக்கறவுங்க உண்டு. ஆனா மயிலான் மாதிரி கிளியையும் தங்கம்மா மாதிரி கிளியம்மாளையும் கூட சொந்த பிள்ளைகளைப் போல வளக்குற பெற்றோர்கள காண்பது அரிதிலும் அரிது.

அம்மாம் பெரிய நடுவூட்டுல, ரெண்டு பேரும், ஆடுறதும், பாடறதும், டிவி பெட்டியில், பாட்டு காட்சி வந்தா கூடவே மயிலான் விசில் அடிப்பதும், சண்டை காட்சி வந்தா, ரெண்டு பேரும் கீச் கீச்சுன்னு கத்தறதும், ஒரே அக்கப்போர் தான். அம்மா யாரோடும் போனில் பேசக் கூடாது. அவுங்க ரெண்து பேத்துக்கும் பிடிக்காது. இது எப்படி இருக்கு! ரெண்டு பேரும் சத்தம் போடுவங்க. அதனால யார்ட்டையும் ரெண்டு வார்த்தை போன்ல முழுசா பேச முடியறதில்ல. சொந்தகாரவுங்களும் போனை எடுத்ததுமே, “என்னம்மா உன் பிள்ளைங்க எப்படி இருக்காங்க?” ன்னு கேக்கற அளவுக்கு ரெண்டு பேரும் குடும்ப உறுப்பினர்களாகவே ஆகிட்டாங்க. ரேசன் கார்டுல பேர் குடுத்து, ஆதாரையும் எடுத்துடும்மான்னு அவுங்க வீட்டு தம்பு கேலி பண்ணுவான். ஏழு மணியாச்சுன்னா நடு வீட்ல, விளக்கை அணைக்க சொல்லி கூப்பாடு போடுவாங்க. என்னடா உங்களோடன்னு அலுத்துக் கிட்டாலும், சத்தம் தாங்காம விளக்கை அணைச்சிட்டு இருட்டுலய நடப்பாங்க அப்பாவும் அம்மாவும். ஒரு வழியா ஒரு கூண்டை செஞ்சி ரெண்டு பேத்தையும் அதுல போட்டு சுத்தி மறைப்பா பேப்பரை ஒட்டி இருட்டாக்கிட்டாங்க. மனுஷங்க மாதிரி இவுங்களுக்கும் இருட்டும் மறைப்பும் தேவையாயிருக்குன்னு அம்மா சிரிச்சாங்க. கிளியோ மனுஷனோ, யாராயிருந்தா என்ன? உலகத்துல இருக்குற எல்லா ஜீவராசிகளுக்கும் காதல் இயற்கையானது தானே!

அவங்க வீட்ல மக வயித்துப் பேத்தி பொறந்துச்சு. அவள நல்லா குளிக்க ஊத்தி, பவுடர் போட்டு, நடுவூட்ல சாமிப் படத்துக்குக் கீழே கிடத்தி, “ஓ கொச்சு, நன்னாயிட்டு குளிச்சி பொட்டிட்டு மையிட்டு கிடக்குன்ன கிடப்பைப் பாரு” ன்னு அம்மா கொஞ்சினா கூடவே இவுங்க ரெண்டு பேரும் அதை கீக்கீக்கீன்னு வழி மொழிவாங்க.

“குட்டி மயிலு, உன்னை அண்ணனும் அண்ணியும் எப்படி கொஞ்சுறாங்கன்னு பாரு”ன்னு அப்பா பேத்திட்ட சொல்றதை கேக்கற வீட்டு விருந்தாளிகளுக்கு விசித்திரமாயிருக்கும். சிலர் கண்ணுக்கு மறைவா, உக்கும்..அண்ணனாம் அண்ணியாம்னு தவடையை தோள்ல இடிச்சிக்கிறதும் உண்டு.

மயிலான் பேத்திக்கு டான்ஸ் ஆடிக் காமிப்பான், பாட்டு பாடுவான். விசில் அடிப்பான். இவன் பண்ற சேட்டை எல்லாம் பாத்துட்டு தங்கம்மா சண்டைய மறந்துட்டு ஒரே சிரிப்பா சிரிக்க, அவ சிரிக்கிற சிரிப்புல, குழந்தை திரும்பி பாக்க ஆஹா தங்கம்மா குஷியாயிட்டான்னு புரிஞ்சுகிட்டு, இவன் பாப்பாவை வுட்டுட்டு தங்கம்மாட்ட பல்டி அடிக்கிறது பாட்டுப் பாடறதுன்னு ரொம்பவே நாடகம் போட, அதை தங்கம்மா பாத்து இன்னும் சிரிக்க, தங்கம்மாவோட சிரிப்பு சத்தம் கேட்டு பாப்பா பதிலுக்கு சிரிக்க, மூணு பேரும் ஒரே சிரிப்பு, அட்டகாசம், பார்க்கிறவங்களுக்கு, கிளிங்க எது மனுஷங்க எதுன்னு வித்தியாசம் இல்லாத தெய்வ சன்னிதானம் மாதிரி இருக்கும். மூணுமே ஒரே ஜீவராசியாத்தானிருக்கும். அன்பு இருக்குற இடத்துல மகிழ்ச்சி இருக்கும். மகிழ்ச்சி இருக்குற இடத்துல சிரிப்பு இருக்கும். சிரிப்பு இருக்குற இடத்துல தெய்வம் இருக்கும்னு அந்த காலத்துல பெரியவங்க சும்மாவா சொன்னாங்க!

குழந்தைகளும் பறவையைப் போல தானே! சின்னக் குழந்தை தெய்வத்துக்கு சமம். இந்த உலகமோ இயற்கையோ தெய்வம் போல தானே மாசு மரணம் இல்லாதது. அதனால அவங்களுக்கு அன்பை
மட்டும் வெளிப்படுத்த தெரியும்ங்குறது எவ்வளவு உண்மை. மூணு பேரும் சேர்ந்து அவ்வளவு
சந்தோஷமா இருந்தது அந்த வீடு

இப்போல்லாம் தங்கம்மா சண்டை போட்டா மயிலானும் கூட கூட சண்டை போட ஆரம்பிச்சிட்டான். பின்னே என்ன! அவனும் எத்தனை நாள் தான் பொறுத்துப் போவான். அவனுக்கு தான் ஒரு ஆம்பிள என்ற நெனப்பு திடீர்னு வந்துருச்சு. ஆமா ஊர்ல உலகத்துல இல்லாத பேரழகின்னு அவ மேல ரொம்பவே சலிப்பாயிட்டான். அதுவும் சரி தான். எதுக்கும் யாருக்கும் உதவாத அழகு இருந்தென்ன பிரயோசனம்? ஒரு நாள் மயிலான் தங்கம்மா ரெண்டு பேர் சண்டையும் ரொம்பவே உக்கிரமாயிருச்சு. அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சமாதானம் செஞ்சிப் பாத்தாங்க. திட்டினாங்க. கண்டிச்சிப் பாத்தாங்க. ஊஹூம். அப்பயும் சரியாவலை. ரெண்டு நாளா கர் புர்ன்னு தான் போயிட்டு இருந்தது.

வேற வழி இல்லாம, “வேலனையும் வேலாயியையும் கூட்டை திறந்து விட்டதைப் போல இவங்களையும் கூண்டை திறந்து விட்டா, போய் கொஞ்சம் வெளியில் காத்தாட நடந்தாங்கன்னா சந்தோஷமா இருப்பாங்க” ன்னு அம்மா சொல்ல,

“சரி அப்படித் தான் செஞ்சு பார்ப்போம்” ன்னு சொல்லி அப்பா கூண்டைத் திறந்து விட்டாங்க.

கூண்டை திறந்து விட்டதுமே தங்கம்மா அதுக்குன்னே காத்துட்டு இருந்ததைப் போல உடனே சர்ருன்னு வெளியே போய்ட்டா. அதுக்கு நேர்மாறா, மயிலானை “வெளியே போடா” ன்னு புடிச்சி தள்ளி விட வேண்டியதா போச்சு.

“குடுக்கறதைத் தின்னுப்புட்டு, கூண்டுக்குள்ளேயே குந்தியிருந்து சோம்பேறியா போயிட்டான் மயிலுன்னு” அப்பா சொல்ல,

“கிளியானாலும் ஆம்பளையானாலும் வூட்டுக்குள்ளேயே குந்தியிருந்தா எந்த பொம்பிளைக்குத் தான் பிடிக்கும்” னு அம்மா கேட்டாங்க. நெசம் தானே!

மயிலான் வீட்ட சுத்தி, தத்தி தத்தி நடந்து, கொத்தி கொத்தி தின்னு, மண்ணை கிளறி, ஏதோ பண்ணிட்டு இருந்தான். “சரி ரெண்டு பேரும் இங்க தானே இருக்காங்கன்னு” அப்பா வெளியே போயிருக்க, அம்மா கொஞ்சம் கண்ணை அசந்த மதிய நேரத்துல,. பாதுகாப்பா இருக்குற வூட்டை வுட்டுட்டு, வுட்டா போதும்னு சில பொண்ணுங்க மாயையை நம்பி வீணாய் போவதைப் போல தங்கம்மா பக்கத்து வீட்டுக்கு பறந்துட்டா. வெளி உலகத்துல, வட்டமிடும் வல்லூறுகளும் கொத்திப் பிடுங்கித் தின்னும் பருந்துகளும் இருக்குங்குறத, பொம்பள புள்ளைங்க மறந்து போயிடுற மாதிரி இவளுக்கும் பக்கத்து வீட்ல நாய் இருந்தது தெரியாம போயிருச்சு.

இவளைக் கண்டதும் அவுங்க வூட்டு நாய் லொள்ளு லொள்ளுன்னு பிடிச்சு தின்னறதுக்கு விரட்டிட்டு இருந்துச்சு. தங்கம்மா ரொம்ப பயந்து போயிட்டா. வீட்டை விட்டு வந்தது தப்புன்னு புரிஞ்சுப் போச்சு. வீட்டுக்கு வந்துறலாம்ன்னு காம்பவுண்ட் சுவத்து மேல ஏறுவதற்கு முயல, அவளோட ரெக்கையோட முனையை பிடித்து நாய் இழுக்க, தங்கம்மாளோ கீக்கீக்கீன்னு பெருங்குரலெடுத்து படபடத்து கதற, நல்ல வேளை அந்த வீட்டு அம்மா பாத்துட்டு நாய விரட்டி வுட்டு கிளியைத் தூக்கி காம்பௌண்ட் சுவத்துக்கு மேல உட்டுட்டாங்க.

“யாரு செஞ்ச புண்ணியமோ நல்லவேளை பொழச்ச தாயே”ன்னு ரெண்டு பேரையும் மறுபடியும் பிடிச்சு கூண்டுக்குள்ள வச்சுட்டாங்க அம்மா.

அவுங்க வூட்டு தம்புவுக்கு கண்ணாலத்துக்கு சேலம் எடப்பாடிப் பக்கம் பொண்ணு பாத்துட்டு வந்தாங்க பெரியவங்க. ஏக தேசம் இந்த இடம் தெகஞ்சிடும்னு பேசிக்கிட்டாங்க. ஆனா என்ன காரணமோ கல்யாணம் குதுறலை.

“இந்த வூட்ல கிளிங்களுக்குக் கூட ஒரு குஞ்சு வைக்கலை. இதுல எங்கேருந்து என் தம்பிக்கு பொண்ணு அமையறது?” ன்னு தம்புவோட அக்கா சொல்லி வருத்தப்பட்டிச்சி.

ஒருநாள் காலையில ரொம்பவே உர்ருன்னு இருந்தா தங்கம்மா. மயிலான் என்ன கெஞ்சியும் அசையாம உக்காந்திருந்தா. ரெண்டு பேருக்கும் என்ன வாக்குவாதமோ மனஸ்தாபமோ! சண்டை கூட போடாம அமைதியா இருக்காளேன்னு ஆச்சரியமா இருந்தது. திடீர்னு கீச்கீச்ன்னு கத்திட்டு இருந்தா. மயிலானும் பதிலுக்கு சண்டை போடவே தங்கம்மா விஷ்க்ன்னு பறந்து போய் பின்னாலேயிருக்கிற தண்ணித் தொட்டியில பப்பரக்கான்னு விழுந்துட்டா. அவளைக் கண்ணே மணியேன்னு கொஞ்சி கெஞ்சி சரி பண்ண தடுமாறிப் போய்ட்டாங்க பெரியவுங்க.

“ஊஹூம். இவளை வெச்சிக்கிட்டு சரிபடாது. நாம வீட்ல இல்லாதப்போ இதை மாதிரி ஏடாகூடமா ஏதாவது செஞ்சிக்கிட்டா என்ன பண்றது” ன்னு கவலைப்பட்டாங்க. வேற வழி இல்லாம சந்தையில அமீது பாய்ட்ட வுட்டுட்டு இன்னொரு கிளிய கூட்டிட்டு வரப் போயிருக்காங்க.

இந்த வூட்டு தம்பு சொல்லிச்சு. “யம்மா அமீது பாய், நாட்டு வைத்தியர்ட்ட தங்கம்மாவைக் குடுத்துடப் போறாரு. மூட்டுவலிக்கு கிளி ரத்தம் நல்லா கேக்கும்னு அவரு அறுத்துட கிறுத்துடப் போறாரு” ன்னு வெசனப்பட்டது பாவம்.

கிளி ரத்தம் மூட்டுவலிக்கு கேக்குமா என்ன? நெசமாவா?

தங்கம்மாவைப் போல ஒசத்தியான வெளிநாட்டு அழகான கிளியா இல்லாம மயிலான் தனியா இருப்பானே, அவனுக்கு ஒரு துணை வேணுமே பாவம்னு சாதாரண கிளியம்மாவ கூட்டிட்டு வந்தாங்க பெரியவுங்க. ஆனாலும் மயிலான் அந்த புதுக்கிளிய ஏறெடுத்தும் பாக்கலை.

“மயிலான் இதோ பாரு. இதுவும் தங்கம்மா தாண்டா” ன்னு புதுக்கிளிக்கு தங்கம்மான்னே பேரு வெச்சிட்டாங்க.

அந்த கிளிக்கு முன்னே இருந்த வீட்ல என்ன பேரோ? இவுங்க வெச்ச புதுப் பேரான தங்கம்மாவுக்கு அது திரும்பிப் பாக்கறதில்ல. ஒன்னு ஒசத்தி மத்ததொன்னு மட்டம்னு ரெண்டும் ரெண்டாப்பை, ரெண்டாப்பையும் கழண்டாப்பைன்னு ஏட்டிக்கிப் போட்டியா இல்லாம ரெண்டும் ஒன்னு போல இருந்தா சண்டை வராதுன்னு யாரோ சொன்னாங்களாம் அவுங்களுக்கு.

புதுசா வந்தவ சாப்பிடுறது இல்ல பேசுறது இல்ல. புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த புது பொண்ணு மாதிரி என்னவோ கோவிச்சுக்கிட்டு ஒக்காந்துட்டு இருந்தா.

“காலைல இருந்து தங்கம்மா ஒன்னுமே சாப்பிடலடா மயிலான், என்னன்னு கொஞ்சம் கேக்க
கூடாதாடா”ன்னு அம்மா சொல்ல, தங்கம்மான்னு பேரைக் கேட்டதும் மனசு இளகிப் போச்சு மயிலானுக்கு. உடனே பழைய டெக்னிக் படி அவளுக்கு டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி, விசில் அடிச்சு, பல்டி அடிச்சிக் காமிக்கிறதுன்னு அவ கவனத்தைக் கவர, என்னன்னவோ டக்கரடிச்சிப் பார்த்தான் மயிலான். அப்பயும் அவ அசையவேயில்ல. இப்படியே போயிட்டு இருந்தது இவங்களுடைய காலம். ஆண்டாண்டு காலமா ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் ரசாயனம் மயிலான் தங்கம்மா மத்தியில வராமலா போய்டும்? அப்புறம் என்ன? இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே சிரிப்பு தான். கூத்து தான். கும்மாளம் தான். நாலு முட்டை வச்சதுல ரெண்டு குஞ்சு பொரிச்சு இன்னும் ரெண்டு முட்டை குஞ்சு வெளியே வர காத்துக் கிட்டு இருக்கு.

அவுங்க வூட்டுத் தம்புக்கு கல்யாணம். இந்த தடவை பொண்ணு தேனி பக்கம். வீடே அமர்களப்பட்டது. “இவுங்க வூட்ல மயிலானுக்கும் தங்கம்மாவுக்கும் குஞ்சு பிறந்த ராசி, நாலு வருஷமா பொண்ணுத் தேடிட்டுருந்த அந்த வீட்டு தம்புக்கு கண்ணாலம் ஆச்சு” ன்னு அவுங்க மட்டுமல்லாம சொந்த பந்தம் முச்சூடும் சொல்லி பூரிச்சிப் போனாங்க.

புது பெஞ்ஜாதியோட வீட்டுப்படியில காலெடுத்து வைக்கும் போது ஆரத்தி சுத்தறதுக்கு முந்தி மயிலான் தங்கம்மாவோட சிரிப்பு சத்தம் பொண்ணை வுட்டுட்டு போக வந்திருந்த சொந்தகாரவுங்களுக்கும், புது சம்பந்திகளுக்கும் சிரிப்பைத் தர, அந்த இடமே, ஒரு பைசா செலவில்லாமல் ரொம்பவே குதூகுலமாயிருந்தது.

ஜீவ ராசிகளே இந்த வூட்ல சந்தோஷமாயிருக்கும் போது எம்மவளும் இங்கன ஒரு குறையுமில்லாம இருப்பான்னு புள்ளையை விட்டுட்டு நிம்மதியா திரும்பிப் போனாங்க பொண்ணு வூட்டுக்காரவுங்க. கல்யாணப் பொண்ணும் சந்தோஷமா புருஷன் கையைப் பிடிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே வூட்டுள்ளாற வந்தது.

ஆங். அது சரி. தங்கம்மா என்ன ஆனா தெரியுமா?

“ஒரு குளு குஞ்சு கூட வைக்காத நம்மை வெச்சிக்கிட்டு நம்ம அம்மா அப்பா என்ன செய்வாங்க? நம்மளாலே தான் தம்புவுக்கு கண்ணாலம் ஆவலை. அதுக்கும் மேலா நம்மளை ஆசையா பாசமா எந்நேரமும் சிரிக்க வெச்சிக்கிட்டு இருந்த மயிலான் என்ன பண்ணுவான். என்னாலே உனக்கு எந்த சந்தோசமுமில்ல, நான் எங்கன்னா போயிடறேன்னு சொன்னா, என் மேல உசுர வெச்சிருக்குற மயிலான் ஒத்துக்குவானா! வீண் சண்டை வலிச்சி நானு வீட்டை விட்டுட்டு போகவும் தானே, புதுசா ஒரு கிளியம்மா வந்தா. நாலு குஞ்சு பொரிச்சா. ரெண்டு பேரும் சந்தோஷமாயிருக்கக் கண்டி தானே வீட்டாளுகளும் சந்தோஷமாயிருக்காங்க. அவுங்க எல்லாரும் எப்பவும் நல்லாயிருக்கனும். அதிலும் குறிப்பா மயிலான் சந்தோசமா இருக்கணும்” னு நெனச்சிட்டு இருக்கா தங்கம்மா.

மனுஷனுக்கு மட்டுமா காதல்? உலகின் எல்லா ஜீவராசிகளுக்கும் காதல் பொதுவானது தானே! உலகில் வாழும் எல்லா உயிரினங்களிலும் மனுஷன் உட்பட உருவத்தில் பேதமிருந்தாலும் உணர்ச்சியில் பேதமில்லையே. படைச்சனிடத்திலும் எந்த பேதமுமில்லையே!

 

கணக்கு -எஸ்ஸார்சி

No photo description available.

பெருவரப்பூர் அய்யங்கார் என்றால்தான் எனக்குத்தெரியும். அவருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் என்னவோ இருக்கலாம். யாருக்கும் தெரியாது.  எங்கள்  கிராமம் தருமங்குடிக்கு  அவர் அடிக்கடி  வருவார்.பண்ணையார் வீட்டில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தருவார். பண்ணையார் வீட்டுக் குழந்தைகளில் மூத்த பிள்ளையின் படிப்புக்கு  அவர் கூடுதலாய்ப் பொறுப்பு எடுத்துக்கொண்டவர். பண்ணையார் வீட்டில் அந்த மூத்த பிள்ளைதான் வக்கீலுக்குப் படித்தார்.

பெருவரப்பூர் தருமங்குடியிலிருந்து மூன்று கிலோமீட்டர் இருக்கலாம். ஊரின் தெற்குவெளி வயலில் இறங்கி வரப்பு வரப்பாய் நடக்கவேண்டும். எங்கு பார்த்தாலும்  பச்சைப்பசேல் என்று நஞ்சை நிலங்கள்.  இரண்டு கிராமங்கள் குறுக்கே  வரும். தட்டோன் ஓடை, ஆலம்பாடி என்பவை அவை. பெருவரப்பூர் அய்யங்காருக்குத் தான் பிறந்த பெருவரப்பூரில் யாரும் இல்லை. குழந்தையாய் இருக்கும் போதே   அவர் தாயை இழந்தார். அப்பாவோடு  பாட்டி கூட மாட இருந்து குழந்தையை வளர்த்தார்.தன் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லித்தர தருமங்குடிப் பண்ணையார் பெருவரப்பூர் அய்யங்காரை தருமங்குடிக்கு  அழைத்து வந்தார்.

 ஃபோர்த் ஃபாரம் சிதம்பரம் ராமசாமி செட்டியார் ஹை ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த பெருவரப்பூர்  அப்பா  காலராவில் தவறிப்போனதால் படிப்பு நின்று போனது. ஆங்கிலப் புலமை அய்யங்காருக்கு அபாரம். ஆங்கில எழுத்துக்கள் மணி மணியாய் காட்சி தரும்.  அவர் பேசும் ஆங்கிலத்தில் சொக்கித்தான் அவரைப் பண்ணையார் டியூஷனுக்கு அழைத்து வந்தார்.  கிடைத்த இடுக்கில் அய்யங்கார்  ஜோசியம் பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டுவிட்டார். ஜாதகம் கணிப்பதில் நிபுணரானார்.கிரகப்பெயர்ச்சி பலன் அறிய வெள்ளாழத்தெரு ஆச்சிமார்களில் அனேகர் அவரைச் சுற்றிவர ஆரம்பித்தனர்.

அய்யங்காருக்கு மூன்று வேளை உணவு படுக்க இடம், கை செலவுக்குப்பணம் எல்லாம் வேண்டுமே அதனை எல்லாம் பண்ணையார் கவனித்துக்கொண்டார்.தருமங்குடியில் அப்போது பள்ளிக்கூடம் ஏது.  அருகில் சிதம்பரம்தான் பள்ளிக்கூடங்கள் நிறைந்த ஊர். சிதம்பரம் கனகசபை நகரில் பண்ணையாருக்கு ஒரு பெரிய வீடு இருந்தது. குழந்தைகளைப் படிக்க வைக்கவேண்டுமே ஆகக் குடும்பம் சிதம்பரத்தில் இருந்தது.பண்ணையார் சிதம்பரத்துக்கும் தருமங்குடிக்கும் போய் போய் வருவார். டியூஷன் வாத்தியாரான அய்யங்காரும் பிள்ளையோடு தருமங்குடிக்கு வருவார். தருமங்குடிப் பண்ணையாரின் பிள்ளைகள் பள்ளி விடுமுறையில் எல்லாம் கிராமத்தில்தான் இருப்பார்கள். குழந்தை பிறப்பே குறைந்துபோன இந்தக்காலம் போலவா, பண்ணையார் பிள்ளைக்கு ஆண் மக்கள் நால்வர், பெண்குழந்தைகள் இருவர்.எல்லா பிள்ளைகளுக்கும்  தமிழும் ஆங்கிலமும் சொல்லிக்கொடுத்து ’கற்றல்’ என்கிற வண்டியை ஓட விட்டுக்காட்டியது அய்யங்கார்தான்.

தருமங்குடிக்கு வரும்போதெல்லாம் பெருவரப்பூர் அய்யங்கார் எங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார். மதியம் இரவு என்று இரண்டு வேளை. பண்ணையாரின் வீட்டு ஆச்சி,  அய்யங்கார் சாப்பிட எங்கள் வீட்டிற்கு அரிசியும் தயிரும் அனுப்பி வைப்பார். புரோகிதரான எங்கள் அப்பா காய்கறியும் வாழை இலையும் வீட்டில் பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்வார்.

எங்கள் வீட்டுத்திண்ணையில் அய்யங்கார் மதியம்  சாப்பிட்டுவிட்டுத் தூங்குவார். எழுந்து காபி சாப்பிடுவார். காலை வேளை காபி பிள்ளை வீட்டிலேயே முடித்துக் கொள்வார். அம்மா அவரிடம் தன் குழந்தைகளுக்கெல்லாம் ஜாதகம் கணிக்க வேண்டிக்கொள்வார். ஜாதக பலன்களை எழுதி வாங்கிக்கொள்வார். அனேகமாக அய்யங்கார் சொன்னால் ஜாதக பலன்கள் சரியாகவே இருக்கும்.

பண்ணையார் வீட்டு ஆச்சிதான்  ஒரு நாள் அய்யங்கார் வாத்யாரைக் கேட்டிருக்கிறார்.’ இப்படியே போவுறதா காலம்.உங்களுக்கு வயசு  ஆயிகிட்டே போவுது. ஒரு குடும்பம்னு ஆவுறது இல்லையா.  காலா காலத்துல ஒரு பொண்ணு பாருங்க. கல்யாணம் பண்ணிகுங்க. நாளைக்கு உங்களுக்கு வயசு ஆகும். கை காலு சோறும் முடியாம போகும். அப்ப ஒரு சொம்பு வெந்நீர் வச்சி தர ஆளு வேண்டாமா’

‘பார்க்கலாம்ங்க ஆச்சி. அதுக்கு இன்னும் நேரம் வருல’ அய்யங்கார் பதில்.

‘ஊரு உலகத்துக்கே  ஜாதகம் பாக்குறீங்க. உங்க ஜாதகத்த பாத்துகணும்ல’ என்பாள் ஆச்சி.

பதில் ஏதும் சொல்லாமாட்டார். லேசாக சிரித்துக்கொள்வார். அதற்கு என்ன பொருளோ.

பண்ணையார் வீட்டுக்குழந்தைகள் எல்லோரும் படித்தார்கள். வேலைக்குச் சென்றார்கள். கல்யாணம் செய்துகொண்டார்கள். குழந்தை குட்டிகள் பிறந்தன. ஒரு குடும்பம் பல குடும்பங்களாய் மாறிப்போயின. அய்யங்கார்  பிள்ளை வீட்டு எல்லா  வைபவங்களுக்கும் வந்து போனார்.அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கும் கட்டாயம் வருவார். அவருக்குத் தெரியாத விஷயங்கள் உண்டா என்ன. திண்ணையில் அமர்ந்து பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. அய்யங்காருக்குத் தலை நரைக்க ஆரம்பித்தது. நெற்றியில் லேசாக வழுக்கை விழத்தொடங்கியது. அம்மாதான்  மிகவும் கவலைப்படுவார். அய்யங்காருக்கென்று இப்போது இருப்பது பிள்ளை வீடு மட்டுமே. பண்ணையாருக்கும் வயதாகிக்கொண்டே போனது. ஆச்சிக்கும் அடிக்கடி உடம்பு முடியாமல் போனது. அவர்களுக்கே யாராவது ஒத்தாசை செய்தால் தேவலை என்கிற நிலமை வந்தது. யாராயிருந்தாலும் அது இயற்கைதானே.

அய்யங்கார் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்.’ நா இனி இந்த ஊருக்கு அடிக்கடி வர்ரது சிரமம்னு நெனைக்கிறேன். பிள்ளைக்கும் வயசாறது. ஆச்சிக்கும்தான். அவர் குழந்தைகள் தலையெடுத்து அது அது வேற வேற ஊர்னு போயாச்சு. நா இப்ப அவாளுக்கு அனாவசியமா இருக்கலாம். ஆக நா இனி தருமங்குடிக்கு வர்ரது சாத்தியமில்லேன்னு தோண்றது’

‘எங்க போவேள்’

‘பகவானுக்குத்தான் தெரியணும்’

‘இப்பிடி ஒரு பதிலா’

‘ எங்கிட்ட இருக்கற பதிலதான நா சொல்லலாம்’

‘இதுக்குத்தான் ஆச்சி அப்பவே சொன்ன உங்களண்ட’

‘என்ன சொன்னா’

‘ஒரு கல்யாணத்த பண்ணிகுங்கோன்னு’

அய்யங்கார் எப்போதும் சிரிப்பது போல் லேசாக சிரித்துக்கொண்டார். ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லைதான்.

அப்பா இந்த விஷயங்களில் எல்லாம் பட்டுக்கொள்ளவே மாட்டார். அது அம்மா பாடு என்று விட்டு விடுவார். தருமங்குடியில் வயதாகி உடம்பு முடியாமல் போகிறவர்கள் எல்லாம் தினம் தினம் ஒரு முறையாவது எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அம்மா கையால் ஒரு பிடி சாதமாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத்தான் போவார்கள். எத்தனையோ முதியவர்களை அப்படி  நான் பார்த்து இருக்கிறேன். வேலாயுதம் பிள்ளை  தினம் வருவார். முதுகு வளைந்து கூன் விழுந்திருக்கும்.’ரவ வாழ எல கிழிசலு ஒரு உண்ட சோறு ரசம் ஊத்தி குடுங்க’ என்பார். காதில் அரை பவுனுக்குத் தோடு இருக்கும். பேரூர்  வைத்தியநாதம் பிள்ளை வருவார். அவர் என் எல் சி கரிச் சுரங்கத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்தான். ‘ அம்மா விருந்து வருது’ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள்  நுழைவார். ஒரு டம்ப்ளர் மோர் மட்டுமே வாங்கி சாப்பிடுவார். இலுப்பைத்தோப்பிலிருந்து  பரதேசிப் படையாச்சி கையில் தடியோடு வருவார்.’ அம்மா இருக்காங்களா, நீராகாரம்  ஒரு ரோட்டா  குடுத்திங்கன்னா தேவலாம்’  என்பார். அப்படியே   வீட்டின் முன் கட்டில் உட்கார்ந்து விடுவார். இடையர் தெருவிலிருந்து ஆறுமுகக் கோனார் வருவார்.’  அய்யிருட்டம்மா ஒரு கரண்டி சாம்பார் ரவ சாதம்’ என்பார்.

தொழூராங்க என்னும் கிழவி வருவார் ’ஒரு தரத்துக்கு வெத்திலை குடு’ என்பார். ஊருக்கே மாடு மேய்க்கும் ராமசாமி வருவார் ‘ராமசாமி வச்சினாடு தொம்லபாக்கு காவாலி’ என்று தெலுங்கு மொழியில் கேட்பார். பூசாலி குப்பன் பாரியாள் தங்காயா’ அய்யரூட்டு அம்மா’ என்று கூடவே இருப்பாள்.ஆதிநாராயண சர்மா பண்ணையார் வீட்டு ரைஸ் மில்லில் கணக்குப்பிள்ளையாய் வேலைசெய்தார். அவர் எங்கள் வீட்டு ஒரு போர்ஷனில் குடியிருந்தார். அந்த குடும்பத்திற்கு அம்மா ஒத்தாசையாகவே இருந்தார். பஞ்சாயத்து போர்டில் கணக்குப்பிள்ளையாய் வேலை செய்த கிருஷ்ணமூர்த்திக்கும், அரிசன நலத்துறைப்பள்ளியில் வேலை பார்த்த லக்‌ஷ்மணன் சாருக்கும் அம்மாதான் மதிய உணவு கொடுப்பார். அவர்கள் சாப்பிட்டதற்கு  அம்மாவிடம் தோராயமாகக் கணக்குப் போட்டுக் காசு  கொடுப்பார்கள்.  இருவரும் சம்பாதிப்பவர்கள். இந்த குக்கிராமத்தில் அவர்களுக்கு இது மிகப் பெரிய ஒத்தாசை. அம்மா அன்னபூரணிதான்.

பெருவரப்பூர் அய்யங்கார் பிறகு பிறகு  ஊர் பக்கம் வருவதேயில்லை. நாங்களும் அவரை மறந்துதான் விட்டோம். ஆண்டுகள் எத்தனையோ உருண்டோடியும் விட்டன. ஒரு நாள் அண்டையூர் வளையமாதேவிக்கு பெருவரப்பூர் அய்யங்கார் வரப்போவதாய் தருமங்குடியில் அங்கங்கு பேசிக்கொண்டார்கள்.அவர் இப்போது திருபெரும்புதூர் மடத்து பெரிய ஸ்வாமிகள் என்றும் பேசிக்கொண்டார்கள். வளையமாதேவியில் ஒரு பெரிய பெருமாள் கோவில் இருக்கிறது. வேதவல்லி சமேத வேதநாராயணப்பெருமாள் திருக்கோவில். அந்தக்கோவிலின் டிரஸ்டி லக்‌ஷ்மிகாந்தம்பிள்ளை திருபெரும்புதூர் சென்றதாயும் அப்போது மடத்து  பெரிய ஸ்வாமிகளைச் சந்தித்தாயும் சொன்னார்கள்.தருமங்குடி பண்ணையார் பற்றி, அவர் குடும்பம் பற்றி யோகக்‌ஷேமம் விஜாரித்ததாகவும் பேசிக்கொண்டார்கள்.

இத்தனை ஆண்டு காலம் அவர் சமஸ்கிருதம் கற்று, வேதங்கள் ,உபநிடதங்கள் ,  சர்வ  தர்ம சாஸ்திரங்கள்,  பாஷ்யங்கள், பதினெட்டு புராணங்கள், கற்று பாண்டித்யமாகியிருக்கிறார் என்றும்  திருபெரும்புதூர் மடத்தில்  தீட்சை பெற்றுக்கொண்டு  அங்கேயே  ஜீயர் ஸ்வாமிகள் ஆகி விட்டார் என்றும் சொன்னார்கள். காலக்கிரமத்தில் அவர் பெரியமடத்துக்கு மகா  ஸ்வாமிகள் ஆகிவிட்டதாகவும்  செய்தி பரவியது. தற்சமயம் வளையமாதேவி வேதநாராயணப்பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளியிருப்பதாயும் மக்கள் அவரைக்கண்டு ஆசிபெற்றுச் செல்வதாயும் தருமங்குடி  தெருக்களில் பேசிக்கொண்டார்கள்.

‘பெருவரப்பூர் அய்யங்கார் வளையமாதேவிக்கு வந்துருக்கிறாராம்’ என்றாள் அம்மா.

‘திருபெரும்புதூர் ஜீயர்னு சொல்லு , சுவாமி எழுந்தருளியிருக்கார்னு சொல்லணும்’ என்றார் அப்பா.

நாங்கள் மூவருமே வளையமாதேவிக்குச்சென்று  ஜீயரைப்பார்த்துவருவது என்று முடிவு செய்தோம். காலம் என்ன என்னவோதான் செய்து விடுகிறது. பெருவரப்பூர் அய்யங்கார்  இப்போது வணக்கத்திற்குரிய மகான் ஆகியிருக்கிறார். தருமங்குடி பண்ணையாரும் இல்லை அந்த ஆச்சியும் இல்லை. காலம் அவர்கள் கணக்கை முடித்துக்கொண்டு விட்டது. அவரின் பிள்ளைகள் எங்கெங்கோ உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றுவிட்டார்கள்தான்.

 என் பெற்றோரும் நானும்  வளையமாதேவி பெருமாள் கோவில் செல்வது எனப்புறப்பட்டோம். ஜீயர் ஸ்வாமியைப் பார்த்துவிடுவது,  அவரிடம் பேசமுடிந்தால் பேசுவது, எப்படியும் அவரிடம் ஆசி வாங்கிக்கொண்டு திரும்புவது எனக் கிளம்பினோம்.

எங்கள் வீட்டில் எத்தனையோ முறை சாப்பிட்டவர். எங்கள் வீட்டுத்திண்ணையில் படுத்து உறங்கியவர். அம்மா கையால் எத்தனைதரம் காபி சாப்பிட்டு இருப்பார். ஒரு பெண்ணைப் பாருங்கள்  திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று பண்ணையார் வீட்டு ஆச்சி எவ்வளவு முறை அவரிடம் வற்புறுத்தி இருப்பார். என் அம்மா மட்டுமென்ன எத்தனையோ பக்குவமாய் அவரிடம்  திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று பேசியிருக்கிறார். யார் கேட்டாலும் ஒரு புன் சிரிப்பு மட்டுமே பதிலாக வரும் அவரிடமிருந்து. மற்றபடி அமைதியாகத்தான் இருப்பார். எதுவும் பதில் பேச மாட்டார்.

வளையமாதேவி பெருமாள் கோவிலில் ஒரு பெரிய ஷாமியானா போடப்பட்டிருந்தது. கோவில் வாயிலில் ஒரு புன்னை மரம் அதனில் ஒரு யானை கட்டப்பட்டிருந்தது. எவ்வளவோ ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தல விருட்சம் அது.  புறாக்கள் இங்கும் அங்கும்  கொள்ளையாய்ப் பறந்து கொண்டிருந்தன. சந்நிதியில் ஒரு கீற்றுக்கொட்டகை. அதன் உள்ளேதான் திருபெரும்புதூர் ஜீயர் இறங்கியிருப்பதாய்ப் பேசிக்கொண்டார்கள். நானும்  என் அப்பாவும் அம்மாவும் அந்தக்கட்டிடம் அருகே சென்றோம். எங்கும் ஒரே அமைதியாக இருந்தது. ஒரு ஐம்பது பேருக்கு ’’நாராயணா கோவிந்தா’ சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கழுத்தில் ஒரு துளசி மாலையோடு காவித்துணி போர்த்திக்கொண்ட ஒரு உடல்  ஒரு சாய்வு நாற்காலியில் அங்கே சாய்ந்த வண்ணம்  வைக்கப்பட்டிருந்தது.

‘இது என்ன விபரீதம்’

‘ஆமாம் அப்பா விபரீதம்தான்’ என்றேன்.

திருபெரும்புதூர் ஜீயர் ஸ்ரீ ஆச்சாரியன் திருவடியை அடைந்தார் என்று சன்னமான குரலில் பேசிக்கொண்டார்கள்.

‘சாயந்திரம் பட்டினப்பிரவேசம் வச்சிருக்கு.  பல்லக்கு ஒரு சகடையில வச்சி நாலு பிரதான வீதிகள்ளயும் சுத்திவரதா ஏற்பாடு. சுவாமி பல்லக்குல கால வச்சி ஏறும்போதே உக்காந்துட்டார். கைத்தாங்கலா அழைச்சிகினு வந்து சாய்வு நாற்காலில உக்கார வச்சம். கண்ண திறந்தார். மூடினார். தீர்த்தம் என்றார். ’நாராயணா நாராயணா’ சொல்லி தீர்த்தம் வாயில் விட்டோம். கண்ணு சொறுகிடுச்சி.  முடிஞ்சி போச்சு. என்ன பண்றது. மனத்த திடப்படுத்திண்டு  பெரிய மடத்துக்கு போன் போட்டு விஷயம் சொன்னோம். அங்கிருந்து   இங்கு வந்த  அதே  கார்லயே,  திருபெரும்புதூர் மடத்துக்குப்   பெரியவா சரீரத்தை அனுப்பிவைக்க சொல்லிட்டாங்க. இதுதான் எங்களுக்கு  ஜீயருக்கு  அடுத்ததா  அங்க  இருக்குறவா போட்ட  உத்தரவு. இன்னும் சித்த நாழில கார் பொறப்படும். வந்தவா  ஜாடா சேவிச்சிகணும்.’ நாராயணா கோவிந்தான்னு’ மூணு தரம் சொல்லி நமஸ்காரம் பண்ணி  சேவிக்கணும். சாஷ்டாங்க நமஸ்காரம் பஞ்சாங்க நமஸ்காரம் புருஷா பொண்டுகள் யதா சவுகரியத்துக்கு பண்ணிக்குங்க. இது ஒரு ஆசீர்வாதம்.  ஆகட்டும்  கார் பொறப்பட இருக்கு’

சொல்லி முடித்தார் வேத நாராயணப்பெருமாள் டிரஸ்டி லக்‌ஷிகாந்தன் பிள்ளை. ‘ நாராயணா கோவிந்தா’ என்று மூன்று முறை சொல்லிக் கீழே விழுந்து எழுந்தார் அக்ரஹாரவாசியான  டிரஸ்டிப் பிள்ளை.

அம்மாவைப்பார்த்துக்கொண்டேன். கண்கள் குளமாகி இருந்தது.

‘’எதோ ஒரு அதிசயம் பாக்கப்போறம் நம்மாத்துல காபி சாப்டார்  டிபன் சாப்டார் நம்மாத்து திண்ணையில படுத்துண்டு தூங்கினார். நம்ம  கொழந்தைகள் ஜாதகம் கணிச்சி குடுத்தவர். அந்த மனுஷன  பாக்கணும் . பேசணும். ஆசிர்வாதம் வாங்கிகணும்னு வந்தோமே. குடுத்து வக்கலயேடா நமக்கு’

அப்பா தரையில் விழுந்து நமஸ்கரித்தார். நானும் தான்.

அம்மா ‘பகவானே இப்பிடி பிராப்தம் இல்லாம பண்ணிட்டயே, சித்த மின்னாடி வந்தா பேசியிருக்கலாம். ஆசிர்வாதம் வாங்கியிருக்கலாமே’  சொல்லிக்கொண்டே நமஸ்கரித்தாள்.

‘நாராயணா கோவிந்தா’ மட்டும் சொல்லணும்.

வேகமாகச்சொன்னார் கோவில் டிரஸ்டி.

‘எல்லாரும் வெளில,   இப்பவே வெளில வந்துடுங்கோ’ கட்டளை வந்து கொண்டிருந்தது.

’சரீரத்த கார்ல எடுத்துண்டு இரு நூறு கிலோமீட்டர் போயாகணும். யாத்ராதானம் பண்ணி,  கார நகத்தணும்’ சொல்லிய சிதம்பரம்  மேலப்புதுத்தெரு வாத்யார்  சுயமாச்சாரியார் தனது சடங்குகளை ஆரம்பித்தார்.

‘இதராள் இங்க யாரும் இருக்கப்பிடாது’ என்றார் அவர்.’

’பெருவரப்பூர் அய்யங்கார்   தப்பு தப்பு  திருபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள், ஸ்தூல சரீரத்த  பெஞ்சில   படுக்க  வைக்கமாட்டாளா’ அப்பாவைக்கேட்டேன்.

‘வாய மூடுடா’ என்றார் எரிந்து விழுந்தார் அப்பா.

அம்மாதான்  என்னை சமாதானப்படுத்தி  வெளியில் அழைத்து வந்தார்.

நாங்கள் மூவரும் தருமங்குடி நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

‘ஒரு பொண்ணு பாருங்க . கல்யாணம் பண்ணிகோங்க’  பெருவரப்பூர்  அய்யங்காரைப் பார்த்து ஓயாமல் சொன்ன  பண்ணை வீட்டு ஆச்சியை நினைத்துக்கொண்டே அம்மா நடக்க ஆரம்பித்தாள்.

‘ நம்ம போடறது  எல்லாம்  எப்பவும் கணக்காகாது’  அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டார்.

சரித்திரம் பேசுகிறது – யாரோ

இரண்டாம் ராஜராஜன்

இரண்டாம் ராஜராஜ சோழன் வரலாறு | RajaRaja Cholan - Ⅱ | History of Comrade |  வரலாற்று தோழன் | - YouTubeகி பி [1146-1163]

இரண்டாம் குலோத்துங்கன், கி பி 1146ல் தன் மகன் இரண்டாம் ராஜராஜனை அரசு நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புபடுத்தினான்.

கங்கைகொண்ட சோழபுரம்:

நான்கு வருடம் கழிந்தது. வருடம் 1150 ல் இரண்டாம் குலோத்துங்கன் காலமானான். இரண்டாம் ராஜராஜன் சோழநாட்டுச் சக்கரவர்த்தியாக முடிசூடினான். பரகேசரியானன். ராஜராஜனுடைய கல்வெட்டுகளில் அடங்கியுள்ள பல மெய்க்கீர்த்திகள் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி ஒரு செய்தியும் சொல்லாததால், இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியைப் போலவே, இரண்டாம் ராஜராஜனின் ஆட்சியும் பொதுவாக அமைதியாகவே இருந்தது.

அமைதியாக இருந்தால் நல்லது தானே என்று நீங்கள் எண்ணுவது சரிதான். இருந்தாலும், அமைதிக்கு விலை உண்டு. அதை வரும் அத்தியாயங்களில் காண்பீர்கள்.

பொதுவாக அமைதியாக இருந்தது என்றாலும், இந்த இரண்டு போர்களைப்பற்றி விபரங்கள் கிடைக்கிறது.

இரண்டாம் ராஜராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கயாகப் பரணி சொல்கிறது. சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக இராசராச உலா கூறுகின்றது. இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்தது. சோழர் படைகளை ‘பல்லவராயன் பெருமான் நம்பி’ என்ற சேனாதிபதி தலைமை தாங்கிச் சென்று, போரை வென்றான்.

சேரர்களைப் போலவே பாண்டியர்களும் கப்பம் கட்ட மறுத்து, சுதந்திர வேட்கை கொண்டு புரட்சி செய்ய ஆரம்பிக்கும் நேரம், ‘பெருமான் நம்பி பல்லவராயன்’ தலைமை தாங்கிய சோழர் படை பாண்டிய தேசத்தையும் வென்றது.

காவிரி பிரச்சனை:

“சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்”

-இராசராச சோழனுலா

காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இது போலும். (இங்கு நாம் அரசியல் பேசவில்லை. சரித்திரம் தான் பேசுகிறோம். ஆகவே அமைதியுடன் மேலே படிக்கவும்). மேற்கு மலைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதியை, சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து, சோழன் படை எடுத்து சென்று பகையை வென்று காவிரியை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான்.

சமயக்கொள்கை: தந்தை, தில்லையிலிருந்த திருமாலை அலைகடலில் கிடத்தியமை பற்றி வருத்தமுற்று இருந்த வைணவர்கள் மனக்கிலேசம் தீரும் பொருட்டு வைணவத்தலங்களுக்கு சேவை புரிந்தான். வைணவர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் உள்ளங்குளிரச் செய்தான். “விழுந்த அரி சமயத்தை மீளவெடுத்தனன்” -என்று இவனை இவன் மெய்க் கீர்த்தியில் பாடியுள்ளனர்.

அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர். அவர் முதுகிழவர். ராஜராஜனின் தாத்தா விக்கிரமசோழர் காலத்திலிருந்து அரசவைப் புலவராக இருந்தார். ‘விக்ரம சோழ உலா’ பாடினார். பின்னர் இரண்டாம் குலோத்துங்கனின் அரசவைப் புலவராக இருந்தார். ‘குலோத்துங்க சோழ உலா’ பாடினார். பின்னர் நமது இரண்டாம் ராஜராஜனின் அரசவைப் புலவராக இருந்தார். ‘ராஜராஜ சோழ உலா’ பாடினார். இப்படி உலா பாடியே உளைத்துப்போனார் போலும்! இப்படிப் பாடிய மூன்று உலாக்களும் சேர்ந்து ‘மூவர் உலா’ என்று வழங்கப்பட்டது.

புலவர், மூன்று அரசர்களுக்கும் தமிழ் கற்றுக்கொடுத்தார். ராஜராஜனும் அவரிடம் தமிழ் கற்று, பாண்டித்யம் பெற்றான். ராஜராஜனின் மெய்க்கீர்த்தி அவனை, ‘முத்தமிழுக்குந் தலைவன்’ என்றும் ‘இராச பண்டிதன்’ எனவும் குறித்தது. அவனுக்கு வடமொழியிலும் பெரும் ஆளுமை இருந்தது. ஒட்டக்கூத்தர், முதுமையால் உடல் தளர்ந்திருந்தாலும், அறிவால் தளராமல், ‘ராஜராஜ சோழ உலா’ பாடினார். அது ராஜராஜபுரத்தில் அரசவையில் அரங்கேறியது. (ராஜராஜபுரம் என்பது பழையாறைக்கு – மன்னன் இட்ட புதுபெயர். அது இரண்டாவது தலைநகராக இருந்தது). அரங்கேறிய பாடல்களைக் கேட்டு மன்னன் பெருமகிழ்வெய்தினான். ஒவ்வொரு கண்ணிக்கும், ஓராயிரம் பொன் பரிசில் வழங்கி, அந்நூலை ஏற்றுக்கொண்டான்.

ஒட்டக்கூத்தரின் பேரனான ‘கவிப்பெருமாள் ஆனந்த வரதக் கூத்தன்’, ‘சங்கர சோழன் உலா’ ஒன்றை இராசராசன் மீது பாடினான். அவனுக்கு எத்தனை பொன் கிடைத்தது என்பது பற்றித் தகவலில்லை!

ராஜ ராஜேஸ்வரம் :

தாராசுரம் - தஞ்சை :: Behanceதன் தந்தையை போல் சிவபக்தனாகிய இரண்டாம் ராஜராஜன், போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்தான். தனது சிவ பக்தியை வெளிப் படுத்தும் வண்ணம் ராஜராஜேஸ்வரம் என்னும் கோவிலைக் கட்டினான். தென்னகத்தின் சிறந்த கலைக் கோவில்களில் ராஜ ராஜேஸ்வரமும் ஒன்றாகும். Darasuram airavatesvara temple in tamil,ஐராவதீஸ்வரர் கோயிலும்:  மறைந்திருக்கும் அதிசயமும்! - darasuram airavatesvara temple in tamil -  Samayam Tamilஅது கலைகளின் சொர்க்க புரியாக திகழ்ந்ததாக ஒட்டக்கூத்தர் தனது உலாவில் பாடி உள்ளார். அனைத்து நாயன்மார்களின் சரித்திரத்தையும் இக்கோவிலில் அவன் வரைவித்தான். இந்த ராஜராஜேஸ்வரம் பெயர் திரிந்து இன்று தாராசுரம் என்றழைக்கப்படுவதாகச் சொல்வர். இது இன்றைக்கும் மிகச் சிறந்த களைப் பொக்கிஷம் நிறைந்த கோவிலாகக் கருதப்படுகிறது.  

முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப்பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. போசளர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. பேரரசுக்குள் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாறுதல், ஆங்காங்குள்ள குறுநில மன்னர்கள் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் விரிவடைந்து தலைதூக்கியது ஆகும்.

இந்தக் காரணங்களால், முதலாம் ராஜராஜனாலும் அவனுடைய பின்னோர்களாலும் பாடுபட்டு, திட்டமிட்டு, உறுதியுடன் அமைக்கப்பட்ட ‘மைய அரசு’ என்ற நிர்வாக கட்டுகோப்பு, இருந்த இடம் தெரியாமல் சிதைந்துவிட்டது.

நம்  ராஜராஜனின் ராணிகளைப்பற்றி சில வார்த்தைகள்:

மன்னனுக்கு 4 மனைவிமார்கள் இருந்தனர். புவன முழுதுடையாள், தரணி முழுதுடையாள், அவனி முழுதுடையாள், தென்னவன் கிழானடி. இவைகள் பட்டப்பெயர்களே.

இதில் பட்டத்து ராணி: புவன முழுதுடையாள்.

பதினேழு ஆண்டுகள் ஆண்ட, இரண்டாம் ராஜராஜன் தனது முடிவு வருங்கால், ஒரு பிரச்சினை எழுந்தது. சோழநாடு அதுவரை சந்திக்காத போர்களை சந்தித்தது. அது என்ன பிரச்சினை? பிறகு என்ன ஆயிற்று?அந்த நிகழ்வுகள்..

விரைவில்..

 

 

 

 

இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா ? ஜி பி சதுர்புஜன்

 

புத்தகம் :  MAHA PERIYAVA PORTRAITS ( ENGLISH)

எழுதியவர்: T.S.Narayanaswamy

Designed & Printed by: Compuprint, Chennai

பக்கம் 125   விலை : குறிப்பிடப்படவில்லை

 

      இந்த விலைமதிப்பில்லாத புத்தகத்தை  எனக்கு அன்பளிப்பாக வழங்கிய என் நண்பர் – பிட்ஸ் – பிலானி சென்னை அலுமினி அசோசியேஷனின் நாடித்துடிப்பு மற்றும் ஆல்ஃபா ரப்பர் கம்பெனியின் தலைவர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு முதலிலேயே என் நன்றியை தெரிவித்து விடுவதுதான் முறையாக இருக்கும் .

 டி. எஸ். நாராயணஸ்வாமி அவர்கள் யூனிகார்ட்  குழுமத்தின் தலைவர். பாரம்பரியம் மிகுந்த கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததனால் எழுத்திலும் சித்திரங்கள் தீட்டுவதிலும் சிறு வயதிலி ருந்தே இவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது .இவருடைய மாமா புகழ்பெற்ற எழுத்தாளர் பரணீதரன் தந்த ஊக்கத்திலும் வழிகாட்டலிலும் தொடர்ந்து இந்தத் திறமைகள் இவரிடம் பளிச்சிட்டன. சென்னையில் நடந்த இவருடைய சித்திரக் கண்காட்சி பலருக்கும் இவரை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பல துறைகளில் இவரே “குருசமர்ப்பணம்”, “பரமாச்சார்யா”, “ஆச்சார்யா” போன்ற விருதுகளை ஏற்படுத்தி மற்றவர்களை கௌரவப்படுத்தி இருக்கிறார்.

   ஆனால் இவை எல்லாவற்றையும் விட காஞ்சி மகா பெரியவரிடம் இவருக்கு ஏற்பட்ட அபரிமிதமான பக்தி, நாராயண ஸ்வாமியை பெரியவரை பல கோணங்களில் படங்கள் வரைய ஊக்குவித்தது. இவருடைய மகா பெரியவா சித்திரங்கள் ஒவ்வொன்றும்  விசேஷமான, வித்தியாசமான முக பாவனைகளையும் மௌன மொழிகளையும் சித்தரிக்கின்றன.

   இந்த புத்தகத்தில் எழுத்து என்பது மிகக் குறைவு. அதனால், நீங்கள் படிப்பதற்கு விஷயம் என்று அதிகமாக இல்லை. ஆனால், பார்த்து  மகிழ்வதற்கு, பார்த்து வணங்குவதற்கு, பார்த்து பரவசப்படுவதற்கு பக்கம் பக்கமாய் பல சித்திரங்கள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

  பின்னட்டையில் கார்ட்டூனிஸ்ட் கேஷவ் வெங்கடராகவன்  கூறியிருப்பது முற்றிலும் சரியான கூற்று :

“Drawing Maha Periyava is a blessing. Shri.Narayanaswamy  has adapted the technological marvel, the  iPad, to draw Maha Periyava. He has mastered the techniques to get every minute detail and feel of the Mahan. Every work brings out Periyava’s divine aura, in various yogic postures, blessing us.”

    125 பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் மகா பெரியவர்r உங்களைப் பார்த்து புன்னகை செய்கிறார். கருணை மழை பொழிகிறார்.  மகா பெரியவரைத் தவிர ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், சாய்பாபா போன்றவர்களின் திவ்ய ரூபங்களும் போனஸாக இந்த புத்தகத்தில் வருகிறது.

   பார்த்து பரவசமடையவும் பரிசாகக் கொடுக்கவும் ஏற்ற பொக்கிஷம்.

 

 

 

 

 

பூதேவி – ரேவதி ராமசந்திரன்  

Accident Car Crash Scooter On Road Stock Photo 1522396226 | Shutterstock

‘சந்துரு நான் வேலையா இருக்கேன், வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்கிறது, யாருன்னு போய் பாரு’ என்று அம்மா கத்த சேவ் பண்ணிக்கிட்டு இருந்த சந்துரு வாசலில் வந்து பார்க்கிறான்.

சந்துரு வாசலுக்கு வர ஓர் ஆள் நின்று கொண்டு ‘இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கிறது, நீ கிளம்ப’ என்று சொல்கிறார்.

‘எனக்கு ஆபீiஸுக்கு நேரம் ஆகிறது, ஆனால் நீங்கள் யார் என்று தெரியவில்லையே’ என்ற சந்துருவிடம்

‘கிளம்பு, கிளம்பு, நான் யார் என்று போற வழியில தெரிஞ்சிடும்’ என்று அந்தாள் வீட்டுக்குள் வருகிறார்.

அவசரப்படுத்தி அவரைக் கூட்டிக்கொண்டு போகிறான் சந்துரு. பதட்டத்தில் வேகமாக ஸ்கூட்டரை ஓட்ட, எதிரே வந்த லாரி மோதி இறந்து விடுகிறான். அழைத்துக்கொண்டு வந்தவர் சந்துருவையும் கூட்டிக் கொண்டு மேலே போகிறார்.

‘நீ யார் என்று தெரியவில்லை, என்னை எங்கே கூட்டிக்கொண்டு போகிறாய்?’ என்று சந்துரு கேட்க,

‘நான் யம தூதன், உன்னுடைய காலம் முடிந்து விட்டது, நான் இப்போது உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்று கூறினார்.

‘எனக்கு இன்னும் பூமியில் இருக்க ஆசையாக இருக்கிறது, இப்பதான் ஆபீஸில் ப்ரமோஷன் வந்திருக்கிறது, கல்யாணத்துக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த சமயம் பார்த்து என்னை நீ கூட்டிக் கொண்டு போகிறாயே, இது நியாயமா?’ என்று சந்துரு வினவ, அவர் மேலே ஒன்றும் பேசாமல் சித்தரகுப்தனிடம் ஒப்படைத்தார்.

சித்தரகுப்தன் கணக்குப் புத்தகத்தை புரட்டிப் பார்த்து தனது தூதரிடம் ‘நீ தப்பான ஆளைக்  கூட்டிக்கொண்டு வந்துள்ளாய், இவரை மீண்டும் பூமியிலே விட்டுவிடு’ என்று கூறிய உடனே அந்த தூதரும் ஒரு சிறிய கடிகாரத்தை சந்துருவிடம் கொடுத்து

‘உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன், இந்த கடிகாரத்தை நீ கையில் கட்டிக் கொண்டால் உன் எதிராளியின் மனக்குரல் உனக்கு கேட்கும், நான் உனக்கு இரண்டு மணி நேரம் அவகாசம் தருகிறேன், எங்கே யாரிடம் செல்ல வேண்டுமோ அங்கே சென்று விடு, உனக்கு அங்கே யாராவது இடம் கொடுத்தால் நான் உன்னை விட்டு விடுகிறேன், இல்லாவிடில் நான் உன்னை மீண்டும் இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடுவேன்’ என்று சொல்லி சந்துருவை பூமியில் விட்டு விட்டார்.

சந்துரு லேட்டாகி விட்டது என்று முதலில் தனது ஆபீசுக்குச் சென்றான்.

அங்கே அவருடைய நண்பன் ‘சந்துரு கங்கிராஜுலேஷன்,  வாழ்த்துகள், உனக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது’ என்று மலர்ச்சியோடு வரவேற்றான்.

ஆனால் சந்துரு கையில் கட்டிக்கொண்டுள்ள  கடிகாரத்தினால் தன் நண்பனது மனதில் இருப்பது அவனுக்குத் துல்லியமாக தெரிந்தது.

‘நீ இதுவரை வராததால் நீ இல்லை என்று நினைத்தேன், அப்படியே செத்து தொலைத்து இருக்க வேண்டியதுதானே, எனக்கு இந்த பிரமோஷன் கிடைத்து இருக்குமல்லவா! உன்னால் எனக்கு இந்த பிரமோஷன் கிடைக்காமல் போய்விட்டது’ என்று நண்பன் மனதிற்குள் நினைத்துக் கொண்டது தெரிந்து சந்திரனுக்கு வருத்தமாக இருந்தது.

பிறகு வீட்டுக்கு வந்தால் அவன் தந்தை ‘சந்துரு எனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது, ஒரு 50 ரூபாய் தர முடியுமா?’ என்று கேட்டார்.

சந்துரு முடியாது என்று சொன்னவுடன், ‘நீ எல்லாம் எனக்கு பிள்ளையாய் பிறந்ததற்கு செத்திருக்கலாம், எனக்கு ஒரு 50 ரூபாய் கூட தர முடியாதா’ என்று மனதிற்குள் நினைத்தது இவனுக்குக் கேட்டது.

உடனே சந்துரு நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தவுடன், ‘நீ நன்றாக இருப்பாய்’ என்று கூறிக்கொண்டு அவர் கள்ளுக்கடை பக்கம் சென்றார்.

மனம் வெறுத்துப் போய் சந்துரு மேலோகத்திலேயே  இருந்திருக்கலாம், கஷ்டப்பட்டு ஆசையாகக் கீழே வந்தேனே என்று கூறிக்கொண்டு, சமையல் செய்து கொண்டிருக்கும் அம்மாவிடம் சென்றான்.

‘அம்மா நான் இறந்து விட்டால் உனக்கு எப்படி இருக்கும்?’ என்று கேட்டான்.

அதற்கு அம்மா ‘ஒருத்தருடைய பங்கு மிச்சம், வேலையும் குறையும்,  சாமானும் மிச்சப்படும்’ என்று வேடிக்கையாகச் சொன்னாள்.

‘நிஜமாகவா அம்மா!?”

‘கண்ணா, நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன்? நான் சும்மாதான் சொன்னேன், எனக்கு நீ தான் முக்கியம், என் குழந்தையான உன்னைப்  பார்க்காமல் என்னால் இருக்க முடியாது, என் காலத்தில் நீ என்னை விட்டுப் போவாய் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது, இனி இவ்வாறு பேசாதே’ என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துக் கொண்டே கூறினாள்.

அவள் மனத்திலும் இதையே நினைக்கிறாள் என்று.அப்பொழுது சந்துருக்கும் புரிந்தது இந்த உலகத்தில் தாய்மைக்கு ஈடு இணை எதுவும் இல்லை, அந்தத் தாய்மை எங்கும் எப்பொழுதும் பரவி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இந்த தாய்மார்கள்தான் உலகத்தையே தாங்கும் பூமாதேவிகள்!

                           

“மாற்றிய முடிவுகள்” மனநலன் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Mental Health Support Tips For Students In Torontoகல்லூரியில் நான் மனநல ஆலோசகராக இருந்தபோது பதினேழு வயதுடைய தாமஸ் அணுகினான். தன் விவரங்களை அளித்தான். பலமுறை தான் பரீட்சையில் தோல்வி அடையப் போகிறோமோ என்ற அச்சம் இருப்பதைக் கூறினான். வகுப்புகளுக்குப் போவதைத் தவிர்த்து விடுவானாம். இதனால் தான் என்னை ஆலோசிக்கச் சொன்னார் அவனுடைய துறைத் தலைவர்.

யாரிடமும் பேச வெட்கப்படுவதால் மிகச் சிறிய நண்பர்கள் வட்டம். இப்போதும் புது இடத்திற்குப் போக வேண்டும் என்றால் கேட்கப் பயம். தனியாகப் போகவும் தயக்கம். தங்கும் மாணவர் (விடுதி) இல்லத்தில் எல்லாம் புதிராக இருக்கிறதாம், யாரையாவது கேட்டால், ‘முட்டாள் என எண்ணிவிட்டால்?’ என்ற அச்சம்.

இந்த பாதிப்பு எல்லாம் ஏன் என விளக்கச் சொன்னேன். தந்தை டேவிட் இப்படிச் செய்தால், “நீ ஒரு loser” (எப்போதும் தோல்வி அடைபவன்) என்பாராம். முருகன் வெற்றி பெறுகிற வியாபாரி. செல்வாக்கு உள்ளவர். கண்டிப்பானவர். அவர் முன் ஏதேனும் தவறு நேர்ந்தால், தாமஸுக்கு வார்த்தைகள் சிக்கி விடும். அவருக்குக் கோபம் அதிகமாகும். இந்த நிகழ்வை மறக்கப் பல நாட்கள் ஆகும். அம்மா டயனா “நீயா இதைச் சமாளிக்கக் கற்றுக்கொள்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய விளம்பர நிர்வாகத்தில் கவனம் செலுத்துவாள். போகும் முன், தாமஸிற்கு அதிக வியர்வை ஊற்றி வாடை இருப்பதனால்  தன் மூக்கை மூடி, முகத்தைச் சுளித்துக் கொண்டே போய்விடுவாள். அவமானம் மட்டும் மிஞ்சும்.

பல செஷன்களுக்குப் பிறகு தாமஸ் இந்த சூழல்களையும் தன் வகுப்பில் நடப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தான். பெற்றோரிடம் பயத்தினாலும், தாத்தாவின் கண்டிப்பு சந்தித்ததினாலும், எந்த ஒரு அதிகாரம் செய்வோரையும் இதே உணர்வில் பார்ப்பான். இதனால் வகுப்பில் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விக்குக் கையைத் தூக்க தயக்கம். சந்தேகம் கேட்டுக்கொள்ளவும் குழப்பம். மதிப்பெண் சரிந்தது. வகுப்பிற்குப் போக உள்ளுக்குள் தடுமாற்றம்.

கல்லூரி சேர்ந்ததிலிருந்து அறையில் உள்ள மற்ற மாணவர்கள் நன்றாகப் பழகினாலும் தன்னை ஏதோ தடுக்கிறது என்றான். ஞாயிற்றுக்கிழமைகளில் விடுதியில் இரவுச் சமையல் கிடையாது. எல்லோரும் ஏதேனும் வாங்கிக் கொள்வார்கள், அல்ல வெளியே போய்ச் சாப்பிடுவார்கள். தாமஸைத் தவிர. பட்டினியாக இருப்பானாம்.

அடுத்த செஷனில் இதை எடுத்துக் கொண்டோம். பல செஷன்களுக்குப் பின், தன் நிலையை அசை போடுவதால் வரும் சிந்தனைகள், எதிர்மறை எண்ணங்கள், வளர்ந்த சூழல் இவற்றினால் பதட்டம் அச்சம் தயக்கம் இவை உருவாகியுள்ளது என்று தாமஸ் அடையாளம் கண்டுகொண்டான்.

வகுப்பிற்குப் போய் வரும் போது தன் மனம் சொல்லும் சொற்கள், வரும் சிந்தனைகள், நிகழ்ச்சிகள், நபர்களை இவற்றை நினைவு வைத்துக்கொள்ளப் பரிந்துரைத்தேன். தாமஸ் இதை நான்கு வாரத்திற்குச் செய்த பிறகுத் தன் கடந்த வாழ்நாட்கள், தன்னை பாதித்த நிகழ்வுகள் இவற்றைப் பற்றி எழுதச் சொன்னேன். மடமடவென்று இருபதுக்கும் மேலான விஷயங்கள் குவிந்தது. எல்லாம் சோகம், துன்பம். ஒரே ஒரு சந்தோஷம், ஆசிரியர் தியாகராஜன் ஒருமுறை ஊக்குவித்தது. இது மன அழுத்தத்தில் சேராது.  வீட்டில் அனுபவித்த கண்டிப்பு, அவதூறு சொற்களினால் தாமஸ் தன் சுய மதிப்பீட்டை மிகக் குறைவாகக் கணித்தான்.

இதை மாற்ற, பெற்றோரை வரப் பரிந்துரைத்தேன். வந்தார்கள். செஷன் முடிவில், தாமஸ் ஒரு “loser”, அவனுக்கு நேரம் தர முடியாது என்று இருவரும் சென்று விட்டார்கள். வேறு வழியை வகுத்தேன்.

கல்லூரி ஆசிரியர்களின் மனநலத் திறன்களை மேம்படுத்தப் பல பயிலரங்கங்கள் போய்க்கொண்டு இருந்தன. முதல் கட்டத்தில் கல்லூரி அதிபரும், மாணவர்களுடன் நல்ல உறவு இருக்கும்  சில ஆசிரியர்களும் இவற்றில் பங்கு கொண்டார்கள். மனநல அம்சங்களை அறிமுகப்படுத்தி வழிமுறைகளைப் பயில்வதே இவற்றின் குறிக்கோள். மேற்கொண்டு தாமஸிற்கு இவர்களை உபயோகிக்க முடிந்தது.

தாமஸைப் பற்றி மேலோட்டமாகத்தான் விவரித்தேன், ஏனெனில் எங்களை அணுகுவோரின் அந்தரங்கங்களை யாரிடமும் பகிர மாட்டோம். தாமஸின் வகுப்பு ஆசிரியர் மற்றும் விடுதிக்காப்பாளர் இவர்களைச் சேர்த்துக்கொண்டேன். இருவருக்கும் தாமஸின் சுய உரையை மாற்ற உதவ வேண்டும் என்ற புரிதல் இருந்தது, செயல்படுத்தத் துவங்கினார்கள்.

தாமஸை தன்னுடைய இப்போதைய வாழ்வின் பக்கங்களை சிறிது சிறிதாகப் பிரிக்கச் செய்தேன். நண்பர்கள், வகுப்பு, சாப்பிடும் இடம், தங்கும் இடம், போய் வரும் வழி என்று எல்லாவற்றிலும் பயம் என்ற நூலிழை இணைந்திருந்தது.

ஒரு சிறிய முயற்சி. என் அறைக்கு வருவதற்குப் பல வழிகள் இருந்தன. தாமஸ் நேராக வரும் பாதையை மட்டுமே உபயோகிப்பான். இதற்குப் பதில் வழியை மாற்றி மாற்றி வரச் சொன்னேன். கல்லூரியின் அமைப்பின் வரைபடம் இருந்தது, ஆண்டுக் குறிப்பேடும் உதவிக்கு உள்ளது. அதை மீறியும் வழி தெரியாவிட்டால் எவரிடமாவது கேட்கவேண்டும். முதல் இரண்டு வாரம் வேர்வை ஊற்றிய உடை அவன் தவிப்பைத் தெரிவித்தது. புகழ வேண்டும், விடாமுயற்சியுடன் செய்ததை. சொன்னவுடன் மேலும் மனதை வைத்துச் செய்தான். ஓரிருவரிடம் கேட்டான்.

இதற்குப்பின் அறையில் இருக்கும் மாணவர்களிடம் கேட்க, மேலோட்டமாகப் பேச, காலை மாலை வணக்கம் கூற என்று ஆரம்பமானது. இப்போது தாமஸ் தனக்கே தினம் மாலை தூங்கும் முன் ஒரே ஒரு சபாஷ் தர வேண்டும், ஒரு முறை மட்டுமே. இப்படி இருப்போருக்குப் பெரும்பாலும் கடினமானது தனக்குத் தானே சபாஷ் சூட்டிக்கொள்வது. பல வாரங்களுக்குச் சபாஷ் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை என்றான். பிறகு வந்தது, வகுப்பில் ஒருவருக்கு எதையோ விளக்கினான் என்று. மெதுவாக இது நீண்டியது, தனக்கு சபாஷ் சொல்வதும்.

ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் தாமஸிற்கு நிபந்தனையற்ற முறையில் (அதாவது முயற்சி, வெற்றி எனப் பாராமல்) நற்சொற்கள் சொல்வதின் உபயோகத்தைக் குறிப்பிட்டேன். ஆசிரியர்கள் செய்ய, இருமுறை தாமஸ் முயல்வதைப் பற்றி அவர்கள் பேசியது அவனை மிகவும் ஊக்குவித்தது.

இப்போது, ஞாயிற்றுக்கிழமை இரவு உணவிற்கு எவ்வாறு செய்ய என்று தாமஸைத் தீர்மானித்துக் கொள்ளச் சொன்னேன்.  இதற்கு, நட்பு தேவை என்று புரிய,  முதலில் அறையில் உள்ளவர்களில் ஒருவர், பிறகு நால்வருடனும் சேர்ந்து கொள்ள, நட்பு வளர்ந்தது. எந்த ஒரு தயக்கம் இல்லாமல் அவர்களுக்கு அவன் உதவிகள் செய்வது மேலும் அவர்களை இணைத்தது.

உணவிற்குச் சிலமுறைத்  தனியாகவும் செல்ல வேண்டும் என்று அமைத்தேன். முதல் முறை சென்று சற்று தவித்த பிறகு, உதவி கேட்க முடிந்தது. இதைப்பற்றி தற்செயலாகப் பகிர வைத்தேன். இதுபோல முன்பின் தெரியாத நபர்களிடம் பேச, பல இடங்கள் போக, இதைப்பற்றி அறிவதற்கு தன் வகுப்புக்கு அப்பால் உள்ள சில புத்தகங்களைப் படிக்க வைத்தேன். கண்ணோட்டம் விரிந்தது. விளையாட்டையும் சேர்க்க, உடல் நலம் கூடியது.

இப்போதைய படிப்பு அப்பாவால் முடிவு செய்யப்பட்டது. தாமஸிற்குக் கட்டிடக்கலையில் மிக்க ஆர்வம் உண்டு. கல்லூரியில் உள்ள அந்தத்துறை ஆசிரியர்களுடன் கலந்து பேசி, அவர்கள் தங்கள் புராஜக்ட்களில் இவனை உபயோகிக்கக் கேட்டுக் கொண்டேன். முன்வந்தார்கள். தாமஸின் ஆர்வம், எளிதாக வடிவமைப்பதைப் பார்த்து வியந்தார்கள். தாமஸ் மெதுவாக மாறுவதை அவனும் அடையாளம் கண்டுகொண்டான். ஆசிரியர்களும் அவன் முயற்சிகளை, மற்றவர்களுக்கு உதவும் தன்மையைப் பாராட்டினார்கள். தாமஸின் செஷன்கள் படிப்படியாக முடிந்தது.

*****************************************

 

கல்லுளி மங்கா-எஸ்.எல். நாணு

கணபதிக்கு அரசமரத்தடி, 41% OFF“என்னலே.. நல்லாத் தூங்கினியா? உனக்கென்ன? சிலுசிலுன்னு மலைக் காத்து.. வவுறுமுட்ட சோறு.. உண்ட மயக்கத்துல குளிர்வாடை அசத்த தும்பிக்கையை மடக்கி வெச்சுப்புட்டு நல்லாத்தான் தூங்கியிருப்பே.. ஆனா எனக்குத்தான் நேத்து ராவு முளுக்க தூக்கமே வரலை.. ஏன்னு தெரியலை.. மனசுல ஒரே கலக்கம்.. எலே.. என்ன நா பாட்டு பொலம்புதேன்.. நீ எங்கனயோ பராக்கு பார்த்திட்டிருக்கே?”

தாமிரபரணியில் முங்கி எழுந்து ஈரத்துணியுடன் ஒரு கையில் குடத்து நீரையும் இன்னொரு கையில் அலுமினியத் தூக்கையும் சுமந்தபடி வந்து வயக்காட்டுப் பிள்ளையாருக்கு நீர் அபிஷேகம் செய்துக் கொண்டிருந்தான் ஆதிமூலம். இது அவன் தினமும் செய்வதுதான். தரிசு நிலத்தையொட்டியிருந்த பிள்ளையாரை ஊரில் யாரும் சீந்துவார் கிடையாது. ஆனால் ஆதிமூலத்துக்கு மட்டும் அவனுடைய சிறுவயதிலிருந்தே அந்த தும்பிக்கையான் மீது ஏனோ அசாத்திய ஈடுபாடு. இவ்வளவுக்கும் அரசமரத்தடியில் சிக்கனமாக கருங்கல்லினாலான இரண்டடி விக்கிரகம்தான்….

அங்கு எப்போது அந்த பிள்ளையார் முளைத்தார் என்று ஆதிமூலத்துக்குத் தெரியாது.. அவன் தாத்தா காலத்திலிருந்து இருப்பதாக அவன் அப்பா எப்போதோ சொல்லக் கேட்டிருக்கிறான். ஒரு சித்தர் பிரதிட்சை பண்ணின பிள்ளையார் என்று கூட அவர் சொன்னதாக ஞாபகம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஆதிமூலம் சிந்தித்ததில்லை. அவனைப் பொறுத்தவரை இந்த வயக்காட்டுப் பிள்ளையார்தான் அவன் குலச்சாமி, வானம் பார்த்திருக்கும் பிள்ளையாருக்கு ஒரு கூரை கட்ட வேண்டும் என்பது அவனுடைய நீண்ட நாள் இமாலயக் கனவு.

அபிஷேகம் முடிந்து அரச மரக்கிளையில் முந்தய நாள் காய வைத்திருந்த துணியின் முடிச்சை அவிழ்த்து எடுத்து பிள்ளையாரின் மேனியில் படிந்திருந்த ஈரத்தை மெதுவாக ஒற்றி எடுத்தான். இன்னொரு கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்திருக்க வேண்டிய துணியை பிள்ளையாரின் இடுப்பைச் சுற்றி வஸ்திரமாக்கினான். பக்கத்தில் கொட்டாங்குச்சியிலிருந்த திருநீரை தானும் நெற்றியில் பூசிக்கொண்டு பிள்ளையாரின் நெற்றியிலும் அப்பினான். இன்னொரு கொட்டாங்குச்சியிலிருந்த குங்குமமும் பிள்ளையாரின் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு வட்டமிட்டது.

விளக்கு ஏற்ற வசதி கிடையாது. சூடனும் கிடையாது. தரிசு நிலத்தில் முளைத்திருந்த புல்லைத்தான் பிள்ளையாருக்கு புஷ்பமாக அர்ப்பணிப்பான்.

தூக்கில் கொண்டு வந்திருக்கும் கஞ்சியோ இல்லை பழைய சோறோ.. அதுதான் பிள்ளையாருக்கு நிவேதனம்.

“சாப்பிடுலே.. நல்லாச் சாப்பிடு.. சோலி முடிஞ்சு போய் எதையாவது ஆக்கி நா எடுத்தாரதுக்குள்ள பொழுது சாஞ்சுரும்.. பசி தாங்க மாட்டே.. இப்ப நல்ல சாப்பிட்டுக்க”

மூடியைத் திறந்து தூக்கை பிள்ளையாரின் வாய்க்கு அருகில் கொண்டு செல்வான். அப்படிச் செய்தால் பிள்ளையார் சாப்பிடுவது போல் அவனுக்கு திருப்தி..

அதன் பிறகுதான் தன் வேட்டியைக் காயப்போட்டு இடுப்பில் துண்டு சுற்றி அங்கேயே உட்கார்ந்து அவனும் சாப்பிடுவான். அதற்குள் அடிக்கிற காற்றில் வேட்டி காய்ந்துவிடும். உடுத்திகொண்டு அரிசி மண்டி வேலைக்குக் கிளம்புவான்.

ஆனால் இன்று பிள்ளையாருக்குப் படைத்த பிறகு அவனுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. மனதில் ஏதோ ஒரு சஞ்சலம். இனம் புரியாத தவிப்பு.

அப்படியே பிள்ளையாரின் காலடியில் உட்கார்ந்தான்..

“ம்.. என்னன்னு தெரியலை.. மனசு கிடந்து இப்படிச் சலம்பிட்டிருக்குது.. இதப்பாரு.. எனக்குன்னு யாரும் கிடையாது.. அய்யன் ஆத்தா எல்லாரும் போய் சேர்ந்துட்டாவ.. நீதான்லே எல்லாம்.. எதுவும் ஏடாகூடமா நடக்காமப் பார்த்துக்க”

அவனையறியாமல் கண்களில் நீர் திரண்டது.

”ஆதி”

குரல் கேட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினான். அரிசி மண்டியில் அவனுடன் வேலை பார்க்கும் எசக்கி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தான்..

“ஏன்வே.. எதுக்கு இம்புட்டு அவசரமா ஓடியாரே? முதலாளி கூப்பிட்டாராக்கும்”

எசக்கி தன்னைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு..

”இல்லை ஆதி.. விசயமே வேற.. இந்த தரிசு நிலத்த துபாய் பாய் ஒருத்தர் விலை பேசி வாங்கிப்புட்டாராம். இது விவசாயம் பண்ண லாயக்கில்லாத எடம்னு அரசாங்க நோட்டீசு வாங்கியிருக்கானுக.. இங்கிட்டு பெரிசா தொழிற்சாலையோ என்னவோ கட்டப்போறானுகளாம்..”

“நெசமாலுமா?”

“ஆமாவே.. ஊர் பெரிசும் கவுன்சிலர் தாமுவும் பேசிட்டிருந்ததை காதுபட கேட்டுப்புட்டுத்தானே வாரேன்.. தரிசு நிலம் ஆறு ஏக்கரைச் சுத்தி சுவர் எழுப்பப் போறானுகளாம்.. சுருக்கா வேலை ஆரம்பிக்கப் போவுதாம்.. அவுங்க பேசினதைப் பார்த்தா.. உன்னோட இந்த பிள்ளையார் சாமிய பேர்த்துப்புடுவானுக போல.. ஏன்னா இதுவும் தரிசு நிலத்தைச் சேர்ந்தது தானே?”

இதைக் கேட்டு ஆதிமூலத்துக்கு கதிகலங்கியது.

“என்ன.. என் பிள்ளையாரை பேர்த்துப்புடுவாவளா? என்னவே சொல்லுதே?”

“அவுங்க பேசினததானே சொல்லுதேன்.. பாய் ஆளுங்களை வெச்சு கமுக்கமா பத்திரப் பதிவெல்லாம் பண்ணிப்புட்டாராம்.. இன்னும் ஒண்ணு ரெண்டு நாளுல சோலிய ஆரம்பிக்க ஆளுங்க..”

எசக்கி முடிப்பதற்குள் ஆதிமூலம் பதட்டத்துடன் எழுந்தான்.

அவனுடைய பிள்ளையாரை பெயர்த்தெடுக்கப் போகிறார்களா? ஓ. இதனால் தான் நேற்றிலிருந்து அவனுடைய மனது சங்கடப்பட்டதோ?

உடனே பிள்ளையாரைப் பார்த்து..

”கூடாது.. என் குலச்சாமி நீ.. இங்கிட்டிருந்து உன்னை நகர்த்தக் கூடாது.. உனக்குக் கூரை கட்டணும்லே.. என்ன.. இம்புட்டு நடக்குது.. பார்த்திட்டு சும்மா இருக்கே.. ஏதாவது பண்ணுலே..”

பிள்ளையார் வழக்கம்போல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆதிமூலம் ஊர் பெரியவர் வீட்டுக்கு ஓடினான்..

“ஆமா ஆதி.. தரிசு நிலம்.. அரசாங்கத்துக்கு சொந்தம்.. ஆளைப் பிடிச்சு பாய் வாங்கிப்புட்டார்.. என்ன பண்ணச் சொல்லுதே? வேணும்னா ஒண்ணு பண்ணுதேன். உன் புள்ளையாரை சேதப்படாம எடுத்துத்தாரச் சொல்லுதேன்.. நீ வேற எங்கிட்டாவது வெச்சுக்க”

ஆதிமூலத்தின் மனம் இதற்கு ஒப்பவில்லை.

“என்ன இப்படிச் சொல்லிட்டீக? எத்தனை வருசமா அந்த மரத்தடில இருக்காரு என் குலச்சாமி. இப்பப் போய் எடத்த மாத்துன்னு சொன்னா எப்படி? வேணும்னா அரச மரத்துக்கு முன்னால வரைக்கும் அவுக தடுப்புச் சுவரு கட்டிக்கட்டும்”

“உகும்.. அது முடியாதுலே.. அதைத் தாண்டியும் தரிசு நிலம் இருக்குது.. அங்கிட்டுத்தான் மதிற்சுவரு வரும்.. அதனால நீ பிள்ளையாருக்கு வேற எடம் பார்க்கறதுதான் நல்லது”

இதற்கு மேல் இவரிடம் பேசிப் பயனில்லை என்று ஆதிமூலத்துக்குப் புரிந்தது.

அன்று அவன் வேலைக்குப் போகவில்லை. பித்து பிடித்தது போல் பிள்ளையாரையே சுற்றி சுற்றி வந்தான்.

நடுவில் எசக்கி வந்து அழைத்துப் பார்த்தான். ஆனால் ஆதிமூலம் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இரவு முழுவதும் பிள்ளையாரின் கால்களைப் பற்றியபடியே தலை சாய்ந்திருந்தான்.

மறுநாள் முதலில் இரண்டு ஜீப்புகள் வந்தன. அதிலிருந்து சிலர் கையில் காகிதங்களுடன் இறங்கினர். பின்னாலேயே நான்கைந்து லாரிகள்.. செங்கல், சிமெண்ட், மணல் லோடுகளுடன்..

ஜீப்பிலிருந்து இறங்கியவர்களில் கொஞ்சம் குள்ளமாக பருமனாக இருந்தவர்தான் எஞ்சினியர் சிவபாலன். வரைபடத்தைப் பிரித்து ஆராய்ந்தார். அந்த இடத்தை பார்வையாலேயே நோட்டம் விட்டார். பிறகு தனது உதவியாளர்களை அழைத்து வரைபடத்திலிருந்த நான்கு திக்குகளையும் காட்டி உத்தரவு பிறப்பிக்க அவர்களும் உடனே கையில் அளவு டேப்பை எடுத்துக் கொண்டு வேலையில் இறங்கினர்.

முதலில் பிள்ளையார் இருந்த அரச மரத்தடி பக்கம்தான் வந்தனர்.

ஆதிமூலம் அவர்களை மிரட்சியோடு பார்த்தான்.

“என்ன.. என்ன பண்ணப் போறீய?”

அவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் இடத்தை ஆராய்ந்தனர்.

ஆதிமூலம் பொறுமை இழந்தான்.

“கேக்கேன்ல.. என்ன பண்ணப் போறீய?”

உதவியாளர்களில் கொஞ்சம் அனுபவஸ்தர் போல் தெரிந்தவர்..

“சுவரு கட்டணும்ல.. அதான் அளந்து எல்லைக்கோடு போடணும்”

ஆதிமூலம் கெஞ்சும் குரலில்..

“சாமி.. தர்மதுரை.. தயவு பண்ணுங்க.. இந்த அரசமரம்.. இதுக்கு அங்கிட்டு நீங்க என்ன வேணா பண்ணிக்குங்க.. ஆனா இந்த அரச மரத்தையும் அதுல இருக்கற என் குலச்சாமி பிள்ளையாரையும் விட்டுருங்க.. வேணும்னா அதைச் சுத்தி சுவர் எழுப்பிக்குங்க..”

அந்த உதவியாளர் இவனை அலட்சியமாகப் பார்த்து..

“மொதல்ல இந்த மரம் இங்கிட்டு இருக்கப் போவுதான்னு பார்ப்போம்”

இதற்குள் அரிசி மண்டியில் வேலைபார்க்கும் மற்றவர்களிடம் எசக்கி விஷயம் சொல்ல அவர்கள் ஆதிமூலத்துக்கு ஆதரவாக வந்து சேர்ந்தார்கள். ஆதிமூலத்துக்கு அரசமரத்தடி பிள்ளையாரின் மேல் இருக்கும் பற்றைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

“முடியாது.. இந்த மரமும் இங்கிட்டுத்தான் இருக்கும்.. பிள்ளையாரும் இங்கிட்டுத்தான் இருப்பாரு”

“ஆமா.. ஆமா..”

எல்லோரும் குரல் கொடுக்கவே இரைச்சல் கேட்டு எஞ்சினியர் தனபாலன் அங்கு வந்தார்.

”என்ன பிரச்சனை?”

“இங்கிட்டு சுவர் எழுப்பக்கூடாதாம்.. பிரச்சனை பண்ணுதாக”

உடனே ஆதிமுலமும் மற்றவர்களும்..

“ஆமா.. இந்த மரத்தையும்.. அதுல இருக்கற பிள்ளையாரையும் தொட விடமாட்டோம்”

சிவபாலன் கொஞ்சம் பதட்டமானார்.

“இதப்பாருங்க.. இந்த எடம் பாய்க்கு சொந்தமானது. அதுல நீங்க உரிமை கொண்டாட முடியாது”

“நாங்க ஏன்வே உரிமை கொண்டாடுதோம்? என் பிள்ளையாருக்கு விட்டுக்கொடுங்கன்னுதானே சொல்லுதேன்”

“அதெல்லாம் முடியாது.. மொதல்ல எடத்தைக் காலி பண்ணுங்க”

ஆதிமூலமும் நண்பர்களும் அந்த இடத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்தார்கள்.

சிவபாலன் யோசித்தார். அந்த ஊர் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து விவரம் சொன்னார். அவர் பாய்க்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்.

பத்தே நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் சில கான்ஸ்டபிள்களுடன் வந்து சேர்ந்தார்.

“ஒளுங்கு மரியாதையா எடத்தைக் காலி பண்ணுங்கல.. இல்ல.. ஆயுசுக்கும் ஜெயில்ல களி துண்ண வெச்சுருவேன்”

இந்த மிரட்டலுக்கு ஆதிமுலமும் நண்பர்களும் மசிவதாக இல்லை.

“எலே எழுந்திருங்கடா..”

இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள்களுக்கு சைகை காட்ட அவர்கள் ஆதிமூலத்தையும் மற்றவர்களையும் வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுக்க முயன்றார்கள்.

ஆதிமூலம் சட்டென்று எழுந்து சென்று பிள்ளையாரை கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

இந்த அமளிக்கிடையில் சிவபாலனை அலைபேசியில் பாய் அழைத்தார்.

“என்ன பிரச்சனை?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாய்.. நாங்க பார்த்துக்கறோம்”

“டே.. என்ன பிரச்சனைன்னு சொல்லு”

பாய் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஆதிமூலத்தின் அலறல் கேட்டு சிவபாலன் திடுக்கிட்டுத் திரும்பினார்.

இரண்டு மூன்று கான்ஸ்டபிள்கள் ஆதிமூலத்தின் கைகளைப் பிடித்து முறுக்க அவன் வலி பொறுக்க முடியாமல் அலறியபடி எழுந்தான்.. ஒரு கான்ஸ்டபிள் அவனுடைய நீண்ட தலை முடியைப் பிடித்து வேகமாக இழுக்க. ஆதிமூலம் நிலை தடுமாறி கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் அங்கிருந்த பெரிய கல்லில் அவன் தலை மோத உடனே ரத்தம் பீறிட்டது.. ஆதிமூலம் மூர்ச்சையானான்..

சிவபாலன் பதறியபடி வந்து..

“ஐயையோ.. என்ன பண்ணிட்டீங்க.. பிரச்சனை ஆயிரும் போலருக்கே”

இன்ஸ்பெக்டர் அவரை அடக்கி..

“எதுவும் ஆவாதுவே.. நாங்க இருக்கோம்ல?”

உடனே ஆதிமூலத்தை ஜீப்பில் ஏற்றி அங்கிருந்த டிஸ்பென்சரிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே ஏனோதானோவென்று முதலுதவி அளித்து உடனே டவுன் ஆஸ்பத்திருக்கு அழைத்துச் செல்லும்படி கூற டவுன் ஆஸ்பத்திரியை அடையும்போது ஆதிமூலம் நினைவிழந்திருந்தான்.

ஆஸ்பத்திரியில் அவன் மறுபடியும் கண்விழித்த சமயம் எசக்கி அங்கு வந்தான்.

”ஆதி.. ஆதி.. கண்ண தொறந்துட்டியால?”

ஆதி புரியாமல் விழித்தான்.

“ஏன்.. நான் கண் தொறந்தா என்ன?”

“எலே.. அன்னிக்கு அந்த போலீஸ்காரர் உன்னைத் தள்ளி விட்டு உனக்கு மண்டைல அடிபட்டு.. எட்டு மாசமா கண்ணு தொறக்காம மயக்கத்துல கெடந்தே.. இன்னிக்குத்தான் முழிச்சிருக்கே”

ஆதிமூலம் கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததை யோசிக்க முயற்சி செய்தான்.

“எசக்கி.. அப்ப என் பிள்ளையார்.. எனக்கு அங்க போகணும்.. உடனே கூட்டிட்டுப் போ”

டாக்டரின் அனுமதியுடன் ஆதிமூலத்தை அழைத்துச் சென்றான் எசக்கி.

தரிசு நிலத்தைச் சுற்றி பெரிதாக மதிற்சுவர் எழும்பியிருந்தது. ஆதிமூலத்துக்கு மனது கனத்தது.

ஆனால் அது .. அது என்ன..

ஆதிமூலம் பரபரப்புடன் முன்னால் நடந்தான்..

அந்த அரச மரம் அப்படியே இருந்தது. ஆனால் அவனுடைய குலச்சாமி பிள்ளையார்..

அதே இடத்தில் சின்ன கோவிலுக்குள் உட்கார்ந்திருந்தார்..

பளிச்சென்று திருநீறு.. புது வஸ்திரம்.. திரி விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது..

ஆதிமுலம் புரியாமல் எசக்கியைப் பார்த்தான்.

“எல்லாம் அந்த துபாய் பாயோட உபயம்லே. எஞ்சினியர் உன்னைப் பத்தி சொன்ன உடனே பாய் இந்த எடத்தைத் தொடக்கூடாதுன்னு சொல்லிப்புட்டாராம். அதோட பிள்ளையாருக்கு சின்னதா ஒரு கோவிலும் கட்டச் சொல்லி நெதம் நெதம் பூசை பண்ண ஒரு சாமியையும் ஏற்பாடு பண்ணிப்புட்டாரு.. அதுக்குண்டான செலவையும் அவர்தான் கொடுக்கறாரு”

“நெசமாலுமா?”

“ஆதி.. ஒண்ணு நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன்.. இந்த சாதி மத வேறுபாடெல்லாம் அரசியல் பண்றவங்களுக்கும் சமூக விரோதிகளுக்கும்தான். நம்ம மாதிரி சாதாரண சனங்களுக்கு இல்லை..”

உணர்ச்சிப் பொங்க ஆதிமூலம் கோவிலை அடைந்தான். பிள்ளையாரைப் பார்த்தவுடன் அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர்..

“எலே.. இருந்த எடத்த விட்டு அசராம கூரைய வாங்கத்தான் நாடகமாடினியா?. கல்லுளி மங்கா”

அவன் மனம் சந்தோஷத்தில் குதூகலித்தது.

 

திரைக் கவிஞர் – நா காமராசன் – முனைவர் தென்காசி கணேசன்

நா.காமராசன் - Tamil Wikiபுதுக்கவிஞராகவும் திரைப் பாடலாசிரியராகவும் நவீனக்கவிதைகளின் முன்னோடியாகவும் வானம்பாடி கவிதை இயக்கக் கவிஞராகவும் விளங்கிய நா.காமராசன் தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் பிறந்தவர். போடி நாயக்கனூரில் தொடக்கக் கல்வி, மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்றார்.

*போய்வா நதி அலையே,*

*சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது,*

*வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே,*

*முத்துமணிச் சுடரே வா,*

*ஓ மானே மானே,

அடுக்கு மல்லிகை  ஆள் பிடிக்குது

போன்ற பல பாடல்களைத் தந்தவர்.

திரை இசைப் பாடல்களில் புதுக் கவிதையை முதலில் கொண்டு வந்தவர் நா காமராசன் என்று கூறுவார்கள். .

முதுகலைப்பட்டம் பெற்ற பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்தமைக்காக கைதானார். பின்னர், வேறு ஒரு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாக,  எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு கதர்வாரிய துணைத் தலைவராக, . செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக எனப் பதவிகள் வகித்தவர்.

திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக இருந்தவர்,  பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மாநில மாணவர் அணிச் செயலராகவும்  பின் இலக்கிய அணி செயலாளராகவும் வேறு சில கட்சிப் பதவிகளிலும் இருந்தார். பின்னாட்களில் திராவிட அமைப்புக்களை விட்டு, இந்து அமைப்புக்களிலும் பங்கேற்றார்.

மூன்று முதல்வர்களுக்கும் மிக நெருக்கமாக இருந்தவர்.  தாமரை, கணையாழி, கண்ணதாசன், கசடதபற ஆகிய பத்திரிகைகளில்  இவரது கவிதைகள் வெளிவந்தன. இவர் முன்னாள் சபாநாயகர் மற்றும் அமைச்சராக இருந்த திரு  காளிமுத்துவின் வகுப்புத் தோழராவார்.

சுரதாவால் அடையாளங் காட்டப்பட்ட அவர்,எம் ஜி ஆரால் திரைப் படத்தில் பாடலாசிரியர் ஆனார். மொத்தமாக சுமார் 35 படங்களில், 120 பாடல்கள்  எழுதியுள்ளார்.

திமுகவை விட்டு வந்தபின், எம்ஜிஆரை ஆதரித்துப் புகழ்ந்தார். எம்ஜிஆர், பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் கூட்டங்களுக்கு வருகிறார், பகலில் வந்தால் ஒப்பனை கலைந்துவிடும்  என்று திமுக மற்றும் திரு கருணாநிதி கிண்டல் செய்தபோது, இவர் சொன்ன பதில் பலரையும் வியக்க வைத்தது.

சூரியனே

அச்சப்படும்

இரவு வேளையில்

வரும் சந்திரன் இவன் !

என்று புது விளக்கத்தைக் கூறினார். 

இது போன்ற புகழ் உரைகளால், இவருக்கு எம்ஜிஆரின் கண்பார்வை கிடைத்து, பல படங்களில் வாய்ப்புகள், அரசு வேலை, உதவிகள் என தாராளமாகக் கிடைத்தன.

முதல் கவிதைத் தொகுப்பான கறுப்பு மலர்கள் , தொடர்ந்து பதினைந்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களையும், நரகத்திலே சில தேவதைகள் என்ற கதை, நாவல் பழம் என்ற திறனாய்வு நூல், எனப்  பல படைப்புகளை எழுதியுள்ளார்.

திருநங்கைகள் பற்றி இவர் எழுதிய சந்திப்பிழை  கவிதை, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், கிறுக்கன், சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி, தாஜ் மகாலும் ரொட்டித் துண்டும்,ஆப்பிள் கனவு என கவிதை நூல்களின் தலைப்பே கவிதையாகப் பார்க்கப்பட்டன.  இவரது சில கவிதைகள் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டது.

சித்திர மின்னல்கள் என்ற தொகுப்பில்,

திருமணத்திற்குப் பிறகு

இரண்டு பேர் ஒருவராய் மாறுகிறார்கள்

அதற்குப் பிறகு 

இரண்டுபேரும் சண்டை போடுகிறார்கள்

ஏன் ?

அந்த ஒருவர்’ யார் என்று தீர்மானம் செய்வதற்காக.

 

விலைமகளிர் என்ற கவிதையில்

 

கற்புச் சிறையை உடைப்பதால்

கைது செய்யப்படுகிறோம்!

நாங்கள் நிர்வாணத்தை விற்மனை செய்கிறோம்..

ஆடைகள் வாங்குவதற்காக!

என்றும் எழுதியது அன்றையப் பேசுபொருளாக இருந்தது.

நீதிக்குத் தலைவணங்கு என்னும் திரைப்படத்தில் வந்த இந்தப் பாடல் அறிமுகப் பாடல்.

கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே

என் காதலனை இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வரவிடுங்கள்

 

நகக்குறி வரைகின்ற சித்திரமோ

அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ

முகம் என்று அதற்கொரு தலை நகரோ

கைககள் மூடிய கோட்டைக் கதவுகளோ

 

இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே

அது இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே, என்றும்,

 

பல்லாண்டு வாழ்க படத்தில்,

 

போய்வா நதியலையே,

ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

வா வா  வா நதி அலையே

இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா

 

நுரை பூவை அள்ளி அலை சிந்த வேண்டும்..

அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்

வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு…

மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்

 

மெதுவாக வந்து இதழ் மோதி

பதமாக அன்பு நதியோடி

மணமேடை கண்டு புது மாலை சூடி

குல மங்கை வாழ்க நலம் பாடி,

 

என்றும் இலக்கிய வரிகளைத் தந்திருக்கிறார்.

 

நல்லவனுக்கு நல்லவன் படத்தில், பெற்றோரின் சோகத்தை,

சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது

ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது

தந்தையும் இல்லை அன்னையும் இல்லை

கனவா வெறும் நினைவா ?

 

நெஞ்சிலே வரும் பந்தமே

தொடர்கதையா சிறுகதையா ?

நாம் போடும் மேடைகளோ நாடக மேடை

நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்

 

பாசம் என்பதா வேஷம் என்பதா

காலம் செய்த கோலம்

கூடி வாழக் கூடு தேடி ஓடி வந்த ஜீவன்

ஆடிப்பாடக் காடு தேடும் யார் செய்த பாவம் ?

என்று எழுதிய  வரிகள் நெஞ்சை வருடும்.

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது.

அதை உச்சரிக்கும்போது கொஞ்சம் தித்திக்கின்றது

தொடர்ந்து ,

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

 

காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே

தொட்ட இடம் எல்லாம்

தித்திப்புடன் இருக்கும்

முத்துத் தமிழ் மாது

தத்தை மொழி சொன்னால்

இப்படிப் பல பாடல்கள் நயமாகத் தந்தவர்.

 

முந்தானை முடிச்சு, வெள்ளை ரோஜா, கோழி கூவுது , ஆகாய கங்கை , சின்ன வீடு  ஊர்க்காவலன் எங்க ஊரு காவல்காரன்,  மருது பாண்டி ,  புது மனிதன், வண்டிச்சோலை சின்னராசு , பாட்டு வாத்தியார், அன்புள்ள ரஜனிகாந்த், இதயக்கோயில், ரெட்டை வால் குருவி, சகலகலா வல்லவன் போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதி உள்ளார்.

மதுவை ராஜ திரவமென்றும் கவிஞர்களின் தாய்ப்பாலென்றும் எழுதிய அவர்,

மது, அவரின் மனப்பாங்கு இவை சேர,  பல நேரங்களில், தடாலடியான பேச்சுகள் மூலம் இலக்கிய உலகத்தை அவ்வப்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார். “கம்பனுக்குப் பிறகு தமிழில் கவிஞனே இல்லை” என்றும், “கம்பனும்கூட என் பார்வையில் குறைந்தே தெரிகிறான்” என்றும் நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.  நான் அவரை ஒரு இலக்கிய விழாவில் சந்தித்தபோது, என் கவிதையைப் பாரட்டியவர், “கண்ணதாசனெல்லாம் ஒரு கவிஞனா?” அத்தனையும் இலக்கியத் திருட்டு எனச் சொன்னதைக் கேட்டு அப்படியே அங்கிருந்து நகர்ந்தேன்.

திரைத்துறைக்குப் பாடல் எழுதிய அனுபவங்களைப் பிற்காலத்தில் தம் கவிதையொன்றில் பதிவு செய்கையில் ‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்’ என்று கசப்போடு கூறுகிறார். ‘பூபாள ராகம் புயலோடு போனதுபோல் ஆகாய கங்கை பாதாளப் படுகுழியில் விழுந்ததுபோல் என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்’ என்று.

 நிஜ வாழ்க்கையிலும்  மகன்,  மகள்  படித்து நல்ல பணி, குடும்பம் என்றே இருந்தாலும், ஏதோ தொலைந்தது போலவே வாழ்ந்து மறைந்தார். 

 

 

பிரமிக்க வைத்த புத்தகங்கள்-6  – மீனாக்ஷி பாலகணேஷ்

                 திருவரங்கன் உலா – மதுரா விஜயம் –            ஸ்ரீ வேணுகோபாலன்    

திருவரங்கன் உலா, பாகம் 1 [Thiruvarangan Ulaa 1] by ஸ்ரீவேணுகோபாலன் [Sri  Venugopalan] | Goodreads

இதுவரை இந்தத் தலைப்பின்கீழ் வேற்றுமொழிப் புத்தகங்களைப் பற்றியே எழுதி வருகிறாளே, தமிழில் ஒன்று கூடவா கிடையாது என நீங்கள் அங்கலாய்ப்பது கேட்கிறது வாசகர்களே! இப்போது உங்கள் குறை தீர்ந்ததா?

உண்மையில் எனக்குச் சரித்திரத்தின் மீதான ஆர்வம் மிகப் பெரிது; பாரதத்தின் பல நாடுகளின் தோற்றம், வளர்ச்சி, பண்பாடு, கலாச்சாரம், அரசர்களின் வீரதீரம் ஆகியவை பற்றிய செய்திகள் ஆகியவற்றை சரித்திர நவீனங்களைப் படித்தேதான் அறிந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆர்வத்திற்குத் துணை நின்றவை கல்கி, ஜெகசிற்பியன், அகிலன், நா.பா., விக்கிரமன் ஆகியோரின் கல்கி, ஆனந்தவிகடன், அமுதசுரபி ஆகியவற்றில் வெளிவந்த அவர்களது எழுத்துக்களே. படித்து அந்தப் பதின்பருவத்தில் பெருமிதமும் புளகிதமும் அடைந்துள்ளேன். பின்பு இவர்களுடன் பிரபஞ்சன் (மானுடம் வெல்லும், வானம் வசப்படும்) இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டார்.

           ஸ்ரீவேணுகோபாலனின்  மேற்கண்ட புதினங்கள் தொடராக வெளிவந்த காலகட்டத்தில் நான் தாய்நாட்டில் இருக்கவில்லை. அவற்றின் தலைப்பே என்னை ஈர்த்ததனால், பின் அவற்றை,  புத்தக வடிவில் வாங்கிப் படித்தேன் – புளகித்தேன்; திரும்பவும் படித்தேன் – சிலிர்ப்பில் கண்ணீர் சிந்தினேன்; மறுபடியும் படித்தேன் – இத்தகையதொரு பண்பாட்டில் நம் நாட்டவர்கள் ஊறியவர்களா எனப் பெருமிதம் கொண்டேன். இவ்வாறு பலமுறை வாசித்தேன். பிரமித்தேன். இப்போது இந்தக் கட்டுரை எழுதுவதற்காக இன்னும் ஒருமுறை வாசிக்கிறேன் – விவரிக்க முடியாத உணர்வுகள் என்னை ஆட்டுவிக்கின்றன. அதனால் இன்னும் பிரமிக்கிறேன். இது வித்தியாசமான ஒரு (உண்மைச்) சரித்திரம் பற்றிய புதினம் – இதனை இப்படியும் ஆழ்ந்து அனுபவித்து, தம் ஊனும் உள்ளமும் உருக ஒருவரால் எழுதவும் முடியுமா? அவர் எழுதியதனை வாசகர்கள் படிக்கும்போது தாமும் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாக இயலுமா – இயலும் – என்பதே என்னை பிரமிப்பில் ஆழ்த்தி வைத்துள்ளது.

           வாருங்கள் இப்புதினம் பற்றிப் பார்க்கலாம்.

           ஆசிரியரின் சொற்களிலேயே இப்புதினம் பற்றிய விளக்கத்தைக் காணலாம்: ‘ஒரு சமுதாயத்தின் நம்பிக்கையாகத் திகழ்ந்து, அந்தச் சமுதாயத்தின் ஏற்றத்திலும் தாழ்ச்சியிலும் பங்குகொண்டு, ஆச்சரியமான பல போர்களுக்கு இலக்காகி, ஒரு கதாநாயகனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்குமோ அத்தனையையும் தன் வாழ்க்கையில் கொண்டவராக இருந்து விட்டார் திருவரங்கத்துப் பெருமாள்.’

           பதினெட்டு ஆண்டுகள் கதைக்கான குறிப்புகளை நூலகங்களில் தேடிச் சேகரித்தும், கதை விளைந்த பூமிகளைச் சென்று தரிசித்தும், பல மகான்களிடம் விளக்கங்கள் கேட்டும் ஆராய்ச்சியைத் தொடர்ந்து பின் ஓராண்டுக்காலமாக வாரப் பத்திரிகை தினமணி கதிரில் இவர் எழுதிய நெடுநாவல் இது.

           மற்ற புதினங்களினின்றும் முற்றும் வேறுபட்டது. ஏனென்றால் ஒரு சரித்திரத்தை, அழகாகத் தெளிவாக விளக்கி, புனைபாத்திரங்களையும் இணைத்து உலவவிட்டு, பக்திரசம் சொட்டச்சொட்ட, விறுவிறுப்பாக எழுதப்பட்ட புதினம் இதுதான்.      

           கதையின் காலம் 14ம் நூற்றாண்டு. இக்காலத் தொடக்கத்தில்தான் முகலாயர்கள் தெற்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்தார்கள். இப்படையெடுப்பினால் தமிழ் அரசுகளும், சுற்றியுள்ள பிரதேசங்களும் சாமானிய மக்களும் பெரும் துயரங்களை அனுபவிக்கும் அவல நிலைக்கு ஆளாயினர். மதுரையில் நாற்பது ஆண்டுகள் சுல்தானிய ஆட்சி நடந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்து சநாதன தர்மங்களைக் காப்பதற்குப் பெரும் பங்கு வகித்தவர்கள் ஹொய்சளர்கள். ‘மதுரா விஜயம்’ எனும் சமஸ்கிருத நூலைப் படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்கலாம். சமீபத்தில்தான் நான் இந்த நூலை மொழிபெயர்ப்புடன் மின்பிரதியாக வாங்கிப் படித்தேன். கங்காதேவி எனும் ஒரு அரசியால் எழுதப்பட்ட காவியம் இது!

           நம் அனைவருக்கும் தெரிந்தது எல்லாம் விஜயநகரம் உருவாகி வளர்ந்து  செங்கோலோச்சிய வரலாறே. ஆனால் நாயக்க மன்னர்கள் தமிழகத்தின் வாழ்க்கை முறைக்கும் அதன் பாதுகாப்புக்கும் உதவியதையும் கருத்தில் கொண்டு புக்கராயரின் மகனான குமாரகம்பண நாயக்கர் எனும் மன்னரைப் பற்றி வெகு சிறப்பாக இப்புதினத்தில் விளக்கப்பட்டுள்ளது. எதைச் சொல்வது? எதனை விடுவது? பிரமிப்புதான் எல்லை மீறுகிறது. பல சரித்திர உண்மைகளையும், வாழ்ந்த மன்னர்களையும் பற்றியும் பொருத்தமான சில புனைபாத்திரங்களுடன் ஒரு புதினமாகப் படைத்துள்ள ஆசிரியரின் எழுத்து வன்மையை வியக்காமலிருக்க இயலவில்லை.     

           குலசேகரன் எனும் வீரன் விரைந்தோடிவந்து ஸ்ரீரங்கம் நகரில் முகம்மதியர்களின் படையெடுப்பைப்பற்றி அறிவிப்பதுடன் தான் கதை தொடங்குவது. அதனை நம்பியும் நம்பாமலும் வீரர்களும், ஊர்வாழ் மனிதர்களும், கோயில் பக்தர்களின் படையும் அந்த எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர். அரங்கனின் மூலவர் சிலையை இரவோடிரவாகக் கருங்கல் சுவரையெழுப்பிப் பூசி மூடிவிடுகின்றனர். பொன்னாலானது, நவரத்தினங்களால் நிரப்பப்பட்டது என சுல்தானியர்கள் கருதும் உற்சவரையும் அவருடைய ஆபரணங்களையும் எடுத்துக்கொண்டு இருநூறுபேர்கொண்ட பக்தர் படையொன்று அரங்கனைக் காப்பாற்றி ஒளித்து வைக்க விரைகின்றது. குடிஜனங்கள் பெண்டுபிள்ளைகளுடன் புலம் பெயர்கின்றனர். எம்பெருமானடியார்கள் எனப்படும் தேவரடியார்கள் கோவிலினுள் அடைக்கலம் கொண்டு அரங்கனைக் காக்கத் துணைநின்று பல சாதனைகளைப் புரிகின்றனர்.

           பஞ்சுகொண்டான் எனும் வைணவப் பெரியாருடன் குலசேகரன் இணைந்து பல சாகசங்களைப் புரிகிறான். ஆயினும் கோவில் சுல்தானியர் வசப்பட்டு விடுகின்றது. அழகிய மணவாளனை அவனுடைய அடியார் படை அழகர்கோயில், நத்தம், திண்டுக்கல், வழியாக கோழிக்கோட்டிற்கு எழுந்தருளப்பண்ணினார்கள். அங்கிருந்து மேல்கோட்டை எனும் திருநாராயணபுரத்தை அடைகின்றனர்.

           ஊர்வலத்திற்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதிலும், அதற்கான உதவிகள் செய்வதிலும் உறுதுணையாக இருப்பவன் குலசேகரன். அவன் அரங்கனைத் திருவரங்கம் கொண்டு சேர்த்துவிடுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவன்.

           மேல்கோட்டை எனும் திருநாராயணபுரத்தில் பல ஆண்டுகள் வாசம் செய்த அரங்கனைத் திரும்ப ஸ்ரீரங்கத்திற்குக் கொண்டுசேர்க்க குலசேகரனின் பிரயத்தனத்தால் ஹொய்சள அரசரான வீரவல்லாளர் உதவ முன்வருகிறார். போரில் வெற்றிவாகை சூடியவரை சுல்தானியர் வஞ்சகத்தால் படுகொலை செய்கின்றனர். படை சிதறியோடுகிறது. பின் விஜயநகரை ஸ்தாபித்த ஹரிஹரர் புக்கர் ஆட்சியின் கீழ் உள்ள திருமலைக்காடுகளில் மறைத்துப் பாதுகாக்கப்பட்டார் அழகிய மணவாளன். இக்காலகட்டத்தில் அவருடைய பக்தர்களின் படையின் எண்ணிக்கை குறைந்து கொண்டேவந்து ஒரு கட்டத்தில் மூவர், இருவர், ஒருவராகி விடுகின்றனர்.

           இந்த சம்பவங்களின் இடையே குலசேகரன், ஹேமலேகா எனும் பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். அவனை வாசந்திகா எனும் எம்பெருமானடியாளும் காதலிக்கிறாள். நுட்பமான காதல் உணர்வுகளை விரசமேயில்லாமல் ஆசிரியர் விவரிக்கும்போது அந்தப் பிரேமையின் வலிமையையும் மென்மையான இனிமையையும் உணர்ந்து நம் கண்கள் ஊற்றெடுக்கின்றன. உதாரணமாக, ஆசிரியரின் சில வர்ணனை வரிகளையே கீழே கொடுத்துள்ளேன்.

           ‘சுவாமி! சூரியனைக் கண்டு தாமரை மலர்கிறது; இதே ரீதியில் உங்களது விழையும் கண்கள், மோனமான தவிப்புகள், சுழன்று மருகும் பார்வைகள் யாவும் போததா எனக்கு?அவை அந்நாளில் எனக்கு என்ன சுகத்தைத் தந்தன? அதை நான் மறக்க முடியுமா?” என்று கண்களை மூடிப் பரவசத்தில் இருந்தாள் ஹேமலேகா. அவளது கண்களில் அப்போது திடீரென்று ஒரு குளிர்ச்சி புகுந்து விழிகளை நீராட வைத்தது.

காவியங்களில் திளைத்த எனக்கு அவன் மனதில் வெகு காலமாய் இருக்கும் ஒரே ஒரு கனவைப் (அரங்கனை அவன் இருப்பிடம் கொண்டு சேர்ப்பதெனும் கனவை) புரிந்துகொள்ள முடியாதா என்கிறாள் அவள்.

           “பிரேமை கேவலம் நமது ஐம்புலன்களில் வாழவில்லை; நம் மனங்களில் தான் வாழ்கிறது.”

           இப்படி எத்தனையோ அருமையான உணர்ச்சிமயமான அன்பு மொழிகள்.

           இந்தப் பிரேமையினூடே அரங்கன் மீதான பக்திப் பிரேமையும் பொங்கிப் பிரவகிக்க, என் கண்களும் ஓய்வின்றிப் பொங்கிப் பொழிகின்றன. ஹேமலேகா ஒரு நம்மாழ்வார் பாசுரத்தைப் பாடுகிறாள்; பக்திரசம் ததும்பும் பிரபந்தமும் கள்ளைப்போல் மயக்கம் தருவதுதான்.

           ‘புவியுமிரு விசும்பும் நின்னகத்த நீயென்

           செவியின்வழி புகுந்தென் உள்ளாய் – அவிவின்றி

           நான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்?

           ஊன்பருகு நேமியாய் உள்ளு!’

           ஆழ்வார் பகவானிடம் பெருமிதத்தோடு பாடுகிறார்: “இப்பூவுலகும் இரு விசும்புகளும் உன்னுள் இருப்பன; அப்பேர்ப்பட்ட நீயோ என் செவிவழியே என் உள்ளத்துள் புகுந்து இருக்கிறாய். அதனால் இப்போது நானே உன்னைவிடப் பெரியவன். நீ பெரியவன் என்பதை யார் அறிவார்?’  என்கிறார்.

           இத்தகைய சம்பவங்கள் புதினம் முழுவதும் விரவிக் கிடந்து சிலிர்க்க வைக்கின்றன.

           பல தியாகங்களையும் சாகசங்களையும் செய்தும் குலசேகரன் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் இருபது ஆண்டுகளின்பின்  இறந்தும் விடுகிறான். குலசேகரனின் இறப்புடனும் அவனுடைய நிறைவேறாத கனவுகளுடனும், அதனைத் தான் முடிப்பதாக வாசந்திகா எடுத்துக் கொள்ளும் சபதத்துடனும் இப்பாகம் நிறைவுறுகின்றது.

           ‘வீரவல்லாளரின் வஞ்சகக் கொலைக்குப் பின்பு அரங்கனைத் திரும்பத் திருவரங்கத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் பூண்டிருந்த ஒரு பரம்பரை முழுதுமே யுத்தத்தில் கிட்டத்தட்ட அழிந்து விட்டது’ என்று கூறி முதல் பாகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.  நம் மனது கனத்துக் கிடக்கிறது.

                                          ———————–

           மதுராவிஜயம் என்பது குமாரகம்பணர் எனும் அரசனின் பட்டத்துராணியான கங்காதேவி எழுதிய ஒரு காவியம். இது மதுரையை விஜயநகர அரசு வென்று நிலைமையை சீர்திருத்திய போரையும் குமாரகம்பணரின் பிரதாபங்களையும் வர்ணிக்கும் காவியமாகும். அதன் தலைப்பையே வைத்து இப்பாகத்தை எழுதியுள்ளார் ஸ்ரீவேணுகோபாலன். இது அரங்கனின் மீதிப் பயணத்தையும் விறுவிறுப்பாக வர்ணிக்கிறது.

           ஆசிரியர் முன்னுரையில் கூறுவது உள்ளத்தைத் தொடுகிறது: ‘கோவிலில் உள்ள அரங்கர் வெறும் உலோகத்தாலோ, காரைச் சுதையாலோ ஆன உயிரில்லாப் பிம்பமல்ல; நகரவாசிகளைப் பொறுத்தவரை அவர் ஒரு வாழும் தெய்வம். அவர்களிடையே வாழ்ந்து அவர்களது சுக துக்கங்களைப் பகிர்ந்து வரும் தெய்வம். அவருக்குச் செய்யும் வழிபாடுகளை அவர்கள் ஒரு மனித தெய்வத்திற்குச் செய்யும் கைங்கரியங்களாக நினைத்துக் கொண்டார்கள். பெருமாளின் ஆரோக்கியத்தை முன்னிட்டு மருந்துக் கஷாயத்தைக் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஒரு பக்தி பூர்வமான நம்பிக்கை இருக்குமானால் அது அவர்கள் அப்பெருமாளை உதட்டளவில் நேசிக்கவில்லை, மனத்தளவிலும், ஆன்ம அளவிலும் நேசித்தார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.’

           எத்தகைய பேருண்மை!

           கதை தொடங்குவது வாசந்திகா தன் மகனான வல்லபனையும், அவன் நண்பன் தத்தனையும் அரங்கனைத் தேடுவதற்காக வழியனுப்பி வைப்பதுடன் துவங்குகிறது. ஆம். குலசேகரன் இறக்கும் முன் அவனை காந்தர்வ மணம் புரிந்து கொண்டு அவனுடைய  இறப்பின்பின் அவன் மகனைப் பெற்றெடுத்து வளர்க்கிறாள். பயணத்தைத் தொடங்கும் இளைஞர்கள் ஆரம்பத்திலேயே, கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படும் பாண்டிய இளவரசியான மதுராங்கினியை (அவள் யாரென்று அறிந்து கொள்ளாமலே) காண நேரிடுகின்றது.

           பிரதாப ருத்திரர் எனும் வாரங்கல் அரசரிடம் பொக்கிஷ அதிகாரிகளாகப் பணிபுரிந்த ஹரிஹரரும் புக்கரும், முகலாயர்கள் அவ்வரசரைக் கொலைசெய்து நாட்டைக் கைப்பற்றியபின்பு மதமாற்றம் செய்யப்பட்டனர். பின் தப்பித்து வந்து இந்து மதத்திற்கே மாறி, வித்தியாரண்யர் எனும் பெரியார், கிரியாசக்தி பண்டிதர் எனும் துறவி ஆகியோரின் துணையுடன் விஜயநகரப் பேரரசை நிறுவுகின்றனர். பக்கத்து ராஜ்யமான முள்வாய் ராஜ்யத்தின் ஆட்சி புக்கராயரின் மகனான குமார கம்பணரின் வசம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கோபண்ணா என்பவர் அந்த ராஜ்யத்தின் சர்வ சைன்யாதிபதி. மகாவீரர்.

           இவர்கள் அனைவரின் எண்ணங்களும் திரும்பத் திரும்ப நாற்பதாண்டுகளாகக் காணாமற்போன திருவரங்கனின் விக்கிரகத்தைக் கண்டுபிடித்து திருவரங்கத்தில் அவனைத் திரும்ப ஸ்தாபிக்க வேண்டுமென்பதே. வல்லபனும் தத்தனும் எங்கெல்லாமோ சுற்றி யாரிடமெல்லாமோ வழியில் அரங்கனின் பயணம் பற்றிய செய்திகளைக் கேட்டபடி, அவனைத் தேடியலைந்து திருமலைக் காட்டிற்கு வருகிறார்கள். இளைஞர்களின் சாகசம் திகிலூட்டுகிறது. அவ்விக்கிரகத்தைத் தேடிக் கண்டுபிடித்து அரசர்களின் துணையுடன் திருப்பதி மலைமீது பாதுகாப்பாக அப்போதைக்கு ஸ்தாபிதம் செய்கிறார்கள்.

           பின் குமார கம்பண அரசர், அவருடைய வீர தளபதி கோபண்ணா ஆகியோர் மதுரையில் சுல்தானியர்கள்மீது போர்தொடுத்து அவர்களை வீழ்த்தி, திருவரங்கத்திற்கே அரங்கனை எழுந்தருளப் பண்ணுகின்றார்கள். இவையெல்லாம் உணர்ச்சிமயமான பதிவுகள்; தொண்டை அடைக்காமல், கண்களில் காவேரி பெருகாமல் அரங்கன் பற்றிய செய்திகளைப் படிப்பது இயலாத காரியம்.

           ஒரு கட்டத்தில் அரங்கனை மீட்டுக் கொண்டு சேர்ப்பது பற்றி கோபண்ணாவிற்கு வேதாந்த தேசிகர் கூறுகிறார்: “கீதையில் பகவான் கூறியதன் பொருள் என்ன? அவர் நம்மை ஒரு கருவியாக வைத்து ஒரு காரியத்தைச் செய்ய வைக்கிறார். ஆனால் உண்மையில் காரியத்தை அவரே செய்து முடிக்கிறார்.” எத்தனை சத்தியமான சொற்கள்!

           அரங்கன் திருவரங்கத்தில் நிலைகொள்ளும் கட்டம் மிகவும் அழகானது; உணர்ச்சிபூர்வமானது; தெய்வ அருளின் உச்சகட்டமானது.

           வேதாந்த தேசிகர் தம் கையாலேயே காரைச்சுவரை உடைத்து, பாதுகாக்கப்பட்ட திருவரங்கனின் மூலவர் திருவுருவை வெளிப்படுத்துகிறார்.

           48 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் காணாமல் போய்விட்ட அரங்கனின் விக்கிரகத்திற்குப் பதிலாக வேறொன்றினைச் செய்வித்து, பூஜித்து வருகின்றது ஒரு புதிய தலைமுறை. இப்போது உண்மையான விக்கிரகம் வந்து சேர்ந்ததும் ஒப்புக்கொள்ளத் தயங்குகின்றனர். ஊரில் சிலகாலமாக ரகசியமாக வழிபடப்பட்டு வந்த விக்கிரகந்தான் திருவரங்கர் விக்கிரகமா அல்லது இப்போது அவர்கள் சிங்கவரத்திலிருந்து மீட்டுவந்த விக்கிரகந்தான் திருவரங்கனின் உண்மையான பழைய விக்கிரகமா என விவாதம் நடந்தது. 48 ஆண்டுகள் அரங்கனுடன் இருந்தவர் கூறினால் ஏற்றுக்கொள்கிறோம் என்றனர்.

           ஊர்முழுவதும் சென்று யாராவது வயதான முதியோர்கள் இருந்தால் அவர்கள் பழைய அரங்கனை அடையாளம் காணக்கூடும் என விசாரித்தார்கள். ஒருவர் கிடைத்தார். அனால் அவருக்குக் கண்பார்வை இல்லை. ஆயினும் அவர் தாம் இளம்பிராயத்தில் அரங்கனின் திருமஞ்சன வஸ்திரங்களைத் துவைத்துக் கொடுக்கும் ஈரங்கொல்லியாக இருந்ததாகவும், அக்காலத்தில் தம்மிடம் துவைக்கத் தரப்படும் அரங்கனின் ஈர வஸ்திரத்தைப் பிழிந்து அந்த நீரைப் புனிதப்பிரசாதமாக அருந்தி வந்ததாகவும், ஆகவே தற்போதும் அவ்வண்ணமே செய்து அரங்கனை அடையாளம் காண முடியுமா எனப் பார்க்கிறேன் எனவும் கூறினார்.

           அப்படியே இரு விக்கிரகங்களையும் திருமஞ்சனமாட்டி, வஸ்திரங்கள் தனித்தனியே அவரிடம் கொடுக்கப்பட்டன. வஸ்திரங்களைப் பிழிந்து நீரைத் தனித்தனியே ருசித்தார் அவர். சந்தேகத்திற்கிடமின்றி, சிங்கவரத்திலிருந்து வந்த அரங்கனே நீண்ட நாட்களாக இருந்து திரும்ப வந்தவர் எனக்கூற, அனைவரும் ஆனந்தத்தில் குதூகலித்தனர்.

           இவ்வாறாக குலசேகரனும் வாசந்திகாவும் கண்ட கனவு அவர்களது மகன் ராஜவல்லபனால் 48 ஆண்டுகளின்பின் நிறைவேற்றப்பட்டது.

           இப்புதினத்தின் இடையே சரித்திர அரசியல் வரலாறுகளும், கோவில் வரலாறுகளும், அரச வம்சக் கதைகளும், பூசல்களும், தெய்வ பக்தியின் பால் பட்டு பக்தர்கள் செய்யும் அசாதாரணமான செயல்களும், கவித்துவமான காதல் உணர்வுகளும், இன்னபிறவும் ஒரு வேறுபட்ட உலகிற்கே நம்மை இட்டுச் சென்று விடுகின்றன. மீண்டு வந்தாலும் அதன் தாக்கம் நம்மை விடுவதில்லை. புதினத்தின் பல்வேறு நயங்களில் ஈடுபட்டு அதனை அசைபோட்டபடியே இன்னும் நான் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளேன்.

           இவ்வாறு எழுத வேறு ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். சந்தேகமேயில்லை!!

           இப்போது விடைபெறுகிறேன். மீண்டுமொரு புத்தகத்தைப் பற்றி அடுத்துக் கூறுகிறேன்.

                                                                                     (மீண்டும் சந்திப்போம்)

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

                                  ஒட்டுக் கேட்டது

51,100+ Woman Ear Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock | Woman ear pain, Black woman ear, Mature woman ear

இது நடந்தது அமெரிக்காவில் வசிக்கும் என் மகளைப் பார்க்க நியூ ஜெர்சி சென்று இருந்த பொழுது.

இன்று நான் அமர்ந்து இருந்த இடத்தில் ஒரு தமிழ்பேசும் தம்பதியர்.

பகலில் பக்கம் பார்த்து பேசு என பெரியவர்கள் யாரும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வில்லை போலும்.கண்களையும் வாயையும் மூடுவதற்கு ‘ஷட்டர்’கள் கொடுத்த இறைவன் காதுகளுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.

எனவே ஒட்டுக்கேட்டது என் தவறு இல்லை, நான்கேட்கும்படி பேசியது அவர்கள் தவறு. கீழே அவர்களது உறையாடல்:

கணவன்: ஏண்டா, அவனுக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டியா?

மனைவி: கிடைக்கலீங்க. செப்டம்பர் முதல் வாரம்தான் ஒரு ஸ்லாட் இருக்காம்.

கணவன்: ஆகஸ்டோட ஒரு வருஷம முடிஞ்சிடுமே. வேறு நல்ல இடம் இல்லையா.

மனைவி: வேற எங்க போனாலும் அவனுக்கு ஒத்துக்காதுங்க. ஏப்ரல் மாதம் போனோமே அங்க வேண்டும் என்றால் போகலாங்க. அங்க general checkup செய்வார்கள்.ஆனால் எண்பது மைல் போகனும் காசும் இருநூரு டாலர் வாங்கிடுவாங்க.

கணவன்: இந்த விஷயத்தில் காசு எல்லாம் பார்க்க முடியாது. அடுத்த வாரம் ஸ்லாட் கிடைக்குமான்னு பாரு. நான் லீவு போட்டு விடுகிறேன்.

மனைவி: ஏங்க போன வாரம், எங்க அம்மாவை கோயிலுக்கு கூட்டி போக லீவு போட முடியாதுன்னு சொன்னீங்க.

கணவன்: கோவிலுக்கு ஞாயிறு அன்றுகூடப் போகலாம். இவனை அப்பாயின்ட்மென்ட் கிடைக்கிறப்பதானே கூட்டிக்கிட்டு  போக முடியும். அவன் வருகிறான். மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு இருக்காதே. Mood out ஆகி விடுவான்.

நானும் கஷ்டப்பட்டு திரும்பி அந்த பாக்கியசாலி பையனை பார்த்தேன்.

வந்து நின்றது ஒரு அடி உயரத்தில் ஒரு நாய்.

 

நாயன்மார் வெண்பா- 6 – தில்லை வேந்தன்

HRE-63: நாயன்மார் மற்றும் தொகையடியார் | Hindu Religious Extracts(HRE)

                       (ஓர் அடியார் – ஒருவெண்பா)

  27) திருஞான சம்பந்தர்

‘புகலியர் கோன்’  என்று போற்றப்படுகின்ற திருஞானசம்பந்தர், சீர்காழிப் பதியில், அந்தண மரபில் தோன்றியவர். இவருக்கு மூன்று வயது இருக்கும் போது, தோணியப்பர் கோவில் குளக்கரையில் அமர வைத்து விட்டு  நீராடச் சென்ற  தந்தை நெடுநேரம் ஆகியும் வாராத  காரணத்தால் அழுதார். அப்போது திருத்தோணியப்பர் உமையுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமையம்மையார் ஒரு பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தக் குழந்தைக்கு ஞானப் பாலை ஊட்டினார்.

குளித்துவிட்டு வந்த தந்தை வாயில் வழிகின்ற பாலைப் பார்த்துவிட்டு, ‘யார் கொடுத்தது?’ என்று கேட்க, ஞானசம்பந்தர், ,”தோடுடைய செவியன்” என்ற தமது முதல் பதிகத்தைப் பாடியருளினார்.

இவர் திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு சேர்ந்து பல தலங்களுக்குச் சென்றார்.

திருநெல்வாயில் என்ற தலத்தில், இறைவனுடைய ஆணையால்  அங்கிருந்த அந்தணர்கள்  முத்துச்சிவிகை, குடை ஆகியவற்றை இவருக்கு வழங்கினர்

 திருமருகல் என்ற ஊரில் பதிகம் பாடி, இறந்து போன ஒரு வணிகனின் உயிரை மீட்டுக் கொடுத்தார்

 திருநாவுக்கரசர் இவருடன் சேர்ந்து பல தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி வழிபட்டு மகிழ்ந்தார்

மதுரையை ஆண்ட, கூன் பாண்டியன் மாற்றுச் சமயத்தில் ஈடுபட்டிருந்தான்.  அவன் கொடிய வெப்பு நோயால் அவதிப்பட்டான்.   சம்பந்தர், “மந்திரமாவது நீறு” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி அவனது நோயைத் தீர்த்தார். வாதுக்கு வந்த சமணர்களோடு அனல் வாதம், புனல் வாதம் செய்து வெற்றி பெற்றார்

திருவோத்தூர்  என்ற திருத்தலத்தில் சம்பந்தர் பதிகம் பாடி இறைவன் அருளால் ஆண் பனையைப் பெண் பனையாகச் செய்து குலை  தர வைத்தார்.

திருமயிலைத் திருத்தலத்தில், சாம்பலாக இருந்த பூம்பாவை என்ற பெண்ணை,  “மட்டிட்ட புன்னையங்  கானல் மட மயிலை” என்று தொடங்கும் பதிகம் பாடி உயிர் தந்து எழுப்பினார்.

திருநல்லூர்ப் பெருமணம் ( ஆச்சாளபுரம் ) என்ற திருத்தலத்தில் வைகாசி மாதம் மூல நாளில் இவரது திருமணம் நடைபெற்றது அப்போது, பெரியதொரு சோதி தோன்றத் திருமணம் காண வந்தவர் அனைவருடன் அச்சோதியின் உட்கலந்தார்.

ஞானசம்பந்தரின் “யாழ்முரி”என்ற பதிகம்,, ,  “வாசி தீரவே காசு நல்குவீர்” என்ற திருப்பதிகம்,  திருமறைக்காட்டுத் திருப்பதிகம்,  “கோளறு திருப்பதிகம்”, “திருமயிலைத் திருப்பதிகம்’ ஆகியவை அடியார்களால் இன்றும் பெரிதும் விரும்பி ஓதப்படும் பெருமையுடையன.

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரின்  வாழ்வில் நடந்த அருஞ்செயல்களைப் பற்றி அறிந்து கொள்வது நமக்கு மிகுந்த

 நலம் பயப்பதாகும்.

                திருஞான சம்பந்தர் வெண்பா

 ஞானப்பால் உண்டார், நனிசிறந்த பண்ணமைத்துத்

தேனொப்பத் தந்தார் திருப்பாடல், – வானப்பேர்

ஆற்றானைப் பாடி அருஞ்செயல்கள் செய்தகதை

போற்றி அறிதல் பொலிவு

 (வானப்பேர் ஆற்றான்- வான் நதியாகிய கங்கையைச் சடையில் கொண்ட சிவன்,)

      28 ஏயர்கோன் கலிக்காம நாயனார்

 சோழ நாட்டில், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது திருப்பெருமங்கலம். இவ்வூரில்,  ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காம நாயனார். சிவபக்தியில் சிறந்த இவர், திருப்புன்கூர் பெருமானுக்குப் பல திருப்பணிகள் புரிந்து வந்தார்..

சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானைப் பரவையார் வீட்டுக்குத் தூதாக அனுப்பியதைக்  கேள்விப்பட்ட கலிக்காமர், சுந்தரர் மேல் மிகுந்த சினம் கொண்டிருந்தார். வேத முதல்வனை ஓர்  அடியார் தூது அனுப்பிய செயலை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “இக்குற்றத்தைச்  செய்தவரை நான் நேரில் கண்டால் என்ன நிகழுமோ?” என்று எண்ணி மனம் வருந்தினார். கலிக்காமரின் பகைமை  உணர்ச்சியை அறிந்த சுந்தரர் அதனைத் தீர்க்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவன்,கலிக்காமருக்குச் சூலை நோயை அளித்தான். அவர் அந்நோயால் மிகவும் துன்புற்றார். தம் நோயைத்  தீர்த்தருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். அவரிடம் “உன் நோயைச்  சுந்தரன் தீர்த்தால் அன்றி அது தீராது”  என்று கனவில் இறைவன் உரைத்தான். “வழிவழியாய் வழிபடும் எனது நோயை உன்னால் வலிய ஆட்கொள்ளப்பட்டவனா தீர்ப்பது? இந்நோய்  தீராமல் இருப்பதே சிறந்தது” என்றார் கலிக்காமர்.

சிவபெருமான் வன்றொண்டர் கனவில் தோன்றினார்., “ கலிக்காமர் வீட்டிற்குச்  சென்று அவருடைய  சூலை நோயைத்  தீர்ப்பாயாக” எனப் பணித்து அருளினார்.

சுந்தரர் வரும் செய்தியை அறிந்த கலிக்காமலர், தம் வயிற்றை உடை வாளால்  கிழித்துக்கொண்டு உயிரை விட்டார். சுந்தரர் வந்து விட்டார் என்பதை அறிந்த கலிக்காமரின் மனைவியார், கணவரின்  உடலை உள்ளே மறைத்து வைத்துவிட்டுச்  சுந்தரரை வரவேற்றார்.

 “கலிக்காமரின் சூலை நோயைத்  தீர்க்க யான் வந்துள்ளேன்” என்று சுந்தரர் கூறவும், வீட்டில் உள்ள பணியாளர்கள், “அவர் உள்ளே பள்ளி கொள்கின்றார்”  என்று கூறினர். உள்ளே சென்ற சுந்தரர்,குடல் சரிந்து கலிக்காமர் இறந்து  கிடப்பதைப் பார்த்தார். இதற்குத் தாமே காரணம் என நினைத்துத்  தமது வாளால் தம்முடைய  வயிற்றைக் கீற முற்பட்டார்.

அப்போது, இறைவன் அருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி உற்ற நண்பர்கள் ஆயினர்.

ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் புராணத்தைச்  சொல்லுகையில், சேக்கிழார் இடையே சுந்தரரின் திருக்கதையை மிக அழகாக அமைத்து  உள்ளார். இது படிக்கப் படிக்க மிகுந்த இன்பம் தருவதாகும்.   

               கலிக்காமர் வெண்பா

தேரோடும் ஆரூரில் செல்லுக தூதென்று

நீரார்  சடையானை நேர்ந்ததனால் – சீராரும்

வன்றொண்டர் மேலிவர்  வைத்தசினம் அன்பாக

நன்றிறைவன் செய்தான் நயம்.

                                  ***********””*****

 29) திருமூல நாயனார்

திருக்கைலாயத்தில்  சிவபெருமானின் தொண்டராகிய நந்தியம் பெருமானின் அருளைப் பெற்ற  சிவயோகியார் ஒருவர், கயிலையில் இருந்து புறப்பட்டு, வழியில் உள்ள பல தலங்களைக் கண்டு வணங்கித் தில்லையை அடைந்து ஆடற்  பெருமானின் திருக்கூத்தினைக கண்டு களித்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியின்  கரையோடு சென்று திருவாவடுதுறை அடைந்தார். ஆவடுதுறை  இறைவனை வழிபட்டு அகம் குளிர்ந்த  அவர் அத்தலத்தை விட்டு  அகன்று செல்லும்போது, காவிரிக்  கரையில் உள்ள சோலையிடத்தே  பசுக்  கூட்டங்கள் கதறி அழுது கொண்டிருப்பதைக் கண்டார்.. சாத்தனூர் என்ற அந்த ஊரில் ஆநிரை மேய்க்கும் ‘மூலன்’ என்பவன் இறந்தமையால் அதனைத்  தாங்க மாட்டாமல்  பசுக்கள் கதறுவதை அறிந்தார். பசுக்களின் துயரத்தினை நீக்க எண்ணிய யோகியார், தம்முடைய திருமேனியை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுக்  கூடுவிட்டு கூடு பாயும் தமது ஆற்றலைப் பயன்படுத்தி மூலனின் உடலில் புகுந்தார்.

ஆயனாகிய மூலனின் உடலில் புகுந்த யோகியார் “ திருமூலர்” ஆனார்.

பசுக்கள் எல்லாம் துயரம் நீங்கி மகிழ்ந்தன.

மாலை வந்ததும் பசுக்கள் எல்லாம்  தமக்குரிய வீடுகளுக்குச் சென்றன. அப்போது இறந்து போன மூலனின் மனைவி, தன் கணவன் என்று நினைத்து அவரை  நெருங்க, அவளிடமிருந்து விலகிய திருமூலர், அவ்வூரில்  உள்ள மடத்தில் சென்று தங்கலானார்.

 மூலனின் மனைவி, தன் கணவனின் நிலையை ஊராரிடம் உரைக்க, அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அவர் யோகத்தில் இருந்த நிலையைக் கண்டு  அவரை மாற்ற இயலாது என்று கூறி, மூலனின் மனைவியைத் தேற்றி அழைத்துச் சென்றனர்.

 திருமூலர், தாம் வைத்திருந்த உடலைத்  தேடிப் பார்த்தார்.

அது கிடைக்காமல் போகவே, அதுவே  இறைவனின் திருவுள்ளம் என்பதை உணர்ந்தார்.

 யோக நெறிகளைத் திருமூலர் வாக்கால் கூற வேண்டும் என்பது  இறைவனின் திருவுள்ளம். ஆகவே தமது உடல் இறைவனால் மறைக்கப்பட்டது என்பதை அவர்  உணர்ந்து கொண்டார்.

சாத்தனூரில் இருந்து புறப்பட்ட திருமூலர் திருவாவடுதுறை அடைந்து, இறைவனை வணங்கிக்  கோவிலுக்கு மேற்கில் உள்ள அரச மரத்தின் கீழ் யோகத்தில் அமர்ந்து மூவாயிரம் ஆண்டுகளில், ஆண்டுக்கு ஒன்றாக மூவாயிரம் திருமந்திரச் செய்யுள்களை இயற்றியருளினார். பிறகு தவத்தில் ஈடுபட்டு இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.

 ‘சரியை’ , ‘கிரியை,’ ‘யோகம்’ , ‘ஞானம்’ என்னும் நால்வகை நெறிகளும் விளங்கும் திருமந்திரம் என்னும் ஒப்பற்ற யோக நூலை அருளிய திருமூலரின் வரலாறு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

 ‘ஒன்றிய குலம் ஒருவனே தேவன்’

 ‘அன்பே சிவம்’

 யான்  பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’    போன்ற

 புகழ்பெற்ற சொற்றொடர்கள் திருமந்திரத்தில் உள்ளனவே ஆகும்.

 

             திருமூலர் வெண்பா

ஒருமூலம் இல்லான் உவந்தருளும் யோகி

திருமூலர் என்று திகழ்ந்து – அருமாலை

மூவா யிரமான மொய்தமிழ்ப் பாக்களை

நாவாரச் சொன்னார் நனி!

                ( ஒருமூலம் இல்லான்– சிவன்)

 

(தொடரும்)

அதிதி (மூன்றாம் பகுதி) – பானுமதி

6 Days Later, Gas Leak in Rajasthan Well Still Not Plugged

பல நூறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே இந்தப் புவி எப்படி இருந்திருக்கும்? ஒரு சூரியன், எட்டு கோள்கள், பற்பல நிலவுகள், பல குறுங்கோள்கள், திண்மங்கள், வால் நட்சத்திரங்கள், எரிகற்கள், விண்கற்கள் எப்படி பால் வீதியில் வந்திருக்கும்?”

‘பால்வீதி மட்டுமில்லை. மூன்று ட்ரில்லியன் எண்ணிக்கையில் அகிலம் படர்ந்திருக்கிறது. நமது பால்வீதியைப் போல, பல கேலக்சிகள், அவற்றில் பல சூரியர்கள், கோள்கள், இன்னும் பல விண்மீன் கள், என்னவொரு அற்புதம் யுனிவர்ஸ் என்பது!’ என்றாள் ஆனந்தி.

‘இப்போது இணை உலகம் பற்றியும் பேசுகிறார்கள். நம் வாழ் நாளில் நாம் ஒரு வேற்றுக் கிரக வாசியைக் கண்டடைய வேண்டும்; நாம் போவதற்கான வாய்ப்பிருந்தாலும் சரி,ஏலியன் வருவதற்கான சந்தர்ப்பம் அமஞ்சாலும் சரி.’

“எத்தனை திரைப்படங்கள் இதைப் பற்றி வந்து விட்டன. அத்தனையிலும் ஃபேன்டசி அதிகம். நம்ம கற்பனைக்கேத்தாப்ல உருவம், ட்ரஸ், உணர்ச்சிகள்.”

‘அதெல்லாம் வேண்டாம்கிறியா?’

War of the Worlds, Amazing Stories, Aug. 1927 – Jesse Ramírez“அப்படியில்ல. உனக்கு ஹெச் ஜி வெல்ஸ் எழுதின சிறுகதை தெரியுமில்ல. அதுல, அந்த விண் ஓடம் பூமிக்கு வரும். இவங்க ரேடியோ ஹட் வாசல்ல வரவேற்க காத்துண்டிருப்பாங்க. சத்தம் கேட்டவுடனே, அடிச்சுப்பிடிச்சு ஓடி வந்து கதவத் திறந்தா, அந்த விண் ஓடத்துல இருந்தவங்க எல்லாம் இவங்க காலடிபட்டே செத்துப் போயிருப்பாங்க. அவ்ளோ சின்ன வடிவம். ஒரே கூழாய்ப் போயிருப்பாங்க.”

‘சோ, எந்த வடிவமும் கவனிக்கப்படணும்’ என்றான் கேலியாக சுந்து.

‘ஜோக்ஸ் அபார்ட், இதற்கான விடையை ஆன்மீகத் தத்துவவாதிகள் ஒரு வகையில் சொல்கிறார்கள். அறிவியல்வாதிகள் நிரூபணத்தைத் தேடி ஆராய்கிறார்கள்.’

“ஆமாம், முதல்ல நம்ம பூமி ஒரு கற்பாறைக் குழம்பு. எந்த உயிருமே இல்லாத ஒரு நிலை. அந்த வெப்பத்தை யாரால தான் தாங்கியிருக்க முடியும்?”

 

‘ஆனா, பிரபஞ்ச சக்தி ஒரு ப்ளேன் வச்சிருந்தது. ஒரு கோள், அதோட கருமுளை, வளந்துண்டு வர நம்ம பூமியின் மேல மோதித்து. என்ன ஆச்சு? நம்ம பூமிலேந்து ஒரு துண்டு தெறிச்சு நிலாவாச்சு. நம்ம வெப்பக் குழம்பு ஐஸ்க்ரீம் மாதிரி உருகித்து. ஓரு செல் உயிரினம், அதுலேந்து எத்தன எத்தன! இன்னிக்கிப் பாரு, ஆர்டிஃபிசியல் நுண்ணறிவு மனுஷனத் தாண்டிப் போறது.’

“ஆமாம், சுந்து, அதுக்கு உன்ன விட புத்தி ஜாஸ்தி. அதுக்கு ஏழு அறிவுக்கு மேலயாம்.” என்றாள் சித்ரா.

‘அப்படின்னா, அதயே கல்யாணம் பண்ணி புள்ள குட்டி பதினாறும் பெத்து பெரு வாழ்வு வாழு’

“கோச்சுக்காத சுந்து. உன்ன மாரியெல்லாம் அது ஜோக் அடிக்காதுடா. இந்த ஜன்மத்ல எனக்கு நீதான், உனக்கு நாந்தான்; மனச தேத்திக்கோ.” என்று சிரித்தாள் சித்ரா.

“ஒரு இன்ட்ரெஸ்டிங் ந்யூஸ் தெரியுமா? பென்னு, பென்னுன்னு ஒரு விண்கல். அது நம்ம சூர்யக் குடும்பத்ல தானிருக்கு. இது வரைக்கும் எந்தக் கோளோட விசைக்குள்ளயும் அது சிக்கலே.”

‘ஹை, சரியான டகல்பாஜியா இருக்கும் போலருக்கே’

“டகல் பாஜின்னா?”

‘ரொம்ப முக்கியமான சந்தேகத்தக் கேக்கற பாரு நீ. அவன விடு. நீ என்ன சொல்ல வந்த, அதச் சொல்லு.’

“அந்த மாரி விண்கற்கள் பூமில மோதி நமக்குத் தண்ணி வந்திருக்கும்னு ஒரு ஆராய்ச்சி. நீர் மட்டுமில்ல, தனிமங்கள் கூட.”

‘சரி?’

“அந்த விண்கல்ல எப்படியாச்சும் ஆராயணும்னு , 2016ல ஒசைரிஸ் ரெக்ஸ்னு ஒரு விண்கலத்த நாசா அனுப்பித்து.. அது டக்கரா 2020ல பென்னுகிட்டப் போச்சு. 2023ல அங்கேந்து மண்ணை வாரி எடுத்துண்டு வந்து இப்ப செப்டம்பர்ல இங்க பூமில மூட்டையாய் போட்டுட்டுப் போயிருக்கு. அத ஆராய ஆரம்பிச்சிருங்காக.”

‘மண்ண வாரி இறச்சு சாபம் தான் விடுவாங்க நம்மூர்ல; நாசா என்னடான்னா அத வச்சு ஆராயறான்.’

“நாமளும் பலதக் கண்டுபிடிக்கிறோம்டா. ஒரு நா நமக்கான பெருமை எல்லாம் வரும். ஆனா, அதுக்கு உழைக்கணும், வெட்டி ஜோக்கெல்லாம் அடிச்சிண்டிருக்கப்படாது.”

‘சரி குருவே, சாரி குருவே’

அன்று நள்ளிரவு. நால்வரும் கணினித் திரையில் வான் செய்யும் நெசவுகளை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூன்று புள்ளிகள், வெண்மை நிறத்தவை வானின் வட மேற்கு மூலையில் தென்பட்டன. அவைகளின் வேகத்தைக் கணிக்க கணிப்பொறி திணறியது.

குறிப்பிட்ட கோணத்தில் பெரிய தொலை நோக்கி தன்னைத்தானே அமைத்துக் கொண்டு அந்தப் புள்ளிகளைத் தெளிவாகக் காட்டியது. தமிழ் மொழியின் ஃ போல அவை காட்சிப்பட்டன. மேலிருக்கும் சிறு புள்ளி பூமியை நோக்கி விரைய, மற்ற இரண்டும் அதே வேகத்தில் பின் தொடர்ந்தன. அவை நெருங்க நெருங்க சற்று அகலமான தொப்பி நடுவில் இருக்க மேலே உணர் கொம்புகள் தென்பட்டன. தொப்பியின் கீழே தேனடை போலத் தொங்கிக் கொண்டிருந்தது. மூன்றிலுமே ஒரே அமைப்பு. இவர்கள் மூச்சு விடக் கூட மறந்து கணினித் திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கிசிகிசுவென்ற குரலில் சித்ரா சொன்னாள்- இவர்கள் அயல் கிரகத்தவர்கள். பூமியை வேவு பார்க்கிறார்கள்.

“ஆமா, எனக்கும் அப்படித்தான் தோன்றது.”

‘இந்திய வான் வெளியில் பறக்கும் தட்டைப் போன்ற தொப்பி அணிந்த வேற்று உயிரிகள்’ என்று மெதுவான குரலில் சொன்னான் சுந்து.

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளி மண்டலத்தில் புகுந்த அவை ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதியில் சிதறுண்டு விழுந்தன.

“கமான், க்விக். நாம முப்படையின் தலைமை தளபதிக்கு செய்தி சொல்லணும். அந்த இடத்தை உடனே சீல் செய்யணும். இராணுவம் அந்த இடத்திற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது” பரபரப்பானான் விமலன்.

‘செய்தி சொல்லணும் இது கரெக்ட். அவங்களும் பாத்திருப்பாங்க. அது கரித்துண்டு போலத்தான் விழுந்திருக்கும். ஜஸ்ட் விண்கல் துகளாக இருக்கலாம். நீ அனாவசியமா எக்சைட் ஆற’

“இல்லடா, இது பார்டர் ஏரியால நடந்திருக்கு. ட்ரோனாக் கூட இருக்கலாம். பாகிஸ்தானோ, அந்த வானவெளியைப் பயன்படுத்தி சீனாவோ, ஆப்கனோ, ஏதோ நடக்கறது.”

‘சரிடா, ஜெய்சால்மர் கோட்டைல நம்ம இராணுவப் பிரிவு இருக்கே. அவுங்க பாத்திருப்பாங்கள்ல. என்ன ஆக்ஷன் எடுக்கணும்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?’

விமலன் இதை சட்டை செய்யவில்லை. முப்புள்ளிகளைப் பற்றிய கணினியின் புகைப்படத்தோடு தலைமை தளபதிக்கு செய்தி அனுப்பினான்.

“பார்த்தோம், விமலன். பாலை மணலில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது ட்ரோனாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவம் அலர்ட்டாக உள்ளது. கவலை வேண்டாம்” என்று பதில் வந்தது.

விமலனுக்கு இருப்பு கொள்ளவில்லை. தான் வருவதாக விண்ணப்பித்தான். தலைமை மறுத்து விட்டது.

மற்ற மூவரும் அந்தப் புள்ளிகளின் இயக்கத்தை பின்னிருந்து முன் செலுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“இத்தனை வேகம் ட்ரோனுக்கு சாத்தியமா?’ என்றான் சுந்து.

‘சாத்தியமில்லை. இது கிட்டத்தட்ட ஒளியின் வேகம். எனக்கு இது வேற்றுக் கிரகத்தின் பறக்கும் தட்டுன்னு தோணுது.’ என்றாள் ஆனந்தி. நால்வருக்கும் அதே எண்ணம் தான். மீண்டும் ஒரு முறை அப்புள்ளிகள் தோன்றியதை, அவை கொண்டிருந்த உருவை, அவற்றின் பயண வேகத்தைக் குறிப்பிட்டு எழுதினார்கள். ஒரு நாள் காத்திருக்குமாறு செய்தி வந்தது.

வானில் மீண்டும் இதே போல் ஏதேனும் தென்படுகிறதா என்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தலைமை சொன்ன ஒரு நாள் கடந்து மற்றொரு நாளும் வந்து போனது. ஒரு செய்தியும் இல்லை. விமலன் துணிந்து இராணுவ மந்திரிக்கு செய்தி அனுப்பி தாங்கள் அங்கே நேரே வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கோரினான்.

“விமலன், நீங்கள் தலைமையை மீறி உங்கள் கோரிக்கையை வைத்ததற்காக நாளை மறுநாள்  இராணுவக் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். வான் ஆய்வுப் பணிகள் ஆனந்தியின் தலைமையில் நடக்கும்.”

‘மன்னிக்கணும், சார். என்னால் தலைமைப் பொறுப்பை ஏற்க இயலாது.   நாங்கள் நால்வருமே அங்கே வருகிறோம்; தார் பாலையை ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் அதை மறுக்கலாம்; எங்களை கோர்ட் மார்ஷியலுக்கு உட்படுத்தலாம்.’

தலைவர் இதை எதிர்பார்க்கவில்லை. “நால்வரும் வந்துவிட்டால், ஆய்வகம் என்னாகும்?” என்றார்.

‘ஒன்றுமாகாது, சார். எங்கள் கணினியில் சுடச்சுட படங்களும், செய்திகளும் வந்து கொண்டிருக்கும்.’ என்றவர்கள், ‘சார், பாலையில் ஏதேனும் விசித்திரம்?’ என்று கேட்டார்கள்.

“உங்கள் ஆவல் மட்டும் தான் விசித்திரம். வந்து தேடுங்கள். மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி.  ஏதாவது கிடைத்தால் திருட்டுத்தனம் செய்யாமல் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு நல்ல விஷயம்- கதிர் வீச்சு எதுவும் அங்கில்லை. பாதுகாப்பானது தான். என்ன கண்டுபிடிக்கிறீர்கள் என்பதைப் பார்க்கலாம். இழுத்துக்கோ, புடிச்சுக்கோ என்ற பட்ஜெட்டில் இந்த வெட்டிச் செலவு வேறு. மூன்று நாட்களுக்குப் பின்னர் குடஜாத்ரிக்குப் போய்விட வேண்டும்.”

ஏதோ பதில் சொல்ல வாயெடுத்த விமலனுக்கு சைகை காட்டிய சுந்தரம், ‘ரொம்ப நன்றி, சார். இது நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு. ஒரு ஆர்வத்தில் தான் வருகிறோம். எதைக் கண்டுபிடித்தாலும் உங்களுக்குத்தான் பெருமை’

மீண்டும் கீழிறங்கி ஜோத்பூர் சென்று தார் பலைவனத்தை அடைந்தார்கள். முன்னர் இராணுவம் பரிசீலித்த இடங்களின் பதிவுகளைப் பார்த்தார்கள்.

‘என்னடா இது, மாயாஜாலமா இருக்கு. இந்த இடத்லதான் விழுந்ததுன்னு கம்ப்யூடர் கதறிக் கதறிச் சொல்லித்து. இங்கேன்னா கண்ணாடி மாரி கூசற மணல் பரப்பு. ராத்திரியானா பாம்பெல்லாம் சும்மா உலா வருது.’

“நமக்கு செம டோஸ் இருக்கு. மரியாதையா மன்னிப்பு கேட்டுண்டு ‘சலோ குடஜாத்ரி’ தான்” என்றாள் சித்ரா.

“பேய்க்காத்துல மணலெல்லாம் பொரண்டிருக்கு. மெடல் டெடெக்டர் ஒண்ணும் காட்டல. குத்து மதிப்பா இந்தக் கம்பிகள்ல சிலிகான் உருண்டகளைக் கட்டி இழுத்துண்டு போவோம். “

‘அத எப்படி செய்யறது?’

“கொஞ்சம் ஆழமா ஒரு பெரிய வட்டத்தை மண் அள்ளும் மெஷினால போடச் சொல்வோம். நாம் நாலு பேரும் அதுல ஈஸ்ட், வெஸ்ட், சவுத், நார்த்துன்னு  நிப்போம். சிலிகான் சிப்ஸ் பொருந்தின கழி நம்ம ஒவ்வொருத்தர்கிட்டயும் இருக்கும். கம்போட மேல் பகுதியில ஒரு குட்டி மானிடர். அது படத்தக் காட்டிண்டே வரும். கம்பால சுழிச்சுண்டே போவோம். குழிலயும் தேடுவோம், குவிச்ச மணல்லயும் தேடுவோம்”

‘எனக்கு நம்பிக்க இல்லப்பா. கீழ விழுந்திருக்கறது ஏதோ உயிரியாகவே இருக்கட்டும். அது இந்த சிலிகான்ல எப்படி அகப்படும்?’ என்று கேட்டான் சுந்தரம்.

“இது முயற்சிதான்டா. ஆளே இல்லாத தீவுல நீ தனியா மாட்டிண்டேன்னா, அங்க இருக்கற ஏதோ பூர்வகுடியப் பாத்து ‘அப்பா, பொழைச்சேண்டா, மனுஷன் இருக்கான்னு’ சந்தோஷப்பட மாட்டியா?”

‘டேய், என்ன விட அவனுங்க தாண்டா குஷி ஆவாங்க. நரபலி கிடச்சா சும்மாவா?’

“அப்பப் போய் தூங்குடா, நாங்களே பாத்துக்கறோம்” என்றாள் எரிச்சலுடன் சித்ரா.

‘ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே.” என்று பாடி, அனைவரையும் தன் குரலால் இம்சித்த சுந்துவும் இதில் இணைந்து கொண்டான்.

அவனுடைய மானிடரில் இரும் பெரும் கற்கள் போன்றவைகள் காட்சிப்பட்டன. பாலைக் கற்கள் போல அவைகளில்லை. ஆனந்தியின் திரையில் நான்கு கற்கள், கூழாங்கற்களை ஒத்தவை, ஆனால் வரிவரியாக காணப்பட்டன.

மிக மென்மையான கரங்கள் கொண்டுள்ள ரோபோக்கள் மூலம் அவற்றை அகழ்ந்து எடுத்தார்கள். இராணுவத்தினருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘வைரம், அது இதுன்னு கொண்டு வருவீங்கன்னு பாத்தா, ஆறு கல்லைக் கொண்டு வந்திருக்கீங்க. இது எந்த அயல் கிரகத்தினுடையதுமில்லை. உயிர் இல்ல, கீழ போட்டா அப்படியே கார்பெட்ல உக்காந்திருக்கு. சின்ன சுத்தியலால உடைக்கப் பாத்தா, விமலன் தடுக்கறார். மலைக்குத் திரும்புவீங்கள்ல, அங்க ஆறு கல் வெளையாடுங்க. சிறு புள்ள வேளாமை வூடு வந்து சேராதுன்னு பெரியவங்க தெரியாமயா சொல்லியிருக்காங்க.’

நால்வருக்கும் இந்த அளவில் விட்டார்களே என்று தோன்றியது. ஆனால், அந்தக் கற்களை வீசிவிட மனமில்லை. தங்களுடன் குடஜாத்ரிக்குக் கொண்டு சென்றார்கள்.

வழக்கத்தைவிட அமைதியாக இருந்தான் சுந்தரம். இவை ஒரே வடிவத்தில் இல்லை, ஆனா, ஒரே எடை. அந்தக் கூழாங்கற்களின் வரிகளும் ஒன்றில் நெருக்கமாக, ஒன்றில் இடைவெளி விட்டு, ஒன்று பின்புறத்தில் மட்டும் வரி கொண்டதாக, மற்றொன்றில் கட்டம் கட்டமாக

‘என்ன சார், ஆழந்த சிந்தனை?’ என்று அவனை வம்பிற்கிழுத்த சித்ரா ‘ஒண்ண கவனீச்சிங்களா, அந்தப் பெரிய கல் ரெண்டிலயும் எந்தக் கோடுகளும் இல்ல, இந்தச் சின்னக் கல் நாலிலயும் வரி வரியா இருக்கு. இந்த மாதிரிக் கல் தார் பாலைவனத்துல கெடையாதுன்னு இராணுவமும் சொல்லித்து, கூகுள் ஆண்டவரும் சொல்றார்.’

“நானும் அதத்தான் யோசிக்கிறேன். ஆனா, கொஞ்சம் வயித்துக்குப் போட்டாதான் எனக்கு மூள வேல செய்யும்.” என்றாள் ஆனந்தி.

மூவரும் சரியாகச் சாப்பிட்டார்கள்; சுந்து தன் பங்கினை மூடி வைத்துவிட்டான். ‘ஏதோ யோசனயாயிருக்கு. வேணும்னா சூடு செஞ்சு சாப்டுக்கறேன்.’

இரு முறை மலையேறி இறங்கிய அசதி, தார் பாலைவன அலைச்சல், கணினியை விடாமல் பார்த்த கண் எரிச்சல் தன்னை மறந்து நால்வரும் தூங்கினார்கள்.

(மீதி அடுத்த மாதம் )

தனிச்சுடுகாடு – பெ.சிவக்குமார்

How 20,000 women in Vellore got together to save a dying river | India News  - Times of Indiaஇருவரும் விரைவாக வீட்டைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக ரோடு போட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தடைந்தனர். மணி 8.30 ஆனது. காலை சாப்பாடு இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சரியாக 9:00 மணிக்கு ரோடு போடும் வேலையை தொடக்கினார்கள்.

சேகரன் ரோடு போடுவதற்கு ஏதுவாக மண்வெட்டியை கொண்டு இரண்டு பக்கமும் உள்ள புற்களை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் . அவரது மனைவி அதனை எடுத்து ஒரு ஓரமாக குவித்து வைத்துக் கொண்டிருந்தார். மற்றவர்களும் தேவையான அளவு ஜல்லி, சிமெண்ட் போன்ற கலவைகளை கொண்டு வந்து வேலை செய்யும் இடத்தில் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.

சூரியன் உச்சியில் வந்து நின்று கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அனைவரும் மதிய உணவிற்காக வீட்டிலிருந்து கொண்டு வந்ததைக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். சரியாக இரண்டு மணி ஆனது.

அந்த ரோடு காண்ட்ராக்டர் அங்கே வந்து ,  

“வாங்க வேலையை பாருங்க !

 எந்திரிங்க ஐயா !எந்திரிங்க!

 எந்திரிங்கம்மா போங்கம்மா!”

 என்று கத்தினார். 

வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது சேகரனின் மனைவிக்கு காலில் ஏதோ கடித்து விட்டது. வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். என்ன கடித்தது என்று எதுவும் தெரியவில்லை! மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகுதான் பாம்பு கடித்திருக்கிறது என்பது உறுதியானது. சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது சிகிச்சை பலனளிக்காததால் சேகரின் மனைவி உயிர் பிரிந்தது. சேகரனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டிருந்தது. குழந்தைகளும் இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தையாக தங்களை பார்த்துக் கொள்வார்கள். இனி வீரம்மாள் இறந்த பிறகு சேகரனுக்கு துணை யார்? ஒன்றுமே புலப்படவில்லை! அவனுக்கு மனது மிகவும் வேதனை பட்டுக் கொண்டிருந்தது.

அவளைத் தென்னை ஓலை பாடையில் வைத்து ஊரின் வழியாக சுடுகாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

ஊர்காரர்கள் அவளுடைய பிணத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்தார்கள்.

“போங்கய்யா ஊரை சுத்தி போங்கய்யா! 

எங்கள் தெருவில் நடந்து போக கூடாது!

உங்களுக்கு தனிச்சுடுகாடு இருக்கு அங்க போங்கய்யா”

 என்று கூச்சலிட்டு கொண்டிருந்தார்கள்.

 “என்னங்க சாமி நாங்கதானே இந்த ரோடு போட்டு வேலை செஞ்சுகிட்டு இருக்கோம் எங்களையே இந்த தெருவுல நடக்க விடாமல் பண்ணுறீங்களே!”

 “நடக்க கூடாதுன்னா! நடக்க கூடாது! உனக்கு என்ன இவ்வளவு வாய் பேச்சு கேக்குது!”

 அந்த மேல் சாதி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த கீழ் சாதி மக்களின் பிணத்தைக் கூடத்  தெருவழியாக கொண்டு செல்லக்கூடாது என்று வழிமறித்தார்கள்.

தன்னுடைய மனைவியின் பிணத்தை கூட தெருவழியாக கொண்டு செல்ல இப்படி செய்கிறார்களே என்று சேகரனுக்கு மனம் நொந்து போனது!

 ஒருவழியாகப்  பிணத்தை சுமந்து கொண்டு 11 மைல் தாண்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் கிடந்த அந்த சுடுகாட்டில் தன்னுடைய மனைவியின் பிணத்தை எரித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.

அந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்த ஊரில் வாழ்வது மிகவும் சிரமம் என்று முடிவு செய்தனர்.இந்த ஊரில்  மேல் சாதிக்காரர்கள் கொடுமை இங்கு அதிகமாக இருக்கிறது. இன்று சேகரனின் மனைவிக்கு நேர்ந்த கொடுமையைப் போல நாளைக்கும் நமக்கும் இந்த கொடுமை நேருமே நாம் அப்போது என்ன செய்வது? இந்த ஊரு நமக்கு வேண்டாம் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்வோம் என்று கண்ணீர் சிந்திக் கொண்டே சில நாட்களுக்குப் பிறகு ஊரை விட்டு புலம்பெயர்ந்து சென்றார்கள் அந்த அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்கள்.

 ஒரு சில நாட்களுக்குப் பிறகு அடை மழை பிடித்தது. ஊரே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் வீட்டை விட்டு இன்னும் செல்ல முடியவில்லை மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டது மின்சார விளக்கு அனைத்தும் எரியாமல் போனது. மின் கம்பங்கள் கீழே விழுந்து விட்டன.

அந்த ஊர் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கி மாண்டு போனார்கள்

அந்த ஊரே  தனிச்சுடுகாடு ஆனது……….

 

பார்த்தது, கேட்டது, படித்தது – நினைவில் நின்றது – சுவாமிநாதன்

இதுவும் K B யின் இரண்டு வார T V தொடர். 40/45 வருடம் ஆகிவிட்டது. இதன் பெயர் மறக்கவே முடியாது. ஏன் என்றால் அது கதையில் ஒரு பாத்திரமாகவே வரும்.
இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் எழுதி இயக்கிய "சேரன் எக்ஸ்பிரஸ்" குறும்படம்  | K. Balachander | JayaTv - YouTube
” சேரன் எக்ஸ்பிரஸ் “

கதை நடக்கும் இடமே புதுமையாக இருக்கும். சிறிய தனி வீடு, ரயில்வே ட்ராக்குக்கு வெகு அருகில். இரண்டு ஊர்களுக்கு நடுவில். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது.

மூன்றே பேர் வசிக்கிறார்கள். அம்மா, பையன், மருமகள். ரொம்ப ஒற்றுமையான, சந்தோஷமான குடும்பம். மூன்று பேரும் ரொம்ப ரொம்ப நல்லவர்கள்.

மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ளும் அளவுக்கு அன்யோன்யம். மற்ற இரண்டு நடிகர்கள் யார் என்று நினைவு இல்லை. அம்மாவாக நடித்த(வாழ்ந்த)வர் S N லக்ஷ்மி.

அந்த வீடுப்பக்கத்தில் இருக்கும் ரயில்வே ட்ராக்கில்தான் கோவை to சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் செல்லும். அதில் தான் அந்த மகன் டிரைவராக வேலை செய்கிறான். அந்த வீட்டை க்ராஸ் செய்யும்போது விசில் அடிப்பான். அம்மாவும், நாட்டுப் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வார்கள். நடுவிலே இடையில் ஒருநாள் இரண்டு நாள் ஓய்வு கிடைக்கும் போது வந்து கூட இருப்பான்.

“நாம சென்னையிலோ, கோவையிலோ வீடு வாடகை எடுத்துத் தங்கலாமே” என்று அம்மா கேட்கும்போது. “அங்கெல்லாம் வாடகை ரொம்ப அதிகம்மா. அதைத்தவிர இந்த மாதிரி அமைதியான, சுத்தமான இடம் அங்கே கிடைக்காது” என்று சொல்லி விடுவான்.

அவர்களின் நிறைவான ஒற்றுமையான வாழ்க்கையைக் காட்ட சில சம்பவங்களை காட்டுவார்கள்.

ஒருமுறை அந்த பெண் ப்ரெக்னன்ஸி டெஸ்ட் எடுத்து ரிடல்டுக்கு காத்திருக்கிறாள். பையன் வேலைக்குப் போகும் போது சொல்லிவிட்டுப் போவான். “டெஸ்டில் பாசிடிவ் ரிசல்ட் வந்தால்- மொட்டைமாடியில் லைட் போட்டுவிட்டு பச்சைக் கலர் புடவை கட்டிக் கொண்டு நில். இல்லாவிட்டால் எப்போதும் போல இருந்தது விடு” என்று.

ரிசல்ட் பாசிடிவ் என்று வந்ததும் இருவரும் பெரும் சந்தோஷம். பச்சைப்புடவை கட்டிக் கொண்ட பெண்ணைப் பார்த்து கேலியாக “11 மணிக்கு மேல் வரப்போகும் ட்ரெயினுக்கு 4 மணி நேரம் முன்னாடியே தயாரா இருக்கியே” என்று கேலி செய்வாள்.

வண்டி க்ராஸ் செய்வதற்கு ரொம்ப முன்னாடியே மேலே போய் லைட் போட்டுவிட்டு நின்று விட்டாள். வண்டி தாண்டிப் போகும்போது, பார்த்துவிட்டு எப்போதையும் விட அதிக முறை அதிக நேரம் விசில் அடித்துக் கொண்டே சேரன் எக்ஸ்பிரஸ் சென்றது. கீழே வந்த பெண்ணிடம். ” ரொம்ப சந்தோஷம் போல, விசில் சத்தம் தாங்கல்ல” என்று சொல்லி திருஷ்டி கழிப்பது போல செய்வாள். அடுத்த நாள் ரிடர்ன் ட்ரிப் சேரன் எக்ஸ்பிரஸ் போகும் போதும் அதிக விசில் சப்தம் கேட்டது அதோடு மாடியில் தொப் என்று ஏதோ சப்தம் கேட்டது. வேகமாகப் போய்ப் பார்த்தால் ஒரு நன்கு பேக் செய்த பார்சல் இருந்தது. கீழே எடுத்துவந்து பிரித்தால் ஒரு அழகான புடவையோடு இனிப்பும் இருந்தது. “எவ்வளவு கரெக்ட்டா நம்ம வீட்டு மாடியில் விழறமாதிரி அந்த வேகத்திலயும் போட்டுருக்கார் பாத்தீங்களா” என்று கேட்கும் போது “இது என்ன ஒரு டிரைவருக்கு இது கூட முடியாதா என்ன? பல ஸ்டேஷன்களில் கீயை போட்டுட்டு அங்க தரும் கீயை வாங்கிண்டு போரவனுக்கு இது ஒரு விஷயம்” என்று சொல்வாள். (அந்த காலத்தில் அப்படி ஒரு பழக்கம் இருந்தது. பெரிய வளையத்தில் நீளமான பிடிபோல ஒன்று இருக்கும் அதை ஸ்டேஷனில் மாற்றிக் கொள்வார்கள் – நிற்காமல் போனாலும்)

அவன் வந்ததும் மூவரும் சந்தோஷமாக பேசுவது, அவர்கள் தனியாக இருக்கட்டும் என்று அம்மா வெளியே போவது என்று நடக்கும்.

ஒருநாள் இரவு வழக்கம்போல நள்ளிரவு நேரம் வரை பேசிக்கொண்டே மருமகளும் மாமியாரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். “சீக்கிரம் தூங்கு என்று சொல்லும்போது” “இன்னும் சேரன் எக்ஸ்பிரஸ் போகலியே என்று சொல்லுவாள். சற்று நேரத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் கடந்து போகும் ஆனால் விசில் சப்தம் இல்லாமல் போகும். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடும், ஏன் என்ற கேள்வியும் பார்த்துக் கொள்வார்கள். “ஏம்மா ஏதாவது சண்டையாயிடுச்சா சந்தோஷமாத்தானே போனான். என்ன ஆச்சு? “

“ஒண்ணும் இல்லயேம்மா. இந்த முறை 10 நாள் ஆகலாம்னு சொன்னார். “

” இந்த நிலையில உன் தூக்கத்த கெடுக்க வேணாம்னு சத்தம் போடாம போறான் போல நீ தூங்கு” என்று சொல்கிறாள். அம்மா தன் மருமகளுக்கு எண்ணை தேய்த்து விடுகிறாள். தந்தோஷமா பேசிக்கொண்டே இருக்குறார்கள் அப்போது யாரோ
பெல் அடிக்கிறார்கள். மகள் கிணற்றடியில் குளிக்க விட்டு விட்டு அம்மா வெளியிலே வருகிறாள். யாரோ ஒருவர் வந்திருக்கிறார் இவர்களுக்குத் தெரிந்த ஒரு சிநேகிதி அவரிடம் “இந்த வீடுதான், இவங்கதான் அவரோட அம்மா” என்று சொல்கிறாள்.

வந்திருப்பவர் தான் ரயில்வே ஊழியன் என்றும், சென்னையில் அவருடைய மகன் வையனை க்ராஸ் பெண்ணுமபோது ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார் என்றும். பாடியும் ஒரு மூட்டையாய் சாக்குப் பையில்தான் வரும் என்றும் சொல்கிறார். அம்மா இடிந்து போகிறார். அங்கிருந்தே கிணற்றடியில் மகள் சந்தோஷமாக பாட்டுப் பாடிக் கொண்டே குளித்துக் கொண்டு இருப்பதை பார்க்கிறாள். ரயில்வே அதிகாரியிடம். “ஐயா அந்த பாடிய இங்கே கொண்டு வரவேண்டாம். இங்கே இரண்டு உயிர்கள் இருக்கின்றன. அங்கேயே அடக்கம் செய்து விடுங்கள். நான் தான் அம்மா எதிலெல்லாம் கைநாட்டு வைக்கணுமோ , நான் வைக்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்” என்று அனுப்பி விடுவாள்.

அந்த சிநேகிதி இடம் “இவள் நல்லபடியாக பிள்ளை பெற்று பிழைக்க வேண்டும். நீயும் தப்பித் தவறிக்கூட அவளிடம் சொல்லி விடாதே” என்றாள். “எத்தனை நாள் சொல்லாமல் இருப்பீர்கள்” என்று கேட்கும் போது ” தெரியல்ல” என்று பதில் சொல்வாள்.

கண்ணை துடைத்துக் கொண்டு உள்ளே வந்து. “நம்ம பையனை ஏதோ காரணத்துக்காக வட இந்தியா பகிர ரயிலில் டிரைவராக அனுப்பி இருக்கிறார்களாம். அதனால் வர இன்னும் சில நாட்கள் அதிகமாகுமாம். அதைசொல்லத்தான் யாரையோ அனுப்பி இருக்கிறார்கள்” என்று சொல்லி விடுவாள்.

தனிமையில் அழுதும் மருமகளோடு இருக்கும்போது வழக்கமாக இருக்கவும் மிகக் கஷ்டப்படுவாள்.

அதைக் காட்டுகிற காட்சிகள் மனதைத் தொடும்

அழகான குழந்தை பிறக்கிறது. “இவ்வளவு நாளா வராமல் இருப்பார்கள். வரட்டும் இந்த வேலையை வேண்டாம் என்று சொல்லச் சொல்கிறேன்.” என்று ஏதேதோ பேசுவாள். அம்மா சமாதானமாக ஏதாவது சொல்வாள்.

சில காட்சிகள் இதுபோல காட்டப்படும். நமக்கே தோன்றும் எப்படி முடிக்கப் போகிறார். அந்த விஷயம் கேட்டதும் என்ன நடக்கும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும்போது, பாலச்சந்தரின் குரலில். “என்றாவது ஒருநாள் இந்த விஷயம் அவளுக்குத் தெரியத் தானே போகிறது. அந்த நாளை சந்திக்க அந்த தாய்க்கு தைரியம் இல்லை எனக்கும் தான்” என்று முடித்து விடுவார்.

அந்த வீடு, சூழ்நிலை, S N லஷ்மி யின் அபாரமான நடிப்பு, அந்த முடிவு இன்றும் நினைவில் நிற்கிறது, கண் கலங்குகிறது.

அதன் காணொளி இரண்டு பாகங்கள் இதோ: 

‘சுடுபனியும் குளிர் நெருப்பும்’ பாகம் -5 (ஐஸ்லாந்து பயணத் தொடர்) இந்திரநீலன் சுரேஷ்

சென்ற இதழில்,

“வேல் பார்த்திருக்கிறீர்களா?”

“நாங்கள் பார்க்காத வேலா? வெற்றி வேல், வீர வேல், சக்தி வேல், ஞான வேல்..! “

“போதுமே உங்கள் மொக்கை ஜோக்.. ஜோன் குறிப்பிடுவது Whale Shark !”

“ஆம்.. நாம் நாளை கடலுக்குள் போய் நிஜ Whale ஐப் பார்க்கப் போகிறோம்” என்றார் ஜோன், தங்கும் இடம் வாசலில் வாகனத்தை நிறுத்தியவாறே..

***********************************

இனி,

உலகத்திலேயே Whale Watching பார்க்கச் சிறந்த நாடுகளின் தரவரிசையில் ஐஸ்லாந்தும் ஒன்று. இங்கே வடபகுதியில் உள்ள SKJAIFANDI BAY, திமிங்கிலங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம் ; நமக்குத்தான்! 

Original 3 Hour Whale Watching Adventure in Oak Boats with Transfer from Husavik | Guide to Iceland

இந்த விரி குடாவில்தான் HUSAVIK கிராமம் உள்ளது. கடல் நீரைத் தழுவியபடி கட்டிவைத்திருக்கும் வண்ணப் படகுகளின் அலைவரிசை, பழமையான வேலைப்பாடுகள் கொண்ட சர்ச், கடலுக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் பசுமை திட்டு எனக் காட்சியளிக்கும் அழகான இந்த  கிராமம்தான் Whale capital of Iceland!

மே முதல் செப்டம்பர் வரை திமிங்கிலங்கள் இங்கு வந்து லூட்டி அடிக்கும் ; ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கடல் நீர் சற்று வெப்பமடைவதால் அந்த மாதங்கள்தான் பீக் சீசன்.  நீல திமிங்கிலம் (Blue Whale), KEIKO, Killer Whale, Humpback என்று சுமார் 20 வகையான திமிங்கிலங்களைப் பார்க்கும் வாய்ப்பு உள்ளது.  இதில் Humpback திமிங்கிலங்கள் வருடத்துக்கு சுமார் 5000  மைல்களுக்கு மேல் பயணம் செய்யும் வலிமை கொண்டவை.

மூன்று மணிநேர Whale Watching படகு பயணத்திற்குப் பதிவு செய்ய கவுண்டர்கள் உள்ளன. 

இங்கு கதிரவன் உச்சி வெய்யிலாக இல்லாமல் சற்று சாய்ந்த நிலையில், நெருக்கமாக இருக்கும். அதனால் குளிரூட்டும் கண்ணாடி, முகத்திற்கு சூரிய கதிரைத் தடுக்கும் லோஷன்கள், தொப்பி, ஜாக்கெட் சகிதம் புறப்பட்டோம். Sea Sickness உள்ளவர்கள் தேவையான மாத்திரைகளை முன்னேற்பாடாக எடுத்துக்கொள்வது நல்லது.

படகின் உயர் மட்ட டெக்கிலிருந்து பார்க்க, பனி சூழ்ந்த பிரதேசங்களும், நீலக் கடலும் கவர்ந்திழுக்க, சிவப்பு மூக்கு Puffin பறவைகள், டால்பின்கள், பலவித ஆர்டிக் பறவைகள் எனக் கடல் கொள்ளாக் காட்சி!

டெக்கில்  ‘தொங்கும் கயிறைப் பிடித்தபடி, “அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்..!!”

என்று உற்சாகமாகப் பாடத் தோன்றும். ஆனால், தொப்பி பறந்து விடும். கடற்காற்றைக் கிழித்துக் கொண்டு, ஸ்பீட் போட் சக்கைப் போடு போட்டுப்  போக, கண் முன் மூன்று தொப்பிகளாவது காற்றில் பறந்து கடலுக்குள் விழுவதைப் பார்த்தோம்.

கடலுக்குள் அரைமணி நேரம் பயணம் செய்தோம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் திரண்டிருப்பதைப் பார்த்து படகு அதை நோக்கி விரைந்தது.

அங்குதான் திமிங்கிலம் ஒன்று மீன் வேட்டையாடிக் கொண்டிருந்தது. கடலுக்குள்ளிருந்து பகாசுரன் போல அகலமாக வாயைத் திறந்தபடி மேலெழும்பி அப்படியே கிலோ கணக்கில் கொத்தாக மீன்களை அள்ளுகிறது.

அள்ளிய வேகத்தில் ஒரு தலைகுப்புற டைவ் அடித்து கடலுக்குள் வீழ்கிறது. அப்படி நீருக்குள் செல்லும் போது அதன் வால் பகுதியில் இரண்டாகப் பிரியும் இறக்கையிலிருந்து ஷவரிலிருந்து கொட்டுவது போல நீர் சொறிய, சுற்றிலும் வட்ட வட்ட நீரலைகள் தளும்ப, அதைப் பார்த்து படகிலுள்ள குழந்தைகள் கூச்சலிட்டுக் குதூகலிக்கின்றன !

அது சரி, பெரிய பறவைக் கூட்டம் ஏன் அங்கு இருக்கிறது?

திமிங்கிலம் கீழிருந்து வாயைத் திறந்தபடி மேலெழும்பி மீன்களை அள்ளி, தன் அகலமான வாயை மூடும் சில நொடிகளுக்குள், ரெடியாக இருக்கும் நாரைகள் இந்த மில்லி செகண்ட் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு திமிங்கிலத்தின் வாயிலிருந்து மீனைக் கவ்வுகின்றன. சற்று தாமதித்தாலும் திமிங்கிலத்தின் வாய்க்குள் பறவை போய்விட வேண்டியதுதான்.. அப்படிப்பட்ட அபாயம் !

Brydes Whale Eating Small Fishmany Bird Stock Photo 754765390 | Shutterstockஇந்த காட்சியைப் பார்ப்பதற்கே திரில்லிங்காக இருக்கிறது. Survival of the Fittest தத்துவத்தைக் கண் எதிரே காட்சியாகக் காணும் போது மெய் சிலிர்க்கிறது!

சில திமிங்கிலங்கள், ஸ்பீட் போட்டைக் கண்டவுடன் ‘எங்க ஏரியாக்குள்ள ஏண்டா வந்தே?’ என்று போட்’டை உலுக்கி அசைத்துப் பார்க்கின்றன. சில படகுகளின் அடி, கீழ்ப் பகுதிகளில் டிரான்ஸ்பேரென்ட் கண்ணாடிகளைப் பதித்திருக்கிறார்கள். அதனால், நீரினுள் திமிங்கிலத்தின் முழு உருவத்தையும் பார்க்க வாய்ப்பு உள்ளது.

சில சமயங்களில், சேர்ந்தாற் போல ஜோடியாக திமிங்கிலங்கள் ஒன்றின்மீது ஒன்று தழுவி, வழுக்கி, எழும்பித் தெரிந்து, மறைந்து விளையாடுவதைக் காணலாம். அந்த அதிர்ஷ்டம் வாய்த்தால் ஜென்மம் சாபல்யமடையும், உறுதி! 

கலாட்டாவான இந்தப் படகு பயணத்தில், சுவாரசியமான தகவல்களுடன் ரன்னிங் கமென்டரி சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

கரைக்குத் திரும்பியபின் அருகிலுள்ள HUSAVIK Whale மியூஸியம் பார்க்கலாம். அந்த கிராமத்தை விட்டு கிளம்ப மனமிருக்காது.

************************************

ஐஸ்லாந்தில், உங்கள் பயண நாட்களையும், வசதியையும், விருப்பத்தையும் பொறுத்து பார்ப்பதற்குப் பல இடங்கள் உள்ளன. அது பற்றி ஒரு சின்ன கிளான்ஸ்!

SKOGAFOSS

View of Skogafoss Waterfall with the rainbow in winter time, Iceland. Stock Photo | Adobe Stock

ஐஸ்லாந்தின்  தெற்கே, SKOGA ஆற்றில் உள்ள அழகான பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி இது. SKOGA ஆறு, SKOGAFOSS வந்து சேரும் முன்  சுமார் 30 அருவிகளாகக் கொட்டி முடித்து, அதன் பின் இங்கு அருவியாகக் கொட்டுகிறது. இது ஐஸ்லாந்தின் இயற்கை எழிலுக்கோர் சான்று.

நிலத்திலிருந்து சுமார் 200 அடி உயரமும், 80 அடி அகலமும் கொண்டது. பச்சை வர்ணம் எடுத்து, பனித்துளி நீரைத் தொட்டுத் தீட்டியது போல உள்ளது இங்கிருக்கும் மலை. 500 சொச்சம் படிகள் மூலம் ஏறினால் அருவி ஆரம்பிக்கும் முனைக்குச் சென்று பார்க்கலாம்.. வியக்கலாம்! தலைநகரிலிருந்து இரண்டு மணி நேரப் பயணம் செய்து இந்த அருவியை அடையலாம்.

SELJALANDSFOSS

நம்முடைய ஜம்மு – லே, தேசிய நெடுஞ்சாலை NH 1 என்று அழைப்பார்கள். இங்குள்ள நம்பர் – 1 சாலை தலைநகர் ரேக்கவிக்கிலிருந்து துவங்கி ஐஸ்லாந்தை ஒரு மாலை போலச் சுற்றி வருகிறது. அந்த சாலையின் தெற்குப் பகுதியில் 120 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த அருவி.

210 அடி உயரத்திலிருந்து விழும் அழகான அருவி. கோடை காலத்தில், பின்னால் சென்று அருவி (முன்னால்) கொட்டுவதைப்  பார்க்கலாம். ஆனாலும், குளிர் காலத்தில்  அருவியின் பின்னால் செல்வது ஆபத்தானது, வழுக்கும் என்பது மட்டுமல்லாமல் ‘ஐசிகில்’கள் (icicle) விழுந்து உடையும் ஆபத்தும் உள்ளது.

Premium Vector | Icicle

Icicle என்பது நீரானது மேலிருந்து விழ ஆரம்பித்து, விழுந்து முடிவதற்குள் அப்படியே உறைந்து போகும் தன்மை. சீதோஷண நிலை சற்று உயரும் போது, இவை உடைந்து நம் மேல் விழும் அபாயம் உள்ளது என்பதை கைடுகள் விளக்கிச் சொல்கிறார்கள்.

VATNAJOKULL தேசிய பனி பூங்கா / JOKULSARLON

 

 

 

ஐரோப்பாவின் மிகப்பெரிய பனிப்பாறை கூட்டம் (Glacier) என்று அழைக்கப்படும் இந்த தேசிய பனி பூங்கா, நாட்டின் 14% இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அடுக்கடுக்காக பனி வரிசைகளைக் காண, கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது.

Free Blue Icebergs Under Cloudy Sky Stock Photo

 

கிளேசியர் உருகி வடியும் நீரோட்டம்  JOKULSARLON என்னும் பெரிய ஏரியில் தேங்குகிறது. பிறகு அந்த நல்ல நீர், உப்பங்கழி வழியே கடலில் சங்கமிக்கிறது. இந்த இடத்தில் அருமையான படகு சவாரி வசதி உண்டு. சீல் (Seal) என்னும் நீர் நாய்களை முகத்துவாரத்தில் காண இயலும்.

தெற்கு கடற்கரையில் உள்ள இத்தடாகம், ஐஸ்லாந்தின் ஆழமான நீர்த் தேக்கங்களில் முதன்மையானது.

இந்த இடத்தில் பனிப்பாறைகள் உருகி உடைந்து கடலுடன் கலக்கும் அழகைப் பார்க்கலாம். பனிப்பாறைகள் உடையும் சத்தம், அந்த அமைதியான சூழ்நிலையில் அது கடலில் விழும்போது ஏற்படும் புகையும், நீர் தெளிப்பும், கரைந்து ஓடி கடலுக்குள் செல்லும் காட்சியும் பார்க்கப் பேரின்பம். இதில் சில பனிப் பாறைகள் ஆயிரம் வருடங்கள் கூட உருகாமல் நிற்கின்றன, என்கிறார்கள்

Diamond Beach / Black Sand Beach

A couple standing on Fellsfjara, Diamond Beach, at sunset

மேலே சொன்ன ‘JOKULSARLON லகூன்’ அருகில் உள்ளது  இந்த வைரக் கடற்கரையில் இயற்கை செதுக்கியுள்ள வெளிர் நீலப் பனிப் பாறைகளை, தேர்தெடுத்த சிற்பிகளால் கூட அத்தனை நேர்த்தியாகச் செதுக்க முடியாது.

 

ஏரியிலிருந்து கலக்கும் நீர் ஒருபுறம், மறுபக்கம் நீலக்கடல், இடையே எரிமலை குழம்புகளால் உருவான கருமணல் கடற்கரை. கருப்பு மணலில் வெள்ளி அலைகள் நுரைகள் தளும்ப வந்து மோதும் காட்சி, கவிதை!

கடலுக்குள் ஆங்காங்கே செதுக்கப்பட்ட குகைகள் போன்ற அமைப்புகளும், கடலுக்குள் மிதந்து கொண்டு வெளியே தலை நீட்டும் பனிப் பாறைகளையும் காணக் கண்கோடி வேண்டும். கடல் ஆமைகளையும் பார்க்க வாய்ப்பு உள்ளது.

தலைநகர் ரேக்கவிக்கிலிருந்து 360 கி.மீ, தேசிய நெடுஞ்சாலை எண் :1 வழியே, 6 மணி நேரம் தெற்கு நோக்கிப் பயணித்தால் இந்த கடற்கரையை அடையலாம். 

ICE CAVES in VATNAJOKULL GLACIER

இயற்கை செய்யும் எத்தனையோ ஜாலங்களில் ஒன்றுதான் இந்த நீலப் பனிக் குகை. இப்படி இயற்கை தன் கை வண்ணத்தில் உருவாக்கும் குகைகள் உருமாறிக்கொண்டே இருக்கும்.

உதாரணமாக, சென்ற வருடம் இருந்த குகை இந்த வருடம் இருக்காது. அதனால் இங்குள்ள அனுபவமிக்க கைடுகள் சீசன் ஆரம்பிக்கும் முன்னரே இது போன்ற குகைகளைத் தேடிக் கண்டுபிடித்து வைப்பார்கள். குளிர் காலத்தில் செல்ல வேண்டிய சுற்றுலா பகுதி இது.

Ice-Caves in Vatnajökull | Visit Vatnajökullஆர்வம் இருப்பவர்கள் டூர் ஆபரேட்டர் மூலம் பதிவு செய்து கொள்ளவேண்டும். JOKULSARLON லகூனிலிருந்து செல்லலாம். வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழும் அனுபவத்தைக் கொடுக்கும் பயணம் இது.

Disney இன் FROZEN படத்தில் பனி குகைகளைக் கற்பனையாகப் பார்த்தவர்களுக்கு நேரில் அது போன்ற குகைகளைத் தரிசிக்க வாய்ப்பு!  நீல ஐஸ் குகைகள், அதனுள் வெள்ளைப் பனி படுகைகள், குகையில் ஆங்காங்கே வெளிப்படும் சிறிய இடைவெளி வழியே நுழையும் சூரியக் கதிர் எனப் பிரமிப்பூட்டும்!

Landmannalaugar

Breathtaking Photos of Landmannalaugar in Iceland Will Give You Summer Vacation Goals | India.comஒரே மலையில் எத்தனை வண்ணங்களைப் பார்க்க முடியும் என்ற கேள்விக்குப் பதில்தான் இந்தப் பகுதி; நிறைய சுடுநீர் குளங்கள் உள்ள இடம். இங்குள்ள ‘ப்ளூ பீக்’ எனப்படும் Mt. BLAAHNJUKAR, மலை ஏற்றப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். இந்த லாவா படுகை அமைந்த மலையிலிருந்து, குறைந்த பட்சம் ஐந்து Glacier பகுதிகள் வரை தெளிவான வெளிச்ச நாட்களில் காணலாம் என்கிறார்கள்.

 

GRJOTAGJA Hot Spring Cave

Bathing at Grjótagjá Thermal Spring - Luxe Adventure Travelerஇந்த ‘Game of Thrones’ ஆங்கில சீரியல் புகழ் சுடுநீர் குளம், ஐஸ்லாந்தின் வட பகுதியில் உள்ளது. 300 பேர்வரை குளிக்க, உடை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ள இந்த இடம். ஹனிமூன் செல்பவர்களுக்கும், இளசுகளுக்கும் சொர்க்கம்!

இரவு தங்கும் இடம் திரும்பியதும், ஜோனையும் டீ குடிக்க அழைத்தோம். டீ தயாராகும் சமயத்தில் டைம் ஷேர் ஓனர், தங்கள் இல்லத்தில் தயாரித்த கேக் பார்சலுடன் வந்து சேர்ந்து கொண்டார். டீ கோப்பையை அவருக்கும் நீட்டியபடி,

“இங்கு அடிக்கடி பேசப்படும் இந்த ‘வடக்கு ஒளி’ என்னும் Northern Lights ஐ எப்போது பார்க்கப் போகிறோம்?” என்று கேட்டோம்.

“முதலில் Northern Lights பற்றிச் சொல்கிறேன். பிறகு எப்போது பார்க்கலாம் என்பது பற்றிப் பேசுவோம்”,  என்றார் கேக் பார்சலைப் பிரித்தபடி..

 

(தொடரும்..)

 

இணையானதொன்றில்லை…. – எஸ் வி வேணுகோபாலன் 

டி ஆர் மகாலிங்கம் 100
T R M -^- டி ஆர் எம்T.R.Mahalingam | Antru Kanda MugamT.R. Mahalingam – Movies, Bio and Lists on MUBI

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் … என்ற அடியை எப்போது நினைத்துக் கொண்டாலும் மனத்திரையில் தோன்றும் பிம்பம், டி ஆர் மகாலிங்கம் அவர்களுடையது தான். அவரது குழந்தைமை ததும்பும் மலர்ச்சியான புன்னகையை எத்தனையெத்தனை பாடல் காட்சிகளில், வெகுளியாக அவர் தோன்றும் திரைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம். அந்த அமைதியான உருவத்தினுள் எப்படி ஆர்ப்பரிக்கும் ஆழமான இசையூற்று குடியிருந்தது என்பது மலைக்க வைப்பது.  சோழவந்தான் வழங்கிய இந்த மேதை, திரையிசையை ஆளவந்தான் தான்!

உதகமண்டலத்திலிருந்து மசினகுடி செல்லும் பாதையில் 35க்கு மேலிருக்கும் கொண்டை ஊசி வளைவுகள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சென்ற நாள் இன்னும் நினைவில் உண்டு. கர்நாடக இசை விற்பன்னர்கள் சிலரது அசாத்திய ஆரோகண அவரோகண ஆலாபனைகள் கேட்கையில் அதேபோலவே மயிர்க்கூச்செறியும் அனுபவம் உணர்வதுண்டு. மகாலிங்கத்தின் பாடல்கள் சிலவற்றைக் கேட்கையில், இந்தக் கொண்டை ஊசி வளைவில் வாகனம் நேர்த்தியாக ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்குத் திரும்புவது மட்டுமின்றிக் கொஞ்சம் காற்றில் மிதந்த வண்ணம் போவது போலவும் தோன்றும் இடங்கள் அறியமுடியும்.

நொடி நேரத்தில் காகிதத்தில் உருமாற்றங்கள் நிகழ்த்திக் கொண்டே போகும் ஒரிகாமி கலைஞரைப் போலவும், சடாலென்று எடுத்து ஊதிக் காட்டும் பலூன்காரர் போலவும், இந்த முனையிலிருந்து அடுத்த முனைக்கு சிறிதும் ஆடாமல் அசையாமல் நீண்ட கழியைக் கையில் பிடித்தபடி கயிற்றின் மீது நடந்துபோகும் வித்தைக்காரர் போலவும் வண்டியை விட்டு நாள் கணக்கில் கீழிறங்காது வாகனத்தை முன்னும் பின்னும் இடமும் வலமும் திருப்பியும் சக்கரங்களில் ஒன்றை நிமிர்த்தியும் வளைத்தும் ஓட்டுவது போதாதென்று, தண்ணீர் நிரம்பிய குடத்தை உதட்டுப் பிடிமானத்தில் ஏந்தியபடி சுற்றிச் சுழன்று வரும் சைக்கிள் போட்டிக்காரர் போலவும் கூட என்னென்ன மாயங்களை  நிகழ்த்த வல்ல குரலரசனாகத் திகழ்ந்தவர் டி ஆர் மகாலிங்கம்!

தன்னை மிகவும் நேசித்து ஆட்கொண்ட சீர்காழி கோவிந்தராஜனோடு போட்டி போட்டுக் கொண்டு டி ஆர் எம் பாடியிருக்கும் அகத்தியர் படத்தின் ‘நமச்சிவாயமென்று சொல்வோமே…நாராயண எனச் சொல்வோமே.’ .பாடலை அறிய வந்த நாள் முதல் ஓயாமல் பாடிப்பாடி ரசித்தது இருவரது கம்பீரக் குரல்களுக்காகத் தான் என்றாலும், அதில் நுட்பமான அழகியலோடு மகாலிங்கம் இசைத்திருக்கும் இடங்களின் மீது அத்தனை காதல் கொண்டிருந்த நேரமது. ‘பள்ளி கொண்டார் திருமால், பாற்கடலில்’ என்ற அடியைப் பாடுகையில் அந்தப் பாற்கடல் அத்தனை சுவையாக ஒலிக்கும் அவரது குரலில்!  வரிக்கு வரி சிவன் – திருமால் ஆதரவு எதிரெதிர் வாதங்கள் போலப் புனையப்பட்டிருந்த பாடலின் போக்கில் இருவரது ஆலாபனைகள் கனஜோராகக் கேட்கும். அதிலும் மகாலிங்கம் வழங்கும் விதம் நெஞ்சை ஈர்க்கும்.  ‘ஆண்டவன் தரிசனமே’ பாடலில் அவர் பின்னிக்கொண்டே செல்லும் இசையழகு சொக்கவைப்பது.

அவரது பக்தி, ரசிகர்களின் பரவசம். திருவிளையாடல் படத்தில் அவரது இசை பங்களிப்பு ஒப்பற்றது. விவரிப்புக்கு அப்பாற்பட்டது. ‘இல்லாததொன்றில்லை…’ பாடலில் இல்லாதது ஒன்றுமில்லை. சொற்சுவை மிகுந்த அந்தப் பாடலின் ஒவ்வொரு சரணத்திலும் அவர் ராக அமுதத்தை, முகந்தெடுத்துக் கொடுப்பது, கிணற்றில் செப்புக் குடத்தைத் தாம்புக் கயிற்றில் இறக்கி அது மெல்ல மிதந்துகொண்டேஇருக்க, அதை மெல்ல ஏமாற்றி அதில் நீர்புக வைத்து அந்தப் பளுவில் கீழிறங்கும்போது  மேலும் நீர் நிரப்பிக் கடைசியில் ஆழத்தில் அமிழ்த்தி நிமிர்த்திக் கயிற்றைப் பற்றி இழுத்த இளமைக்கால நினைவுகளுக்குள் கொண்டு சென்றுவிடும் என்னை.  அதிலும் ‘கல்லான உருவமும்….’  என்பதன் அழகான மிதமான நீட்சியில் ‘கனிவான உள்ளமும்’ என்ற சொற்களில் அந்தக் கனிவைத் தரமாகப் பிரித்துப் பிழியும் அவரது ரசமான வெளிப்பாடு நெஞ்சை அள்ளும். ஒவ்வொரு சரணத்திலும் அவர் நெய்யும் ஆலாபனை நெசவு அபாரமானது. அமைதியான ஊஞ்சல் அனுபவம் இந்தப் பாடலெனில், அதே படத்தின்  ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’  ஓர் அதிவேகக் குடை ராட்டினம். அரசனிடமும், மனைவியிடமும், சிவனிடமும் அந்தப் பாத்திரமாக அவர் பேசுவதில் கூட இசை தெறிக்கும்.

ராஜராஜ சோழனில் சிவாஜி கணேசன் குரலையடுத்து, ‘தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்’ பாடலில் அவர் உருவாக்கும் சுவாரசியமான சங்கதிகள் மறக்க முடியாதவை. ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ பாடலின் தாளகதியும், அவரது குரலோட்டமும் கால்களைத் தாளமிட வைக்கும். ‘திருவருள் தரும் தெய்வம்’ பாடலில் பெருகும் அவரது இசைஞானம் ஈர்ப்பது. 

காதல் பொங்கும் அவரது இசைஞானத்திற்கு ஏற்ப அவருக்கு அபாரமான பாடல்கள் பலவும் வாய்த்தது ரசிகர்களுக்குக் கிடைத்த வரம். ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ இடம் பெறாத இசைக்கச்சேரிகள் ஆகக் குறைவாகவே இருக்கும். திருமண வரவேற்புகளில் நேயர் விருப்பம் எழுதும் விரல்களில் ஒன்றில் சில்லென்று பூத்துவிடும் இந்தப் பாடலுக்கான கோரிக்கை. முதல் சரணத்தின் நிறைவில், செவ்வந்திப் பூச்சரத்தை அவர் தொடுக்கும் விதமே அலாதி. இரண்டாம் சரணத்தில்  ‘கண்களில் நீலம் விளைத்தவளோ, அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ’ கேட்கும்போதெல்லாம்  குற்றியலுகர விதிகளுக்கு அப்பாற்பட்ட அந்த ஒலியை ரசிப்பதுண்டு. மறுக்க முடியாத காதல் ததும்பும் அவரது விழிகளில் – அது இசைத்தமிழின் மீதான காதலாக இருந்திருக்கக் கூடும்.

வெவ்வேறு இணைக் குரல்கள் அவருக்கு வாகாக அமைந்து கொண்டே இருந்தது அந்தப் பாடல்களுக்கு சாகாவரம் அளித்துவிட்டது. பி சுசீலாவின் தேனினிமைக்  குரலோடு இணைந்து அவர் இசைத்த ‘ஆடை கட்டி வந்த நிலவோ…’ நம்மைச் சந்திர மண்டலத்தில் கொண்டு இறக்கும் கீதம்.  ‘அந்தி வெயில் பெற்ற மகளோ….’ என்ற உச்சரிப்பு ஒன்று போதும் பக்கம் பக்கமாக எழுதுவதற்கு. அப்புறம்,  ‘நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோவிற்கு’ வேறு புதிய நோட்டுப்புத்தகம் வாங்க வேண்டும்.  ‘சொட்டுச் சொட்டுனு சொட்டுது பாரு …’ பாடல் மழையில் நனைய வைக்கும் காதல் காவியம். 

ஆனால் எல்லோரையும் அவர் அசர வைத்தது, மிகவும் மென்மையாக அமைந்த காதல் கீதமான, ‘நானன்றி யார் வருவார்…’  ஏ பி கோமளாவுக்கும் புகழ் பெற்றுத் தந்த இந்தப் பாடல், காதலியின் குறும்பில் தோற்பதுபோல் தோற்று இன்னும் நெருக்கமான காதலில் காதலன் ஆழும் இன்பத் தோரணம். இத்தனை மென்மையான பாடலா என்று எம்ஜிஆர் மறுத்துவிடவே, அவருக்காக எழுதி மெட்டமைத்த தனது இந்தப் பாடலைப் பிறகு கண்ணதாசன் தனது சொந்தப் படமான மாலையிட்ட மங்கையில் டி ஆர் மகாலிங்கம் அவர்களை நாயகனாக்கி அவரே பாடுவதாக அமைக்க, அந்தப் படம் மகாலிங்கத்திற்குத் திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லப்படுவது.

தென்கரையிலிருந்து புறப்பட்டு வந்த இசைக்குரல், கரைகடந்த காட்டாற்று வெள்ளமாக இசை ரசிகர்களைத் திணறவும் திக்குமுக்காடவும் திளைத்து மூழ்கிக் கிடக்கவும் வைத்தது.  சரசரவென ஊர்ந்து செல்லும் நாகத்தின் வேகமும், அதன் மூச்சுக் காற்றின் வீச்சுமாக நிலைத்துவிட்ட குரலில் தனது நடிப்பில் தானே பாடுவது அவருக்குப் பிடித்தமான இருந்து வந்திருக்கிறது. பின்னணிக் குரலாக ஒலிக்க அவர் மனம் இசையவில்லை. 

தமிழ்த்திரையில் கம்பீரமாக ஒலித்த கிட்டப்பா இளவயதில் மறைந்த வெற்றிடத்தில் ஒலிக்கக் கேட்ட இவரது குரல், ரசிகர்களின் பேராதரவால் தொடர்ந்த இசைப்பயணம் அவரது 53ம் வயதில் காற்றில் கலந்தது. ஆனால், கரைந்துவிடாமல் அவரது நூற்றாண்டு வேளையிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறை பாடகர்களின் விருப்பத் தேர்வுகளில் பொதிந்திருக்கிறது, அவரது பாடல்களின் இசை நுணுக்கத்தின் மீதான பிரமிப்பும் மதிப்பும்.   

 

டி ஆர் மகாலிங்கம் அவர்களின் கணீர் குரலில் பாடல்களைக் கேட்க விருப்பமா? இதோ இங்கே !!

https://youtu.be/KtHPslKOxR8?si=a_gVxHi0StK0XdC8

 

 

ஆயிரம் விருத்தங்கள் – புத்தக விமர்சனம்

 

 

என்னுரை     எனும்  முன்னுரை

இந்த விருத்தமாயிரம் நூல் உலகினில் உதிக்க என் ஆழ்ந்த உள்ளத்தில் ஊக்கமும் உற்சாகமும் உத்வேகமும் அளித்தது பிரான்சு நாட்டில் உள்ள பெருமைமிகு பேராசான் திருமிகு. பாட்டரசர் கி பாரதிதாசன் அவர்கள் என்றால் மிகையில்லை; பாசமுடனும் நேசமுடனும் முகநூல் உட்பெட்டியில் ஒவ்வொரு விருத்தமும் திருத்தப்பெற்று அதற்கான விளக்கமும் கனிவான தமிழில் கொடுக்கப்பட்ட விதமும்தான் நான் ஆயிரம் விருத்தங்களையும் தடையில்லாமல் அதிவேகமாக இயற்றுவதற்கு ஊன்றுகோலாய் அமைந்தது;  அதற்கு நான் பாட்டரசர்க்கு வாழ்நாள் கடன் பட்டுள்ளேன். அவருக்கு என் நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துகள் என்றென்றும் !

அதற்காகவே நான் அவருக்கு, எனது பேராசானுக்காக  பத்து இன்னிசை வெண்பாக்கள் இந்த முன்னுரைக்காக இயற்றியுள்ளேன்:  அவைகளை  ஈண்டு வெளிப் படுத்துவது  எனக்கு எல்லையில்லாப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது:

  • எனது சொந்த ஊர் திருச்செங்கோடு எனும் திருக்கொடிமாடச்  செங்குன்றூர். இத்தலம் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புண்ணியத்தலம்.   முன்பு சேலம் மாவட்டத்திலும்,   இப்போது நாமக்கல் மாவட்டத்திலும் உள்ளது.   இங்கு ஓர் அதிசய    மலை படம் எடுத்த நாகப்பாம்பின்  வடிவத்தில் உள்ளது.   படம் எடுத்த தலைப்பகுதி மிகுந்த உயரத்திலும் நீண்டு  செல்லும் வால்பகுதி  இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வால்றைகாடு   என்னும் ஊரிலும் உள்ளது.  இம்மலையின் உச்சியில் சீர்மிகு அம்மையப்பன் வடிவில் உமையொருபாகன் வீற்றிருப்பதே   இவ்வூரின் சிறப்பு!  சீர்மிகு செங்கோட்டு   வேலவன் இக்குன்றின்  சிறப்புக்கு   சிறப்பு!

நான் மரபுக் கவிதைக்கு வந்த விதம் ஒரு தனி  நூலாகவே வெளியிடலாம். உள்ளூரோ வெளியூரோ  எங்கும் செல்ல அனுமதி இல்லாத சூழலைக் கொணர்ந்த இந்தக் கொடிய கொரோனா உலகத் தொற்று என்னுள் ஏனோ ஒரு புதுத் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகில் பிறந்த நாம் ஏன் ஒரு நிரந்தரப் பதிவை ஏற்படுத்தக் கூடாது என்றும், மனத்தின்கண் பிறக்கும் கற்பனை கலந்த ஆக்கங்களை நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது என்றும், அவை நமக்கு நன்மையும் உயர்வையும் தரும் என்றும்,  கொரோனா விடுமுறை நாட்களை நாம் பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என்று மனத்தில் உறுதி பூண்டேன்.   அதனுடைய வெளிப்பாடுதான் இரண்டரை ஆண்டுகளாக இடைவிடாத தவமிருந்து இயற்றிய இந்த ஆயிரம் மரபுப்பா விருத்தங்கள்; அறுசீர்,  எழுசீர் மற்றும் எண்சீர் விருத்தங்கள். இவை யனைத்தையும் பிரான்சுநாட்டில் இருந்து தினம்தினம் நடு இரவில் உறக்கம் தவிர்த்து, “பாவலர் பயிலரங்கம்” என்னும் முகநூல் குழுமம் மூலம் மரபு விருத்தங்கள் எழுதும் நூற்றுக் கணக்கான தமிழ் ஆர்வலர்களுக்காக,  மற்ற கடமைகளை முடித்தபின் திருத்தம் செய்து அனுப்பிடும் எங்கள் பேராசான் பாட்டரசர் பாரதிதாசன் அவர்களின் தமிழ்பால் உள்ள பேருள்ளமும் பெருங்கருணையும் தான் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

முதலில் நான் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும். 1952ல் பிறநத நான் எனது தந்தை கல்வி, கேள்வி, நுண்ணறிவு புகட்டி, பள்ளியில் முதன்மை மாணவனாகத் திகழ வைத்தார். தாயோ பாசம், நேசம், அரவணைத்துச் செல்வது, கருணை கொள்ளல் முதலிய நற்பண்புகளைப் போதித்து வளர்த்தார். தந்தை தமிழாசிரியர் சு. செ. இராமசுவாமி தமிழ் வித்வான் பட்டம் பெற்று அரசு பள்ளியில் பணிபுரிந்தார். தாய் வி. குஞ்சம்மாள் ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிநதார். இளம் அறிவியல் பட்டமும், பிறகு சட்டப்படிப்பும் படித்தபின்,  நான் வங்கியில் சுமார் 38 ஆண்டுகள் பணி செய்து மூன்றாண்டுகள் முன்னரே விருப்ப ஓய்வில் வந்தவன்.  எனக்கு மரபுக் கவிதை பற்றி ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை.   பள்ளியில் படிக்கும் போது எனது தந்தை தமிழாசிரியர் வெண்பா, குறட்பா இவைகளுக்குப் பொருள் கூறும் பொழுது வேண்டா வெறுப்பாகக் கற்றுக் கொண்டது, தேர்வில் நன் மதிப்பெண் பெறுவதற்கே.  என் தந்தை தயவால் தமிழிலும், ஆங்கிலத்திலும், கூட்டு கணிதத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றேன் என்றால் பொய்யில்லை.   ஏன் தமிழகத்திலேயே பள்ளி இறுதி வகுப்பில் (மார்ச் 1968) மாணவர் மன்றத் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன், ஒரு நூல் பரிசாகக் கிடைத்தது. ஆனால் அந்தத் தமிழ்த்தேர்ச்சி எனக்கு பிழையில்லாத தமிழில் கடிதமோ, மடலோ எழுத நம்பிக்கை கொடுத்தது; அவ்வளவே.

இந்தப் பணி ஓய்வுக்குப் பின், நான் கடந்த 1976-ல் முடித்த சட்டப் படிப்பின் பட்டம் நான் வழக்கறிஞராகப் பணி செய்ய,  தமிழக சட்ட ஆணையத்தில் (பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) பதிவு  செய்ய உதவியது.  தற்போது சட்டப்பணியும் செய்து வருகிறேன்.  இவை எல்லாவற்றையும் முடக்கிப் போட்ட கொரோனா உலகத் தொற்று 2020 ஏப்ரல் முதல் அலுவல்களையும் செய்ய விடாது நீண்ட விடுமுறை அளித்தது;  அப்போதுதான் நான் முழுமையாக பணி ஓய்வின் பலனை அனுபவித்தேன். எனவே இந்தக் கொரோனா தீ நுண்மியைப் பற்றி எனது நுண்ணுயிர் உயிரியல் படிப்பில் கொண்ட ஆழ்ந்த அறிவின் மூலம் (M. Sc , கடல் நுண்ணுயிர் படிப்பில் ஓராண்டு படித்து பின் தொடராது வங்கி வேலையில் சேர்ந்தேன்) தீவிர ஆய்வுசெய்து “கொரோனாவின் தோற்றமும் இன்றைய உலகஅவலமும்”  (Origin and Pandemic Nature of Corona Virus) என்ற விஞ்ஞான ரீதியான தமிழ்க் கட்டுரையை 2020 மே மாதம் பிரான்சில் இருந்து வெளிவரும் தமிழ் நெஞ்சம் மாத இதழில் வெளியிட்டேன்;  அதற்கு முழுமுதற் காரணம் எனது வங்கித் தோழர் கவிச்சுடர் கா ந கல்யாண சுந்தரம் மற்றும் அந்த இதழின் ஆசிரியர் கவிஞர் அமின் அவர்களும் தான், – அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.  அதுவே பின்நாளில் நக்கீரன் இதழின் துணை இதழான   “இனிய உதயம்” 2020 ஜுன் மாத இதழில் வெளிவந்தது. அதன் ஆசிரியரான திருமிகு கவிஞர் ஆரூர் நாடன் வெளியிட்டு உதவினார். இவை யனைத்திற்கும் உதவிய என் வங்கித் தோழர் கல்யாண சுந்தரம் என்னின் கவிதை எழுதும் ஆர்வத்திற்கு அடித்தளம் இட்டார்; அவரே எனக்கு முக்கிய சில முகநூல் கவிதைக் குழுமங்களில் இணைய அறிமுகப் படுத்தினார்.  கவியுலகப் பூஞ்சோலை மற்றும் நிலாமுற்றம் குழுமங்கள் மூலம் புதுக் கவிதைகள் இயற்றி,  வெண்பா மரபுப்பா கவிதைகளையும் எழுதி சான்றிதழ்கள் குவிந்தன.

கவியுலகப் பூஞ்சோலை குழுவில் என்னை வெண்பாவழி நடத்தியவர்கள் மரபுமாமணி திருமதி சாரா பாஸ் எனும் சரஸ்வதி பாஸ்கரன் அவர்களும், கவிமாமணி திருமிகு அகன் என்கிற அனுராதா கட்டபொம்மன் அவர்களும் தான்.  வெண்பாவின் வெண்டளைகளைக் கற்பித்தவர் திருமதி. சாரா பாஸ், அந்த வெண்பாக்களின் வேந்தராக ஆக்கியவர் திருமிகு அகன் அவர்கள். இவர்கள் இருவருக்கும் நான் வாழ்நாள் முழுதும் கடமைப் பட்டவன் ஆவேன்.  இங்குதான் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடைவெண்பா மற்றும் கலிவெண்பா முழுவதிலும் தேர்ச்சி பெற்றேன்;  இந்த கவியுலகப் பூஞ்சோலை நிறுவனர் திருமிகு ஒரத்தநாடு நெப்போலியன் (2021ல் மறைந்த தமிழ்க் காவலர்) அவர்களுக்கு நான் என்றென்றும் மறக்காத நன்றியுள்ளவன்; அன்னாரது திடீர் மறைவு மனத்தின் ஆழத்தில் ஒரு நீங்காத வடுவாக உள்ளது.

அதனாற்றான் அணிந்துரைகள் பெறுவதில் தீவிர கவனம் செலுத்தினேன்,   ஏனெனில் ஒவ்வொரு நூலுக்கும் அணிந்துரைகளே ஆபரணங்கள் அழகு, எழில் கூட்டும் அற்புதக் கருத்துகள் புத்தம் புது நூலின் அருமை பெருமையைக் கோடிட்டுக் காட்டும் சினிமா விமர்சனம் போன்றது; என் வாழ்நாள் சாதனையாக இந்த ஆயிரம் விருத்தங்கள் அமையும் நூல் வெளியீட்டை மனக்கண்ணால் காண்கிறேன்.

மரபுக்கவிஞர் ஆசான் அகன் என்கிற அனுராதா கட்டபொம்மன் அவர்கள் திருச்சி BHEL-ல் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தமிழின் பால் அவருக்கு இருக்கும் பேராவலில், தன்னலம் பாராது தமிழ் ஆர்வலர்களுக்கு யாப்பிலக்கணம் கற்பித்து தமிழ்க் கவிதைகள் உலகம் யாவும் பரவிட உதவும் பண்புடையார்.  என் இனிய நண்பரானதும் நான் பெற்ற பெரும்பேறு!  அவரது கருத்தாழமிக்க அணிந்துரை என் நூலுக்குக் கிடைத்த முதல் ஆபரணம்!  “வாய்மொழி யால்சொன்னேன் வாழ்த்து” என முடியும் ஈற்றடி வெண்பாவை எனக்கு இடும் முதல் மாலையாக ஏற்கிறேன்.

என் அடுத்த ஆசான் மரபுமாமணி திருமதி சாராபாஸ் எனும் சரஸ்வதி பாஸ்கரன் அவர்கள், திருச்சி வாழும் அரும்பெரும் பெண்மணி, தமிழுக்குக் கிடைத்த பெரும் வரம் என்றே சொல்ல வேண்டும்; அகில உலகிலும் தமிழ் மரபுக் கவிதைக்கு வித்திட்ட பேருலகப் பேராசான் என்றால் மிகையாகாது;  இதுவரை ஆயிரக்கணக்கான கவியரங்கங்களைத் தலைமை ஏற்று நடாத்தி வாகைசூடி, மரபினில் வார்த்தெடுத்த தங்கப் பெண்மணி ஆவார்;  தன்னலம் பாராது தமிழுக்காக உலகம் முழுவதும் காணொளிக் கவியரங்கங்கள், நேரடித் தொலைக்காட்சி கவியரங்கங்கள் நடாத்தி, ஆண் பெண் தமிழ் ஆர்வலர்களைக் கவர்ந்த பெருமைமிகு பேராசான்;  அவரோ திருச்சிக் கல்லூரி ஒன்றில் இரசாயனப் பேராசிரியர், தனது பணிகளைத் திறமையாகச் செய்து விட்டு இசைத் தமிழுக்காக பல்லாண்டுகள் உழைத்து வாழ்ந்து வரும் ஓர் உன்னதப் பெண்மணி! அவரது சீரிய அணிந்துரை எனக்குக் கிடைத்த கிரீடமாகக் கருதுகிறேன்!

எனது வங்கித் தோழரும் கவிச்சுடரும் ஆன திருமிகு கா ந கல்யாண சுந்தரம் அவர்களது அணிந்துரையோ சிறப்பினும் சிறப்பு! என்னை தமிழ்க் கவிதை உலகிற்கு அழைத்து வந்த ஓர் அரிய சிற்பி! தன்முனைக் கவிதைகளின் தந்தை! ஹைக்கூ கவிதைகளின் தலைவர் என்றாலும் மிகையாகாது!  சுமார் 30 ஆண்டுகளாக ஹைக்கூ கவிதைகள் எழுதி வருகிறார் என் நண்பர். 1990களில் எழுதி வெளியிட்ட  ஹைக்கூ கவிதை நூலை  2005ம் ஆண்டிலேயே அவர் பணிபுரியும் திருவண்ணாமலை மாவட்ட போளூர் அருகில் உள்ள கிராமமான மொடையூர் கிளையில் தணிக்கை செய்யும் போது படிக்கத் தந்தார், அதுவே நான் ஹைக்கூ கவிதைகள் பற்றி அறிந்த முதல் நூல் ஆகும். அப்பொழுது கவிதைகள் பற்றி யான் யாதுமறியேன்  என்பது தெள்ளத் தெளிவான உண்மை. அவரது ஹைக்கூ கவிதைகள் ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அப்பொழுதே  வெளியாகி உள்ளது என்றால் அவரின் பெருமைபற்றிக் கூறவும் இயலுமோ!

இறுதியாக என் நூலுக்கு மிகப் பெரும் ஆபரணமே சூட்டுகிறார், தனது சீரிய அணிந்துரையால், கவித்திலகம் திருமிகு வெற்றிப் பேரொளி அவர்கள்; அன்னார் என்னைக் கவர்ந்த பெருமைமிகு தமிழ்க் கவிஞர்; எனக்கு முகநூல் மூலம் அறிமுகமான பேரன்பர்; எனது ஒத்த வயதினர்; அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்; தமிழுலகில் கவியரங்கங்கள் கட்டியம் கூறும் தலைவர்; மிகவும் கனிவானவர்; பழகுவதற்கு இனிமையானவர்; அவரை திருச்சியில் ஓர் இனிய முகநூல் குழுமம்  (ஊ..ல..ழ..ள.. குழுமம்) ஆண்டு விழாவில் நேரில் சந்தித்தேன்; பெரியாரின் வழித்தோன்றலான கவித்திலகம், எனது ஆன்மீகப் பாக்களின் பொருளை விவரித்து அதனை சைவப்பற்றாக, சிவ ஆராதனையாக வெளிப்பட்டு, பக்திநெறியில் இன்பம் பெற்றிடுக வாழும்போதே, என்ற வரிகள் மனத்தை ஆற்றுப்படுத்தி மகிழ்சசி தருகிறது என்கிறார். அவர் போற்றுதலுக்குரியவர்! அவரது அணிந்துரை கிடைக்கப் பெற்ற நான் பெரும்பேறு பெற்றதாகக் கருதுகிறேன்.