
பல நூறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே இந்தப் புவி எப்படி இருந்திருக்கும்? ஒரு சூரியன், எட்டு கோள்கள், பற்பல நிலவுகள், பல குறுங்கோள்கள், திண்மங்கள், வால் நட்சத்திரங்கள், எரிகற்கள், விண்கற்கள் எப்படி பால் வீதியில் வந்திருக்கும்?”
‘பால்வீதி மட்டுமில்லை. மூன்று ட்ரில்லியன் எண்ணிக்கையில் அகிலம் படர்ந்திருக்கிறது. நமது பால்வீதியைப் போல, பல கேலக்சிகள், அவற்றில் பல சூரியர்கள், கோள்கள், இன்னும் பல விண்மீன் கள், என்னவொரு அற்புதம் யுனிவர்ஸ் என்பது!’ என்றாள் ஆனந்தி.
‘இப்போது இணை உலகம் பற்றியும் பேசுகிறார்கள். நம் வாழ் நாளில் நாம் ஒரு வேற்றுக் கிரக வாசியைக் கண்டடைய வேண்டும்; நாம் போவதற்கான வாய்ப்பிருந்தாலும் சரி,ஏலியன் வருவதற்கான சந்தர்ப்பம் அமஞ்சாலும் சரி.’
“எத்தனை திரைப்படங்கள் இதைப் பற்றி வந்து விட்டன. அத்தனையிலும் ஃபேன்டசி அதிகம். நம்ம கற்பனைக்கேத்தாப்ல உருவம், ட்ரஸ், உணர்ச்சிகள்.”
‘அதெல்லாம் வேண்டாம்கிறியா?’
“அப்படியில்ல. உனக்கு ஹெச் ஜி வெல்ஸ் எழுதின சிறுகதை தெரியுமில்ல. அதுல, அந்த விண் ஓடம் பூமிக்கு வரும். இவங்க ரேடியோ ஹட் வாசல்ல வரவேற்க காத்துண்டிருப்பாங்க. சத்தம் கேட்டவுடனே, அடிச்சுப்பிடிச்சு ஓடி வந்து கதவத் திறந்தா, அந்த விண் ஓடத்துல இருந்தவங்க எல்லாம் இவங்க காலடிபட்டே செத்துப் போயிருப்பாங்க. அவ்ளோ சின்ன வடிவம். ஒரே கூழாய்ப் போயிருப்பாங்க.”
‘சோ, எந்த வடிவமும் கவனிக்கப்படணும்’ என்றான் கேலியாக சுந்து.
‘ஜோக்ஸ் அபார்ட், இதற்கான விடையை ஆன்மீகத் தத்துவவாதிகள் ஒரு வகையில் சொல்கிறார்கள். அறிவியல்வாதிகள் நிரூபணத்தைத் தேடி ஆராய்கிறார்கள்.’
“ஆமாம், முதல்ல நம்ம பூமி ஒரு கற்பாறைக் குழம்பு. எந்த உயிருமே இல்லாத ஒரு நிலை. அந்த வெப்பத்தை யாரால தான் தாங்கியிருக்க முடியும்?”
‘ஆனா, பிரபஞ்ச சக்தி ஒரு ப்ளேன் வச்சிருந்தது. ஒரு கோள், அதோட கருமுளை, வளந்துண்டு வர நம்ம பூமியின் மேல மோதித்து. என்ன ஆச்சு? நம்ம பூமிலேந்து ஒரு துண்டு தெறிச்சு நிலாவாச்சு. நம்ம வெப்பக் குழம்பு ஐஸ்க்ரீம் மாதிரி உருகித்து. ஓரு செல் உயிரினம், அதுலேந்து எத்தன எத்தன! இன்னிக்கிப் பாரு, ஆர்டிஃபிசியல் நுண்ணறிவு மனுஷனத் தாண்டிப் போறது.’
“ஆமாம், சுந்து, அதுக்கு உன்ன விட புத்தி ஜாஸ்தி. அதுக்கு ஏழு அறிவுக்கு மேலயாம்.” என்றாள் சித்ரா.
‘அப்படின்னா, அதயே கல்யாணம் பண்ணி புள்ள குட்டி பதினாறும் பெத்து பெரு வாழ்வு வாழு’
“கோச்சுக்காத சுந்து. உன்ன மாரியெல்லாம் அது ஜோக் அடிக்காதுடா. இந்த ஜன்மத்ல எனக்கு நீதான், உனக்கு நாந்தான்; மனச தேத்திக்கோ.” என்று சிரித்தாள் சித்ரா.
“ஒரு இன்ட்ரெஸ்டிங் ந்யூஸ் தெரியுமா? பென்னு, பென்னுன்னு ஒரு விண்கல். அது நம்ம சூர்யக் குடும்பத்ல தானிருக்கு. இது வரைக்கும் எந்தக் கோளோட விசைக்குள்ளயும் அது சிக்கலே.”
‘ஹை, சரியான டகல்பாஜியா இருக்கும் போலருக்கே’
“டகல் பாஜின்னா?”
‘ரொம்ப முக்கியமான சந்தேகத்தக் கேக்கற பாரு நீ. அவன விடு. நீ என்ன சொல்ல வந்த, அதச் சொல்லு.’
“அந்த மாரி விண்கற்கள் பூமில மோதி நமக்குத் தண்ணி வந்திருக்கும்னு ஒரு ஆராய்ச்சி. நீர் மட்டுமில்ல, தனிமங்கள் கூட.”
‘சரி?’
“அந்த விண்கல்ல எப்படியாச்சும் ஆராயணும்னு , 2016ல ஒசைரிஸ் ரெக்ஸ்னு ஒரு விண்கலத்த நாசா அனுப்பித்து.. அது டக்கரா 2020ல பென்னுகிட்டப் போச்சு. 2023ல அங்கேந்து மண்ணை வாரி எடுத்துண்டு வந்து இப்ப செப்டம்பர்ல இங்க பூமில மூட்டையாய் போட்டுட்டுப் போயிருக்கு. அத ஆராய ஆரம்பிச்சிருங்காக.”
‘மண்ண வாரி இறச்சு சாபம் தான் விடுவாங்க நம்மூர்ல; நாசா என்னடான்னா அத வச்சு ஆராயறான்.’
“நாமளும் பலதக் கண்டுபிடிக்கிறோம்டா. ஒரு நா நமக்கான பெருமை எல்லாம் வரும். ஆனா, அதுக்கு உழைக்கணும், வெட்டி ஜோக்கெல்லாம் அடிச்சிண்டிருக்கப்படாது.”
‘சரி குருவே, சாரி குருவே’
அன்று நள்ளிரவு. நால்வரும் கணினித் திரையில் வான் செய்யும் நெசவுகளை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூன்று புள்ளிகள், வெண்மை நிறத்தவை வானின் வட மேற்கு மூலையில் தென்பட்டன. அவைகளின் வேகத்தைக் கணிக்க கணிப்பொறி திணறியது.
குறிப்பிட்ட கோணத்தில் பெரிய தொலை நோக்கி தன்னைத்தானே அமைத்துக் கொண்டு அந்தப் புள்ளிகளைத் தெளிவாகக் காட்டியது. தமிழ் மொழியின் ஃ போல அவை காட்சிப்பட்டன. மேலிருக்கும் சிறு புள்ளி பூமியை நோக்கி விரைய, மற்ற இரண்டும் அதே வேகத்தில் பின் தொடர்ந்தன. அவை நெருங்க நெருங்க சற்று அகலமான தொப்பி நடுவில் இருக்க மேலே உணர் கொம்புகள் தென்பட்டன. தொப்பியின் கீழே தேனடை போலத் தொங்கிக் கொண்டிருந்தது. மூன்றிலுமே ஒரே அமைப்பு. இவர்கள் மூச்சு விடக் கூட மறந்து கணினித் திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கிசிகிசுவென்ற குரலில் சித்ரா சொன்னாள்- இவர்கள் அயல் கிரகத்தவர்கள். பூமியை வேவு பார்க்கிறார்கள்.
“ஆமா, எனக்கும் அப்படித்தான் தோன்றது.”
‘இந்திய வான் வெளியில் பறக்கும் தட்டைப் போன்ற தொப்பி அணிந்த வேற்று உயிரிகள்’ என்று மெதுவான குரலில் சொன்னான் சுந்து.
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளி மண்டலத்தில் புகுந்த அவை ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதியில் சிதறுண்டு விழுந்தன.
“கமான், க்விக். நாம முப்படையின் தலைமை தளபதிக்கு செய்தி சொல்லணும். அந்த இடத்தை உடனே சீல் செய்யணும். இராணுவம் அந்த இடத்திற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது” பரபரப்பானான் விமலன்.
‘செய்தி சொல்லணும் இது கரெக்ட். அவங்களும் பாத்திருப்பாங்க. அது கரித்துண்டு போலத்தான் விழுந்திருக்கும். ஜஸ்ட் விண்கல் துகளாக இருக்கலாம். நீ அனாவசியமா எக்சைட் ஆற’
“இல்லடா, இது பார்டர் ஏரியால நடந்திருக்கு. ட்ரோனாக் கூட இருக்கலாம். பாகிஸ்தானோ, அந்த வானவெளியைப் பயன்படுத்தி சீனாவோ, ஆப்கனோ, ஏதோ நடக்கறது.”
‘சரிடா, ஜெய்சால்மர் கோட்டைல நம்ம இராணுவப் பிரிவு இருக்கே. அவுங்க பாத்திருப்பாங்கள்ல. என்ன ஆக்ஷன் எடுக்கணும்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?’
விமலன் இதை சட்டை செய்யவில்லை. முப்புள்ளிகளைப் பற்றிய கணினியின் புகைப்படத்தோடு தலைமை தளபதிக்கு செய்தி அனுப்பினான்.
“பார்த்தோம், விமலன். பாலை மணலில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது ட்ரோனாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவம் அலர்ட்டாக உள்ளது. கவலை வேண்டாம்” என்று பதில் வந்தது.
விமலனுக்கு இருப்பு கொள்ளவில்லை. தான் வருவதாக விண்ணப்பித்தான். தலைமை மறுத்து விட்டது.
மற்ற மூவரும் அந்தப் புள்ளிகளின் இயக்கத்தை பின்னிருந்து முன் செலுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
“இத்தனை வேகம் ட்ரோனுக்கு சாத்தியமா?’ என்றான் சுந்து.
‘சாத்தியமில்லை. இது கிட்டத்தட்ட ஒளியின் வேகம். எனக்கு இது வேற்றுக் கிரகத்தின் பறக்கும் தட்டுன்னு தோணுது.’ என்றாள் ஆனந்தி. நால்வருக்கும் அதே எண்ணம் தான். மீண்டும் ஒரு முறை அப்புள்ளிகள் தோன்றியதை, அவை கொண்டிருந்த உருவை, அவற்றின் பயண வேகத்தைக் குறிப்பிட்டு எழுதினார்கள். ஒரு நாள் காத்திருக்குமாறு செய்தி வந்தது.
வானில் மீண்டும் இதே போல் ஏதேனும் தென்படுகிறதா என்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தலைமை சொன்ன ஒரு நாள் கடந்து மற்றொரு நாளும் வந்து போனது. ஒரு செய்தியும் இல்லை. விமலன் துணிந்து இராணுவ மந்திரிக்கு செய்தி அனுப்பி தாங்கள் அங்கே நேரே வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கோரினான்.
“விமலன், நீங்கள் தலைமையை மீறி உங்கள் கோரிக்கையை வைத்ததற்காக நாளை மறுநாள் இராணுவக் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். வான் ஆய்வுப் பணிகள் ஆனந்தியின் தலைமையில் நடக்கும்.”
‘மன்னிக்கணும், சார். என்னால் தலைமைப் பொறுப்பை ஏற்க இயலாது. நாங்கள் நால்வருமே அங்கே வருகிறோம்; தார் பாலையை ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் அதை மறுக்கலாம்; எங்களை கோர்ட் மார்ஷியலுக்கு உட்படுத்தலாம்.’
தலைவர் இதை எதிர்பார்க்கவில்லை. “நால்வரும் வந்துவிட்டால், ஆய்வகம் என்னாகும்?” என்றார்.
‘ஒன்றுமாகாது, சார். எங்கள் கணினியில் சுடச்சுட படங்களும், செய்திகளும் வந்து கொண்டிருக்கும்.’ என்றவர்கள், ‘சார், பாலையில் ஏதேனும் விசித்திரம்?’ என்று கேட்டார்கள்.
“உங்கள் ஆவல் மட்டும் தான் விசித்திரம். வந்து தேடுங்கள். மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி. ஏதாவது கிடைத்தால் திருட்டுத்தனம் செய்யாமல் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு நல்ல விஷயம்- கதிர் வீச்சு எதுவும் அங்கில்லை. பாதுகாப்பானது தான். என்ன கண்டுபிடிக்கிறீர்கள் என்பதைப் பார்க்கலாம். இழுத்துக்கோ, புடிச்சுக்கோ என்ற பட்ஜெட்டில் இந்த வெட்டிச் செலவு வேறு. மூன்று நாட்களுக்குப் பின்னர் குடஜாத்ரிக்குப் போய்விட வேண்டும்.”
ஏதோ பதில் சொல்ல வாயெடுத்த விமலனுக்கு சைகை காட்டிய சுந்தரம், ‘ரொம்ப நன்றி, சார். இது நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு. ஒரு ஆர்வத்தில் தான் வருகிறோம். எதைக் கண்டுபிடித்தாலும் உங்களுக்குத்தான் பெருமை’
மீண்டும் கீழிறங்கி ஜோத்பூர் சென்று தார் பலைவனத்தை அடைந்தார்கள். முன்னர் இராணுவம் பரிசீலித்த இடங்களின் பதிவுகளைப் பார்த்தார்கள்.
‘என்னடா இது, மாயாஜாலமா இருக்கு. இந்த இடத்லதான் விழுந்ததுன்னு கம்ப்யூடர் கதறிக் கதறிச் சொல்லித்து. இங்கேன்னா கண்ணாடி மாரி கூசற மணல் பரப்பு. ராத்திரியானா பாம்பெல்லாம் சும்மா உலா வருது.’
“நமக்கு செம டோஸ் இருக்கு. மரியாதையா மன்னிப்பு கேட்டுண்டு ‘சலோ குடஜாத்ரி’ தான்” என்றாள் சித்ரா.
“பேய்க்காத்துல மணலெல்லாம் பொரண்டிருக்கு. மெடல் டெடெக்டர் ஒண்ணும் காட்டல. குத்து மதிப்பா இந்தக் கம்பிகள்ல சிலிகான் உருண்டகளைக் கட்டி இழுத்துண்டு போவோம். “
‘அத எப்படி செய்யறது?’
“கொஞ்சம் ஆழமா ஒரு பெரிய வட்டத்தை மண் அள்ளும் மெஷினால போடச் சொல்வோம். நாம் நாலு பேரும் அதுல ஈஸ்ட், வெஸ்ட், சவுத், நார்த்துன்னு நிப்போம். சிலிகான் சிப்ஸ் பொருந்தின கழி நம்ம ஒவ்வொருத்தர்கிட்டயும் இருக்கும். கம்போட மேல் பகுதியில ஒரு குட்டி மானிடர். அது படத்தக் காட்டிண்டே வரும். கம்பால சுழிச்சுண்டே போவோம். குழிலயும் தேடுவோம், குவிச்ச மணல்லயும் தேடுவோம்”
‘எனக்கு நம்பிக்க இல்லப்பா. கீழ விழுந்திருக்கறது ஏதோ உயிரியாகவே இருக்கட்டும். அது இந்த சிலிகான்ல எப்படி அகப்படும்?’ என்று கேட்டான் சுந்தரம்.
“இது முயற்சிதான்டா. ஆளே இல்லாத தீவுல நீ தனியா மாட்டிண்டேன்னா, அங்க இருக்கற ஏதோ பூர்வகுடியப் பாத்து ‘அப்பா, பொழைச்சேண்டா, மனுஷன் இருக்கான்னு’ சந்தோஷப்பட மாட்டியா?”
‘டேய், என்ன விட அவனுங்க தாண்டா குஷி ஆவாங்க. நரபலி கிடச்சா சும்மாவா?’
“அப்பப் போய் தூங்குடா, நாங்களே பாத்துக்கறோம்” என்றாள் எரிச்சலுடன் சித்ரா.
‘ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே.” என்று பாடி, அனைவரையும் தன் குரலால் இம்சித்த சுந்துவும் இதில் இணைந்து கொண்டான்.
அவனுடைய மானிடரில் இரும் பெரும் கற்கள் போன்றவைகள் காட்சிப்பட்டன. பாலைக் கற்கள் போல அவைகளில்லை. ஆனந்தியின் திரையில் நான்கு கற்கள், கூழாங்கற்களை ஒத்தவை, ஆனால் வரிவரியாக காணப்பட்டன.
மிக மென்மையான கரங்கள் கொண்டுள்ள ரோபோக்கள் மூலம் அவற்றை அகழ்ந்து எடுத்தார்கள். இராணுவத்தினருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘வைரம், அது இதுன்னு கொண்டு வருவீங்கன்னு பாத்தா, ஆறு கல்லைக் கொண்டு வந்திருக்கீங்க. இது எந்த அயல் கிரகத்தினுடையதுமில்லை. உயிர் இல்ல, கீழ போட்டா அப்படியே கார்பெட்ல உக்காந்திருக்கு. சின்ன சுத்தியலால உடைக்கப் பாத்தா, விமலன் தடுக்கறார். மலைக்குத் திரும்புவீங்கள்ல, அங்க ஆறு கல் வெளையாடுங்க. சிறு புள்ள வேளாமை வூடு வந்து சேராதுன்னு பெரியவங்க தெரியாமயா சொல்லியிருக்காங்க.’
நால்வருக்கும் இந்த அளவில் விட்டார்களே என்று தோன்றியது. ஆனால், அந்தக் கற்களை வீசிவிட மனமில்லை. தங்களுடன் குடஜாத்ரிக்குக் கொண்டு சென்றார்கள்.
வழக்கத்தைவிட அமைதியாக இருந்தான் சுந்தரம். இவை ஒரே வடிவத்தில் இல்லை, ஆனா, ஒரே எடை. அந்தக் கூழாங்கற்களின் வரிகளும் ஒன்றில் நெருக்கமாக, ஒன்றில் இடைவெளி விட்டு, ஒன்று பின்புறத்தில் மட்டும் வரி கொண்டதாக, மற்றொன்றில் கட்டம் கட்டமாக
‘என்ன சார், ஆழந்த சிந்தனை?’ என்று அவனை வம்பிற்கிழுத்த சித்ரா ‘ஒண்ண கவனீச்சிங்களா, அந்தப் பெரிய கல் ரெண்டிலயும் எந்தக் கோடுகளும் இல்ல, இந்தச் சின்னக் கல் நாலிலயும் வரி வரியா இருக்கு. இந்த மாதிரிக் கல் தார் பாலைவனத்துல கெடையாதுன்னு இராணுவமும் சொல்லித்து, கூகுள் ஆண்டவரும் சொல்றார்.’
“நானும் அதத்தான் யோசிக்கிறேன். ஆனா, கொஞ்சம் வயித்துக்குப் போட்டாதான் எனக்கு மூள வேல செய்யும்.” என்றாள் ஆனந்தி.
மூவரும் சரியாகச் சாப்பிட்டார்கள்; சுந்து தன் பங்கினை மூடி வைத்துவிட்டான். ‘ஏதோ யோசனயாயிருக்கு. வேணும்னா சூடு செஞ்சு சாப்டுக்கறேன்.’
இரு முறை மலையேறி இறங்கிய அசதி, தார் பாலைவன அலைச்சல், கணினியை விடாமல் பார்த்த கண் எரிச்சல் தன்னை மறந்து நால்வரும் தூங்கினார்கள்.
(மீதி அடுத்த மாதம் )
