என்னுரை எனும் முன்னுரை
இந்த விருத்தமாயிரம் நூல் உலகினில் உதிக்க என் ஆழ்ந்த உள்ளத்தில் ஊக்கமும் உற்சாகமும் உத்வேகமும் அளித்தது பிரான்சு நாட்டில் உள்ள பெருமைமிகு பேராசான் திருமிகு. பாட்டரசர் கி பாரதிதாசன் அவர்கள் என்றால் மிகையில்லை; பாசமுடனும் நேசமுடனும் முகநூல் உட்பெட்டியில் ஒவ்வொரு விருத்தமும் திருத்தப்பெற்று அதற்கான விளக்கமும் கனிவான தமிழில் கொடுக்கப்பட்ட விதமும்தான் நான் ஆயிரம் விருத்தங்களையும் தடையில்லாமல் அதிவேகமாக இயற்றுவதற்கு ஊன்றுகோலாய் அமைந்தது; அதற்கு நான் பாட்டரசர்க்கு வாழ்நாள் கடன் பட்டுள்ளேன். அவருக்கு என் நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துகள் என்றென்றும் !
அதற்காகவே நான் அவருக்கு, எனது பேராசானுக்காக பத்து இன்னிசை வெண்பாக்கள் இந்த முன்னுரைக்காக இயற்றியுள்ளேன்: அவைகளை ஈண்டு வெளிப் படுத்துவது எனக்கு எல்லையில்லாப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது:
- எனது சொந்த ஊர் திருச்செங்கோடு எனும் திருக்கொடிமாடச் செங்குன்றூர். இத்தலம் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புண்ணியத்தலம். முன்பு சேலம் மாவட்டத்திலும், இப்போது நாமக்கல் மாவட்டத்திலும் உள்ளது. இங்கு ஓர் அதிசய மலை படம் எடுத்த நாகப்பாம்பின் வடிவத்தில் உள்ளது. படம் எடுத்த தலைப்பகுதி மிகுந்த உயரத்திலும் நீண்டு செல்லும் வால்பகுதி இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வால்றைகாடு என்னும் ஊரிலும் உள்ளது. இம்மலையின் உச்சியில் சீர்மிகு அம்மையப்பன் வடிவில் உமையொருபாகன் வீற்றிருப்பதே இவ்வூரின் சிறப்பு! சீர்மிகு செங்கோட்டு வேலவன் இக்குன்றின் சிறப்புக்கு சிறப்பு!
நான் மரபுக் கவிதைக்கு வந்த விதம் ஒரு தனி நூலாகவே வெளியிடலாம். உள்ளூரோ வெளியூரோ எங்கும் செல்ல அனுமதி இல்லாத சூழலைக் கொணர்ந்த இந்தக் கொடிய கொரோனா உலகத் தொற்று என்னுள் ஏனோ ஒரு புதுத் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகில் பிறந்த நாம் ஏன் ஒரு நிரந்தரப் பதிவை ஏற்படுத்தக் கூடாது என்றும், மனத்தின்கண் பிறக்கும் கற்பனை கலந்த ஆக்கங்களை நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது என்றும், அவை நமக்கு நன்மையும் உயர்வையும் தரும் என்றும், கொரோனா விடுமுறை நாட்களை நாம் பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என்று மனத்தில் உறுதி பூண்டேன். அதனுடைய வெளிப்பாடுதான் இரண்டரை ஆண்டுகளாக இடைவிடாத தவமிருந்து இயற்றிய இந்த ஆயிரம் மரபுப்பா விருத்தங்கள்; அறுசீர், எழுசீர் மற்றும் எண்சீர் விருத்தங்கள். இவை யனைத்தையும் பிரான்சுநாட்டில் இருந்து தினம்தினம் நடு இரவில் உறக்கம் தவிர்த்து, “பாவலர் பயிலரங்கம்” என்னும் முகநூல் குழுமம் மூலம் மரபு விருத்தங்கள் எழுதும் நூற்றுக் கணக்கான தமிழ் ஆர்வலர்களுக்காக, மற்ற கடமைகளை முடித்தபின் திருத்தம் செய்து அனுப்பிடும் எங்கள் பேராசான் பாட்டரசர் பாரதிதாசன் அவர்களின் தமிழ்பால் உள்ள பேருள்ளமும் பெருங்கருணையும் தான் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
முதலில் நான் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும். 1952ல் பிறநத நான் எனது தந்தை கல்வி, கேள்வி, நுண்ணறிவு புகட்டி, பள்ளியில் முதன்மை மாணவனாகத் திகழ வைத்தார். தாயோ பாசம், நேசம், அரவணைத்துச் செல்வது, கருணை கொள்ளல் முதலிய நற்பண்புகளைப் போதித்து வளர்த்தார். தந்தை தமிழாசிரியர் சு. செ. இராமசுவாமி தமிழ் வித்வான் பட்டம் பெற்று அரசு பள்ளியில் பணிபுரிந்தார். தாய் வி. குஞ்சம்மாள் ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிநதார். இளம் அறிவியல் பட்டமும், பிறகு சட்டப்படிப்பும் படித்தபின், நான் வங்கியில் சுமார் 38 ஆண்டுகள் பணி செய்து மூன்றாண்டுகள் முன்னரே விருப்ப ஓய்வில் வந்தவன். எனக்கு மரபுக் கவிதை பற்றி ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை. பள்ளியில் படிக்கும் போது எனது தந்தை தமிழாசிரியர் வெண்பா, குறட்பா இவைகளுக்குப் பொருள் கூறும் பொழுது வேண்டா வெறுப்பாகக் கற்றுக் கொண்டது, தேர்வில் நன் மதிப்பெண் பெறுவதற்கே. என் தந்தை தயவால் தமிழிலும், ஆங்கிலத்திலும், கூட்டு கணிதத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றேன் என்றால் பொய்யில்லை. ஏன் தமிழகத்திலேயே பள்ளி இறுதி வகுப்பில் (மார்ச் 1968) மாணவர் மன்றத் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன், ஒரு நூல் பரிசாகக் கிடைத்தது. ஆனால் அந்தத் தமிழ்த்தேர்ச்சி எனக்கு பிழையில்லாத தமிழில் கடிதமோ, மடலோ எழுத நம்பிக்கை கொடுத்தது; அவ்வளவே.
இந்தப் பணி ஓய்வுக்குப் பின், நான் கடந்த 1976-ல் முடித்த சட்டப் படிப்பின் பட்டம் நான் வழக்கறிஞராகப் பணி செய்ய, தமிழக சட்ட ஆணையத்தில் (பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) பதிவு செய்ய உதவியது. தற்போது சட்டப்பணியும் செய்து வருகிறேன். இவை எல்லாவற்றையும் முடக்கிப் போட்ட கொரோனா உலகத் தொற்று 2020 ஏப்ரல் முதல் அலுவல்களையும் செய்ய விடாது நீண்ட விடுமுறை அளித்தது; அப்போதுதான் நான் முழுமையாக பணி ஓய்வின் பலனை அனுபவித்தேன். எனவே இந்தக் கொரோனா தீ நுண்மியைப் பற்றி எனது நுண்ணுயிர் உயிரியல் படிப்பில் கொண்ட ஆழ்ந்த அறிவின் மூலம் (M. Sc , கடல் நுண்ணுயிர் படிப்பில் ஓராண்டு படித்து பின் தொடராது வங்கி வேலையில் சேர்ந்தேன்) தீவிர ஆய்வுசெய்து “கொரோனாவின் தோற்றமும் இன்றைய உலகஅவலமும்” (Origin and Pandemic Nature of Corona Virus) என்ற விஞ்ஞான ரீதியான தமிழ்க் கட்டுரையை 2020 மே மாதம் பிரான்சில் இருந்து வெளிவரும் தமிழ் நெஞ்சம் மாத இதழில் வெளியிட்டேன்; அதற்கு முழுமுதற் காரணம் எனது வங்கித் தோழர் கவிச்சுடர் கா ந கல்யாண சுந்தரம் மற்றும் அந்த இதழின் ஆசிரியர் கவிஞர் அமின் அவர்களும் தான், – அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அதுவே பின்நாளில் நக்கீரன் இதழின் துணை இதழான “இனிய உதயம்” 2020 ஜுன் மாத இதழில் வெளிவந்தது. அதன் ஆசிரியரான திருமிகு கவிஞர் ஆரூர் நாடன் வெளியிட்டு உதவினார். இவை யனைத்திற்கும் உதவிய என் வங்கித் தோழர் கல்யாண சுந்தரம் என்னின் கவிதை எழுதும் ஆர்வத்திற்கு அடித்தளம் இட்டார்; அவரே எனக்கு முக்கிய சில முகநூல் கவிதைக் குழுமங்களில் இணைய அறிமுகப் படுத்தினார். கவியுலகப் பூஞ்சோலை மற்றும் நிலாமுற்றம் குழுமங்கள் மூலம் புதுக் கவிதைகள் இயற்றி, வெண்பா மரபுப்பா கவிதைகளையும் எழுதி சான்றிதழ்கள் குவிந்தன.
கவியுலகப் பூஞ்சோலை குழுவில் என்னை வெண்பாவழி நடத்தியவர்கள் மரபுமாமணி திருமதி சாரா பாஸ் எனும் சரஸ்வதி பாஸ்கரன் அவர்களும், கவிமாமணி திருமிகு அகன் என்கிற அனுராதா கட்டபொம்மன் அவர்களும் தான். வெண்பாவின் வெண்டளைகளைக் கற்பித்தவர் திருமதி. சாரா பாஸ், அந்த வெண்பாக்களின் வேந்தராக ஆக்கியவர் திருமிகு அகன் அவர்கள். இவர்கள் இருவருக்கும் நான் வாழ்நாள் முழுதும் கடமைப் பட்டவன் ஆவேன். இங்குதான் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடைவெண்பா மற்றும் கலிவெண்பா முழுவதிலும் தேர்ச்சி பெற்றேன்; இந்த கவியுலகப் பூஞ்சோலை நிறுவனர் திருமிகு ஒரத்தநாடு நெப்போலியன் (2021ல் மறைந்த தமிழ்க் காவலர்) அவர்களுக்கு நான் என்றென்றும் மறக்காத நன்றியுள்ளவன்; அன்னாரது திடீர் மறைவு மனத்தின் ஆழத்தில் ஒரு நீங்காத வடுவாக உள்ளது.
அதனாற்றான் அணிந்துரைகள் பெறுவதில் தீவிர கவனம் செலுத்தினேன், ஏனெனில் ஒவ்வொரு நூலுக்கும் அணிந்துரைகளே ஆபரணங்கள் அழகு, எழில் கூட்டும் அற்புதக் கருத்துகள் புத்தம் புது நூலின் அருமை பெருமையைக் கோடிட்டுக் காட்டும் சினிமா விமர்சனம் போன்றது; என் வாழ்நாள் சாதனையாக இந்த ஆயிரம் விருத்தங்கள் அமையும் நூல் வெளியீட்டை மனக்கண்ணால் காண்கிறேன்.
மரபுக்கவிஞர் ஆசான் அகன் என்கிற அனுராதா கட்டபொம்மன் அவர்கள் திருச்சி BHEL-ல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழின் பால் அவருக்கு இருக்கும் பேராவலில், தன்னலம் பாராது தமிழ் ஆர்வலர்களுக்கு யாப்பிலக்கணம் கற்பித்து தமிழ்க் கவிதைகள் உலகம் யாவும் பரவிட உதவும் பண்புடையார். என் இனிய நண்பரானதும் நான் பெற்ற பெரும்பேறு! அவரது கருத்தாழமிக்க அணிந்துரை என் நூலுக்குக் கிடைத்த முதல் ஆபரணம்! “வாய்மொழி யால்சொன்னேன் வாழ்த்து” என முடியும் ஈற்றடி வெண்பாவை எனக்கு இடும் முதல் மாலையாக ஏற்கிறேன்.
என் அடுத்த ஆசான் மரபுமாமணி திருமதி சாராபாஸ் எனும் சரஸ்வதி பாஸ்கரன் அவர்கள், திருச்சி வாழும் அரும்பெரும் பெண்மணி, தமிழுக்குக் கிடைத்த பெரும் வரம் என்றே சொல்ல வேண்டும்; அகில உலகிலும் தமிழ் மரபுக் கவிதைக்கு வித்திட்ட பேருலகப் பேராசான் என்றால் மிகையாகாது; இதுவரை ஆயிரக்கணக்கான கவியரங்கங்களைத் தலைமை ஏற்று நடாத்தி வாகைசூடி, மரபினில் வார்த்தெடுத்த தங்கப் பெண்மணி ஆவார்; தன்னலம் பாராது தமிழுக்காக உலகம் முழுவதும் காணொளிக் கவியரங்கங்கள், நேரடித் தொலைக்காட்சி கவியரங்கங்கள் நடாத்தி, ஆண் பெண் தமிழ் ஆர்வலர்களைக் கவர்ந்த பெருமைமிகு பேராசான்; அவரோ திருச்சிக் கல்லூரி ஒன்றில் இரசாயனப் பேராசிரியர், தனது பணிகளைத் திறமையாகச் செய்து விட்டு இசைத் தமிழுக்காக பல்லாண்டுகள் உழைத்து வாழ்ந்து வரும் ஓர் உன்னதப் பெண்மணி! அவரது சீரிய அணிந்துரை எனக்குக் கிடைத்த கிரீடமாகக் கருதுகிறேன்!
எனது வங்கித் தோழரும் கவிச்சுடரும் ஆன திருமிகு கா ந கல்யாண சுந்தரம் அவர்களது அணிந்துரையோ சிறப்பினும் சிறப்பு! என்னை தமிழ்க் கவிதை உலகிற்கு அழைத்து வந்த ஓர் அரிய சிற்பி! தன்முனைக் கவிதைகளின் தந்தை! ஹைக்கூ கவிதைகளின் தலைவர் என்றாலும் மிகையாகாது! சுமார் 30 ஆண்டுகளாக ஹைக்கூ கவிதைகள் எழுதி வருகிறார் என் நண்பர். 1990களில் எழுதி வெளியிட்ட ஹைக்கூ கவிதை நூலை 2005ம் ஆண்டிலேயே அவர் பணிபுரியும் திருவண்ணாமலை மாவட்ட போளூர் அருகில் உள்ள கிராமமான மொடையூர் கிளையில் தணிக்கை செய்யும் போது படிக்கத் தந்தார், அதுவே நான் ஹைக்கூ கவிதைகள் பற்றி அறிந்த முதல் நூல் ஆகும். அப்பொழுது கவிதைகள் பற்றி யான் யாதுமறியேன் என்பது தெள்ளத் தெளிவான உண்மை. அவரது ஹைக்கூ கவிதைகள் ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அப்பொழுதே வெளியாகி உள்ளது என்றால் அவரின் பெருமைபற்றிக் கூறவும் இயலுமோ!
இறுதியாக என் நூலுக்கு மிகப் பெரும் ஆபரணமே சூட்டுகிறார், தனது சீரிய அணிந்துரையால், கவித்திலகம் திருமிகு வெற்றிப் பேரொளி அவர்கள்; அன்னார் என்னைக் கவர்ந்த பெருமைமிகு தமிழ்க் கவிஞர்; எனக்கு முகநூல் மூலம் அறிமுகமான பேரன்பர்; எனது ஒத்த வயதினர்; அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்; தமிழுலகில் கவியரங்கங்கள் கட்டியம் கூறும் தலைவர்; மிகவும் கனிவானவர்; பழகுவதற்கு இனிமையானவர்; அவரை திருச்சியில் ஓர் இனிய முகநூல் குழுமம் (ஊ..ல..ழ..ள.. குழுமம்) ஆண்டு விழாவில் நேரில் சந்தித்தேன்; பெரியாரின் வழித்தோன்றலான கவித்திலகம், எனது ஆன்மீகப் பாக்களின் பொருளை விவரித்து அதனை சைவப்பற்றாக, சிவ ஆராதனையாக வெளிப்பட்டு, பக்திநெறியில் இன்பம் பெற்றிடுக வாழும்போதே, என்ற வரிகள் மனத்தை ஆற்றுப்படுத்தி மகிழ்சசி தருகிறது என்கிறார். அவர் போற்றுதலுக்குரியவர்! அவரது அணிந்துரை கிடைக்கப் பெற்ற நான் பெரும்பேறு பெற்றதாகக் கருதுகிறேன்.

