*திருப்பாணாழ்வார்* ( *தொடர்ச்சி* )

Kannadasan | by artist venkatesan | Venkatesan Purushothaman | Flickr

Tamil Brahmins on X: "Karthigai Rohini Sri Thiruppanalwar Thirunatchathiram  https://t.co/esQRqacOkl" / Xஅமலனாதிபிரானிலிருந்து இரண்டு பாசுரங்களை எடுத்துக் கொண்டு , அவற்றை ஒட்டி கவிஞர் கண்ணதாசனின் பாடல்களையும் பார்ப்போம் என முந்தைய பகுதியில் கூறி இருந்தேன். நேராக விஷயத்திற்கு சென்று விடுவோம்.

ஒன்பதாம் பாசுரம் : ( பதம் பிரித்து)

*ஆலமா மரத்தின் இலை மேல்*
*ஒரு பாலகனாய்*
*ஞாலம் ஏழும் உண்டான்* *அரங்கத்து அரவின்* *அணையான்*
*கோலமாமணி ஆரமும்* *முத்துத்தாமமும்*
*முடிவில்லது ஓர் எழில்*
*நீலமேனி ஐயோ !*
*நிறை கொண்டது என்* *நெஞ்சினையே*

மிகப்பெரிய ஆலமரத்தின் சிறிய இலையிலே கிடக்கும் ஒப்பற்ற பாலகன், ஏழு உலகங்களையும் உண்டு தன் திருவயிற்றிலே வைத்திருப்பவன், அவனே இங்கு திருவரங்கத்தில் பாம்பணையின் மேல் சயனித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் அணிந்திருக்கும் சிறந்த ரத்தினங்களால் செய்யப்பட்ட ஆரமும் , முத்துமாலையும், எல்லை காண முடியாமல் விளங்கும் அழகிய நீல மேனியும், ஐயோ , என் நெஞ்சினை கொள்ளை கொண்டு போய் விட்டனவே !

இதில் *ஐயோ* என்பதை பரவசத்தின் உச்ச நிலையில் வெளிப்படும் சொல்லாக, ரசனையின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள வேண்டும்.‌

இந்த *ஐயோ* என்ற ஒற்றைச் சொல்,
என்னை முதலில் கம்பனிடமும் பிறகு கண்ணதாசனிடமும் அழைத்துச் சென்றுவிட்டது. கவிஞர், காவியத்தாயின் இளைய மகன்தான். அதனால் காவியத்தாயின் மூத்த மகனை முதலில் பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.

கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – கங்கைப் படலத்தில் ராமன், அயோத்தியை விட்டு நீங்கி, சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் காடு நோக்கி சென்று, கங்கை கரையை அடைந்து, அங்குள்ள முனிவர்களின் உபசரிப்பை ஏற்றுக் கொள்கிறான். மூவரும் நடக்கும் காட்சியை வர்ணிக்கும் கம்பர் பாடல் : ( பதம் பிரித்து )

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய

பொய்யோ எனும் இடையாளோடும்**இளையானோடும் போனான்

மையோ, மரகதமோ* , *மறிகடலோ, மழை முகிலோ,

ஐயோ ! இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்.

பொருள் :

சூரியனின் ஒளி , இராமனின் மேனியில் இருந்து வரும் பிரகாசத்தில் மறைய,

இடை ( இடுப்பு ) ஒன்று இருக்கிறதா , இல்லையா‌ – அது பொய்யா, நிஜமா என்று தோன்றும் அளவுக்கு மெல்லிய இடையாளான சீதையுடனும்,
தம்பி லக்ஷ்மணனுடனும் உடன் போனான் ராமன்.

( அந்த ராமனை வர்ணிப்பது என்றால், )

அவன் நிறம் மை போன்ற கருமையோ ?
மரகத மணி போன்ற பச்சை நிறமோ?
கடல் போல நீலமோ ?
மழை மேகம் போல் கருப்போ?

*ஐயோ* , இவன் அழகை எப்படி சொல்வது?
இவன் வடிவழகு என்பது
எப்போதும் அழியாத அழகு.

ராமனின் அழகை வர்ணிக்க அதற்கு ஒரு சரியான உவமையை தேட முடியாமல் தவிக்கிறார் கம்பர். உவமைகளில் உச்சம் தொட்ட கம்பருக்கே அந்த நிலை.
ஐயோ , என்ன அழகு ! என்று தன் ரசனையை, பரவசத்தை மட்டுமே சொல்ல முடிகிறது அவரால்.
திருப்பாணாழ்வார் ஞாபகம் வரவில்லையா?

கவிஞர் கண்ணதாசனை உள்ளே அழைப்போம்.

*தாயைக் காத்த தனயன்* என்ற படத்தில், மாமா கேவி மகாதேவன் இசையில்,
டி எம் எஸ் , சுசீலா பாட கண்ணதாசனின் பாடல் :

*மூடித் திறந்த இமை இரண்டும்*
*பார் பார் என்றன*
*முந்தானை காற்றிலாடி வா வா*
*என்றது*

என்ற பல்லவியுடன் ஆரம்பிக்கும் பாடல்.
அதில் வரும் சரணத்தில் தலைவன், தலைவியை பார்த்து பாடுகிறான்:

*அன்னக் கொடி நடை முன்னும்* *பின்னும் ஐயோ ஐயோ என்றது*

*வண்ணக் கொடியிடை* *கண்ணில் விழுந்து* *மெய்யோ பொய்யோ என்றது*.

எளிமையான வரிகளில், திருப்பாணாழ்வாரையும், கம்பரையும் ஒருசேர ஞாபகப்படுத்தி விட்டார் கவிஞர்.

திருப்பாணாழ்வாரின் வேறொரு பாசுரத்தை எடுத்துக்கொண்டு கவிஞரையும் உடன் இணைப்போம்.

பத்தாம் பாசுரம் : ( பதம் பிரித்து )

*கொண்டல் வண்ணனை* , *கோவலனாய்* ,
*வெண்ணெய் உண்ட வாயன்* , *என் உள்ளம் கவர்ந்தானை*
*அண்டர்கோன் அணி அரங்கன்* *என் அமுதினை கண்ட கண்கள்* *மற்றொன்றினைக் காணாவே*

மேக நிறத்தவன், மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவன், வெண்ணெய் உண்டவன்,
என் உள்ளம் கவர்ந்தவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன், திருவரங்கத்தில் உள்ளவன், என் அமுதம், இவனைக் கண்டபின் என் கண்கள் வேறொன்றையும் காணாது.
இப்படி சொல்லிவிட்டு, திருப்பாணாழ்வார் அரங்கனுடன் இரண்டற கலந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இதில், *என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே*
என்ற வரிகள் நமது கவிஞரையும் பாதித்து , *வானம்பாடி* என்ற திரைப்படத்தில், மாமா திரு கே வி மகாதேவன் இசையில், சுசீலாவின் தேன்மதுர குரலில் வரும்

*கங்கைக் கரை தோட்டம்* *கன்னிப் பெண்கள் கூட்டம்*
*கண்ணன் நடுவினிலே*

பாடலில், ஒரு சரணமாக வெளிப்பட்டது.

*கண்ணன் முகம் கண்டகண்கள்* *மன்னன் முகம் காண்பதில்லை*

*கண்ணனுக்குத் தந்த உள்ளம்* *இன்னொருவர்* *கொள்வதில்லை*

இதே கருத்து, நாம் ஏற்கனவே பார்த்த *ஆண்டாள்* கட்டுரையிலும் வருகிறது:

*மானிடவர்க்கென்று* *பேச்சுப்படில்*
*வாழகில்லேன் கண்டாய்* *மன்மதனே*

என்ற நாச்சியார் திருமொழிக்கு, *கண்ணனுக்கு தந்த உள்ளம்* , *இன்னொருவர் கொள்வதில்லை*
என்பது தானே பொருள்?

திருப்பாணாழ்வார், ஆண்டாள் இருவரும் , வேறொருவரையும் பார்ப்பதில்லை, வேறொருவருக்கும் உள்ளத்தை கொடுப்பதில்லை என்று கூறியதோடு நிற்காமல் அரங்கனுடன் இரண்டறக் கலந்தவர்கள். அப்படி இருக்க , நமது கவிஞர் மட்டும் மேலே குறிப்பிட்ட பாடலில் , நாயகியை அப்படியே ஊசலாட விட்டு விடுவாரா ? அதாவது , அந்த நாயகி , கண்ணனை அடைந்தாரா இல்லையா என்பதை சொல்ல வேண்டாமா?
இதோ கவிஞரின் வரிகள்:

” கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை

கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை

கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ…

காற்றில் மறைவேனோ! “

என்பதோடு நிறுத்தாமல், அடுத்த வரிகளாக

*நாடி வரும் கண்ணன்* , *கோல மணி மார்பில்*
*நானே தவழ்ந்திருப்பேன்* என்று கூறி முடிக்கிறார்.

வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

திவ்ய பிரபந்தங்களில் மிகக் குறைவான பாசுரங்களைக் கொண்ட அருளிச்செயலை ஒட்டிய கட்டுரை இரண்டு பகுதிகளாக, நீண்டு விரிந்து விட்டது.
இன்னும் திருப்பாணாழ்வாரின் தாக்கத்திலிருந்தும் , கண்ணதாசனின் தாக்கத்திலிருந்தும் நான் விடுபடவில்லை.

அடுத்து எடுத்துக் கொள்ளப் போகும் ஆழ்வாரையும், கவிஞரையும், ரொம்ப காத்திருக்க விடாமல் , விரைவில் வருகிறேன்.