புத்தகம் :  MAHA PERIYAVA PORTRAITS ( ENGLISH)

எழுதியவர்: T.S.Narayanaswamy

Designed & Printed by: Compuprint, Chennai

பக்கம் 125   விலை : குறிப்பிடப்படவில்லை

 

      இந்த விலைமதிப்பில்லாத புத்தகத்தை  எனக்கு அன்பளிப்பாக வழங்கிய என் நண்பர் – பிட்ஸ் – பிலானி சென்னை அலுமினி அசோசியேஷனின் நாடித்துடிப்பு மற்றும் ஆல்ஃபா ரப்பர் கம்பெனியின் தலைவர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு முதலிலேயே என் நன்றியை தெரிவித்து விடுவதுதான் முறையாக இருக்கும் .

 டி. எஸ். நாராயணஸ்வாமி அவர்கள் யூனிகார்ட்  குழுமத்தின் தலைவர். பாரம்பரியம் மிகுந்த கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததனால் எழுத்திலும் சித்திரங்கள் தீட்டுவதிலும் சிறு வயதிலி ருந்தே இவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது .இவருடைய மாமா புகழ்பெற்ற எழுத்தாளர் பரணீதரன் தந்த ஊக்கத்திலும் வழிகாட்டலிலும் தொடர்ந்து இந்தத் திறமைகள் இவரிடம் பளிச்சிட்டன. சென்னையில் நடந்த இவருடைய சித்திரக் கண்காட்சி பலருக்கும் இவரை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பல துறைகளில் இவரே “குருசமர்ப்பணம்”, “பரமாச்சார்யா”, “ஆச்சார்யா” போன்ற விருதுகளை ஏற்படுத்தி மற்றவர்களை கௌரவப்படுத்தி இருக்கிறார்.

   ஆனால் இவை எல்லாவற்றையும் விட காஞ்சி மகா பெரியவரிடம் இவருக்கு ஏற்பட்ட அபரிமிதமான பக்தி, நாராயண ஸ்வாமியை பெரியவரை பல கோணங்களில் படங்கள் வரைய ஊக்குவித்தது. இவருடைய மகா பெரியவா சித்திரங்கள் ஒவ்வொன்றும்  விசேஷமான, வித்தியாசமான முக பாவனைகளையும் மௌன மொழிகளையும் சித்தரிக்கின்றன.

   இந்த புத்தகத்தில் எழுத்து என்பது மிகக் குறைவு. அதனால், நீங்கள் படிப்பதற்கு விஷயம் என்று அதிகமாக இல்லை. ஆனால், பார்த்து  மகிழ்வதற்கு, பார்த்து வணங்குவதற்கு, பார்த்து பரவசப்படுவதற்கு பக்கம் பக்கமாய் பல சித்திரங்கள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

  பின்னட்டையில் கார்ட்டூனிஸ்ட் கேஷவ் வெங்கடராகவன்  கூறியிருப்பது முற்றிலும் சரியான கூற்று :

“Drawing Maha Periyava is a blessing. Shri.Narayanaswamy  has adapted the technological marvel, the  iPad, to draw Maha Periyava. He has mastered the techniques to get every minute detail and feel of the Mahan. Every work brings out Periyava’s divine aura, in various yogic postures, blessing us.”

    125 பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் மகா பெரியவர்r உங்களைப் பார்த்து புன்னகை செய்கிறார். கருணை மழை பொழிகிறார்.  மகா பெரியவரைத் தவிர ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், சாய்பாபா போன்றவர்களின் திவ்ய ரூபங்களும் போனஸாக இந்த புத்தகத்தில் வருகிறது.

   பார்த்து பரவசமடையவும் பரிசாகக் கொடுக்கவும் ஏற்ற பொக்கிஷம்.