வடபழனியும் சபாஷ் மீனாவும்!
அறுபதுகளில் – நான் சொல்வது வருடங்களை – சென்னையைத் தெரிந்தவர்களுக்கு, நான் சொல்லப்போகும் விபரங்கள் அவர்கள் மனதில் கொஞ்சம் நாஸ்டால்ஜியாவை தட்டி எழுப்பக்கூடும்!இராமகிருஷ்ணா மெயின் ஸ்கூலில் படித்துவந்த காலம். மீனாட்சி சுந்தரத்திற்கு ராம் தியேட்டருக்கு எதிரில் வீடு. தடிமனாகக் குழிக்குழியாய் தெரியும் கண்ணாடிக்குப் பின்னால் சின்னதாய்ச் சிரிக்கும் கண்கள் அவன் அப்பாவுக்கு, சன்னமான குரல். கதர் வேட்டி, கதர் அரைக்கை சட்டையில் மெதுவாக வந்து, ‘வாப்பா’ என்று அழைப்பதில் ஒரு வாத்சல்யம் தெரியும். மீனாட்சியின் பெரியப்பா பக்கத்து வீடு – கற்சிலைகள் செய்வது தொழில். வீட்டுக்குள் நுழையும்போது, சிறு சுத்தியல், உளி எழுப்பும் சத்தம், மகாபலிபுரம் சாலையில் நடப்பது போலிருக்கும்! சொல்லவந்த விஷயத்தை விட்டு எங்கோ போய்விட்டேன். மீனாட்சி என் கிளாஸ்மேட். நன்றாகப் படிப்பான். அவன் பெற்றோருக்கு என்னைப் பிடிக்கும். அவன் அம்மா செய்யும் வாழைக்காய் ‘ஃப்ரை’, லஞ்ச் டயத்தில் எனக்குக் கொடுப்பான். கொஞ்சம் மஞ்சளும், மசாலாவும் தூக்கலாய் இருக்கும்!
தி நகர் பாண்டி பசாரிலிருந்து, லிபர்டி, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் தாண்டி ராம் தியேட்டதில் இறங்க 12B பஸ்ஸில் டிக்கட் இருபது பைசா! 25 பைசா டிக்கட்டில் வடபழனி பஸ் டெப்போவுக்கே போய்விடலாம்! கோடம்பாக்கம் பிரிட்ஜ் (‘ஃப்ளை ஓவர்’ என்று ஓவராய் பில்ட் அப் கொடுத்த காலம்!) கட்டிய புதிது. காற்றில் தலைமுடி பறக்க ஜன்னலோர சீட்டில் கனவுகள் பல கண்டு பயணித்தது சுகம் – இப்போது கனவுகளும் இல்லை, பறக்க ‘முடி’யும் இல்லை!
இவ்வளவு நெருக்கடிகள் இல்லாத, கடைகள் அதிகமில்லாத ஆற்காட் ரோடு -இப்போது என் எஸ் கே ரோடு – அப்போது அகலமாக இருந்தது. பல பஸ்களும், சினிமா நடிகர்களின் கார்களும், ஸ்டுடியோ வேன்களும், ஸ்கூட்டர்களும், சைக்கிள்களும் இருந்தாலும், ஓரமாகச் செல்லும் குதிரை வண்டிகள் (ஜட்கா வண்டிகள்) என்றும் என்னைக் கவரும்!
ஒரு சமயத்தில், ஆற்காடு ரோட்டில் டிராஃபிக் அதிகமாகிவிட, வடபழனி பஸ் டெப்போ தாண்டி மட்டும் குதிரை வண்டிகளில் சவாரி செய்யலாம்! ஏ வி எம் ஸ்டுடியோ முன்னால் நான்கைந்து குதிரை வண்டிகள் நிற்கும். சவலையான குதிரைக்கு கண்கள் பெரிதாய் இருக்கும். தலையில் கலர்க் கலராகக் ‘குச்சம்’ இறகுகள் இருக்கும் – கணுக்கால் வரை லுங்கி கட்டிய பாய், தன் குறுந்தாடியைத் தடவியவாறு, பயணிகளுக்குக் காத்திருப்பார். வண்டியில் ஐந்தாறு பேர் சேர்ந்தால் தான், குதிரை நகரும்! வைக்கோல் மேல் விரிக்கப்பட்ட நிறமிழந்த ஜமக்காளத்தில் ஏறி அமர்ந்து கொண்டால், இருபது அடிகளுக்கு ஒரு முறை வண்டி ஆட்டத்தில், பின் தலையில் இடித்துக்கொள்வது பழகிவிடும்! மீனாட்சியைத் தவிர சக பயணிகள் யாரென்பது எப்போதுமே சஸ்பென்ஸ்தான்!
ஒரு சனிக்கிழமை மதியம் நானும் மீனாட்சியும் ராம் தியேட்டரிலிருந்து நடந்து வந்து, ஏ வி எம் வாசலில் இருந்து குதிரை வண்டியில் சென்றோம். பூக்குடையுடன் ஒரு பாட்டி, பிலிம் ரோல் டப்பாவுடன் ஒரு வாலிபன் (பார்வையே அவன் சினிமாக் கனவுகளைக் காட்டின!). தலைக்கு இருபத்தி ஐந்து பைசா என்று வண்டிக்காரர் சொல்ல, நாங்கள் இருவரும் வண்டியிலேறி, கால்களைத் தொங்க விட்டு, குறுக்குக் கம்பியில் கைகளை அமர்த்தி எதிர்த் திசையில் வேடிக்கை பார்த்து வந்தோம்! சென்ற இடம் அந்தக் கால விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் – பார்த்த படம் ‘சபாஷ் மீனா’. ஐம்பத்தி ஐந்து பைசா டிக்கட் – பேக் பெஞ்ச் – பீடி, சிகரெட் வாசம், சூடான ஃபேன் காற்று இவற்றுடன் படம் பார்த்தோம் – ‘காணா இன்பம் கனிந்ததேனோ….’ டி ஏ மோதியும், சுசீலாவும் மூச்சுவிடாமல் பாட, திரையில் ஸ்டுடியோ மழையில் சிவாஜியும், மாலினியும் நனைந்து, புரண்டு, விடாமல் காதலித்துக்கொண்டிருந்தனர்! ஆனாலும் ஒரு நல்ல காமெடி படம் பார்த்த திருப்தி இருந்தது!படம் முடிந்து, ராம் தியெட்டர் வரை நடந்து வர முடிவு செய்தோம்! ஆற்காடு சாலையின் இருபுறமும் மரங்கள், கொஞ்சம் தள்ளி தோப்புகள், கொஞ்சம் வயல்கள் இருந்த காலம். மாலைக் காற்றை சுவாசித்தபடி, அரட்டையடித்தபடி வந்தோம். கண்ணில் பட்ட கார்களில் எல்லாம் திரையில் காணும் நட்சத்திரங்களைத் தேடியபடி, பார்த்தபடி வந்தது சுவாரஸ்யம் – இந்த சினிமாவுக்குத்தான் என்ன ஒரு ஈர்ப்பு!
மீனாட்சி வீட்டில் காபி குடித்துவிட்டு, மீண்டும் நடந்து, வடபழனி கோயிலுக்கு வந்தோம் – மிகக் குறைவான கடைகள், சார்பு இறக்கிய வீடுகள் (பெரும்பாலும் கோயில் அர்ச்சகர்கள் வீடுகள்), இரண்டு மூன்று பூக்கடைகள், கோயிலில் அதிகக் கூட்டமில்லை. நெருக்கடி இல்லை. இடது புறம் விநாயகர், பின்னர் சிவலிங்கம், சுற்றி வந்தால், வள்ளி தெய்வானை சமேத ஷண்முகர், பின்னர் மதுரை மீனாட்சி, அறுகோண கண்ணாடி அறையில் அலங்காரமான முருகன், தாண்டினால் திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் சன்னதி, அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி. ஆதிகுரு சன்னதியில் முருகன், தலவிருட்சம் எல்லாம் இருக்கும். மூலவர் பழநி முருகன் கையில் வேலுடனும், பாதரட்சைகளுடனும் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்.
திடீரென்று ஏன் இந்த பழங்கட்டுரை? போன வாரம் ஒருநாள், வடபழனி முருகனுக்குத் தங்கத் தேர் இழுத்தோம் – உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ. எங்கும் கவுன்டர் மயம். எல்லா இடங்களிலும் தடுப்புக் குழல் கம்பிகள், மாற்றி வைத்து, பக்தர் வரிசைகளைத் திருப்ப வசதியாக ‘போர்டபிள்’ தடுப்புகள், சென்ட்ரல் ஸ்டேஷன் போல பெரி..ய்..ய் …ய ஃபேன், பொது வரிசை, சிறப்பு வரிசை, அதிசிறப்பு வரிசை என தடுப்புகள்! பெரிய மண்டபமாக இருந்த ஹாலில், பெரிய கல் ரதத்தில் முருகன் – உற்சவ மூர்த்தி போல! அபிஷேக, அலங்கார, ஆரத்திகள் எல்லாம் இங்குதான் என்றான் என் சாரதி. கோயிலே உரு மாறியிருந்தது. அறநிலையத் துறை எங்கும் வியாபித்திருந்தது!
மூலவரைச் சுற்றி, உட்பிரகாரத்தில் தங்கத் தேரில் முத்தங்கி அலங்காரத்தில் கையில் வேலுடன் சேயோன் நிற்க, மெதுவாகத் தேரை இழுத்து வந்தோம். தேர் அசைந்தசைந்து வருவதைக் காணக் கண் கோடிதான் வேண்டும்!
பிரசாதம் விநியோகித்து, மேடையில் அமர்ந்திருந்த போது பழைய நினைவுகளைக் கொஞ்சம் அசைபோட்டபோது, மீனாட்சியும், குதிரை வண்டியும், சபாஷ் மீனாவும், அன்றைய வடபழனியும், முருகனும் கருப்பு வெள்ளைப் படமாக மனத்திரையில் ஓடின!
சாலிக்கிராமத்தில் மூன்றாம் மாடி ஃப்ளாட்டில் இருக்கும் மீனாட்சிக்குப் போன் செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டேன்!
