பட்டினப்பாலை எனும் நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான், கரிகாலன்) ஆவான். இந்நூல் மொத்தம் 301 அடிகள் கொண்டதாகும். மேலும் இந்நூல் ஆசிரியப்பா மற்றும் வஞ்சிப்பா எனும் பா வகைகளால் புனையப்பட்டதாகும்.

உருத்திரங்கண்ணனார் கடியலூர் என்ற ஊரைச் சார்ந்தவர். ‘உருத்திரனுக்குக் கண் போன்ற சிறந்த முருகன்’ என்னும் பொருள் வருவதால் இது முருகனைக் குறிக்கும் பெயர் என்றும் இவர் சைவ சமயத்தினராக இருப்பார் என்றார் மறைமலையடிகள். தொல்காப்பிய உரையில் பேராசிரியர் இவர் அந்தணர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்தாம் பெரும்பாணாற்றுப்படையையும் எழுதியவர். இவர் எழுதிய அகநானூறு 167, குறுந்தொகை 352 ஆகிய பாடல்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

இந்நூல் பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிப் பாலைத் திணையில் அமைந்துள்ளதால், இதற்கு பட்டினப்பாலையென்று பெயர் வந்தது.. பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் கூறுவதாகும்..

இந்நூலில் தலைவன் ஒருவன் காவிரியின் சிறப்பு, சோழ நாட்டின் பெரும் வளம், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, அங்குள்ள இரவு நேர நிகழ்ச்சிகள், ஏற்றுமதி இறக்குமதி விவரங்கள், விழாக்கள் நீங்காத கடைவீதி, ஊரின் பல பகுதியில் உள்ள கொடிகள், அங்கு வாழும் உழவர்கள், வணிகர்கள், பல நாட்டினரும் ஒன்றுகூடி வாழ்தல் ஆகியவற்றை மிக அழகாக விவரித்து, இவ்வாறு சிறப்பு மிகுந்த காவிரிப்பூம்பட்டினத்தை எனக்குக் கொடுத்தாலும் என் தலைவியை நான் பிரிய மாட்டேன் எனக் கூறுகின்றான்.

திருமாவளவனின் போர்த்திறன், அவன் அடைந்த வெற்றி, பகைவர் ஊர்களை அவன் பாழ்படுத்தியது, ஊர்களை உருவாக்கியது, அவனது குடும்ப வாழ்க்கையின் சிறப்பு ஆகியவற்றை விளக்கி, அவன் செங்கோலை விடக் குளிர்ச்சியானவை என் தலைவியின் தோள்கள் என்கின்றான்.

”வசையில் புகழ் வயங்கு வெண்மீன்,
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும், தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி,
புனல் பரந்து பொன் கொழிக்கும்”
”வெள்ளி எனும் கோள் குற்றம் இல்லாத, புகழையுடையது. அது திசை மாறி, தான் நிற்க வேண்டிய வட திசையில் நிற்காமல் தென் திசைக்கண் போனாலும், வானை நோக்கிப் பாடும் நீர்த்துளிகளை உணவாகக் கொண்ட வானம்பாடி வருந்துமாறு, மழை பெய்தலைத் தவிர்த்து வானம் பொய்த்தாலும், தான் பொய்யாது, குடகு மலையில் தோன்றிக் கடலில் புகும் காவிரி ஆறு. தன்னுடைய நீரைப் பரந்து நிலத்திற்கு வளமையைச் சேர்க்கும்”என்று மேற்கண்ட அடிகள் காவிரியின் பெருமையைப் பேசுகின்றன.
அடுத்துக் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமை கூறப்படுகிறது. அங்குள்ள இல்லத்தின் பெரிய முற்றத்தில், ஒளியுடைய நெற்றியையும் மடப்பமுடைய நோக்கினையும் உடைய, பொருந்திய அணிகளை அணிந்த பெண்கள், தங்கள் உணவைக் காய வைக்கிறார்கள். அந்த உணவை உண்ண வரும் கோழிகளைத் தம் கனமான காதணிகளை வீசி எறிந்து விரட்டுகிறார்கள். அந்த அணிகள் பொன்னினால் செய்த சிலம்பினைக் காலில் அணிந்த சிறுவர்கள் குதிரை இல்லாமல் ஓட்டும் மூன்று உருளைகளையுடைய சிறிய தேரின் வழியைத் தடுக்கின்றன. இவ்வாறு தடுக்கும் பகை மட்டுமே அன்றி வேறு மனம் கலங்கும் பகையை அறியாத பெரிய பல குடிகளையுடைய சிற்றூர்களைக் கொண்ட நகரம் காவிரிப்பூம்பட்டினமாகும் என அம்மக்களின் செல்வச் செழிப்பு காட்டப்படுகிறது.
”புலிப் பொறி போர்க் கதவின்,
திருத்துஞ்சும் திண் காப்பின்,
புகழ் நிலைஇய, மொழி வளர,
அறம் நிலைஇய, அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங்கஞ்சி,
யாறு போலப் பரந்து ஒழுகி,
ஏறு பொரச் சேறு ஆகி,
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல,
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும்”
இந்தப் பாடலடிகள் அப்பட்டினத்தின் தருமச்சாலைகளைப் புகழ்கின்றன. அங்குள்ள அறச்சாலைகளின் சமையல் அறைகள் புலிச் சின்னத்தையுடைய இணைக்கப்பட்ட கதவுகளை உடையவை; உறுதியான மதிலை உடையவை; அப்படிப்பட்ட பெரிய சமையல் அறைகளில் சோற்றிலிருந்து வடித்த கொழுமையான கஞ்சி, ஆற்றினைப் போலப் பரந்து தெருவில் ஓடும். அந்த இடத்தில் காளைகள் போரிடுவதால் அந்த இடம் சேறு ஆகிற்று. அச்சேறு காய்ந்து அதில் தேர் ஓடித் தூசியைக் கிளப்புகிறது. அத் தூசியில் விளையாடிய ஆண் யானையைப் போன்று, வேறுபட்ட தொழில்களையுடைய ஓவியம் வரையப்பட்ட வெள்ளை நிறமயமான அரண்மனையில் தூசி படிந்தது.

நாட்டு மக்கள் புலால் நாற்றமுடைய மணலை உடைய, மலர்களைக் கொண்ட சோலைகளையுடைய கடற்கரையில், பெரிய மலையை அணைத்த முகிலைப் போலவும், தாயின் முலையைத் தழுவிய குழந்தையைப் போலவும், தெளிந்த கடல் நீருடன் காவிரி ஆறு கலக்கும் மிக்க அலைகளின் ஒலியையுடைய புகார்முகத்தில், தத்தம் தீவினை போகும்படி கடலில் விளையாடுவார்கள். பின்னர் கடலில் விளையாடியதால் உடலில் பட்ட உப்பை நீக்க ஆற்று நீரில் குளிப்பார்கள். நண்டுகளை விரட்டி விளையாடியும், வலிமையான அலைகளில் விளையாடியும், மணல் பொம்மைகளைச் செய்தும், ஐம்பொறிகளை நுகர்ந்தும், நீங்காத விருப்பத்துடன் பகல் முழுக்க விளையாடுவார்கள். அவர்களுடைய மகிழ்ச்சி, பெறுவதற்கு அரிய தொன்மையான சிறப்பையுடைய மேல் உலகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் போன்றதாகும்.
கடற்கரையில் உள்ள அகன்ற தெருவில், நல்ல மன்னனின் பொருள்களைக் காக்கும், பழைய புகழையுடைய சுங்கத் தொழிலைச் செய்பவர்கள், சுடும் சினத்தை உடைய கதிர்களையுடைய கதிரவனின் தேரில் கட்டப்பட்ட குதிரைகளைப் போல, நாள்தோறும், சோம்பல் இல்லாது சுங்க வரியைக் குறையாமல் கொள்வார்கள்.

பூம்புகாரின் கடற்கரையில் குவிந்திருந்த பொருள்களைக் கீழ்க்கண்ட அடிகள் காட்டுகின்றன.

”வரைப்பின்
செல்லா நல்லிசை அமரர் காப்பின்,
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும்,
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின்”
“நல்ல புகழையுடைய தேவர்கள் பாதுகாவலினால், கடலில் வந்த நிமிர்ந்த நடையையுடைய குதிரைகளும், வண்டிகளில் வந்த கரிய மிளகு மூட்டைகளும், வட மலையில் பிறந்த பொன்னும், குடகு மலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், தென் கடலின் முத்தும், கீழ்த் திசைக் கடலின் பவளமும், கங்கை ஆற்றினால் உண்டான பொருள்களும், காவிரி ஆற்றினால் உண்டான பொருள்களும், ஈழத்து உளவும், மியன்மாரின் பொருள்களும், அரிய பொருள்களும் பெரிய பொருள்களும், நிலத்தை நெளிக்கும்படி திரண்டு ஒன்றோடொன்று கலந்து இருந்தன.

பல மக்கள் கூட்டங்களுடனும் பல்வேறு நாடுகளிலும் சென்று பழகி, வெவ்வேறு உயர்ந்த அறிவுடைய சான்றோராகிய சுற்றத்தார் விழாக்கள் நடத்தும் தொன்மையான ஊருக்குச் சென்று கூடினாற்போல், பழி இல்லாத நாடுகளிலிருந்து, தம் தாய்மொழி மட்டும் அல்லாது பல மொழிகளையும் கற்ற புலம் பெயர்ந்த மக்கள், ஒன்றாக இனிமையாக வாழும், குறையாத சிறப்பினையுடையதாகக் காவிரிப்பூம்பட்டினம் விளங்குகிறது.

தலைவன் கூறுகிறான்.
”…………………………பெறினும்,
வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன், வாழிய நெஞ்சே”
”அப்படிப்பட்ட பெருமை உடையக் காவிரிப்பூம்பட்டினத்தை, நான் பெற்றாலும், நீண்ட கரிய கூந்தலையுடைய, ஒளியுடைய அணிகலன்களையுடைய என் தலைவியை விட்டு விலகி நான் வர மாட்டேன். நீடு வாழ்வாயாக என் நெஞ்சே!”

புலிக்குட்டி ஒன்று கூட்டுக்குள் அடைபட்டு வளர்ந்தாற்போல் அடைக்கப்பட்டிருந்தான் திருமாவளவன். பின் மன வலிமையுடன் முதிர்ந்து, ஏறுதற்கு அரிய கரையினை இடித்துத் தந்தத்தினால் குத்திக் குழியைப் பாழ்படுத்தி, பெரிய தும்பிக்கை உடைய களிற்று யானையானது தன்னுடைய பிடியிடம் சென்றதைப்போல, தன்னுடைய உணர்வு கூர்மையாக உணரும்படி ஆராய்ந்து, பகைவருடைய மிகுந்த காவலுடைய சிறையின் மதிலின் மீது ஏறி, தன்னுடைய வாளை உறையிலிருந்து நீக்கி, முறைப்படி அச்சம் பொருந்திய அரசுரிமையை அடைந்தான் திருமாவளவன்.

பின்னர் ஒளி நாட்டார் பணிந்து ஒடுங்கவும், தொன்மையான அருவாள நாட்டு மன்னர்கள் வந்து பணிந்து அறிவுரை கேட்கவும், வடக்கில் உள்ள அரசர்கள் வாடவும், குட நாட்டு மன்னர் மகிழ்ச்சி குறையவும், ஆத்திரம் அடைந்து பகை மன்னர்களின் நிலையான கோட்டைகளைக் கைப்பற்றவும், பாண்டிய மன்னனின் வலிமை கெடவும், செருக்கினையும் வலிமையையும் உடைய முயற்சி, பெரிய தானை, மறமுடைய வலிமை ஆகியவை உடைமையால், சினத்தால் சிவந்த கண்களால் நோக்கி, புல்லிய முல்லை நிலத்தின் மன்னர்களின் வழிமுறை கெடவும், இருங்கோவேள் என்ற மன்னனின் சுற்றத்தார் கெடவும் போர் செய்து வெற்றி பெற்றவன் அவன்.

”காடு கொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கிப்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ,
வாயிலொடு புழையமைத்து,
ஞாயில் தொறும் புதை நிறீஇப்
பொருவேம் எனப் பெயர் கொடுத்து,
ஒருவேம் எனப் புறக்கொடாது,
திரு நிலைஇய பெரு மன் எயில்
மின் ஒளி எறிப்ப”
திருமாவளவனின் ஆட்சிச் சிறப்பை இந்த அடிகளில் காணலாம். அவன் காடாகிய இடங்களை அழித்து நாடாக்கி, குளங்களைத் தோண்டி, வளமையைப் பெருக்கினான். பெரிய மாடங்களையுடைய உறந்தை நகரை விரிவுபடுத்தினான். பல கோயில்களுடன் குடிகளை நிறுவினான். அரண்களில் பெரியதாகவும் சிறியதாகவும் வாயில்கள் அமைத்தான். அரண்களின் ஏவல் அறைதோறும் அம்புக் கூட்டை நிறுவி, “போர் செய்வேன் நான்” என்று சூள் உரைத்து, “விட்டு அகலமாட்டேன்” என்று கூறி, புறமுதுகு இடாது இருந்தான் கரிகாலன். வீரத் திருமகள் நிலைத்த பெரிய நிலையான அவனது கோட்டை மதில் மின்னலைப் போன்று ஒளி வீசிக்கொண்டிருந்தது.
நூலின் இறுதியில் தலைவன் தலைவியைப் பிரியாமைக்கான காரணங்களைக் கூறுகிறான்.

”திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம், அவன்
கோலினும் தண்ணிய, தடமென் தோளே”
”கரிகாலன் பகைவர்மேல் உயர்த்திய வேலைக் காட்டிலும் கொடியது காடு. அவனது செங்கோலைவிட, குளிர்ச்சியானவை என் தலைவியின் பெரிய மெல்லிய தோள்கள்; அதனால் நான் தலைவியைப்பிரிந்து வரமாட்டேன்.” எனத் தலைவன் கூறிவிடுகிறான்.
”முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்,
வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன், வாழிய நெஞ்சே”
இப்பாடல் அடிகளே நூலின் மையமாகும். மிகச்சிறப்பான காவிரிப்பூம் பட்டினத்தையே நான் பெற்றாலும், நீண்ட கரிய கூந்தலையுடைய, ஒளியுடைய அணிகலன்களையுடைய என் தலைவியை விட்டு விலகி நான் வர மாட்டேன். நீடு வாழ்வாயாக என் நெஞ்சே! என்பதே இதன் பொருளாகும்.

இந்நூலின் இந்த அடிகளே இந்நூலை அகத்துறையில் சேர்க்கின்றன. ஆனாலும் இதில் திருமாவளவன் பற்றிய புறச்செய்திகளே மிகுதியும் காணப்படுகின்றன.