இரண்டாம் ராஜராஜன்
கி பி [1146-1163]
இரண்டாம் குலோத்துங்கன், கி பி 1146ல் தன் மகன் இரண்டாம் ராஜராஜனை அரசு நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புபடுத்தினான்.
கங்கைகொண்ட சோழபுரம்:
நான்கு வருடம் கழிந்தது. வருடம் 1150 ல் இரண்டாம் குலோத்துங்கன் காலமானான். இரண்டாம் ராஜராஜன் சோழநாட்டுச் சக்கரவர்த்தியாக முடிசூடினான். பரகேசரியானன். ராஜராஜனுடைய கல்வெட்டுகளில் அடங்கியுள்ள பல மெய்க்கீர்த்திகள் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி ஒரு செய்தியும் சொல்லாததால், இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியைப் போலவே, இரண்டாம் ராஜராஜனின் ஆட்சியும் பொதுவாக அமைதியாகவே இருந்தது.
அமைதியாக இருந்தால் நல்லது தானே என்று நீங்கள் எண்ணுவது சரிதான். இருந்தாலும், அமைதிக்கு விலை உண்டு. அதை வரும் அத்தியாயங்களில் காண்பீர்கள்.
பொதுவாக அமைதியாக இருந்தது என்றாலும், இந்த இரண்டு போர்களைப்பற்றி விபரங்கள் கிடைக்கிறது.
இரண்டாம் ராஜராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கயாகப் பரணி சொல்கிறது. சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக இராசராச உலா கூறுகின்றது. இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்தது. சோழர் படைகளை ‘பல்லவராயன் பெருமான் நம்பி’ என்ற சேனாதிபதி தலைமை தாங்கிச் சென்று, போரை வென்றான்.
சேரர்களைப் போலவே பாண்டியர்களும் கப்பம் கட்ட மறுத்து, சுதந்திர வேட்கை கொண்டு புரட்சி செய்ய ஆரம்பிக்கும் நேரம், ‘பெருமான் நம்பி பல்லவராயன்’ தலைமை தாங்கிய சோழர் படை பாண்டிய தேசத்தையும் வென்றது.
காவிரி பிரச்சனை:
“சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்”
-இராசராச சோழனுலா
காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இது போலும். (இங்கு நாம் அரசியல் பேசவில்லை. சரித்திரம் தான் பேசுகிறோம். ஆகவே அமைதியுடன் மேலே படிக்கவும்). மேற்கு மலைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதியை, சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து, சோழன் படை எடுத்து சென்று பகையை வென்று காவிரியை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான்.
சமயக்கொள்கை: தந்தை, தில்லையிலிருந்த திருமாலை அலைகடலில் கிடத்தியமை பற்றி வருத்தமுற்று இருந்த வைணவர்கள் மனக்கிலேசம் தீரும் பொருட்டு வைணவத்தலங்களுக்கு சேவை புரிந்தான். வைணவர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் உள்ளங்குளிரச் செய்தான். “விழுந்த அரி சமயத்தை மீளவெடுத்தனன்” -என்று இவனை இவன் மெய்க் கீர்த்தியில் பாடியுள்ளனர்.
அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர். அவர் முதுகிழவர். ராஜராஜனின் தாத்தா விக்கிரமசோழர் காலத்திலிருந்து அரசவைப் புலவராக இருந்தார். ‘விக்ரம சோழ உலா’ பாடினார். பின்னர் இரண்டாம் குலோத்துங்கனின் அரசவைப் புலவராக இருந்தார். ‘குலோத்துங்க சோழ உலா’ பாடினார். பின்னர் நமது இரண்டாம் ராஜராஜனின் அரசவைப் புலவராக இருந்தார். ‘ராஜராஜ சோழ உலா’ பாடினார். இப்படி உலா பாடியே உளைத்துப்போனார் போலும்! இப்படிப் பாடிய மூன்று உலாக்களும் சேர்ந்து ‘மூவர் உலா’ என்று வழங்கப்பட்டது.
புலவர், மூன்று அரசர்களுக்கும் தமிழ் கற்றுக்கொடுத்தார். ராஜராஜனும் அவரிடம் தமிழ் கற்று, பாண்டித்யம் பெற்றான். ராஜராஜனின் மெய்க்கீர்த்தி அவனை, ‘முத்தமிழுக்குந் தலைவன்’ என்றும் ‘இராச பண்டிதன்’ எனவும் குறித்தது. அவனுக்கு வடமொழியிலும் பெரும் ஆளுமை இருந்தது. ஒட்டக்கூத்தர், முதுமையால் உடல் தளர்ந்திருந்தாலும், அறிவால் தளராமல், ‘ராஜராஜ சோழ உலா’ பாடினார். அது ராஜராஜபுரத்தில் அரசவையில் அரங்கேறியது. (ராஜராஜபுரம் என்பது பழையாறைக்கு – மன்னன் இட்ட புதுபெயர். அது இரண்டாவது தலைநகராக இருந்தது). அரங்கேறிய பாடல்களைக் கேட்டு மன்னன் பெருமகிழ்வெய்தினான். ஒவ்வொரு கண்ணிக்கும், ஓராயிரம் பொன் பரிசில் வழங்கி, அந்நூலை ஏற்றுக்கொண்டான்.
ஒட்டக்கூத்தரின் பேரனான ‘கவிப்பெருமாள் ஆனந்த வரதக் கூத்தன்’, ‘சங்கர சோழன் உலா’ ஒன்றை இராசராசன் மீது பாடினான். அவனுக்கு எத்தனை பொன் கிடைத்தது என்பது பற்றித் தகவலில்லை!
ராஜ ராஜேஸ்வரம் :
தன் தந்தையை போல் சிவபக்தனாகிய இரண்டாம் ராஜராஜன், போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்தான். தனது சிவ பக்தியை வெளிப் படுத்தும் வண்ணம் ராஜராஜேஸ்வரம் என்னும் கோவிலைக் கட்டினான். தென்னகத்தின் சிறந்த கலைக் கோவில்களில் ராஜ ராஜேஸ்வரமும் ஒன்றாகும்.
அது கலைகளின் சொர்க்க புரியாக திகழ்ந்ததாக ஒட்டக்கூத்தர் தனது உலாவில் பாடி உள்ளார். அனைத்து நாயன்மார்களின் சரித்திரத்தையும் இக்கோவிலில் அவன் வரைவித்தான். இந்த ராஜராஜேஸ்வரம் பெயர் திரிந்து இன்று தாராசுரம் என்றழைக்கப்படுவதாகச் சொல்வர். இது இன்றைக்கும் மிகச் சிறந்த களைப் பொக்கிஷம் நிறைந்த கோவிலாகக் கருதப்படுகிறது.
முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப்பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. போசளர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. பேரரசுக்குள் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாறுதல், ஆங்காங்குள்ள குறுநில மன்னர்கள் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் விரிவடைந்து தலைதூக்கியது ஆகும்.
இந்தக் காரணங்களால், முதலாம் ராஜராஜனாலும் அவனுடைய பின்னோர்களாலும் பாடுபட்டு, திட்டமிட்டு, உறுதியுடன் அமைக்கப்பட்ட ‘மைய அரசு’ என்ற நிர்வாக கட்டுகோப்பு, இருந்த இடம் தெரியாமல் சிதைந்துவிட்டது.
நம் ராஜராஜனின் ராணிகளைப்பற்றி சில வார்த்தைகள்:
மன்னனுக்கு 4 மனைவிமார்கள் இருந்தனர். புவன முழுதுடையாள், தரணி முழுதுடையாள், அவனி முழுதுடையாள், தென்னவன் கிழானடி. இவைகள் பட்டப்பெயர்களே.
இதில் பட்டத்து ராணி: புவன முழுதுடையாள்.
பதினேழு ஆண்டுகள் ஆண்ட, இரண்டாம் ராஜராஜன் தனது முடிவு வருங்கால், ஒரு பிரச்சினை எழுந்தது. சோழநாடு அதுவரை சந்திக்காத போர்களை சந்தித்தது. அது என்ன பிரச்சினை? பிறகு என்ன ஆயிற்று?அந்த நிகழ்வுகள்..
விரைவில்..
