குவிகம்-சிவசங்கரி மாதச் சிறுகதைத் தேர்வு – மே 2024

மே மாதத்தின் சிறந்த சிறுகதையை தேர்வு செய்யும் வாய்ப்பை எனக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இம்மாத ( மே 2024) சிறந்த சிறுகதை :

அட என்ன ஊர் யா இது?

ரேவதி பாலு

சொல்வனம் – இதழ் 319 – மே 24, 2024

— ஸ்வர்ணலதா வெங்கடரமணி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

ஒரு சிறுகதை வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. அதில் ஒளிரும் சமூக சிந்தனையும், அக்கறையும் வாசகரை மகிழ்ச்சியின் உச்சிக்கே தள்ளுவது மேலும் சிறப்பு. அத்தகைய பார்வையுடன் தான் சிறந்த கதை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

அனைத்து கதைகளிலும் எனக்கு மிகவும் பிடித்தது

அட என்ன ஊர் யா இது?

ரேவதி பாலு

சொல்வனம் – இதழ் 319 – மே 24, 2024

இக்கதை தேர்தல் களத்தில் சிறிய ஊர்களில் சகஜமாய் நடக்கும் ஒரு சிறு நிகழ்வு பற்றியது.

வேலூர் அருகே புளியம்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் இடை தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது. அந்த ஊரில் பொது மக்கள் சேவைக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் உண்டு. ஆனால் மிகச் சில வீடுகள் தவிர எங்கும் கழிப்பறை வசதி கிடையாது. பல வருடங்களாக அந்த ஊர் ஏழை மக்கள் ஊர்க்கோடியில் உள்ள வயல்வெளி மற்றும் புதர்களையே நம்பி இருந்தனர். பலநாள் போராட்டத்திற்குப்பின் அரசு அந்த ஊர்க் கடைசியில் உள்ள சுடுகாட்டிற்குள் ஒரு கழிவறையை கட்டித் தந்தது. அதையும் பூட்டி அந்த கிராம முக்கியஸ்தர் ஒருவர் வசம் சாவி ஒப்படைக்கப் பட்டது. அந்த ஊர் பெண்களும் முதியவர்களும் அந்த ஒரு கழிப்பறையை நம்பியே காலம் தள்ளினர்.

இத்தகைய சூழ்நிலையில் ஒரு பிரபல அரசியல் பிரமுகர் பிரச்சாரத்திற்கு அங்கு வந்து படும் இன்னல்களை அழகாக சித்தரிக்கும் கதை இது. கழிப்பறை வசதிகூட இல்லாத ஊரில் இரண்டு டாஸ்மாக் இருப்பது நம் ஊர்களின் அவல நிலையை காட்டுகிறது. இது ஓர் irony – அரசு நல்ல பல திட்டங்களுக்கு டாஸ்மாக் வருமானத்தையே நம்பி இருப்பதே யதார்த்தம்.

***

அடுத்து என்னை மிகவும் கவர்ந்தது ‘ரங்கி ‘ (குமுதம் 15.05.2024) என்னும் தேவிபாலா எழுதிய சிறுகதை. அதிகம் படிக்காத, அதிகம் அழகில்லாத ஒரு பெண் இன்றைய சமூகத்தில் தனக்கென்று ஒரு அடையாளம் அமைத்துக்கொள்ளும் அழகிய கதை. பெண்ணின் பெருமையைப் போற்றும் கதை இது.

**

இன்னொன்று விமலா ரமணியின் ‘ஒரு ஞாயிற்றுக்கிழமை’ (தினமலர் 05.05.2024) ஒரு இளவயதுப் பெண் எத்தனை பக்குவத்தோடு வாழ்க்கையை அணுகுகிறார் என்பதை அழகாக சொல்கிறது.

இறுதியாக…

எப்போதோ படித்தது மனதில் பசுமரத்தாணி.

“எனக்கு விமரிசனங்கள்  மிகவும் பிடிக்கும். நீங்கள் என் கதையை சிலாகித்துப்பேசினால் நீங்கள் என் வாசகர். கதையைக்கீறி விமரிசனம் செய்பவர் என் அன்பு நண்பர்”.