நா.காமராசன் - Tamil Wikiபுதுக்கவிஞராகவும் திரைப் பாடலாசிரியராகவும் நவீனக்கவிதைகளின் முன்னோடியாகவும் வானம்பாடி கவிதை இயக்கக் கவிஞராகவும் விளங்கிய நா.காமராசன் தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் பிறந்தவர். போடி நாயக்கனூரில் தொடக்கக் கல்வி, மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்றார்.

*போய்வா நதி அலையே,*

*சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது,*

*வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே,*

*முத்துமணிச் சுடரே வா,*

*ஓ மானே மானே,

அடுக்கு மல்லிகை  ஆள் பிடிக்குது

போன்ற பல பாடல்களைத் தந்தவர்.

திரை இசைப் பாடல்களில் புதுக் கவிதையை முதலில் கொண்டு வந்தவர் நா காமராசன் என்று கூறுவார்கள். .

முதுகலைப்பட்டம் பெற்ற பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்தமைக்காக கைதானார். பின்னர், வேறு ஒரு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாக,  எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு கதர்வாரிய துணைத் தலைவராக, . செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக எனப் பதவிகள் வகித்தவர்.

திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக இருந்தவர்,  பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மாநில மாணவர் அணிச் செயலராகவும்  பின் இலக்கிய அணி செயலாளராகவும் வேறு சில கட்சிப் பதவிகளிலும் இருந்தார். பின்னாட்களில் திராவிட அமைப்புக்களை விட்டு, இந்து அமைப்புக்களிலும் பங்கேற்றார்.

மூன்று முதல்வர்களுக்கும் மிக நெருக்கமாக இருந்தவர்.  தாமரை, கணையாழி, கண்ணதாசன், கசடதபற ஆகிய பத்திரிகைகளில்  இவரது கவிதைகள் வெளிவந்தன. இவர் முன்னாள் சபாநாயகர் மற்றும் அமைச்சராக இருந்த திரு  காளிமுத்துவின் வகுப்புத் தோழராவார்.

சுரதாவால் அடையாளங் காட்டப்பட்ட அவர்,எம் ஜி ஆரால் திரைப் படத்தில் பாடலாசிரியர் ஆனார். மொத்தமாக சுமார் 35 படங்களில், 120 பாடல்கள்  எழுதியுள்ளார்.

திமுகவை விட்டு வந்தபின், எம்ஜிஆரை ஆதரித்துப் புகழ்ந்தார். எம்ஜிஆர், பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் கூட்டங்களுக்கு வருகிறார், பகலில் வந்தால் ஒப்பனை கலைந்துவிடும்  என்று திமுக மற்றும் திரு கருணாநிதி கிண்டல் செய்தபோது, இவர் சொன்ன பதில் பலரையும் வியக்க வைத்தது.

சூரியனே

அச்சப்படும்

இரவு வேளையில்

வரும் சந்திரன் இவன் !

என்று புது விளக்கத்தைக் கூறினார். 

இது போன்ற புகழ் உரைகளால், இவருக்கு எம்ஜிஆரின் கண்பார்வை கிடைத்து, பல படங்களில் வாய்ப்புகள், அரசு வேலை, உதவிகள் என தாராளமாகக் கிடைத்தன.

முதல் கவிதைத் தொகுப்பான கறுப்பு மலர்கள் , தொடர்ந்து பதினைந்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களையும், நரகத்திலே சில தேவதைகள் என்ற கதை, நாவல் பழம் என்ற திறனாய்வு நூல், எனப்  பல படைப்புகளை எழுதியுள்ளார்.

திருநங்கைகள் பற்றி இவர் எழுதிய சந்திப்பிழை  கவிதை, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், கிறுக்கன், சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி, தாஜ் மகாலும் ரொட்டித் துண்டும்,ஆப்பிள் கனவு என கவிதை நூல்களின் தலைப்பே கவிதையாகப் பார்க்கப்பட்டன.  இவரது சில கவிதைகள் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டது.

சித்திர மின்னல்கள் என்ற தொகுப்பில்,

திருமணத்திற்குப் பிறகு

இரண்டு பேர் ஒருவராய் மாறுகிறார்கள்

அதற்குப் பிறகு 

இரண்டுபேரும் சண்டை போடுகிறார்கள்

ஏன் ?

அந்த ஒருவர்’ யார் என்று தீர்மானம் செய்வதற்காக.

 

விலைமகளிர் என்ற கவிதையில்

 

கற்புச் சிறையை உடைப்பதால்

கைது செய்யப்படுகிறோம்!

நாங்கள் நிர்வாணத்தை விற்மனை செய்கிறோம்..

ஆடைகள் வாங்குவதற்காக!

என்றும் எழுதியது அன்றையப் பேசுபொருளாக இருந்தது.

நீதிக்குத் தலைவணங்கு என்னும் திரைப்படத்தில் வந்த இந்தப் பாடல் அறிமுகப் பாடல்.

கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே

என் காதலனை இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வரவிடுங்கள்

 

நகக்குறி வரைகின்ற சித்திரமோ

அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ

முகம் என்று அதற்கொரு தலை நகரோ

கைககள் மூடிய கோட்டைக் கதவுகளோ

 

இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே

அது இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே, என்றும்,

 

பல்லாண்டு வாழ்க படத்தில்,

 

போய்வா நதியலையே,

ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

வா வா  வா நதி அலையே

இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா

 

நுரை பூவை அள்ளி அலை சிந்த வேண்டும்..

அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்

வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு…

மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்

 

மெதுவாக வந்து இதழ் மோதி

பதமாக அன்பு நதியோடி

மணமேடை கண்டு புது மாலை சூடி

குல மங்கை வாழ்க நலம் பாடி,

 

என்றும் இலக்கிய வரிகளைத் தந்திருக்கிறார்.

 

நல்லவனுக்கு நல்லவன் படத்தில், பெற்றோரின் சோகத்தை,

சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது

ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது

தந்தையும் இல்லை அன்னையும் இல்லை

கனவா வெறும் நினைவா ?

 

நெஞ்சிலே வரும் பந்தமே

தொடர்கதையா சிறுகதையா ?

நாம் போடும் மேடைகளோ நாடக மேடை

நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்

 

பாசம் என்பதா வேஷம் என்பதா

காலம் செய்த கோலம்

கூடி வாழக் கூடு தேடி ஓடி வந்த ஜீவன்

ஆடிப்பாடக் காடு தேடும் யார் செய்த பாவம் ?

என்று எழுதிய  வரிகள் நெஞ்சை வருடும்.

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது.

அதை உச்சரிக்கும்போது கொஞ்சம் தித்திக்கின்றது

தொடர்ந்து ,

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

 

காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே

தொட்ட இடம் எல்லாம்

தித்திப்புடன் இருக்கும்

முத்துத் தமிழ் மாது

தத்தை மொழி சொன்னால்

இப்படிப் பல பாடல்கள் நயமாகத் தந்தவர்.

 

முந்தானை முடிச்சு, வெள்ளை ரோஜா, கோழி கூவுது , ஆகாய கங்கை , சின்ன வீடு  ஊர்க்காவலன் எங்க ஊரு காவல்காரன்,  மருது பாண்டி ,  புது மனிதன், வண்டிச்சோலை சின்னராசு , பாட்டு வாத்தியார், அன்புள்ள ரஜனிகாந்த், இதயக்கோயில், ரெட்டை வால் குருவி, சகலகலா வல்லவன் போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதி உள்ளார்.

மதுவை ராஜ திரவமென்றும் கவிஞர்களின் தாய்ப்பாலென்றும் எழுதிய அவர்,

மது, அவரின் மனப்பாங்கு இவை சேர,  பல நேரங்களில், தடாலடியான பேச்சுகள் மூலம் இலக்கிய உலகத்தை அவ்வப்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார். “கம்பனுக்குப் பிறகு தமிழில் கவிஞனே இல்லை” என்றும், “கம்பனும்கூட என் பார்வையில் குறைந்தே தெரிகிறான்” என்றும் நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.  நான் அவரை ஒரு இலக்கிய விழாவில் சந்தித்தபோது, என் கவிதையைப் பாரட்டியவர், “கண்ணதாசனெல்லாம் ஒரு கவிஞனா?” அத்தனையும் இலக்கியத் திருட்டு எனச் சொன்னதைக் கேட்டு அப்படியே அங்கிருந்து நகர்ந்தேன்.

திரைத்துறைக்குப் பாடல் எழுதிய அனுபவங்களைப் பிற்காலத்தில் தம் கவிதையொன்றில் பதிவு செய்கையில் ‘பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன், இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன்’ என்று கசப்போடு கூறுகிறார். ‘பூபாள ராகம் புயலோடு போனதுபோல் ஆகாய கங்கை பாதாளப் படுகுழியில் விழுந்ததுபோல் என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்’ என்று.

 நிஜ வாழ்க்கையிலும்  மகன்,  மகள்  படித்து நல்ல பணி, குடும்பம் என்றே இருந்தாலும், ஏதோ தொலைந்தது போலவே வாழ்ந்து மறைந்தார்.