நீங்க எனக்கு ஃபோன் சார்..
_240514_150541_2921.jpg)
சூரியன் உதிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த நேரம். லாண்ட் லைன் (அப்போதெல்லாம் அது மட்டும்தான்) அழைத்தது.
அத்தனை சீக்கிரம் யாரும் அழைக்க மாட்டார்கள். அழைத்தால் ஏதேனும் முக்கிய விஷயமாக இருக்கக்கூடும்.
“ஹலோ நான் பாலசந்தர் பேசறேன்”
இவருடைய பள்ளித் தோழர் தயாரிப்பாளர் பாண்ட்ஸ் பாலா. வாடாபோடா தோழர்கள். (‘புதுப்புது அர்த்தங்க’ளில் நடித்தவர்.) அந்தக் காலத்தில் கதையம்சமுள்ள.. ரசிகர்கள் வியந்த சீரியல்கள் தயாரித்தவர்.
அவர் ஏன் இத்தனை சீக்கிரம்? யாருக்காவது ஏதாவது?
“சொல்லுங்கோ அண்ணா. மன்னியும் குழந்தைகளும் சௌக்கியமா?” நல்ல வேளையாய்க் குழந்தைகளின் பெயர்களைச் சொல்லிக் கேட்டேன். என் கணவரின் நண்பர்.. ராமகிருஷ்ணா பள்ளியில் உடன் படித்தவர்.. பாண்ட்ஸ் பாலா. பாண்ட்ஸ் பவுடர் கம்பெனியின் ஜிஎம். என்பதால் நண்பர்கள் அவரை பாண்ட்ஸ் பாலா என்பார்கள்.
நாடக உலகில் காலூன்றிய பெயர். சீரியல் தயாரிப்பிலும் இருந்ததால் ஒரு டிஸ்கஷன் ஓடிக்கொண்டிருந்தது. எனவே அடிக்கடி போன் வரும்
எப்போதுமே “நான் பாலசந்தர் பேசறேன்.” என்றுதான் அவரும் துவங்குவார்.
“என்ன பாலா இன்றைக்குக் குரல் வித்யாசமா இருக்கு? மன்னிக்குத் தெரியாமல் ஐஸ்கிரீம் சாப்பிட்டீங்களா..” என்று நான் என் இயல்புப்படி கிண்டலாய்க் கேட்க.
“நான் கே பாலசந்தர் பேசறேன்..” மிக ஆழ்ந்த குரலில் சொன்னார்.
சர்வமும் நடுங்கிவிட்டது எனக்கு. “ச…சார்.. நீங்க எனக்கு ரொம்ப ஃபேன் சார்.. சாரி சார்.. நான் உங்களுக்கு.. ஃபோன் சார்.. இல்லை இல்லை.. பேன் சார்… வந்து சார்.. போயி.. சார்..” படபடப்புடன் ஒரு டைரக்டரிடம், ஒரு ரசிகை எப்படியெல்லாம் உளறுவாளோ அப்படியெல்லாம் கரெக்டாய் உளறினேன்.
நீ தடுமாறி முடி அப்புறம் பேசறேன் என்று அவர் சொல்லவில்லையே தவிர… மைண்ட் வாய்ஸ் அப்படித்தான் இருந்திருக்கும்.
“நான் பாண்ட்ஸ் பாலான்னு நினைச்சுட்டேன் சார்.. (அவர் இவருக்கும் நண்பர்) சாரி சார். என்ன விஷயம் சார்.” என்று கேட்டேன்.
“நேத்தி கோபாலன் சார் வந்திருந்தார்..”
ஆமாம். தெரியும். பேட்டிக்காகப் போயிருந்தார்.
அப்போது கே பி சார் குமுதம் இதழ் தயாரித்துக் கொண்டிருந்தார். அதற்கான ‘கோ ஆர்டினேடர்’ என் கணவர்.
குமுதத்தில் கிட்டத்தட்ட 45 பக்கங்களுக்கு விஷயங்கள் தேவை. இதனால் சில நாட்களுக்குத் தொடர்ந்து பல சிட்டிங்குகளாக பேட்டிகள் போய்க்கொண்டிருந்தன. நேற்றோடு பேட்டிகள் எல்லாம் முடித்தாகிவிட்டது. .
“நேற்று பேட்டியில் சில விஷயங்கள் சேர்க்க வேண்டியிருக்கு” என்றார்.
“சொல்லுங்க சார்.. என்னிடமே சொல்லலாம்.. கணவர் இன்னும் 10 நிமிஷத்தில் வருவார்.. பேப்பர் வாங்கப் போயிருக்கார்” என்றேன்.
அவர் கிட்டத்தட்ட 5 நிமிஷம் கடகடவென்று சொன்னார்.
“நான் சொன்னதைக் கொஞ்சம் அப்டியே ரிபீட் செய்ய முடியுமா? எனறார்
அவர் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டதை வார்த்தை மாறாமல் படித்துக்காட்டினேன்
“எழுதிப்படிக்கறீங்களா? ஷார்ட் ஹான்ட்ல எழுதினீங்களா!” என்றார்
“இல்ல சார். லாங் ஹாண்ட்தான்..” (இதற்கு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறேன்! ஒவ்வொரு சொல்லையும் பாதிப்பாதி எழுதுவேன் )
:ஓ!” என்ற ஒற்றைவார்த்தையில் ஒரு 50 பாராட்டுக்கள் ஒளிந்திருந்ததாக நானாய்க் கற்பனை செய்துகொண்டேன்.
அந்தக் குமுதம் இஷ்யூவுக்காக அன்றைக்கு அவர் கொடுத்த பேட்டி எனக்கு என்றுமே மறக்காது!!
அது…
“மரோ சரித்ரா வெளி வந்த புதிதில் மூட்டை மூட்டையாகப் பாராட்டுக் கடிதங்கள் வரும். போஸ்ட் மேனுக்கு ரூபாய் கொடுப்போம். எடுத்து வர அவ்வளவு சிரமப்படுவார்.. அவ்வப்போது கைக்கு அகப்பட்ட கடிதங்களை எடுத்துப் படிப்போம். மக்கள் திகட்டத் திகட்டப் பாராட்டினார்கள்…. பல பிரபலங்கள் உள்பட..
“ஒரு இன்லாண்ட் கடிதம் மட்டும் வித்தியாசமாக எழுதப்பட்டிருந்தது.
ஒரு அம்மா கன்னா பின்னாவென்று திட்டியிருந்தார்கள் . ஓரிரு சாபங்கள் கூட! ‘என் மகள் ஒருவனைக் காதலித்தாள். அவனோட ஓடிப்போயிருந்தால்கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா இவ உங்க படத்தில் வரும் அதே இடத்துலேயிருந்து (விசாகப்பட்டினம்) காதலனோட குதித்துவிட்டாள். இருவரும் இறந்துவிட்டனர்.. ” என்பதுதான் கடிதத்தில் சாரம்
கே பி சார் சொன்னார் “எனக்கு மிகவும் கலக்கமாகிவிட்டது. சினிமாவில் வீச்சும் பலமும் அந்த அளவு உள்ளது. எனவே அப்புறம் மிக ஜாக்கிரதையாக அதைக் கையாள ஆரம்பிச்சேன். அதன்பிறகு தற்கொலை எண்ணத்தை மாற்றும் வகையில் “வானமே எல்லை’ டைரக்ட் செய்தேன். ஆனால் the pity is அது ஓடிய அளவுக்கு இது ஓடவில்லை! ” என வருந்தினார்
(ஆனால் முதல் காட்சியைத் தற்கொலையாக வைத்துப் புன்னகை மன்னனை ஜெயிக்கச்செய்தாரே!!)
( இந்த அத்தியாயத்தில் எத்னை ‘சார்கள்’ உள்ளன என்று போட்டி வைக்கலாம் போலிருக்கே!)
- • •
என் சிநேகிதி ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது தன் வீட்டில் குடியிருந்தவர்கள் பற்றிப் பேச்சு வந்தது. அவனைப் பற்றி ஒரு சுவாரஸ்ய விஷயம் சொன்னாள்.
கேட்கவே வியப்பாய் இருந்தது. அந்தப் பையனையும் அவன் அம்மாவையும் பேட்டி கண்டால் நன்றாய் இருக்குமே என்று தோன்றியது. எப்போதுமே திங்கட் கிழமைகளில் ஐடியாக்கள் எழுதி லிஸ்ட் தர வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் நாங்கள் இரண்டு பேரும் மண்டையை உடைத்துக் கொண்டு ஐடியா யோசிப்போம்.
அந்தத் திங்கட்கிழமை காலை இந்த ஐடியா ஓகே ஆகிவிட்டது.
உள்ளூர்ப் பேட்டிகள், கல்லூரி மாணவிகள், இளம் தாய்மார்கள் எனில், பேட்டி காண என்னை அனுப்பிவிடுவார் என் கணவர். போதாக்குறைக்கு என் சிநேகிதியின் வீட்டில் குடியிருப்பவர்கள் என்பதால் நான் போனால் வசதியாய் இருக்கும் என்றார்.
அந்த அளவு என்ன சுவாரஸ்யமான விஷயம்? அதுவும் குமுதத்தில் பேட்டி வருகிற அளவுக்கு?
என் சிநேகிதி சொன்னது…
“அவங்க வீட்டில் ஒரு பையன் இருக்கான். வயது பன்னிரண்டு. இன்றைக்கு வரைக்கும் அவன் பால் மட்டுமே குடிக்கறான். மூணு வேளையும் பால்தான்” என்றாள். “பால் தவிர வேறு எதுவுமே குடிப்பதில்லை” என்றாள் கூடுதல் தகவலாக. சுவாரஸ்யம்தானே?
அவர்கள் வீட்டுக்குப் போனேன். அந்தப் பையனின் தாயாரைப் பார்த்தேன். குமுதம் பேட்டி என்பதால் சுவாரஸ்யமாகச் சரி என்பார்கள் என்ற அபத்தமான ஊகத்துடன் போன எனக்கு ஏமாற்றம்.
சீறி விழுந்தார் அந்தத்தாய். “உக்கும். பேட்டி ஒண்ணுதான் பாக்கி.. ஏற்கனவே குழந்தையை வளர்க்கத் தெரியலைன்னு மாமியார் சொல்றாங்க. அதைக்கேட்டு அந்தக் குடும்பம் மொத்தமும் ‘அச்சோ.. பாவமே’ என்று பேசற மாதிரி என்னைக் கேலி செய்துக்கிட்டிருக்காங்க.. இதுல பேட்டி வேறயா?”
பொதுவாக, யாருக்காவது பேட்டி தர விருப்பம் இல்லை என்றால் நானோ என் கணவரோ வற்புறுத்த மாட்டோம். பிரசுரமான பிறகு எந்த வம்பு வேண்டுமென்றாலும் வரக்கூடும்.
எனவே நான் ஏமாற்றத்துடன் கிளம்ப நினைத்தேன். ஆனால் என் சிநேகிதி விடுவதாயில்லை. தன் டெனன்ட்டை வற்புறுத்தும் குரலில் சொன்னாள். “மன பாரம் குறையும்டீ கலா. தவிர பேட்டி குடுத்து உலகம் முழுக்கத் தெரிஞ்சுட்டா.. இனி யார் எப்போ என்ன சொல்வாங்களோன்னு பயந்துக்கிட்டிருக்க வேண்டாம்.” என்றாள்.
நான் எதுவும் சொல்வதாக இல்லை. ஆனால் சட்டென்று “நான் பேட்டி குடுக்கறேன் மேம். இவங்க சொல்றாங்கன்னு இல்லை. என் மாமியார் வாயை அடைக்கணும். அதனால பேட்டி குடுக்கறேன்” என்றாள்.
நான் மெல்ல கேள்விகளைத் தொடுக்க..
நிஜமாய் இந்த இளம் தாய் ரொம்பவே பாவம்.
குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயதானதும், திட உணவு கொடுக்க முயன்றிருக்கிறார். முதல் முறை வாமிட். காரணம் புரியவில்லை. இரண்டாம் முறை ஜுரம். இந்த இரண்டு முறைகளுமே இவர் கொடுத்த திட உணவுதான் காரணம் என்பதை உணரவில்லை.
இந்த நிலையில் திட உணவு வேண்டாம் என்று தவிர்த்திருக்கிறார். ஒரு மாதம் கழித்து முயன்றபோது குழந்தை விஜய் முகம் சுளித்தான். தயிர் சுவை பிடிக்கவில்லையோ.. ரசம் காரமோ.. நெய் போதவில்லையோ என்றெல்லாம் யோசித்து மாற்றி மாற்றிக்கொடுக்க, ஒவ்வொரு முறையும் பிரச்னை.
டாக்டர்களுக்கு வியப்பு. பால் ஒவ்வாமை என்பது பலருக்கு உள்ளதுதான். ஆனால் பாலைத் தவிர எதுவுமே ஒத்துக்கொள்ளாது என்று கேள்விப்பட்டதில்லை. எத்தனையோ முயன்றும் சரி செய்ய இயலவில்லை.
ஒரு முறை அவன் தாத்தா சாதம் சாப்பிட்டால் சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று ஆசை காட்டினார். மூன்றே மூன்று கோலியளவு சாதம் சிரமப்பட்டு உள்ளே தள்ளிவிட்டான். வாமிட். மறுநாள் 103 டிகிரி ஜுரம்.
மற்றொரு முறை “உன்னால் எனக்கு எவ்ளோ கஷ்டம். ஊரே தூற்றுது” என்று அம்மா அழ, குழந்தை அழ, சாப்பிடுவதாக இவன் உறுதியளிக்க.. மூன்று மிளகு சைஸ் உருண்டை சாதம்.
உடனே குழந்தை மயங்கி விழுந்து ஆஸ்பத்திரி.
ஏராளமான முயற்சிகளுக்குப் பிறகு ஒரு வேளை சைக்கலாஜிகல் பிரச்னையாக(மனத்தடையாக)வும் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்கள் டாக்டர்கள். எனவே அன்று முதல் பால் மட்டுமே உணவு.
ராஸ்ரீவ் காந்தி இறந்த அன்று பால் சப்ளை இல்லாத நிலையில், திண்டாடி, மாட்டுக்கார்களைக் கேட்டு, அந்தக் காலத்திலேயே ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தாளாம்.
ஆக… நான் பேட்டி கண்டபோதுவரை (12 வயது) பால் மட்டுமேஉணவு. லஞ்ச் நேரத்துக்காக 3 லிட்டர் பால் கொடுப்பாளாம். முழு நாளும் மொத்தம் 9 லிட்டர். வெயிட் நன்றாய் இருக்கிறது என்பதாலும், மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாலும், பால் ஒரு முழுமையான உணவு என்பதாலும் டாக்டர்கள் இப்படியே தொடரலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
பேட்டி பிரசுரமாகி ஏராளமானவர்கள் பரிதாபப்பட்டுக் கடிதம் எழுதினார்கள். நிறைய டாக்டர்கள் சிகிச்சை தர முன் வந்தார்கள். மந்திரித்துத் தருவதாகச் சொன்னார்கள். கோயிலில் அர்ச்சனை செய்தார்கள்.
இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் இவர்களை எனக்கு நன்கு தெரியும். இது ஒரு பிரச்னையே இல்லை என்று ஒரு பெண் இவனைக் கல்யாணம் செய்து கொண்டாள் குழந்தைகள் பிறந்தாச்சு. அலுவலக பார்ட்டிகள் எதிலுமே கலந்து கொள்ள மாட்டான். தன் திருமணத்திலும் தன் தன் வீட்டு விழாக்களிலும்கூட விஜய் பால் மட்டுமே அருந்துவான். கேக் வெட்டினாலும் ஒரு துளிகூடச் சாப்பிட மாட்டான். இப்போது வயது 42.
சமீபத்தில் அவனைப் பார்த்தபோது அவன் மனைவி பெருமிதத்துடன் “அவனை மாற்றுகிறேன் பேர்வழின்னு சிரமப்படுத்தலை ஆன்ட்டி. அவன் எப்படி விருப்பமோ அப்படி இருக்கட்டுமே” என்று சொன்னபோது சந்தோஷமாய் ஆசீர்வதித்தேன்.
பக்கத்தில் இருந்த விஜய்யின் அம்மா கலா “வேண்டுமென்றே என் இரண்டாவது பையனை சகலமும் சாப்பிடறமாதிரி வளர்த்துட்டேன். இவனையும் நான்தான் வளர்த்தேன். இப்ப சொல்லுங்க. எனக்கு வளர்க்கத் தெரியலையா என்று எல்லாரையும் கேட்டேன்” என்று சிரித்தார்.
நாட்கள் நீளும்..
கேள்வி: இது சோதனையா நெஞ்சின் வேதனையா?
