பேனா தானா – எஸ் எஸ்

அறிவற்ற மூளையின் உத்தரவைக் கேட்காத பேனா தானா எழுதிய கவிதை.

பேனாவின் முனை - ஏனைய கவிதைகள்

புது கவிஞர்களின் அணிவகுப்பு.

தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துக்  கவிஞர்கள்.

ஆண்கள்ஐந்து பெண்கள் நான்கு. ஒருவர்திருநங்கை.

கவிதை வாசிக்குமுன். நெறியாளர்.

கவிஞர்களை

உசுப்பேத்தினர்.

கோபப்படுத்தினார்.

அலறவைத்தார்.

அழவைத்தார்.

சிரிக்கவைத்தார்.

பைத்தியமாக்கினார்.

அரங்கத்தில் அனைத்துக்கும்.

சீட்டி விசில்  ஆரவாரம்கைதட்டல்.

ஒவ்வொரு கவிதையும் மாணிக்க விதைகள்.

( அட, உண்மையில் நான் மணிக் கவிதைகள் என்று எழுதினேன் . தானே திருத்தும் எம் எஸ் வேர்ட் மாணிக்க விதைகள் என்று மாற்றிவிட்டது. இதுதான் பேனா தானா எழுதியதோ?)

அரங்கத்தில் அனைத்துக்கும். ஆரவாரம்கைதட்டல்.

ஒவ்வொரு கவிதையும் மணிக் கவிதைகள் மாணிக்க விதைகள்.

நரம்பை முடுக்கும். முட்டுக் கவிதைகள்

ஒருவர் வானவீதியில் அணுவைப்  பிறந்தார்.

ஒருவர். குரங்குக்குள். செயற்கை நுண்ணறிவு புகுத்தினார்.

ஒருவர் எறும்பு புற்றுக்குள் ஈயத்தை ஊற்றினார்.

ஒருவர் ரத்தத்தின் சிவப்பை நீலமாக்கினார்.

ஒருவர் மதத்தில் ஏறிய மனிதன் காலை. உடைத்தார்.

ஒருவர் வயிற்றுக்குள். ஈய்ந்த உணவைத் . துப்பினார்.

ஒருவர் செருப்புக்கும் முடிக்கும். முடிச்சுப்  போட்டார்.

ஒருவர் நோட்டாவா தோட்டாவாஎன்றார்.

ஒருவர் குப்பையைக்  கிளறி செத்ததை உண்டார்.

கடைசியாக ஒருவர்.

மனைவியைக்  கொன்று விட்டேனே என்று. அழுதார்.

போலீஸ் அவரைச் சிறைப் பிடித்தது.

கவிதையைக் கொன்றதற்கும் சேர்த்து! ..

 

 

அசை  

அவசரம் அவசரமாக விழுங்கி
வெந்தது வேகாதது பாதிபாதியாய்
சுவை கொஞ்சமும் உணராமல்
கிடைச்சது நிலைக்குமோ என்றபயத்தில் 
பற்கள் நாக்கை  ஒதுக்கிவிட்டு
இரைப்பை ரொப்பினால்  போதும்
அப்பாடா என்ற திருப்தியில் உழலும்
மாட்டைவிடக் கேவலமானவன்  நான் !

ஆனாலும் மாட்டுக்கு அறிவுண்டு
முழுங்கினதைத் திருப்பி எடுத்துவந்து
வாய்க்கே அதையும் கொண்டுவந்து
காலைச் சுகமாப் பரப்பிக்கொண்டு
வாலையும் மெதுவாய் ஆட்டிக்கொண்டு
ஆசையா தாடை அசைய அசைய
அசை போடும் அழகு வித்தையை
சாமி எனக்குச் சொல்லித் தரலை !

ஆனா நினைவுகளைப் பிடித்து
திரும்பத் திரும்பக் கொண்டுவந்து
அசைபோடத் தெரியுமே எனக்கு
நானும் புத்திசாலிதான் ஐயா

மாட்டுக்கு கொடுத்தான் ஓர் அசை !
எனக்குக்  கொடுத்தான் வேற அசை !


ஆழ்வார்களும் கண்ணதாசனும் *பகுதி 10 * – சௌரிராஜன்

                                                                *திருப்பாணாழ்வார்* ( *தொடர்ச்சி* )

Kannadasan | by artist venkatesan | Venkatesan Purushothaman | Flickr

Tamil Brahmins on X: "Karthigai Rohini Sri Thiruppanalwar Thirunatchathiram  https://t.co/esQRqacOkl" / Xஅமலனாதிபிரானிலிருந்து இரண்டு பாசுரங்களை எடுத்துக் கொண்டு , அவற்றை ஒட்டி கவிஞர் கண்ணதாசனின் பாடல்களையும் பார்ப்போம் என முந்தைய பகுதியில் கூறி இருந்தேன். நேராக விஷயத்திற்கு சென்று விடுவோம்.

ஒன்பதாம் பாசுரம் : ( பதம் பிரித்து)

*ஆலமா மரத்தின் இலை மேல்*
*ஒரு பாலகனாய்*
*ஞாலம் ஏழும் உண்டான்* *அரங்கத்து அரவின்* *அணையான்*
*கோலமாமணி ஆரமும்* *முத்துத்தாமமும்*
*முடிவில்லது ஓர் எழில்*
*நீலமேனி ஐயோ !*
*நிறை கொண்டது என்* *நெஞ்சினையே*

மிகப்பெரிய ஆலமரத்தின் சிறிய இலையிலே கிடக்கும் ஒப்பற்ற பாலகன், ஏழு உலகங்களையும் உண்டு தன் திருவயிற்றிலே வைத்திருப்பவன், அவனே இங்கு திருவரங்கத்தில் பாம்பணையின் மேல் சயனித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் அணிந்திருக்கும் சிறந்த ரத்தினங்களால் செய்யப்பட்ட ஆரமும் , முத்துமாலையும், எல்லை காண முடியாமல் விளங்கும் அழகிய நீல மேனியும், ஐயோ , என் நெஞ்சினை கொள்ளை கொண்டு போய் விட்டனவே !

இதில் *ஐயோ* என்பதை பரவசத்தின் உச்ச நிலையில் வெளிப்படும் சொல்லாக, ரசனையின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள வேண்டும்.‌

இந்த *ஐயோ* என்ற ஒற்றைச் சொல்,
என்னை முதலில் கம்பனிடமும் பிறகு கண்ணதாசனிடமும் அழைத்துச் சென்றுவிட்டது. கவிஞர், காவியத்தாயின் இளைய மகன்தான். அதனால் காவியத்தாயின் மூத்த மகனை முதலில் பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.

கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – கங்கைப் படலத்தில் ராமன், அயோத்தியை விட்டு நீங்கி, சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் காடு நோக்கி சென்று, கங்கை கரையை அடைந்து, அங்குள்ள முனிவர்களின் உபசரிப்பை ஏற்றுக் கொள்கிறான். மூவரும் நடக்கும் காட்சியை வர்ணிக்கும் கம்பர் பாடல் : ( பதம் பிரித்து )

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய

பொய்யோ எனும் இடையாளோடும்**இளையானோடும் போனான்

மையோ, மரகதமோ* , *மறிகடலோ, மழை முகிலோ,

ஐயோ ! இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்.

பொருள் :

சூரியனின் ஒளி , இராமனின் மேனியில் இருந்து வரும் பிரகாசத்தில் மறைய,

இடை ( இடுப்பு ) ஒன்று இருக்கிறதா , இல்லையா‌ – அது பொய்யா, நிஜமா என்று தோன்றும் அளவுக்கு மெல்லிய இடையாளான சீதையுடனும்,
தம்பி லக்ஷ்மணனுடனும் உடன் போனான் ராமன்.

( அந்த ராமனை வர்ணிப்பது என்றால், )

அவன் நிறம் மை போன்ற கருமையோ ?
மரகத மணி போன்ற பச்சை நிறமோ?
கடல் போல நீலமோ ?
மழை மேகம் போல் கருப்போ?

*ஐயோ* , இவன் அழகை எப்படி சொல்வது?
இவன் வடிவழகு என்பது
எப்போதும் அழியாத அழகு.

ராமனின் அழகை வர்ணிக்க அதற்கு ஒரு சரியான உவமையை தேட முடியாமல் தவிக்கிறார் கம்பர். உவமைகளில் உச்சம் தொட்ட கம்பருக்கே அந்த நிலை.
ஐயோ , என்ன அழகு ! என்று தன் ரசனையை, பரவசத்தை மட்டுமே சொல்ல முடிகிறது அவரால்.
திருப்பாணாழ்வார் ஞாபகம் வரவில்லையா?

கவிஞர் கண்ணதாசனை உள்ளே அழைப்போம்.

*தாயைக் காத்த தனயன்* என்ற படத்தில், மாமா கேவி மகாதேவன் இசையில்,
டி எம் எஸ் , சுசீலா பாட கண்ணதாசனின் பாடல் :

*மூடித் திறந்த இமை இரண்டும்*
*பார் பார் என்றன*
*முந்தானை காற்றிலாடி வா வா*
*என்றது*

என்ற பல்லவியுடன் ஆரம்பிக்கும் பாடல்.
அதில் வரும் சரணத்தில் தலைவன், தலைவியை பார்த்து பாடுகிறான்:

*அன்னக் கொடி நடை முன்னும்* *பின்னும் ஐயோ ஐயோ என்றது*

*வண்ணக் கொடியிடை* *கண்ணில் விழுந்து* *மெய்யோ பொய்யோ என்றது*.

எளிமையான வரிகளில், திருப்பாணாழ்வாரையும், கம்பரையும் ஒருசேர ஞாபகப்படுத்தி விட்டார் கவிஞர்.

திருப்பாணாழ்வாரின் வேறொரு பாசுரத்தை எடுத்துக்கொண்டு கவிஞரையும் உடன் இணைப்போம்.

பத்தாம் பாசுரம் : ( பதம் பிரித்து )

*கொண்டல் வண்ணனை* , *கோவலனாய்* ,
*வெண்ணெய் உண்ட வாயன்* , *என் உள்ளம் கவர்ந்தானை*
*அண்டர்கோன் அணி அரங்கன்* *என் அமுதினை கண்ட கண்கள்* *மற்றொன்றினைக் காணாவே*

மேக நிறத்தவன், மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவன், வெண்ணெய் உண்டவன்,
என் உள்ளம் கவர்ந்தவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன், திருவரங்கத்தில் உள்ளவன், என் அமுதம், இவனைக் கண்டபின் என் கண்கள் வேறொன்றையும் காணாது.
இப்படி சொல்லிவிட்டு, திருப்பாணாழ்வார் அரங்கனுடன் இரண்டற கலந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இதில், *என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே*
என்ற வரிகள் நமது கவிஞரையும் பாதித்து , *வானம்பாடி* என்ற திரைப்படத்தில், மாமா திரு கே வி மகாதேவன் இசையில், சுசீலாவின் தேன்மதுர குரலில் வரும்

*கங்கைக் கரை தோட்டம்* *கன்னிப் பெண்கள் கூட்டம்*
*கண்ணன் நடுவினிலே*

பாடலில், ஒரு சரணமாக வெளிப்பட்டது.

*கண்ணன் முகம் கண்டகண்கள்* *மன்னன் முகம் காண்பதில்லை*

*கண்ணனுக்குத் தந்த உள்ளம்* *இன்னொருவர்* *கொள்வதில்லை*

இதே கருத்து, நாம் ஏற்கனவே பார்த்த *ஆண்டாள்* கட்டுரையிலும் வருகிறது:

*மானிடவர்க்கென்று* *பேச்சுப்படில்*
*வாழகில்லேன் கண்டாய்* *மன்மதனே*

என்ற நாச்சியார் திருமொழிக்கு, *கண்ணனுக்கு தந்த உள்ளம்* , *இன்னொருவர் கொள்வதில்லை*
என்பது தானே பொருள்?

திருப்பாணாழ்வார், ஆண்டாள் இருவரும் , வேறொருவரையும் பார்ப்பதில்லை, வேறொருவருக்கும் உள்ளத்தை கொடுப்பதில்லை என்று கூறியதோடு நிற்காமல் அரங்கனுடன் இரண்டறக் கலந்தவர்கள். அப்படி இருக்க , நமது கவிஞர் மட்டும் மேலே குறிப்பிட்ட பாடலில் , நாயகியை அப்படியே ஊசலாட விட்டு விடுவாரா ? அதாவது , அந்த நாயகி , கண்ணனை அடைந்தாரா இல்லையா என்பதை சொல்ல வேண்டாமா?
இதோ கவிஞரின் வரிகள்:

” கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை

கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை

கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ…

காற்றில் மறைவேனோ! “

என்பதோடு நிறுத்தாமல், அடுத்த வரிகளாக

*நாடி வரும் கண்ணன்* , *கோல மணி மார்பில்*
*நானே தவழ்ந்திருப்பேன்* என்று கூறி முடிக்கிறார்.

வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

திவ்ய பிரபந்தங்களில் மிகக் குறைவான பாசுரங்களைக் கொண்ட அருளிச்செயலை ஒட்டிய கட்டுரை இரண்டு பகுதிகளாக, நீண்டு விரிந்து விட்டது.
இன்னும் திருப்பாணாழ்வாரின் தாக்கத்திலிருந்தும் , கண்ணதாசனின் தாக்கத்திலிருந்தும் நான் விடுபடவில்லை.

அடுத்து எடுத்துக் கொள்ளப் போகும் ஆழ்வாரையும், கவிஞரையும், ரொம்ப காத்திருக்க விடாமல் , விரைவில் வருகிறேன்.

சங்கப்பாடல் ஓர் எளிய அறிமுகம் – பட்டினப்பாலை —பாச்சுடர் வளவ. துரையன்

பட்டினப்பாலை எனும் நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான், கரிகாலன்) ஆவான். இந்நூல் மொத்தம் 301 அடிகள் கொண்டதாகும். மேலும் இந்நூல் ஆசிரியப்பா மற்றும் வஞ்சிப்பா எனும் பா வகைகளால் புனையப்பட்டதாகும். உருத்திரங்கண்ணனார் கடியலூர் என்ற ஊரைச் சார்ந்தவர். ‘உருத்திரனுக்குக் கண் போன்ற சிறந்த முருகன்’ என்னும் பொருள் வருவதால் இது முருகனைக் குறிக்கும் பெயர் என்றும் இவர் சைவ சமயத்தினராக இருப்பார் என்றார் மறைமலையடிகள். தொல்காப்பிய உரையில் … Continue reading

சிவசங்கரி சிறுகதைத் தேர்வு – மே 2024 – ஸ்வர்ணலதா வெங்கடரமணி

குவிகம்-சிவசங்கரி மாதச் சிறுகதைத் தேர்வு – மே 2024

மே மாதத்தின் சிறந்த சிறுகதையை தேர்வு செய்யும் வாய்ப்பை எனக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இம்மாத ( மே 2024) சிறந்த சிறுகதை :

அட என்ன ஊர் யா இது?

ரேவதி பாலு

சொல்வனம் – இதழ் 319 – மே 24, 2024

— ஸ்வர்ணலதா வெங்கடரமணி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

ஒரு சிறுகதை வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. அதில் ஒளிரும் சமூக சிந்தனையும், அக்கறையும் வாசகரை மகிழ்ச்சியின் உச்சிக்கே தள்ளுவது மேலும் சிறப்பு. அத்தகைய பார்வையுடன் தான் சிறந்த கதை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

அனைத்து கதைகளிலும் எனக்கு மிகவும் பிடித்தது

அட என்ன ஊர் யா இது?

ரேவதி பாலு

சொல்வனம் – இதழ் 319 – மே 24, 2024

இக்கதை தேர்தல் களத்தில் சிறிய ஊர்களில் சகஜமாய் நடக்கும் ஒரு சிறு நிகழ்வு பற்றியது.

வேலூர் அருகே புளியம்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் இடை தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது. அந்த ஊரில் பொது மக்கள் சேவைக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் உண்டு. ஆனால் மிகச் சில வீடுகள் தவிர எங்கும் கழிப்பறை வசதி கிடையாது. பல வருடங்களாக அந்த ஊர் ஏழை மக்கள் ஊர்க்கோடியில் உள்ள வயல்வெளி மற்றும் புதர்களையே நம்பி இருந்தனர். பலநாள் போராட்டத்திற்குப்பின் அரசு அந்த ஊர்க் கடைசியில் உள்ள சுடுகாட்டிற்குள் ஒரு கழிவறையை கட்டித் தந்தது. அதையும் பூட்டி அந்த கிராம முக்கியஸ்தர் ஒருவர் வசம் சாவி ஒப்படைக்கப் பட்டது. அந்த ஊர் பெண்களும் முதியவர்களும் அந்த ஒரு கழிப்பறையை நம்பியே காலம் தள்ளினர்.

இத்தகைய சூழ்நிலையில் ஒரு பிரபல அரசியல் பிரமுகர் பிரச்சாரத்திற்கு அங்கு வந்து படும் இன்னல்களை அழகாக சித்தரிக்கும் கதை இது. கழிப்பறை வசதிகூட இல்லாத ஊரில் இரண்டு டாஸ்மாக் இருப்பது நம் ஊர்களின் அவல நிலையை காட்டுகிறது. இது ஓர் irony – அரசு நல்ல பல திட்டங்களுக்கு டாஸ்மாக் வருமானத்தையே நம்பி இருப்பதே யதார்த்தம்.

***

அடுத்து என்னை மிகவும் கவர்ந்தது ‘ரங்கி ‘ (குமுதம் 15.05.2024) என்னும் தேவிபாலா எழுதிய சிறுகதை. அதிகம் படிக்காத, அதிகம் அழகில்லாத ஒரு பெண் இன்றைய சமூகத்தில் தனக்கென்று ஒரு அடையாளம் அமைத்துக்கொள்ளும் அழகிய கதை. பெண்ணின் பெருமையைப் போற்றும் கதை இது.

**

இன்னொன்று விமலா ரமணியின் ‘ஒரு ஞாயிற்றுக்கிழமை’ (தினமலர் 05.05.2024) ஒரு இளவயதுப் பெண் எத்தனை பக்குவத்தோடு வாழ்க்கையை அணுகுகிறார் என்பதை அழகாக சொல்கிறது.

இறுதியாக…

எப்போதோ படித்தது மனதில் பசுமரத்தாணி.

“எனக்கு விமரிசனங்கள்  மிகவும் பிடிக்கும். நீங்கள் என் கதையை சிலாகித்துப்பேசினால் நீங்கள் என் வாசகர். கதையைக்கீறி விமரிசனம் செய்பவர் என் அன்பு நண்பர்”.

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

வடபழனியும் சபாஷ் மீனாவும்! 

அறுபதுகளில் – நான் சொல்வது வருடங்களை – சென்னையைத் தெரிந்தவர்களுக்கு, நான் சொல்லப்போகும் விபரங்கள் அவர்கள் மனதில் கொஞ்சம் நாஸ்டால்ஜியாவை தட்டி எழுப்பக்கூடும்!
இராமகிருஷ்ணா மெயின் ஸ்கூலில் படித்துவந்த காலம். மீனாட்சி சுந்தரத்திற்கு ராம் தியேட்டருக்கு எதிரில் வீடு. தடிமனாகக் குழிக்குழியாய் தெரியும் கண்ணாடிக்குப் பின்னால் சின்னதாய்ச் சிரிக்கும் கண்கள் அவன் அப்பாவுக்கு, சன்னமான குரல். கதர் வேட்டி, கதர் அரைக்கை சட்டையில் மெதுவாக வந்து, ‘வாப்பா’ என்று அழைப்பதில் ஒரு வாத்சல்யம் தெரியும். மீனாட்சியின் பெரியப்பா பக்கத்து வீடு – கற்சிலைகள் செய்வது தொழில். வீட்டுக்குள் நுழையும்போது, சிறு சுத்தியல், உளி எழுப்பும் சத்தம், மகாபலிபுரம் சாலையில் நடப்பது போலிருக்கும்! சொல்லவந்த விஷயத்தை விட்டு எங்கோ போய்விட்டேன். மீனாட்சி என் கிளாஸ்மேட். நன்றாகப் படிப்பான். அவன் பெற்றோருக்கு என்னைப் பிடிக்கும். அவன் அம்மா செய்யும் வாழைக்காய் ‘ஃப்ரை’, லஞ்ச் டயத்தில் எனக்குக் கொடுப்பான். கொஞ்சம் மஞ்சளும், மசாலாவும் தூக்கலாய் இருக்கும்!
தி நகர் பாண்டி பசாரிலிருந்து, லிபர்டி, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் தாண்டி ராம் தியேட்டதில் இறங்க 12B பஸ்ஸில் டிக்கட் இருபது பைசா! 25 பைசா டிக்கட்டில் வடபழனி பஸ் டெப்போவுக்கே போய்விடலாம்! கோடம்பாக்கம் பிரிட்ஜ் (‘ஃப்ளை ஓவர்’ என்று ஓவராய் பில்ட் அப் கொடுத்த காலம்!) கட்டிய புதிது. காற்றில் தலைமுடி பறக்க ஜன்னலோர சீட்டில் கனவுகள் பல கண்டு பயணித்தது சுகம் – இப்போது கனவுகளும் இல்லை, பறக்க ‘முடி’யும் இல்லை!
இவ்வளவு நெருக்கடிகள் இல்லாத, கடைகள் அதிகமில்லாத ஆற்காட் ரோடு -இப்போது என் எஸ் கே ரோடு – அப்போது அகலமாக இருந்தது. பல பஸ்களும், சினிமா நடிகர்களின் கார்களும், ஸ்டுடியோ வேன்களும், ஸ்கூட்டர்களும், சைக்கிள்களும் இருந்தாலும், ஓரமாகச் செல்லும் குதிரை வண்டிகள் (ஜட்கா வண்டிகள்) என்றும் என்னைக் கவரும்!
ஒரு சமயத்தில், ஆற்காடு ரோட்டில் டிராஃபிக் அதிகமாகிவிட, வடபழனி பஸ் டெப்போ தாண்டி மட்டும் குதிரை வண்டிகளில் சவாரி செய்யலாம்! ஏ வி எம் ஸ்டுடியோ முன்னால் நான்கைந்து குதிரை வண்டிகள் நிற்கும். சவலையான குதிரைக்கு கண்கள் பெரிதாய் இருக்கும். தலையில் கலர்க் கலராகக் ‘குச்சம்’ இறகுகள் இருக்கும் – கணுக்கால் வரை லுங்கி கட்டிய பாய், தன் குறுந்தாடியைத் தடவியவாறு, பயணிகளுக்குக் காத்திருப்பார். வண்டியில் ஐந்தாறு பேர் சேர்ந்தால் தான், குதிரை நகரும்! வைக்கோல் மேல் விரிக்கப்பட்ட நிறமிழந்த ஜமக்காளத்தில் ஏறி அமர்ந்து கொண்டால், இருபது அடிகளுக்கு ஒரு முறை வண்டி ஆட்டத்தில், பின் தலையில் இடித்துக்கொள்வது பழகிவிடும்! மீனாட்சியைத் தவிர சக பயணிகள் யாரென்பது எப்போதுமே சஸ்பென்ஸ்தான்!
ஒரு சனிக்கிழமை மதியம் நானும் மீனாட்சியும் ராம் தியேட்டரிலிருந்து நடந்து வந்து, ஏ வி எம் வாசலில் இருந்து குதிரை வண்டியில் சென்றோம். பூக்குடையுடன் ஒரு பாட்டி, பிலிம் ரோல் டப்பாவுடன் ஒரு வாலிபன் (பார்வையே அவன் சினிமாக் கனவுகளைக் காட்டின!). தலைக்கு இருபத்தி ஐந்து பைசா என்று வண்டிக்காரர் சொல்ல, நாங்கள் இருவரும் வண்டியிலேறி, கால்களைத் தொங்க விட்டு, குறுக்குக் கம்பியில் கைகளை அமர்த்தி எதிர்த் திசையில் வேடிக்கை பார்த்து வந்தோம்! சென்ற இடம் அந்தக் கால விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் – பார்த்த படம் ‘சபாஷ் மீனா’. ஐம்பத்தி ஐந்து பைசா டிக்கட் – பேக் பெஞ்ச் – பீடி, சிகரெட் வாசம், சூடான ஃபேன் காற்று இவற்றுடன் படம் பார்த்தோம் – ‘காணா இன்பம் கனிந்ததேனோ….’ டி ஏ மோதியும், சுசீலாவும் மூச்சுவிடாமல் பாட, திரையில் ஸ்டுடியோ மழையில் சிவாஜியும், மாலினியும் நனைந்து, புரண்டு, விடாமல் காதலித்துக்கொண்டிருந்தனர்! ஆனாலும் ஒரு நல்ல காமெடி படம் பார்த்த திருப்தி இருந்தது!
படம் முடிந்து, ராம் தியெட்டர் வரை நடந்து வர முடிவு செய்தோம்! ஆற்காடு சாலையின் இருபுறமும் மரங்கள், கொஞ்சம் தள்ளி தோப்புகள், கொஞ்சம் வயல்கள் இருந்த காலம். மாலைக் காற்றை சுவாசித்தபடி, அரட்டையடித்தபடி வந்தோம். கண்ணில் பட்ட கார்களில் எல்லாம் திரையில் காணும் நட்சத்திரங்களைத் தேடியபடி, பார்த்தபடி வந்தது சுவாரஸ்யம் – இந்த சினிமாவுக்குத்தான் என்ன ஒரு ஈர்ப்பு!
மீனாட்சி வீட்டில் காபி குடித்துவிட்டு, மீண்டும் நடந்து, வடபழனி கோயிலுக்கு வந்தோம் – மிகக் குறைவான கடைகள், சார்பு இறக்கிய வீடுகள் (பெரும்பாலும் கோயில் அர்ச்சகர்கள் வீடுகள்), இரண்டு மூன்று பூக்கடைகள், கோயிலில் அதிகக் கூட்டமில்லை. நெருக்கடி இல்லை. இடது புறம் விநாயகர், பின்னர் சிவலிங்கம், சுற்றி வந்தால், வள்ளி தெய்வானை சமேத ஷண்முகர், பின்னர் மதுரை மீனாட்சி, அறுகோண கண்ணாடி அறையில் அலங்காரமான முருகன், தாண்டினால் திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் சன்னதி, அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி. ஆதிகுரு சன்னதியில் முருகன், தலவிருட்சம் எல்லாம் இருக்கும். மூலவர் பழநி முருகன் கையில் வேலுடனும், பாதரட்சைகளுடனும் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்.
திடீரென்று ஏன் இந்த பழங்கட்டுரை? போன வாரம் ஒருநாள், வடபழனி முருகனுக்குத் தங்கத் தேர் இழுத்தோம் – உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ. எங்கும் கவுன்டர் மயம். எல்லா இடங்களிலும் தடுப்புக் குழல் கம்பிகள், மாற்றி வைத்து, பக்தர் வரிசைகளைத் திருப்ப வசதியாக ‘போர்டபிள்’ தடுப்புகள், சென்ட்ரல் ஸ்டேஷன் போல பெரி..ய்..ய் …ய ஃபேன், பொது வரிசை, சிறப்பு வரிசை, அதிசிறப்பு வரிசை என தடுப்புகள்! பெரிய மண்டபமாக இருந்த ஹாலில், பெரிய கல் ரதத்தில் முருகன் – உற்சவ மூர்த்தி போல! அபிஷேக, அலங்கார, ஆரத்திகள் எல்லாம் இங்குதான் என்றான் என் சாரதி. கோயிலே உரு மாறியிருந்தது. அறநிலையத் துறை எங்கும் வியாபித்திருந்தது!
மூலவரைச் சுற்றி, உட்பிரகாரத்தில் தங்கத் தேரில் முத்தங்கி அலங்காரத்தில் கையில் வேலுடன் சேயோன் நிற்க, மெதுவாகத் தேரை இழுத்து வந்தோம். தேர் அசைந்தசைந்து வருவதைக் காணக் கண் கோடிதான் வேண்டும்!
பிரசாதம் விநியோகித்து, மேடையில் அமர்ந்திருந்த போது பழைய நினைவுகளைக் கொஞ்சம் அசைபோட்டபோது, மீனாட்சியும், குதிரை வண்டியும், சபாஷ் மீனாவும், அன்றைய வடபழனியும், முருகனும் கருப்பு வெள்ளைப் படமாக மனத்திரையில் ஓடின!
சாலிக்கிராமத்தில் மூன்றாம் மாடி ஃப்ளாட்டில் இருக்கும் மீனாட்சிக்குப் போன் செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டேன்!