*தொண்டரடிப்பொடி ஆழ்வார்*


திருக்குடந்தை என்று சொல்லப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருமண்டங்குடி என்னும் ஊரில் அவதரித்தவர் தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் அருளிச்செயல்கள் இரண்டு. ஒன்று, 10 பாசுரங்களை உள்ளடக்கிய *திருப்பள்ளியெழுச்சி* மற்றொன்று , 45 பாசுரங்களைக் கொண்ட *திருமாலை*.
ஆழ்வாரின் இயற்பெயர் விப்ர நாராயணர்.
மண்டங்குடியிலிருந்து , திருவரங்கத்திற்கு வந்து பெரிய பெருமாளால் ஈர்க்கப்பட்டு ஸ்ரீரங்கத்திலேயே அவருக்கு மாலை கட்டிக் கொண்டு வாழ தீர்மானித்து, ஓர் அழகிய நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார்.
தொண்டரடிப்பொடி என்பது அவரது புனைப்பெயர். வைணவர்களின் மரபில், பகவானின் அடியார்களின் திருவடிகளில் உள்ள தூசு கூட புனிதமானது என்கிற நம்பிக்கையின் வெளிப்பாட்டில் தான் தொண்டர் – அடி – பொடி என்பதாக தன் பெயரை அமைத்துக் கொண்டார்.
தொண்டரடிப்பொடியாழ்வாரின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயம் என்பதாக கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு. ( கர்ணம் என்றால் காது ; பரம்பரை என்பது வழி வழியாக வருவது ; ஆக, செவி வழி செய்தி என்பதுதான் கர்ண பரம்பரை கதை. இதற்கு நூல் ஆதாரம் தேட முடியாது என்று பொருள் ).
தேவதாசி குலத்தில் பிறந்த தேவதேவி என்ற கணிகை, முதலில் தன்னை ஏறெடுத்தும் பார்க்காத விப்ரநாராயணரை, தன் வலையில் விழ வைப்பதாக முடிவு செய்து , தன் ஒப்பனைகளை களைந்து எளிமையான வடிவில் விப்ர நாராயணரின் திருப்பணியில் தானும் பங்கு கொள்வதாக கூறி அவரை சூழ்ச்சியால் மயக்கி, தன் வலையில் விழ வைக்கிறாள்.
பிறகு ஒரு நிலையில், அவரை விட்டுப் பிரிந்த தேவதேவியின் நினைவாகவே இருந்த விப்ர நாராயணரின் நிலை கண்டு அவரை தடுத்தாட்கொள்ள, பிராட்டியார் அரங்கனிடம் பரிந்துரைக்கிறார்.
அதன்படி அரங்கனும் விப்ரநாராயணனின் ஏவலாள் என்று சொல்லிக்கொண்டு கோவிலின் பொன்வட்டிலை (தங்க பாத்திரத்தை) தேவதேவியிடம் தந்து, பிறகு அதன் காரணமாக விப்ர நாராயணரை சிறைவாசம் அனுபவிக்க செய்கிறார். ( தாசி வலையில் வீழ்ந்ததற்கான தண்டனை). பிறகு அரசன் கனவில் தோன்றி உண்மையை உரைக்கவும் அவன் ஆழ்வாரை விடுவித்து அடிபணிகிறான். ஆழ்வாரும் தேவதேவியின் மயக்கத்திலிருந்து விடுபட்டு அரங்கனை முழுவதுமாக தஞ்சம் அடைகிறார்..
தொண்டரடிப்பொடியாழ்வாரின் அருளிச் செயலான *திருப்பள்ளியெழுச்சி* தான் தமிழில் முதல் சுப்ரபாதம். அரங்கனை துயிலெழுப்புவதாக அமைந்த, தமிழ்மணம் கமழும் பாசுரங்கள்.
*திருமாலை* பாசுரங்களைப்பற்றி சொல்வதென்றால், *திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார்* என்று ஒரு சொலவடை உண்டு. இதில், முதலில் சொன்ன “திருமாலை” ஆழ்வார் அருளிச்செயலான பாசுரங்கள். இரண்டாவதாக சொன்ன “திருமாலை” , ஸ்ரீமன் நாராயணனை – என்பதாக பொருள் படும். அதாவது ஆழ்வாரின் அருளிச்செயலான திருமாலை எனும் தொகுப்பில் உள்ள பாசுரங்களை அறியாதவர்கள் அந்தத் திருமாலையே – ஸ்ரீமன் நாராயணனையே – அறிய மாட்டார்கள் என்பதாக பொருள்.
இப் பூவுலகில் அரங்கனின் திருநாம சங்கீர்த்தனம் தரும் சந்தோஷத்தைத் தவிர, தமக்கு பரமபத இன்பமும் வேண்டியது இல்லை என்று கூறியதோடு நிற்காமல், இப்பிறவியில் கிட்டிக் கொண்டிருக்கும் திருவரங்க வாசமே போதும், வேறொரு பிறவியும் தேவையில்லை என்றும் அருள்கிறார் ஆழ்வார்.
அரங்கனிடம் அவ்வளவு ஆழ்ந்த ஈடுபாடு.
சரி, கவிஞர் கண்ணதாசன் என் தோளைத் தட்டி என் கவனத்தை அவர் பக்கம் ஈர்க்கிறார். எவ்வளவுதான் பொறுமையாக இருப்பார்! .
திருப்பள்ளியெழுச்சியையும், திருமாலையையும் படிக்கும் பொழுது, ஆழ்வாரின் மூன்று பாசுரங்கள் உடனடியாக என்னை கவிஞரின் பால் கொண்டு சேர்த்தன.
முதலில் , திருமாலையில் இரண்டாம் பாசுரம் :
பச்சை மா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே !ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர, யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !*
ஏ பி நாகராஜன் அவர்கள் எடுத்த *திருமால் பெருமை* என்ற படத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவத்தை கதையாக படத்தில் கூறும் பொழுது, மேற்கூறிய பாசுரத்தை அப்படியே T M S குரலில் வைத்திருப்பார்.
ஆனால், பெரியாழ்வார் வைபவத்தை படத்தில் கதையாக கூறும் பொழுது, பெரியாழ்வார் பாடுவதாக ஒரு பாடல் இருக்கும். அது கவிஞர் கண்ணதாசன் எழுதியது :
” மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன் ”
என்று பெரியாழ்வார் பாடுவதாக அமைந்துள்ள கவிஞரின் பாடலின் சரணத்தில்,
*பச்சை நிறம் அவன் திருமேனி*
*பவள நிறம் அவன் செவ்விதழே*
என்று வரும். இது தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், *பச்சை மா மலைபோல் மேனி பவளவாய்* என்பதன் வேறு வடிவமே.
*இரண்டாவதாக* ,
திருப்பள்ளியெழுச்சியில் வரும் முதல் பாசுரம்:
*கதிரவன் குணதிசை சிகரம்*
*வந்தணைந்தான்*
*கன இருள் அகன்றது*
*காலை அம் பொழுதாய்*
*மதுவிரிந்து ஒழுகின*
*மா மலரெல்லாம்*
*வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி*
*எதிர்திசை நிறைந்தனர்* *இவரொடும் புகுந்த*
*இருங்களிற்று ஈட்டமும்* *பிடியொடு முரசும்*
*அதிர்தலில் அலைகடல்* *போன்றுளது எங்கும்*
*அரங்கத்தம்மா பள்ளி* *எழுந்தருளாயே!*
சூரியன் கிழக்கே தோன்றிவிட்டான். கருமை இருள் அகன்றுவிட்டது. காலைப் பொழுது அழகாக விடிகின்றது, கதிரவனைப் பார்த்த மலர்கள் விரிந்து அவற்றிலிருந்து தேன் ஒழுகுகிறது. தேவர்கள் , அரசர்கள் அனைவரும் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள்.
( எதிரில் நின்று நீ கண் திறந்ததும் உன் பார்வையில் பட காத்திருக்கிறார்கள் ).
அவர்களுடன் ஆண் ( களிறு ), பெண் (பிடி ) யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்தருள்வாய்.
மேலே உள்ள பாசுரத்தின் முதல் மூன்று வரிகள் , *அவன் பித்தனா* என்ற படத்தில் ஆர் பார்த்தசாரதி என்பவரின் இசையில், டி எம் எஸ், சுசீலா பாடிய கவிஞரின் பாடலை, எனக்கு உடனே ஞாபகப்படுத்தியது.
கண்ணதாசனின் வரிகள்:
*கிழக்கு வெளுத்ததடி*
*கீழ்வானம் சிவந்ததடி*
*கதிரவன் வரவு கண்டு*
*கமல முகம் மலர்ந்ததடி* ….
..….
கதிரவன் குணதிசை வந்தணைந்தது,
கன இருள் அகன்றது, மாமலரெல்லாம் விரிந்தது
என ஆழ்வார் பாசுரத்தை ஒட்டி நிற்பது கண்கூடு.
*மூன்றாவதாக* ,
திருமாலையில் மற்றுமோர் பாசுரம் :
*நமனும் முற்கலனும் பேச*
*நரகில் நின்றார்கள் கேட்க*
*நரகமே சுவர்க்கமாகும்*
*நாமங்களுடைய நம்பி*
*அவனது ஊர் அரங்கம்* *என்னாது*
*அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்*
*கவலையுள் படுகின்றார்*
*என்று அதனுக்கே* *கவல்கின்றேனே.*
இந்த பாசுரத்தின் விளக்கம் சுவாரசியமானது.
முற்கலன் எனும் ஒருவன் செய்யாத பாவம் இல்லை. பெரும்பாவிகளின் தலைவன் என்றே கூறலாம்.
அவன் ஒருநாள் கோதானம் பண்ணும் போது ‘க்ருஷ்ணாய’ என்று சொல்லி தானம் செய்தான். அவன் அறியாமலேயே சொன்னதுதான் அது.
பின்பு, அவன் மாண்டபிறகு, எமகிங்கரர்கள் வந்து அவனை எமனிடம் இழுத்துக் கொண்டு செல்ல, எமன் எதிர்கொண்டு முற்கலனை வரவேற்கிறான். எமகிங்கரர்கள் தன்னை இழுத்துக் கொண்டு வர எமனோ மரியாதையுடன் வரவேற்பதைக்கண்டு திகைக்கும் பாவியான முற்கலன். அதற்கான காரணத்தைக் கேட்கிறான்.
“உன்னுடைய மேன்மையை அவர்களும் அறிந்திலர், நீயும் அறிந்திலை, க்ருஷ்ண நாமத்தை நீ ஒருநாள் சொன்னாய் காண்!” என்று எமன் அதனைப் புகழ்ந்து கூறினான்.
இவ்வாறு எமனும் முற்கலனும் பேசிக் கொண்டிருப்பது நரகத்தில் தங்கள் பாவ வினைகளுக்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களின் காதிலும் விழுந்தது.
‘கிருஷ்ண நாமம்’ என்பதாக கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த துக்க நிலை மாறி அந்த இடமே சொர்க்கத்திற்கு ஈடான ஆனந்த மயமாகிவிட்டது.
அந்தத் திருநாமத்தின் வைபவம் அப்படி.
அது அப்படி இருக்க, இந்த அருமையான மனிதர்கள் சொல்ல வேண்டியதெல்லாம் *எம்பெருமானின் ஊரானது திருவரங்கமாகும்* என்பதுதான்.
அதை சொன்னாலே அவர்கள் உய்ந்து விடலாம். ( திருவரங்கம் என்ற சொல்லுக்கே அவ்வளவு மேன்மை). ஆனால் அதைச் சொல்லாது, தங்கள் ஸ்வரூபத்தை மறந்து, அற்ப விஷயங்களான படுகுழியில் விழுந்து, துக்கத்திலே அகப்படுகிறார்கள். உய்வதற்கான சுலபமான வழி இருக்கும்பொழுது, அதனை மறந்து, இவ்வாறு கவலைப்படுகிறார்களே என்பதைப்பார்த்து, தான் கவலைப்படுவதாக ஆழ்வார் கூறுகிறார்.
கண்ணன் பெயரை கேட்டதும் நரகமே சொர்க்கம் ஆகும் என்பது ஆழ்வார் பாசுரம். இந்தக் கருத்தை, தன் பாணியில் அழகாக கையாண்டிருக்கிறார் நமது கண்ணதாசன்.
*வெண்ணிற ஆடை* படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் பி சுசிலா குரலில் அமைந்த கண்ணதாசனின் பாடல் :
*கண்ணன் என்னும் மன்னன்* *பேரைச் சொல்லச் சொல்ல*
*கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல….*
நரகம் சொர்க்கமாகும் பொழுது கல்லும் முள்ளும், பூவாய் மாறித்தானே ஆக வேண்டும் !!
அடுத்த பகுதியில், வேறொரு ஆழ்வாருடன் கவிஞர் கண்ணதாசனையும் சந்திப்போம்.
