மார்கழிக் காற்று 

Hymns, cool breeze, kolam...tracing the history of Margazhi bhajanai in Tamil Nadu - The Hinduமார்கழி இளம்பனிக் காலைப்போது. மணி நாலரை. . வாசலில் “புல்லட்” சத்தம் கேட்டது. குளித்துவிட்டு முடி மிகுந்த தலையை முடியாமல் படிய வாரிவிட்டுக் கொண்டு இருந்த நான் அப்படியே நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு, வீட்டு ஹாலையும், வரவேற்பு அறையையும் தாண்டி, ஓடி , வீட்டு காம்பவுண்ட் சுவருக்கு வெளியே, தனது வாகனத்தில் அமர்ந்தபடி “புல்லட்”டின் சத்தத்தை “டுட் டுட்” என்று ஓடவிட்டுக் கொண்டிருந்த, நண்பன் சத்யமூர்த்தி என்கிற “பாப்பு”வைப் பார்த்துக் கத்தினேன்.

“ டேய் ! இருடா ! இரண்டு நிமிஷம் ..இதோ வந்திடரேன்:

மூன்றாவது நிமிடம் நானும் பாப்புவும் மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்கு விரைந்துகொண்டிருந்தோம். நேற்றைக்கே பேசித் தீர்மானம் செய்துவிட்ட நிகழ்ச்சி இது. நாங்கள் இருவரும் மயிலாப்பூரில் நடக்கும் “மார்கழி மாத வீதி பஜனைக்குச்” சென்றுகொண்டிருக்கிறோம்.

எனக்கு இசையிலே ஈடுபாடு மிக இளைய வயதிலேயே வந்துவிட்டது. காரணம் என் தமக்கையும் சகோதரனும்; தமக்கை வீணை கற்றுக் கொண்டிருந்தாள்; தமையன் மிருதங்கம் கற்றுக்கொண்டிருந்தான். தி. நகரில் வசித்துவந்த வீணை பட்டம்மாள் என்ற சிறந்த வைணிக வித்வாம்சினியிடம் சென்று தமக்கை லஷ்மி பயின்று வந்தாள். வீட்டில் இருந்த வீணையில் அவள் பயிற்சி செய்வது காதில் தவறாது விழும்.

சகோதரன் கணேசனுக்கு மிருதங்கம் கற்பிக்க ஷிமோகா ஸ்ரீகண்டன் என்ற வித்வான் வீட்டுக்குவருவார். வீட்டு மாடி அறையில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் ஒருமணி நேரம் பயிற்சி நடக்கும். இதைப் பார்க்கச் செல்லும் என்னை ஸ்ரீகண்டன் சார், அருகே அமர்ந்து தாளம் போடச் சொல்லுவார். அப்படியே தாள ஞானம் கொஞ்சம் வந்தது. வீட்டில் என்னை வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அப்போது விளையாட்டுத்தனமாக இருந்த நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு வித்வான் மதுரை ஜி.எஸ். மணி சாரின் ஸ்டூடண்ட் ஆனேன்.

பள்ளிப் பருவங்களில் இரவு ஒன்பது மணிக்கு உறங்கி காலை ஐந்து மணிக்கு எழுந்துவிட வேண்டும் என்பது வீட்டு நியதி. மாடி அறையில் படுத்து உறங்கும் நானும் கணேசனும் காலை எழுந்து மொட்டை மாடியில் நின்று, எதிரே தெரியும் “ரயிவே ட்ராக்கில்” அவ்வப்போது செல்லும் மின்சாரத் தொடரிகளைப் பார்த்துக்கொண்டே  பல் தேய்த்துக் கொண்டிருப்போம். தாம்பரம் டு பீச், பீச் டு தாம்பரம், என்று எதிரும் புதிருமாக, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பதினெட்டு மணி நேரச் சேவை தரும் இத்தொடர் வண்டிகள் , இரயிவே லயன் அருகே வசித்த எங்கள் வாழ்வின் மிக நெருக்கமானவை.

இவை தவிர தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து எழும்பூர், எழும்பூரிலிருந்து திருச்சி மதுரை, நெல்லை செல்லும் வண்டிகள் என எப்போதுமே ”எங்கள் இரயில்வே லயன் “ பிஸி ஆகவே இருக்கும். காலை மாலை மதியம் என எப்போது நேரம் கிடைத்தாலும் , மாடிடில் நின்று இவ்வண்டிகளை வேடிக்கை பார்ப்பது எங்கள் வழக்கம். எனது பள்ளித் தோழர்கள் பலர் எங்கள் வீட்டிற்கு இதற்காகவே விளையாட வருவதுண்டு.

மார்கழி மாதக் காலைப்போதுகள் இந்த “மாடி” அனுபவத்தில் இளம் வயதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. வீட்டின் அருகே உள்ள ஒரு கலியாண மண்டபத்தில் மார்கழிமாதம் முழுவதும் உபன்யாசங்கள் நடக்கும். அவர்கள் மார்கழிக் காலை ஐந்து மணிக்கு டாக்டர் எம்.எல்.வி. அவர்களின் “திருப்பாவை” பாடல்களை ஒலிபரப்புவார்கள். மார்கழிக் காற்றில் கலந்துவரும் அந்த அற்புத இசையில் நான் மயங்கி நிற்பேன். அதைக் கேட்பதற்கென்றே மொட்டைமாடிக்குச் சென்று நிற்பேன். பல ஆண்டுகள் முப்பது நாட்களும் மாடியில் அந்த மார்கழி இளம் காலையில் நின்று திருப்பாவை பாசுரங்களைக் கேட்ட்துண்டு. பிறகு ரேடியோ டிவி என்று பல வசதிகள் வந்தாலும் அன்று கேட்ட “ காலையில் மிதந்து வந்த காற்றிசையின் “ ரீங்காரம் இந்த வயதிலும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை. “ தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய”  என்ற பாசுரம் மூலம்தான் முதலில் அமீர்கல்யாணியை நான் அறிந்துகொண்டேன். அப்படியே தொடர்ந்து எனக்கு புரிபட்ட முப்பது ராகங்களும்தான் என் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் இசை ஞானம்.

படிப்பு முடிந்து கல்லூரிப் பணியில் சேர்ந்த நேரம். எங்கள் நண்பர்கள் குழுவில் அனைவரும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டோம்.  யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அது ஒரு பொற்காலம். சம்பாதிக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால் பொறுப்புகள் மிக்க்குறைவு. வீட்டிலும் வெளியிலும் ஒரு தனி அந்தஸ்து. “எலிஜிபிள் பேச்சுலர்” என்ற தலைப்பாகை. இதன் நடுவே எனது இசை அனுபவங்கள் வலுப்பெற்றன.

“ டேய் ! சீக்கிரம் போடா ! பஜனை ஆரம்பிச்சிருக்கப் போறது” என்று வண்டி ஓட்டிக் கொண்டிருந்த நண்பன் “பாப்பு” விடம் சொன்னேன்.

“ நான் தான் உனக்குச் சொல்லி ஒன்னை அழச்சிண்டு போறேன்..எனக்குத் தெரியாதா.”

இந்த இடத்தில் சத்தியமூர்த்தி என்ற பாப்புவைப் பற்றி சில சொல்ல வேண்டும். ( வரலாறு முக்கியம் தலை என்று சொல்லுது மைண்ட் வாய்ஸ்) . என் பள்ளித் தோழன்; அவன் வசித்தது பழைய மாம்பலம் எனப்படும் மேற்குமாம்பலம்; ஜானகிராமன் தெரு முதல் வீடு இரயில்வே லயனைப் பார்த்த வீடு. நாங்கள் இருந்தது தி.நகர் எனப்படும் புதுமாம்பலம். அதாவது, இரயில்வே லயனின் மேற்குப் பகுதியில் அவன் வீடு; கிழக்குப் பகுதியில் என் வீடு. அதிக வீடுகள், போகுவரத்து இல்லாத அந்தக் காலத்தில் என் வீட்டிலிருந்து பார்த்தால் இரயில்வே தடங்களைத் தாண்டி அவன் வீடு தெரியும். அவன் படித்ததும் விவேகனந்தா கல்லூரி. எனவே பள்ளி கல்லூரி இரண்டிலும் நாங்கள் இணைபிரியாமல் இருப்போம்.

அவன் சென்னை ஐ.ஓ.பி. வங்கியில் பணியில் சேர்ந்துவிட்டான். மவுண்ட் ரோடு தலைமை அலுவலகத்தில் வேலை. நான் மயிலை விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்ந்துவிட்டேன். எனவே நாங்கள் “ஆஃபீஸ் நேரம்” தவிர பிற நேரங்களில் ஒன்றாகவே திரிவோம்.

அவன் தந்தையாருக்கு சென்னை லாயிட்ஸ் ரோடில் பெரிய பங்களா இருந்தது. அந்த இல்லத்தில்தான் , தபோவன மகானாகிய ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதம சீடரான சுவாமி ஹரிதாஸ் கிரி சென்னை வரும் போதெல்லாம் தங்குவார். அவர் சம்ப்ரதாய பஜனையில் தலைசிறந்து விளங்கிய நாட் அண்ணாஜி ராவின் குமாரர். தந்தையிடமிருந்து கற்று பின் துறவறம் மேற்கொண்ட பிறகும் பஜனை சம்பிரதாயத்தை நாடெங்கும் பரப்புவதில் மிக முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்தவர்.

எனக்கு பாப்பு மூலமாக சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. அவரை நாங்கள் எல்லோரும் “குருஜி” என்றுதான் அழைப்போம். பஜனையில் குருஜிக்கு ஈடு இணை கிடையாது. அவர் பஜனையில் பாட ஆரம்பித்தால் மக்கள் மகுடி இசை கேட்ட நாகம் போல் மயங்கி நிற்பர். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் பாடல்கள் தவிர , மகாராஷ்ட்ர “அபங்க்” பக்தி இசையில் சிறந்த நிபுணர். நான் தமிழ்க் கவிஞன் என்பதனால் அவருக்கு என் மேல் அன்பு அதிகம். நான் எழுதிய கவிதைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். அவர் சென்னை தர்ம பிரகாஷ் அரங்கில் நடத்திய சத்குரு ஆராதனைகளில் என் தலைமையில் கவியரங்கங்கள் இடம்பெறச் செய்தார்.

குருஜியின் அடியார்கள் அவரது ஆசிகளோடு எழுபதுகளில் ஆரம்பித்த அமைப்பு சென்னை மந்தைவெளியில் இயங்கிவரும் ஸ்ரீ ஞானானந்த பஜனை மண்டலி. அதன் சார்பில் ஒவ்வொரு மார்கழியிலும் முப்பது நாட்களும் காலையில் “நகர நாம சங்கீர்த்தனம்” நடைபெறும்.

காலை ஐந்து மணிக்கு மயிலை கபாலீஸ்வரர் திருக் கோயில் தேரடிமுன் கிழக்கு மாடவீதியில் தொடங்கும் பஜனை, பிரதட்சிணமாக தெற்கு , மேற்கு வடக்கு மாடவீதிகள் வழியாகச் சென்று, புறப்பட்ட தேரடிக்கு இரண்டு மணி நேரத்தில் , ஏழு மணி அளவில் வந்து சேரும்.

ஸ்ரீ ஞானானந்த பஜனை மண்டலியின் தூண்களாக விளங்கிய திரு தண்டபாணி (  குருஜிக்குப் பிறகு பீடம் ஏற்ற சுவாமி நாமானந்தா அவர்களின் பூர்வாசிரமப் பெயர் ) திரு உப்பிலி ஆகியோர் பஜனையை தலைமை ஏற்று நடத்துவார்கள். பஜனை வழிமுறைகள் சம்பிரதாயமாகவும் எல்லோரும் அறிந்ததாக இருந்தாலும் அதனை வழி நடத்த மூத்தவர்கள் வேண்டுமல்லவா !

மரபு வழியில் முதலில் ப்ராசீனமாக “தோடய மங்களத்தில்” ஆரம்பிக்கவேண்டும். அதற்கு பூர்வாங்கமாக தியான ஸ்லோகங்கள் “சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்ப் புஜம்” என்று “கண்ட சாபு” தாளத்தில் தொடங்குவார்கள். ஆம்! ஸ்லோகங்களையே கண்ட நடையில் எடுப்பார்கள். “ஜய ஜானகீ ரமண “ எனத் தொடங்கும் தோடயமங்களத்தின் முதல் பாடல் அதே நடையில் தொடரும். பாடுவோர் கையில் சிப்ளா கட்டை அல்லது ஜாலரா வைத்திருப்பார்கள்.

அருகிலே சுருதிப்பெட்டி. அது தவிர தோளிலே ஹார்மோனியத்தை கட்டிக் கொண்டு அதை வாசிக்கும் கலைஞர் உடன் வருவார். அந்தக் காலங்களில் தேவராஜ பாகவதர் ஃபேமஸ். இந்தக் குழுவுக்குப் பெரும்பாலும் ஊரில் இருந்தால் அவர்தான் வாசிப்பார். சில நேரங்களில் குருஜி அவர்கள் கலந்துகொள்ளும் போது “வீதியே அதிரும்” . அவருக்கு முத்துநடேச பாகவதர் வாசிப்பார். பொறி பறக்கும். அந்த விரல்களின் நளினமான “ஸ்பீடை” வேறெவரிடத்தும் கேட்க முடியாது. குருஜியின் குரலுக்கும் ராக ஆலாபனைக்கும் அவர் பின்னெடுத்து வாசிக்கும் அழகு ஆச்சரியமானது.

இதுதவிர ஒரு மிருதங்கம், ஒரு டோலக் இவையும் கூட வரும். பொதுவாக இளஞர்கள் வருவார்கள். ஏனென்றால் வீதி பஜனையில் உட்காரமுடியாது. நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ வாசிக்கவேண்டும். சில நேரங்களில் யாரேனும் கஞ்சிரா வாசிப்பதும் உண்டு.

பஜனை எனும் கூட்டுப் பாடல் முறையில் முதன்மையான பாடகர்களைத் தவிர நாலைந்து  ”வாங்கிப் பாடக் கூடிய பாடகர்கள்” இருப்பார்கள். அதென்ன வாங்கிப் பாடுவது ?

பஜனையில் ஒருவர் பாட கேட்போர் எல்லோரும் அதைத் திரும்பப் பாடலாம்; பாட வேண்டும். அதுதான் பஜனை முறை. ஆனால் கேட்க வந்திருக்கும் பல பேருக்குப் பாடவராது. பாடகரே ஒவ்வோரு பல்லவியையும் சங்கதியையும் இரண்டு தடவை பாடினால் சுவையாக இருக்காது. எனவே விஷயம் தெரிந்த பாடகர்கள் முதன்மையானவர் பாடிய பல்லவியை “வாங்கிப்” பாடுவதால் அவர்கள் “வாங்கிப் பாடுவோர்” எனப்படுவர்.. மேலும் இதனால் முதன்மைப் பாடகருக்கு இடையிடையே “குரல் ஓய்வு” கிடைக்கும்; அடுத்த சங்கதி போட கற்பனையும் குரலுக்கு வலிமையும் கிடைக்கும்.

ஆனால் பஜனை என்றால் எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமே! அதற்குத்தான் ”நாமாவளி” என்ற ஒன்று உள்ளது. பாடி முடித்த பிறகு சின்னச் சின்ன நாமாவளி பாடப்படும் . அதை எல்லோரும் சேர்ந்து பாடலாம். அந்தந்தப் பாடலுக்குப் பொருந்தும்படியாக நாமாவளி அமையவேண்டும். உதாரணத்திற்கு, “பஜரே மானஸ போதேந்ர யோகீந்த்ரம்” என்ற குரு கீர்த்தனையைப் பாடி முடித்த பிறகு பாடகர் “ குரு மகராஜ் குரு ஜய் ஜய் பரப்பிரும்ம குரு ஜய் ஜய்” என்ற நாமாவளி பாடி விடும் போது கூடியிருக்கும் பக்தர்கள் அனைவரும் “கோரஸாக “ அதையே முழங்குவர். இதிலே எந்தப் பாடலுக்கு என்ன மாதிரி நாமாவளி என்று தெரிந்து பாடவேண்டும் இவ்விஷயத்தில் தண்டபாணி அவர்கள் மிகவும் சுறுசுறுப்பு, புதிய பாடகர்கள் பாடும் எந்தப் பாட்டுக்கும் மிகப் பொருத்தமாக நாமாவளி பாடுவார்கள். ( அதனால்தானோ என்னமோ அவர்கள் பிறகு சுவாமி நாமானந்தா ஆகிவிட்டார் !)

“டேய் என்ன யோசனை ? வண்டி ஆஃப் பண்ணிட்டேன் தெரியலையா .இறங்கு” என்றான் பாப்பு”

மணி காலை ஐந்து. மயிலை கபாலீஸ்வர்ர் கோயில் தேரடியில் முப்பது பேர்கள் பாடிக் கொண்டுள்ளனர். “ஜய ஜானகீ ரமண” தோடயமங்கள வரிகள் ஹார்மோனிய , மிருதங்க, ஜாலர் இசையோடு இணைந்து காதில் அமுதமாக ஒலிக்கின்றது. நானும் பாப்புவும் , வண்டியை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று பஜனைக் குழுவோடு நடக்க ஆரம்பித்தோம்.           (தொடரும்)