குவிகம் சிறுகதைப் போட்டிக்கான ஜூன் மாதக் கதைகளைப் படிக்கும் வாய்ப்புக்கு மகிழ்ச்சி. நன்றி.

எனக்குத் தாங்கள் அனுப்பிய கதைகளில் “தபாலீஸ்வரர்” என்ற தலைப்பிலான ஆயிஷா இரா. நடராஜன் எழுதிய சிறுகதையை ஜூன் மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்வு செய்கிறேன் .

ஒரு ஊரில் ஒரு குறிப்பிட்ட தெருவில் உள்ள பலருக்கு வருகின்ற தபால்களைப் பார்த்து பிரமித்துப் போகும் தபால் அலுவலக அதிகாரி அந்த ஊரின் காவல் நிலையத்தில் புகார் தருகிறார். அவர்கள் அது குறித்து மனநல மருத்துவரின் கருத்தைக் கேட்கிறார்கள். ஒருநாள் இரவில் அந்த குறிப்பிட்ட தபால் பெட்டியில் இதுபோன்ற தபால்களைப் போடவந்தவரைப் பிடித்து விசாரித்த போது தான் மனநல மருத்துவர் சொன்ன கருத்து சரி என்று அவர்களுக்குத் தெரிகிறது.

குமுதம் இதழில் வெளியான இந்தக் கதை உளவியல் ரீதியான உணர்வைச் சொல்கிறது. தனக்கான காதல் கடிதங்களைத் தானே பல தபால் கார்டுகளில் எழுதி ஒவ்வொரு நாளும் தன்னுடைய விலாசத்திற்கே அனுப்பி அதன்மூலம் தனக்குத் தானே ஒரு மகிழ்ச்சியைத் தேடிக் கொள்ளும் மனிதர்களைப் பற்றிய வித்தியாசமான கதை.

 

மனத்தைத் தொட்ட சில கதைகள்:

கூட்டல், பெருக்கல், வகுத்தல் : ஆசிரியர் பத்மினி பட்டாபிராமன்.

ஒரு கட்டிடம் கட்டும் மேஸ்தரி எப்படி நடிக்கிறான், பொய் சொல்கிறான் என்று காட்டி அவனுடைய மகள் வயிற்றுப் பேரன் சொல்லும் ஒரு கணக்கால் அந்த மேஸ்திரியின் உண்மை முகம் வெளிப்படும் நிலையைக் கூறுகிறது.

 

 உறுத்தல்: வண்ணநிலவன் – காலச்சுவடு

அதிகமாக, கொஞ்சம் ஆடம்பரமாகச் செலவு செய்யும் கணவனும், சிக்கனமாக இருக்க விரும்பும் மனைவியும் ஒரு திருமணத்திற்குச் செல்லும் போது நிகழும் சம்பவங்களை இயல்பாகச் சொல்லி அதன் மூலம் கணவன் செய்த செயலால் அவருக்கு வரும் உணர்வை “உறுத்தல்” என்ற சிறுகதையாக்கியுள்ளார் ஆசிரியர்.

 

“ம்ருதாமத்” : எஸ். எல். நாணு: – குங்குமம்

பாலியல் வன்கொடுமையால் மரணமடைந்த மகள் சொன்ன உண்மையைக் கொண்டு அதற்குக் காரணமானவனை பழிதீர்க்கும் கதை. எளிய நடையில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

“இருபது ரூபாய் கடன்” : எஸ்.வி.வேணுகோபால் – ஆனந்தவிகடன்

கடன் வாங்குவது, பிணைக் கையெழுத்திடுவதின் ஆபத்தைச் சொல்லும் கதை. கடன் வாங்காமல் வாழும் ஒருவனைக் கடனாளியாக்கும் சம்பவங்களைக் காட்டி எச்சரிக்கிறது.

 

“அப்பா” – சுஜாதா செல்வராஜ் – அம்ருதா

குடிப்பழக்கத்திற்கு ஆளான அப்பாவுக்கும் மகளுக்குமான உறவைச் சொல்லும் கதை. பாசமும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்பாவின் செயலில் கோபமும், இரங்கும் குணமும் உடைய மகளின் உறவைப் பேசுகிறது .

 

“நீரடித்து நீர்” : – ராம் சுரேஷ் – குங்குமம்

இளம் கணவன் மனைவிக்கு இடையில் உள்ள மனப் போராட்டத்தை, கைக்குழந்தையுடன் விலகிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரும் மனைவிக்கு வரும் இன்ப அதிர்ச்சியை, நீரடித்து நீர்விலகாது என்று ஆசிரியர் உரையாடல் மூலம் சொல்கிறார்.

இன்னும் விதவிதமான உணர்வுகளைக் கொண்ட சுமார் அறுபது கதைகளைப் படிக்கும் வாய்ப்பினை அளித்த குவிகம் அமைப்பாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றி.

மீ.விசுவநாதன்