பேனா பிடிக்கிறவனுக்குக் கைத்தடி பிடிக்கிற வயதில்தான் அங்கீகாரம் கிடைக்கிறது என்பது தமிழ்ச் சமூகத்தின் மீது வைக்கப்படும் நீண்ட நாள் குற்றச்சாட்டு. அதை மீறி, எழுதத் தொடங்குகிறபோதே ஒரு சிலருக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கிறது. அதில் ஒருவர் வைரமுத்து என்றால் மிகை ஆகாது. கல்லூரியில் படிக்கிறபோதே இவரின் படைப்பு பேசுபொருளாகிவிட்டது
திரைப் பட அறிமுகம் இயக்குனர் பாரதிராஜா அவர்களினால் கிடைத்தது இளையராஜாவின் இசை இவருடன் இணைய, இருவர் இணைந்த பாடல்கள் பலரை ரசிக்க வைத்தன.
இவரின் தலைக்கனம், இவர் கொண்டிருக்கும் தமிழ்க் கனத்தைவிட கொஞ்சம் அதிகம் என்று கவிஞர் வாலி உட்படப் பலர் கூறியது, இவரின் அரசியல் சார்பு எழுத்துக்கள், பேச்சுக்கள், இவரின் ரசிகர்களிடம்கூட காட்டும் இவரின் வியாபார மனோபாவம் எல்லாவற்றையும் மீறி, இவரின் பல கவிதைகள, கட்டுரைகள், திரைப்படப் பாடல்கள் ரசிக்கும்படி இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை. பலமுறை தேசிய விருதுகளும் வாங்கி இருக்கிறார்.
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்
என்ற இவரின் முதல் பாடலே , இளையராஜாவின் இசையில் மிகப் பெரிய ஹிட் ஆனது.
கண்ணதாசன், வாலி இவர்களுக்குப் பிறகு, பாடல் ஆசிரியர் வரிசையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர். இவரின் பல பாடல்கள் ரசிகர்களின் மனத்தில் என்றும் இருப்பவை.
மனிதர்களின் ஆசைக்கு ஒரு பாடல்
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை
தகவல் தொடர்புக்கு ஒரு அருமையான பாடல்
காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
எது அதிசயம் என்பதற்கு,
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
கடவுளிடம் வேண்டுதல் கூட எவ்வளவு யதார்த்தம்.
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
உலகமே நிலை குலைந்தாலும், ஆறுதல் இப்படி இருந்தால் சுகமே.
பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கெடைக்குமா
ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே
அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் சுருக்கமா
காதல், பெண் என்று எவ்வளவு அழகு?
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – எந்தன்
கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
மழை நின்ற பின்னாலும்
இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும்
கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள்
இரவோடு தான் அழகு
இமை கொட்டும் விண்மீன்கள்
இரவோடு தான் அழகு
இளமாறன் கண்ணுக்கு
எப்போதும் நான் அழகு
இளைய நிலா பொழிகிறதே
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ?
நதியே நதியே காதல் நதியே…
நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே…
காதலி அருமை பிரிவில்…
மனைவியின் அருமை மறைவில்…
நீரின் அருமை அறிவாய் கோடையிலே….
வெட்கம் வந்தால் உறையும்…
விரல்கள் தொட்டால் உருகும்…
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே….
தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம்…
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்
உறவுகள் பற்றி அருமையான ஓர் பாடல்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு?
அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம்
நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
தனிப்பட்ட காரணங்களுக்காக, அரசியல் பேசினாலும், இவரின் இந்தப் பாடல் மிக அருமை.
தமிழா தமிழா, நாளை நம் நாளே
தமிழா தமிழா, நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
இனம் மாறலாம், குணம் ஒன்று தான்
இடம் மாறலாம், நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம், பொருள் ஒன்று தான்
கலி மாறலாம், கொடி ஒன்று தான்
திசை மாறலாம், நிலம் ஒன்று தான்
இசை மாறலாம், மொழி ஒன்று தான்
நம் இந்தியா, அதும் ஒன்று தானே வா
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா?
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா?
நவபாரதம், பொதுவானது
இது வேர்வையால், உருவானது
பல தேகமோ, எருவானது
அதனால் இது, உருவானது
இம் மண்ணிலா, பிரிவென்பது எழுவோம்
இப்படியும் ஒரு வேண்டுதல் –
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
புத்தம் புது பூமி வேண்டும்
கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு
இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலிக்காதா
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
வாழ்வில் ஏமாற்றத்தை,
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
வாழ்வின் முடிவை நேர்மறையாக எழுதி இருப்பது மிக அழகு.
ஜன கன மன என
ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்
மழையின் துளிகள்
மண்ணோடு வீழ்ந்தால்
மழை கொண்ட சாவென்று
வான் மேகம்தான் சொல்லுமா
நகரும் நதிகள்
கடலோடு சேர்ந்தால்
நதிகொண்ட சாவென்று
கடல் என்ன தடை சொல்லுமா…
சங்கமிக்க இயற்கை கற்று தந்தது
சங்கமத்தால் உலகம் இன்னும் உள்ளது
பள்ளத்தில் சேரும் வெள்ளத்தைப் போலே
இயற்கையோடு கலக்கலாம்
வாழ்க்கையை எதிர்கொள்ள அற்புத வரிகளாக,
சிறகில்லை நான் கிளியில்லை அட வானம் ஒன்றும் தொலைவில்லை
புவிமேலே நீ விதையானால் இந்த பூமி ஒன்றும் சுமையில்லை
வயதே கிடையாது.. முயல் போல் விளையாடு..
உன் பங்கை பூமியில் தேடு… தேடு..
சூரியன் மேற்கில் வீழ்ந்த பின்னும் வாழ்க்கை உள்ளது.. அதை நிலவு சொன்னது
நிலவு தேய்ந்த போதும் அட விண்மீன் உள்ளது
வெட்டிய போதும் வேரில் இன்னும் வாழ்க்கை உள்ளது.. தளிர் வந்து சொன்னது
தொட்டாச்சிணுங்கி விரியும் அதில் வாழ்க்கை உள்ளது
நேற்றொரு வாழ்க்கை… இன்றொரு வாழ்க்கை
எதுவாகிய போதும்.. நலமாய் இரு போதும்.. இதுவே என் வேதம்.. வேதம்..
திரைப்படப் பாடல்கள் போல, வைரமுத்துவின் கவிதைகளும் மிகச் சிறப்பு. இரண்டு கவிதைகள் நாம் ரசிக்க.
தோல்வியே வாழ்க்கை
அம்மாவிடம் தோற்றுப் போ,
அன்பு அதிகரிக்கும்.
அப்பாவிடம் தோற்றுப் போ,
அறிவு மேம்படும்.
மனைவியிடம் தோற்றுப் போ,
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
குழந்தைகளிடம் தோற்றுப் போ,
பாசம் பன்மடங்காகும்.
சொந்தங்களிடம் தோற்றுப் போ,
உறவு பலப்படும்.
நண்பனிடம் தோற்றுப் போ,
நட்பு உறுதிபெறும்.
ஆகவே தோற்றுப் போ,
தோற்றுப் போனால்
வாழ்க்கை வெற்றியே.
வாழ்க்கை வாழ
அப்படிப் சொன்னால் அதுவும் தப்பு
இப்படிச் சொன்னால் இதுவே தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் தேவையில்லை
தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்
உலகத்தின் வாயை மூடுதல் கடினம்
உந்தன் காதுகளை மூடுதல் நலம்.
இவர் ஐஸ்வர்யா ராய்க்கு எழுதிய பாடல்களில் ஏதாவதொரு இலக்கணக்குறிப்பு வந்துவிடுகிறது.
ஜீன்ஸ் படத்தில் இரட்டை கிளவி. ராவணன் படத்தின் ‘கள்வரே கள்வரே’வில் வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள். இதைப் பற்றி சொல்லும்போது ‘காதல் பாட்டில் இலக்கணக்குறிப்பு வைக்கிறபோது அது இளைஞர்களிடத்தில் எளிதாகச் சென்று சேர்வதாய் உணர்கிறேன். இலக்கணக்குறிப்புகளை ஆசியர்கள் சொல்லிக்கொடுத்தால் சுமை. ஐஸ்வர்யா ராய் சொல்லிக்கொடுத்தால் சுவை’ என்றார்.
ஓஹோஹோ கிக்கு ஏறுதே’ பாடலில் ‘ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்கை நமக்குமட்டும் இதுதான் ரஜினிச்சித்தர் பாட்டு’ என்றுதான் எழுதியிருந்தாராம். இயக்குநர், இசையமைப்பாளர் எல்லாரும் ஓகே சொல்லிவிட, வீட்டுக்கு வந்தவருக்கு ரஜினியிடமிருந்து அழைப்பு. ‘சித்தராவது அத்தனை சுலபமல்லவே.. ரஜினிச்சித்தர் என்பதெல்லாம் வேண்டாமே’ என்று அன்போடு கேட்டுக்கொள்ள ‘இதுதான் ஞானச்சித்தர் பாட்டு’ என்று மாற்றினாராம்.
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஒரு சூழல் சொல்லி, ‘இடைவேளைக்கு முன் கதாநாயகி, காதலியாக இருப்பாள். அப்போதும் பொருந்தவேண்டும். இடைவேளைக்குப் பின் அவளே விதவையாக இருப்பாள். அதற்கும் பொருந்தவேண்டும்’ என்கிறார். அதற்கு எழுதிய பாடல்தான்;
‘வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே..’
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-ஸில் ரசித்து ரசித்து கவிஞர் எழுதிய பாடல் ‘காடு திறந்தே கிடக்கிறது..’ இசையமைப்பாளர் பரத்வாஜும், இவரும் ‘இந்தப் பாடலை தேசமே கொண்டாடப்போகிறது’ என்று சிலாகித்துக் கொண்டிருக்க, பாடல்கள் வெளியாகி ஒரு குத்துப்பாடல் மற்ற எல்லாப் பாடல்களையும் அடித்துக் கொண்டு போனது. அது ‘சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா டோய்!’
விழா மேடைகள் தவிர, அவரது பெசன்ட் நகர் இல்லத்தில், அவர் அளித்த புத்தாண்டு காலை விருந்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன்.
அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம்.
