மங்கையர் மலர் நடத்திய  மாற்றுத்திறனாளிகள் பற்றிய  விழிப்புணர்வு  சிறுகதை போட்டியில்     இந்தக் கதைக்கு முதல் பரிசு கிடைத்து டிசம்பர் 16-31,2017 இதழில் பிரசுரமானது .

தமிழ்நாட்டில், மணம் மிகுந்த மல்லிகையின் பின்னே மறைந்திருக்கும் போராட்டங்கள்

மேகத்திரையை விலக்கி சூரியன் எட்டிப் பார்க்கும் அதிகாலை பொழுது. சென்னையிலிருந்து  புதுதில்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கணவர் சுந்தரோடு அமர்ந்திருந்தாள் மீனா. விமானம் உயரே எழும்பியதும், மீனாவின் மனம் கடந்த கால நிகழ்வுகளை அசை போடத் துவங்கியது.

மதுரைக்கு அருகே பசுமையான வயல் வெளிகள் சூழ்ந்து இருக்கும் தென்கரை கிராமம்தான்  மீனா பிறந்த  ஊர். சலசலக்கும் வைகையாறு  மல்லிகை மணம்,  ஓங்கி உயர்ந்த  தென்னை மரங்கள், அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் கோவில் , திருவிழாக்கள் , மதுரைக்கே உரிய பைந்தமிழ் பேசும் மனிதர்கள் என நினைவுகள் நெஞ்சில் அலைமோதின. அந்த நாளைய காட்சிகள் மனதில் அரங்கேறின.

“மீனுக்குட்டி” என்று பாசத்தோடு கூப்பிட்டுக்கொண்டே அகிலா உள்ளே  நுழைந்தாள்.

கூடத்தில் பாட்டி பார்வதிக்கு அருகில் உட்கார்ந்திருந்த  மூன்று வயது குழந்தை மீனா குரல் வந்த திசையை நோக்கி வேகமாக எழுந்தாள். மல்லிப்பூ குடலையை கீழே வைத்த அகிலா “என் தங்கமே” என்று மீனாவை  வாரி அணைத்துக்கொண்டாள்.

அம்மாவின் அணைப்பிலும் அவளிடமிருந்து வீசிய  மல்லிகை மணத்திலும் கிறங்கிப் போனே மீனா , வழக்கமான கேள்வியைக் கேட்டாள். “ மல்லிப்பூக்கு இவ்ளோ வாசனை எப்படி கிடைக்குது?”

“மீனாட்சி அம்மன்தான்  மீனுக் குட்டிக்காக  இவ்ளோ வாசனையை மல்லிபூல வெச்சு தினமும் அனுப்பறா “ என்றதும் மீனாவின் முகம் பெருமிதத்தில் பூரித்தது . பார்வதி , குழந்தைக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள்.

கடையிலிருந்து திரும்பிய சங்கரன்  முற்றத்தில் கை கால்  அலம்பிவிட்டு  மீனுவின் அருகில் அமர்ந்தார். “சாப்பிடச்சா செல்லகுட்டி”.

”பப்பு மம்மு பாட்டி  குடுத்தா. இப்ப நா உன்னோட தச்சி மம்மு  சாப்பிடுவேன் “ என்று கொஞ்சியது மீனுக்குட்டி.

கணவருக்கும் மாமியாருக்கும்  சாப்பாடு பரிமாறிக்கொண்டே மீனாவுக்கு தயிர் சாதத்தை ஊட்டினாள் அகிலா

அகிலாவும் பார்வதியும்  செண்டாக கட்டி வைத்திருந்த மல்லி மாலைகளை எடுத்துக்கொண்டு மாலை நான்கு மணி அளவில் சங்கரன், மூலநாதர் கோவிலுக்குக்  கிளம்பினார்.  

“அப்பா நானும்..” தானும் அவரோடு வருவதாக மீனு அடம் பிடிக்க,

”நாளைக்கு உன்னைக் கூட்டிண்டு போறேன் செல்லம் . இப்போ கோவிலுக்கு போயிட்டு மல்லிச்  செடிகளுக்கு உரம். பூச்சி மருந்தெல்லாம்  வாங்க மதுரைக்கு போறேண்டா. . ராத்திரரி தான் திரும்புவேன். உனக்கு அல்வா, முறுக்கு எல்லாம் வாங்கிண்டு வரேன்“

“பாட்டி கிட்ட வா” என்று பார்வதி அழைக்க சமாதனமான மீனு கதைக் கேட்க பாட்டியிடம் ஓடினாள்.

நஞ்சை, புஞ்சை.தோட்டம் , துரவு  என்று வசதியாக வாழ்ந்தார் சங்கரனின் அப்பா. தன்னுடைய ஐம்பதாவது  வயதில் புற்றுநோய்க்கு  பலியானர் . பார்வதியும் ஆட்களை வைத்து விவசாயம் பார்த்து சங்கரனையும்  மகள் சரசுவையும் படிக்க வைத்து  ஆளாக்கப் பாடுபட்டார்.  ஆனால் அவ்வப்போது ஏமாற்றிய மழை, கூலி ஆட்களின் மோசடி இவற்றால் விவசாயத்தில் வரும் வரவு குறைந்து போனது . சரசுவின் திருமணம். குழந்தைப் பேறு எல்லாம் முடிந்த  பிறகு  மிஞ்சியது வீடும் அரை  ஏக்கர்  நிலமும், மல்லித் தோட்டமும் மட்டுமே . சங்கரனும் நிலைமை புரிந்து கொண்டு சோழவந்தானில் ஒரு துணிக் கடையில் வேலைக்கு சேர்ந்தார் . தூரத்து சொந்தமான  அகிலாவை மணந்து  கொண்டார்.  கணவருடைய  வருமானத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தினாள் அகிலா. தோட்டத்தில் பூக்கும் மல்லிப்பூவை தொடுத்து  சோழவந்தான்  பூக்கடைகளுக்கு  அனுப்பி  கொஞ்சம் காசு சேர்க்க ஆரம்பித்தாள்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு அழகான பெண் குழந்தை பிறந்தது . மீனாட்சி அம்மனே தன் வீட்டிற்கு வந்ததாக குதூகலித்து  மீனா என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர் .தலை நிறைய சுருட்டை முடியோடு ரோஜாக் குவியல் போல இருந்தாள் மீனா. அகிலா சங்கரன் தம்பதியரின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை .பிறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் குழந்தை முகம் பார்த்து சிரிக்காமல் இருக்க அவர்களுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது

மதுரை கண் மருத்துவமனையில் பரிசோதனைகள் எல்லாம் முடிந்தன.  பரிசோதனை முடிவு உகந்ததாக இல்லை. “குழந்தைக்கு பார்வைத் திறன் மிக குறைவாக உள்ளது . பிறவியிலேய  ஏற்படும் இந்த குறைப்பாடுக்கு  தற்போது சிகிச்சை ஒன்றும் இல்லை . மீனா வளர வளர அவளை சிறப்புப் பள்ளியில் சேர்த்துப்  பயிற்சி கொடுத்தால் அவளால் எழுதப் படிக்க முடியும் . கொஞ்சம் பெரியவளானதும்   அவளது வேலைகளை அவளேப்  பார்த்துக்  கொள்ளப் பழக்கி விடுங்கள் . நல்ல சத்தான காய்கறிகள் பழங்கள் தவறாமல் கொடுங்கள் . இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு  கூட்டி வாருங்கள்   கண்ணுக்கு சில எக்ஸர்சைஸ் சொல்லித் தரோம் “.

டாக்டர்கள் சொன்னதைக்  கேட்டு அகிலாவும் சங்கரனும் மனம் உடைந்தனர் .சிறிது நாட்களில்  மனம் தேறி மீனாவை நன்றாகப் படிக்கவைத்து  அவளை மற்றவர்களைப் போல் வாழவைப்பதை ஒரு சவாலாக  எடுத்துக் கொண்டனர் .

மீனாவிற்கு நான்கு வயதானதும் தென்கரை வீட்டையும் தோட்டத்தையும் பார்வதியின் அண்ணன் மகன் பொறுப்பில் விட்டு விட்டு மதுரைக்கு குடி பெயர்ந்தனர் . மீனாவை பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்த்தனர். சங்கரன் மதுரையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்ந்தார். அகிலா மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மொத்தமாக உதிரி மல்லி வாங்கி , கட்டிய பூக்களை கோவில் கடைகளுக்கு சப்ளை செய்து வருமானத்தை கூட்டினாள்.  காலம்  இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது . கவனத்துடன் படித்து மீனா, பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மார்க்குகளோடு மாவட்டத்தில் மூன்றாவது   மாணவியாக  தேறினாள்.

சங்கரனின் உழைப்பையும்  விசுவாசத்தையும் பார்த்த முதலாளி சென்னையில் புதிதாக ஆரம்பித்த கடையின் பொறுப்பபை அவரிடல் ஒப்படைத்தார் . மீனாவும் தகுதி அடிப்படையில் உதவித்தொகை பெற்று கல்லூரியில்   சேர்ந்தாள் . அப்பா அம்மா அவளது  முன்னேற்றதைக் கண்டு பெருமைப் பட்டனர் . சென்னைக் கடையின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கவும் லாபத்தில்  ஒரு பங்கை சங்கரனுக்குக் கொடுக்கத் தொடங்கினர் முதலாளி .தென்கரை நிலத்தை விற்ற பணமும், சேமிப்பும் கைகொடுக்க கையடக்கமான  ஒரு சிறு வீட்டை சங்கரன் வாங்கினார்

மீனாவின் ஆசைப்படி அவள் வீணை கற்றுக்கொள்ள  ஆரம்பித்தாள். மொத்தத்தில் லக்ஷ்மியும் சரஸ்வதியும் போட்டி போட்டுகொண்டு மீனாவிற்கு அருள் பாலித்தனர்.வாழ்க்கை முறை மாறினாலும் மாதம் ஒரு முறை சங்கரன் தென்கரைக்கு போய் வருவது வழக்கம் . ஊரிலிருந்து வந்ததும் முதல் வேலையாக வாழை இலையில் கட்டிக்கொண்டு வந்த மல்லிகைப் பந்தை மீனாவிடம் கொடுப்பார் .

“அப்பா நம்ம தோட்டத்து மல்லிகை வாசமே அலாதி” என்று மகிழ்ந்து போவாள் மீனா.

வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருந்தலும் மீனாவின் எதிர்காலத்தைப் பற்றி அகிலாவும் சங்கரனும் கவலைப்பட ஆரம்பித்தனர் .

“நம்ம காலத்துக்குப்  பின்னால மீனாவுக்கு துணையா யார் இருப்பா ? அவளுக்கு கால காலத்துல ஒரு கல்யாணம் பண்ணிடனும் “

“அது சரி  அகிலா அவளிக் கல்யாணம் பண்ணிக்கறவன்  அவளை நல்ல படியாக வெச்சுக்கனுமே  அவளுடைய குறையை அனுசரித்துப் போகணும். முக்கியமாக நம்ம மீனாவின் மனதை காயப் படுத்தாத ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும்”.

”நம்ம மீனாட்சி நம்பள கை விட மாட்டா சீக்கிரமே ஒரு நல்ல வழி காட்டுவா “

மீனா பி. காம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ்   “முன்னேற்றம்” என்னும் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து மாற்றுத் திறனாளி மாணவ மாணவியற்கு உதவ கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்தது . தன்னார்வ மாணவ மாணவியர் கல்லூரி முடிந்து மாலை நேரங்களில் படங்களை  வாய் விட்டு  படிக்க பார்வை குறைபாடு  உள்ள  மாணவிகள்  பிரெயில் முறையில் குறிப்ப்பு எடுத்துக் கொள்வார்கள் .

சுகந்தி மீனாவிற்கு பாடங்கள் படிக்க வந்தாள் “மீனா அக்கா , நா சுகந்தி . முதலாண்டு பொருளாதார மாணவி .உங்கள்  பைனல்  எக்ஸாம் வரை உங்களுக்கு நீங்க நோட்ஸ் எடுக்க உதவியா ரிவிஷன் பாடங்களை படிக்கறேன்“

மீனா சுகந்தியின்  கையைப்  குலுக்கியபடி  “ரொம்ப தேங்க்ஸ் .நீ என்னை மீனா என்றே கூப்பிடு அக்காவெல்லாம் வேண்டாம் “ என இருவரும் பாடத்தில் கவனம் செலுத்தினர். 

“சுகந்தி உன் உச்சரிப்பு ரொம்ப  கிளியரா இருக்கு. சட்டுன்னு புரியறது “

“அப்படியா நீங்க சொல்லறது எனக்கு சந்தோஷமா இருக்கு“  

நாளடைவில்  இருவரும் நெருங்கிய பிரெண்ட்ஸ் ஆகிவிட்டனர்  நேரம் கிடைக்கும்போது சுகந்தி மீனாவின் வீணை வாசிப்பை கேட்க அவள் வீட்டிற்கு போவாள். சுகந்திக்காக  ஸ்பெஷலாக பூரி மசால் தயாரிப்பது அகிலாவுக்கு பிடித்த ஒரு வேலை .

 பைனல் எக்ஸாமுக்கு இரண்டு வாரங்களே இருந்தன . சுகந்திக்கு காய்ச்சல் வந்து காலேஜ் போக முடியவில்லை  டாக்டர் பத்து நாள் ரெஸ்டில் இருக்கவேண்டும் என்று சொல்லி விட்டார் . தன் அண்ணா சுந்தரிடம் “இப்படி காலேஜ் போக முடியாம போச்சே “ என புலம்பினாள்.

“இப்ப என்ன ஆயிடுத்து?உனக்குதான் யூனிவர்சிட்டி எக்ஸாம் இந்த வருஷம் கிடையாதே”

“அதில்லை சுந்தர்  நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.  நான்  என் சீனியர் மீனாவுக்கு பிரெயில் நோட்ஸ் எடுக்க ஹெல்ப் பண்றேன்னு உனக்கு   சொல்லி இருக்கேன் இல்லையா ?  நீ ப்ளீஸ் எங்க காலேஜுக்கு போய் மாடல் எக்ஸாம் கொஸ்டியன்  பேப்பர்களை அவளுக்கு  படிக்க வேண்டும் “

”இது என்ன விளையாட்டு? நா எப்படி உன் காலேஜுக்கு போறது?”

“அவசரப்படாதே எங்க என்.எஸ்.எஸ்  இன் சார்ஜ் மிஸ்ஸுக்கு போன் பண்ணி சொல்லறேன் . அதோட மத்த பாய்ஸ் காலேஜ் வாலன்டியர்ஸ் சில பேர்  வராங்க.உனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இருக்காது. இந்த கடைசி நேரத்துல வேற வாலன்டியர் கிடைப்பதும் கஷ்டம்.  ப்ளீஸ் புரிஞ்சிக்கோ “  

சுந்தரும்  சுகந்தியின் கெஞ்சலுக்கு பணிந்து  மீனாவிற்கு உதவினான் .

பரீட்சை முடிவுகள் வெளி வந்தன. மீனா மாற்றுத் திறனளிகளிடையே  முதல் இடத்திலும் நகரத்தில் ஐந்தாவது  ராங்கிலும் தேர்ச்சி பெற்றாள் . மீனாவைப்  பாராட்ட சுந்தரும் சுகந்தியும் அவள் வீட்டுக்கு போனார்கள். மீனாவின் கையைக் குலுக்கி மகிழ்ச்சியை சுந்தர் தெரிவித்த தருணத்தில் அவர்களிடையே  அந்த ஒற்றைத் தொடுதலில் ஆயிரம் வார்த்தைகள் மௌனத்தில் பேசப் பட்டன . அதன் பின் நான்கைந்து முறை இருவரும் சந்தித்து பேசி வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர் .

வங்கி  அதிகாரியான அப்பாவிடமும் பள்ளி ஆசிரியையான  அம்மாவிடமும் சுந்தர் தன்  விருப்பத்தைக் கூற முதலில் அவர்கள் சற்றுத் தயங்கினர்.  “என்ன சுந்தர்  இப்படி திடீரென்று சொன்னா எப்படி?”

“இது உன்னோட வாழ்க்கை சம்மந்தப்பட்ட  விஷயம் . நல்லா யோசிச்சு முடிவு எடுக்கனும்”

”அப்பா  நா ஒண்ணும் மீனா மேல் பரிதாபப்பட்டு அவளுக்கு வாழ்வு கொடுக்கணும் என்று நினைக்கவில்லை . உன்மையில் நாங்க ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் விரும்பறோம். பல விஷயங்களில் எங்கள்  கருத்துக்கள் ஒத்துப் போகின்றன .அவளுடைய பார்வைக் குறைவு ஒரு போதும் எங்கள் சந்தோஷமான வாழ்க்கைக்கு தடையாக இருக்காது”

மகன் சொன்னதினால் மட்டுமன்றி மீனா குடும்பத்தோடு கடந்த சில நாட்களாக ஏற்பட்ட பழக்கத்தினாலும்  மீனாவின் குணத்தாலும் திருப்தி அடைந்து மகனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர் .

பெண் கேட்டு  வீட்டுக்கு வந்த  சுந்தரின் பெற்றோரைப் பார்த்து  அகிலா சங்கரன் தம்பதியர்  ஆனந்த கண்ணீர்  வடித்தனர் .

“நல்ல காரியத்தை தள்ளிப் போட வேண்டாம் .வரும் வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டில் தட்டு மாற்றிக் கொண்டு திருமணத் தேதியை நிச்சயித்து விடலாம் “

“ரொம்ப சந்தோஷமா இருக்கு  எங்க மீனா கொடுத்து வைத்தவள்”

சுகந்திக்கு தன் தோழியே அண்ணியாக வருவதில்  ரொம்ப குஷி. 

வீட்டுக்கு கிளம்பிய சுந்தரின் பெற்றோரை, “பிளீஸ் , கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்  உங்கள் எல்லோரிடமும் நான் சற்று மனம் விட்டு பேச வேண்டும் “ மீனா  ஆரம்பிக்க,

எல்லோரும் சற்று குழப்பம் அடைந்தனர் .”மீனா என்ன சொல்லப் போகிறாளோ” என்று சுந்தரின் இதயம் படப்படத்தது.  

அங்கு நிலவிய அமைதியை கலைத்த மீனா “ சுந்தரை நான் மனமார விரும்புகிறேன் . எங்களது ஆசையை நிறைவேற்றும் உங்களுக்கும் என் அப்பா அம்மாவிற்கும்  ரொம்ப தேங்க்ஸ் . உங்களிடம்  என் எதிர்காலக் கனவை , ஏன் இன்னும் சொல்லப் போனால் என் வாழ்வின் இலட்சியத்தை சொல்லியே  ஆக  வேண்டும் . ஏன் கனவு நனவாவதை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன் .  நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. என் குறை தெரியாமல் அப்பா அம்மா என்னை வளர்த்து இருக்காங்க . சுந்தரும் நல்ல வாழ்க்கை துணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு” பீடிகையோடு  ஆரம்பிக்க, 

சுந்தரின் அப்பா  “நீ இப்ப என்னம்மா சொல்ல வரே  சீக்கிரம் சொல்லு  சஸ்பென்ஸ் தாங்கல்லை” என்று அவசரப்பட்டார்.

மீனா சொல்ல வந்ததை  புரிந்து கொண்ட சுந்தர் நிம்மதி ஆகி  “அப்பா மீனா தன்  எதிர்கால திட்டத்தைப் பற்றி ஏற்கனவே  என்னிடம் சொல்லி இருக்கா .எனக்கும் அதில் சம்மதமே“ என்றான்.

பொங்கலை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ ரூ. 2500தொடர்ந்து மீனா “என்னோட நீண்ட நாள் ஆசை , எங்க ஊரான தென்கரையில் மல்லிகை மணம் கமழும் வாசனைப் பொருட்கள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஆரம்பித்து , வசதி இல்லாத பெண்களுக்கு, முக்கியமாக  மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதே . இதற்கு உங்கள் ஒத்துழைப்பும்  ஆதரவும் வேண்டும்” பேச எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி .

சுந்தரின் அப்பா “சங்கர் நீங்க பாக்டரிக்கு இடம் பாருங்கள் . மீனாவிற்கு தொழில் முனைவோருக்கான  லோன் ஏற்பாடு செய்வது  என் பொறுப்பு “என்று பரபரக்க

மீனா அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து உணர்ச்சி மேலீட்டால் அவர்  கைகளை எடுத்து கண்களில் ஒற்றிகொண்டாள்.

கல்யாணம் அகிலாண்டேஸ்வரி மூலநாதர்  சந்நிதியில் எளிமையாக நடந்தது . மறுநாளே பாக்டரிக்கு பூமி பூஜை போட, விரைவில் வேலைகள் தொடங்கின . பிறகு எல்லாம் “பாஸ்ட் ட்ராக்கில்” நடந்தன.

பாக்டரி  நிர்வாகத்தை மீனாவும் சுந்தரும் பகிர்ந்து  கொண்டனர் . மீண்டும் மதுரைக்கு சுந்தரோடு திரும்பினாள் மீனா. பல சவால்களுக்குப்  பிறகு பத்து ஆண்டுகளில் இருவரது  முயற்சியால் தென்கரையில் பாக்டரி  வெற்றிகரமாக இயங்க ஆரம்பித்தது. மீனாவின் நெஞ்சோடு கலந்துவிட்ட மல்லிகை மணம், சோப் , ஷாம்பூ , ஹேர் ஆயில் , ஊதுபத்தி, ரூம் ஸ்ப்ரே என்று பல பொருட்கள் மூலம் இந்தியாவிலும்  வெளி நாடுகளிலும் பரவத் தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளுக்கும்  வசதி குறைவான  பெண்களுக்கும்  மீனாவின் “நறுமணம்”  நிறுவனத்தில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு   அவர்களளின்  வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கிடைத்தது  வாரம் இரண்டு  நாட்கள் ஆர்வமுள்ள மாணவ மாணவியற்கு இலவச வீணை வகுப்புகள் என்று மீனா படு பிஸி.

மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரியமும்  “எதிர்நீச்சல்” என்னும் தொண்டு நிறுவனமும் இணைந்து வழங்கும் ‘ வாழ் நாள் சாதனையாளர் ‘ விருது பெறவே இந்த தில்லி பயணம்.

புதுடில்லி விமான நிலைய ஓடு தளத்தில் விமானம் இறங்கத் தொடங்கியது. “மீனா எழுந்திரு  தில்லி வந்தாச்சு” சுந்தர் குரல் கொடுக்க “நான் தூங்கல்லை  கடந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன் “

“அது சரி மீனு, நிகழ் காலத்துக்கு வா “ என்று அன்போடு அவளை அணைத்தான் சுந்தர் . சிலிர்த்துப் போன மீனா “ இப்ப மட்டும் இல்லை  எப்பொழுதும் இந்த அரவணைப்புவேண்டும்” என்றாள் மண நிறைவோடு .

அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மொட்டுக்கள் மலர்ந்து சிரித்தன .