கபீர்தாஸருடைய கவிதைகள் பாரத நாடு முழுவதும் பரவியிருப்பதைக் காணலாம். இவர் பிறவியிலே முஸல்மான். இவரது மதத்தை கபீர் பந்த் என்றே வழங்குகிறார்கள். பஜனை சம்பிரதாயத்திலும் ஹரிகதா காலக்ஷேபங்களிலும் கபீர்தாஸருடைய பாடல்களே நிறைந்து நிற்கும். இத்தகைய மகானது வரலாறு, இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டியாகும்.
வாரணாசி என்னும் கசியம்பதியிலே, தமால் என்னும் பெயர் பூண்ட முஸ்லீம் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் நெசவுத் தொழிலைச் செய்துவந்தார். அவர் மிகுந்த தெய்வபக்தியுள்ளவர். அவர் மனைவியார் ஜிஜ்ஜா பீபீ என்பவர். நெடுநாட்கள் வரை அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லை. தம்பதியர் இருவரும் முதுமையை அடையும் சமயம், ஒரு நாள் விருந்தினராக வந்த ஒரு பெரியவர், உங்களுக்கு ஒரு மைந்தன் கிடைப்பான் என்று ஆசி கூறிச் சென்றார்.
தமால் வழக்கம் போல நெய்வதற்கு உரிய நூல்களை அலசும் பொருட்டு, கங்கைக்குச் சென்றார். கவனக் குறைவாக அப்பொழுது தண்ணீரில் விழுந்த நூல் சுருளைக் கங்கை இழுத்து போய் விட்டது.
தமால் மனம் வருந்தி அந்த நூல் சுருளைத் தொடர்ந்து கரை ஓரமாகவே விரைந்தார். நூல் சுருள் மறைந்தே போயிற்று. அவர் ஓடி நின்ற இடம் ஆரண்யத்தின் ஒரு பகுதி. அங்கே ஓர் அழகிய குடிலின் அருகே அமர்ந்து தியானத்திலே ஆழ்ந்தார்.
கங்கைக்கரையிலே தியானத்திலே அமர்ந்த தமால், குவா குவா என்ற இளங்குழந்தையின் குரல் கேட்க, திடுக்கிட்டு கண் விழித்தார். அக்குழந்தையை ஓடி எடுத்தார். வீட்டை நோக்கி திரும்பினார். வாயிலிலே காத்திருந்த ஜிஜ்ஜா பீபி குழந்தையைக் கண்டு உள்ளம் பூரித்தாள். குழந்தைக்கு கபீர் என்று பெயரிட்டனர்.
குழந்தை கபீரின் விளையாடல்களிலேயே தெய்வமணம் கமழ்ந்தது. காலப்போக்கில், கபீர் நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். தமாலின் வீட்டு முற்றத்திலே, கைத்தறியின் ஓசை இரவும் பகலும் கேட்டவண்ணம் இருக்கும். ஆனால் கபீரது மனமும் நாவும், இறைவனது புகழையே பாடிக்கொண்டிருக்கும்.
தறியிலிருந்து ஒரு முறை நெய்த சிறிய துண்டை எடுத்துக் கொண்டு கடைத்தெருவை நாடிச் சென்றார் கபீர். அந்த அழகிய துண்டு சிலருக்கு மிகவும் அற்பமாகவும், சிலருக்கு மிகவும் உயர்வாகவும் தோன்ற, ஒருவரும் வாங்குவாரில்லை. இதனால், கபீர் மனம்தளர்ந்து போனார்.
கடைசியில் கபீர், தானமாக அந்தத் துணியைக் ஒரு முஸ்லீம் பக்கிரியிற்கு கொடுக்க முயல, அவர் அதை வாங்க மறுத்து, ‘ராம நாமம் சொல்கிறாய்’, நீ முஸ்லீம் மதத்துக்கே துரோகி. உன் கொள்கைகளையெல்லாம், உன் பெற்றோரிடம் சொல்லித் தண்டிக்கவேண்டும் என்று சொல்லி நடந்தார்.
கபீரோ பயந்து, ஓர் பாழ் வீட்டிலே பதுங்கிக் கொண்டார். துணியைப் பெற்றுக்கொண்ட பகீர் ஜிஜாபாயிடம் சென்று, அம்மா உன் மகன் துணியை எல்லாருக்கும் தானமாக கொடுக்கிறான் என, இருவரும் பாழ்வீட்டை அடைந்தனர். ஜிஜ்ஜா, கபீரைப் பிடித்து இழுத்து பக்கிரியின் கைபிரம்பினால், பளீர் பளீர் என்று இரண்டு அடிகள் அடித்தார்.
அந்த அடிகள் இறைவனது முதுகிலும் வீழ்ந்தன. உலகிலுள்ள எல்லா உயிர்களின் உடம்பின் மீதும் விழுந்தன. ஜிஜ்ஜா பீபியின் முதுகிலும் சுரீர் சுரீர் என்று விழுந்தது. இந்த அடிகள் இறைவனது முதுகிலும் பட்டன. அங்கேயே பக்கீராக வந்த இறைவன், தனது சுய உருவுடன் கபீரைத் தழுவிக்கொண்டான்.
ஜிஜா பீபிக்கு இன்னது செய்வதென்பது விளங்கவில்லை! ஆ! ‘இறைவனே, உன்னையே நாடித் தவம் இருப்பவரையெல்லாம் விட்டு விட்டு, இந்தப் போதைக்கு காட்சியளித்தாயே. கபீர் கபீர் உன்னை உண்மை அறியாமல் அடித்து விட்டேனே’, என்று ஏங்கிப் பின் துதிக்கலானார். பின்னர் இறைவனது தரிசனத்தைப் பெற்ற தாயாரும் மைந்தரும், ஆனந்த மிகுதியினால் நிறைந்த மனதுடன் அங்கிருந்து வீடு திரும்பினர்.
குரு அருள் பெற வேண்டி, வாரணாசியில், இராமானந்தர் என்ற ஒரு பெரியாரை குருவாக நினைத்துக் கபீர் அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சென்றார். ஆனால் அங்கே அவரைப்பார்க்க முடியாததால், அவரைப் பார்க்க விரும்பி, கங்கையின் படிக்கட்டிலே சென்று படுத்துக் கொண்டார் கபீர். ராமனந்தர் தவறுதலாக கபீரை மிதித்து விட்டதால், கபீரைப் பார்த்து ராமநாமத்தை செபித்து வா என்று சொல்லி அனுப்பினார். ஸ்வாமிகளின் பாதத்துளி தம் மேல் பட்டதைப் பெரும் பேறாகக் கருதினார் கபீர்.
ஒரு முறை சித்த புருஷராகிய கோரக்கரை வாதில் வென்றார் கபீர். இதனால் காசி நகரம் முழுவதும் ராமனந்தரையும் கபீரையும் போற்றிப் புகழ்ந்தது.
சிறிது காலத்திற்கு பின் சுந்தராவென்னும் பெண்ணை மணம் செய்துக் கொண்டார் கபீர். இதன்பிறகு கபீருக்கு இரு கண்மணிகள் தோன்றினார்கள். அதில், ஒரு புதல்வர் பெயர் கமால். அவர் இளமையிலே கேள்விகளிலே சிறந்து விளங்கினார்.
ஒரு முறை ஸ்ரீ ராமன் கபீருக்கும் ராமனந்தருக்கும் காட்சி தர, ராமானந்தர் மெய்மறந்து கண்பனிசோர, நாக்குழற துடித்து நின்றார்.
இவரது பாமாலைகள் மிகமிகச் சிறந்தவைகள் என்று போற்றிக்கொண்டாடப்படுகின்றது.
கபீர்தாசர், விரதங்கள் இருந்து உடலை வருத்தி இறைவனை வழிப்படக்கூடாது என்ற நோக்கம் உடையவர்.
பஜனை சம்பிரதாயத்திலே அடியார்களின் வரிசையிலே இவரது பாடல்கள் வரும்பொழுது, பக்தி என்பதே அறியாத பாமரர் நெஞ்சிலும் உணர்ச்சிகள் பொங்கி எழும். அவர்கள் இறைவனது இசை வடிவிலே மனம் ஊன்றி மெய்சிலிர்ப்பார்கள்.
கபீர்தாஸ் மஹாப்ரபு கீ ஜெய்!
கபீர் தாஸ் அவர்களின் பாடலும் அதன் தமிழ் அர்த்தமும் இந்தக் காணொளியில் ….
(அடுத்த இதழில் மற்றும் ஒரு விஷ்ணு தாசர் )
