பஜனைக் குழு பாடிக் கொண்டேதெற்கு மாடவீதியில் திரும்பிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் தெற்கு வீதி முனையிலேயே இரண்டாவது வீடாக இருந்த “லா ஜர்னல்” பதிப்பிக்கும் ஸ்ரீராம் பிரிண்டர்ஸ் இல்லத்தின் முன் நின்றது. நானும் பாப்புவும் மெள்ள வெளி வட்டத்திலிருந்து உள்வட்டத்துக்குள் புகுந்தோம்.
தோடயமங்களம் முடிந்து குரு கீர்த்தனை ஆரம்பிக்கப் போகிறார்கள். ஜெமினி பாலகிருஷ்ணன் மாமா கையில் ஜாலராவுடன் நடுவில் நிற்கிறார். அருகே ஹர்மோனியம் ஒரு எச்சுக்கட்டை மிருதங்கம் இன்னொரு புறம் டோலக். குரு கீர்த்தனம் ஆரம்பிப்பதற்கு முன் ஸ்லோகம் பாட வேண்டும். சீனியர் மெம்பர் உப்பிலி ஆரம்பித்தார்.
யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாம பக்தி: ப்ரஜாயதே
தம் நமாமி யதிஸ்ரேஷ்டம் போதேந்த்ரம் ஜகதாம் குரும்
இதுதான் ஸம்ப்ரதாய பஜனையின் குரு வந்தனம். காஞ்சி காமகோடி ஆச்சார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ போதேந்த்ர சரஸ்வதி சுவாமிகள். அந்நியர்கள் நமது இந்துக் கோயில்களை இடித்து அழித்துக் கொண்டிருந்த காலத்தில், நாம சங்கீர்த்தனம் என்ற பஜனை மூலம் இறைவனை எளிதாக அடையலாம் என்ற இவரது கொள்கை எழுச்சி பெற்றது. “ காமகோடி ராமகோடி” என்ற நூலில் திரு. ரா.கணபதி இவரது பெருமைகளைப் பற்றி நிறைய எழுதியுள்ளார்.
இதெல்லாம் பிறகு நான் படித்து அறிந்த தகவல்கள். அன்று, ஒன்றும் தெரியாது.
“ விவி ! இதுதாண்டா குரு ஸ்லோகம் ..இப்ப பாரு ..பஜரே மானஸ போதேந்த்ர யோகீந்த்ரம் பாடப் போறார்.” என்றான் பாப்பு.
( என் பள்ளி ,கல்லூரி நண்பர்களுக்கு நான் வி.வி. பிறகுதான் இலக்கிய மேடைகளில் அது வ.வே.சு. வாக மாறியது. பஜனை சம்ப்ரதாயங்களில் பாப்பு எனக்கு சீனியர். அவன் தமையனார் “கல்லி” எனப்படும் கலியாணசுந்தரம் பஜனைகளில் பாடிப் பிரபலமானவர்; சுவாமி ஹரிதாஸ் அவர்களின் நேரடிச் சீடர்.)
ஸ்ரீ ஞானானந்த பஜனை மண்டலி என்ற இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் தவிர, வீதி பஜனையில் பலரும் கலந்து கொள்வார்கள். அவர்களில் பலருக்கு இசை ஞானம் இருக்காது; சம்ப்ரதாயங்கள் தெரியாது. எனவே சந்தேகம் கேட்போரும் பதில் சொல்வோரும் கூட்டத்தில் இருப்பார்கள்.
ஒரு ஸ்லோகம் பாடினால், அதைத் தொடர்ந்து என்ன பாட்டு வரும் என முன்கூட்டியே பக்கத்தில் உள்ளவர்களுக்குச் சொல்லி சிலர் தங்கள் மேதைமையை அரங்கேற்றுவர்..சில நேரம் இந்த “கஸ் வொர்க்” தவறாகவும் போகலாம். ஏனென்றால் ஒரு ஸ்லோகம் பாடிய பிறகு அதன் தொடர்ச்சியாகப் பாட பல “ஆப்ஷன்ஸ்” உண்டு.. அன்று பாடுபவர் என்ன பாடுவார் என்பது அவருக்கே வெளிச்சம்.
“ பாப்பு ! அதெப்படி அவ்ளோ கரெக்டா “பஜரே மானஸ” ன்னு சொல்லறே .. ”
“ பாடப் போற உப்பிலிக்கு அந்த ஒரு பாட்டுதான் தெரியும்”
இது போன்ற இடைச்செருகல் உரையாடல்கள் நிகழ்ந்தாலும் , பாட்டு ஆரம்பித்து , பிறகு கொடுத்து வாங்கி அனைவரும் பாடும் போது நாங்கள் அந்த பக்தி இசையிலே ஒன்று கலந்து உருகிவிடுவோம்.
“குரு” பற்றிய பாடலுக்குப் பிறகு என்ன பாடுவார்கள் ?
“பிறகா ?” அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. சில நேரங்களில் தெற்கு வீதி பூராவும் குருவே ஒலிக்கும்..”
“அதெப்படி?”
சநாதன குரு போதேந்த்ராள்; அதற்குப் பின் அவருக்கு சமகாலத்தவராக விளங்கிய திருவிசைநல்லூரில் வசித்த ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள்; அதன் பின் உஞ்சவிருத்தி பஜனை சம்ப்ரதாயத்தை உருவாக்கிய மருதாநல்லூர் சுவாமிகள் ஆகிய இந்த மூன்று குருமார்களைத் துதித்து முதலில் குரு கீர்த்தனங்கள் பாடுவதே மரபு.
இதன் பிறகு, தற்போதுள்ள நடைமுறையில் ஜயதேவரின் அஷ்டபதி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மராத்தி, மலையாளம் வங்காளம், குஜராத்தி போன்ற பிற மொழிகளிலுள்ள குரு கீர்த்தனங்கள் பாடுவார்கள்.
அதன் பிறகு “ வட விடபி ஸமீபே” என்ற ஸ்ரீ தஷிணாமூர்த்தி தியான ஸ்லோகம் தொடங்கும். அவர்தானே ஆதியந்தமில்லா மோனகுரு ! பிறகு அவருக்குரிய கீர்த்தனைகள், பாடல்கள் பாடப்படும்.
வடமொழியில் நாராயண தீர்த்தர் எழுதிய கிருஷ்ண லீலா தரங்கிணி, தெலுங்கில் பத்ராசல ராமதாஸர், அன்னமாச்சார்ய,, கன்னடத்தில் புரந்தரதாஸர். ஆகியோரின் பாடல்கள், மராத்தியில் துக்காராம், நாமதேவர், ஏகதேவர் ஞானதேவர் போன்றோரின் அபங்கங்கள், ஹிந்தியில் துளசிதாஸர் கபீர்தாஸர், சூர்தாஸர், மீராபாய் போன்றோரின் பாடல்கள் , மலையாளத்தில் ஸ்ரீ பூந்தானம் நம்பூத்ரி ஞானப்பானை அவர்களின் பாட்டு என எத்தனை வகைப் பாடல்கள் ! எத்தனை மொழிகள் !
உண்மையிலேயே இந்த பஜனை சம்ப்ரதாயத்தில் இருக்கும் “தேசிய ஒருமைப்பாடு” வேறு எங்கும் காணமுடியாது.
ஒரு கவிஞனாக வெவ்வேறு மொழிகளில் உள்ள பாடல்களின் சந்தங்கள், மெட்டுகள், உவமைகள், பாவனைகள் ஆகியவற்றை நான் மிக இரசிக்கத் தொடங்கினேன். பஜனையில் பாடப்படும் பிற மொழிப் பாடல்களின் பொருளைத் தேடிப் பிடித்து அறிவதில் ஆர்வம் காட்டினேன். பொழிப்புரையாகத் தெரியும் பொருள் மட்டுமல்ல; ஒவ்வோர் சொல்லுக்கும் பொருள் தேடினேன்.
“முரளிதர கோபாலா” என்றால் என்ன பொருள் ? இது வடமொழி.
முரளி என்றால் புல்லாங்குழல்; தர என்றால் வைத்திருப்பவன்; கோ என்றால் ஆவினம் பால என்றால் காப்பவன்..என்று பிரித்துப் பிரித்துப் பொருள் அறிந்து கொண்டேன்.
கிருஷ்ணா என்றால் கருமை; ராதா என்றால் வளமை என்று கண்டுகொண்டேன்.
இது போலப் பிறமொழிகளிலும் உள்ளே புகுந்து அறிந்துகொள்ளத் தொடங்கினேன். என் இலக்கியப் பயணத்தில், திறனாய்வுக்கும், பொருள் விளக்க விரிவுரைகளுக்கும் இந்த வீதி பஜனைகள் அடியெடுத்துக் கொடுத்தன என்பதை நன்றியோடு நினைவுகூருகிறேன்.
நான் பதினோராவது ( எஸ் எஸ் எல்.ஸி ) படிக்கும் போது பள்ளி மாடிப்படிக்கட்டில் ஓடிக் கீழே விழுந்து “லோயர் டிபியா” எலும்பு உடைந்தது. மூன்று மாதங்கள் “கால் கட்டில்” கட்டிலில் கிடந்தேன். அப்போதுதான் கண்ணன் ,கல்கண்டு, கல்கி வாசிப்பினைத் தாண்டி எழுதும் பழக்கம் ஆரம்பித்தது.. கால் வலியைக் குறைக்க கடவுள் மீது பாட்டு எழுதினேன்.
முருகா முருகா முருகா
கால் வலி போக்க வா
வா வா முருகா வா முருகா .
கால் சரியானவுடன் அந்த பக்திக் கவிதை ஆர்வம் பட்டுப் போய்விட்டது/.
ஆறு ஆண்டுகள் கழித்து ஒரு மார்கழிக் காற்றில் , பஜனைப் பாடல்களின் சூழலில், பட்டுப் போன பழைய ஆசை மீண்டும் துளிர்த்தது. நான் பக்திப் பாடல்கள் எழுதி பாடத் தொடங்கினேன்.
பஜனையில் பாடப்படும் ராகங்கள் பற்றி அறிந்துகொண்டேன். மிக முக்கியமாக இந்த பஜனைகளில் கலந்து கொண்டு பாட பல பிரபல வித்வான்கள் வருவார்கள். அவர்களில் என் ஆசான் மதுரை ஜி.எஸ். மணி சாரும் உண்டு. அவர் இயற்றிய பல பாடல்களை வீதி பஜனையில் அவர் பாட நான் கேட்டிருக்கிறேன். ”குருஜி” என விளிக்கப்படும் ஹரிதாஸ் கிரி சுவாமிகள் கலந்து கொள்ளும் போது கூட்டம் அலைமோதும். அவர் பாடுவதைக் கேட்க அனைவருக்கும் உற்சாகம் கரை புரளும். வீதி பஜனைகளில் ஒலிபெருக்கி வசதிகளெல்லாம் கிடையாது. இது ஆத்மார்த்தமாக பக்தியுடன் பாடப்பெறுவது. ஆகவே நான் முண்டியடித்து முன்னே சென்று பாடுவோர் அருகிலே நின்று கேட்பேன். இசை பிதாமகர் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் காதையும் தொண்டையையும் “மஃப்ளர்” போட்டு மூடியபடி மார்கழியின் காலைக் குளிரில் பஜனையை ஓர் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்துள்ளேன்.
வீதி பஜனை நிறைவுற்று பலர் கலைந்துசென்றாலும் , மண்டலி உறுப்பினர்கள் , பாடியவர்கள், வாத்யங்கள் இசைத்தவர்கள் நிகழ்ச்சியில் அன்று கலந்துகொண்ட பிரபலங்கள் ஆகியோர், தெற்கு வீதி ஸ்ரீராம் வீட்டு ஹாலில் கூடுவோம். ஒவ்வொரு நாளும் குறைந்தது முப்பது பேர்கள் உண்டு. மார்கழியின் விடுமுறை நாட்கள் , கூடாரவல்லி போன்ற சிறப்பு நாட்கள், அல்லது குருஜி கலந்து கொள்ளும் நாட்கள், ஆகிய தினங்களில் கூட்டம் இன்னும் அதிகமாகிவிடும்,
அனைவரையும் ஸ்ரீராம் வீட்டு ஹால் ஏற்றுக் கொள்ளும். ஹால் நடுவே இருக்கும் ஊஞ்சலில் குருஜி அமர்ந்து இருப்பார். அனைவருக்கும் சுடச்சுட வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் கிடைக்கும். காலை எட்டு மணிக்குள் இதெல்லாம் நிறைவேறிவிடும். இப்போது ஹாலில் குருஜியின் அடியார்களும் ஸ்ரீராமின் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருப்பர். இவர்கள் இடையே குருஜி உரையாற்றுவார். என் ஆசான் பாடுவார். இசை, மற்றும் பக்தி ஆன்மீக விஷயங்களைப் பற்றியெல்லாம் கலந்துரையாடல் நடக்கும். இங்குதான் எனது இலக்கிய ஆர்வத்திற்கும் தீனி கிடைத்தது.
“ வவேசு ! நீ கிருஷ்ணரைப் பற்றி எழுதின கவிதை ஏதாவது இருந்தால் சொல் “ என ஒரு சமயம் குருஜி கேட்டார். நான் எழுந்து நின்று
“ கண்ணா நீ கைதேர்ந்த நடிகன் ! காலம் ஓ! அது உன் கைப்பிடி மண்” என்ற கவிதையைச் சொன்னேன். அனைவரும் இரசித்துப் பாராட்டினர். “ டேய் எப்ப வந்தாலும் நீ இங்க ஒரு கவிதை சொல்லணும் “ என்று ஆணையிட்டார் குருஜி. சுற்றியிருந்தவர்கள் ஆமோதித்து கரவொலி எழுப்பினர்.
கலை இசை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகளின் தலைமை இடமான சென்னையின் மயிலை. அதற்குகந்த மார்கழி மாதம், கலை இசை நாட்டிய உலகின் பிரபலங்கள் கலந்துகொள்ளும் பஜனை சூழல், இதற்கிடையே “ வா ! வந்து கவிதை பாடு ! “ எனச் சொன்ன குருஜி. இதற்கு மேல் என்ன வேண்டும் ?
அந்த மார்கழி ஊற்றில் என் கவிதை ஊற்றும் கண் திறக்க ஆரம்பித்தது. எண்ணற்ற கவிதைகள் அரங்கேற ஆரம்பித்தன.
குருவைப் பற்றி அப்போது நான் எழுதிய ஒரு பாடலைப் பகிர்ந்துகொள்கிறேன்.
ராகம் –பெஹாக் தாளம் –ஆதி
வாழ வழி செய்தவன் குருநாதன் – இந்த
மாய உலகிலே தூய மனம் கொண்டு (வாழ)
பாழும் விதிச் சூழலில் மோதி அலையாமல்
பாவங்கள் தீர்ப்பதற்கு பரமனே கதியென்று (வாழ)
கண்ணுக்குள் ஒளிதனைக் காட்டுபவன் அவனே
எண்ணத்தில் பக்தியை இசைப்பவனும் அவனே
சின்னத் திரியைத் தூண்டி தீபத்தை ஏற்றுதல் போல்
மண்ணாய்க் கிடந்தவனை மனிதன் எனச்செய்து (வாழ)
( தொடரும்)
