புத்தகம் : தினசரி வழிபாட்டு முறை
ஸ்ரீ ஞானானந்த தபோவனம் வெளியீடு
135 பக்கங்கள். விலை குறிப்பிடப்படவில்லை
சமீபத்தில் கலிஃபோர்னியாவிலிருந்து சென்னை வந்த என் கல்லூரி நண்பர் கந்தசாமி திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். என்னுடைய பங்குக்கு, நான் “சரி ! அப்படியே திருக்கோவிலூரிலுள்ள ஞானானந்த கிரியின் தபோவனமும் சென்று வருவோம்” என்றேன். எவ்வளவோ நான் கேள்விப்பட்டிருந்தாலும், சமீபத்தில் சுவாமி ஹரிதாஸ் கிரியின் காணொளிகள் சிலவற்றைப் பார்த்த பிறகுதான், தபோவனம் செல்ல வேண்டும் என்ற தீராத வேட்கை என்னுள் கிளர்ந்தெழுந்திருந்தது. அது இப்போது கந்தசாமியின் வரவால் நிறைவேறியது.
இந்த “தினசரி வழிபாட்டு முறை” என்ற புத்தகத்தை அந்த ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் உள்ள மிகச்சிறிய புத்தகக் கடையில் வாங்கினேன்.
ஸ்ரீ ஞானானந்த கிரியின் வாழ்வு, அன்பும் ஞானமும் பக்தியும் நிறைந்த ஒன்று. எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வாழ்ந்து மறைந்த (இன்றும் சூட்சும வடிவில் வாழ்ந்து வரும்) ஈடு இணையற்ற மகான் அவர். அவருடைய அதிசயமான வாழ்க்கையின் சுருக்கம் இந்நூலில் தொடக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நூல் சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் அருளாசி உரையினையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.
ஞானானந்தகிரி அவர்கள் எல்லாம் துறந்த அனைத்தும் உணர்ந்த முழு ஞானியாக வாழ்ந்தாலும், எளிய மக்களின் ஆன்மீக நிலையை கருத்தில் கொண்டு, தபோவனத்தில் பல இறையுருவங்களுக்கு சந்நிதிகள் நிறுவி, அங்கே தினசரி பூஜைகள் நடக்குமாறு செய்து வந்தார். இன்றும் அவர் விதித்தபடியே பூஜைகள் இடைவிடாது நடக்கின்றன. இந்நூலில் உள்ள தோத்திரங்கள் அந்தப் பூஜைகளுக்கும் ஆராதனை செய்யப்படும் தெய்வங்களுக்கும் ஏற்றவாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்நூலை ஞானானந்தகிரி அவர்களே உருவாக்கி பக்தர்களுக்காக அருளி இருக்கிறார். இன்றளவும் தினமும் இவை பாராயணம் செய்யப்பட்டும் பாடப்பட்டும் வருகின்றன.
புத்தகத்தின் பின்னட்டையில் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் அருள் மொழிகளை வழங்கி இருக்கிறார்கள். மிகவும் எளிமையாகத் தோன்றினாலும், இந்த அருள்மொழிகள் மனதில் வைத்து போற்றப்பட வேண்டியவை. வாழ்வியலாக மாற வேண்டியவை.
இந்நூலைப் பற்றி அறிய வரும் அனைவரும் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் அருளால் ஆட்கொள்ளப்பட்டு இன்பமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே என் அவா.


