நா.முத்துக்குமார் பற்றிய தகவல்கள்உன் கவிதையை நீ எழுது
உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது.
உன் ரகசிய ஆசைகள் பற்றி எழுது
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுத்தை, வாசிப்பை நேசித்து, இப்படி யதார்த்தமாக கவிதை, பாடல்கள் என எழுதி, யாரும் எதிர்பாராத வயதிலேயே இந்த உலகை விட்டுச் சென்றவர்தான் கவிஞர் நா முத்துகுமார்.

தங்க மீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் மற்றும் சைவம் படத்தில் அழகே அழகே என்ற இரண்டு பாடல்களுக்காக தேசிய விருது . இயக்குநர் பாலு மஹேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி. கவிஞர் அறிவுமதியிடம் திரைப்பட பாடல்கள் எழுதும் உத்தியைக் கற்றுக்கொண்ட அனுபவம். இயக்குநர் சீமானின் வீரநடை படத்தின் மூலம் அறிமுகம்.

எனக்கொரு பெருமை உண்டு. 25 வருடங்கள் முன்பு , காஞ்சிபுரத்தில், இலக்கிய வட்டம் நிகழ்வில், நா முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் என்ற நூலை அவர் முன்னாலேயே திறனாய்வு செய்தேன். அந்த வாய்ப்பைத் தந்த நண்பர் திரு நாராயணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

காஞ்சிபுரத்தில் திரு முத்துக்குமாருடன் நான் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வுகள் , உரையாடல்கள் மற்றும் புகழ் பெற்ற பாடலாசிரியர் ஆனபிறகும் (ரஜினியின் சிவாஜி படப் பாடல்கள் வெளிவந்த நேரம்) வடபழனியில் என் மனைவியை, மகன்களைச் சந்தித்துப் பேசியதுடன், அப்பா எப்படி இருக்கிறார் என்றும் கேட்ட அவரின் அன்பும் எளிமையும் என் மனத்தில் எப்போதும் நிலைத்து இருக்கும்.

காதல், தாலாட்டு, வலி ,அழுகை, ஆனந்தம் என நா. முத்துக்குமாரின் வரிகள் பலருக்கு எனர்ஜி டானிக். வார்த்தைகளை பூமாலையாக கோர்த்து பாடல் எழுதுவதில் வல்லவர். ஒரு உருவகத்தை அடுத்த கட்டத்திற்கு பாடல் வரிகளின் வழியாகக் கொண்டு சென்றதில் கண்ணதாசன, வாலி வழி பயணித்தவர்.

உன்னுடன் பேசுவதற்காகவே
எல்லோருடனும் பேசிக் கொண்டிருக்கிறேன்

உனக்கும் எனக்கும் பிடித்த பாடல்
தேநீர் கடையில் பாடிக்கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும் விட்டுவிட்டு
கேட்டுக் கொண்டிருக்கிறது நம் காதல்’
இப்படி, காதலை மிகவும் அழகான இனிமையான ஆழமான வரியில் புரிய வைத்த கவிஞர் நா முத்துக்குமார் . அவரின் பல பாடல்கள் ஒவ்வொன்றும் உணர்வின் பரிமாறலை, உறவுகளின் மேன்மையை, உறவுகளின் அருமை மற்றும் தேவையைப் புரிய வைத்தது.

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை.

இது வெறும் பாடல் வரிகள் இல்லை. பலரின் காதல் வலிகள்.

சிவா மனசுல சக்தி படத்தில்,

ஒரு கல் ஒரு கண்ணாடிஉடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

கண்கள் இரண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணையாகுமே.

திமிருக்கு மறுபெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே”

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை..
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
காதல் என்றால் பெண்ணே
சித்திரவதை தானே!
இவை காதல் செய்து பிரிந்தால் வரும் வலிகள்.
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய் தான் சேராதே
இப்படி” காதல் கொண்டேன்” படத்தில் பூக்களுக்கு அந்தஸ்து இல்லை என்று எழுதிய அவரே
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்றுதான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?
என “காதல்” படத்தில் மாற்றி எழுதி இருப்பார். அதாவது அந்தப் பூக்களையும் வண்ணத்து பூச்சிகள்தேடி வரும் என்ற அர்த்தத்தில். .
இவரின் பெரும்பாலான காதல் பாடல்கள் தத்துவ வரிகளைக் கொண்டிருக்கும் .காரணம் கேட்டதற்கு திரு .கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு கிடைத்தது போல் கதைக்களமும் ,பாடல் சூழலும் இப்பொழுதெல்லாம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் காதல் பாடல்களாகவே அமைந்துவிடுகிறது. அதனால் தான் காதல் பாடல்களில் தத்துவங்களை நான் படைக்க முயற்சித்தேன் என்றே சொல்லி இருப்பார். அவரின் அந்த முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது என்றே சொல்லலாம்.

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்..
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்.

இந்த வரிகளில் காதல் சோகம், தனிமை, ஏக்கம் இப்படி எல்லாம் நிரம்பி இருக்கும்.

மதராஸப் பட்டணத்தில்,
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே.
புலரும் காலைப் பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே.
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே..
காற்றின் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் 100 கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை.
.
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
எந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே
வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே.

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி

நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம்தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி

பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்.
ஒரு பாதி கதவு நீயடா
மறுபாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
உயிருக்கு உயிர் கொடுக்கும் வரிகள். காதலர்களை சேர்த்து வைக்கும் அழகிய வார்த்தைகள்.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை
அவள் பெரிதாக எதுவும் படித்ததில்லை
அவளைப் படித்தேன் ..முடிக்கவில்லை.

முதல் அடியிலேயே ‘இல்லை’,’ இல்லை’ என்ற எதிர்மறையோடு பயணிக்கும் வார்த்தைகளை நிரம்(ப்)பிய பாடல்.

சட்டுன்னு பார்க்கும் ஒரு நபரின் மேல் வரும் காதலை.

உன் பேரே தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கு ஒரு பெயர் வைப்பேன்.

சைவம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் எவ்வளவு அழகு ?

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு

இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே
நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே
என பட்டியல் போட்டு இயற்கையோடு இணைதல் அழகோ அழகு என்று கூறி இருப்பார். எவ்வளவு தீர்க்கமாய் யோசித்து எளிமையாய் இந்த வரிகளை எழுதி இருக்கிறார்.
காதலைப் பற்றி,
காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும்
சின்ன சின்ன தலைக்கனமே.
கன்னத்தில் அடிக்கும் அடி
முத்தத்தால் வேணுமடி ..
மற்றதெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி

அதேபோல, ரன் படத்தில் இடம்பெற்ற, இவரின் குறும்பான வரிகள் நம்மை கிச்சு கிச்சு மூட்டி புன்னகைக்க வைக்கும்.
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ!
Tea கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வர்ரான்னு தெரிஞ்சுக்கோ!

அய்யனாரு தான் ஆடு கும்பிட்டா
சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ!
ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா
Love marriage’ன்னு தெரிஞ்சுக்க

சிறுவயது நினைவுகளை அசைபோடும் இவரின் பாடல் அழகு.

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலைச்சோம்

அஞ்சு பைசா film வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி lens’ah வச்சு cinema காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

தாயைக் குறித்த பல பாடல்கள் தமிழில் முத்திரை பதித்த நிலையில் தந்தையின் சிறப்புகளைக் கூறி தனி முத்திரை பதித்த பாடல். தந்தையின் மீதான காதல் மிக அழகாய் சொல்லப்பட்டிருக்கும். வார்த்தை ஜாலம் இல்லாத வெகு இயல்பான வரிகள். இந்தப் பாடலைக் கேட்கும் போது. இதயத்தின் ஒரு மூலையில் அவரவர் தந்தையின் நினைவுகள் வருவதை யாராலும் மறுக்க முடியாது

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே

தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா

காயங்கள் கண்ட பின்பே
உன்னைக் கண்டேன்
கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் உன் முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்

வளர்ந்ததுமே யாவரும்
தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்

நமக்கெனவே வந்த நண்பன் தந்தை

தந்தை மகள் உறவின் சிறப்பை அந்த உணர்வை, உறவைத் தரும் இந்தப் பாடல் – எவ்வளவு அழகான ரசனையான கற்பனை?

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
அடி கோயில் எதற்கு?
தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று. (முத்தம் முறையற்ற செயல் என்ற பிம்பத்தை அடித்து தூள் தூளாக்கியது இந்தப் பாடலின் வரிகள்)
ஆரம்பத்தில் கவிதைகள் எழுதி வந்த அவரின் தூர் என்ற கவிதை , கணையாழி இதழில் வெளிவந்தபோது, எழுத்தாளர் சுஜாதா, அவரை மிகவும் ஸ்லாகித்தார்.

வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்…
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்…
எடுப்போம் நிறையவே!

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க

அதற்குப்பின்தான் முத்துக்குமாருக்கு, இலக்கிய உலகின் கௌரவமும் அங்கீகாரமும் கிடைத்தது எனலாம். தொடர்ந்து பல கவிதைகள், தொகுப்புகள் என வந்தன.

காதலித்துக் கெட்டு போ.
அதிகம் பேசு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி..
கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்து கொள்கிறார்.
அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன!
புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் , மருதகாசி, கண்ணதாசன், வாலி, ஜி இராமநாதன், கே வி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற கலைஞர்கள் இவர்களுடன் சத்தான கதைகள் கொண்ட பீம்சிங், பந்துலு, ஶ்ரீதர், பாலச்சந்தர் போன்ற இயக்குனர்களின் படங்கள் வந்த காலங்களுக்கு நேர் மாற்றாக வந்த திரைப்படங்களில் கூட, நிறைய அர்த்தம் பொதிந்த பாடல்களைத் தமிழுக்குத் தந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவர் மறைந்தாலும் அவர் வரிகள் யாராலும் மறக்க முடியாது
சீமானால் அறிமுகப்படுத்தப்பட்ட நா. முத்துக்குமார் செல்வராகவனால் அடையாளப்பட்டார். செல்வராகவனின் காதல் கொண்டேனில் ஆரம்பித்த அவரது பயணம் அவர் இறந்த பிறகும் நீண்டுகொண்டே செல்கிறது. அவரது வரிகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே!
அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி