சென்ற இதழில் ……………….

“முனியா ! முனியா ! தேங்கா லாரியை சரிக்காதே ! அதுல ஒரு ஆட்டுக்குட்டி கிடக்கு! ஏறிப்பாரு !”
“ராவுத்தர் ஐயா! அது ஆட்டுக்குட்டி இல்லே! பொடிப்பய! ரணகளத்தோட கிடக்கான்!”
“உசிரு இருக்குதா பாரு!”
” இருக்குது ஐயா! “
“அப்படியே அசங்காமத் தூக்கிட்டு போய் நம்ம கடையில படுக்கவை! மூஞ்சிலே தண்ணியத் தெளி!யுனானி டாக்டர் ஜம்மக்காவை கூட்டியா!”
இனித் தொடர்ந்து …………….
சார்! கேட்கவே கஷ்டமா இருக்கு! ஏன் சார் அப்படி? யார் சார் உங்களுக்கு இத்தனைக் கொடுமை செஞ்சது? நல்லூரில உங்க சொந்த ஊரில இப்படிச் செய்ய நீங்க என்ன பண்ணினீங்க ?
இந்த பாரு ! உன்னை ரைட்டர்ன்னு சொன்னதற்குச் சும்மா நொய் நொய்ன்னு போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் மாதிரி கேள்வியெல்லாம் கேக்காதே! நான் சொல்றதை எழுதிக்கோ ! பின்னாடி வேற மாதிரி ப்ளோவில விலாவாரியா வந்தாலும் வரும்.
ஒகே ஒகே! பின்னாடி குறும்படத்தில் இங்கே ஜம்ப் கட் பண்ணிடலாம்.
அதென்ன பி டி மாஸ்டர் கிட்டேயே எதோ ஜம்ப் அப்படீங்கற ! லாங் ஜம்ப் தெரியும் ஹை ஜம்ப் தெரியும். ஹால்ப் ஸ்டெப் அண்ட் ஜம்ப் அதுக்குப் புதுப் பேர் டிரிப்பிள் ஜம்பும் தெரியும். அதுக்கு மேலே ” ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்” சந்திரபாபு பாட்டு தெரியும் ! இதென்ன புதுசா ஜம்பர் கட்டு?
சார்! நீங்க சொல்ற குங்குமப் பூவே பாட்டை நானும் ரீமிக்ஸ் பண்ணியிருக்கேன். நல்ல ஹை எனர்ஜி சாங் அது. அதில ஸ்வெட்டர் மாதிரி பசங்களும் பொண்ணுங்களும் ஜம்பர் போட்டுப்பாங்க! இப்ப எல்லாம் அந்த ஜம்பர் என்கிற பேர் அதிகம் வர்றதில்லே! நான் சொல்ல வந்தது வேற சார்! ஜம்பர் கட் இல்லே ! “ஜம்ப் கட் ! எடிட்டிங் டெக்னிக் !
கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு ?
“அவர் மட்டும் பாதிப் பாதியா சொல்வார்! நமக்குப் புரியுதோ இல்லையோ கேட்டுத்தான் ஆகணும். அனா அவருக்குப் புரியலைன்னா புரிய வைக்கற மாதிரி சொல்லணும். என்ன கொடுமை சரவணன் சார்” என்று நினைக்கும் போது மனசு ஜம்ப் கட் ஆகி வைஜயந்தி தெரிந்தாள்.
அவளுக்காக எந்தக் கொடுமையை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம். அவளை வைச்சு அந்தக் குங்குமப்பூவே பாட்டை டான்ஸ் ரி மிக்ஸ் வீடியோவா எடுத்தா….
சார்! ஜம்ப் கட் என்கிறது சினிமாவில நேரத்தை முன்னால கொண்டு போறதுக்கு பயன்படுத்தற ஒரு திடீர் மாற்றம். காட்சிகள் தொடர்ந்து போகாம திடிர்னு நாலு ஸ்டெப் தாண்டிப் போறது ! அதுக்குப் பேர் ஜம்ப் கட்! அது பாக்கவறவங்களை திடுக்கிட வைக்கும். தூங்கிக்கிட்டுப் படம் பாக்கவறங்கள எழுப்பி அவங்க கவனத்தை ஈர்க்கும்.
என் போனில இந்த வீடியோவைப் பாருங்க ! இதில என்னோட பிரண்டு ஒருத்தர் ஜம்ப் கட்டுன்னா என்னா அப்படிங்கறத விளக்கமா சொல்றாரு.
வெரி குட் ! இது ரொம்ப நல்லா இருக்கே! இந்த மாதிரி நாலு வீடியோ பாத்தா போதும். நானே படத்தை டைரக்ட் பண்ணலாம் போல இருக்கு ! அப்ப உன்னோட தயவு தேவையாயிருக்காது!
சரி சார்! நீங்களே கதையை எழுதி டைரக்ட் பண்ணுங்க ! நான் வேற வேலையைக் கவனிக்கிறேன்!
அட ரைட்டர் தம்பி! என் இப்படி கோவிச்சுக்கற! உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா?
என் சார்! வைஜயந்தி இருக்காளே! உங்கள கவனிச்சுக்க!
அதுக்கு ஏது தம்பி நேரம் ! எப்பப்பாத்தாலும் எங்கேயோ மோட்டுவளையைப் பாத்துகிட்டு உட்கார்ந்திருக்கும்! நானும் அப்படி மோட்டுவளையைப் பாத்து இருந்தவன்தானே ! எனக்குத் தெரியாதா? கால காலத்தில அதுக்கு ஒரு கால்கட்டைப் போட்டுட்டேன்னா அதுக்கும் நிம்மதி! எனக்கும் நிம்மதி!
இந்த சமயத்தில அவர் கிட்டே உண்மையைச் சொல்லிடலாமான்னு நெஞ்சு படக் படக்குன்னு அடிச்சுக்கிது. இந்த ஆளு எப்ப எப்படி நடந்துப்பார் என்ன பேசுவார் என்கிறது அவருக்கே தெரியாது. அவர் சட்டுன்னு ஏதாவது முடிவெடுத்திட்டார்னா என்ன பண்ணறது?
கொஞ்சம் அடக்கி வாசிக்க முடிவு செஞ்சேன்!
சார் ! இப்படி செஞ்சா என்ன?
ஜம்ப் கட் ஒரு எடிட்டிங்தான். படத்தை அப்படியே நான் லீனியரா எடுத்தா என்ன?
உனக்குப் புரியாம நான் பேசறேன்னு போட்டியா எனக்குப் புரியாததைப் பேசறதுன்னு முடிவு கட்டிட்டியா?
அப்படி இல்லே சார்!
என்ன லொள்ளை! அதுக்கு ஒரு வீடியோ காட்டி இதுவரைக்கும் நீதான் சீனியர் இனிமே நான்தான் சீனியர் அப்படின்னு சொல்லப் போறியா? ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ! இந்தப் பி டி மாஸ்டர்தான் எப்பவும் சீனியர்! என்னோட பிரம்பே சொல்லும் நான் தான் சீனியர்!
சார் அது சீனியர் இல்லே ! லீனியர்! நீங்க என்னிக்கும் சீனியர்தான் அடுத்த வருஷம் ரிடையர் ஆகப் போறீங்க! நம்ம ஹெச் எம்மே உங்களைவிட ஜுனியர். நான் சொல்லவந்தது நான்-லீனியர். போன வாரம் நாம ரெண்டுபேரும் விஜய் சேதுபதி நடிச்ச மகாராஜா படம் பாத்தோமில்ல!
பாத்தோமா? அதில கமலஹாசன் இல்லே ?
சார் அது விக்ரம்! போன வருஷம் பாத்தது!
ஆமாம் ! அதில கடைசில அவன் பிள்ளையே அவனே சுட்டடுக் கொள்வானே!
சார் சார்! நீங்க ஜெயிலரையும் இதையும் கன்பியூஸ் பண்ணிக்கிறீங்க!
எதோ ஒரு படம்! இப்ப வர்ற படம் ஒன்னும் புரியமாட்டேங்குது. அதனாலதான் எல்லாரும் நாலைஞ்சு வாட்டி பாத்து படத்தை ஓட வைக்கரான்களோ தெரியலை!
சரி மகாராஜாவை விடுங்க சார்! நான்- லீனியரையும் விடுங்க! முதல்ல கதையை ரெடி பண்ணுவோம். படம் எடுக்கும்போது லீனியர் சீனியர் ஜம்பர் பம்பர் எல்லாம் பாத்துக்கலாம்.
இப்போ சொன்னியே இது கரக்ட் ! நம்ம கதைக்கு வருவோம்! அந்தக் கொத்தவால் சாவடியில என்னோடப் பள்ளிப் படிப்பு ஆரம்பிச்சுது. ராவுத்தர் கடையில ராத்திரி மூட்டை தூக்கி பகல்ல பள்ளிக்கூடம் போவேன்! படிப்பு முதல்ல எனக்கு சுத்தமா பிடிக்கலை! ஆனால் ராவுத்தர் ஐயா என்னை வேலை செய்ய வேண்டாம்னு தான் சொன்னார் . ஆனால் நானாத்தான் அவர் கடையில வேலை செஞ்சேன்.
ஏன் சார் ! அந்த ராவுத்தர் உங்களை உங்க வீட்டில சேர்க்க முயற்சியே பண்ணலையா?
நான் கண்ணு முழிச்சு பாக்க ஒரு வாரம் ஆச்சு. அதுக்குள்ளே அவரே நேரடியா நல்லூர் போயிட்டு விஷயம் எல்லாம் தெரிஞ்சிட்டு வந்தார். அதுக்கப்பறம் என்னை அங்கே கொண்டுபோய் விட அவருக்கு மனசில்லே!
என் சார்! என் சார்! என்ன நடந்தது நல்லூரில? உங்கம்மா அப்பா என்ன பண்ணுனாங்க? உங்களுக்கு ஏன் அப்படி அடி பட்டது? இதைத் தெரிஞ்சுக்காம என்னால இன்னிக்குத் தூங்க முடியாது!
அதைச் சொன்னேன்னா என்னால தூங்க முடியாது.
ப்ளீஸ் சார் ப்ளீஸ்?
“வேண்டாம் என் கதை வேண்டாம். இலக்கியம் வேண்டாம் சினிமா வேண்டாம் எனக்கு இனிமே ஒண்ணுமே வேண்டாம் ! அதோ அந்த மூலையில இருக்கிற கிரிக்கெட் பேட்டால என்னை சாவற வரைக்கும் அடிச்சிட்டுப் போயிடு! நான் செஞ்ச பாவத்துக்கு அது கூட ஒரு சாதாரண தண்டனை! “
தன் கைகளால் முகத்தில் மடால் மடால் என்று அடித்துக் கொண்டார். நான் தடுத்ததும் அவர் கண்களிலிருந்து கண்ணீர் கடகடவென்று கொட்டிக்கொண்டிருந்தது. அந்தச் சோக வெறியில் அவருடைய துயரக் கதையை நாலு வரிகளில் சொன்னார்.
அந்த நிகழ்ச்சி என் கண் முன்னே அப்படியே விரிந்தது. இதைவிடப் பயங்கரமான ஒன்றை என் வாழ்க்கையில் கேட்டதில்லை திரையில் கூட பார்த்ததில்லை ! அவரிடம் கேட்டிருக்க வேண்டாமோ என்று எனக்குத் தோன்றியது.
கோபமும் ஆங்காரமும் தெனாவெட்டும் இருந்த பி டி மாஸ்டர் இதயத்துக்குள்ளே இப்படி ஒரு பயங்கர சோகம் இருக்குமுன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை.
(அடுத்த இதழில் ….)
Unicode
Powered by MediaWiki
Contact Us
Terms & Conditions
