ஓடிஸியஸு க்குத் எத்தனைத் துன்பங்கள்!
அருகில் இருப்பவள் ஆருயிர் மனைவி! இலியட் போரில் வெற்றி வீரனாகத் திகழ்ந்த அவன் ஒலிம்பஸ் தேவதைகளின் சாபத்தால் பல ஆண்டுகள் சொந்த ஊருக்குத் திரும்பி வர இயலாத நிலை.
மனைவியையும் மகனையும் தா நாட்டையும் பார்க்கவேண்டும் என்பதற்காக விடாமல் தொடர்ந்து போராடி இன்று தன் அரண்மனைக்கே வந்திருக்கிறான். ஆனாலும் ஒரு பிச்சைக்காரனைப் போல வேடமிட்டுத் திரியும் கேவல நிலை அவனுடையது. மனைவியிடம் கூட உண்மையைச் சொல்ல முடியாத நிலை!
தான் உயிரோடு இருக்கிறோம் என்று தெரிந்தால் தன் குடும்பத்தைக் கொலை செய்யத் தயங்காத பிரபுக்களை வெல்லாமல் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது பேராபத்து என்ற அதீனி தேவியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு இருந்தான் ஓடிசியஸ்.
அதுவும் மனைவி பெனிலோப்பே தன்னுடன் ஓடிசியஸ் இறந்துவிட்டானா என்று விசாரிக்கும்போது அவன் உள்ளம் உடைந்தது.
அவளுக்காகப் பல கற்பனைக் கதைகளைக் கூறினான்.
தான் அவள் கணவன் ஓடியசைச் சமீபத்தில் சந்தித்ததாகவும் அவன் நிறையப் பரிசுப் பொருட்களுடன் மறுநாள் கட்டாயம் தன் அரண்மனைக்கு வந்து மனைவி மக்களைச் சந்திப்பான் என்று உறுதி கூறினான்.
தான் எப்படிப் பிரபுக்கள் வலையில் விழாமல் தப்பித்தேன் என்பதைக் கேட்பவரைக் கலங்க வைக்கும் குரலில் மெதுவாக அவனிடம் எடுத்துரைத்தாள்.
அப்போது பெனிலோப் தான் தீட்டியிருக்கும் திட்டம் பற்றி அவனிடம் விளக்கினாள்.
” நன்றாகக் கேளுங்கள் விருந்தினரே! நாளை என்னைத் திருமணம் செய்ய ஆசைப்படும் அந்தக் கழுகுக் கூட்டத்திற்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.ஓடிசியஸ் இங்கே இருக்கும் போது பன்னிரண்டு மூங்கில் குழாய்களை வரிசையாக நிற்கவைத்து தன்னுடைய சிறப்பு வாய்ந்த வில்லினால் ஒரே அம்பு எய்தி அத்தனை மூங்கில்களையும் துளைத்துப் போகும்படி செய்வார். அதேபோல் அவருடைய அந்தக் கனமான வில்லை எடுத்து நாணேற்றி பன்னிரண்டு மூங்கில்களையும் துளைப்பவரையே நான் மணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவிக்கப் போகிறேன். இந்தக் கழுகுக் கும்பல் பிரபுக்கள் எவனாலும் அதைச் சாதிக்க முடியாது. நீங்கள் சொல்வது போல என் கணவர் நாளை வருவார் என்றால் அவரால் மட்டுமே அது முடியும். இதுதான் எனக்குக் கிடைக்கப்போகும் கடைசி சந்தர்ப்பமாகக் கருதுகிறேன்! நான் நெருப்பின் மீது நிற்பதைப் போல உணருகிறேன் ” என்று கண்ணீருடன் கூறினாள் .
” சபாஷ்! இதுதான் சரியான போட்டி! நாளை ஓடிசியஸ் நிச்சயம் வந்து போட்டியில் வென்று உங்களை மகிழ்விப்பார் ! இது சத்தியம்!!” என்று உவகையுடன் கூறினான் பிச்சைக்காரன் வேடத்தில் இருக்கும் ஓடிசியஸ்.
அவன் பேச்சால் ஆறுதல் அடைந்த பெனிலோப் தன் தனியறை சென்று உறங்கப் போனாள் .
அவள் போனதும் ஓடிசியஸ் தேவதேவன் ஜியசிடம் மனமுருக வேண்டிக் கொண்டான்.
மறுநாள் காலையிலேயே பிரபுக்கள் அனைவரும் கூட்டமாக வந்தனர். தங்களில் ஒருவனை பெனிலோப் அன்று கட்டாயம் மணக்க வேண்டும் என்ற மமதையில் இருந்தனர். வரும்போதே அவர்கள் அட்டகாசம் எல்லை மீறியதாக இருந்தது.
அன்றைக்கு ஓடிசியசின் மகன் டெலிமாக்ஸ் மிகவும் தைரியத்தில் இருந்தான். தன் தந்தையை அழைத்துக் கொண்டு பிரபுக்களுடன் அமரச் செய்தான். ‘ இந்த மாளிகை சத்திரமோ சாவடியோ இல்லை. எங்கள் இல்லம். என் தந்தையின் அரண்மனை. இவர் எங்கள் விருந்தாளி. ஐவரும் உங்களுக்குச் சமமாக என் உங்களைவிட விய உயர்வான இடத்தில் இருப்பார் என்று கூறி அவருக்குத் தானே உணவு வகைகளைப் பரிமாறினான்.
பிரபுக்கள் அனைவரும் உரத்த சிரிப்புடன் ” இன்னும் கொஞ்சம் நேரத்தில் பெனிலோப் திருமணம் முடித்ததும் இவனை அடித்து விரட்டத்தானே போகிறோம். அதுவரை இவன் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ” என்று இருந்தனர்.
“அது சரி! உன் அம்மாவை அழைத்து வா!” என்று எக்காளமாகக் கூறினார்கள்.
அப்போது அங்கே பெனிலோப் பிரவேசித்தாள் . அவளைப் பார்த்ததும் கல்லைக் குடிக்க விரும்பிய நரி போல் அனைவரும் அவளையே பார்த்தனர்.
அனைவரையும் அவள் தன்னுடைய அரண்மனை அத்தாணி மண்டபத்திற்கு வரும்படி அழைத்தால். ஓடிசியஸ் உட்பட அனைவரும் அந்த நீண்ட மண்டபத்திற்குள் சென்றனர். அங்கே வில் போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தன.
கணீரென்ற குரலில் பெனிலோப் பேசத் தொடங்கினாள். !
” என் வணக்கத்திற்குரிய கணவரின் வில்லும் அம்பும் இவை. உங்களில் எவர் இந்த சக்தி வாய்ந்த வில்லை நாணேற்றி அந்தப் பன்னிரண்டு மூங்கில்களையும் அம்பால் துளைக்கிறீர்களோ அவரைத் திருமணம் செய்துகொண்டு இந்த இல்லத்தை விட்டு வெளியேறுகிறேன்! இது ஏன் உறுதியான முடிவு!! “
பிரபுக்கள் ஒவ்வொருவராக முன்வந்து அதனை வளைக்க முயற்சித்தனர். அவர்களால் முடியவில்லை.
” எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்! நானும் இதை வளைத்து நாணேற்ற முயலுகிறேன்” என்றான் பிச்சைக்காரனாக வந்து இப்போது விருந்தினனாக மாறு வேடத்தில் இருக்கும் ஓடிசியஸ்.
பிச்சைக்காரன் போட்டியில் கலந்துகொள்வதா? அவனை அடித்துத் துரத்துங்கள் என்று பிரபுக்கள் அனைவரும் ஆத்திரக் குரலில் கூறினார்கள்.
“இது எங்கள் அரண்மனையில் நடைபெறும் போட்டி! இவர் யார் கலந்து கொள்ள வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்கவேண்டும்” என்று டெலிமாக்ஸ் வீரமாகக் கூறினான்.
டெலிமாக்ஸின் தைரியமான வார்த்தைகள் அவன் அன்னைக்கே ஆச்சரியத்தை ஊட்டியது.
ஓடிசியஸ் தான் மிகவும் போற்றிப் பாதுகாத்து வந்த அந்தப் பழைய வில்லைப் பாசத்தால் மெல்ல வருடினான். அதனைச் சுலபமாக நாணேற்றி மூங்கில் குழாய்கள் வழியாக அம்பை சரியாக எய்துவிட்டான்.
ஜீயஸ் கடவுள் இடி முழக்கம் போல் ஒரு ஓசையை ஏற்படுத்தினார்.
டெலிமாக்ஸ் தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு தந்தைக்கு ஆதரவாகப் பாய்ந்தான்.
ஓடிசியஸ் உடனே தன்னுடைய அங்கியை எடுத்து எறிந்தான். தன் மாறு வேடத்தையும் களைத்தான். தன்னைக் கொல்ல வந்தப் பிரபுக்களின் தலைவன் மீது தன்னுடைய கூர்மையான அம்பைப் பாய்ச்சினான். அவன் தலை அறுந்து விழுந்தது. மற்ற பிரபுக்கள் எல்லாரும் திகைத்து நின்றனர்.
ஓடிசியஸ் அத்தனைப் பிரபுக்களையும் பார்த்து வீர முழக்கம் இட்டான்
” நாய்களே! நான் டிராய் நாட்டிலிருந்து திரும்ப வரமாட்டேன் என்றுதானே நினைத்தீர்கள்? நான் உயிரோடு இருக்கும்போதே ஏன் மனைவியைத் திருமணம் செய்ய ஆசைப்பட்ட உங்கள் அனைவரையும் இந்த மரணக் கயிற்றால் பிணைக்கப் போகிறேன்.”
ஓடிசியஸ் திரும்ப வந்துவிட்டான் என்றதைக் கேட்டதும் பிரபுக்களுக்கு நடுக்கம் வந்தது. இருந்தபோதிலும் தாம் அனைவரும் சேர்ந்து அவனைக் கொன்று விடலாம் என்று எண்ணினார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் அணி திரளும் முன் ஓடிசியசிடமிருந்து பறந்து வந்த அம்புக் கணைகளிலிருந்து ஒருவனும் தப்ப இயவில்லை. வாளை எடுத்துக் கொண்டு அவன் மீது பாய வந்த பிரபு ஒருவனை டெல்லிமாக்ஸ் தன்னுடைய வாளால் வெட்டிக் கொன்றான். டெலிமாக்ஸ் ஏற்பாடு செய்திருந்த மற்ற வீரர்களும் தங்கள் வாட்களுடன் ஓடிசியசுக்கு ஆதரவாக வந்தனர்.
இருப்பினும் பிரபுக்களில் ஆறுபேர் அவனுடைய அம்பிற்குத் தப்பி அவன் மீது வேலை எறிந்தனர். ஆனால் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அதீனா தேவி அவற்றிலிருந்து ஓடிஸியஸாய்க் காப்பாற்றினாள். இன்னும் சில பிரபுக்களின் ஆதரவு வீரர்கள் ஓடிசியஸை நெருங்கி வரும்போது அதீனா தேவி ஒரு பெரிய வலியை உண்டாக்கி அவர்கள் கண்களைக் கூச வைத்தால். அந்த இடைவெளியில் ஓடிசியஸ் அவர்களை வெட்டி வீழ்த்தினான்.
அந்த மண்டபத்தில் திருமணத்திற்காக படோடமான ஆடை அணிகலன்களுடன் வந்த அத்தனைப் பிரபுக்களும் அங்கே மாண்டு கிடந்தனர்.
கையில் வில்லுடனும் வாளுடனும் ஓடிஸியஸ் வீர புருஷனாகக் காட்சி அளித்தான்.
ஓடிவந்த பெனிலவப் அவனை ஆறத் தழுவி அவன் மார்பில் மயங்கிச் சாய்ந்தாள்.
அவளை அணைத்துக் கொண்ட ஓடிசியஸ் , தான் மகனிடம் , “டெலிமாக்ஸ்! நான் ஆபத்துக்கள் முடியவில்லை. அங்கு வராத மற்ற பிரபுக்களும் மற்ற அவர்கள் ஆதரவு வீரர்களும் இங்கு வரலாம். நான் அதற்குள் தப்பி அருகில் இருக்கும் காட்டிற்குள் செல்லவேண்டும். இங்கு திருமணம் நடக்கிறது என்ற உணர்வை நம் வேலைக்காரர்கள் ஏற்படுத்தட்டும். அந்த அவகாசம் நமக்குத் தப்பிச் சென்று அவர்களுடன் போரிடத கேவையான அவகாசத்தைத் தரும். புறப்புடுங்கள்” என்று கூறினான்.
தான் மனைவியைத் தூக்கிக் கொண்டு அவள் மயக்கத்தைத் தெளிவிக்கத் தனது படுக்கை அறைக்குச் சென்றான் ஓடிசியஸ். இருபது ஆண்டுகள் கழித்துத் தானே வடிவமைத்த தனது படுக்கையில் தன்னை உயிருக்கு உயிராக நேசித்த உத்தமி மனைவியைப் படுக்க வைத்தான். அவளது இதழில் தான் இதழைப் பதித்தான் .அந்த இதழ் ஸ்பரிசத்தில் அவள் மயக்கம் தெளிந்தாள். தன் காதல் கணவனைத் தான் கைகளால் ஆசைதீரத் தழுவினாள். அந்தக் காதல் மயக்கத்திலேயே அவர்கள் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கும்படி அதினா தேவி நேரத்தைக் கூட்டினாள்.
” பெனிலோப்! நீ இங்கேயே இரு! நான் போய் கிராமத்தில் இருக்கும் என் தந்தையையும் அவரது ஆதரவாளர்களையும் அழைத்து வருகிறேன்.”
“இப்போதுதானே வந்தீர்கள்? அதற்குள் போகவேண்டுமா? “
” நாம் இனி எப்போதும் இணைபிரியாமல் இருக்க இப்போது நாம் கொஞ்சக் காலம் பிரியவேண்டும்” என்று அவளை அணைத்து ஆறுதல் கூறிப் புறப்பட்டான் ஓடிசியஸ்.
அதற்குள் ஓடிசியஸ் அரண்மனையில் நடந்த கொலைகள் பற்றிக் கேள்விப்பட்ட பிரபுக்களின் ஆதரவாளர்கள் ஒன்று கூடினர். இத்தாக்காவின் குடி மக்கள் அனைவரையும் ஒன்று திராட்டினார். தங்கள் தலைவர்களை அநியாயமாகக் கொன்ற ஓடிசியஸையும் அவன் குடும்படிக்கட்டினரையும் கொல்லவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மக்களும் அவர்கட்குக் கோரிக்கையை ஏற்று ஓடிஸியஸ் அரண்மனை நோக்கி வந்தனர்.
அப்போது அத்தாணி மண்டபத்தில் ஆயுதங்கள் தந்து ஓடிஸியசுக்கு உதவிய ஓடிசியஸீன் உற்ற நண்பன் அந்தக் கூட்டத்தைச் சந்தித்தான்.
“ஒரு தனி மனிதனால் இத்தனை பேரைக் கொள்வது முடியுமா? இது அனைத்தும் ஜீயஸ் தேவனின் கண்ணுக்குத் தெரியாத கரங்கள்தான் செய்திருக்கின்றன ” என்று அவர்கள் மனத்தில் பயத்தின் விதையைத் தூவினான்.
மக்கள் கூட்டத்திலிருந்த முதிய தலைவர் ஒருவரும், ” மாற்றான் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் சொத்துக்களை எல்லாம் சூறை யாடி ஓடிஸியாஸீன் மனைவியையும் அவமானப் படுத்தியது தவறு ! அவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்களே! அவர்களுக்கு ஆதரவாக நாம் வருவதுதான் அநீதி! அதுமட்டுமல்லாமல் நம் அரசர் ஓடிஸியஸ் வந்திருக்கிறார் ! அவரை வாழ்த்தி வணங்க வேண்டும் ” என்றவுடன் பெரும்பாலான மக்களும் வீரர்களும் “ஓடிஸியஸ் வாழ்க ‘ என்று முழக்கமிட்டனர்.
பிரபுக்களுக்கு ஆதரவாக வந்த அவர்கள் வீரர்களையும் உறவினர்களையும் மக்கள் கூட்டம் சிறைபிடித்தது.
ஓடிசியஸ் பெனிளோப் டெலிமாக்ஸ் அனைவரும் அவர்கள் முன் வந்து நின்றனர்.
சர்வ வல்லமை பொருந்திய அதீனி தேவியும் அவர்கள் முன்னே வந்து ” இத்தாக்கா மக்களே! டிராய் போரில் வெற்றிக்குக் காரணமான உங்கள் மன்னன் ஓடிசியஸ் இருபது ஆண்டுகள் கழித்துத் தான் மனைவியையும் மகனையும் நாடு மக்களையும் சந்திக்கிறார்! அவரது புகழ் இந்த உலகம் உள்ள அளவு இருக்கும். அவரது கதை உலக இதிகாசங்களில் ஒன்றாகும் ! இனி இந்த உலகில் அமைதியும் அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே நிலவ வேண்டும். அதற்கு ஏன் நல் ஆசிகள் ” என்று கூறி அனைவரையும் வாழ்த்தி மறைந்தாள்.
(ஹோமரின் உலக இதிகாசமான ‘தி ஓடிஸி’ மகா காவியம் இத்துடன் முற்றுப்பெற்றது)
இதை எழுதுவதற்கு மிகவும் உதவிய ‘ஹோமர்’ புத்தகத்திற்கும் அதனை எழுதிய மாபெரும் எழுத்தாளர் சிவன் அவர்களுக்கும் அதை வெளியிட்ட பிரிதிலி பதிப்பகத்திற்கும் மற்றும் கூகிளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி !! – எஸ் எஸ் )
