Indian Kids Using Tablet Photos and Images & Pictures | Shutterstock

குழந்தைகளே, கொஞ்சம் நில்லுங்கள்……

‘நிலா நிலா ஓடி வா’ என்ற பாட்டுக்கோ, ‘ரெட்டக் கண்ணன் வர்றான் பாரு’ என்ற பயமுறுத்தலுக்கோ இன்றைய குழந்தைகள் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. டி.வி., ஐ பேட், செல் என ஏதாவது ஒன்றில் கார்ட்டூனையோ, ரைமையோ (Rhymes) காட்டினால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளே இன்று அதிகம். அவசரமாகக் காலை வேளையில் அலுவலகம் கிளம்பும் நேரம், இந்த உத்தி வசதியாக இருப்பதால், பெற்றோரும் இந்த ‘அடிமைப் படுதலு’க்குத் தயாராக இருக்கிறார்கள்! பெரியவர்கள் சீரியல் பார்க்கும் நேரத்தை விட, இன்றைய குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கும் நேரம் அதிகம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

சிறிது வசதியான குழந்தைகள் கையில் சுலபமாக ‘ஐ பேட்’ அல்லது ‘விடியோ கேம்’  இருப்பதைப் பார்க்கிறோம். தங்களுக்குப் பிடித்தமான பல கார்ட்டூன் தொடர்கள் – ‘மினியன்’, ‘பாவ் பட்ரோல்’, ‘பெப்பி பிக்’ போன்றவை – விரல் முனையில் இருக்கின்றன. சின்ன வயதிலேயே இந்த ‘போதை’ அச்சுறுத்துவதாக உள்ளது.

வித்தியாசமாக, பள்ளிக்கூட ரைம்ஸ், கார்ட்டூன்களாகக் கிடைக்கின்றன – ஏபிசிடி, கலர்கள், எண்ணிக்கை என கார்ட்டூகள் மூலம் சொல்லப்படுகின்றன. கற்றலின் ஒருவகை என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும், இதிலும் குழந்தைகளின் மன ஆரோக்கியம் கெடுவதைத் தடுக்கமுடியாது.

அந்தக்கால அம்மா, பாட்டிகள் போல, கதை சொல்லிக்கொண்டே சோறு ஊட்டும் பழக்கம் அறவே வழக்கொழிந்து விட்டது. இன்றைய பாட்டிகளுக்கே (தாத்தாக்களுக்கும்தான்) அந்தக்கால குழந்தைக் கதைகள் தெரியுமா என்பது சந்தேகமே. சாப்பிடுவதற்கு, மதியம் பொழுது போக்குவதற்கு, இரவு தூங்கும் முன் என்று கதைகள் கேட்கும் குழந்தைகள் இன்று இல்லை!  குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலையாக, ப்ரொஃபெஷனாக மாறிவிட்டது! பல குழந்தைகளுக்கான கதை சொல்லிகள் இன்று காணக் கிடைக்கிறார்கள்.

சிறார்களுக்கான பாடல்கள், கதைகள், நீதி நூல்கள் எல்லாம் ‘சிறுவர் இலக்கியம்’ எனப்படுகின்றன.

சிறுவர் இலக்கியத்தின் முதல் நூல், 16 ஆம் நூற்றாண்டில் ஒளவையார் எழுதிய ஆத்திச்சூடி எனக் கொள்ளலாம். பின்னர் கொன்றை வேந்தன், நல்வழி, கல்வி ஒழுக்கம் எனப் பல நூல்கள். அதிவீரராம பாண்டியனாரின் ‘வெற்றிவேற்கை’, உலகநாதரின் ‘உலக நீதி’ போன்றவை பின்னால் வந்தவை. கதைகளை விட இவை பொதுவான நீதி நூல்களாகவே இருக்கின்றன. பள்ளிக்கூடப் பாடங்களில் கூட இவை இப்போது தென்படுவதில்லை என்பது சோகமே.

‘நிலா நிலா ஓடி வா’, ‘கை வீசம்மா கை வீசு’, ‘சின்னச் சின்ன எறும்பே’ போன்ற பாடல்கள் அன்று குழந்தைகளுக்காகவே பாடப்பட்டன. கவிமணி தேசீய விநாயகம் பிள்ளை, மகாகவி பாரதியார் போன்றவர்கள் ‘பாப்பா பாடல்கள்’ இயற்றியுள்ளார்கள். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா (1922 – 1989) வியக்கவைக்கும் அளவிற்கு சிறுவர் இலக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளை ஊக்குவித்தல், புத்தகக் கண்காட்சி, நூல் அறிமுகம், கதை சொல்லல் எனப் பல தளங்களில் சிறுவர் இலக்கியத்திற்குத் தொண்டு ஆற்றியுள்ளார். ‘சக்தி’ வை கோவிந்தன், ‘பாப்பா மலர்’ முத்துநாராயணன், ‘பாலர் மலர்’ வெ.சு.ப. நடேசன் போன்றோரும் சிறுவர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள்.

சிறுவர்க்கான சிறுகதை இலக்கியத்தில், பரமார்த்த குருவும் சீடர்களும், அக்பர் பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், சிறுவர் நீதிக்கதைகள், இராமகிருஷ்ணர் குட்டிக் கதைகள், வாண்டு மாமா, தமிழ்வாணன் சித்திரக் கதைகள் போன்றவை கிடைக்கின்றன.

அன்றைய சிறுவர் பத்திரிகைகள், கண்ணன், அம்புலிமாமா (விக்ரமனும் வேதாளமும் போன்ற கதைகள் சாகா வரம் பெற்றவை), கோகுலம், ரத்ன பாலா போன்றவை மிகவும் பிரபலமானவை. இன்றும், சில தினசரிகளின் வார இணைப்பாக ‘சிறுவர் மலர்’கள் கிடைக்கின்றன. 

இன்றைய அவசர காலகட்டத்தில், சிறுவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம் – அவர்களுக்கான கதைகளை நாள்தோறும் ஏதாவது ஒரு நேரத்தில் படிப்பதோ, சொல்வதோ நல்லது. சிறுவர்களுக்கான டிவி, தமிழில் ரைம்ஸ், அவைகளுடன் கார்ட்டூன்கள், கதைகள், நாடகம், கதை சொல்லுதல், கதை வாசித்தல் போன்றவற்றை சுவாரஸ்யத்துடன் செய்ய வேண்டும். புராண, இதிகாசக் கதைகளையும், நீதிக் கதைகளையும் எடுத்துச் சொல்லி, சிறுவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். 

பெ.நா.அப்புஸ்வாமி போன்றவர்களின் அறிவியல் கதைகளையும், கட்டுரைகளையும் சிறுவர் அறியும் வண்ணம் பாடங்களிலும், ஒலி – ஒளி வடிவ தளங்களிலும் சேர்க்க வேண்டும். அறிவியல் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை, சின்னச் சின்ன கதை வடிவில் சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கம்ப்யூட்டர், இண்டர்நெட் போன்றவற்றின் செயல்பாடுகளையும், நல்லவை தீயவை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

ஆங்கிலத்தில் சிறார்களுக்கான புத்தகங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. நவீன அறிவியல் தகவல்களைக் கூட, சித்திரங்களுடன், கதை வடிவில் எளிதில் புரியும்படி சொல்கின்றன. புராண இதிகாசக் கதைகள், அழகிய வண்ணச் சித்திரங்களுடன் கிடைக்கின்றன (அமர் சித்ர கதா). 

சமீபத்தில் காந்தலட்சுமி சந்திரமெளலி அவர்களின் “Summer camp at the zoo” and other stories for children புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன். அருமையான கதைகள் – சிறுவருக்கான களங்கள், விறு விறுப்பு, நல்லதொரு செய்தி என சிறப்பாக இருந்தது. இதுவரை வரவில்லையென்றால், அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாம். 

ஜாதி, மதம், அரசியல் என கறைகள் படாத மனது குழந்தைகளுக்கு – அதில் நல்லனவற்றையே பதிவு செய்ய வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மட்டுமன்றி, நம் ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.