பாஸ்கரன் தன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, வள்ளுவர் சிலை நோக்கி நடந்தான். பவித்ரா 6.00 மணிக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறாள். சிலையின் பின்னால் கடற்கரை மணற் பரப்பில் வழக்கமான இடத்தில் சந்திப்பதாகச் சொன்னாள். அவன் மெதுவாக நடந்து அந்த இடத்தை அடைந்து சுற்றிப் பார்த்து மணலில் கிடந்த கடித்துப் துப்பிய சோளம், பிஸ்கெட் பேப்பர், சுண்டல் பொட்டலத் தாள், பஜ்ஜி மிளகாய் காம்பு எல்லாவற்றையும் பொறுக்கி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுத் திரும்பி வந்து அமர்ந்து கொண்டான். பவித்ராவுக்கு அசுத்தம் பிடிக்காது.
மணி இப்போது ஐந்தரைதான் ஆகிறது. அவள் வருவதற்கு நேரம் இருக்கிறது. ஒரு வருடத்திற்குப் பின் சந்திப்பு. நல்லபடியாகப் போக வேண்டும். அவளுடன் பேசும்போது சரியாகப் பேச வேண்டும். வார்த்தைகளில் கவனம் வேண்டும். மனது அடித்துக் கொள்கிறது. காய்ச்சல் வந்துது போல உடலில் ஒரு சிறு நடுக்கம். பாஸ்கரன் தன்னைத் தளர்த்திக் கொள்ள சுற்றி நடப்பதைப் பார்க்கத் தொடங்கினான்.
பொழுது முழுமையாகச் சாயவில்லை. வெளிச்சம் இருந்தது. வலது புறம் சிறிது தூரம் தள்ளிக் கடலைப் பார்த்து அமர்ந்து கொண்டிருந்த பெரியவருக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கலாம். வேட்டி, சட்டை, அதன் மேல் ஒரு ஸ்வெட்டர், கழுத்தில் மஃப்ளர், தலையில் குல்லா. கையில் இருந்த பொட்டலத்திலிருந்து எடுத்து ஒவ்வொரு பட்டாணியாக வாயில் போட்டுக் கொண்டிருந்தார். (பவித்ராவுக்கும் பட்டாணி சுண்டல் பிடிக்கும். வாங்கித் தரவேண்டும்.) இன்னும் சற்று தூரத்தில் கம்பிகளில் தொங்கிய பொம்மைக் குதிரைகளின் மீது அமர்ந்து சிறுவர்கள் ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த சந்தோஷம் கிடைக்காத அதே வயது சிறுவர்கள் சுண்டல், முறுக்கு பாத்திரங்களுடன் மணலில் அலைந்து கொண்டிருந்தார்கள்.
தூரத்தில் பலூன், சோளம் விற்பவர்களுக்குப் பின்னால் கரையில் மக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். அலைகளில் கால்களை நனைத்துக் கொண்டிருந்தவர்களின் ஆரவாரச் சத்தம் அலை இரைச்சலை மீறிக் கேட்டது. அவனும் பவித்ராவும் பல முறை நின்று அலைகள் வந்து காலைத் தொடுவதை அனுபவித்திருக்கிறார்கள். இன்று அந்த ஆசை நிறைவேறுமா?
கீழ் வானில் நீர்பரப்புக்கு மேல் சிறு மேகக் கூட்டம் இருந்தது. பௌர்ணமி நிலவு நீரிலிருந்து தப்பித்து வெளியே வர முயன்று கொண்டிருந்தது.
பாஸ்கரன் கை கடிகாரத்தைப் பார்த்தான். மணி 5.40. இன்னும் இருபது நிமிடங்கள். கை விரலால் மணலில் வட்டமிட்டு முகம், கண், மூக்கு, வாய் வைத்து ஏதோ ஒரு உருவம் வரைந்தான். அதைப் பார்த்து அவனே சிரித்துக் கொண்டான். உடனே அதை அழித்துவிட்டு பவித்ரா என்று எழுதினான். அதை அழிக்காமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
பவித்ராவுடன் திருமணமானது மூன்று வருடங்களுக்கு முன்னால். பெரியவர்கள் பார்த்து முடித்தக் கல்யாணம்தான். இரண்டு வருடங்கள் சேர்ந்து கழிந்தது. இப்போது ஒரு வருடம் இருவரும் தனிமையில். மன முறிவு. மண முறிவு இன்னும் ஆகவில்லை. இன்று அதற்கு ஒரு முடிவு கிடைக்குமா?
”சார்” என்ற குரல் கேட்டுத் திரும்பியவன் பக்கத்தில் இருந்த பெரியவர் கூப்பிட்டதைத் தெரிந்து கொண்டான்.
”சுண்டல் சாப்பிடுறீங்களா?” கையை நீட்டிக் கேட்டார் அவர்.
’வேண்டாம்’ என்று தலையை அசைத்து மறுத்தான்.
”யாருக்காவது காத்துகிட்டு இருக்கீங்களா?”
“ஆமாம்” என்று மீண்டும் தலையை அசைத்தான்.
”வாங்களேன், பேசிகிட்டு இருக்கலாம்”
மீண்டும் ஒரு முறை கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு மெதுவாக எழுந்து அவர் அருகே சென்று அமர்ந்தான்.
“நான் தினமும் சாயந்திரம் இங்கே வந்து உட்கார்ந்துடுவேன். உங்களை முன்னே இங்கே பார்த்ததில்லை”
இலேசாக சிரித்துவிட்டு, “ஒரு வருஷத்துக்கு முன்னாலே அடிக்கடி இங்கே வந்துகிட்டு இருந்தேன், என் மனைவியோடு” என்றான் பாஸ்கரன்.
“இப்போ?”
“மனைவிக்காகக் காத்துகிட்டு இருக்கேன்.”
“ஓ! அவங்க ஆபீஸ்லேருந்து வரணுமா?”
“ஆமாம்……..சரி, நீங்க ஏன் தினப்படி இங்கே வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க? சாயந்திரம் நடைப் பயிற்சி, உடற்பயிற்சியா?”
“இல்லே, மனப்பயிற்சி”. புரியாமல் விழித்த பாஸ்கரனைப் பார்த்து, ”உங்களை மாதிரி முன்னெல்லாம் நானும் என் பொண்டாட்டி கூட அடிக்கடி இங்கே வருவேன். இப்போ அவள் உயிரோட இல்லை”.
“ரொம்ப சாரி சார்”
”இங்கே வந்தா அந்தப் பழைய ஞாபகங்கள் நிறைய வரும். அதை அனுபவிக்கிறதுக்காக இங்கே வந்து ஒரு மணி நேரம் இருந்துட்டுத் திரும்பிப் போயிடுவேன்”. கடலைப் பார்த்துக் கொண்டு சொன்னார் பெரியவர்.
கேட்டவுடன் பாஸ்கரனுக்கு என்னவோ போல் இருந்தது.
“இங்கே வந்தா அவங்க ஞாபகம் வந்து மனசு இன்னும் கஷ்டப்படுமே சார்”
பெரியவர் திரும்பிப் பார்த்து, “அதிலேயும் ஒரு சந்தோஷம் இருக்கு மிஸ்டர்……”
“பாஸ்கரன்”
“ஆ… மிஸ்டர் பாஸ்கரன், பழைசை அசை போடறதிலே ஒரு சுகம் இருக்கு சார். அப்புறம், வயசானவங்களுக்கு பழைசைத் தவிர நினைச்சுப் பார்க்க வேறே என்ன இருக்கு?”
பெரியவர் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதாக பாஸ்கரனுக்குத் தோன்றியது. நாளையைப் பற்றிய நிச்சயம் இல்லாமல், இன்றையப் பொழுதின் கஷ்டங்களுக்கு இடையில், நேற்றைய நினைவுகளே சந்தோஷ ஊற்றுகள் இவரைப் போன்ற எல்லோருக்கும்.
“ஆமாம் சார். நீங்க சொல்றது ரொம்ப சரி”
சிறிது இடைவெளி விட்டு, ”உங்க மனைவி எப்போ இறந்து போனாங்க?” என்று கேட்டான்.
“மூணு வருஷம் முன்னாலே அந்தக் கொரோனாவிலே போயிட்டா. கடைசியிலே அவளுக்குக் கொள்ளி போடக் கூட விடலை சார்” என்றார் இலேசாகக் கண்கள் கலங்க.
’தான் கேட்டது தவறு’ என்று தோன்றியது பாஸ்கரனுக்கு.
“ஒரு விதத்திலே நல்லதுதான் சார். என்னாலே அவளுக்குக் கொள்ளி போட முடியாது. அறுபது வருஷம் சேர்ந்து வாழ்ந்தோம். பிரிஞ்சதே இல்லை. ஒரு ஆறு நாள் ஆஸ்பத்திரியிலே இருந்தா. பார்க்கக் கூட விடலை. கடைசியிலே ஒரு தடவை துணியைத் தூக்கி முகத்தை மட்டும் காட்டினாங்க. அவ்வளவுதான். எல்லாம் முடிஞ்சு போச்சு”
முகத்தைக் காட்டாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு சொன்னார் பெரியவர்.
சில நிமிடங்கள் பேச்சு ஒன்றும் நிகழவில்லை. முன்னே மணலில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் இவர்கள் அருகே வந்து பின்னால் ஒளிந்து கொண்டான். அவன் கையைப் பிடித்து வெளியே இழுத்து, ”இதோ இங்கே இருக்கான்” என்று பெரியவர் சிரித்துக் கொண்டே சொல்ல, அவனைத் தேடி வந்தவர்கள், ‘ஓ’ என்று கத்திக் கொண்டு வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். ”போங்க தாத்தா” என்று சொல்லிவிட்டு அவன் அவர்களோடு சென்றான். பெரியவர் இன்னும் பெரிதாகச் சிரித்தார்.
குழந்தைகளோடு விளையாடும் அவரைப் பார்க்கும் போது பாஸ்கரனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“உங்களுக்குக் குழந்தைகள் இருக்காங்களா, சார்?”
”இதோ இந்த எல்லாக் குழந்தைகளும் என் குழந்தைகள்தான்” என்றார் விளையாடும் சிறுவர்களைக் காட்டி. “எங்க அறுபது வருஷ தாம்பத்யத்திலே ஒரே குறை எங்களுக்குக் குழந்தை இல்லாததுதான். அவளுக்கு நான் குழந்தை, எனக்கு அவள் குழந்தைன்னு இருந்தோம். இப்போ நான் அனாதைக் குழந்தை”
இந்தப் பேச்சை இனிமேலும் வளர்த்துக் கொண்டு போவது அவரை மேலும் சங்கடப்படுத்தும் என்று புரிந்து கொண்டு பாஸ்கரன் மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் பத்து நிமிடம் இருந்தது. பவித்ரா நேரத்தைக் காப்பதில் ரொம்ப கறார்.
”ரொம்ப போரடிக்கிறேனோ?”
”இல்லை சார்…..”. சிறிது யோசனை செய்து விட்டு, ”உங்களுக்குள்ளே அபிப்பிராய பேதம், சண்டை எல்லாம் வந்ததுண்டா சார்?” என்று கேட்டான் பாஸ்கரன். அவன் கேள்வி தன் திருமண வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்துக் கேட்டது அவனுக்கே புரிந்தது.
“நிறைய….. எனக்கும் அவளுக்கும் எல்லா விஷயத்திலும் வேறே வேறே நம்பிக்கை, ரசனை, டேஸ்ட் எல்லாம். உதாரணமா எனக்கு காஃபி, அவளுக்கு டீ. எனக்கு கர்நாடக சங்கீதம், அவளுக்கு சினிமா பாட்டு. எனக்கு சிவன், அவளுக்குப் பெருமாள். நான் எம்.ஜி.யார், அவள் சிவாஜி. காத்து எனக்கு வீசணும் அவளுக்கு அடிக்கணும். இப்படி எல்லா விஷயத்திலும் தலைகீழ். எல்லாத்துக்கும் சண்டை போட்டுருக்கோம்”
“அப்புறம் …..?.”
“எப்படி இத்தனை வருஷம் சேர்ந்து இருந்தோம்னு கேட்கறீங்களா? இதெல்லாம் ரொம்பச் சின்ன விஷயம் சார். புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் வேறே உடம்பு, வேறே மனசுதானே? அதனாலே அதுக்கு மரியாதை கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணிகிட்டுத்தான் போகணும். அதுதான் முக்கியம்”
பாஸ்கரனுக்கு அவர் கடற்கரை மணலில் அமர்ந்து போதிக்கும் புத்தராகத் தோன்றினார்.
”நீங்க என்ன வேலை பார்த்தீங்க?”
“பொதுப் பணித் துறையிலே குமாஸ்தாவா இருந்தேன். இருபது வயசிலே சேர்ந்தேன். அங்கே நடக்கிற லஞ்சம், ஊழலைப் பார்த்த பிறகு, பதவி உயர்வே வேண்டாம்னு அப்படியே இருந்து ரிடயர் ஆயிட்டேன். ஏதோ சொல்ப பென்ஷன். இரண்டு பேருக்கு அது போதும்னு இருந்திட்டேன். இப்போ இன்னும் ஒரு ஆள் குறைஞ்சு போச்சு.” அவர் குரல் விரக்தியில் ஒலித்தது பாஸ்கரனுக்குப் புரிந்தது.
சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. கடலை நோக்கி இருவரது பார்வைகளும் இருந்தன. இப்போது நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. கடல் நீர்ப் பரப்பின் மீது பௌர்ணமி நிலவு முழுமையாக வெளியே வந்திருந்தது. குழந்தைகள் விளையாட்டும், ஜனங்களின் ஆரவாரமும் குறைந்ததாகத் தெரியவில்லை.
சற்றுப் பொறுத்து, பெரியவர், “நேரமாயிடுத்து சார். போய் சாப்பிட்டு படுக்கணும்” என்று சொல்லிக் கொண்டே கையை ஊன்றி எழுத்திருக்கத் தொடங்கினார். பாதி எழுந்தவர் நிலை தடுமாறி கீழே சரிந்து விழ, பாஸ்கரன் சட்டென்று எழுந்து அவரைப் பிடித்துக் கொண்டான். சமாளித்துக் கொண்டவர், தன் உடலை உயர்த்தி நிமிர்ந்து நின்றார்.
“ரொம்ப தாங்க்ஸ் சார்”
“நீங்க எங்கே இருக்கீங்க? எப்படிப் போவீங்க?”
“இங்கே திருவல்லிக்கேணிதான். டி.பி. கோயில் தெரு. நடந்தே போயிடுவேன்” என்று சொல்லிக் கொண்டே நடக்கத் தொடங்கியவர் கால் மணலில் பதியாமல் சற்றுத் தடுமாறினார். பாஸ்கரன் அவரைப் பிடித்துக் கொண்டு, ”வாங்க சார், நான் அந்த நடைபாதை வரையிலும் கூட்டிகிட்டுப் போறேன்” என்று சொல்லி அவரை வழி நடத்திக் கொண்டே மெதுவாக நடந்தான்.
நடைபாதை வந்தவுடன், “ரொம்ப களைப்பா இருக்கு. இங்கே பெஞ்சிலே கொஞ்ச நேரம் உட்கார்ந்துகிறேன். நீங்க போங்க” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தார்.
“சார், வேணும்னா ஒரு ஆட்டோ பிடிச்சுத் தரட்டுமா?”
“வேண்டாம். திருவல்லிக்கேணிக்கு யாரும் வரமாட்டாங்க. வந்தாலும் ரொம்ப காசு கேட்பாங்க”
“இல்லை சார். உங்களாலே நடக்க முடியலை. நான் ஆட்டோ பிடிச்சுத் தரேன்” என்று சொல்லிவிட்டு பாஸ்கரன் அங்கிருந்த சில ஆட்டோக்களை நோக்கி நடந்தான்.
“திருவல்லிக்கேணியா? வராது சார்”
“எனக்கு இல்லைப்பா. ஒரு பெரியவர். ரொம்ப களைப்பா இருக்காரு, அவருக்கு”
”நூறு ரூபாய் தரீங்களா?”
”நூறு ரூபாயா? அவரு வசதி இல்லாதவரப்பா. முப்பது ருபாய் வாங்கிக்க”
”வராது சார்” தலையாட்டி விட்டு நகர்ந்தவனை அடுத்து இருந்த எல்லா ஆட்டோகாரர்களும் அந்த ஒரே பதிலைச் சொன்னார்கள். ஒரு வெறுப்புப் பார்வையை உமிழ்ந்து விட்டு, பாஸ்கரன் நேரே பெரியவரிடம் வந்தான்.
“ஆட்டோ வர மாட்டேங்கிறாங்க”
“நாந்தான் சொன்னேனே…”
“வாங்க சார் நான் என் ஸ்கூட்டரிலே கொண்டு போய் விட்டுடறேன்”
“இல்லைப்பா, உனக்கு ஏன் சிரமம்? கொஞ்ச நேரம் கழிச்சு நானே நடந்து போயிடுவேன். இங்கே உன் பொண்டாட்டி வருவாங்கல்லே?”
“பரவாயில்லை சார். அவங்க காத்துகிட்டு இருப்பாங்க. நீங்க எழுந்து மெதுவா என் கூட வாங்க”
அவர் கையைப் பிடித்து எழுப்பி மெதுவாக நடத்திக் கொண்டு ஸ்கூட்டர் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றான். அவரை ஸ்கூட்டரில் அமர வைத்து, மிக மெதுவாக ஓட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
முப்பது நிமிடம் கழித்துப் பாஸ்கரன் கடற்கரைக்குத் திரும்பி வந்து வள்ளுவர் சிலைக்குப் பின்னால் பார்த்த போது, அவன் அமர்ந்திருந்த இடம் இன்னும் காலியாக இருந்தது. சுற்றி எங்கும் பவித்ராவைக் காணவில்லை. அவள் இன்னும் வந்து சேரவில்லையா? இல்லை வந்து பார்த்துவிட்டு தான் இல்லாதைக் கண்டு திரும்பிப் போய் விட்டாளா?
மொபைலை எடுத்து நம்பரைப் பதித்ததில், எதிர்முனையில் பதில் ஏதுமில்லை. ஒருவேளை வேலை அதிகமாக இருந்திருக்குமா? காரணம் என்னவென்று புரியவில்லை. இருந்தாலும் அவளுக்காகக் காத்திருப்பதென்று தீர்மானித்து அந்த இடத்திலேயே அமர்ந்தான்.
அடுத்த மூன்று மணி நேரத்துக்கு ஒன்றும் நடக்கவில்லை. பலமுறை ஃபோன் செய்து பார்த்தும் பலனில்லை. இப்போது நிலவு வானத்தில் நன்றாக மேலே ஏறித் தன் அமுத கிரணங்களைப் பாய்ச்சி கடற்கரையை நனைத்துக் கொண்டிருந்தது. கடற்கரை முக்கால்வாசி காலியாகிவிட்டது.
மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பவித்ரா வரவில்லை. இனி காத்திருப்பதில் பயனில்லை. பாஸ்கரன் எழுந்து வெளியே வந்து தன் ஸ்கூட்டரை நோக்கி நடந்தான்.
இரவு பதினோரு மணிக்கு படுக்கையில் சாய்ந்தவனுக்கு ஆங்கிலத்தில் ஒரு குரல் வழிச் செய்தி காத்திருந்தது. பவித்ராதான்.
“நான் சரியாக ஆறு மணிக்கு அங்கு வந்தேன். நீ அப்போது யாரோ ஒரு கிழவரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு நடைபாதையில் நடந்து கொண்டிருந்தாய். என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. நான் கூப்பிட்டது கூட உன் காதில் விழவில்லை. என் மீது உனக்குக் கவனம் இல்லை.….. நீ மாறவே இல்லை. இன்னும் அப்படியேதான் இருக்கிறாய்……. இப்படித்தான் நம்முடைய முதல் திருமண நாள் அன்றைக்கு உன் நண்பனுடைய அப்பா இறந்து போய்விட்டார் என்று அவன் வீட்டிலேயே தங்கி இருந்தாய். மூன்று நாள் வீட்டிற்கே வரவில்லை. என்னைப் பற்றி உனக்கு நினைவேயில்லை. இன்னொரு நாள் ஸ்கூட்டரில் போகும் போது, அடிபட்டு ரோட்டில் கீழே கிடந்த யாரோ ஒருவனைப் பார்த்துவிட்டு, என்னை இறக்கிவிட்டு அவனை ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனாய். நான் தனியாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். ஞாபகமிருக்கிறதா? என் பிறந்த நாள் கூட உனக்கு ஞாபகமில்லை. இதெல்லாம் எப்படி ஞாபகம் இருக்கப் போகிறது?
எனக்குப் பிடித்த சினிமா உனக்குப் பிடிக்காது. எனக்குப் பிடித்த சாப்பாடு உனக்குப் பிடிக்காது. மொத்தத்தில் உனக்கு என்னையே பிடிக்காது. சரியா?
ஒன்று மட்டும் எனக்கு நன்றாகப் புரிகிறது. உனக்கு என் மீது அக்கறை இல்லை. அதனால்தான் இன்று நான் வருவேன் என்று தெரிந்தும் நீ யாரோ ஒருவரோடு வெளியே போய்விட்டாய். என்ன அவசரம்? இவள் காத்திருக்கட்டும் என்ற எண்ணம்தானே? என்னால் இந்த அலட்சியத்தை இனிமேல் சகிக்க முடியாது. ஒரு வருஷப் பிரிவு உன்னை சிறிதாவது மாற்றியிருக்கும் என்று நினைத்தேன். இல்லை அது தவறு. நீ இனியும் மாறமாட்டாய் என்று நன்றாகப் புரிகிறது. என் நம்பிக்கை பொய்த்துப் போனது. இனி நாம் சேர்ந்து வாழ்வது நடக்காது.
சீக்கிரத்தில் நம் விவாகரத்து காகிதங்கள் உன்னிடம் வந்து சேரும். கையெழுத்துப் போட்டுத் திருப்பி அனுப்பிவிடு. ”
