(கதாபாத்திரங்கள்: பிரதீப், ஜவஹர், மோஹன்)
பிரதீப்: ஜவஹர், இன்றைக்கு காலையில உங்க வீட்டுக்கு வந்திருந்தேன். நீ பள்ளிக்கு போயிருப்பதாக அம்மா சொன்னாங்க. இன்னிக்கு பள்ளி விடுமுறை தானே. எதற்கு பள்ளிக்கு போயிருந்த? ஏதாவது சிறப்பு வகுப்பு நடந்ததா?
ஜவஹர்: இல்லை, இன்று எங்க பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடினாங்க. அதற்காக போயிருந்தேன். உங்கள் பள்ளியிலே கொண்டாட மாட்டாங்களா?
பிரதீப்: எங்க பள்ளியிலும் கொண்டாடுவாங்க. ஆனால் விடுமுறை நாளைக்கு எதுக்கு பள்ளிக்குப் போகவேண்டும்? காலையில் நிறைய நேரம் தூங்கி, நிதானமாக எழுந்து, அம்மா கொடுத்த பலகாரம் எல்லாம் சாப்பிட்டு, கொஞ்சம் வீடியோ கேம்ஸ் விளையாடி என்று எனக்கு இன்னிக்கு நல்லா பொழுது போச்சு. உன்னுடன் கிரிக்கெட் விளையாடலாம் என்றுதான் வந்தேன். நீ இல்லை என்பதால் திரும்பி விட்டேன்.
ஜவஹர்: அடடா, நீ நிறைய விஷயங்களை இழந்து விட்டாய். எங்க பள்ளியில் மிகச் சிறப்பாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த வருடம் நம் நாடு சுதந்திரம் அடைந்து 77 வது வருடம் ஆச்சு இல்லையா?
பிரதீப்: ஆமாம், எங்கள் ஆசிரியரும் அதைப் பத்தி சொல்லியிருந்தாங்க. எங்க தாத்தாதொலைக்காட்சியில செய்திகள் கேட்கும்போது என் காதில் விழுந்தது. எப்படி கொண்டாடினாங்க உங்க பள்ளியிலே?
ஜவஹர்: மாணவர்கள் எல்லாரும் சீருடையில் அணிவகுப்பு நடத்தினோம். நம் மாவட்ட ஆட்சியாளரை தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். அவரது தந்தை சுதந்திர தினப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவராம். அவர் தந்தையின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். மிக சுவாரசியமாகவும், சற்று பயமாகவும் இருந்தது. பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் என்னுடைய அண்ணன் மோஹனும் நம் நாட்டின் சுதந்திர போராட்டம் பற்றி பேசினார். தேசியக் கொடியேற்றி, எங்கள் எல்லாருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.
பிரதீப்: எங்கள் வீட்டிலும் அப்பா கொடி வாங்கி வந்து எங்கள் வீட்டு மாடியில் ஏற்றி வைத்திருந்தோம்.
ஜவஹர்: ஆமாம், நம் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எல்லோருடைய வீடுகளிலும் கொடி ஏற்றியிருந்தது பார்க்க மிக அழகாக இருந்தது. இதோ, என்னுடைய அண்ணனே வந்து விட்டாரே.
மோஹன்: என்ன ஜவஹர், பிரதீப், இரண்டு பேரும் ஏதோ மும்முரமாக பேசிக்கொண்டிருக்கீங்க போலிருக்கே.
ஜவஹர்: ஆமாம் அண்ணா, நான் நம்ம பள்ளியிலே நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். நீங்க பேசின பேச்சும் எனக்குப் பிடித்திருந்தது. இன்னொரு முறை எனக்கும், பிரதீப்புக்கும் நம்ம நாட்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி சொல்லறீங்களா?
மோஹன்: நிச்சயமா. சரி, சுதந்திரம் என்றால் என்ன?
பிரதீப்: ஹ்ம்ம்ம், ஜெயில்ல போட்டிருந்தாங்கன்னா அங்கேருந்து வெளியில் வரது.
ஜவஹர்: நமக்கு விருப்பமான விஷயமெல்லாம் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்யறது..
மோஹன்: நீங்கள் சொல்லறது தனி மனித சுதந்திரம். ஆனால் நம்ம பாரத நாடு பல ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. “ஈஸ்ட் இண்டியா கம்பெனி” என்ற பெயரில் வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் நாட்டில் ஆட்சி செய்து வந்த ராஜாக்கள் கிட்டேயிருந்து ஆட்சிய வாங்கிட்டாங்க. பிறகு பிரிட்டிஷ் நாட்டின் நேரடி ஆட்சியின் கீழ் நம்ம நாடு வந்து விட்டது. அப்புறம் என்ன, அவங்க வெச்சதுதான் சட்டம். நம்ம நாட்டு ஜனங்க என்ன கஷ்டப்படறாங்கன்னு அவங்களுக்குக் கவலையே இல்லை. நிறைய வரி வசூல் பண்ணி, அவங்க கஜானானை நிரப்புவது மட்டுமே குறிக்கோளாக இருந்தது. எவ்வளவு பஞ்சம் வந்தாலும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வரி கொடுக்கலைன்னாலும், ஏன் எப்படின்னு கேட்டாலும் பெரிய தண்டனைதான் கொடுப்பாங்க..
பிரதீப்: கேக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கே. இதையெல்லாம் எப்படி ஜனங்க பொறுத்துக்கிட்டாங்க?
மோஹன்: அங்கங்கே போராட்டங்கள் நடந்துக்கிட்டே தான் இருந்தது. 1857 ஆண்டு முதல் ஆரம்பித்த சுதந்திர போராட்டம் 1947 இல் நமக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. காந்திஜி, ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பால கங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற பல தலைவர்கள் நாடு முழுக்க தங்கள் பேச்சாலும், செயலாலும் மக்களுடைய விழிப்புணர்வை தூண்டினாங்க. தமிழகத்துலயும் வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, பாரதியார் போன்றவர்கள் மக்களுக்கு ஒருமைப்பாட்டையும், தேசிய உணர்வையும் ஊட்டினாங்க.. ஆங்கிலேயர்களிடம் நிறைய பேச்சு வார்த்தைகள் நடத்தினாங்க.
ஜவஹர்: இதனால உடனே வெள்ளைக்காரங்க சுதந்திரம் கொடுத்துட்டாங்களா?
மோஹன்: அது அவ்வளவு சுலபம் இல்லை. சுதந்திரம் வேணும்னு கேட்டவங்களுக்கு, தடியடி, சிறைத்தண்டனை, ஆயுள் ஆண்டனை, தீவாந்தர தண்டனை என்று ஒன்றுக்கு மேல் இன்னொன்றாக ஆங்கில அரசு கொடுத்துக் கொண்டேயிருந்தது. தலைவர்கள் மட்டுமில்ல, சாமானிய குடிமக்களும் தங்களால் முடிந்த அளவு சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குப் போனாங்க. தங்கள் உடைமைகளையும் சொத்துக்களையும் விற்று, தேச விடுதலைக்கு வேண்டிய உதவிகள் பண்ணாங்க. ”உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு” போன்ற பல வகை போராட்டங்களுக்குப் பிறகு நமக்கு அந்த சுதந்திரம் கிடைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நேரு பொறுப்பேற்றார். சர்தார் வல்லபபாய் பட்டேலின் தலைமையில் அங்கங்கே பிரிந்திருந்த ராஜ்யங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, மொழி வாரியாக மாநிலங்களாகப் பிரித்தார். இப்படித்தான் நாம இன்னிக்கு சந்தோஷமாக, கவலையில்லாமல் இருக்கிற மாதிரி, நல்ல ஒரு அழகான பாரத நாடு கிடைச்சுது.
பிரதீப்: இவ்வளவு கஷ்டப்பட்டுத் தான் நமக்கு சுதந்திரம் வந்ததுன்னு இப்பத்தான் எனக்குப் புரியுது. ஆனா, இன்னும் பழைய விஷயங்களையே பேசுவதினால் என்ன நடக்கப் போகிறது?
மோஹன்: எப்பவுமே ஒரு பொருளை எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினோம்னு ஞாபகம் வந்தால், அதை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளணும் அப்படின்னு முயற்சி செய்வோம். இளைஞர்களாகிய நாம் தான் நம் பாரத தேசத்தின் வருங்கால தலைவர்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு நமக்காக நம் முந்தைய தலைமுறைகள் விடுதலை வாங்கித்தந்தார்கள் என்பதை நாம் நினைத்துப்பார்த்தால், இதை எப்படி பாதுகாத்து, நாட்டை முன்னேற்றலாம் என்ற வழி தெரியும். அறிவியல், கலைகள், தொழில் நுட்பம், விளையாட்டு அப்படின்னு பல துறைகளிலும் நம்ம இந்தியாவை முன்னணியில் நிறுத்தறது தான் நம்ம வேலை. நன்றாக படித்து, நல்ல பணியில் அமர்ந்து நம்ம நாட்டையும், வீட்டையும் நாம தான் காப்பாத்தணும், இல்லையா? சுதந்திர தினம் என்பது விடுமுறை நாள் மட்டும் அல்ல, நம் தேசத்தைக் காத்த தியாகிகளை நினைத்துப் பார்க்கும் நாள்.
பிரதீப்: நல்லா புரியுது அண்ணா.. நம்முடைய வரலாறு பற்றி நான் இன்னும் நல்லா படிக்கப் போறேன். அடுத்த முறை கண்டிப்பாக சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வேன். என் கடமைகளை நிச்சயமாக செய்வேன்.
ஜவஹர்: ரொம்ப நன்றி அண்ணா. எனக்கும் இன்னும் நம் நாட்டின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு. பள்ளி லைப்ரரியிலிருந்து புத்தகம் எடுத்துப் படிக்கப் போகிறேன். வருகிறோம், அண்ணா…
