

நாடகம் – காட்சி – 1
இடம்: முதுமலை வனக்காடு
மாந்தர்கள்: அந்த வனத்தில் வாழும் வன விலங்குகள் மற்றும் ஒரு குள்ள நரியும்.
(அந்தக் காட்டில் வாழும் அனைத்து விலங்குகளும் ஒரு குன்றின் மேல் கவலையுடன் நின்று கொண்டிருந்தன. அவற்றின் கண்களில் ஒரு பயம் தெறித்துக் கொண்டிருந்தது. அந்த வழியே வந்த ஒரு குள்ள நரி அவர்களைப் பார்த்துக் கேட்டது)
குள்ள நரி: “என்ன வனவிலங்குகளா, எல்லோரும் அதிக கவலையுடன் இருக் கிறீர்கள் போலிருக்கே ?”
வன விலங்குகள் அனைத்தும் ஒரே குரலில்: “ஆம் குள்ள நரியாரே… ஒரு ஓற்றைக் கண் சிங்கம் எங்கள் வனத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நம் தோழர் கருடன், சுடச்சுட ஒரு செய்தியை வந்து சொன்னார்”.
ஓநாய்; “அதனால் நாங்கள் அனைவரும் கவலையுடன் இருக்கிறோம்”.
மான்: “அந்த ஒற்றைக் கண் சிங்கம் எங்கள் வனத்தில் வேட்டைக்காக ஒரு இரையும் கிடக்காததால் சிறிது காலத்துக்கு முன்பு தான் நகரத்தின் பக்கம் போய் விட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம்”.
காட்டு மாடு: “அங்கு மக்கள் வளர்க்கும் பல ஆடு மாடுகளைக் கடித்து கொன்று விட்டதாம்”.
அணில்: “பயந்து போன மக்கள் அந்த ஒற்றைக்கண் சிங்கத்தை உடனே பிடித்து தங்களைக் காப்பாற்றுமாறு அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்”.
கரடி: “அதனால் வனத்துறை அதிகாரிகள் அந்த ஒற்றைக்கண் சிங்கத்தைப் பிடிக்க முழு மூச்சுடன் இறங்கியிருக்கிறார்களாம்”.
கழுதை: “அந்த ஒற்றைக்கண் சிங்கத்தைத் துப்பாக்கி வைத்துக் கொன்று விடவும் வனத்துறை அதிகாரிகள் தயாராக இருக்கிறார்களாம்”.
காட்டு மாடு: “அதனால் அந்த ஒற்றைக்கண் சிங்கம் தன் உயிருக்குப் பயந்து, மீண்டும் நம் வனத்துக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது”.
குரங்கு: “நரி ஒரு ராஜ தந்திரி… தந்திரம் மிக்கத் தெரிந்த ஒரு விலங்கு என்று என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்”.
மயில்: “ஆம்… நம் குள்ள நரியார் மனது வைத்தால், நம் அனைவரையும் காப்பாற்ற முடியும். நம் குள்ள நரியார் தான் மந்திரமும் தந்திரமும் நன்றாகத் தெரிந்தவராயிற்றே…”
கழுதை: “ஒரு நிமிடம் ஏமாந்தால், குள்ள நரியான உங்களையும் அந்த ஒற்றைக்கண் சிங்கம் கொன்று விடும். ஆகையால் அதிகம் யோசிக்காமல், உங்கள் தந்திரங்களால் உடனே அந்த ஒற்றைக்கண் சிங்கத்தை ஏதாவது பண்ணுங்கள். எங்களைக் காப்பாற்றுங்கள் நரியாரே…”.
குள்ள நரி சிறிது நேரம் யோசித்தது. பிறகு “ கவலைப் படாதீர்கள், சகோதர சகோதரிகளே, உங்கள் எல்லோரையும் காப்பாற்ற வேண்டியது எப்படி என்று எனக்கு நன்றாகத் தெரியும். கவலைப்படாமல் இருங்கள்” என்றது.
காட்சி – 2
(குள்ள நரி அந்த வனத்தை விட்டு நகரத்தின் புறநகரில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒற்றைக்கண் சிங்கத்தைத் தேடிப் புறப்பட்டது. வானத்தில் பறந்து கொண்டிருந்த கருடன், காக்கைகள், புறாக்கள் அனைத்தும் குள்ள நரிக்கு வழி காட்டி அழைத்துச் சென்றன. ஒரு வழியாக குள்ள நரியும் ஒற்றைக்கண் சிங்கத்தைக் கண்டு பிடித்து அதனுடன் பேச ஆரம்பித்தது)
குள்ள நரி: “சிங்கம் அண்ணே… இந்த நகரத்துக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் ? இது ரொம்ப மோசமான நகரமாச்சே… உங்களைக் கொன்று விட அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்”.
ஓற்றைக்கண் சிங்கம்: “குள்ள நரியே அதை ஏன் கேட்கற? என்னுடைய வனத்தில் எனக்குப் பயந்து கொண்டு அனைத்து விலங்குகளும் பயந்து ஓடி ஒளிந்து கொண்டு விட்டன. என்னுடைய அகோரப் பசிக்கு என்ன செய்வேன் ? எவ்வளவு நாட்கள் தான் நான் பட்டினியாக கிடப்பது? அதனால் புதிய இறைகளைத் தேடிக்கொண்டு இந்த நகரத்துக்கு வந்து விட்டேன்”.
குள்ள நரி: “இந்த நகரத்து மக்கள் ஆபத்து நிறைந்தவர்கள் ஆயுற்றே சிங்கம் அண்ணே…”
ஒற்றைக்கண் சிங்கம்: “ஆம் குள்ள நரியே… கையில் துப்பாக்கியுடன் என்னைத்தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்”.
குள்ள நரி: “சரி, இப்ப எங்கே கிளம்பி விட்டீர்கள் ?”
ஓற்றைக்கண் சிங்கம்: “நான் இந்த மனிதர்களிடமிருந்து தப்பித்து மீண்டும் என்னுடைய காட்டிற்கே செல்லப் போகிறேன்”.
குள்ள நரி: “ அப்படியா ?”
ஒற்றைக்கண் சிங்கம்: “ஆம் குள்ள நரியே… எனக்கு மிகுந்த பசியாக உள்ளது. நான் சரியாகச் சாப்பிட்டு இருபது நாட்களாகின்றது. ஓடி ஒளிவதற்கே, நேரம் சரியாக உள்ளது”.
குள்ள நரி: “உம்மைப் பார்த்தால், எனக்குப் பாவமாக உள்ளது. உம்முடையப் பசி தீர, நான் ஒரு வழி சொல்லட்டுமா?”
ஓற்றைக்கண் சிங்கம்: “சீக்கிரமா சொல்லு குள்ள நரியே…. இல்லாவிடில், எனக்கு இருக்கும் பசியில் உன்னையே கொன்று விடுவேன்”.
குள்ள நரி: “முன்னொரு காலத்தில் உங்களுடைய மூதாதையர்களில் ஒரு கிழட்டுச் சிங்கம் இந்த காட்டில் மிகவும் மூர்க்கத்தனமாக இருந்து, எல்லோரையும் கொன்று குவித்துக் கொண்டு வந்தது”.
ஒற்றைக்கண் சிங்கம்: “அப்படியா?”
குள்ள நரி: “வனத்துறையும் அந்த சிங்கத்தைப் பிடிக்க பல இடங்களிலும் இரும்புக் கூண்டுக்களை வைத்துப் பார்த்தது”
ஒற்றைக்கண் சிங்கம்: “அப்படியா?”
குள்ள நரி: “ஆம்… ஆனால் அதற்குள் அந்த கிழட்டுச்சிங்கம், ஒரு மானை வேட்டையாடும் பொழுது, அதனுடையக் கூரியக் கொம்புகள் அந்தக் கிழட்டுச் சிங்கத்தின் இதயத்தைக் கிழித்து விட்டது. அந்த சிங்கமும் இறந்து விட்டது”.
ஒற்றைக்கண் சிங்கம்: “அய்யோ பாவம் அந்த சிங்கம். அது என்னுடையத் தாத்தா வாகத் தான் இருக்க வேண்டும்”.
குள்ள நரி: “அன்று வனத்துறை வைத்த இரும்புக்கூண்டுகள் இன்னும் அகற்றப் படாமல் தான் இருந்து வருகிறது. அதனைச் சுற்றி செடி கொடிகள் புதர் போல மண்டிக்கிடக்கிறது”.
ஒற்றைக்கண் சிங்கம்: “சரி அதற்கென்ன இப்போது ?”
குள்ள நரி: “அந்த இரும்புக்கூண்டுகளுக்குள் தான் அனைத்து விலங்குகளும் இத்தனை நாட்களாக உங்கள் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டிருக்கின்றன”.
ஒற்றைக்கண் சிங்கம்: “குள்ள நரியே, அந்த இரும்புக்கூண்டுகளை எனக்கு உடனே காட்டு. எனக்கு பிகவும் பசிக்கிறது”.
( வெகு தூரம் கடந்து ஒரு வழியாக அந்த கூண்டுகளை குள்ள நரி அந்த ஒற்றைக் கண் சிங்கத்திற்குக் காட்டியது. ஒற்றைக்கண் சிங்கம் அந்த இரும்புக்கூண்டிற்குள் பாய்ந்தது. இரும்புக்கூண்டின் கதவு உடனே மூடிக்கொண்டது. அந்த ஒற்றைக்கண் சிங்கம் வெளியே வராத படி அந்த இரும்புக்கூண்டுக்குள் நன்றாக மாட்டிக்கொண்டது)
காட்சி – 4
இடம்: வன விலங்குகள் தங்கியிருக்கும் காடு
மாந்தர்கள்: குள்ள நரி மற்றும் இதர வன விலங்குகள்.
( அனைத்து விலங்குகளும் குள்ள நரியை எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தன. குள்ள நரியும் அந்த காட்டினுள் மகிழ்ச்சியுடன் நுழைந்தது.)
மயில்: “என்ன நரியாரே, தாங்கள் மிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தோன்றுகிறதே !”
காட்டு மாடு: “அந்த ஒற்றைக்கண் சிங்கம் என்னாவாயிற்று? அதை முதலில் சொல்லுங்கள்”
குள்ள நரி: “அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தியைக் கொண்டு வந்திருக்கேன்.அந்த ஓற்றைக்கண் சிங்கத்தை கூண்டில் அடைத்து விட்டேன். இனி வன விலங்கு அதிகாரிகள் அந்த சிங்கத்தை நகரத்திலுள்ள எதாவது மிருக காட்சி சாலைக்குள் காட்சிக்காக வைத்து, பராமரிப்பார்கள். இனி உங்கள் அனைவருக்கும் நிம்மதிதான்”.
முயல்: “அப்படி என்ன தந்திரம் செய்து அந்த ஒற்றைக்கண் சிங்கத்தை பிடித்தீர்கள்?””
குள்ள நரி: “அந்தக் காலத்தில் ஒரு கிழட்டுச் சிங்கத்தைப் பிடிக்க வனத்துறை, பல இடங்களில் இரும்புக்கூண்டுகளை வைத்திருந்தார்கள்”.
“நான் தந்திரமாக அந்த இரும்புக்கூண்டுகளுக்குள் காட்டிலுள்ள அனைத்து விலங்கு களும் உங்களுக்குப் பயந்து கொண்டு, ஒளிந்து கொண்டிருக்கின்றன என்று ஒரு பெரியப் பொய்யைச் சொன்னேன். அந்த ஒற்றைக்கண் சிங்கமும், அதை உண்மை என்று நம்பி, அந்தக் கூண்டினுள் பாய்ந்து, நன்றாக மாட்டிக்கொண்டு விட்டது”.
“வன விலங்கு அதிகாரிகளும் அந்த ஒற்றைக்கண் சிங்கத்தை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல ஆயத்தமாக இருப்பார்கள்.”
“இனி, அந்த ஒற்றைக்கண் சிங்கமும் தன் வயதான காலத்தில் நிம்மதியாக இருக்கலாம். இந்தக் காட்டில் வாழ்கின்ற நீங்களும் நிம்மதியாக இருக்கலாம்.”
“ஓரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டேன் பாருங்கள்.”
அனைத்து விலங்குகளும் ஒரே குரலில்: “நரியாரா, கொக்கா ? எங்களுக்குத் தான் தெரியுமே, நரியார்
-திரை-
