
பாடவேளை முடிந்ததற்கான மணியோசை.
பிள்ளைகள் புன்சிரிப்புடன் பக்கத்து இருக்கை மாணவர்களுடன் பேச ஆரம்பிக்க, கணித ஆசிரியை சுபா பாடத்தை முடித்து விட்டு, ”ராஜூ, அனைவரது வீட்டுப்பாட நோட்டுப்புத்தகங்களை ஆசிரியர் அறைக்கு எடுத்து வா “ எனச் சொல்லியபடி அறையை விட்டு வெளியேறினார்.
அடுத்த பாட வேளை உடற்பயிற்சி வகுப்பு . பாண்டியன் அய்யா, வகுப்பறைக்கு வந்து எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து, மைதானத்துக்கு அழைத்துச் சென்றார்.
“கால்பந்து விளையாடலாமா ?”
“கேரம்… கோகோ…, கபடி…” வெவ்வேறு விளையாட்டுகளை விளையாட ஆசை கொண்டு, மாணவர்கள் ஆசிரியரிடம் தங்கள் விருப்பத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தனர்.
“இன்றைக்கு உடற்பயிற்சி தான்” எனக் கண்டிப்பான குரலில் சொன்னதோடு மட்டுமல்லாமல், “எல்லோரும் உடற்பயிற்சி செய்யும் முறையில் , முன்னும் பின்னும், வலது புறமும் இடது புறமும் ஒரு கை அளவுக்கு இடைவெளி விட்டு நில்லுங்கள் என தெளிவான கட்டளை வாக்கியங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
மாணவர்களும் முனகிக் கொண்டே தயாரானார்கள்.
“விளையாடுவதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது உடற்பயிற்சி ! இதையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளுங்கள், தினமும் பயிற்சி செய்யுங்கள்” என்றார் பாண்டியன் அய்யா.
அப்போது, பள்ளியின் உதவி அலுவலர் ஒருவர் ஒரு புதிய மாணவனை அழைத்து வந்தார்.
“பாண்டியன் சார், புது அட்மிஷன் “ என்றார்.
“சரி, வகுப்பாசிரியருக்குத் தெரியுமா?”
“தெரியும். வருகைப் பதிவெட்டிலேயே பெயர் எழுதி விட்டார்கள்”
“அப்ப சரி, வாப்பா தம்பி, உன் பேர் என்ன ?”
புதிதாக வந்துள்ள மாணவனின் முகம் வித்தியாசமாக இருந்தது. பார்க்க சற்று பயமாக, ஏன் விகாரமாகக் கூட இருந்தது. அவன் மூக்கைக் கொஞ்சம் தூக்கிக் கொண்டு, கண்களைச் சுழட்டிப் பார்த்தான். அதைப் பார்த்து சில மாணவர்கள் லேசாகச் சிரித்தனர்.
“ஹன்ஹழகன்”
“என்ன ?”
“ஹன்ஹழகன்”
இப்போது எல்லா மாணவர்களும் சிரிக்கத் தொடங்கினர்.
“அமைதி” என பாண்டியன் அய்யா சீற, மாணவர்கள் சத்தம் போடாமல் அமைதி காத்தனர்.
“இப்போ உடற்பயிற்சி வகுப்பு . நீயும் செய்கிறாயா ?”
சரியெனத் தலையாட்டினான் ஹன்ஹழகன்.
தொடக்கக் கல்வி மாணவர்களுக்கான எளிய பயிற்சிகள் தான். இருந்தாலும் அப்புதிய மாணவனால், தொடர்ந்து பயிற்சிகளைச் செய்ய முடியவில்லை.
அருகில் நின்ற மாணவர்களின் பரிகாசமும் அவனை வேதனைக்கு உள்ளாக்கியது.
“என்ன தம்பி, உடற்பயிற்சி செய்ய முடிய வில்லயா ?“
தலையை ஆட்டினான்.
“சொல்ல வேண்டியது தான ! “
“சிஹில ப்ஹிற்சி முடியுது. சிஹில முடியல்” என்றான் சிறுவன்.
அவன் பேச்சைக் கேட்டு, எல்லா மாணவர்களும் சிரிக்க ஆரம்பித்தனர்.
“எல்லோரும் அமைதியா இருக்க மாட்டீங்களா ! மேல் உதடு பிளவு, அன்னப்பிளவு இருக்கிறவங்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?” என்றார் பாண்டியன் சார்.
“அன்பழகன்… அன்பழகன்… புதுச் சேர்க்கை …“ எனச் சொல்லிக் கொண்டே , வகுப்பு ஆசிரியை கங்கா அங்கே வந்தார்.
“நம்ம பள்ளி மருத்துவரும், சிறப்பு மொழிப் பயிற்சியாளரும் இந்தப் பையனைப் பார்க்கணும். கூப்பிட்டுக் கொண்டு போகட்டுமா சார் ?“
அன்பழகன் போன பிறகு, உடற்பயிற்சி வகுப்பு கட்டுக் கோப்பாக நடந்தது.
அதன் பின் வந்த பாட இடைவேளைகளிலும், மாணவர்கள் அன்பழகனைக் கேலி செய்து பேசினர்.
கடைசிப் பாடவேளை. வகுப்பாசிரியர் கங்கா தான் வந்தார்.
“மாணவச் செல்வங்களே, நமது வகுப்பு மேல் நான் எத்துணை நம்பிக்கை வைத்திருந்தேன். இன்று எனக்கு மிகவும் ஏமாற்றம். நீங்கள் அன்பழகனைக் கேலி செய்வது வருத்தத்துக்குரியது. மேல் உதடு பிளவு மற்றும் அண்ணப்பிளவு உள்ள குழந்தைகள் ஏற்கனவே மிகுந்த சிரமங்களை அனுபவிக்கிறார்கள். மூச்சு விட சிரமமாக இருக்கலாம், மூக்கில் வலி, காதுக் குறைபாடுகள் என அவர்களுக்குப் பல தொல்லைகள் இருக்கலாம். அதனுடன், நமது கேலிப்பேச்சுகள் அவர்களை இன்னும் வருத்தமடைய வைத்திடாதா?”
“அண்ணப்பிளவு என்றால் என்ன ?” சந்திரன்.
“மேல் உதடு சிறிது திறந்திருந்தாலோ, பிளந்து இருந்தாலோ அது மேல் உதட்டுப் பிளவு. நம் வாயின் உள்ளே மேல் புறப்பகுதிக்கு “அண்ணம்” என்று பெயர். “பலேட்” என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். பிளவு அண்ணம் வரை இருந்தால், ‘அண்ணப்பிளவு’ எனச் சொல்லுவார்கள்.” ஆசிரியை.
“இது எப்படி வருகிறது டீச்சர் ?” கண்ணன்.
“துரதிர்ஷ்டவசமாக, சில குழந்தைகளுக்கு இவ்வாறு இருக்கும். பிறக்கும் போதே இத்தகைய அமைப்புடன் இருக்கும்.”
“பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிதே ?” மகேஷ்.
”நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் அல்லவா. எந்த ஒரு மாறுபாடுள்ள அங்க அமைப்பினைப் பார்த்தும் நாம் நகைக்கக் கூடாது என்று ! உருவக்கேலி கூடாது என்பதை மறக்கலாமா ?” ஆசிரியை.
“மன்னிக்க வேண்டும் டீச்சர். இனிமேல், அன்பழகனைக் கேலி செய்ய மாட்டோம்” என மாணவர்கள் உறுதி கூறினர்.
“ஏன் அன்பழகனால், சரிவர பேச முடியவில்லை, டீச்சர் ?” ராஜூ.
“ம். நல்ல கேள்வி. முகத்தில் உள்ள உறுப்புகள் என்னென்ன ?”
“கண், காது, மூக்கு, வாய்…நெற்றி …” ராஜூ.
“அந்த உறுப்புகளுக்கும் உள்ளே உள்ளுறுப்புகள் உள்ளன. நமது வாயில் உள்ள உதடுகள், பல்வரிசைகள், அண்ணம், உள்ளே இருக்கும் குரல் நாண் போன்று உள் உறுப்புகள் இருக்கின்றன. நாம் எழுப்பும் ஒலிகளுக்கும், இந்த உள்ளுறுப்புகளுக்கும் தொடர்பு உண்டு.” ஆசிரியை.
“ஆமாம். என் அம்மா கூட சொல்லுவார்கள் “ ராஜு.
“உன் அம்மா ஆங்கில ஆசிரியர் அல்லவா ? உதடோ, அண்ணமோ பிளவு பட்டு இருக்கும் போது, சில ஒலிகளைச் சரிவரச் சொல்ல முடியாது”
“இதைச் சரி செய்ய முடியாதா, டீச்சர் ?” மகேஷ்.
“அன்பழகன், நீ இதற்கு பதில் சொல் “ என்றார் கங்கா.
அன்பழகன் தயங்க, “ கமான், அன்பு, தைரியமாக எழுந்து நின்று பேசு, உன்னால் என்ன சொல்ல முடியுமோ அதைச் சொல் “
“ஃப்ரெண்ட்ஸ், எஹென்ஹக்கு ரெஹிண்டு ஹாப்ரேஷன் இதுவர முடிஞ்சுருக்ஹு. இஹின்னும் ச் ஹில ட்ரிட்மெண்ட் , ஹாப்பரேஷன் இஹிரிக்க்ஹு”
“வெரி குட் அன்பு, மாணவச் செல்வங்களே, சில குழந்தைகளுக்கு, வெறும் மேல் உதடு அறுவை சிகிச்சை மட்டும் போதும். சிலருக்கு, மேலும் சில அறுவை சிகிச்சை, முக அமைப்பு சிகிச்சை, மொழிப்பயிற்சி என ஒரு சில வருடங்கள் ஆகும்”
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், அன்பழகன் மறு நாள் பள்ளிக்கு வரவில்லை.
ஆசிரியை கங்கா மற்ற மாணவர்களிடம் அன்பழகனின் சிகிச்சைக்கு ஆகும் மருத்துவ மற்றும் பிற செலவுகளைப் பற்றி எடுத்துரைத்தாள். அப்பகுதியில் உள்ள ‘என்றென்றும் புன்னகை’ என்ற தொண்டு நிறுவனம் இது போன்ற குழந்தைகளின் மருத்துவத்துக்கான செலவில் பெருமளவு ஏற்கிறது என்ற தகவலையும் சொன்னார். அந்நிறுவனம் அன்பழகனுக்கும் உதவப் போகிறது. இருந்தாலும், அன்பழகன் குடும்பத்துக்கு, பள்ளியின் ‘சமூகத் தொண்டு’ திட்டத்தின் கீழ் உதவி செய்யத் தீர்மானித்துள்ளது எனவும் சொன்னார்.
“நான் என்னால் முடிந்த தொகையைத் தருகிறேன் டீச்சர்,”ராஜூ.
“மிகச் சிறப்பு ! வேறு யாரேனும் தருவதாக இருந்தால், ராஜூவிடம் கொடுத்து விடுங்கள்.”
“நிச்சயம் டீச்சர் “ எனக் கோஷமிட்டனர் மாணவர்கள்.
“நம் அன்பு இருந்தாலே போதும்,அன்பழகன், அழகனாக ! “என்றார் கங்கா.
அழகான ஆனந்தச் சிரிப்போசை வகுப்பறையை நிறைத்தது.
