

அட! இது சிறுவர்கள் இதழல்லவா? ஆசிரியர் நினைவு படுத்தினார். அதற்கேற்ப நான் பன்னிரண்டு – பதினான்கு வயதில் ஆனந்தவிகடனில் தொடராகப் படித்து மகிழ்ந்த ஒரு கதையைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன். இது என் சம வயதினர் பலருக்கும் மலரும் நினைவுகளைத் திரும்பக் கொண்டுவரும். எண்பதுகளில் இந்தப் புத்தகத்தை எங்கோ தேடிப்பிடித்து என் உறவினர் ஒருவர் எனக்குப் பரிசளித்தார். இது ஒரு பொக்கிஷம். நான் எத்தனை முறை இதனைத் திரும்பத் திரும்பப் படித்திருப்பேன் என்பது கூறவியலாத ஒன்று! அருமையான இக்கதை அக்காலத்தில் திரு. கோபுலுவின் உயிரோவியமான படங்களுடன் வெளிவந்தபோதில் எத்தனை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் படித்திருப்போம். வாராவாரம் காத்திருந்து படித்ததுண்டு.
கதையைப் பார்ப்போமா?
தங்கசாமி எனும் சிறுவன், தேக்கடி காடுகளில் பிறந்து வளர்பவன். காட்டிலாகா ஊழியர் ஒருவரின் மகன். காடுகளைப் பற்றியும் அங்குவாழும் மிருகங்களைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பவன். ஒருநாள் ஒரு புதிய காட்டிலாகா அதிகாரி அங்கு தன் மனைவி, மகள் நளினி இவர்களுடன் வந்து பணிப்பொறுப்பேற்கிறார். நளினியும் தங்குவும் நண்பர்களாகின்றனர். தங்கசாமி காட்டின் பல இயற்கை அழகுகளையும் அங்கு வசிக்கும் செந்நாய்கள், காட்டெருமை, மான்கள், யானைகள் இவற்றைப் பற்றியும் அவளுக்குக் கூறியும் காட்டிக்கொடுத்தும் பரிச்சயப்படுத்துகிறான். சுவையான பல திருப்பங்களுடனும், நிகழ்வுகளுடனும் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
இந்தக் கதையின் உச்சகட்டமாக தங்கசாமி ஒரு அழகான யானைக்குட்டியைப் பிடிக்கும் செயல் நிகழ்கின்றது. தனியொருவனாக அச்சிறுவன் தானறிந்துகொண்ட காட்டு வாழ்வின் சூட்சுமங்களைப் பயன்படுத்தி, அபூர்வமான, நெற்றியில் வெள்ளைப் பொட்டு கொண்ட அந்த யானைக்குட்டியைப் பிடிக்கிறான். அவனும் நளினியும் அதனைத் தோழனாக்கிக் கொண்டு வீட்டிலேயே வளர்க்கின்றனர். நளினி அதற்கு ராஜா எனப் பெயரிடுகிறாள். இந்த வீரச்செயலுக்காக ஆபீசர் அவனுக்கு தங்கச் சங்கிலி பரிசளிக்கிறார்.
அவர்கள் காட்டினுள் செல்லும் ஒரு சமயத்தில் செந்நாய்கள் தாக்குகின்றன. இவர்கள் இருவரும் ஒரு மான்குட்டியைச் செந்நாய்களின் தாக்குதலிலிருந்து விடுவிக்கப் போனபோது இது நிகழ்கின்றது. அதிர்ஷ்ட வசமாக அப்போது உடனிருந்த ராஜா எனும் அந்த யானைக்குட்டி இவர்களுக்குத் துணை புரிகிறது. மான்குட்டியுடன் வீடுவருகின்றனர் சிறுவர்கள். மின்னி என அதற்குப் பெயரிட்டு வளர்க்கிறாள் நளினி.
நாட்கள் இவ்வாறு செல்லும்போது வளர்ந்துவிட்ட மான்குட்டி மின்னி தன் கூட்டத்தினரோடு சேர ஆவலாக உள்ளது என்பதை அறிந்து கொண்டு அதனை மான் கூட்டத்துடன் சேர்த்துவிடுகின்றனர் சிறுவர்கள்.
பின்னொரு சமயம் யானை ஒன்று தனக்கு ஏற்பட்ட புண்ணை எவ்வாறு ஆற்றிக்கொள்கிறது எனக் கண்கூடாகக்கண்டு அறிகின்றனர்.
ஐந்தாறு ஆண்டுகள் கழிந்து விட்டமையால் நளினிக்குத் திருமணம் செய்வதற்காக என மனைவியின் வற்புறுத்தலின் பேரில் மாற்றல் வாங்கிக்கொண்டு செல்கின்றார் அந்தக் காட்டிலாகா அதிகாரி. அதற்கு முன்பு ராஜாவை கனத்த உள்ளங்களுடன் யானைக்கூட்டத்துடன் கொண்டு சேர்க்கின்றனர். இதற்குமுன்பு இவர்களை விட்டுச் சென்ற மின்னி தன் குட்டிகளுடன் அவர்களைக் காண ஒருநாள் வருகின்றது. இவ்வாறெல்லாம் கதை செல்கின்றது.
ஆபீசர் குடும்பம் ஊரைவிட்டுச் செல்கிறது. தங்கசாமி தனது உற்ற தோழர்களின் பிரிவால் உடல் மெலிந்து நீண்டநாள் நோய்வாய்ப்படுகிறான். பின் அவனுக்கும் காட்டிலாகாவில் வேலை கிடைக்கின்றது. பின்னொருநாள் ஒரு புது அதிகாரி பணியேற்க வருகிறார். அவர்தான் நளினியின் கணவர். அவளும் கூட வந்துள்ளாள். பார்த்தாலே அவள் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிகிறது. அவள் கணவருக்கு காட்டு மிருகங்களையும், பறவைகளையும் சுட்டுக்கொன்று வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பம். நாள் முழுதும் வேட்டுச்சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். தங்கசாமி இதனால் மிகுந்த மனவருத்தம் அடைகிறான்.
நளினியின் வரவை எப்படியோ அறிந்து கொண்ட ராஜா அவளைக் காண வருகிறான். இப்போது வளர்ந்து உயரமாக, யானைக்கூட்டத்திற்கே தலைவனாக விளங்கும் அவன்தான் என்ன அழகு! கம்பீரமாக இருக்கிறான். ஆபீசரிடம் நளினி அவனைச் சுட வேண்டாமென வேண்டிக் கேட்டுக் கொள்கிறாள். ஆனால் அவரை தங்கசாமி நம்பவில்லை. அதற்கேற்ப அவரும் ஒரு பௌர்ணமி தினத்தில் நளினியைக் காணவந்த ராஜாவைச் சுட்டு விடுகிறார். நளினி ஓடிச்சென்று ராஜாவை அணைத்தபடியே உயிர்விடுகிறாள். அவனும் தனது தும்பிக்கையால் அவள் இடுப்பை அணைத்தபடியே உயிர் விடுகிறான். யானைகள் கூட்டமாக வந்து அந்த வீடு, ஆபீசர், அந்தக் குடியிருப்பு, அதிலிருந்த அனைத்து ஜனங்கள், வீடு வாசல்களை சர்வநாசம் செய்து விடுகின்றன. ராஜாவையும் நளினியையும் தொடக்கூட இல்லை.
தங்கசாமி அவர்களை அங்கேயே சேர்த்துப் புதைத்து, சமாதி எழுப்புகிறான். பௌர்ணமி தோறும் அங்கு யானைகள் வந்து அஞ்சலி செலுத்துகின்றன. தங்கசாமியே அங்கு சூடம் ஏற்றிக் காட்டுகிறான்.
கதாசிரியர் தம் மருத்துவ நண்பரைக் காண அங்கு சென்றதாகவும், இதனை வயதுமுதிர்ந்த தங்கசாமி, அங்கு வாட்ச்மேனாக வேலை பார்க்கும்போது அவர்களிடம் சொன்னதாகவும் கதையில் கூறப்படுகிறது. இது ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதையே என எண்ணுகிறேன். நம்புகிறேன்.
என மனதில் பதிந்த கதை. ஒருமுறை தேக்கடி செல்ல வேண்டும்; ராஜாவின் சமாதியைக் காண வேண்டும், கதாசிரியரைச் சந்திக்க வேண்டும், உரையாட வேண்டும் எனவெல்லாம் எண்ணங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இன்றுவரை முயன்றும் ஒரு தொடர்பும் கிட்டவில்லை.
கதைப் போக்கிலேயே காட்டினுள் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவற்றையும் சேர்த்துக் கூறுகிறார் வயதான தங்கசாமி. அருமையான பரிந்துரைகள் அவை: ‘காட்டிலே போகும்போது பல விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை சிறிதுசிறிதாக நளினிக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது. காட்டினுள் போகும்போது, நம் கண்களும் காதுகளும் கூர்மையாக இருக்க வேண்டும். மிருகங்கள், காட்டிலுள்ள மரம் செடிகளிடையே பதுங்கி இருக்கும். பாம்புகள் இயற்கையின் வர்ணஜாலத்தில் மறைந்திருக்கும். இவைகளைக் கண்டுபிடிக்கும் சக்தி வேண்டும். அபாயம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நொடிப்பொழுதில் அதிலிருந்து தப்ப வழிசெய்து கொள்ள வேண்டும். விழித்துக் கொண்டு நின்றால், பயத்தினால் படபடத்தால், மரணம்தான்.’
கதாசிரியர் இந்நூலை 70-களில் பதிப்பித்த திரு. பனையப்பன் (அபிராமி பதிப்பகம்) கதைக்காக மட்டுமின்றி, சிறுவர்களிடம் நல்ல கருத்துக்களை, உணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமெனும் நோக்கத்துடனும் பதிப்பித்ததாகக் கூறுகிறார். தற்போது பிரதிகள் கிடைப்பதில்லை. திரு. கோபுலுவின் உயிரோட்டமான சித்திரங்களுடன் வெளிவந்த இந்நாவல், விகடன் பதிப்பகத்தாரால் அவ்வாறே மறுபிரசுரம் செய்யப்பட்டால், அற்புதமான ஒரு உண்மைக்கதை தமிழ்கூறும் நல்லுலகுக்கும், சிறுவர்களும் பெரியவர்களும் சேர்ந்து ரசிக்கக் கிடைக்கும். நடக்குமா?
(விரைவில் மீண்டும் சந்திப்போம்)
–
