Green Sea Turtle In Under Water by M.m. Sweet  ‘பாட்டி தூக்கம் வரல, ஒரு கதை சொல்லு’

‘ஓர் ஊர்ல ஒரு காக்கா இருந்ததாம்’

‘போ பாட்டி எப்ப பாத்தாலும் காக்காக்  கதை தானா’

‘ஆமா ஆமா அதுதான் மிகவும் புத்திசாலி, சரி அதே மாதிரி புத்தி       உள்ள ஓர் ஆமை கதை சொல்றேன்’

‘புத்திசாலி ஆமையா, சொல்லு சொல்லு, சீக்கிரம் சொல்லு பாட்டி’

‘ஓர் ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம், அந்த ராஜா தன்னுடைய பையனுக்காக ஒரு குளம் வெட்டி அதுல சில மீன்கள் எல்லாம் போடச்  சொன்னானாம், சாயந்திரமானா ராஜகுமாரன் தன்னுடைய நண்பர்களுடன் அந்த குளத்துப்  பக்கம் போய் சந்தோஷமா விளையாடிட்டு, மீன்கள் துள்ளி விளையாடுவதையும் பார்த்துட்டு வருவான்’

‘இது மீன் கதையா, ஆமை கதையா பாட்டி?’

‘பொறு அவசரப்படாதே, ஆத்திரக்காரனுக்குப்  புத்தி மட்டு’. ஒரு நாள் திடீர்னு அந்த மீன்கள் நடுவுல ராஜகுமாரன் ஓர் ஆமையைப் பார்த்தான், அவன் அதுக்கு முன்னாடி ஆமையைப் பார்த்ததில்லை. அதனால அது என்னன்னு தெரியாம ஒரு ராட்சசன் என்று நினைத்து, ராஜா கிட்ட போய் ‘அப்பா அப்பா, நான் குளத்துல ஒரு ராட்சசனைப் பார்த்தேன்’ அப்படின்னு சொன்னான். ராஜாவுக்கு ஒன்னும் புரியலை , ஆனா குழந்தை பயப்படறான் அப்படின்னு தன்னுடைய ஆட்கள் கிட்ட ‘அந்த ராட்சசனை அங்கிருந்து அப்புறப்படுத்திருங்க, அப்புறப்படுத்த முடியலைன்னா கொலை பண்ணிடுங்க’ அப்படின்னு சொன்னான்.

‘அப்புறம் என்ன ஆச்சு பாட்டி?”

சபையில் சில பேர் ‘அதை நசுக்கி போட்டுடுங்க’ சில பேர் ‘அந்த ராட்சசனை  ஏறிச்சி விட்டுடுங்க’ அப்படின்னாங்க. அப்ப தண்ணியைப்  பார்த்து பயப்படுற ஒரு வயதான மந்திரி ‘இதை தண்ணிக்குள்ள தூக்கி போட்டுருங்க இது தண்ணில இருக்கிற பாறையில் மோதி இறந்து விடும்’ அப்படின்னு சொன்னார்.

  ‘ஆமை செத்துப் போச்சா பாட்டி?’

  ‘புத்திசாலி ஆமைன்னு முதலிலேயே சொன்னேன் இல்லையா! பொறுமையாய் கேளு. ‘பொறுத்தார் பூமி ஆள்வார்”

 ‘பாட்டி பழமொழி அப்புறம். ஆமைக்கு என்னாச்சு.பயமாக இருக்கு’

       ‘கேளு, எல்லோரும் வருவதைப் பார்த்த ஆமைக்கு நிலமை புரிந்து போச்சு. அது உடனே தந்திரமாக ‘என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க, நான் இங்கே இருந்து எங்கேயாவது போயிடுறேன்’ அப்படின்னு கெஞ்சியது.

       ‘இல்லை எங்க ராஜகுமாரன் உன்னப் பார்த்து பயப்படுறான், அதனால நாங்க உன்னக் கொல்லப் போறோம்’

      ‘அப்படின்னா என்னைக் கடலில்  மட்டும் போட்டு விடாதீர்கள், என்னைக் கடலில்  போட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்’

     இதை கேட்ட அந்த ஆட்கள் ‘ஆஹா இதுவே தனக்கு வலை விரிச்சுக்கிறது’

  அப்படின்னு சொல்லிட்டு உடனே அதைத்  தூக்கிக் கடலில் போட்டு விட்டனர்.

     ‘ஆனா ராமு, உனக்குத் தெரியுமா ஆமை மீன் மாதிரி இல்லை, தண்ணீரிலும் உயிர் வாழும், தரையிலும் உயிர் வாழும், எப்படி பாரு புத்திசாலித்தனமா தன்னைக் காப்பாத்திக் கொண்டது. அந்த மாதிரி நீயும் ஏதாவது ஆபத்து வந்தா புத்திசாலித்தனமா யோசிச்சு அதிலிருந்து தப்பிச்சு வெளில வர பாக்கணும், பெரியவர்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க ‘கத்தியைத்  தீட்டாதே உன் புத்தியைத்  தீட்டு’ ‘ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு’

   ‘ஆமாம் பாட்டி. ஆஞ்சநேயர் ஸ்லோகத்தில் கூட நீ சொல்லிக் கொடுத்திருக்க ‘புத்திர் பலம் யசோ தைர்யம்’!