வடவொளி எனும் ‘நார்தன் லைட்ஸ்’ பற்றிய உரையாடலைத் தொடர்ந்து டைம் ஷேர் ஹவுஸ் ஓனர், ஐஸ்லாந்து பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் சில துளிகள் ;
*********************************
ஐஸ்லாந்தின் புவியியலும் அரசியலும்
ஒன்பதாம் நூற்றாண்டிலேயே ஐஸ்லாந்தின் சரித்திர பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன என்றாலும், நார்வே, டென்மார்க் நாட்டு மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான் பெரும்பாலும் இந்த பகுதி இருந்து வந்துள்ளது.
டேனிஷ் – ஐஸ்லாண்டிக் யூனியன் ஒப்பந்தத்தின்படி டேனிஷ் மன்னர் ஆட்சியிலிருந்து முழுவதும் விடுபட்டு 1944 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி ஐஸ்லாந்து குடியரசானது.
The Althing என்கிற இடம்தான் உலகத்தின் மிகப் பழமையான, எஞ்சியிருக்கும் பாராளுமன்ற கட்டிட வளாகம் என்கிறார்கள். 930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த இடம் தலைநகர் ரேக்கவிக்கிலிருந்து 45 கிமீ தூரத்திலுள்ளது.
ஐஸ்லாந்தின் ஜனாதிபதியாக 1980 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற VIGDIS FINNGADOTTIR தான் உலகளவில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ‘பெண் ஜனாதிபதி’ ஆவார். 1996 வரை தொடர்ந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் இவர். இந்நாட்டு தேர்தலில் பெருமளவில் பெண்கள் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள்.
ஒரு நாட்டின் கொடி, அந்த நாட்டின் புவியியலை முழுவதுமாக வர்ணிக்க முடியுமா?
முடியும், என்கிறது ஐஸ்லாந்தின் கொடி! நீல வண்ணக் கொடியில், வெள்ளை மற்றும் சிவப்பில் ஒரு கூட்டல் குறி போன்ற கோடுகள் உள்ளன. நீலம், கடல் பிரதேசத்தையும், சிவப்பு, எரிமலைகளையும், வெள்ளை, பனிப் பாறைகளையும் குறிக்கின்றன.
சுற்றுச்சூழலில் மிகுந்த கவனம் கொண்ட நாடான இது, தனது மின்சார தேவையில் 85 சதவிகிதத்திற்கு மேல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டே தயாரிக்கிறது.
ஐரோப்பா நாடுகளில் மிகவும் அமைதியான நாடு இது. கடைசியாக 1238 ஆம் ஆண்டுதான் இங்கு போர் நடந்தது. தனி இராணுவம் இல்லை. பாதுகாப்பை ‘நேட்டோ’ கவனித்துக் கொள்கிறது. குற்றங்கள் குறைவு என்பதால், காவலர்கள் தேவையானால் மட்டுமே ஆயுதங்களை உபயோகிக்கிறார்கள். பொதுவாக பெப்பர் ஸ்ப்ரேயைத்தான் கையில் வைத்துக் கொள்கிறார்களாம்.
அணு ஆயுத குறைப்பு மாநாடு 1986 ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 10,11 தேதிகளில் இங்கு நடந்தது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மற்றும் சோவியத் யூனியனின் அதிபர் கோர்பச்சேவ் தலைமையில் இந்த மாநாடு நடந்தது. ‘உலக பனிப்போர்’ முடிவுக்கு வர ஒரு முக்கிய திருப்புமுனையாக இது அமைந்ததாக கருதப்படுகிறது.
ஐஸ்லாந்தின் சில இடங்களில் உள்ள நிலப் பரப்பு கிட்டத்தட்ட சந்திர மண்டலத்திலுள்ள தரைப்பரப்பை ஒத்து இருப்பதால், முதன்முதலாக நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் உட்பட, அப்போலோ மிஷன் விண்வெளி வீரர்கள் இங்குதான் பயிற்சி எடுத்துக்கொண்டார்களாம்.
*********************************
ஐஸ்லாண்டிக் மொழி
“மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற் றலும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மை வந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்கறை
யூரிற் பாண்டி கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நா நமச்சிவாயவே..”
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய தேவார பதிகப் பாடலின் வரிகள் இவை. சுமார் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இப்பாடல் வரிகளின் அர்த்தம் இன்னும் நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? இன்றும் இலக்கியத் தமிழ் பெருமளவில் சிதையாமல் இருப்பதுதான் இதற்கு காரணம் என்பார்கள், அறிஞர் பெருமக்கள்.
ஐஸ்லாண்டிக் மொழியும் இதைப் போலவே, கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் கடந்து வளமையுடன் உள்ளது.
ஐஸ்லாந்தின் வானிலையை அடிக்கடி மாற்றுவது காற்று’தான் ; காற்றுக்கு தமிழ் மொழியில் – வளி, தென்றல், வாடை, புயல், சூறாவளி, ஊதக்காற்று.. என பல சொற்கள் இருப்பது போல, 150 க்கும் மேற்பட்ட சொற்கள் ஐஸ்லாண்டிக் மொழியிலும் உண்டு என்கிறார்கள்.
எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசம் இது! ஐஸ்லாந்தில் 10 பேருக்கு ஒருவர், குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது தன் வாழ்நாளில் பதிப்பிக்கிறார் என்கிறார்கள்.
நம்மூரில் ஜனவரி புத்தக கண்காட்சியை முன்னிட்டு நிறைய புத்தகங்கள் டிசம்பர் மாதம் புதிதாக பதிப்பிக்கப்படும் அல்லவா..
ஐஸ்லாந்திலும் டிசம்பர் மாதத்தில் பிரிண்டிங் பிரஸ் கூடங்கள் மிகவும் பிஸியாக இருக்கும். காரணம் கிறிஸ்துமஸ், முன்னிட்டு நிறைய புது புத்தகங்கள் அச்சடிக்கப்படும்.
கிறிஸ்துமஸுக்கு முதல் நாள், அதாவது கிறிஸ்துமஸ் ஈவ் அன்று ஒரு புதுப் புத்தகத்தை சந்திப்பவர்களுக்கு கொடுப்பது இங்குள்ளவர்களின் வழக்கமாக உள்ளது. சுடச்சுட அந்தப் புத்தகத்தை வாசிப்பதில் கிறிஸ்துமஸ் இரவு நகருமாம்.
ஐஸ்லாந்தின் HALLDOR LAXNESS என்பவருக்கு 1955 ஆம் ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. சமூகப் பிரச்சனைகளை சாடிய பிரபல கவிஞர் TOMAS GUDMUNDSSON (1901) ஐஸ்லாந்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ஐஸ்லாந்து நாட்டினரை பொதுவாக இப்படி வர்ணிக்கலாம் ; மெத்தப் படித்தவர்கள், சட்டத்தை மதிப்பவர்கள், நெடநேரம் உழைப்பவர்கள், நீண்ட நாள் வாழ்பவர்கள் !
*********************************
ஐஸ்லாந்தும் இசையும்
உலகப் புகழ்பெற்ற Music Band’ களை உருவாக்கிய நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. தலைநகர் ரேக்கவிக்’கில் நடைபெறும் இசைத் திருவிழாக்கள், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பிரபலமானவை.
இரவிலும் சூரிய வெளிச்சம் (Midnight Sun) இருக்கும் ஜூன் மாத மத்தியில் நடைபெறும் ‘Secret Solstice Festival’ சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது; எப்போதும் பகல் என்பதால் நேரக்கணக்கு இல்லாமல் இசை மழை கொட்டும் வைபவம் இது.
நவம்பர் மாதத்தில், நான்கு நாட்கள் நடக்கும் ‘ICELAND AIRWAVES’ இசைத் திருவிழாவிற்கு உலகெங்கிலுமுள்ள இசைக்குழுக்கள் வந்து பங்கேற்கின்றன. இளம் ரசிகர்கள் கூட்டம் இதற்கு அலைமோதுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விழாக்களும் இங்கு களைகட்டும்.
**********************************
ஐஸ்லாந்தும் சில ஆச்சரியங்களும்
நம்ம ஊர் பாட்டிமார்கள் புராணக் கதைகள் சொல்வது போல, இங்கும் ‘வைகிங்’ காலத்து புராணக் கதைகள் சொல்லும் வழக்கம் உள்ளது. ‘குட்டிச்சாத்தான்’ போன்ற அமானுஷ்ய நம்பிக்கைகளும் இங்கு உண்டு.
ஐஸ்லாந்தில் பிறந்த குழந்தைக்கு இஷ்டப்படி பெயர் வைக்கலாம். ஆனால், அந்தப் பெயரை ஒரு கமிட்டி ஒப்புதல் அளித்தால்தான் தொடரமுடியும்.
ஏதாவது விசேடத்துக்கு அழைத்தால், பார்ட்டிக்கு வருபவர்கள் நுழைந்ததும், “TAKK FYRIR SIOAST” என்பார்களாம். அதற்கு அர்த்தம் “கடந்த முறை உங்களைச் சந்தித்ததற்கு நன்றி”
வீட்டுக்குள் செருப்பு அல்லது ஷூ அணிந்து நுழைபவர்களை, நம் ஊர் மக்களைப் போல ஐஸ்லாந்து மக்களும் ரசிப்பதில்லை.
10 வீடுகளுக்கு ஒரு வீட்டில் பூனை வளர்க்கிறார்கள் இங்கு!
1986 ஆம் ஆண்டு வரை இருந்த ஒரே தொலைக்காட்சி சேனலுக்கு (அரசு சார்ந்தது) ஒவ்வொரு வியாழக்கிழமையும் ‘ஒளிபரப்பு விடுமுறையாக’ இருந்துள்ளது. குடும்பத்தோடு மக்கள் ஒரு நாளாவது தனிப்பட்ட முறையில் செலவிடச் செய்யப்பட்ட வித்யாசமான ஏற்பாடு இது.
இந்த ஐரோப்பிய நாட்டில், 1915 இலிருந்து 1989 ஆம் ஆண்டு வரை ‘பீர்’ தடை செய்யப்பட்டிருந்தது என்றால் நம்ப முடிகிறதா? 1989 ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி, இந்த தடை நீக்கப்பட்டது. அதனால் பிரதி வருடம் மார்ச் ஒன்றாம் தேதி ‘பீர் டே’ என்று கொண்டாடுகிறார்கள்.
இந்த நாட்டில் இருந்து ஒரு குதிரை வெளிநாடு போனால், போனது போனதுதான். திரும்பி இந்நாட்டிற்குள் நுழைய அனுமதி கிடையாது. எந்த வெளிநாட்டிலிருந்தும் குதிரைகள் வர அனுமதிக்காததுதான் இந்த நாட்டில் உள்ள குதிரைகள் நோய் இல்லாமல் இருப்பதற்கும், ரத்தத்தின் தன்மை கெடாமல் இருப்பதற்கும், ‘Breed Purity’ யாக இருப்பதற்கும் காரணம் என்கிறார்கள்.
**********************************
பயணிகளின் கவனத்திற்காக :
ஐரோப்பா யூனியனில் ஒரு பிரதேசமாக ஐஸ்லாந்து இருப்பதால், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சுற்றுலா செல்ல SCHENGEN விசா தேவை. ஐஸ்லாண்டிக் என்பது உள்ளூர் மொழியாக இருந்தாலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகம். இந்த நாட்டின் கரன்சியின் பெயர் ICELANDIC KRONER.
சுற்றுலாவிற்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தேவை. அதிகபட்சம் ஏழு நாட்களும் அதற்கு மேலும். கோடைக் காலம் என்றால் ஐஸ்லாந்தின் அழகைப் பார்க்கலாம். குளிர்காலம் என்றால் ‘நார்தன் லைட்ஸ்’ பார்க்கலாம். வருபவர்கள் பொதுவாகப் பார்க்க விரும்புவது கோல்டன் சர்க்கிள் டூர், ப்ளூ லகூன், நார்தன் லைட்ஸ் ; பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வசதிகள் குறைவு ஆனாலும், ரேக்கவிக்கில் நிறைய டூர் ஆப்பரேட்டர் இருக்கிறார்கள்.
மக்கள் தொகை, 4 லட்சத்திற்கும் குறைவாக உள்ள இந்த நாட்டிற்கு, வருடா வருடம் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்கிறார்கள். உள்கட்டமைப்பு வசதிகள் அதற்கேற்றபடித் தயாராகி வருகின்றன. அதைப் புரிந்து கொண்டு, பயணிகள் அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளுதல் அவசியம்.
குளிர்காலமோ, கோடை காலமோ எவ்வளவு நேரம் வெளிச்சம் இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்பப் பயணத் திட்டங்களை வடிவமைத்துக் கொள்ளுதல் நலம்.
பார்க்க வேண்டிய இடங்கள் லிஸ்டில் அதிக இடங்கள் போட்டு நிரப்பாதீர்கள். அவசரமாக, வெறும் டிக் அடித்து கொண்டு ஓடாமல், பார்க்க வேண்டிய இடத்திற்குத் தேவையான அவகாசம் ஒதுக்க வேண்டியது அவசியம். பயணத்தில், சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுக்கும் மனநிலையும் தேவை.
வானிலை நிலவரத்தை அவ்வப்போது பார்த்து அதற்கேற்றவாறு உடைகளை அதிகப் படுத்திக் கொள்ள வேண்டும். தெர்மல் உடைகள், வாட்டர் ப்ரூப் ஜாக்கெட்டுகள், சுடுநீர் குளங்களுக்கான Swim Suit, தொப்பி, கூலிங் கண்ணாடிகள் போன்றவை தேவை. 220 Volts பவர் socket இங்கு உபயோகத்தில் உள்ளது.
வாகனத்தை, வாடகைக்கு எடுத்து, தானே ஓட்டுபவர்கள், நவம்பர் முதல் மார்ச் வரை பனிவிழும் காலம் என்பதால், பனி காலங்களில் வாகனங்களைத் திறமையாக இயக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். 4 x 4 Wheel drive வாகனம் அவசியம். ஒரு இடத்திற்குக் கிளம்புவதற்கு முன், சாலை நிலவரங்கள், போக்குவரத்து தடைகள் ஏதும் இருக்கிறதா? என்று அறிந்து கொள்ள வேண்டும்.
இங்கு வாட்டர் டேப்’பில் இருந்து தைரியமாக தண்ணீர் குடிக்கலாம் என்பார்கள். தண்ணீர், கிளேஸியர் பகுதியிலிருந்து வருவதால் படு சுத்தம். அசைவ உணவு கிடைப்பதில் பிரச்சனை இல்லை. வெஜிடேரியன் உணவுதான் தேவை என்றால் சமைத்துக் கொள்வது உசிதம். ரேக்கவிக்’கில் நிறைய இந்திய உணவகங்கள் உள்ளன. முழுவதும் தீவுப்பகுதி என்பதால், பொதுவாக உணவு விலை அதிகம். உணவகத்தில் டிப்ஸ் அனேகமாக பில்லில் சேர்ந்தே வரும்.
தயிருக்கு பதிலாக இங்கு கிடைக்கும் yogurt இன் பெயர் SKYR. இது, நல்ல கெட்டியாக, ருசியாக உள்ளது. அதேபோல மண்ணுக்கு அடியில் ஜியோ தெர்மல் எனர்ஜி சூட்டின் மூலம் தயாரிக்கப்படும் கேக்குகளின் ருசியும் அலாதி.
உல்லன் ஸ்வெட்டர்கள் வாங்குவதாக இருந்தால், வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் ஸ்வெட்டர் வாங்குவது சாலச் சிறந்தது
வெளியில் செல்லும் இடங்களுக்கு கையோடு ஒரு பை எடுத்துச் செல்வது அவசியம். குப்பைத் தொட்டிகளைப் பார்க்கும் பொழுது, சேரும் குப்பைகளை அகற்றிவிடலாம்.
– உரையாடலில் நேரம் கடந்ததே தெரியவில்லை. மறுநாள் ஊர் திரும்ப, ‘எத்தனை மணிக்கு ஏர்போர்ட்டில் விட வேண்டும்’ என்ற தகவல்களை கேட்டுக் குறித்துக் கொண்டார், ஓட்டுநர் ஜோன்.
**********************************
அடுத்த நாள் கிளம்புவதற்கு முன் உடைமைகளை வாகனத்தில் ஏற்றும் பொழுது டைம் ஷேர் ஓனர் வந்தார்.
“நேற்று ஜோனிடம் ஏர்போர்ட் போகும் வழியில் Souvenir வாங்க வேண்டும் என்று சொன்னீர்களே, இந்தாருங்கள்..” என்று ஒரு சிறிய பார்சலைக் கொடுத்தார்,
“இதில் என்ன இருக்கிறது?”
“ஐஸ்லாந்து எழுத்தாளர் எழுதிய, இந்நாட்டில் பதிப்பிக்கப்பட்ட புத்தகம். நீங்கள் வேறு எந்த பரிசு பொருள் வாங்கினாலும் அதன் மூலப் பொருள் வேறு நாட்டில் செய்யப்பட்டிருக்கலாம். இது ஒரிஜினல் ஐஸ்லாந்துப் பரிசு!” என்றார்
“நிச்சயம் இது மிகத் தகுதி வாய்ந்த பரிசுப் பொருள்தான். எழுத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதால் நிச்சயம் நீங்கள் இதற்கு பணம் வாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும்” என்று கொடுத்தாள் மனைவி.
எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பினோம். ஓனரின் குழந்தை, எங்கள் வாகனம் மறையும் வரை கையசைத்துக் கொண்டிருந்தது.
மீண்டும் KEFLAVIK விமான நிலையம் : ஓட்டுநராக மட்டுமின்றி, ஒரு நண்பராகவும் எங்களுடன் இருந்த ஜோன் அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.
விமானம் தன் ஓடுகளத்தைத் துறந்து மேலெழும்பி உயரம் தொட, கீழே புள்ளியாக பல வீடுகள், கார்கள்.. – அதனுள் ஜோன், டைம் ஷேர் ஹவுஸ் ஓனர் போன்ற நல்ல உள்ளங்கள் !
இருக்கையில் சாய்ந்த போதும், மனக்கண் வழியே வண்ணங்கள் கொண்ட மலைகளும், வெள்ளி அருவிகளும், பனிப் பாறைகளும், நீலக்கடலும் எங்களுடனேயே தொடந்து பயணித்தன..
(நிறைந்தது)
**********************************
