“சிறுவர்களுக்காக எழுதிய புகழ் பெற்ற எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா”
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சொந்த ஊராகக் கொண்ட ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் 27 மே 1935 அன்று பிறந்தவர். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்ற இவர் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் முதலான மொழிகளை நன்கு அறிந்தவர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சிறுவர்களுக்காக கதைகளை எழுதத் தொடங்கிய சாதனையாளர்.
ஜோதிர்லதா கிரிஜா எழுதிய முதல் சிறுவர் கதை 1950 ஆம் ஆண்டில் “ஜிங்லி” என்ற பத்திரிகையில் ரா. கி. ரங்கராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரபல சிறுவர் இதழ்களான கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை முதலான இதழ்களில் பல சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகளை எழுதினார்.
பள்ளி நாட்களிலேயே சிறுவர்களுக்காக எழுதத் தொடங்கிய இவர் தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி. முதலான பிரபல எழுத்தாளர்களால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் வரை தொடர்ந்து இவர் சிறுவர்களுக்கான பல இலக்கியங்களைப் படைத்து வந்தார். 1968 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவர் பெரியவர்களுக்கு எழுதும் எழுத்தாளராக மாறி அதிலும் பெரும் சாதனைகளைப் படைத்தார்.
சிறுவர்களுக்காக பிரத்யேகமாக “சுவடிகள் சொன்னதில்லை, “புரியாத புதிர்”, “வனஜாவின் அண்ணன்”, “தாயின் மணிக்கொடி”, “யாருக்கு அரசுரிமை ?” “நீயா ?” “நல்லதம்பி”, “புரட்சிச்சிறுவன் மாணிக்கம்” ஆகிய எட்டு நாவல்களை எழுதியுள்ளார். மேலும் சிறுவர்களுக்காக “சுதந்திரச் சிற்பி சுப்பிரமணிய பாரதி” வாழ்க்கை வரலாற்று நூல், “அநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் தொகுதி 8” மற்றும் “அநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் தொகுதி 9” முதலான நூல்களையும் எழுதியுள்ளார்.
தனது சிறுவர் இலக்கியப் படைப்புகளுக்காக இவர் பல விருதுகளை வென்றுள்ளார். 1962 ஆம் ஆண்டில் “கண்ணன்” பத்திரிகை நடத்திய தொடர்கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். 1978 ல் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர் நாவல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர். இவர் எழுதிய “தாயின் மணிக்கொடி” என்ற சிறுவர்களுக்கான நாவல் ரஷ்ய மொழியான யுக்ரெய்னில் மொழி பெயர்க்கப்பட்டு மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் 1987 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சிறுவர் இலக்கியப் பணிகளை கௌரவிக்கும் விதமாக இவருக்கு கான்பூர் பாரதீய பால் கல்யாண் சம்ஸ்தான் விருதினை வழங்கியது. 1998 ஆம் ஆண்டில் கே.ஆர்.வாசுதேவன் அறக்கட்டளையினர் இவர் எழுதிய சிறுவர் நூலினை சிறந்த சிறுவர் நூலாகத் தேர்வு செய்து விருதளித்து கௌரவித்தார்கள். 2003 ல் சேலம் ஈ.ஆர்.கிருஷ்ண அய்யர் அறக்கட்டளை சிறந்த சிறுவர் இலக்கியத்திற்காக பரிசினை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
சிறுவர் இலக்கியத்தில் பெரும் சாதனை படைத்த இவர் தனது 89 வது வயதில் 18 ஏப்ரல் 2024 அன்று சென்னையில் காலமானார்.


