எஸ் ராமகிருஷ்ணன் கருத்து:
ஜப்பானில் மட்டும் ஏன் காமிக்ஸ் அதிகம் படிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஜப்பானியர்கள் சொல்லும் பதில், ஜப்பானில் மட்டும் தான் ஒசாமு டெசூகா (Osamu Tezuka) இருக்கிறார், இவரது சித்திரக்கதைகளை ஒரு முறை வாசித்தால் போதும் பிறகு வாழ்க்கை முழுதுவம் நீங்கள் மாங்கா வாசிப்பவராகி விடுவீர்கள் என்கிறார்கள், அது உண்மை தான்
ஒசாமு டெசூகாவை மாங்காவின் கடவுள் என்று சொல்கிறார்கள்.
மாங்கா என்பது ஜப்பானிய காமிக்ஸ், ஐந்து முதல் ஐம்பது வரை ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவகையில் காமிக்ஸ் புத்தகங்கள் ஜப்பானில் கிடைக்கின்றன, இதில் ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ், டால்ஸ்டாய் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளும் கூட படக்கதைகளாக வெளியிடப்பட்டிருக்கினறன,
மாங்கா வாசிப்பது சினிமா பார்ப்பதற்கு நிகரான ஒன்று, மாங்கா காமிக்ஸின் இரண்டு முக்கிய அம்சங்கள் ஒன்று dramatic மற்றது action-filled, ஆகவே விறுவிறுப்பான கதை சொல்லல் காரணமாக கையில் எடுத்த புத்தகத்தை கிழே வைக்கவே முடியாது, குறிப்பாக க்ளோஸ்அப் காட்சிகளாக வரையப்படும் படங்கள் கதையின் உணர்ச்சிநிலையைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன
மாங்காவில் economic manga, erotic manga, violent manga, sports manga, romance manga, literary manga, historical manga, joke manga. Information manga, என பலவிதங்கள் உள்ளன, இதில் சாமுராய் கதைகள் துவங்கி அறிவியல் அறிஞர்கள், தத்துவ ஆளுமைகள், உலகப்புகழ்பெற்ற கலைஞர்கள் என பலரது வாழ்க்கையும் மாங்காவாக வெளியிடப்பட்டிருக்கினறன, இது போலவே மிதமிஞ்சிய பாலியல் அம்சங்களை கொண்ட XXX மாங்கா காமிக்ஸ்களும் வயது வந்தோருக்காக வெளியிடப்படுகின்றன
ஜப்பானிய சித்திரக்கதை மரபில் முன்னோடி ஒவியர் டெசூகா. இவர் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ஒவியங்களை வரைந்து 700 மாங்கா காமிக்ஸ் புத்தகங்களாக உருவாக்கியிருக்கிறார், இது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இரண்டு லட்சம் ஒவியங்கள் வரைந்து 500 எபிசோட் அனிமேஷன் படங்களை உருவாக்கியிருக்கிறார்,
புத்தரின் வாழ்க்கையை ஒசாமு டெசூகா எட்டு தொகுதிகளாக மாங்கா காமிக்ஸ் வடிவில் வெளியிட்டிருக்கிறார், அதில் முதல்பகுதி தற்போது திரைப்படமாக்கபட்டிருக்கிறது
ஹிந்து தமிழில் வெளிவரும் படக்கதை:




நன்றி: (https://www.hindutamil.in)


தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு கண்ணோட்டம்
https://mudhalaipattalam.blogspot.com/2011/10/blog-post.html
தமிழ் காமிக்ஸ் பற்றிய கருத்துக்கணிப்பு எடுத்தால் அதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தான் நிறைந்திருக்கும். மேலைநாடுகளில் 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட காமிக்ஸ் (சித்திரக்கதை) புத்தகங்களின் பதிப்பக உரிமைகளைப் பெற்று, குமுதம், கல்கி, ராணி, தினமணிக்கதிர், ஆனந்த விகடன் ஆகிய நாளிதழ்களில் முதன்முதலாக தமிழில் தொடர்கதைகளாகச் சித்திரக்கதைகள் வெளிவரத் தொடங்கின. அதன் பின்னர் 1965-ம் வருடத்திற்குப் பின் ஃபால்கன் காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், வித்தயார்த்தி மித்ரம் ஆகிய புத்தக நிறுவனங்கள் முழுநீள சித்திரக்கதைகளாக வெளியிட்டுள்ளனர்.
தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் 1965-ம் வருடம் முதல் வெளிவந்துகொண்டிருந்தாலும், 1984-ம் வருடம் முதல் 1995-ம் வருடம் வரை தான் காமிக்ஸ்களுக்குப் பொற்காலமாக விளங்கியது.
இந்த காலகட்டத்தில் தான் புற்றீசல் போல ஏராளமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் புதிது புதிதாக மாதந்தோறும் வெளிவந்த வண்ணமாக இருந்தன. லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், திகில் காமிக்ஸ், முத்து மினி காமிக்ஸ், வாசு காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ஜூனியர் லயன் காமிக்ஸ், சக்தி காமிக்ஸ், ரேகா காமிக்ஸ், பிரியா காமிக்ஸ்,ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ், மலர் காமிக்ஸ், காக்ஸ்டன் காமிக்ஸ், ரத்னா காமிக்ஸ், சோலை காமிக்ஸ், எழில் காமிக்ஸ், கஸ்தூரி காமிக்ஸ், சூர்யா காமிக்ஸ், பிரியதர்ஷினி காமிக்ஸ், ஸ்டார் காமிக்ஸ், ஐஸ்பெர்க் காமிக்ஸ், பார்வதி காமிக்ஸ், அணில் அண்ணா காமிக்ஸ், மதி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், தேசமலர் காமிக்ஸ், முயல் காமிக்ஸ், அமர்சித்ரா காமிக்ஸ், லஷ்மி காமிக்ஸ், ராஜா காமிக்ஸ், லீலா காமிக்ஸ், ஸ்வீட்பேபி காமிக்ஸ், பாபா காமிக்ஸ், மாயாவி காமிக்ஸ் இன்னும் பல தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து காமிக்ஸ் வாசகர்களுக்குக் கொண்டாட்டமாக இருந்த காலம்.
துப்பறியும் கதைகள், கௌபாய் கதைகள், காமெடி கதைகள், விண்வெளிக் கதைகள், திகில் கதைகள், மாயாஜாலக்கதைகள், சாகசக்கதைகள், க்ரைம் கதைகள், யுத்தக்கதைகள் எனப் பலவித கதைகள் காமிக்ஸ் புத்தகங்களாக வெளிவந்ததால் எதை வாங்குவது எதைப் படிப்பது என்று வாசகர்கள் திக்குமுக்காடிய காலகட்டமும் கூட.
அப்போதைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகக் குறைவாக இருந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்த காரணத்தினால், படிக்கும் வாசகர்களும் அதிகமாகிக்கொண்டே இருந்தனர். நிறைய வாசகர்கள் படித்த இதழ்களைச் சேகரிக்கவும் தொடங்கினர். ( இன்றும் நிறைய வாசகர்கள் பழைய காமிக்ஸ் புத்தகங்களை பொக்கிஷம் போல் சேமித்து வைத்துள்ளனர். நிறைய புதிய வாசகர்கள் பழைய புத்தகங்களைத் தேடிக்கொண்டும் அதிக விலைகொடுத்து வாங்கிக்கொண்டும் இருக்கின்றனர்.)
தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் எட்டாத உயரத்தில் இருந்த நிலை மாறி 1995 –ஆம் வருடத்திற்குப் பிறகு இதன் நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. புயலில் சிக்கிக் காணாமல் போன மாதிரி நிறைய புத்தக நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. லயன் காமிக்ஸ், முத்துகாமிக்ஸ் இந்த இரண்டு புத்தகங்கள் மட்டும் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதுவும் வருடத்திற்கு ஆறு புத்தகங்கள் வருவதே அபூர்வமாக உள்ளநிலையில் உள்ளது.
இந்த நிலைக்கு காமிக்ஸ் புத்தகங்கள் குறைந்தது, வாசகர்கள் குறைந்தது, விற்பனை மந்தமான காரணங்களை ஆராய்ந்தால்? இன்டர்நெட், செல்போன்,வீடியோ கேம்கள், கார்ட்டூன் சேனல்கள், மக்கள் ஆங்கில மோகத்திற்குத் தாவியது, புதிய வாசகர்கள் இல்லாதது, என பலவித குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் இவை மட்டும் புத்தகங்கள் குறைந்துபோக காரணங்கள் அல்ல. புத்தகப் பதிப்பாளர்களிடம் சரியான திட்டமிடுதல் இல்லாதது மாதந்தோறும் புத்தகமே வெளிவராதது, விளம்பரங்கள் எதுவும் இல்லாதது, சரியான தேதிகளில் புத்தகம் கடைகளில் கிடைக்காதது, புதிய முயற்சிகள் இல்லாதது, நிறைய வாசகர்கள் புத்தகமே சரியாக கிடைக்காத ஏமாற்றத்தினால் படிப்பதையே நிறுத்திவிட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் விற்பனை மந்தமானதே தவிர, புதிய வாசகர்கள் இல்லாத காரணத்தினால் மட்டுமல்ல என்பதை புத்தகப் பதிப்பாளர்கள் உணர வேண்டும்.
உதாரணத்திற்கு 2009 ஆம் வருடம் சென்னையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதில் யாருமே எதிர்பார்க்காத விதமாக அனைத்து புத்தகங்களும் விற்றுத்தீர்ந்தன. சிறுவர்களும் பெரியவர்களும் வயது வித்தியாசமின்றி தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிச் (அள்ளிச்) சென்றனர்.
லயன் காமிக்ஸ் நிறுவனத்தார் (பிரகாஷ் பப்ளிஷர்ஸ்) முதன்முறையாக 420 பக்கங்களுடன் லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல் என்ற புத்தகத்தை 100/- ரூபாய் விலையில் வெளியிட்டனர். வெளிவந்த உடனே அவர்களே எதிர்பாராத விதமாக அனைத்து இதழ்களும் விற்றுத்தீர்ந்து சாதனைப் படைத்துள்ளது. அதன் பின்னர் கௌபாய் ஸ்பெஷல், லயன் ஜாலி ஸ்பெஷல் என்ற புத்தகத்தை அதே 100/- ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளனர். இதுவும் விற்றுத்தீர்ந்ததும் அதிரடியாக 840 பக்கங்களுடன் 200/- ரூபாய் விலையில் கலெக்டர்ஸ் ஸ்பெஷல் (இரத்தப்படலம்1-18) என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்தினர். புத்தகம் வெளிவருவதற்கு முன்பே 800-க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். கலெக்டர்ஸ் ஸ்பெஷல் புத்தகம் வெளிவந்து கடைகளுக்குச் செல்லாமலே விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். புதிய வாசகர்கள் யாவரும் இல்லாமலா? இவைகள் சாத்தியமானது? இதை புத்தகப் பதிப்பாளர்கள் சிந்தித்து மீண்டும் புதிய முயற்சிகளோடும், தரமான கதைகளாகவும் மாதம் தவறாமல் புத்தகத்தை வெளியிட்டு சரியான தேதிகளில் கடைகளில் கிடைக்குமாறு செய்தால்? புத்தகத்திற்கென்று கூடுதல் கவனம் செலுத்தினால்? இந்தத் துறையில் மீண்டும் பழையபடி முத்திரைப் பதிக்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவோ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தாலும், தமிழ் காமிக்ஸ் புத்தகத்திற்கு என்றென்றும் தனி மவுசு உண்டென்பதைப் பதிப்பாளர்கள் உணர வேண்டும். முன்பு போல் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் நிறைய வெளிவராதா? என்று ஏங்கிக்கொண்டிருக்கும் வாசகர்கள் இன்னும் ஏராளமானவர்கள் உள்ளனர். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் என்றும் நசிந்துவிடாமல் இன்னும் ஏராளமான புதிய புத்தகங்கள் முன்புபோல் வெளிவரவேண்டும் என்பதே அனைவரது ஆவலாகவும் உள்ளது. மீண்டும் மலரவேண்டும் காமிக்ஸ் பொற்காலம்.
மேத்தா காமிக்ஸ்
ராணி காமிக்ஸ்
இந்திரஜால் காமிக்ஸ்
பூவிழிக் காமிக்ஸ்
ஐஸ் பேர்க்
ரத்ன பாலா
பாலமித்ரா
இந்திரஜால் சித்திரக்கதையின் தோற்றம்
https://mudhalaipattalam.blogspot.com/2019/04/1-1965-1988.html
டைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)
அதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகதூர், ஆதித்யா, புரூஸ்லீ, வால்டிஸ்னியின் கதைகள் (ராபின் ஹுட்) போன்ற நாயகர்களின் கதைகளையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தமிழ், இந்தி, தமிழ் உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் இந்திரஜால் காமிக்ஸ் வெளியிடப்பட்டது. சித்திரக்கதை உலகில் வேதாளன் கதைகள் மூலமே இந்திரஜால் காமிக்ஸ் தனித்து அடையாளம் காணப்பட்டது.
1965-ஜனவரி மாதம் முதல் தமிழில் மாதம் ஒரு இதழ் என்ற வரிசையில் சித்திரக்கதைகள் வெளியிடப்பட்டன. முதல் 24 இதழ்கள் வரை, ஒரு மாயவிளக்கு அருகே ஒரு சிறுவன் உட்கார்ந்து இருப்பது போலவும், அந்த மாய விளக்கிலிருந்து வெளியாகும் புகை அவனைச் சுற்றி இருப்பது போலவும் லோகோவை அமைத்து வெளியிட்டனர். 25 வது இதழுக்குப் பின்னர் வெளிவந்த இதழ்களிலிருந்து வெறும் மாயவிளக்கு (அலாவூதீனின் அற்புத விளக்கு போன்று) மட்டுமே லோகோவாக வெளியிட்டனர். 1967-ஜனவரி முதல் மாதம் இருமுறை இதழாகவும், 1983-ஜனவரி மாதம் முதல் வார இதழாகவும் மாற்றப்பட்டது. இவற்றைப் பார்க்கும்போது தமிழ்ச்சூழலில் இவ்விதழுக்கு இருந்த வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது. 1965 முதல் 1988 வரை {1989 வரை வெளிவந்ததாக சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை) 204 + 90 + 278 -மொத்தம் 572 கதைகளை தமிழில் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம்.
வண்ணங்களை இதழ்களுக்குள் பயன்படுத்தி வாசக ஈர்ப்பினை ஏற்படுத்தும் போக்கினை இதழியல் வரலாற்றில் காணமுடிகின்றது. குறிப்பாக விளக்கப்படங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஓவியங்களைப் பல்வண்ணங்களில் வெளியிட்ட பத்திரிகைகள், சித்திரக்கதைகளைப் பொறுத்தவரை இரு வண்ணங்களையே பயன்படுத்தி வந்தன. சிறப்பு இதழ்களில் மட்டுமே பலவண்ணங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போக்கினை மாற்றித் தமிழில் முழுக்க முழுக்க பலவண்ணத்தில் சித்திரக்கதைகளை வெளியிட்டது இந்திரஜால் காமிக்ஸ். வெளியிடப்பட்ட முதல் சித்திரக்கதை இதழாகவும், மொழிபெயர்ப்புச் சித்திரக்கதை இதழாகவும் சித்திரக்கதை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இந்திரஜால் மூன்று வித காலகட்டமாக வெளிவந்துள்ளது –
1965 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது முதல் இதழை 60பைசா விலையிலும், அதன் பிறகு 70 பைசா, 1 ரூபாய் விலை மாற்றத்துடன் மொத்தம் 204 இதழ்களுடன் 1974 ம் வருடம் வரை வெளிவந்துள்ளது..
சில வருட இடைவெளிக்குப் பிறகு, அதே அகல்விளக்கு லோகோவுடன் 1980 ம் வருடம் முதல் 150 விலையுடன் வேதாளரின் கதையான கடலடி ரத்தினக் களவு நாடகம் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த்து. 1.50, 2.00 விலையில் அதே அகல்விளக்கு லோகோவைப் பயன்படுத்தி 1982 டிசம்பர் வரை 90 இதழ்களை வெளியிட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அகல்விளக்கு லோகோ இல்லாமல் மலர் 1 இதழ் 1 என்றும் அகல்விளக்கு லோகோவிற்குப் பதில் அந்தந்த கதையின் நாயகரின் உருவப்படத்தையே பயன்படுத்தி 2 ரூபாய் விலையிலும். பிறகு, 3 ரூபாய் விலையிலும் 1988 வரை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர். அதன் பிறகு எதன் காரணத்தினாலோ இந்த இதழ்கள் நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 23 வருடங்கள் வரை வெளியிட்டுள்ளனர்.





