தமிழ் நாட்டில் உள்ள கிராமம் _ சேறு+சக்தி+ கிழவி கருவாடு கொண்டு வந்து பத்தாம் கிளாஸ் படிக்கும் பேத்திஇடம் பள்ளியில் கொடுக்கிறாள்.சுற்றிலும் மாணவிகள்

“ஏ பாப்பாயீ” பாட்டியின் குரல் நதிக்கரை வரை ஓங்கி ஒலித்தது. அவ்வளவு தான் மற்ற பசங்களும், சக மாணவிகளும் “ஏ ஆயீ” என்று குரல் கொடுக்க பாப்பாயீ முகம் சிவக்க, “என்னா வேணும்?” என்று எதிர் குரல் கொடுக்க, மூச்சு வாங்க மலைச் சரிவில் வேகமாக இறங்கி வந்தாள் பாப்பாயீயின் அப்பாவை பெற்ற ஆயா.

தமிழ் நாட்டில் உள்ள கிராமம் _ சேறு+சக்தி+ கிழவி கருவாடு கொண்டு வந்து பத்தாம் கிளாஸ் படிக்கும் பேத்திஇடம் பள்ளியில் கொடுக்கிறாள்.சுற்றிலும் மாணவிகள் “இந்தாடீ, கருவாடு வறுத்து குளம்பு வெச்சிருக்கேன்” ஆயா ஒரு மண் பாத்திரத்தை நீட்டினாள்.

“ஐயோ, நா தினமும் கூவிகிட்டேயிருக்கிறேன். ஸ்கூலிலேயே காலை உணவு, மதிய சாப்பாடு போடறாங்க ஆயா. இதெல்லாம் வேணாம். எங்க டீச்சர் திட்டும்” என்று கோபப்பட்டாள் பாப்பாயீ.

“ஐய, உனக்கு வேணாம்னா இங்கே கொடு. அக்கரையில் உங்களை இறக்கிட்டு வர்ற வழியில நான் தின்னுட்டுப் போறேன்” என்று படகோட்டி கருப்பன் வாங்கி கொண்டார்.

“இதப்பாருங்க பசங்களா, நீங்க ஏதோ அமைச்சரைப் பார்த்து மனு கொடுக்கப் போறீங்களாம். இதெல்லாம் வேணாம் தாயீ. படிச்சோமா, கல்யாணம் கட்டிக்கிட்டமான்னு இருக்கணும். ஆமா, சொல்லி போட்டேன். உங்க அப்பனுக்கு தெரிஞ்சா தோலை உரிச்சுப்புடுவான். ஆமா, சொல்லி போட்டேன்” ஆயா கடுகடுத்தாள்.

“ஆயா, நாங்க முக்கியமான விஷயத்திற்கு தான் போராடறோம். உனக்கு புரியாது. வீட்டுக்கு பத்திரமா ஏறிப் போ. மண் அரிப்பு வந்து மலைப்பாதை சரியில்லை” என்றபடி அனைவருடன் சேர்ந்து தலையில் பள்ளிப் பையை வைத்துக் கொண்டு, பாவாடையை மேலே சொருகியபடி, முழங்காலளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த ஆற்றைத் தாண்டி அக்கரைக்கு சென்றாள்.

“ஏ பாப்பாயீ, உன்னை தலைமையாசிரியை கூப்பிடறாரு. உடனே வா” என்று பள்ளியின் பணியாளர் தாயம்மா உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டு ‘தர தர’ என்று இழுத்து சென்றாள்.

முதல் நாள் பெய்த மழையில் பள்ளியின் மண் தரை முழுவதும் சேறும், சகதியுமாக இருக்க, கால்களில் படிந்த மண்ணை தலைமையாசிரியை அறையின் வாசலில் போடப்பட்டிருந்த சாக்குத் துணியில் துடைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

அங்கு தலைமையாசிரியை உடன் ஒரு வயதானவர் அமர்ந்திருந்ததைக் கண்டு இருவருக்கும் “வணக்கம்” என்றாள்.

“ம்….. வணக்கம் பாப்பாயீ. என் பெயர் செல்வராஜன். என்னுடைய நிறுவனம் தான் நீங்க வசிக்கிற இடத்திற்கு பக்கத்துல பெரிய ‘ரிசார்ட்’ கட்டப் போகிறோம். அதை எதிர்த்து நாளைக்கு இங்கே வரும் அமைச்சரிடம் மனு கொடுக்கப் போகிறேன்னு போராட்டம் செய்யறியாம்மா? உன்னைப் பார்த்து பேசத்தான் வந்திருக்கேன்” என்றார் செல்வராஜன்.

“ஐயா, போராட்டம் எதுவும் நடத்தலீங்க. அந்த ஹோட்டலை கட்டக் கூடாதுன்னு மனு கொடுக்கப் போறோம்” என்று தைரியமாக பாப்பாயீ கூறினாள்.

“என்ன பாப்பாயீ, நீங்க மட்டுந்தான் பேசுவீங்களா? மற்ற பசங்க பேச மாட்டாங்களா?” என்று செல்வராஜன் புன்னகைத்தார்.

“ஏன், நல்லா பேசுவோம். எங்க தலைவியாக பாப்பாயீயைத் தேர்ந்தெடுத்துட்டோம். நாங்க கூட்டம் போட்டு என்னா பேசணும்னு தீர்மானிச்சுட்டோம்ல” என்றாள் கண்ணாயீ.

“இது கண்ணாயீ. நல்லா ‘டாண் – டாண்னு’ பேசும்” என்றார் தலைமை ஆசிரியை.

“சரிங்க கண்ணாயீ. உங்க தலைவி கிட்டேயே பேசிடறேன்” என்றபடி, “சொல்லும்மா பாப்பாயீ. நாங்க இங்கே ஒரு ‘ரிசார்ட்’ கட்டறதுல உங்களுக்கென்ன பிரச்சனை?”

“ஐயா, நாங்க ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது எங்களையெல்லாம் உங்க ஊரு சென்னைக்கு அழைச்சிட்டு வந்தாங்க. உங்க ஏற்பாடுல தான் தங்கினோம்.”

“ஆமாம்மா. எங்க பெஸ்ட் ரிசார்ட்டுல கடற்கரையோரம் தங்க வெச்சோம். எல்லாம் சுத்திப் பார்த்தீங்க.”

“ஆமாய்யா. உங்க ஊருக்கு வந்தா, நீங்க எப்படி வாழறீங்களோ அப்படியே தங்க வெக்கறீங்க இல்லையா. அப்ப எங்க ஊருக்கு வர்றவங்க ஏன் பணக்கார ரிசார்ட்டுல தங்கணும்? நாங்க வாழற வீடு மாதிரியே மண், மரக்கட்டை போட்டு அளகா சின்னதா கட்டி அதுல தங்கட்டும். எங்க ஊரு பெண்களெல்லாம் நல்லா சமைப்பாங்க. வந்தவங்களுக்கு ஆக்கிப் போடுவாங்க. சந்தோசமா இயற்கையோட வாழற வித்தையை அவங்களுக்கு நாங்க கத்து தரோம். நீங்க எங்க ஆற்று மணலை எடுப்பீங்களாம். ஆறையே மூடி அது மேல கட்டுவீங்களாம். கண்ணாடிக் குடுவையெல்லாம் வாங்கியாருவீங்க. யானைங்க மிதிச்சா அவ்வளவு தான். பத்து நாள்ல செத்துடும்” பாப்பாயீ மூச்சு விடாமல் பேசுவதைக் கேட்டு திகைத்தார்.

“டாட், ஷி ஈஸ் ரைட்.” ‘மலைவாழ் மக்களோடு வாழுங்கள்’ ன்னு ஸ்லோகன். ‘என்ஆர்ஐ’ஸ் கூட்டமாக வருவாங்க. சூப்பர் பிசினஸ் ஐடியா” என்று பேச்சை சென்னை ஆபீசிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த செல்வராஜின் மகன் வீரராஜன் மகிழ்ச்சியோடு கூறியதை அவர் உன்னிப்பாகக் கேட்டார்.

“பாப்பாயீ, எனக்கும் என் மகனுக்கும் உங்க எண்ணம் ரொம்ப பிடிச்சு போச்சு. சரி, இப்ப என்னோட கேக், பிஸ்கெட் எல்லாம் சாப்பிடலாமில்ல. வாங்க எல்லோரும் இங்கேயே ஒரு ‘டீ-பார்ட்டி’ கொண்டாடலாம்” என்றார் செல்வராஜன்.

“ஐயே, எங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. எங்கம்மா சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம் எல்லாம் சுட்டு சூப்பரா உப்பு, காரம் போட்டு வெக்கும். சூடா இஞ்சி கஷாயம் கொடுக்கும். ஐயா, நீங்களும் எங்க தலைமையாசிரியையும் வாங்க” என்று பாப்பாயீ கூறியவுடன் ஆளுக்கு மகிழ்ச்சியுடன் குரலெழுப்பினர்.

வீட்டுக்கு வந்த பணக்கார விருந்தாளியைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்த பாப்பாயீயின் அம்மா, பிறகு “வாங்க வாங்க” என்று வரவேற்று, கோரைப்புல் பாய் விரித்து உட்கார வைத்தாள்.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொரு உணவாக கம்மங்கூழ், நறுக்கிய பச்சை வெங்காயம், பச்சை மிளகாய், சுட்ட சோளம், சுட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வறுத்த வேற்கடலை, சுத்தமான தேன் என்று வயிராற உண்டனர் விருந்தாளிகள்.

“ஐயா, உங்ககிட்ட ஒரு விண்ணப்பம்” என்று தலைமையாசிரியைக் கூற, எல்லோரும் மௌனமாகப் பார்த்தனர்.

“ஐயா, நீங்களே பார்த்தீங்க. குழந்தைகளெல்லாம் முழங்காலளவு ஆற்று நீரில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மழைக்காலம் பள்ளியே நடத்த முடியாது. நீங்க அரசாங்கத்திற்கும், எங்களுக்கு உதவியாக ஒரு பாலம் குறுக்காக கட்டினால் போதும். இங்கே வாழறவங்களுக்கும் உதவியாக இருக்கும். உங்க ரிசார்ட்டுக்கும் நல்லா மக்கள் வருவாங்க” என்றார்.

“செய்திடுவோம். முதலில் இரண்டு அறைகள் கொண்ட வீடுகளை மழை தண்ணீர் உள்ளே வராமல் கட்டி, அதில் சுவர், தரை முழுவதும் கோரைப் பாய்களை போட்டு, நீங்க வாழற வீடு மாதிரியே, உங்களுக்கும் சேர்த்து கட்டப் போகிறேன். அதற்கு முதலில் பணியாட்கள் வர பாலம் கட்டணும்” என்று செல்வராஜன் யோசிக்கத் துவங்கினார்.

“ஐயா, எங்க ஊரு ஆண்களே எல்லா வேலையையும் செய்வாங்க. கூலி மட்டும் ‘கரீக்டா’ கொடுத்துடுங்க. பாலம் கட்ட பள்ளிப் பசங்க நாங்களும் உதவுவோம். எங்க ஊரு பெண்கள் வர்றவங்களுக்கு சாப்பாடு செய்து தருவாங்க. கூலி கொடுத்துடுங்க. நாங்க மேல் படிப்பு படிக்க உதவியாக இருக்கும்” என்றாள் கண்ணாயீ.

“அதுமட்டுமில்ல ஐயா. எங்க மலைக்கிராம மண் வளம் கெடாம பார்த்துக்கோணம். இல்லைன்னா வயநாடு மாதிரி ஆகிடும்” என்றாள் பாப்பாயீ.

“அட, இது எப்படி உனக்கு தெரிஞ்சுது” என்று செல்வராஜன் கூற, “அதான் எங்களுக்கு ‘மொபைல்’ வாங்கி அரசு கொடுத்துச்சில்ல. அதுல எல்லாம் பார்த்து கத்துக்கிடறோம்” என்றாள் பாப்பாயீ.

“பாப்பாயீ, நீ ‘ஐ.ஏ.எஸ்.’ படிக்கிறியா? நான் படிக்க வெக்கறேன்.” “இல்லீங்கய்யா, நான் டாக்டருக்கு படிச்சு, இந்த ஊர்ல இயற்கை மருத்துவத்தோடு இணைஞ்சு மக்களை காப்பாத்தோணம்” என்றாள் பாப்பாயீ.

“பாப்பாயீ, நீ ஒரு சமயத்துல நம்ம நாட்டையே ஆளும் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ ஆகும் நாள் வெகு தூரமில்லை” என்றார் செல்வராஜன்.