
ஈஸ்வரி – பிரதாப் இவர்களுக்குத் திருமணமானதிலிருந்தே எட்டு வருடங்களாக சில மனஸ்தாபங்கள் நீடித்திருந்தது. விவாகரத்து செய்யலாமா என்ற நிலையிலிருந்தார்கள். இரண்டு வருடத்திற்குப் பிறகு பிரிந்தார்கள். மகன் நீல், வயது ஆறு. சட்டப்பூர்வமாக மகனின் வளர்ப்பு உரிமையை ஈஸ்வரி பெற்றவுடன், ஈஸ்வரியின் பெற்றோர் அவர்களை தம் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். நீல் பள்ளிக்கூடத்தையும் மாற்றினார்கள்.
செஸ் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த நீலை, இங்கு வந்தபின் கபடீ பயில வைத்தார்கள். பயிற்சியாளர் சுகுமாரன் என்னிடம் நீலைப் பற்றிக் கூறினார். இவருக்கும் மற்றப் பத்து பள்ளிக்கூடப் பயிற்சியாளர்களுக்கும் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று மனநலம் பற்றிய பயிற்சி நான் சகாக்களுடன் நடத்தி வந்தேன். நிகழ்வுகளின் கடைசி பதினைந்து நிமிடங்களில் பயிற்சியாளர்கள் எங்களிடம் குறிப்பிட்ட மாணவர்கள் சார்ந்த விளக்கம் கேட்கலாம். மாணவர்களின் அடையாளம் மறைத்துச் சொல்ல வேண்டும்.
சுகுமாரன் தன் மாணவனைப் பற்றி விளக்கங்கள் கேட்டார். பிறகு எங்களைத் தனியாகச் சந்தித்து, அந்த மாணவன் நீல் என்று கூறி, தாம் கவனித்த சில குறிப்புகளைப் பகிர்ந்தார். குணத்தில் அடக்கமானவன். நீலின் முகச்சாயல் பற்றி ஏதேனும் யாரேனும் சொல்ல நேர்ந்தால், கோபம் பொங்கும், கண்ணீர் மல்க ஓடிவிடுவானாம். கபடி விளையாட்டில் சிறிதளவும் மனம் லயிக்கவில்லை என்றார். ஈஸ்வரியிடம் நீலுக்குச் செஸ் தொடரப் பரிந்துரைத்தார், ஆனால் அம்மா மறுத்துவிட்டாள். தாத்தாவிடம் பேசி, என்னை ஆலோசிக்க அழைத்து வந்தார்.
வந்த மறுநிமிடமே நீல் எழுப்பிய கேள்வி, முகச்சாயல் அப்பாவிடமிருந்து எவை, அம்மாவிடமிருந்து எவை, எவ்வாறு பெறுகிறோம் என இந்த பதினான்கு வயதுடையவனின் சந்தேகம். உயிரியல் பாடத்தில் படித்திருந்தாலும், அது அச்சுறுத்துவதால், விளக்கப் படத்துடன் உதாரணங்களுடைய தாள்களைப் பல படிக்கக் கொடுத்தேன். இரு பெற்றோரிடமிருந்தும் மரபணுவால் (genes) வருகிறது என்று விளக்கினேன். தன்னிடம் தந்தையின் சாயல் பற்றி அம்மாவும், பாட்டியும் கூறும் கருத்துரைகள் வெட்கமும், சங்கடமான அவஸ்தைகளும் மனவேதனையும் தருகிறது, தந்தையைப் பிடித்திருந்தாலும் இதனால் குழப்பமாகிறது என்றான்.
ஆரம்பப் பள்ளிக் காலத்தில், மூன்றாவது படிக்கும்போது பெற்றோர் பிரிந்தார்கள். வேரோடு அறுத்து இவர்கள் வந்துவிட்டார்கள். செஸ் அப்பாவுக்குப் பிடிக்கும், பரிசு பெற்றவர், அதனால்தான் அதற்கும் தடை.
இடமாற்றத்திலிருந்து எந்தச் சிறிய தவறு நேர்ந்தாலும், “அப்பாபோல பிள்ளை”, “அதே மூஞ்சி, அதையே பார்த்திருக்க என்ன தலையெழுத்தோ?” என்ற வரிகளைக் கேட்க வேண்டியதாயிற்று. மனதளவில் தவித்ததாகவும், எந்தவிதத்திலும் ஆதரவு இல்லாததாகவும் உணர்ந்ததாகக் கூறினான். வீட்டுக்கு வருவோரிடமும் நீலுக்கு அவன் அப்பாவின் சாயல் இருப்பதால் அவனிடம் பிடிப்பு இல்லாததை வெளிப்படையாகக் கூறினார்கள் தாயும் பாட்டியும்.
அத்தோடு பிரதாபிற்குக் கடுகளவேனும் பாசம் இருந்தால் நீலைப் பார்க்க வந்திருக்க வேண்டும், வரவில்லையே என்றார்கள்.
ஈஸ்வரியின் பாட்டி பிரிவின் பிறகு இப்படிச் சொல்லச் சொல்ல நீலுக்கு வேதனை, குழப்பம் அதிகமாயிற்று. அப்பாவைப் பற்றி மனதில் பல கேள்விகள். அதுவும் அம்மா, பாட்டி பழைய நினைவுகளில் அப்பாவைத் தவிர்த்து விவரிப்பார்கள், எல்லோரிடமும் நீலின் விசுவாசம் தங்கள்மீது மட்டுமே எனக் கூறுவார்கள்.
தாத்தாவோ, நீலைப் பகடையாக உபயோகிக்கப்படும் சூழலை உணர்ந்தார், குறுக்கிட இயலவில்லை.
இப்படிப்பட்ட கையாளுமுறை நீல் வயதில் உள்ளவர்களை மேலும் பாதிக்கும் என்றதால் செஷன்களைத் தீவிரமாக்கினேன்.
சூழலை விவரிக்க, நீல் அவற்றை எதிர்கொள்ளும் வழிகளை க்ரமமாக அமைத்தோம். உதாரணத்திற்கு, அம்மா அப்பாவைக் குறை கூறும் போதெல்லாம் அவன் அவற்றை நினைவில் வைத்துப் பிறகு எனக்குத் தெரிவிக்கும் படி. இது இருவிதத்தில் பயன்பட்டது. ஒன்று, தன் தந்தையைப் பற்றிய அபிப்பிராயங்களை ஆராய உதவியது. மற்றொன்று, ஆராய்வதில் தன் முகச்சாயல் மீதுள்ள வேதனை குறைந்தது.
போகப்போக, முகச்சாயலை ஏற்றுக்கொள்ள, மற்ற குணாதிசயங்களை அடையாளம் காண, தந்தையின் வெவ்வேறு நல் குணங்களை ஞாபகப்படுத்த, அவற்றின் நேர்மறைத்தனத்தை நீல் மேலும் உணர முடிந்தது. மெல்ல மெல்லத் தன்னுடைய அவமானத்தைத் தராசில் வைக்காமல் இருக்க முடிந்தது. அம்மா, பாட்டியின் அவதூறுச் சொற்களைத் தாண்டி, நிஜங்களைக் கண்டுகொள்ள முடிந்தது.
இது மனிதர்களின் பல முகங்களைப் பார்த்து அவற்றில் ஏன் எதை எடுத்துக் கொள்ளலாம் என்ற திறனை வளர்த்துக்கொள்ள உதவியது. பல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் படித்துப் பகிரும்படி செஷன்களில் செய்தோம். பல வகையான புத்தகங்கள் வெவ்வேறு பொருளைச் சொல்ல, தன் வாழ்க்கையின் குறிக்கோள்களைப் பற்றித் தெளிவு பெற, மெதுவாகத் தைரியம் கூடியது. “The promise of a pencil” என்ற புத்தகமும் இவற்றில் ஒன்று.
இந்த மாற்றங்களைச் சுகுமாரன் மாஸ்டர் கவனித்து வந்ததைப் பகிர்ந்தார். நல்ல முன்னேற்றம் தெரிய செஷன்கள் முடிவடைந்தன. நீலின் குடும்பத்தினர் செஷன்களுக்கு முற்றிலும் வர மறுத்து விட்டதைக் கூறியாக வேண்டும்.
நீல் அவ்வப்போது நாலைந்து பக்கங்களுக்குக் கடிதத்தில் தன்னைப் பற்றி எழுதுவதால், முடிந்த பின்னரும் ஒருவகையில் செஷன்கள் தொடர்ந்தது. நீலுடைய அப்பாவின் சாயல் ஏற்றுக்கொள்ள முடியாததால் அவனைத் தந்தையிடம் அனுப்பி வைத்துவிட்டார்கள் தாயாரும் பாட்டியும். மீண்டும் வேரோடு மாற்றம்.
செஷன்களில் அவரைப் பற்றிப் பகிர்ந்தது உதவியதாக விவரித்தான் நீல். இதனாலேயே தந்தையுடன் அவருடைய வாழ்க்கைப் பாதையைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள முடிந்தது என்றான். தன் கடிதங்களில் இதைப் பற்றிப் பல பகிர்ந்துகொண்டான். விவசாயப் பேராசிரியரான தந்தையுடன் கூட இருக்க, செல்ல, செய்ய அவருடைய பல பரிமாணங்களைக் காணக் காண, மரியாதை வந்தது. அவரைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் புரிதலை விவரிக்கும்போது, மெதுவாக இருவரின் பாசம் தென்பட்டது!
ஷீலா டீச்சர் எப்போதும்போல தனக்குத் தெரிந்த ஒருவர் மூலமாக யாருக்கோ ஏதோ பாதிப்பு இருப்பதாகவும் அதற்கு என்னை ஆலோசிக்க அழைத்து வந்ததாகவும் கூறினாள். ஷீலா மனநலப் பயிலரங்கில் பங்கேற்றதின் விளைவு இது.
வந்தவர், ஈஸ்வரி. பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, அவளுக்கு எதை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் அவல நிலையானது. இதுவரை தாயே எல்லாம் பார்த்துக்கொள்ள, அவர்கள் மறைவுக்குப் பிறகு தானாக முடிவுகளை எடுக்கத் தத்தளிப்பதைக் கண்டுகொண்டு, தன் சுய உரையை மாற்ற விரும்ப வந்ததாகக் கூறினாள். இவற்றை மையமாக வைத்து அவளுடன் செஷன்கள் தொடர்ந்தது.
****************************
