
கிரிக்கெட் என்றொரு கட்டுரை கல்லூரியில் பாடமாக வைத்திருந்தனர். நெவில் கார்டஸ் எழுதியது என்று நினைவு. அதில் தான் படித்தேன் என்று நினைக்கிறேன்.
‘நீங்கள் ரயில் பயணத்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பார்வை சன்னலை ஊடுருவி வெளியே பரவும்போது, ஏதோ ஒரு சிற்றூரில் ஒரு சிறு வெளியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பையன் வேகமாக ஓடி வந்து பந்தை வீசும் போது நீங்கள் அமர்ந்திருக்கும் ரயில் பெட்டி அந்த இடத்தைக் கடந்து விட்டிருக்கிறது. அந்தப் பந்தின் கதி என்னவாகி இருக்கக் கூடும் ? ஆட்டக்காரச் சிறுவன் ஓங்கி அடித்து ஆறு ரன்கள் அல்லது குறைந்த பட்சம் நான்கு ரன்கள் எடுத்திருப்பானா… அவன் அடித்த பந்தை ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் சிறுவன் இலாவகமாகப் பிடித்து ஆட்டக்காரனை வெளியேற்றி இருப்பானா… அல்லது பந்தைத் தடுத்துப் பிடித்து எதிர்முனையில் அடித்து ரன் அவுட் ஆக்கி இருப்பார்களோ… அல்லது எந்தப் பெருமைக்கும் உரித்தாகாது மற்றுமொரு டெலிவரி என்கிற கணக்கில் போயிருக்குமோ அந்தக் குறிப்பிட்ட பந்து வீச்சு என்பதை நம்மால் இனி ஒரு போதும் அறிந்து கொள்ளவே முடியாது என்று பெரும் ஆதங்கம் வெளிப்பட எழுதி இருப்பார் கட்டுரையாளர்.
வேலூர் வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் நீதிநெறி வகுப்பில் எங்களது ஆசிரியர் ஒருவர் (திரு ரகுநாதன் என்று நினைவு) வாரமொரு முறை வகுப்பில் அழகான கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார். கானகத்தில் வழியறியாத பயணத்தில் சென்று கொண்டிருந்த துணிச்சல் மிக்க வாலிபன் ஒருவனுக்கு வழியில் எதிர் பாராத குடில் ஒன்றில் மணக்க மணக்க சித்திரான்னங்கள் புசிக்கக் கொடுக்கிறாள் ஒரு மூதாட்டி. கதை அந்த இடத்தில் வந்து நின்றபோது, நிர்வாகம் அவரை வடமொழி வகுப்பு எடுக்க திருப்பதி பள்ளிக்கு (எங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல்!) மாற்றி விட்டது. வெண் புரவி ஏறிப் புறப்பட்ட அந்த சாகச வாலிபன் அப்புறம் என்ன ஆகி இருப்பான் என்று இன்றுவரை தெரியவில்லை.
கிராமப்புற வங்கி வாழ்க்கையில், ஒரு நாள் காலையில் கிளை திறக்கும்போதே வேகவேகமாக வந்து அவசரமாகப் பணம் தேவைப்படும், இப்போது வேண்டாம், கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் இல்லையென்று சொல்லிவிடாதீங்க, வந்து வாங்கிக் கொண்டு போகிறேன் என்று வாடிக்கையாளர் ஒருவர் சொல்லிவிட்டுப் போனார். அன்று மாலை வரை காத்திருந்தும், சொல்லிச் சென்றவர் வரவே இல்லை. ஒரு கட்டத்தில் கணக்கு முடித்துக் கதவுகளைப் பூட்டினோம். அதற்கு மறுநாள் என்ன, மறு வாரம் கூட அந்த வாடிக்கையாளர் வந்தாரில்லை. பல நாள் கழித்து அவர் வந்தபோது அன்று என்ன நடந்தது என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவும் இல்லை.
நூலகத்தில் ஆர்வத்தோடு எடுத்துப் படித்துக் கொண்டே போகும் துப்பறியும் நாவலின் கடைசி கட்டத்தை எட்டும் நேரத்தில் தான், முக்கிய பக்கங்கள் அதில் இல்லாது போய்த் தவியாய்த் தவிக்கும் கதிக்கு, நிஜ வாழ்க்கையிலும் அடுத்து என்ன ஆயிற்று என்று ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாத நிகழ்வுகள் நிறைய கடந்து போகிறோம்.
திடீர் என்று காணாமல் போகும் நெருக்கமான மனிதர். கடைசி நேரத்தில் நடக்காது போகும் ஒரு குடும்ப நிகழ்வு. கிராமத்திலிருந்து வந்து ஒழுங்காகப் படித்துக் கொண்டிருக்கும் வகுப்புத் தோழன் ஒருவன் பள்ளிக்கு வராது நின்றுவிடுவது. மிகவும் நம்பிக்கையாக நினைத்துக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தடம் மாறிப் போனார் என்று அறிய நேர்வது.
நாடகத்தில் இரண்டு வகை சஸ்பென்ஸ் உண்டு என்று மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரியில் படிக்கையில் தமிழாசிரியர் வேணுகோபாலன் அவர்கள் சொல்வதுண்டு. ஒன்று பார்வையாளர்களுக்கான சஸ்பென்ஸ். மற்றது நாடக பாத்திரங்களுக்கு இடையே நிகழும் சஸ்பென்ஸ், அதைப் பார்வையாளர்கள் புரிந்து கொண்டே ரசிக்க முடியும். சில நேரம் தவிக்கவும் நேரும்.
கஜினி திரைப்படத்தில் சஞ்சய் ராமசாமி யார் என்பதை அசின் அறிந்திருக்கமாட்டார். நகைச்சுவையாகப் போய்க் கொண்டிருக்கும் காட்சிகளிலிருந்து கதை, பின்னர் திகிலான கட்டங்களைத் தொடும். சூர்யா தான் உண்மையில் சஞ்சய் ராமசாமி என்பதைத் தான் இறக்கும்வரை அசின் அறிவதில்லை என்பது எப்போது பார்க்கும்போதும் துயரமாக இருக்கும்.
சுஜாதாவின் முக்கிய படைப்பான நகரம் சிறுகதையில் மதுரை பெரிய மருத்துவமனையில் தன்னிடம் கொண்டு வந்து காட்டப்பட்ட குழந்தையை உடனே சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு தனது ஜுனியர் ஒருவரை அழைத்துப் பணிக்கிறார் தலைமை மருத்துவர். பின்னர் வார்டுகளுக்குச் சென்று மற்ற நோயாளிகளைப் பார்த்துவிட்டு அவர் மீண்டும் வந்து கேட்கையில், அந்தக் குழந்தை மருத்துவமனையில் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்காது. ஒட்டுமொத்த மருத்துவமனை இயங்கும் தன்மையில் தெறிக்கும் அலட்சியத்தை, வசதிகளின் போதாமையை விவரித்திருப்பார் சுஜாதா. ‘அந்தக் குழந்தைக்கு மூளைக் காய்ச்சல், நாளைக்குக் காலையில் தான் மீண்டும் வருவார்களா…நான்சென்ஸ், அதுக்குள்ளே அந்தக் குழந்தை செத்துப்போயிடும், என்ன செய்வீங்களோ தெரியாது…அந்தக் குழந்தையை உடனே அட்மிட் பண்ணியாகணும்’ என்று பெரிய மருத்துவர் பெருங்கோபத்தில் இருப்பார்.
‘வெறும் சுரம் தானே….குழந்தை பாப்பாத்தியை உள்ளூர் வைத்தியரிடம் காட்டிக் கொள்ளலாம்..விபூதி மந்திரித்துக் கொள்ளலாம். சரியாகப் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம்’ என்று சொல்லியவாறு அந்த அப்பாவித் தாய் வள்ளியம்மாள் குழந்தையோடு ஊரை நோக்கிப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருப்பாள்.
