இரவு மணி ஒன்பது..
எழும்பூர் ரயில் நிலையம்..
ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் திருச்சி செல்ல வேண்டிய தன் பெற்றோரை
ஏற்றிவிட்டு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தான் சுதாகர்.
பார்க்கிங்க் ஏரியாவில் நிறுத்தி வைத்திருந்த தன் காரில் அமர்ந்தபடியே
தன் அலைபேசியை எடுத்து..அன்புடன் ஒரு எண்ணை தடவிக் கொடுத்தான்.
எதிர்முனையில் அலைபேசி சிணுங்க..அதை எடுத்த கீதா..”ம்..சொல்லுடா..” என்றாள்.
“ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பேசறேன்.அப்பா..அம்மாவை பேக் பண்ணியாச்சு..நீ
உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துடு..நாம ஒண்ணா இருந்து ஒரு மாசத்துக்கு மேல
ஆச்சு..”
“ஐயாவுக்கு இப்பத்தான் என் நினைப்பு வந்துதாக்கும்..ஊர்ல இருந்து
உங்கப்பா..அம்மா..வந்ததும்..நாம ஒண்ணா வாழறது அவங்களுக்குத் தெரியக்
கூடாதுன்னு..என்னை என் ஃபிரண்ட் வீட்டுக்குத் துரத்திட்டு..இப்ப பேச்சைப்
பாரு..”
“சாரி கீதா..ஐ ஆம் ஹெல்ப்லெஸ்..என்ன செய்யறது சொல்லு..” என்றவன்..”சரி
எப்ப வர..?” என்றான்.
“டேய் முட்டாள் லிவிங்க் டு கெதர் கணவா..நான் ஏற்கனவே
வந்துட்டேன்.உனக்காக வழிமேல் விழி வைத்து காத்து இருக்கிறேன்”
“ஓ கே.. பத்து நிமிஷத்துல ஐயா அங்கே இருப்பேன்” என்று சொல்லி விட்டு
..இளையராஜா பாடல் ஒன்றை விசிலடித்தபடியே..காரை வீடு நோக்கி ஓட்ட
ஆரம்பித்தான்..
அவன் வீடு போய் சேருவதற்குள்..அவனைப் பற்றியும்..கீதாவைப் பற்றியும்
கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் தகவல் தொழில் நுட்பம்
படிப்பை படித்துக் கொண்டிருக்கையிலேயே..பிரபல மென்பொருள் நிறுவம்
ஒன்றிற்கு கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்சுதாகர்.
ஆனால் கீதாவோ..டிகிரி முடிந்து வேலை ஏதும் கிடைக்காததால்..எந்த வேலை
செய்தால் என்ன..செய்யும் தொழிலே தெய்வம் என ஆட்டோ ஓட்டக் கற்றுக்
கொண்டு..பின் வங்கியில் கடனை வாங்கி ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டிக்
கொண்டிருக்கிறாள்.அவளைப் பெற்றவர்கள் தஞ்சைக்கு அருகே ஒரு கிராமத்தில்
இருந்தனர்.
ஒருநாள் நல்ல மழை..அலுவலகம் கிளம்பும் நேரம் நேரம் கார் மக்கர்
பண்ணியதால்..ஆட்டோவிலாவது போவோம் என சுதாகர்..காலியாக வந்துக்
கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினான்.ஆட்டோவை நிறுத்திய கீதா..”எங்கே
போகணும்?” என்றாள்.
பெண் ஓட்டுநரைக் கண்டு சற்று வியந்தவன்,”பெருங்குடி போகணும்..மேடம்..அவசரம்…. “என்றான். இல்ல சார்….வராது..திருவான்மியூர் வரைக்கும் வேணுமானால் வாங்க..”என்றாள்.
பார்க்க படித்தவள் போலக் காணப்பட்டதால், “ரொம்ப அவசரம்.. இன்னிக்கு
முக்கியமான எங்க கம்பெனி ப்ராஜெக்டை முடிச்சு அனுப்பணும்
மேடம்..ப்ளீஸ்..” என்றான்.
அவன் முகத்தைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்ததால்..”ம்..ஏறுங்க” என்றாள்.
இப்படித்தான் அவர்களுக்கான முதல் பழக்கம் ஏற்பட்டது.
பின் இருவரும் பெசன்ட் நகர் ஏரியா என்றபடியால்..அடிக்கடி பார்க்க நேர்ந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள..காதல் வசப்படலாயினர்.
ஒருநாள்..ஒரு பூங்காவில் செயற்கை நீரூற்றின் அருகில் அமர்ந்தபடியே..தன்
காதலை அவளிடம் சொன்னவன்..அத்துடன் நிற்காது, “கீதா..நாம் ஏன் இனி ஒன்றாக
ஒரே வீட்டில் வசிக்கக் கூடாது..கொஞ்சகாலம் அப்படியிருந்து விட்டு..பின்
நம் வீட்டாரின் சம்மதம் பெற்று மணந்து கொள்ளலாமே” என்றான்.
அவன் சொல்வதைக் கேட்ட கீதா..இன்று பலரிடம் லிவிங்க் டு கெதர் எனும்
கலாச்சாரம் பரவி வருவதை அறிந்தவளாயிருந்ததாலும்..அவளின் சில நண்பிகள்
அப்படியிருந்ததாலும்..சிறிது யோசனைக்குப் பின் அதற்கு ஒப்புக் கொண்டாள்.
இதனிடையே சுதாகரனின் பெற்றோர் சென்னை வந்து மகனுடன் ஒருமாதம் இருக்க
விரும்பியதால்..தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கீதா தன் ஃபிரண்ட்
ஒருத்தியின் வீட்டில் ஒரு மாதம் இருந்தாள்.
சுதாகரின் கார் வீட்டினுள் நுழைந்தது…கீதா வெளியே வந்து அவனை
வரவேற்க..அவன் “ரொம்பப் பசிக்கிறது” என்றபடியே அவளை அணைத்தான்.
“பார்த்து..பார்த்து..டேய்..பசிக்கு என்னை சாப்பிட முடியாது..”
“ஆமாம்..வயிற்றுப் பசிக்கு உன்னை சாப்பிட முடியாததுதான்..”
“ஓகே மை டியர் லிவிங்க் டு கெதெர் கணவா..உனக்கு சாப்பாடு போடாம
பட்டினியாக உன்னைப் படுக்க வைத்த பாவம் எனக்கு வேண்டாம்”என்றவள்..ஃபிரிட்ஜில் இருந்த அவனது அம்மா வைத்துவிட்டுப் போயிருந்த முந்தைய பொழுதின் உணவை.. மைக்ரோவேவில் சுட வைத்து கொடுத்தாள்.
இரவு இனிமையாய் கழிந்தது.
பின்…வாழ்க்கை முழுதும் அனுபவிக்க வேண்டிய சுகங்களை..மிகவும் ஜாக்கிரதையுடன் அவர்கள் அனுபவித்தனர்.
இந்நிலையில்..ஒருநாள் சுதாகரின் பெற்றோரிடமிருந்து ஃபோன் வந்தது.அவனுக்கு
ஒரு பெரிய இடத்து வரன் ஒன்று வந்திருப்பதாகவும்..ஒருநடை ஊருக்கு வந்துவிட்டு போக வேண்டும் என்றும் சொன்னார்கள்.
அதை அவன்..அவளிடம் சொல்ல..”நீ என்ன சொன்ன..?” என்றாள்.
“நான் இன்னமும் எதுவும் சொல்லலை..” என்றவன்..சிறிது யோசனைக்குப்
பின்..”கீதா..இப்ப நாம ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலையில
இருக்கோம்..”என்றான்.
“சுதாகர்..வாட் டூ யூ மீன்..” என்றாள்.
“சாரி கீதா..நம்மால கணவன்,,மனைவியா வாழ முடியுமா..இல்ல..நாம அவரவர்
வாழ்வைத் தேடி பிரியணூமா? கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பார்த்தா..வாழ்க்கையிலே பல சந்தர்ப்பங்கள்ல நம்மால ஒத்துப் போக முடியாதுன்னு தோணுது.நீ பண்ற செலவுக்கு, நாளைக்கே நமக்குக் குழந்தைகள் பொறந்தா சமாளிக்க முடியுமான்னு தெரியல..”
“நான் செலவு பண்றதைப் பத்தி சொல்றியா..நீ மட்டும் என்ன,,ஹோட்டலிக்குப்
போனாலே நான் விஜ் வேணும்ங்கற.அப்புறம் அடிக்கடி பாருக்கு போகணும்.விஷ்கி,
பிராந்தின்னு குடி வேற. அதுக்கு எந்த மகாராணி சரிப்பட்டு வருவான்னு
பாத்துடறேன்..”
“அதை நீ அப்புறம் பார்க்கலாம்..இப்போதைக்கு நீ வேற இடம் பார்த்து
போறதுதான் இரண்டு பேருக்குமே..நல்லது..”
“சோ..நீ என்னை விட்டுப் போகத் தயார் இல்லையா?”
“நம்ம உறவுக்கு குட் பை சொல்றதைத் தவிர வேற வழியில்லை..என்னைப்
புரிஞ்சுக்க.. இப்போதைக்கு எனக்கு வேற இடத்துல கல்யாணம் நடக்கப்
போறதால..இந்த வீட்டை விட்டு வெளியே வேற எங்கேயாவது போறதுதான்
பெட்டெர்.அப்புறம் இவ்வளவு நாள் ஒன்றாக இருந்துட்டதால ஒரு ஸ்மால்
அட்வைஸ்..ஒரு நல்லவனா பார்த்து உன் வாழவை அமைச்சுக்கோ..”
அவர்கள் பிரிந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.
ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியபடியே..இன்றுவரை ஆட்டோ ஓட்டி பிழைத்து வந்தாள் கீதா.
சுதாகர் என்ன ஆனான்..என்ற கவலையே அவளுக்கு இல்லை.ஏன்..அவனை நினைப்பது கூட
இல்லை எனலாம்.
அப்படியும் ஓரிரு முறை அவனது நண்பர்கள்..அவளிடம்..அவன் திருமணத்திற்குப்
பின் வேலையை விட்டு விட்டதாகவும்..குடிக்கு அடிமையாகி விட்டதாகவும்
கூறினர்.மேலும்..அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை..உங்களுக்குத் தெரியுமா? என்றும் அவளைக் கேட்டனர்.
இந்நிலையில்..ஒருநாள் அவள் ஆட்டோவை மறித்த ஒரு நிறைமாத கர்ப்பிணிப்
பெண்”அண்ணாநகர் வரை ஆட்டோ வருமா?” என்றாள்.
சாதாரணமாக அடையார்..திருவான்மியூர்..பெசன்ட் நகர் எல்லைகளை விட்டு
எங்கும் செல்லாத கீதா..அப்பெண்ணின் நிலையைப் பார்த்து..”ஏறிக்கோங்க..”
என்றாள்.
அப்பெண்ணை அண்ணா நகரில் இறக்கிவிட்டு விட்டு அவள் ஆட்டோவுடன்
வருகையில்..ஒரு போலீஸ் ஸ்டேஷன் அருகில்..ஒருவன்..ஒரு பெண்ணின்
தலைமுடியைப் பற்றி இழுத்து..சண்டையிடுவதையும்..அவள் அவனிடமிருந்து மீள
அவதிப்படுவதையும் பார்த்தாள்.
உடனே வண்டியை நிறுத்தி..போலீஸ் நிலைய வாசலில் நின்றுக் கொண்டிருந்த
காவல்துறை அலுவலரிடம் சென்ற கீதா,”என்ன சார்.அந்தப் பெண்ணை அவன்
அடித்துக் கொண்டிருக்கிறான்..நீங்க பாத்துக்கிட்டு இருக்கீங்களே?”
என்றாள்.
அதற்கு அந்த அலுவலர், “நீங்க இந்த ஏரியாவுக்கு புதுசா..எங்களுக்கு இது
அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி.அந்த ஆள் குடிகாரன்..என்னிக்கு போதை
அதிகமாகுதோ..அன்னிக்கு மனைவியைப் போட்டு அடிப்பான்..அவளும் இங்க வந்து
புகார் செய்வா..ஆனா..அவர் மேல பெரிசா எதுவும் ஆக்க்ஷன் வேண்டாம்னு
கெஞ்சுவா..கொஞ்சம் மிரட்டி அனுப்புவோம்.இது எங்களுக்கு சர்வ சாதாரண
நிகழ்ச்சியாயிடுத்து..”என்றார்.
கீதா..அந்தப் பெண் இருந்த இடம் வந்தாள்.அவள் கணவனைப் பார்த்தவள்
திகைத்தாள்..அது சுதாகரன் அல்லவா.ஆளே அடையாளம் தெரியாமல் குடி
மாற்றியிருந்தது.கீதாவைப் பார்த்தவன்..திகைத்து..”நீ..நீ..”ஏன்றான்.
அவனை சட்டைசெய்யாமல்..”ஏம்மா..இந்த ஆள் இப்படி டார்ச்சர் பண்றான் நீ
சும்மா இருக்கியே..நான் வேணும்னா சம்பந்தப்பட்ட துறைக்கு புகார்
கொடுக்கவா..? “என்றாள்.
அதற்கு அந்தப் பென்..”வேண்டாங்க..நான்கௌரவமான ஃபேமிலி.எங்கப்பா திருச்சில
பெரிய வியாபாரி.பணக்காரர்களாயிருந்தவங்க நாங்க..எங்கப்பா இவர் பெரிய
வேலையில இருக்கார்னு இவரை எனக்குக் கட்டி வைச்சார்.பணம் அதிகம்
இருக்கவே..நான் ஏன் வேலைக்குப் போகணும்னு..இவர் வேலையை
விட்டுட்டார்.இப்படி இருக்கும் போது..திடீர்னு அப்பாவோட வியாபாரம்
நொடிச்சுப் போய்..அவர் எல்லாத்தையும் இழந்துட்டார்.ஆனா..இவர்..வழக்கம்போல
உங்கப்பாவை பணம் கேளு..பணம் கேளுன்னு எப்போதும் தொந்தரவு.மாட்டேன்னு
சொன்னா எனக்கு அடி..இப்படித்தான் வாழ்க்கை ஓடுது.எனக்கு இது
பழக்கமாயிடுச்சு..” என்றாள்.
சுதாகரைப் பார்த்த கீதா..,”மிஸ்டர் இதுபோன்ற நிகழ்ச்சி இதுவே கடைசியாய்
இருக்கட்டும்.இல்லைன்னா..உங்களுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் கூட
ஆகலை..வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்தறீங்கன்னு புகார் செய்து உங்களை
நிரந்தரமா சிறைக்கு அனுப்பிடுவேன்.ஜாக்கிரதை” என்றபடியே..அப்பெண்ணிடம்
தனது அலைபேசி எண்ணை கொடுத்து..”இனிமேல் இவர் இப்படி நடந்தா போலீஸ்
ஸ்டேஷன் வராதீங்க..எனக்கு ஒரு ஃபோன் பண்ணுங்கப் போதும் நான் வந்து
பார்த்துக்கறேன்..” என்று சொல்லி விட்டு..அவனைத் திரும்பியும் பார்க்காமல் ஆட்டோவை எடுத்துக் கொண்டு கிளமபினாள்
